e-mozi

மடல் 099: மானமிலாப் பன்றியாம் வாழ்வு !!

First published: Date: Fri, 09 Mar 2001 15:47:45 +0200

மனித ஜீனோம் (Human Genome) திட்டம் முடிவுற்ற நிலையில் - நிறத்தால்,மொழியால், எல்லைகளால் பிரிவுற்று நிரந்தர போர்ச்சூழலில் வாழும் மனித இனத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் நடந்திருக்கிறது!


சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர் செலவழித்து மனித மரபு மொழியைப் புரிந்து அது சொல்லும் சேதியைக் கேட்டறிய வேண்டும் என்று தோன்றியதற்கே (basic research) அமெரிக்காவைப் பாராட்ட வேண்டும். உண்மையை அறிந்து கொள்ள வேண்டுமென்ற அவா இன்னும் மனித மரபில் ஊறிக்கிடக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று. இத்தகைய தேடுதலில் எதிர்பார்க்காத பல சேதிகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்று விஞ்ஞானிகளுக்குத் தெரியும்.ஆனால் அரசியல்வாதிகளுக்கும், சனாதனிகளுக்கும், வலதுசாரிகளுக்கும், மற்றவர்களுக்கும் இது அதிர்ச்சியாக இருக்கலாம்.

ஆர்வ மிகுதியில் முதலில் மனித ஜீன்களின் எண்ணிக்கையை மிக அதிகமாக எதிர்பார்த்து இருக்கிறார்கள். கடைசியில் சுண்டெலியின் ஜீன்களும், மனித ஜீன்களும் எண்ணிக்கையில் ஒத்துப் போவது அதிசியம்தான். சுண்டெலியையும் மனிதனையும் பிரித்துக் காட்டுவது அவன் வளரும் சூழல், அவனது ஜீன்களின் மொழியைப் புரிந்து செயல்படும் புரத ஆக்கம் (Protein synthesis) இவைதான். சுண்டெலிக்கும் மனிதனுக்கும்தான் இத்தகைய உறவுப் பிணைப்பா என்றால் "இல்லை" என்றுதான் அறிவியல் சொல்கிறது. ஆரம்பத்தில் உருவான அமிபாவிற்கும், மனிதனுக்கும் கூட நெருக்கமான தொடர்பு உள்ளது. உலக உயிர்கள் அனைத்தும் ஏறக்குறைய 90 விழுக்காட்டிற்கு மேல் ஜீன் அமைப்பில் ஒத்துப் போகின்றன.

சட்டம் என்பது பொதுவாக இருக்க அதை சமயத்திற்கு ஏற்றவாறு அர்த்தம் கொண்டு வாதிடும் ஒரு வழக்கறிஞர் போல் ஒவ்வொரு உயிரினமும் ஜீன் மொழியை, சூழலின் தேவைக் கேற்றவாறு அர்த்தம் செய்து கொண்டு செயல்படுகிறது என்று இந்த ஆய்வு காட்டுகிறது. ஆரம்ப கட்டங்களில் அனைத்தையும் செயல்படுத்துவது ஜீன்கள்தான் என்று பல விஞ்ஞானிகள் சொல்லி வந்தார்கள். "சுய நல ஜீன்கள்" (Selfish genes) என்ற கோட்பாடு வலுவாக கேட்ட காலமுண்டு. எல்லாம் மரபணுவில் உள்ளதென்றால், அது நமது "குலக்கல்வியை" "வர்க்கப் பிரிவை" அதன் வக்கிரப் பார்வையில் அர்த்தப்படுத்துவதாகப் போய்விடும்.ஏன்? ஆரிய மேலாண்மை பேசிய ஹிட்லர் செய்தது கூட சரி என்பதாகிவிடும்!

ஆனால் ஜீனோம் செயல்பாடு முடிவில் காட்டிய செய்தி உன்னதமானது. மங்கோலிய, ஆப்பிரிக்க,ஐரோப்பிய, பூர்வ குடிகள் என்று வெளிப்படையாகத் தெரியும் மனித இனங்கள் கூடஅடிப்படையில் வேறுபட்டவை அல்ல என்று சொல்கிறது உயிரியல். தோற்றத்தில்தான் வேறுபாடு. இருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு! ஆயின் அடிப்படையில் நாமெல்லாம் சகோதரர்கள் என்பதுதான் உண்மை. ஹிட்லர் செய்தது, சமீபத்தில் இலங்கையில் நடப்பது, அமெரிக்க, ஆஸ்திரேலியக் கண்டங்களில் பூர்வ குடிகளுக்கு எதிராக ஐரோப்பியர்கள் செய்தது, காலம் காலமாக தலித்துகளுக்கு இந்தியர்கள் செய்து வருவது இவை மனித மடமையின் உச்சம் என்று வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது ஜீனோம் புரோஜக்ட்.

அடிப்படையில் அறிவு என்பது மனிதனுக்குப் பொதுவாகத்தான் உள்ளது. வாய்ப்பையும்,வசதியையும் பொருத்து அது விருத்தியாகி, முழு வளர்ச்சியடைகிறது. வயிற்றுக்குக் கஞ்சியில்லாமல் மண்ணாங்கட்டியை உண்ணும் புரதமற்ற குழந்தைக்கு கல்வி வரவில்லை,அது குலத்தின் நீட்சி என்று சொல்வது படு அயோக்கியத்தனம்.உண்மை இப்படியிருக்க உலகத்தை பெரும் மாயையில் அமுக்கி வைத்திருக்கின்றன ஆதிக்க சக்திகள். இந்தியாவில் மேல்சாதி மேலாண்மை நியாயப்படுத்தப் பட்டுள்ளது.உலகளவில் ஐரோப்பியர்களின் வெள்ளை மேலாண்மை கோலோச்சுகிறது. வெள்ளை மேலாண்மையை ஒத்துக் கொண்டு, கருப்பு நிறத்தை தாழ்வாகப் பார்க்கும் ஜப்பானியர்கள் கோடையில் கருத்துப் போய் தாய்லாந்து மக்கள் போல் ஆகிவிடுகின்றனர்! வெள்ளையர்களிடையே கோடை வெய்யிலில் கருத்துப் போதலும், மற்ற காலங்களில் செயற்கையாகவேனும் (சோனாபாத்) கருத்துப் போதலும் பாஷனாக உள்ளது. வாழும் சூழல் மனிதநிறத்தை, குணத்தை நிர்ணயிக்கிறது போலும்.

மற்ற ஐரோப்பியர்களிலிருந்து மொழியால்,பண்பாட்டால் வேறுபடும் பின்லாந்து மக்கள் ஆசிய பரம்பரையினர் என்று தோன்றுகிறது. இவர்களது பெயர்கள், மொழி, பூர்வ கதைகள் (கலேவலா) இவை தமிழுடன் ஒத்துப்போகின்றன. ஏன்? ஐரோப்பாவில் இவர்கள் ஒருவர்தான் தமிழன் போல் நீர் கொண்டு........ கழுவுகிறார்கள் :-)) (கீல் பல்கலைக் கழக சரித்திரப் பேராசிரியர் ஹெர்மான் குல்க வேடிக்கையாகச் சொல்வார், ஜெர்மானியர்கள் கூட பூர்வ இந்திய வம்சாவளியினர் என்று! -ஐரோப்பா வந்ததால் வெளிறிப் போய்விட்டனர் போலும்:-) இத்தாலியர்கள் கூட கொஞ்சம் கருத்து விட்டால் நம்ம ஊர் ராஜூக்கள் போல்தான் தோன்றுகின்றனர். செங்கிஸ்கான் விட்டுச் சென்றுள்ள ஜீன்கள் ஐரோப்பாவில் அவ்வப்போது வெளிச்சம் காட்டும்.

Nature versus nurture என்ற வாதம் டார்வின் காலத்திலிருந்து பேசப்படுவது. மனிதபரிணாம வளர்ச்சியில் இயற்கையின் பங்கு (மரபு ரீதியாக) எவ்வளவு, சூழலின் (nurture)பங்கு எவ்வளவு என்பது சூடான கேள்வி. மனித ஜீனோம் திட்டம் சூழலின் முக்கியத்துவத்தைசு ட்டுவதாக அமைந்துள்ளது வேடிக்கை!

பண்டைய தமிழகத்தில் இதுபற்றி ஒரு கேள்வி எழுப்பட்டு, பதில் கிடைத்திருக்கிறது.


கேள்வி:
செத்ததின் வயிற்றில் சின்னது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?
பதில்:
அத்தைத்தின்று அங்கே கிடக்கும்!(இது பற்றிய தத்துவார்த்தமான மடலைக் காண:மடல் 39 காண்க. அதாவது, முயற்சியும், சுயதேடலும் இல்லாத மனிதர்கள் தாங்கள் வாழும் சூழல்தான் உண்மை என்று நம்பி, அப்படி, இப்படி "அட்ஜெஸ்ட்" செய்து கொண்டு வாழ்ந்து விடுகின்றனர். இந்தியாவின் போக்குவரத்தைக் காணும் ஒவ்வொருவருக்கும் இது புரியும். ரோட்டில் இப்போது முகமூடிக் கொள்ளைக்காரன் போனால் கூட அடையாளம் தெரியாத வண்ணம் காவல் துறையினரிலிருந்து, கல்லூரி மாணவிவரை எண்லோரும் புகை நாற்றம் தாங்காது முகமூடி அணிந்துதான் ஓட்டுகின்றனர். கூவத்தின் நாற்றத்தில் கொசு கூட ஓடிப்போக நினைக்க அங்கேயே வாழ்ந்து, மணம் முடித்து, பிள்ளை பெற்று காலத்தை ஓட்டி விடுகின்றனர் மக்கள். "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்பது போல்! எந்தக் கேள்வியும் கேட்காது வாழ்ந்து முடித்து விடுகின்றனர்.

பன்றியாய் அவதாரம் எடுத்த பரந்தாமன் கூட மானமில்லாமல் அதையே ருசித்து வாழ்ந்ததாக ஆண்டாள் இடித்துக்காட்டுகிறாள்.

பாசிதூர்த்துக் கிடந்த பார்மகட்கு, பண்டொருநாள்
மாசுடம்பில் நீர் வார மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே
(நாச்சியார் திருமொழி 11-8)

இப்படி பரந்தாமன் பன்றி வாழ்க்கையை சுகித்து வாழ்ந்து வரும் போது ஈசன் ஈட்டியால் பன்றியின் முதுகில் குத்தி, "ஐயா பெருமாளே! நீர் முழுமுதற் கடவுள், இது கூடமறந்து, மானமில்லாமல் எப்படி பன்றி வாழ்க்கை வாழ்கிறீர்?" என்று கேட்டு ஞாபகப்படுத்தியதாக ஒரு கர்ண பரம்பரைக் கதையுண்டு. சூழலுக்கு அவ்வளவு வலு உண்டு! எல்லாம் நமக்கு பழகி விடுகிறது. நிறவாதம் பழகிவிடுகிறது, இனவாதம் பழகிவிடுகிறது, போர்ச்சூழல் கூட இலங்கையருக்கு பழகி விட்டது! சென்னை, மும்பை, கொல்கொத்தாவில் வாழும் சேரி மக்களுக்கு அந்த வாழ்வு பழகிப் போகிறது. அவர்கள் அதையே சுகிக்கும் படி அரசியலும், சாதீய மேலாண்மையும் பார்த்துக் கொள்கின்றன. சுய முயற்சி, சுயமரியாதை,சுய விழித்தல், வாய்மையின் தேடல் இவை இல்லாத மானுடம் சூழலின் கைதியாய்,கிடைப்பதை உண்டு, கிடைப்பதில் மகிழ்ந்து - "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்"என்பதுதான் வருத்தமான நடைமுறை.


மடல் 100: பிணக்குறும் சமயங்களும் அருங்கலைப் பொருட்களும்

First published: Date: Sun, 18 Mar 2001 18:51:22 +0200

உலகின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவரான சிவாஜி கணேசன் சாம்ராட் அசோகனாக நடிக்கும் படம் ஒன்று. கலிங்கத்துப் போரில் புத்த சந்நியாசியின் இன்மொழி கேட்காது பல்லாயிரக் கணக்கானோரைக் கொன்று குவித்து விட்டு பிணக் குவியலைக் கண்டு பிரம்மித்துப் போய் நிற்கும் போது புத்த சந்நியாசி குற்றுயிரும் குலை உயிருமாய் இருக்கும் பலருக்கு உதவிக் கொண்டிருப்பார். அப்போது சாம்ராட் அசோகன் கேட்பார், "கோட்டானும்,ஓநாய்களும் உலாவும் பிரதேசத்தில் சாமியாருக்கு என்ன வேலை" என்று. அவர் பதில்சொல்லுவார் "நோயிருக்கும் இடத்தில்தானே வைத்தியனுக்கு வேலை" என்று. மேலும்கீதையில் கண்ணன் செய்தது போல் போர் களத்தில் அன்பின் தத்துவங்களை அவர் விளக்குவார். அதன் பின் அசோகன் முற்றிலும் மாறிய மனிதாகி விடுவான். பெளத்தம் உலகெலாம் பரவும் வகை செய்வான்.உலகின் மூத்த சமயங்களில் ஒன்று பெளத்தம்.பெளத்தம் இந்தியக் கலைக்கு தந்திருக்கும் கொடை அளப்பரியது. அஜந்தா, எல்லோரா கோவிலுக்கு சென்றவர்களால் இதை உணர முடியும்.


