e-mozi

தென்தமிழின் பத்துக்கட்டளைப் பலன்கள்


பத்துக்கட்டளைப் பலன்கள்

இத்திருப்பல்லாண்டு திவ்யப்ரபந்தத்தை, நமக்கு நல்லகாலம் வந்துவிட்டதென்கிற கொண்டாட்டத்துடன் அநுசந்திக்க வேண்டியது!

பல்லாண் டென்று பவித்திரனைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே

பலகோடி நூறு ஆயிரம் ஆண்டுகள் வாழ்க! வாழ்க என வாழ்த்தவேண்டுமெனில் வாழ்த்தப்படுபவர் அத்தனை சிறப்பிற்கும் உரியவராய் இருத்தல் வேண்டும். இவர் வாழ்த்துபவர் பரமபத நிலயன், நித்ய பரிசுத்தன். எதிரியைக்காட்டு! காட்டு என்று துள்ளும் சார்ங்கமெனும் வில்லை அடக்கி ஆள்பவன். வாழ்த்துகின்ற பெரியவரும் சாமான்யர் அல்லர். பெருமாளாலேயே, ‘பெரிய ஆழ்வார்’ என்ற பட்டத்தைப் பெற்றவர். ‘‘பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டோடி வந்து, என் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பி’’ என்று சொல்கிறார் போல ஸ்ரீயபதியை விட்டு ‘விட்டு சித்தர்’ மனதில் சதா குடிகொள்பவர் (அதனால் இவருக்கு விட்டு சித்தர் என்றாயிற்று). இப்படி ஸ்ரீவில்லிபுத்தூர் தலத்தில் வாழும் விட்டுசித்தர் மிக விரும்பிச்சொன்ன இப்பாசுரங்களை, ‘நமக்கு நல்ல காலம் பிறந்தது!’ என்ற மனமகிழ்வோடு பயில்வோர் என்றும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து என்றும் ‘பல்லாண்டு, பல்லாண்டு’ என வாழ்த்தும் நற்கதி அடைவர்.

பக்தி செய்வதற்குப்பலன் பக்தியே. தனியாக வேறுபலன் கிடையாது. என்னெனில் பக்தியில் எல்லாம் அடங்கிவிடுகிறது. அது போல் ‘பல்லாண்டு, பல்லாண்டு’ என வாழ்த்தும் இப்பாசுரங்களைப் பாடுவோருக்குப் பலன், என்றென்றும் பவித்ரனான ஸ்ரீமன் நாராயணனை, பரமேஷ்டியை ‘பல்லாண்டு! பல்லாண்டு’ என வாழ்த்தி மகிழும் வாய்ப்பும், அனுபவமும் கிடைக்கும் என்பதே!

வாழ்த்துவதற்கு வயதில்லை, ஆதலால் வணங்குகிறேன் என்றொரு வசனம் இப்போது மிகப்பிரபலமாக தமிழகத்தில் உள்ளது. அது எவ்வளவு அசட்டுத்தனம் என்பதை இப்பாசுரங்கள் செப்புகின்றன. உலகிலேயே மிக அதிக வயதுடையவர் இறைவன். ஏனெனில் அங்குதான் தொடக்கமே நடக்கிறது! அப்படியெனில் அவ்வளவு வயதானவரை நாம் ‘பல்லாண்டு, பல்லாண்டு’ என வாழ்த்தலாமோ? வாழ்த்தலாம், வாழ்த்த வேண்டும் என்கிறது தமிழ் மரபு. ஏன் வாழ்த்த வேண்டுமெனில்? நித்ய மங்களம் பூரணமாய் பெற்ற பவித்திரனை தினம் வாழ்த்துவதன் மூலம் மங்களம் நித்யமாய் இப்புவியில் தங்குகிறது! எங்கும் மங்களம் பொங்கி வழிந்தால் நல்லதுதானே!

//பரமபதத்தில் எழுந்தருளியிருப்பவனாய் நித்ய பரிசுத்தனாய்ப் பஞ்சாயுதங்களைத் தரித்துக் கொண்டிருப்பவனான ஸர்வேச்வரன் விஷயத்தில் பெரியாழ்வார் பொங்கும் பரிவாலே பாடின இத்திருப்பல்லாண்டு திவ்யப்ரபந்தத்தை, நமக்கு நல்லகாலம் வந்துவிட்டதென்கிற கொண்டாட்டத்துடன் இவ்விபூதியில் எஞ்ஞான்றும் பாடுகிறவர்கள் மறுமையில் மோக்ஷலோகத்தை ய்டைந்து அங்கும் எம்பெருமானுடைய முகோல்லாஸத்தையே புருஷார்த்தமாக நினைத்து அனேக தேஹங்களை எடுத்துக்கொண்டு அப்பெருமானுடைய நான்கு பக்கங்களிலும் இருந்துகொண்டு மங்களாசஸநம் பண்ணப்பெறுவர்களென்று இதனால் பலன் சொல்லித் தலைகட்டிற்றாயிற்று.//

என்று ஸாதிக்கிறார் பிரதிவாதி பயங்கரம் அன்னங்கராச்சார்யர். நித்ய சூரிகள் நிற்கும் பரம பதத்தில் வேண்டிய உடலெடுத்து, வேண்டிய வண்ணம் வாழலாம் என்பது பெரியோர் காட்சி. எனவேதான், ”அனேக தேஹங்களை எடுத்துக்கொண்டு அப்பெருமானுடைய நான்கு பக்கங்களிலும் இருந்துகொண்டு மங்களாசஸநம் பண்ணப்பெறுவர்களென்று” என்று வியாக்கியானம் அமைகிறது. இப்பாசுரங்களைப் பயில்வோருக்கு அத்தகைய பாக்யம் கிடைக்குமெனில் நிச்சயம் சொல்ல வேண்டியதுதானே!

பெரியாழ்வார் தமிழ் சிறப்பானது. அது எப்படி பண்டிதர்களுக்கு உவப்பாகிறதோ அதே அளவில் பாமரனுக்கும் உவப்பாகிறது. அவர் கிராமத்து வசனங்களை, வழக்குகளை நிறையப் பயில்வார். இங்கு கூடப்பாருங்கள், பல்லாண்டு பாடுவது எதற்கு என்றால் நல்லாண்டு கிடைத்தது என்று கொண்டாடுவதற்கு என்கிறார். நல்லாண்டு என்பது குடு, குடுப்பாண்டி வீட்டிற்கு வந்து, ‘நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது’ என்று அடிப்பானே! அது! பெரியாழ்வார் குடுகுடுப்பை அடிக்கிறாரா? இல்லை, இவரது கோஷ்டியில் சேர்ந்தவர் அடிக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் நூதனக் கோடாங்கி அடிக்கும் பாரதி போன்றோருக்கு பெரியாழ்வார் ஒரு inspiration ஆக இருக்க வாய்ப்புண்டு!

பத்துக்கட்டளைகள் நிறைகொள்கின்றன.

நன்றி: இப்பாசுரங்ளுக்கான விசேஷார்த்தங்கள், பிரதிவாதி பயங்கரம் அண்ணா அவர்களின் உரையிலிருந்து பெறப்பட்டன. நாலாயிரம் பாடல்களுக்கும் இப்பெரியவர் எளிய உரை எழுதியிருக்கிறார். அவை தற்சமயம் இணையத்தில் வாசிக்கக்கிடைக்கின்றன

பிரதிவாதி பயங்கரம் அன்னங்கராச்சார்யர் அவர்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே சொடுக்குக