சாதாரணமானவன் ஒரு மலையைப் பார்த்த போது பெளத்தக் கலைஞர்கள் கல்லிலே ஒரு கோயிலைக் (புத்த விகாரம்) கண்டனர். குடைவரைக் கோயில் என்பது இன்று திராவிடப் பண்பாட்டின் உயர் தனிச் சிறப்பாக அமைவதற்கு பெளத்தம் உதவியிருக்கிறது.

பெளத்தம் தமிழுக்குத் தந்திருக்கும் கொடை அளப்பரியது. பெளத்தர்களும், சமணர்களும் இல்லை யென்றால் அறநூல்களும், தமிழ் இலக்கணமும் இன்று இல்லாது போயிருக்கும். இந்த பெளத்தம் உலக கலாச்சாரத்திற்குஅ ளித்த பாமியான் கலைச் சிற்பங்கள் இன்று தாலிபான் போராளிகளால் சிதைக்கப்பட்டு வருகிறது. உலகம் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் இதயத்தில் மீண்டுமொரு குத்து விழுந்திருக்கிறது.தகர்க்கும் முன்


தகர்த்தபோது


பொதுவாக பெளத்தம் இந்தியாவில் மலிவுற்று பிற சமயங்கள் வந்த போது இந்த மாற்றம் நாகரீகமாகவே நடந்திருக்கிறது. நல்ல உதாரணம் அஜந்தா, எல்லோரா குகைச் சிற்பங்கள்.அங்கு பெளத்த விகாரங்களுக்குப் பக்கத்திலேயே சிவன் கோயில் அமைந்துள்ளது. அந்தக்குடைவரைக் கோயில் கலைகள் சிதைக்கப் படாமல் ஒரு கலை மரபு வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இதன் அருமை கண்டுதான் ஜோஸப் கேம்பல் போன்ற அறிஞர்கள்,"மென்மையான இந்திய மதங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறும் போது, முந்திய மதங்களின் விழுமியங்களை, கலை நுணுக்கங்களை உள் வாங்கிக் கொண்டு வளர்கிறது" என்று சொல்கிறார்கள். அதாவது, பெளத்தத்திற்கு முன்பிருந்த வேத காலத் தெய்வங்களான இந்திரன், பிரம்மா போன்றவர்கள் பெளத்த தொன்மங்களிலும் இருக்கிறார்கள். ஆனால்,பிரதான நிலைகளில் அல்ல. உப தெய்வங்களாக!!

இதை இன்றளவும் மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலுள்ள புத்த ஆலயங்களில் காணலாம். சிங்கைச் சீனர்களின் டாக்சிகளில் பிரம்மா காவல் தெய்வமாக உலா வருகிறார். பெளத்தம் அழிந்து வைணவம் கோலோச்சிய போது புத்தர் தன் பிரதான இடத்தை விட்டு நகர்ந்து திருமாலின் அவதாரங்களில் ஒன்றாகமாறிப் போகிறார். ஆனால் இப்படி நாகரீகமாக உருமாற்றங்கள் நடத்தப் பட்ட போக்கு ஒரு காலக் கட்டத்தில் இந்தியாவிலேயே மாறிப் போகிறது. சமயங்களுக்குள் போட்டிகளும் பொறாமைகளும் மிஞ்சிவிடுகின்றன.

மணிமேகலை காலத்தில் பட்டிமன்றங்களில் தத்துவ விவாதங்கள் செய்து மதம் மாற்றிய போக்கு போய், பட்டிமன்றத்தில் தோற்றவர் கழுவேற்றப் படுகிறார்கள். இங்கு அடிப்படை மனிதநேயம் காயடி பட்டு மரித்துப் போகிறது. அன்பின் அர்த்தம் நீர்த்துப்போகிறது. சோழர்கள் காலத்தில் சைவ நெறி பிரகாசிக்கும் போது பெளத்த சந்நியாசிகள் கபட சந்நியாசிகளாகிப் போகின்றனர். அதன் நீட்சியே போல் இன்று ஈழத்தில் கபட நாடகம் ஆடிக்கொண்டுள்ளார்கள்.

அந்தக் காலக் கட்டத்தின் காட்சியொன்று திருமாலையில் வருகிறது.

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில்சாக் கியர்கள், நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில் போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல் தலையை ஆங்கே,
அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகரு ளானே.
(8)

விப்ரநாராயணர் என்ற சாதுவான அந்தணர் தெருவில் சமணர்களும், பெளத்தர்களும் பொறுப்பில்லாமல், வெறுப்போடு திருமாலைத் திட்டுவதைக் காண்கிறார். அவருக்கே பொறுக்கவில்லை. பூப்பறித்த கைகள் தலையறுக்க சித்தமாகிறது. என்ன கொடுமை! அவர் அதற்குச் சொல்லும் காரணம் சுவாரசியமாக இருக்கிறது!

புலையற மாகி நின்ற புத்தொடு சமண மெல்லாம்,
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்ப ரோதாம்,
தலையறுப் புண்டும் சாவேன் சத்தியங் காண்மின் ஐயா,
சிலையினா லிலங்கை செற்ற தேவனே தேவ னாவான். (7)

சத்தியம் என்பதை நிறுவும் பொருட்டு தன் தலையறுபட்டு செத்தாலும் பரவாயில்லை இப்படி புலையறமாகிய பெளத்தமும், சமணமும் கலைகள் கற்ற மாந்தர் முன்னால் பொய் பேசித்திரிதல் காணேன் என்று புலம்புகிறார், தொண்டர் அடிப்பொடி.

இங்குதான் சிக்கல் ஆரம்பிக்கிறது. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டி போல் ஒருசமயத்தைப் பற்றி இன்னொரு சமயம் குறை சொல்லித் திரியும் போது சண்டை வலுக்கிறது. சைவமும், வைணவமும் கைகோர்த்துக் கொண்டு பெளத்தத்தை வேரோடு தமிழ் மண்ணில் அழித்து விட்டன. என்ன பரிதாபம்! இன்று பாமியானுக்கு நிகழும் அவலம் அன்று பல பெளத்த விகாரங்களுக்கு நிகழ்ந்திருக்கின்றன. எங்கே அந்த பெளத்த விகாரங்கள்?சங்க காலத்து வான் செழித்த பெளத்தத்தின் எச்சங்கள் தமிழ் மண்ணில் எங்கே?

கலியன் திருமங்கை மன்னன். கவிப்பேரரசன். ஆயிரம் வைணவர்களுக்கு தினம் சோறுபோட்டால்தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற குமுதவல்லியின் பேரழகிற்கு மயங்கி இவர் செய்யாத செய்கைகள் என்ன? சோழ நாட்டின் புத்தர் சிலைகளை உருக்கி அரங்க நாதனுக்கு பொன் வேய்கிறாரே? ஐயோ! "குலம் தரும் செல்வம் தந்திடும்" என்று வைணவத்தின் எண்ணெழுத்து மந்திரத்தை உலகிற்குத் தந்த பெரியவர் இப்படிச் செய்திருக்கலாமா?

"ஆசை அறுமின், ஆசை அறுமின்! ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்" என்ற திருமந்திரப்பொருள் புரியாமல் எத்தனை சைவர்கள், வைணவர்கள் இன்றையப் பழிக்கு ஆளாகிவிட்டனர். சமயம் என்பது ஒரு லாகிரி. பழக்கத்திற்காக எதைச் செய்யவும் மனிதன் தயங்குவதில்லை.

உலகின் பேரிரைச்சலைக் காது கேட்காமல் உலகின் மிகப் பெரிய புத்தர் சிலை தாலிபான்களால் உடைக்கப் படுகிறது. அட ஐயா! அது உன் மூதாதையர் செய்வித்த கலைச் பொக்கிஷம்தானே! தாஜ்மகால் இஸ்லாமிய அருங்காட்சிப்பொருள் என்றாலும் அதை செய்வித்த கலைஞன் இந்தியன்தானே. அவன் இந்துவாகக்கூட இருந்திருக்கலாமே. தாஜ்மகாலை அழிக்க முடியுமா? இந்தியாவின் முகத்தைக் குதறியது போலாகிவிடாது? பாமரர்களே! கலை, சரித்திரம் இவைகள் காலத்தை வென்றவை. மாற்ற முடியாது. ஒரு கலை படைப்பு இத்தனை ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி நின்றிருக்கிறது. அதைக் கண்டு தாலிபான் பெருமை கொள்ள வேண்டாமோ?

மலேசியா முஸ்லிம் நாடு என்பதால் அதன் சரித்திரத்தை 14 ம் நூற்றாண்டிலிருந்து எழுதுவது எத்தனை பேதமை? அதற்கு முன் மலேசியா கண்ட இந்து சாம்ராஜ்யம் அசிங்கப் படவேண்டிய சரித்திரமா? என்ன பேதமை!

இந்தோனிசியா இதில் தனித்து விலகித் தெரிகிறது. உலகின் ஆகப்பெரிய இஸ்லாம் நாடு அது. அதன் நாணயத்தில் பிள்ளையார் வீற்றிருக்கிறார். ஒரு சுகர்ணோ (சு-கர்ணோ -நற்சொல் கேட்பவன்- சமிஸ்கிரதம்) தலைவராகலாம். முஸ்லிம் பெயர்கள் சுத்த இந்துப் பெயர்களாக அங்கு இருக்கலாம். அது முக்கியமே இல்லை அங்கு. அங்குஒரு "பொரபடோர்" போன்ற உலகின் பெரிய புத்த விகாரங்கள் விகாரப் பட்டுப்போகாது. (கிருத்தவர்களுக்கும், முஸ்களுக்குமுள்ள உட்பகை காரணமாக பலர்கொல்லப் படுவதை சகித்துக் கொள்ள முடியவில்லைதான்.


நம்மாழ்வார் போல் ஆழமாகச் சிந்திப்பவர்களால் இந்தச் சிக்கலை விடுவிக்க முடியும்:

வணங்கும் துறைகள் பலபல ஆக்கி, மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்குநின் னோரையில் லாய்,நின்கண் வேட்கை எழுவிப்பனே.
(இயற்பா)

மனிதர்கள் வணங்கும் மதங்கள் பலப் பல. மதி விகற்பங்களால் அவற்றிற்குள் பிணக்குள் வருகின்றன. ஆனாலும் அவை யாவையுள்ளும் உரையும் மூர்த்தி ஒன்றுதான். இப்படி இணக்கம் தரும் அவன் இயல்பினை உணர்ந்தால் அவன் மேலும் வேட்கை எழுப்பி நம்மை முழுமையாய் ஆட் கொள்வான் - இதுதான் விடை.

இவ்விடை தெரிந்திருந்தால் இன்று பாமியான் பள்ளத்தாக்கு மானுடக் கலைப் பொக்கிஷமாக போற்றிப் பாதுகாக்கப்பட்டிருக்கும். மேலைக்கு ரோம் நகரம் போல் கீழைக்கு பாமியான் இருந்திருக்கும்.பிணக்குறும் சமயங்களால் அரும் பொருட்கள் அழிவது மானிட அறியாமையின் அதி உச்ச வெளிப்பாடு.

மடல் 101: கானல்

First published: Fri, 13 Apr 2001 19:32:34 +0200

தமிழ் இலக்கியத்தின் தனிச் சிறப்பு ஐந்திணைக் கோட்பாடு ஆகும். இதை வெறும் நிலஅமைவு (landscape) என்பதோடு அல்லாமல் ஒவ்வொரு திணையிலும் பல் வேறு உளவியல் சூட்சுமங்களை வைத்துப் போயினர் பண்டைத் தமிழர். ஐந்திணைகளில் உருவகமாக (metaphor) அமையும் கருப்பொருளைப் பற்றி முன்னைய மடல்களில் கண்டோம். இது புதிய உளவியல் ஆய்வுப் பொருள். இதை இன்னும் உளவியலார் கண்டு கொண்டனராவென்று தெரியவில்லை. நில அமைவு என்ற பருப்பொருளுடன் அரு-உருவாயுள்ள கருப் பொருளைச் சூசகமாக வைத்து ஒன்றின் நீட்சி மற்றது என்று காட்டிப் போயினர். அதே போல், நில அமைவு என்ற பருப் பொருளுடன் மனம் என்ற அரூபப் பொருளையும் (பொருள் என்பதைக் "கருத்து" என்று காண்க) உடன் வைத்து கவி சமைத்தனர் நம் தமிழர். மனம் என்பது பருப்பொருளின் நீட்சி (epi-phenomenon) என்ற கருத்தில் அவர்கள் சொல்லவில்லை. மனம் என்பது கருப்பொருளுடன் சேர்ந்த விஷயம். முதலில் காட்சியாகும் பிரபஞ்ச வஸ்துக்களில் மனது வருகிறது. பருப்பொருள் பின்வடிவாக உருவாகிறது. மனது இருப்பதால் மனிதன். எனவே மனதிற்கு முக்கியத்துவம் கொடுத்து அதையும் நில அமைவுடன் இணைத்தனர்.

திருவாய் மொழிக்கு உரை சொல்லும் ஈடு, "பிரிந்தார் இரங்குவது நெய்தல் நிலத்திலேயாகையாலே...." என்று கூறிப் பண்டைய மரபைச் சுட்டுகிறது:

போக்கெல்லாம் பாலை; புணர்தல் நறுங்குறிஞ்சி;
ஆக்கஞ்சேர் ஊடல் அணி மருதம்;
நோக்குங்கால் இவ்விருக்கை முல்லை;
இரங்கல் நறுநெய்தல்
சொல்லிருக்கும் ஐம்பால் தொகை"

ஆக நெய்தல் திணையின் உளப் பண்பு "இரங்குதல்" நெய்தல் நிலத்தில் தென்படுவது கானல். கானல் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது "கானல் நீர்தான்". ஆனால் பண்டையத் தமிழ் இலக்கியங்கள் கானல் என்பதை "கடற்கரையில் கானப்படும் சோலை" என்று பொருள் சொல்லுகின்றன. நம்மாழ்வார் என்ற சீரியத் தமிழ்க் கவி பிறந்த ஊர் ஆழ்வார் திருநகரி எனப்படும் குருகூர். இது மருதநிலத்தில் அமைந்தாலும் நெய்தல் வெகு அருகாமையிலே இருக்கின்றது. நாரைப் பறவைகள் இவ்விரு நிலத்திலும் காணப் படுகின்றன. அதுவே பாட்டுக்கு உதவும் கருவியாகிறது. நாரை என்பது தோழிக்கு ஆகி வருகிறது. சடகோபரின் கானல் கவிதை இதோ:

வாயுந்திரையுகளும் கானல்மடநாராய்,
ஆயும் அமருலகும்துஞ்சிலும் நீதுஞ்சாயால்,
நோயும் பயலைமையும் மீதூரவெம்மேபோல்,
நீயும்திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே. 2.1.1


வந்து, வந்து அலைகள் மோதுகின்ற கடற்பரப்பில் உள்ள கானல் மட நாரையே! என் தாயும், அமருலகில் உள்ளோரும் உறங்கினாலும் நீ உறங்க மாட்டாய் போலுள்ளது! (இங்கு "யாய்"என்ற (ஆய்) பழம் சொல் பயன் படுகிறது "யாயும் ஞாயும் யாராகியரோ" ) ஆதலால், என்னைப் போல் நீயும் பசலை நோய் கொண்டு, திருமாலிடம் நெஞ்சம் பறி கொண்டயோ? என்று அமைகிறது இப்பாசுரம்.

புருஷோத்தம நாயுடு பசலை என்பது காதல் வசத்தால் வரும் நிறவேறுபாடு அது, பீர்க்கு, கொன்றை மலரை ஒத்து இருக்கும் என்கிறார். அதனால்தான், வெண்மையான நாரையை உவமை காட்டுகிறார் ஆழ்வார். வெளிறிப் போதல் என்று சொல்லலாமென்று தோன்றுகிறது. பயலை = பசலை.

எம்கானல் அகம் கழிவாய் இரைத்தேர்ந்திங்கு இனிதமரும்,
செங்கால மடநாராய். திருமூழிக் களத்துறையும்,
கொங்கு ஆர்பூந் துழாய் முடி எம் குடக்கூத்தர்க்கு என் தூதாய்,
நும் கால்கல் என் தலைமேல் கெழுமீரோ நுமரோடே. 9.7.1

நம்மாழ்வார் வாயால் "எம் கானல்" என்று விழுகிறது! இது தோழமை குறித்து விழும் வார்த்தை! கானல் நிலத்து மக்கள் எப்போதும் இறை உணர்வுடன் "அவனுடன்" சங்கமிக்க மாட்டோமா? வென ஏங்கித் தவிப்பதால் கானல் நாரையுடன் ஒரு உறவு வந்து விடுகிறது. இன்று கூட இதே உணர்வு கொப்பளிக்க லட்சோப, லட்சம் மக்கள் மெக்காவில் கூடுவது விந்தை அல்லவே!இப்படி இறைத்தூது போகும் தூதுவரின் பாத கமலங்களைத் தன் தலையில் தாங்கத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார் நம்மாழ்வார்.

பண்டிவன் ஆயன், நங்காய்!படிறன்; புகுந்து, என்மகள்தன்
தொண்டையஞ் செங்கனிவாய்நுகர்ந்தானை யுகந்து, அவன்பின்
கெண்டைஒண் கண்மிளிரக்கிளிபோல்மிழற் றிநடந்து,
வண்டமர் கானல்மல்கும்வயலாலி புகுவர்க்கொலோ.
(பெரிய திருமொழி 3.7.2)

சங்கத்தமிழ் கற்க வேறெங்கும் போகவேண்டா! திவ்யப் பனுவல்களை வாசித்தால் போதும்!

அழகிய எளிய தமிழ், இனிய சொல்லாட்சி, நெஞ்சம் கவரும் கவிதை! என்ன காதற் காட்சிபாருங்கள்! பண்டிவன் - இவனுக்கு வயது யாரால் சொல்லமுடியும்? அதனால் பண்டிவன்! ஆயன்! ஒரு தாய் சொல்வது போல் அமையும் பாடல் இது. தன் மகளின் செங்கனிவாய் சுவைத்து அவன் நடக்க கெண்டை மீன் போன்ற கண்களையுடைய இவள் அவன் பின்னால் ஒரு கிளி போல் மிழற்றி நடந்து, வண்டுகள் சூழ்ந்த கானல் வயலுக்குள் புகுந்து விடுகின்றனர் எனபது காட்சி.
பாலையிலும் இருக்கும் இனிமை!

நன்னெஞ்சே! நம்பெருமான் நாளும் இனிதமரும்,
அன்னம்சேர் கானல் அணியாலி கைதொழுது,
முன்னம்சேர் வல்வினைகள் போக முகில்வண்ணன்,
பொன்னம்சேர் சேவடிமேல் போதணியப் பெற்றோமே! 11.3.9


கானல் என்பது இன்று காணும் பொருளில் அன்று கையாளப் படவில்லையெனத் தெரிகிறது. இன்று கானல் என்பது வறட்சி, வெறுமை, ஒரு வித மயக்கத்தில் தென்படும் காட்சி என்பது போல் இருக்கிறது. ஆனால் திருமழிசை கையாளும் விதம் மிகவும் இதமாக உள்ளது. நம் பெருமான் இனிது அமரும் அன்னம் எனும் பறவைகள் வந்து அமரும் கானல் சோலையினைக் கைதொழுவோம் என்கிறார். இப்படிச் செய்வதால் முன்னம் நாம் செய்த வல் வினைகள் போய், முகில் வண்ணனின் பொன் போன்ற சேவடிகள் காணும் பேரு உண்டு என்று சொல்கிறார். கானல் என்ற மிரட்சி போய், கானல் என்பது ஒரு நம்பிக்கை தரும் விஷயமாக இத்தேன் தமிழ்க்கவிகளால் மாற்றப் படுகிறது! வாழ்க தெய்வப் பனுவல்கள்!
ஐந்திணைகள் மற்றும் ஆறாம் திணை பற்றிய என் கட்டுரை!


மடல் 102: கனவில் கண்டேன் கண்ணபெருமானை!

Pasura Madal 102 - Dream state and divine realisation
First published on:Datum: Sun, 08 Apr 2001 10:36:02 +0200
In:"agathiyar@yahoogroups.com",
"meykandar@yahoogroups.com",
"tamil-ulagam@yahoogroups.com"

உண்மையில் நானொரு கனவுத்தொழிற்சாலை!

அதிகாலைக் கனவுகள்; பகற் பொழுதின் நெட்டைக் கனவுகள்; அவசரத் தூக்கத்தின் அரைகுறைக் கனவுகள்; கனவுமில்லாமல், நினைவுமில்லாத அலிக் கனவுகள் இப்படி வகை வகையாய் கனவுகள் வந்து போகும். நனவிடை தோய்தல் போல், கனவிடை தொய்ந்து கனவுகளை எழுதலாமென்றால் அவை நினைவிற்கு வருவதில்லை! கனவுகள் குறள் போல் சிறுத்து வருவதுண்டு. சிறுகதைக்குரிய கூர்மையுடன் வருவதுண்டு, அபூர்வமாக தொடர் கதையாவும் கூட வருவதுண்டு. நன்றாக ஞாபகம் வரும் அது ஒரு தொடர்ச்சி தானென்று. கனவில் மிதப்பதுண்டு, சிரிப்பதுண்டு, அழுவதுண்டு! கை கால் மறத்துப் போய் முடமாவதுண்டு. அதிகாலைக் கனவுகளில் M.S.சுப்புலட்சுமியின் குரலில் சுப்பிரபாதம் பாடுவதுண்டு :-) சில கனவுகள் என்னைத் தளிர்ப்பிப்பதுண்டு, சில கனவுகள் ஒரு நாளையே வீணடிக்க வைப்பதுண்டு!

கனவு ஒரு சாம்ராஜ்யம் என்று தோன்றுகிறது! கை, காலை உபயோகிக்காமல் நம்மை, நடக்க வைக்கிறது. இறக்கைகள் இல்லாமல் பறக்க வைக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய, புதிய கதைக் கரு கொண்டு, என்னைக் கேட்காமலே என்னை நடிகனாக்குகிறது! நிஜ வாழ்வில் செய்ய முடியாத பல செயல்களைக் கனவுக்குள் செய்ய முடிகிறது. ஒரு முறை இராஜீவ் காந்தியைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேன். அதற்கு முன்தான் இந்திரா காந்தியைப் பார்த்திருந்தேன்! அதிசயமாக வண்ணக் கனவுகள் வருவதுண்டு! சினுக்கும் விளக்குகள் கொண்ட வானயூர்திகளைக் (space ship) கண்டிருக்கிறேன். உபயம் spielberg-தானா வென்று யோசிப்பதுமுண்டு. பகலில் சேகரத்து வைத்த தகவல்கள் இரவில் அலசப்படும் போது அபூர்வச் சேர்க்கையாக கனவுகள் வருகின்றன போலும்.

கனவுகள் மீது எனக்கு மரியாதை உண்டு. என் வாழ் நாளில் மூன்றில் இரண்டு பங்கு தூங்கியே கழிக்க வேண்டிய விதி இருக்கும் போது கனவுகள் ஒரு நல்ல துணை. அது இல்லாவிட்டால் வாழ் நாளில் பெரும் பகுதி சுவாரசியமில்லாமல் போய்விடும்!

கனவுகளைப் பற்றிப் பேசும் ஜே.கே (J.Krishnamurti) தனக்கு கனவுகளே வருவதில்லை என்கிறார். யாரால் இதை நிரூபிக்க முடியும்? அவர் ஞானி. தூங்காத தூக்கம் போலது! அதன் சுகம் நமக்குத் தெரியுமோ?

ஆனால் கனவுகளைப் பற்றிய ஆழமான கேள்விகள் உண்டு. கனவுகள் வந்து முடிந்தவுடனேயே Real Audio-down load (may I run the application?) செய்வது போல் கனவுகளை மனது உடனேயே அலசுவது உண்டு. அதுவும் கனவில் சேர்த்தியாவென்பது தெரியவில்லை!

கனவுகள் என் தத்துவ உள்ளத்திற்கு உரம் சேர்க்கின்றன. எழுத்தாளும் எனக்கு கதைக் கரு வாகின்றன. இப்படி சமீபத்தில் ஒரு கதை எழுத இந்தப் பரோபகாரிக் கனவுகள் உதவி இருக்கின்றன. இந்தியா டுடே (இலங்கை பாஷையில் இந்தியா ருரே!) "அடி, முடி தேடி..." என்ற என் கனவிடை தோய்தலை வெளியிட்டது.

அடியும், முடியும் தேடி!

(இனிமேல் கொஞ்சம் புரியும் படி கதை எழுதவும் என்று ஆசிரியரிடமிருந்து தனிப்பட்ட ஒரு குறிப்பு வந்தது! கனவுகள் புரிந்தால் நான் என்றோ ஞானி ஆகியிருக்க மாட்டேனா!)

பல நேரங்களில் புராணங்களுக்கும், ஐதீகங்களுக்கும் ஒரு கனவுத் தன்மை உண்டு. இவை கனவு கானும் மனது செய்யும் கதைகளோவென்று கேட்கத் தோன்றுகிறது. நம் வில்லாதி வில்லன், கவிதாச் சக்கிரவர்த்தி திருமங்கை மன்னன் திருடனாக வழிப்பறி செய்த போது பெருமாள், தம்பதி சமேதராய் வந்து அவனை ஆட் கொண்ட கதையில் இக்கனவு சீன் தன்மை உண்டு. பெருமாளின் நகை மூட்டையை நம்ம ஆழ்வார் தூக்க முடியாமல் (திருவின் சீதனமல்லவொ அது!) திணற NTR ஸ்டைலில் புன்னகையுடன் பெருமாள் அவரை ஆட்கொண்டு "எண்ணெழுத்து மந்திரம்" உபதேசம் செய்வித்து.....நினைக்கவே சுவாரசியமாக உள்ளது.

பகுத்தறிவு பேசும் மேதைகள் கனவில் அபத்தமாக நடந்து கொள்வதற்கு அவர் பொறுப்பேற்பாரோ (யார் பொறுப்பு) ? கனவு இல்லையேல் கற்பனை இல்லை! கற்பனை இல்லையேல் வாழ்வே இல்லை. இறைவனைப் பற்றிய "பாவனை" முக்கியமென்று அந்தக் கால நம்மாழ்வாரும் சொல்கிறார், இந்தக் காலத்து லா.ச.ராவும் சொல்கிறார்.

திருமங்கை மன்னனின் கதையை நடந்தது போலவும், இவர் கூடவே இருந்து பார்த்தது போலவும் பெளராணிகர்கள் சொல்லும் போது கதை கேட்கச் சுகமாகவே உள்ளது. ஆனால், ஆழ்வார் வேறுவகையில் தனக்கு தரிசனம் கிடைத்தாதகச் சொல்கிறார்.

ஆழியும் சங்கு முடைய நங்கள் அடிகள்தாம்,
பாழிமை யான கனவில் நம்மைப் பகர்வித்தார்,
தோழியும் நானு மொழியவையம் துயின்றது,
கோழியும் கூகின்ற தில்லைக்கூரிரு ளாயிற்றே.

(பெரிய திருமொழி 11.2.6)

நாயகி பாவத்தில் பாடிய சங்கப் பாமாலையிது. கூர் இருள் நேரம். பாத கமலங்களை மட்டும் காட்டிவிட்டுப் போய் விடுகிறார். தோழிக்கும் இவருக்கும்தான் தெரியும். பாழ் இமை மூடிய நேரம். நேராகத் தரிசனம் கொடுக்கக் கூடாதோ?


சினவில் செங்கண் அரக்க ருயிர்மாளச்
செற்ற வில்லியென்று கற்றவர் தந்தம்
மனவுட் கொண்டு,என்று மெப்போதும் என்றேத்தும்
மாமுனி யைமர மேழெய்த மைந்தனை,
நனவில் சென்றார்க்கும் நண்ணற் கரியானை
நானடி யேன்நறை யூர்நின்ற நம்பியை,
கனவில் கண்டே னின்றுகண் டமையாலென்
கண் ணைகள் களிப்பக் களித்தேனே.
(2) 7.3.1

மிகத் தெளிவாகச் சொல்கிறார் தனது கனவை. நனவில் அவன் அரியன். எனவே இவர் கனவில் காண்கிறார். கண்டு களிக்கிறார். அக்கவின் வலிமையைத் திருக்குறுந்தாண்டகத்தில் செப்புகிறார்.


கண்டேன் திருமேனி யான்கனவில், அங்கவன்கைக்
கண்டேன் கனலுஞ் சுடராழி, - கண்டேன்
உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து, பின்னும்
மறுநோய் செறுவின் வலி.
67

பேயாழ்வார் போல் "திரு" மேனி காண்கிறார் கனவில். அக்கனவு அவரது உறு நோய் போக்கி, வினை போக்கி (ஓட்டுவித்து!) மீதி எதாவது தோஷம், கீஷம் இருந்தால் அதையும் போக்கி செறுக்குடன் நிற்கும் வலியதாம் அது. இங்கு சாதாரணக் கனவு ஒரு மந்திரத் தன்மை அடைவதைக் காண்கிறோம்.

நாடி ஜோதிடம் சொன்னவன் இத்தகைய "தெய்வீகக் கனவுகள்" எனக்கும் கிட்டுமென்று சொன்னான். இது உளவியலில் தோய்ந்த கலாச்சாரமாகிய இந்தியாவில்தான் முடியும். வெளி நாட்டுக் காரனிடம் சொன்னால் சிரிப்பான். ஆனால் இக்கனவுகளின் வலிமை என்னவென்று அனுபவித்துப் பார்த்தவற்கே புரியும்!

தான் அவனைக் கனவிலேயே கண்டதாகத்தான் ஆழ்வார் சொல்கிறார்.


பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன், - கனவில்
மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே - மிகக்கண்டேன்
ஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான்,
வின்திகழும் சோதி வடிவு.
81

இப்பாடலில் பகலிலேயே நாரண தரிசனம் கிடைத்ததாகத் தானே சொல்கிறார் என்றும் சொல்லலாம். ஆனால் நாரணனைச் சூரிய வடிவில் காண்கிறது வேதம். வின் திகழும் சோதி என்றுதான் ஆழ்வார் சொல்கிறார். பகல் என்பது சூரியனைக் குறிக்க வருகிறது என்பது அவர் அவனைக் கனவில்தான் மிகக் காண்கிறார் என்ற அடுத்த வரியில் புலப் படுகிறது.

இப்படிக் கனவு நிலையில் இறை தரிசனம் பற்றி இரண்டு ஆழ்வார்கள்தான் ஆழமாகப் பேசுகின்றனர். அந்த இரண்டாமவர், இற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் பற்றாகும் கரம் தன்னைப் பற்றியதாகக் கனாக் காண்கிறார்.

இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையில் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்.


ஆண்டாள் என்றொரு பெண் இப்படிக் கவிதை படிக்கா விட்டால் இன்றைய சினிமா உலகம் கனவு சீன் காட்சிகளுக்கு கற்பனை இன்றி வரண்டு போயிருக்கும். திருமங்கைக்கு கனவில் வெறும் பாதம் காட்டும் பெருமாள், ஆண்டாள் பாதத்தைப் பிடிப்பதாகக் கனவு கொடுக்கிறார் (கனவுக்கு யார் பொறுப்பு?).

இதை ஆண்டாளின் அபரிதமான நம்பிக்கை, கொள்கைப் பிடிப்பு என்றும் காணலாம். அந்தப் பிடிப்பு நம்மையும் கொஞ்சம் பிடித்தால் தேவலை.

மடல் 103: தாய் நாடும் கன்றே போல்

First Published on: Sun, 22 Apr 2001 16:56:29 +0200

இவ்வுலகின் மிக அதிசயமான, ஆச்சர்யமான விஷயம் வாழ்தல் என்னும் இயக்கம்தான். இவ்வியக்கம் பல நேரங்களில் பொருள் பொதிந்தும், பல நேரங்களில் பொருளற்றும் தோன்றி மயக்கம் தருவதாக உள்ளதால், மனிதனின் தேடுதலின் முக்கிய குறிக்கோளாக இவ்வியக்கம் அமைந்து போனது.

ஒரு அழகான காட்சி, இனிய கீதம், மெய் மறக்க வைக்கும் ஓவியம், கவிதை, காவியம், நல்லுணவு, பெண்-ஆண் தீண்டல், மழழையின் ஸ்பரிசம் இவை வாழ்வைப் பொருள் உள்ளதாக மாற்றும் மருந்துகள்.

வஞ்சகம், போர், வன்முறை, வறுமை, ஏழ்மை, தனிமை இவை வாழ்வைப் பொருளற்றதாக மாற்றும் கசப்புகள்.

வாழ்வு என்ற விஷயம் மனிதனின் பிடிக்குள் கிடைத்திருந்தால் இத்தனை மதங்கள், இத்தனை தத்துவங்கள் தோன்றியிருக்காது. அறிவியல் என்பதும் வாழ்வின் நீட்சிதான். வாழ்வு பொருளற்றுப் போகும் போதும், தனிமைப் பட்டு துயருரும் போதும் மனிதனுக்கு வாழ நம்பிக்கை தேவைப்படுகிறது.

குழந்தைப் பருவத்திலிருந்து மனிதனுக்கு உற்ற துணையாக இயற்கையே அமைத்துக் கொடுத்ததுதான் தாய். தாய் உள்ளம் என்பது பரிவு காட்டுவது. இது மனித இயல்புமட்டுமன்றி அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். கொடும் விலங்குகளின் தாய்கூட தன் குட்டிகளிடம் பரிவாகத்தான் இருக்கும். எனவேதான், துன்பம் என்று வரும்போது தாயிடம் ஓடுவது இயல்பாக அமைகிறது. இதை நன்கு சுட்டும் வண்ணம் பொய்கை ஆழ்வார் தனது இயற்பாவில் குறிப்பிடுகிறார்:

தெளிதாக வுள்ளத்தைச் செந்றீஇ, ஞாலத்து
எளிதாக நன்குணர்வார் சிந்தை, எளிதாகத்
தாய்நாடு கன்றேபோல் தண்டுழா யான் அடிக்கே,
போய்நாடிக் கொள்ளும் புரிந்து.

தாயை நாடும் கன்று போல் இவரது உள்ளம் இயல்பாக இறைவனிடம் சரணமடைவதாகச் சொல்கிறார். எனவே தாய் என்பவள்தான் நமது முதற் சரணம். அவள் தந்தையைக் காட்ட தந்தை உடன் துணை. தாயும், தந்தையும் தெய்வத்தைக் காட்ட தெய்வம் நம் இறுதித் துணை.

பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ
மற்றையார் ஆவாரும் நீபேசில், எற்றேயோ
மாய! மாயவளை மாயமுலை வாய்வைத்த
நீயம்மா! காட்டும் நெறி?

[நம்மாழ்வார் (இயற்பா)]

ஆதி சங்கரரும், பட்டினத்தாரும், நம்மாழ்வாரும் எவ்வளவுதான் ஞானிகளாக இருந்தாலும் தாய், தந்தை உறவை நன்கு புரிந்தவர்கள்தான். எனவே சந்நியாசம் என்பது இவ்வுறவைப் புறக்கணிக்கவில்லை என்று கொள்ளலாம். இல்லையெனில் இறைவனை தாய், தந்தை என்று உவமிக்க வேண்டியது இல்லை! மிக்க அன்புடனேதான் அவர் திருமாலை, "நீயம்மா!காட்டும் நெறி!" என்று நெகிழ்ந்து கூறுகிறார்.

ஆனாலும், எல்லா அம்மாக்களும் நல்ல அம்மாக்கள் அல்லவே! பெண்ணாகப் பிறந்து விட்டதாலோ, தாய்மை அடைந்து விட்டதாலோ ஒரு பெண் நல்ல தாய் என்று சொல்ல முடிவதில்லையே. பரிவு என்பது இல்லாததால்தானே கைகேயி இராமனை காட்டுக்குப் போகும் படி சொன்னாள். தாய் போல வந்துதானே முலைப் பாலில் ஒருத்தி நஞ்சு வைத்தாள்.

எம் அன்னை பெரியாழ்வார் பரிவைப் பாருங்கள்:

மாற்றுத்தாய்சென்று வனம்போகே என்றிட
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான்! என்றழ
கூற்றுத்தாய்சொல்லக் கொடியவனம்போன
சீற்றமிலாதானைப்பாடிப்பற! சீதைமணாளனைப்பாடிப்பற!

என்று இளங்கோ அடிகள் போல் சிலம்பாடுகிறார் எம் பெரிய பட்டரும்.

குலசேகர மன்னன் இன்னொரு காட்சியை விரிக்கிறார். தாய் முலைப்பால் பொங்கி வழியும் போது யாராவது பேய் முலைக்குப் போவரோ? அப்படிச் செய்பவனை பித்தன் என்று ஊர் சொல்லாதோ? இவன் இப்படிப் பட்ட கிறுக்கனாக இருப்பதால்தான் ஆய்மிகு காதலோடு காதலி காத்திருக்க, கூட வந்த தோழியைக் கடத்திக் கொண்டு போய் விடுகிறான் இவன் என்று குலசேகரக் காதலி நம்மிடம் முறையிடுகிறாள் :-)

தாய்முலைப் பாலில்அமுதிருக்கத் தவழ்ந்து தளர்நடையிட்டுச்சென்று
பேய்முலை வாய்வைத்து நஞ்சையுண்டு பித்தனென் றேபிறர் ஏச நின்றாய்
ஆய்மிகு காதலோடு யானிருப்ப யான்விட வந்தவென் தூதியோடே
நீமிகு போகத்தை நன்குகந்தாய் அதுவுமுன் கோரம்புக் கேற்குமன்றே


[குலசேகரர் (பெருமாள் திருமொழி)6.4]

இந்தத் தாய்-தந்தை என்பவர்கள் நம்மை இவ்வுலகிற்கு அறிமுகப் படுத்தியவர் என்ற நன்றி உணர்வோடு இன்னும் கூட சிந்தித்தால் இத் தாய்-தந்தையருக்கும் ஒரு முதல் தேவைப் படுகிறது. இதை நம்மாழ்வார் அழகாக "உலகுக்கோர் முந்தைத் தாய்தந்தையே!"என்றழைத்து நம் உண்மையான அம்மையும் அப்பனும் அவன்தான் என்று காட்டுகிறார். இச்சுட்டு மிகவும் முக்கியம் வாய்ந்தது. எனவேதான் குரு அல்லது ஆச்சர்யன் என்பவன்தாய் தந்தையை விட ஒரு நிலையில் முக்கியத்துவமடைந்து விடுகிறான்! நம்மாழ்வாரின்மிகவும் பொருள் செறிந்த திருவாய்மொழியொன்று இதோ:

போகின்றகாலங்கள் போயகாலங்கள்
போகுகாலங்கள், தாய்தந்தையுயிர்
ஆகின்றாய் உன்னை நானடைந்தேன் விடுவேனோ?
பாகின்ற தொல்புகழ் மூவுலகுக்கும்
நாதனே! பரமா! தண்வேங்கடம்
மேகின்றாய்! தண்டுழாய் விரைநாறுகண்ணியனே. 2.6.10

பால் நினைந்தூட்டும் தாயினும் பரிந்து செயல் படக்கூடிய ஒரே பொருள் பரம்பொருளாகவே இருக்க முடியும் என்ற துணிபில்தான் "பெற்ற தாயினுமாயின செய்யும்" என்று திருமங்கை சொல்கிறார். அவன் நிகழ் காலத்தில் நமக்குத் துணை, போய் விட்ட காலத்தில் நம் மூத்தோருக்குத் துணை (தெய்வம் நமக்குத் துணை பாப்பா! ஒரு தீங்குவர மாட்டாது பாப்பா - பாரதி),இனி வரப் போகும் காலத்தில் நம் சந்ததியினருக்குத் துணை என ஆகின்றான். இப்புரிதல் வந்தபின் நமக்கு வேறென்ன வேண்டும்?

மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித்தொழும்,
மாலார் வந்தினநாள் அடியேன்மனத்தே மன்னினார்,
சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும்,
மேலாத் தாய்தந்தையும் அவரேயினி யாவாரே. 5.1.8

அவரே தாய், அவரே தந்தை, அவரே இனி யாவும். அப்புரிதலில் ஒரு களி வந்தால்,

நன்று நானுய்ய நான் கண்டு கொண்டேன்- நாராயணாவென்னும் நாமம்!
--------என்று சொல்லும்,

நம்பிகாள்! உய்ய நான் கண்டு கொண்டேன்-நாராயணாவென்னும் நாமம்!
--------என்று சொல்லும்,

நற்பொருள் காண்மின் பாடிநீ ருய்ம்மின்-நாராயணாவென்னும் நாமம்!
--------என்று சொல்லும்,

நற்றுணையாகப் பற்றினேன் அடியேன்நாராயணாவென்னும் நாமம்!
--------என்று சொல்லும்,

நலந்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்-நாராயணாவென்னும் நாமம்!
--------என்று சொல்லும்,

நஞ்சுதான் கண்டீர் நம்முடைய வினைக்கு-நாராயணாவென்னும் நாமம்!
--------என்றும் சொல்லும்.

மடல் 104: கொன்றை அலங்கல் மார்வன் யார் ?

First Published in: Sun, 29 Apr 2001 23:33:35 +0200

அண்மையில் கொன்றையும் பொன்னும் ( 4) என்னும் கட்டுரையில் முனைவர்.இராம.கிருஷ்ணன் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்

.......ஆனா, விண்ணெறியிலெ (வைணவத்திலெ) இப்படி இல்லைங்க; அவுங்களுக்கு கொன்றை மேலே கோபம் போலே இருக்கு...............கொன்றையை பத்தி ஒரு ஓரவஞ்சனை; நாலாயிரப் பனுவல் முழுக்கப் படிச்சிங்கின்னா மொத்தமா ரெண்டு இடம் தவிர மிச்ச எங்கெயும் கொன்றையைப் பத்திச் சொல்லிற மாட்டாங்க.......


இதில் இரண்டு பிழைகள்! ஒன்று ஆழ்வார்களுக்கு சிவனிடம் கோபம் கிடையாது, எனவே கொன்றை மீதும் கோபம் கிடையாது.

இரண்டாவது, எந்த ஓரவஞ்சனையுமின்றி பல இடங்களில் (இரண்டு மட்டுமல்ல!) ஆழ்வார்கள்கொன்றை பற்றிப் பேசுகின்றனர்.

பல்லாண்டு பாடிய பட்டர் திருப்பிரானிடமிருந்து தொடங்குவோம்.

கங்கைக் கரையிலுள்ள கண்டமெனும் திருப்பதிக்கு யாத்திரை போகிறார் பெரியாழ்வார். தென் தமிழ் நாடு போல் வடக்கில் இந்த சைவ-வைணவ பேதம் கிடையாது. இரண்டும் ஒண்ணு மண்ணாய் கிடக்கும். தெக்கத்திகாரர்கள் போல் ஐயர் மட்டும் சிவலிங்கத்தைத் தொட முடியும் என்ற பழக்கமும் கிடையாது. யாரும் சிவனுக்கு அபிஷேகம் செய்யலாம். இந்தப் பரந்த நோக்கைப் பிரதிபலிப்பது போல், நலம் திகழ் சடையனான சிவன் (சிவம் என்றால் மங்களம் அருள்பவன் என்று பொருள்) அணியும் கொன்றை மலரும், நாரணன் பாதம் படும் திருத்துழாயும் (துளசி) கலந்து புனலாடி வரும் "கண்டம்" என்றுபாடுகிறார்.

சலம்பொதியுடம்பின்தழலுமிழ்பேழ்வாய்ச்
சந்திரன்வெங்கதிர் அஞ்ச
மலர்ந்தெழுந்தணவி மணிவண்ண வுருவின்
மால் புருடோத்தமன் வாழ்வு
நலம் திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும் நாரணன்பாதத்துழாயும்
கலந்திழிபுனலால் புகர்படுகங்கைக்
கண்டமென்னும்கடிநகரே.

அடுத்து, பாண்டிநாட்டுக்காரரான பட்டருக்கு, திருமாலிருஞ்சோலை மேல் பெரும் காதல் உண்டு.

பொருப்பிடைக் கொன்றை நின்று விருப்புடன் பொன் வழங்கு வதாகச்சொல்கிறார். கொன்றை பூத்துக் குலுங்கும் திருமாலிருஞ்சோலை, பொன் வழங்கும்பெருமாளான கோவிந்தராஜனை நினைவிற்குக் கொண்டு வருதல் இயற்கை. ஆபரணப்பிரியனான திருமால் நிற்கும் மலை பின் ஜொலிக்காமல் என்ன செய்யும்?

உருப்பிணி நங்கைதன்னை மீட்பான் தொடர்ந்தோடிச்சென்ற
உருப்பனையோட்டிக்கொண்டிட் டுறைத்திட்டஉறைப்பன்மலை
பொருப்பிடைக்கொன்றை நின்று முறியாழியும்காசும்கொண்டு
விருப்பொடுபொன்வழங்கும் வியன்மாலிருஞ்சோலையதே. (2) 1.

நாச்சியார் திருமொழியில் ஆண்டாளின் வருணனை இன்னும் அழகு! மாலைப் பொழுதே பொன் நிறத்தில் இருக்கும் (பொன் மாலைப் பொழுது என்பதுதானே வழக்கு), அப்படியிருக்க, கொன்றையில் தூங்கும் பொன்மாலை எப்படியிருக்கும் பாருங்கள்?? அடடா! இந்த ரம்மியமானசூழலில் கண் வளர்கிறாள் கோதை. அவள் நினைவெல்லாம் கண்ணன்! சங்கம் எடுத்தூதிய திருமுகம் எப்படியிருக்கும்? சார்ங்கம் வைத்துக் கிளப்பும் நாணொலி எப்படியிருக்கும்? என்று மயங்குவதாகக் கொன்றைக் கவி செய்கிறாள் ஆண்டாள். இதில் ஓரவஞ்சனையின் சாயல் எங்காவது உண்டா?

கோங்கல ரும்பொழில்மா- லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல் தூங்குபொன் மாலைகளோ- டுடனாய்ன்று தூங்குகின்றேன்,
பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும்,
சார்ங்கவில் நாணொலியும் தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ.

இயற்கையை வருணிப்பதில் திருமங்கையை அடித்துக்கொள்ள யாரும் கிடையாது. அப்படிப் பட்டவர் கண்களில் கொன்றை தப்புமா?

வங்கத்தால் மாமணி வந் துந்து முந்நீர்
மல்லையாய்! மதிள்கச்சி யூராய்! பேராய்!
கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன்
குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான்,
பங்கத்தாய்! பாற்கடலாய்! பாரின் மேலாய்!
பனிவரையி னுச்சியாய்! பவள வண்ணா!
எங்குற்றாய்? எம்பெருமான்! உன்னை நாடி
ஏழையேன் இங்கனமே உழிதர் கேனே!
(திருநெடுந்தாண்டகம் 9)

மிக, நயமான பாடல் இது. முது நீர் நிற்கும் வங்கக் கடல் மல்லைத் தலைவனே (தலசயனப் பெருமாள் -திருக்கடல் மல்லை) என ஆரம்பிக்கிறது பாசுரம். முந்நீர் என்பது கடல்நீரைக் குறிக்கும். ஆற்று நீருக்கு முந்தியது கடல் நீர் என்ற புரிதலே விஞ்ஞான பூர்வமானதுதானே? கடல் நீர்தானே உலகு தோன்றியபோது முதலில் தோன்றியது! மல்லையாய்! மதிள்கச்சி யூராய்! பேராய்! என்று பெருமாள் உறையும் பதிகளைச் சொல்லிவருபவர், திடீரென்று, கொன்றை மலர் மார்பன் சிவன் தன் இடத்தில் மடப் பாவையைக் கொண்டான், பாற்கடலாய், பாரின் மேலாய், பனி சூழ்ந்த மலையின் உச்சியியாய் எங்குற்றாய்? என்றொரு கேள்வியை எழுப்புகிறார்? "அரியல்லால் தேவியில்லை ஐயன் ஐனார்க்கே" என்றால்,சிவன் நம்ம பெருமாளைக் கடத்திக் கொண்டு போய்விட்டார் என்று அர்த்தம்!அப்படியெனில் மல்லையாய்! மதிள்கச்சி யூராய்! பேராய்! எங்கே உள்ளாய் அப்பாவென்ற கேள்வி இயற்கைதானே :-))

திருமங்கையின் கேள்விக்கு விடையே போல், பதில் சொல்கிறார் நம்மாழ்வார். அவரேதான் இவரு, இவரேதான் அவரு என்று :-) நம்மாழ்வார் என்ற பாராங்குச நாயகிதன்னைப் பெருமாளாகப் பாவித்துக் கொள்கிறது. அப்போது அது சொல்லும் மொழிகள்தாயானவளுக்கு விளங்கவில்லை. அந்த இனிய பாடல் இதோ:

'முடிவிவள் தனக்கொன்று அறிகிலேன்' என்னும்
'மூவுல காளியே!' என்னும்,
'கடிகமழ் கொன்றைச் சடையனே!' என்னும்
'நான்முகக் கடவுளே!' என்னும்,
'வடிவுடை வானோர் தலைவனே!' என்னும்
'வண்திரு வரங்கனே!' என்னும்,
அடியடை யாதாள் போல் இவள் அணுகி
அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.
(திருவாய்மொழி 7.2.10)

எடுத்த முதல் அடியே வலுவானதாக விழுகிறது! தனக்கு முடிவு என்பது இல்லை என்று சொல்கிறாள் தலைவி! ஆதி-அந்தமற்ற பரம் பொருளுக்கு முடிவு ஏது? அவளே மூவுலகும் ஆளும் இந்திரன்! கடி கமழ் கொன்றைச் சடையன், பிரம்மா, வானவர் தலைவன், திருவரங்கன் எல்லாம். இந்தப் புரிதல் வந்த பின் முகில் வண்ணன் திருவடியை அவள் அடைந்துவிட்டாள் என்று பொருளாம்!

தலைவி, தலைவனின் வருகைக்காகக் காத்திருக்கிறாள். கார் காலத்தில் வருகிறேன் என்றுசொல்லிப் போனவன். இதோ வருகிறான்! எழில் திகழும் மாலை அணிந்து, கந்தம் நிறைய,பொரு கடல் தாவி உலகு அளந்த எம்பெருமான் வருகிறான்! உண்மைதான் கொன்றைகள் பூத்துக் குலுங்குகின்றனவே! அவன் வாக்கு மாறவில்லை. கார் காலத்தில் வந்து விட்டான்.

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப்பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப்பந்தர் தண்டுற நாற்றி, பொருகடல்சூழ்
நிலந்தா விய எம் பெருமான் தனதுவை குந்தம் அன்னாய்!
கலந்தார் வரவெதிர் கொண்டு! வன் கொன்றைகள் கார்த்தனவே. (திருவிருத்தம் 68)

சிவனும், மாலும் ஒன்றே என்று பொருள் படும் இன்னொறு பாடல் இதோ!

காத்த எங் கூத்தா! ஓ! மலை ஏந்திக் கன்மாரி தன்னைப்
பூத்தண் துழாய்முடி யாய்! புனை கொன்றையஞ் செஞ்சடையாய்!வாய்த்தவென் நான்முக னே! வந்து என் ஆருயிர் நீயானால்,
ஏத்தருங் கீர்த்தியி னாய்! உன்னை எங்குத் தலைப்பெய்வனே?
(திருவாய்மொழி 7.6.3)

புனை கொன்றைச் சடையனும், ஆருயிரும் எங்கள் கூத்தனே என்று சொல்கிறார். நடராசன் மட்டும் கூத்தன் அல்லேன். கண்ணனும் கூத்தனே! கல் மாரியாய் பெய்த போது குடை பிடித்துக் கூத்தாடியவன் தானே அவன்!இத்தனை பாடல்களிலும் எங்காவது ஓரவஞ்சனை தெரிந்ததா? சங்க மரபு எங்காவது பிறழ்ந்ததா? சிவ துவேஷம் தெரிந்ததா?

திருச்சந்த விருத்தத்தில் பேதம் தலைப் படுகிறது:

தாதுலாவு கொன்றைமாலை துன்னுசெஞ்ச டைச்சிவன்,
நீதியால் வ ணங்குபாத நின்மலா! நிலாயசீர்
வேதவாணர் கீதவேள்வி நீதியான கேள்வியார்,
நீதியால் வணங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே (9)

இப்படிப் பார்ப்பது கூட தவறாக இருக்கலாம். ஏனெனில், சிவன் நீதியால் திருமாலை வணங்குவதாகத்தான் கூறுகிறார். பல புராணங்களில் சிவன் திருமாலைத் தொழுவதும், இவர் அவரைத் தொழுவதும் காணக் கிடைக்கிறது. இராமாயணத்தில் இலங்கை செல்லும் முன் இராமன் சிவ பூஜை செய்துச் சிவனைத் தொழுத பின்னேதான் வெற்றி காண்கிறான். எனவே, புராணக் கணக்கில் இதைத் தோஷமாகக் கொள்ள முடியாது. ஒருவகையில் பார்த்தால் பெருமாளை ஆழ்வார்கள் "'கடிகமழ் கொன்றைச் சடையனே!' என்று வணங்குவதும் மகிழ்வான விஷயமே!

மடல் 105: உயர்வற உயர்நலம் உடையவன்

First Published on: Fri May 11,2001 9:25 pm

உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே


நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியின் முதற்பாடல் இது. இறைவனை நம்பும் அனைத்து சமயங்களுக்கும் பொருந்துமாறு ஆரம்பிக்கிறார். இறைவனின் தன்மைகள் பற்றி முழுதுமாய் சொல்லமுடியாதஅளவு உயர் நலம் உடையவனாக அவன் இருக்கிறான். அவனைப் பற்றி அறிந்துகொள்ளுவதற்கான நல்லறிவைத் தந்தவனுமாய் உள்ளான். இறைத் தூதர்கள்,சித்தர்கள், முக்தர்கள் போன்ற அமர நிலை அறிந்தவர்களும் என்றும் போற்றும் அதிபதியாக உள்ளான். அப்படிப் பட்டவனின் சுடர் போன்ற அடிகளைத் தொழுது, உயர்வு கொள் மனமே என்பது எளிமையான பொருள்.

அவன், யவன் என்று ஆண்பாலில் சொன்னாலும்

"அவன் ஆணுமல்லன்,பெண்ணுமல்லன் அன்றி அலிவுமல்லன்"

என்று பிற பாடல்களில் சொல்லி அவனது அருவருவ நிலை பற்றி நிரம்பச் சொல்வதால் இதில் பால் வேறுபாடு கிடையாது. சுடரடி தொழுவதைப் பற்றி பொதுமறை தந்த வள்ளுவன் பாயிரத்தில் 7 (பத்தில் ஏழு) இடங்களில் சொல்கிறான்.முதல் பத்தில் வரும் பல பாசுரங்கள் இப்படித்தான் அமைந்துள்ளன.

இறைமை என்பதை ஒரு பிரபஞ்ச இயக்கம் போல அதன் அளவு, குணங்களைப்பற்றி பேசுவதாகவும் கூட இதற்கு வியாக்கியானம் சொல்ல முடியும். உதாரணமாக ஆதி காலம் தொட்டு அண்டவெளி பற்றி ஆராய்ச்சி நடந்து கொண்டுதான் உள்ளது. இன்றைய ஆய்வுகள் வரை அண்டத்தின் அளவை அளந்து சொன்னவர் இல்லை. கருங்குழியில் விழுந்து புறப்பட்டால் மீண்டுமொரு பிரபஞ்சத்தில் நிற்போம் என்கிறது இன்றைய ஆய்வு. பிரபஞ்சத்திற்குள், பிரபஞ்சமாய் அது விரிந்துகொண்டே போவதாகவே காண்கின்றனர் விஞ்ஞானிகள். அது உயர்வு அற உயர் நலம் உடையதாய் அமைகிறது. பிரபஞ்ச பரிணாமத்தில் மனிதன் ஒருவனுக்குத்தான் மயர்வற மதிநலம் அமையப்பெற்றுள்ளது (பல நேரங்களில் இது கேள்விக் குறியாவது வேறு விஷயம் :-). இதை அருளப் பெற்றவன் இவன் ஒருவனே. உலகம் பிறந்து எத்தனையோ தூதர்கள் வந்தாயிற்று, தன்னையே இறைவன் என்று சொல்லிக் கொள்பவர்களையும் பார்த்தாயிற்று. ஆனாலும் அவர்களுக்கும் அருள்பவனாய், அவர்களுக்கும் மேலான அதிபதியாய் அவன் உள்ளான். இப்பிரபஞ்ச விஸ்தாரணத்தைக் கண்ணுறும் எவரும் மண்டியிட்டு தொழாமல் இருக்க முடியாது. வாழ்க்கை என்பது ஒரு எதிர் நீச்சல். எத்தனையோ இடர்களுக்கு சவால் கொடுத்துக் கொண்டு வாழ்வு ஓடுகிறது. இதுவெல்லாம்தன் சுய முயற்சியில்தான் என்று அறிவுடைய எவரும் சொல்ல மாட்டார், எனவே இவ்வியக்கத்தின் முன் அடக்கமாக இரு என்பதும் ஒரு பொருள்.

இந்தப் பார்வையை விண்ணெறி அனுமதிக்கிறது. இதுபற்றிப் பேசும் மிகப்பழமையான தமிழ் நூல் பரிபாடல்

"பாழ்என, கால்என, பாகு என ஒன்றுஎனஇரண்டுஎன, மூன்று என, நான்குஎன, ஐந்துஎன.....

என்பதில் இறைமை என்பது ஐந்து நிலைகளில் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதாய் சொல்கிறது. பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம்,அர்ச்சை என்பதாகும் அவை. இது பற்றி முன்னைய மடல்களில் விரிவாகக் கண்டுள்ளோம்.

அறிவியல் மொழி கணிதம் என்பார்கள். அதனால்தான் பரிபாடல் கணித மொழி வழியாக இறைமை பேசுகிறது. பாழ் என்பது பண்டைய இந்தியர் கண்டு சொன்ன ஒன்று. பூஜ்யத்துக்குள்ளே நின்று இராஜ்ஜியத்தை நடத்துபவன் அவன். அதனால்தான் அவனது தொடக்கத்தைப்பற்றிப் பேசும் போது "பாழ் என" என ஆரம்பிக்கிறது பரிபாடல்! பாழ்என்பதில் சர்வமும் அடக்கம். எனவே பாழ் இல்லாமல் தொடக்கம் இல்லை. பாழ் என்பது எல்லையற்றது. பாழ் என்பது அனந்தம். பாழ் என்பது பரிபூரணம்.பாழ் என்பது சூன்யமல்ல (அதாவது வெற்று அல்ல). உயர் நலம் உடையது பாழ்.அது செய்வது அலகில்லா விளையாட்டு!!

ஆயின் விண்ணெறியின் மிகப் பெரும் பலமாக திருவாய்மொழி இருப்பதால் அதற்கான வைணவ விளக்கங்களைப் பார்த்து இரசிப்பதில் தவறில்லை. உரைவளம் மிக்க வைணவ இலக்கியத்தில் வரிக்கு, வரி, அடிக்கு அடி வியாக்கியானம் உண்டு. இறைவனை இரசித்து அனுபவிக்க வேண்டும் என்பதே நம் முன்னோர்களின் அவா.

உயர்வற என்ற முதல் வரியில் வரும் வியாக்கியானத்தில் எவ்வளவு நுணுக்கமாக இவர்கள் பிரபந்தத்தைப் பார்க்கிறார்கள் என்பது புரியும். சாதாரண வாழ்வில் ஒருவன் உயர்வு அடைய வேண்டுமெனில் வருந்தி உழைத்து மேலே வர வேண்டும்.நம்மாழ்வார் உள்ளக்கிடக்கை அப்படி அமைய முடியாதே எனக் கண்டு, அவனுக்கு உயர்வு என்பது இயல்பான ஒன்றே என்கிறார் ஆளவந்தார். 'ஆயின் மற்றையோருடைய உயர்வுகளை எல்லாம் இல்லை என்னலாம்படி செய்தால் தனக்கு ஓரெல்லை உண்டாய் இருக்குமோ?' என்னில், உயர்-காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையில் அனுபவித்தாலும் அப்பாற்பட்டு, வாக்காலும் மனத்தாலும் அளவிட்டு அறியமுடியாதபடி உயராநிற்கும் என்கிறது ஈட்டுரை!

செல்வம், அழிதலை முடிவாகவுடையன, உயர்வு,இறங்குதலை முடிவாகவுடையன, சேர்க்கை பிரிதலை முடிவாகவுடையன, வாழ்தல் சாதலை முடிவாகவுடையன, என்கின்றபடியே, இங்குக் கூறப்படும் உயர்வும் ஒருகாலத்தில் தாழுமோவெனக் கேட்டு, அன்று! 'உயர்' என்ற சொல்லால் இவ்வளவு என்று அளவிட்டுக் கூறமுடியாமையைக் கூறியபடி என்று சொல்கிறது ஈடு.

நலம் என்பது ஆனந்த குணம் ஒன்றனையே சொல்லுகிறது என்றும், எண்இல்லாதனவாய் உள்ள கல்யாண குணங்களின் கூட்டத்தையுடையவன் என்கிறார்ஆளவந்தார்.

மயர்வு அற - ஞாநாநுதயம், அந்யதா ஞானம், விபரீத ஞானம் என்கின்ற இவை வாசனையோட போகும் படியாக என்று சொல்லி, ஞாநாநுதயமாவது தேகத்தையே ஆத்துமாவாக நினைத்தல், அந்யதா ஞானமாவது பிற தெய்வங்கட்குத் தன்னை அடிமையாக நினைத்தல் (பரம் பொருள் அல்லாத சிறு தேவதைகள்), விபரீத ஞானமாவது தனக்குத்தானே உரியவனாகவும் ஆத்துமாவோடு அனுபவிக்கின்ற இன்பமே இன்பமாகவும் நினைக்கும் கேவல ஞானம் போன்ற அழுக்குகளை நீக்கி என்றாகிறது.

மதி நலம் -ஞான பத்திகள் இரண்டினையும் தந்தான் என்று இராமானுசருக்கு முன்பிருந்த பெரியவர்கள் கூறுவதுண்டு என்று ஈடு சொல்லி நலம் மதி எனக் கொண்டு நலமான மதி என்றும் பொருள் கொள்ளாலாம் என்கிறது.

அருளினன் - பற்றிப் பேசும் போது ஒரு அழகான உவமை சொல்கிறது ஈடு. மார்பின் கடுப்பாலே தரையிலே பாலைப் பீச்சுவாரைப் போன்று, தானகவே அருள் செய்துகொண்டு நின்றான் என்கிறது. ஒரு காலத்தில் தமிழகத்தில் தேனும், பாலும் ஓடித்தான் இருக்கிறது போலும் :-)

மேலும் அழகாக, இறைவன் திருவருள் புரிதற்கு முன்னர் ஆழ்வார் தம்மை இல்லாத பொருளுக்குச் சமமாக நினைத்திருந்தார் ஆதலின் "எனக்குஅருளினன் என்கிலார். இத்தோடு எங்க ஊர்க்காரரான மாணிக்கவாசகப் பெருமான் சொல்லிய, "அவன் அருளால் அவன்தாள் வணங்கி" என்ற வாசகத்தை ஒப்பிடுக. அயர்வறும் அமரர்கள் - என்பது கேவலம் மரணமில்லாத அமரர்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது என்று சொல்லி, இறைவனுடன் ஒன்றி இருக்கும் பெரியவர்களுக்கு இவ்வனுபவம் தடைப்படுமானால் அப்பிரிவை தரியாதவர்கள் எனவே அப்பிரிவு ஏற்படா வண்ணம் என்றும் இறைத்தியானத்தில் இருப்பவர்கள் என்று பொருள் என்றுவிளக்கமளித்து,

ஸ்ரீராமாயணத்தில் அயோத்தியா காண்டத்திலிருந்து மேற்கோள்காட்டுகிறது ஈடு :
இராகவரே, உம்மைப் பிரிந்து பிராட்டி பிழைக்க மாட்டாள்,நானும் பிழைக்கமாட்டேன் என்பது இளையபெருமாள் (இலக்குவண்) திருவார்த்தை.இப்படிப்பட்ட அமரர்களுக்கு எப்படி அவன் அதிபதியாக இருப்பான் என்றால், "யானைக்குக் குதிரை வைத்து அவ்வருகாய் இருப்பான்" என்பதாம் என்கிறது உரை!அதாவது யானையின் வேகத்தைப் பரிட்சிப்பவர், குதிரையை முன் நடத்தி, யானையின் துதிக்கையாலே குதிரையைத் தொடும் படி கிட்டச் சென்று பின்னையும் தொடமாட்டாதே ஒழியச் செய்வது. அப்படியே நித்தியசூரிகட்கும் அப்பாற்பட்டவன் இறைவன் என்கிறதுஈடு. கதை இப்படி இருக்கும் போது தனி மனிதன் ஒருவன் தான் இறைவன் என்பதைநாம் எப்படி நம்புவது? அத்வைதத்தை இப்படியெல்லாம் பொருள் கொள்பவர் வரும்வரை!

சுடர் அடி - எல்லையற்ற ஒளி உருவமான இறைவன். பால் குடிக்கும் குழந்தைகள்,தம் தாயின் மார்பிலே வாய் வைக்குமாறு நம்மாழ்வாரும், உன் தேனே மலரும் திருப்பாதம் என்கிறார் என்று சொல்கிறது ஈடு. ஈடு படிப்பதில் உள்ள உரைநயங்களில் இதுவும் ஒன்று.

உயர்வு அற உயர்நலம் உயைவன் யவன்? அவன்
மயர்வு அற மதி நலம் அருளினன்;

மயர்வு அற மதி நலம் அருளினன் யவன்? அவன்
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி;

அயர்வு அறும் அமரர்கள் அதிபதி யவன்? அவன்
சுடரடி தொழுது எழு.

சுடர் அடி - எல்லையற்ற ஒளி உருவமான இறைவன்.

மடல் 106: கோதை எனும் குலவிளக்கு!

First published: Tue, 05 Jun 2001 12:45:36 +0200

கொண்டல் வண்ணனைக் குழவியாய்க் கண்டு குதூகலித்துப் பாடிய, விட்டு சித்தரின் மகள் கோதை நாச்சியார் எனப்படும் ஆண்டாள். குழல் இனிது, யாழ் இனிது, மழழைச் சொல் அமுதினிது என்று இறைவனைப் பிள்ளையாய்க் கண்டு ஆனந்தித்துப் பாடிய பெரியாழ்வாழ்வருக்கு - உண்மையான தூண்டுதல் (inspiration) ஆண்டாள் என்ற இளம் சிட்டிடமிருந்து கிடைத்திருக்க வேண்டும். "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா! ஆடிவரும்தேரே!" என்று கண்ணனைப் பாடிய பாரதியின் அழியாக் கவிதைக்கு அவர் மகள் காரணியாக இருந்தது போல்!

இப்படியானதொரு சிந்தனை சென்ற நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒரு வைணவ அன்பருக்கு ஏற்பட்டு அவர், விட்டு சித்தரின் வழியில், அவரது வரிகளை உரிமையுடன் கையாண்டு அவரது மகளான கோதை நாச்சியாருக்கு ஒரு தாலாட்டுப் பாடியுள்ளார்.

ஆழ்வார்திருநகரி என்னும் ஊர் தமிழ்த் தாத்தா உ.வே.சா, மகாவித்வான் இரா.இராகவையங்கார் போன்றோருக்குப் பண்டைத் தமிழ்க் கருவூலங்களைத் தந்த புண்ணிய பூமியாகும். பழந்தமிழ்நூல் வெளியீடுகளுள் பத்துப்பாட்டு, பதிற்றுப் பத்து,பரிபாடல், புறநானூறு முதலிய நூற்பதிப்புகளுக்கு ஆழ்வார்திருநகரி ஏட்டுப் பிரதிகள் மிகவும் உபயோகமாயிருந்தன என்பது உ.வே.சாவின் கூற்று. அத்தகைய ஆழ்வார்திருநகரியில் கிடைத்திருக்கும் மற்றுமொரு தமிழ்க் கருவூலம்தான், "கோதை நாச்சியார் தாலாட்டு".

ஏடுகளில் கண்டபடி 1928-ல் ஆழ்வார்திருநகரி திருஞான முத்திரைக் கோவை பதிப்பாக வெளிவந்திருக்கிறது. ஆக்கியோன் பெயர் ஏட்டில் அழிந்து விட்டதாலோ, இல்லை , "நாடோடிப் பாட்டுக்குதாய் தந்தை யாரோ?" எனும் படியாகவோ இந்நூலை ஆக்கியோன் பெயர் விட்டுப் போயிருக்கிறது. பழம் ஓலைச் சுவடிகளைச் சரியாகப் பராமரிக்க வில்லையெனில் அவை பூச்சிகளின் வாய்க்கு இரையாகி அழிந்துவிடுகின்றன. இந்நூலில் பல வரிகள் அச்சிடப் படாததற்குக் காரணம் அவை வாசிக்கத் தக்கதாய் இல்லை என்று ஊகிக்கலாம். இல்லை, வாய்மொழியாகக் கேட்ட பாடலைப் பதிவு செய்தவருக்கு ஞாபகத்தில் வராத வரிகளை எழுதாமல்விட்டு விட்டார் என்றும் கருதலாம். 1928 புத்தகம் இது பற்றி ஒரு சேதியும் தராமல் நம்மைஇப்படியெல்லாம் ஊகிக்கவிடுகிறது.

தாலாட்டு ஒரு மக்கள் கலை. அடுப்படிப் பெண்களின் கவித்துவத் தூறல். தவழும் குழந்தைக்கு தூளிக் கயிற்றில் அன்பைப் பாய்ச்சும் மந்திரப் பாடல்கள். தூளியில் உறங்கும் எளிமையின் உருவைத் திருமகளாகக் காணும் தாயின் பரிவைப் பதிவு செய்யும் பாடல்கள் தாலாட்டு. திருமகளே உரு எடுத்து விட்டு சித்தருக்கு மகளாகப் பிறந்த பின், அவளுக்குத் தாலாட்டுப்பாடாமல் வேறு யாருக்குப் பாடுவது?

வைணவம் என்பதின் மறு பெயர் அன்பு, பரிவு, காதல் என்பவை.

முதல் மூவருக்கிடையில் இடித்துப் பழகும் தோழனாக நாராணன் இடையில் புகுந்தான்.

வாள் கொண்டு போர் செய்யும் வேல் மாந்தர் கள்ளத் தொழில் செய்த போது, மறைமகன் திருடனாக வந்து வழி மறைத்தான்,

பறைமகன் ஒருவன் பரம்பொருளைத் தொழத்தடையான போது மறை சொல்லும் நூலார் தலைமேல் தூக்க வைத்தான் நம் பெருமாளான, "நீதி வானவன்!",

கள்ளமற்ற விட்டு சித்தர் உள்ளம் கவர்ந்து வெண்ணெய் உண்ட வாயனாக வளைய வந்தான் வீட்டு முற்றத்தில் மணிவண்ணன்,

ஆனால், அவர் மகள்கோதைக்கோ, "மானிடற்கு மணமென்ற பேச்சுப் படின் மரித்திடுவேன்" எனப் பேச வைத்துமணவாளனாக வந்து உய்யக் கொண்டான்.

இப்படி வீட்டுக் கொல்லையில் வளைய வரும்கன்று போல், கை கொண்டு நெருடும் அன்பர்க்கு கழுத்தை தரும் பசும் கன்று போல் அன்று முதல் இன்றுவரை வளைய, வளைய வருகிறான்,

"பண்டமெல்லாம் சேர்த்து வைத்துப்பால்வாங்கி மோர் வாங்கிப்,
பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து,
நண்பனாய்,மந்திரியாய், நல்லாசிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்"

வளைய, வளைய வருகிறான் மாதவன். இத்தனைச் சுகம் தரும் வைணவத்தின் மறுபெயர் அன்பு, காதல், பரிவு என்றால் மிகையோ?

எனவே பரிவுடன் வரும் தாலாட்டில் வைணவத்தின் மெல்லிசை, குழல் போல் ஒலிப்பதுதவறோ? தவறில்லை என்று சொல்லித் தாலாட்டுப் பாடினர் முன்னைய மாந்தர். கண்ணனுக்குத் தாலாட்டு பலபாடி வைத்து விட்டார் புதுவைப் பட்டர் என்று சொல்லி, கோதைக்குத் தாலாட்டுப்பாடினர் கொங்கைப் பெண்டிர்!

இத்தாலாட்டு பல வைபவங்கள் கொண்டது. புதுவை நகர் என்னும் ஸ்ரீவில்லிபுத்தூரின் அழகு முதலில் சொல்லப்படுகிறது.

கரும்பு கலகலெனக் கஞ்ச மலர்விரிக்கக்
கரும்பு குழலூதத் தோகை மயில்விரிக்க 20

மாங்கனிகள் தூங்க மந்தி குதிகொள்ளத்
தேன்கூடு விம்மிச் செழித்து வழிந்தோடச் 21.........

புன்னையும் பூக்கப் புறத்தே கிளிகூவ
அன்னமும் பேசும் அழகான தென்புதுவை 26

கன்னல் தமிழர் வாழ்வுடன் இணைந்த ஒரு பயிர். கன்னல் மொழிப் பெண்டிர் நிறைந்த தமிழ் மண்ணில்கன்னல் "கல, கலவென"ப் பேசுவதாகச் சொல்வது ஏற்றுக் கொள்ளத் தக்கதே! கண்ணன் ஊரில் கரும்புகள் குழல் ஊதுவதும் இயல்பான ஒன்றே! கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்ற பெருமிதத்தில் தேன் கூடுகள் கூட நெஞ்சு விம்மி தேன் பாய்ச்சுவது கவிச் சுவையின் உச்சம்!!

அடுத்து, கோதை நாச்சியாரின் திரு அவதாரம்! கிரேக்க, ரோம பழம் தொன்மங்களை விஞ்சும் தொன்மங்கள் (myth) தமிழில் உண்டு என்பதற்கு கோதையின் கதை நல்ல உதாரணம். பூமி விண்டு கோதை பிறக்கிறாள். மண்ணின் மாது அவள்.அப்போது விஷ்ணுசித்தன்

அலர்மகளைத் தானெடுத்துச்செப்பமுடன்
"கண்ணே திருவாய் மலர்ந்தருள்வீர்"!! 35

"அய்யா உமக்கடியேன் அருமை மகளாக்கும்,
மெய்யார்ந்த தாயார் மென்மைத் துளசி" என்றார்!!! 36

சீதை போல் பூமியின் புதல்வியான கோதை,
கண்விழித்துச் சொல்லும் முதற் சொல்,
"மெய்யார்ந்த தாயார் மென்மைத் துளசி" என்பது!

இவள் துளசியின் புதல்வி! காளிதாசன்சொல்லாத கவி நயம் ஒரு எளிய தமிழ்த் தாலாட்டில் கிடைப்பது, நாம் செய்த பாக்கியம்! வைணவத் தொன்மங்களில், குரு பரம்பரைக் கதைகளில் மிகச் சாதாரணமாக பக்தனுக்கும், பரம்பொருளுக்கும் உரையாடல் நடக்கும். இது, இந்த நூற்றாண்டு "கோபல்ல கிராமம்" வரை கடைபிடிக்கப் படுகிறது (கோபல்ல கிராமத்தின் மூத்த குடிகள் பரம வைஷ்ணவர்கள்). அதனால்தான், திருவரங்கத்துயில் பரம்பொருள், "நம் பெருமாள்" என்றழைக்கப் படுகிறார். நம் பெருமாள், நம்மாழ்வார், நம் ஜீயர், எம்பெருமானார் என்று இவர்கள் கொண்டாடும் பந்தம் பக்தனைப் பிச்சேற்றுவது!! அந்தச் சம்பிரதாயம் மாறாமல் விட்டு சித்தர் பெருமாளிடம் போய் பெண்வந்த காரணம் கேட்டுபேரும் வைத்து வருகிறார்.

பெண்கொணர்ந்த விஷ்ணுசித்தன் பெருமாளைத் தானோக்கிப்
'பெண்வந்த காரணமென் பெருமாளே சொல்லு" மென்றார் 39

அப்போது மணிவண்ணன்

'அழகான பெண்ணுனக்குச்செப்பமுடன்
வந்த திருக்கோதை நாயகியார் 40

என்று பேருமிட்டு எடுத்துக் குழந்தைதனை
உன்றன் மனைக்கு உகந்துதான் செல்லும்' என்றார். 41

விட்டு சித்தர், கண்ணனுக்குப் பாடிய வரிகளை ஒரு வைணவ உரிமையுடன் கோதைக்குப் பாடுவதாகச் சொல்வது, "தொண்டீர்! எல்லீரும் வாரீர், தொழுது, தொழுது நின்றார்த்தும்!" என்ற நம்மாழ்வாரின் எட்டாம் நூற்றாண்டு வைணவ அறைகூவல் (an address of Vaishnava congress) இன்றளவும் கேட்பதன் அறிகுறியென்றே கொள்ள வேண்டியுள்ளது. மேலும் அவரே சொல்வது போல்,

"தடங்கடல் பள்ளிப்பெருமான், தன்னுடைப் பூதங்களேயாய் (பூதம்=பக்தன்) கிடந்தும், இருந்தும், எழுந்தும், கீதம் பலபலபாடி, நடந்தும், பரந்தும், குனித்தும் நாடகம் செய்கின்றனவே" - கடல் வண்ணனே, பக்தர்கள் உருவில்வந்து நாடகம் ஆடுவதாகச் சொல்வதால், கண்ணனுக்குப் பாடிய சொல் கோதைக்கும் பொருந்துவது இயல்பானதே. அந்த உரிமையின் குரல் இத்தாலாட்டு முழுவதும் கேட்கிறது.

மாணிக்கங் கட்டிவயிர மிடைக்கட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில் 44

பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்கமே தாலேலோ மங்கையரே தலேலோ, 45

ஒரே பாட்டில் ஒரு பிரபஞ்ச பந்தத்தைக் காட்ட முடியுமெனில் அது தாலாட்டில்தான் முடியும் என்பதற்கு கீழ்க்காணும் வரிகளே சான்று;

அன்னமே தேனே அழகே அரிவையரே
சொன்னமே மானே தோகையரே தாலேலோ. 46

பொன்னே புனமயிலே பூங்குயிலே மாந்துளிரே
மின்னே விளக்கொளியே வேதமே தாலேலோ, 47

இப்படிப் பாசமுடன் வளர்க்கப்படும் குழந்தை நல்லதொரு தமிழ்க் குடியாக வராமல் பின் என்ன செய்யும்? கம்பனும், வள்ளுவனும், பாரதியும் அணி செய்த தமிழுக்குப் பெண்மை மணம் தந்தவள் ஆண்டாள். அவள் இல்லையேல் இன்று மார்கழி நோன்பு இல்லை. ஒரு அழகிய திருப்பாவையில்லை. நாச்சியார்மொழியில் இல்லாத பெண்மையை வேறெங்கு காணமுடியும்? கோதை தந்த தமிழுக்கு, தமிழ்சொல்லும் தாலாட்டுதான், இத்தாலாட்டு :

முத்தே பவளமே மோகனமே பூங்கிளியே
வித்தே விளக்கொளியே வேதமே தாலேலோ, 58

"பாமாலை பாடிப் பரமனுக்கு என்னாளும்
பூமாலை சூடிப் புகழ்தளித்த தெள்ளமுதே"!! 59

அஞ்சு வயதில் அவனியில் வந்துதித்த
பிஞ்சாய்ப் பழுத்த பெண்ணமுதே தாலேலோ, 60

பிஞ்சிலே பழுத்த தமிழ் புலவர்கள் இருவர். ஒருவர் கந்தனின் பெண் தோழி! அதாவது ஒளவை!!இரண்டாவது கண்ணனின் பெண் தோழி ஆண்டாள். இளமையிலேயே மெய்ஞானம் எய்தியவர்கள். முன்னவர் உடல் மாற்றம் வேண்டிப் பெற்றார். இரண்டாமவர் எந்த மாற்றமுமின்றி இளமையுடன் அரங்கனுடன் கலந்தார். ஒளவை, காரைக்கால் அம்மையார், அக்கம்மா தேவியார் இவர்கள்பெண்ணின் உடல் ஆன்மீகத்திற்குத் தடை (ஆண் பார்வை தோஷத்தால் :-) என்று கருதிபெளதீக உடல் மாற்றம் வேண்டி நின்றனர். ஆண்டாளோ, சிங்கத்திற்கு வைத்த உணவைசிறு குறு நரி கொண்டு செல்ல முடியுமோ வென்ற மனோதிடத்தில், பாரதி சொல்லிய"ரெளத்திரம் பழகி" அக்கினிக் குஞ்சுபோல் வாழ்ந்து நினைத்தை சாதித்தவள்.

வையம் புகழய்யா! மானிடவர் பதியன்று."
உய்யும் பெருமாள் உயர்சோலை மலையழகர் 95

இவர்கள் தாம்பதி இரண்டாம் பதியரில்லை!!
அவர்கள்* தம்பாட்டில் அனுப்பியே வையும்!!! என்றார் 96*

மணம் கேட்டு வந்தவர்கள் மானிடர்க்குப் பதி என்பவன் இறைவன் ஒருவன்தான். நாம் எல்லோரும் அவன் தோட்டத்துக் கோபியர்கள் என்னும் Yin Yan தத்துவத்தை விளம்பும் வரிகள் இவை. சூடிக் கொடுக்கும் திடம் தமிழ் வரலாற்றில் ஆண்டாள் ஒருவளுக்குக்குத்தான் இருந்திருக்கிறது. ஒரு பக்தை சூடிக் கொடுத்த மாலையைப் பரிவுடன் ஏற்கிறான் பரந்தாமன். இது பக்தியின் சக்தியை அவனிக்குச் சொன்ன முக்தி இரகசியமாகும். இது காட்டுத்தீ போல் இந்தியா முழுதும் பரவி, இன்று பிரபு பாதாவின் முயற்சியால் உலக மாந்தரை உய்யக் கொண்டுள்ளது.

அடுத்து மார்கழி நோன்பு பற்றிப் பேசுகிறது தாலாட்டு.

"தூயோமாய் வந்தோம்" என்னும்படிஉள்ளத் தூய்மைக்கு வித்திடுவது நோன்பு ஆகும். நோன்பு கழித்த பின்தான் இறைத் தரிசனம்சாத்தியமாகிறது. அது "நெய்யுண்ணோம், பாலுண்ணோம்" என்னும் விரதம் மட்டுமன்று,"செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம்" என்பதும் அடங்கும். உடலையும்,மனதையும் சுத்தப் படுத்தும் போது இறையொளி சாத்தியப் படுகிறது.

அடுத்து, கோதைக் கல்யாண வைபவம் பேசப்படுகிறது.எளிமையின் மறு உருவான விட்டு சித்தரின் வாழ்வு பல திருப்பங்கள் கொண்டது. பூவின் இனம்காணும் பட்டரின் வாய் வழியாய் கவிதையில் இனம் காண வைக்கிறான் பரந்தாமன். பிள்ளைத்தமிழை தமிழுக்குத் தரும் உள நோக்குடன்!! பிள்ளைத் தமிழ் பாடினால் போதாது என்று பர தத்துவம் பேச வைத்து பொற்கிழி கொண்ட பிரானாக்கி,' நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை" என்பது போல் கூடல் சனம் அத்தனைக்கும் அன்று வைகுந்த தரிசனம் அளிக்கிறான் இறைவன். பின் பிள்ளையற்ற பட்டருக்கு பிள்ளை விடாய்தீர்க்க ஆண்டாளைத் தந்துய்வித்தான். கொடுத்த பெண்ணை மணம் பெரும் வயதில் மறைத்து வைத்து,

ஒருமகளை யானுடையேன் உலகளந்த மாயவனாம்
திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய்!
என்றாழ்வா ருஞ்சொல்ல இரங்கித் திருவரங்கர்சென்றெங்களய்யர்
திருவடியைத் தான்தொழுவார்!

ஆக, யசோதையின் பாவத்தில் பாடிய பட்டர்பிரானை உண்மையான தாயென்றே கருதி அய்யரவர் திருவடியைத் திருவரங்கன் தொழுகின்றான். பாகவதன் திருப்பாதத் தூளியில் சுகம் காணும் பாகவதப் பிரியனான கீதாசிரியன், அத்தோடு நில்லாமல் அவர் தம் திருமகள் பாத மலரையும் தொடுகின்றான். முன்பு வந்து எல்லோர்க்கும் அருளியது போதாது என்றுபட்டர் பிரான் சம்மந்தமுடைய அனைவருக்கும் மணவாளனாக வந்து மீண்டுமொருமுறை காட்சியளிக்கின்றான். (வைணவ சம்மந்தம் பரமுக்தியளிக்கும் என்பது வாக்கு)

நம்மை யுடையவன் நாராயணன் நம்பி 159

செம்மையுடைய திருக்கையால் தாழ்த்தி
அம்மி மிதித்து அருந்ததியும்தான்பார்த்து 160

அரிமுதன் அச்சுதன் அங்கைமேலும் கைவைத்துப்
பொரி முகந்தபடிப் போத்தி மறையோரை............

நாராணனுக்குப் பெருமை "நம்மை உடைத்தல்" என்று சொல்லும் வரிகளை வேறு எந்த நெறியிலும் காணப்பெறோம்?

செம்மையுடைய திருக்கையால் அம்மிமிதித்து, அங்கைமேல் கைவைத்து பொரி முகர்ந்த சேதி வேறு எங்கேணும் உண்டோ?

பரம் பொருளை "தாழ்த்தி அம்மி மிதி"க்க வைத்த திறம் தமிழுக்கு உண்டு ஆரியத்திற்கு உண்டோ?

"அச்சேதி கேட்டு ஆழ்வார் மனமகிழ்ந்து
இச்சேதி வைபவங்கள் எங்குங் கிடையாது."

என்று சொல்வதாகப் பேசுகிறது கோதை தாலாட்டு. இதுதான் எவ்வளவு உண்மை!!

ஆண்டாள், "வாரணமாயிரம்" என்று தொடங்கும் பாடல்களில் திருமண வைபவத்தைப் பதிவுசெய்கிறாள். அதில் விட்டுப் போன சில சேதிகள் (details) இத்தாலாட்டில் இடம் பெறுகிறது. தாயின் சொல் அமுது என்பது இப்பாட்டில் தெரிகிறது. செந்தமிழ், தாய் சொல் பட்டுமென்மையாகிப் போகிறது.

சீராரு மெங்கள்விஷ்ணு சித்தர்நந் தாவனத்தில்
ஏராருந் துளசிமுல்லை யேகமாய்த் தானும்வச்சு 31

வச்ச பயிர்களுக்கு வளரவே நீர்பாய்ச்சி
உச்சிதமாய்ப் பயிர்கள்செய் துகந்திருக்கும் வேளையிலே; 32

என்று கிராமத்து மக்கள் மொழியில் தாலாட்டு போகிறது.

மேலும் சில உதாரணங்கள்:

நோம்பு (நோன்பு);
நோன்பு நேத்தியாய் (நேர்த்தியாய்);
மாயவனைப் போத்தி (போற்றி)ஆரு மனுப்பாமல் (யாரும் அனுப்பாமல்); மன்றலுஞ் செய்யாமல் வச்சிருந்தால் (வைத்திருந்தால்)
கைத்தலம் பத்திக் கலந்து (கைத்தலம் பற்றி);
சத் புருடன் வாராமல் தாமசமாய்த் தானிருக்க.- தாமசம்? தாமதம்!!
வாத்திமார் புல்லெடுத்து மறைகள் பலஓத !!

நாட்டுப் பாடல்களுக்கான தனி மொழி இத்தாலாட்டிலும் ஒலிக்கிறது.

"ஒருமகளை யானுடையேன் உலகளந்த மாயவனாம்
திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய்!"

என்று விட்டு சித்தர் அன்று கதறியது இத்தாலாட்டின் வாயிலாக இன்று நம் நெஞ்சைக்கலக்குகிறது. "அய்யர் இணையடியைத்" என்று சொல்வதிலிருந்து இப்பாடல் இயற்றப் பட்டகாலத்தில் ஐயங்கார் என்ற ஒரு பிரிவு தோன்றவில்லையென்று தெரிகிறது. இல்லையெனில் பரம வைஷ்ணவரான விட்டு சித்தரை ஐயங்கார் என்றே இத்தாலாட்டு இயம்பியிருக்கும்.

1928-ல் பதிப்பிக்கப் பட்டு இன்று 73 ஆண்டுகளாகின்றன (2001). இவ்வோலைச் சுவடிபதிப்பிக்கப் பட்ட காலம் புத்தகத்தில் இல்லை. ஐயங்கார் என்ற பிரிவு ஆங்கிலேயர்காலத்தில் உருவானது என்று சொல்வர். அப்படியெனில் இத்தாலாட்டு ஆங்கிலேயர்வருகைக்கு முன் எழுதப் பட்டிருக்குமோ?

"ஆழிநிறை வண்ணன்முதல் ஆழ்வார்கள் தான்வாழி
கோதையரும் வாழிகோயில்களும் தான்வாழி
சீதையரும்வாழி செகமுழுதும் தான்வாழி.

முழுப்புத்தகமும் மதுரைத் திட்டத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்புத்தகம் காண: சொடுக்குக சுட்டியை!

மடல் 107 - மழைக் கண்ணா! மாலே! மணிவண்ணா!

Mon, 02 Jul 2001 00:49:17 +0200

திருவின் தோற்றமாய் மண்ணில் வந்தருளி, வையத்து வாழும் நம் அனைவரையும் உய்யக் கொண்ட பேரருட் தமிழ்த் தெய்வம் கோதை நாச்சியார். அவள் ஆக்கி நமக்களித்த திருப்பாவை வேதத்தின் சாரமாய், உபநிடத்தின் உட்பொருளாய் அமைகிறதென்று விண்ணெறிப் பெரியர்வர்கள் பகர்வர்.

திருப்பாவை முப்பதும் கற்பதும், கற்றுத் தெளிந்தோதுவதும் நம் கடன். அனைத்து தத்துவங்களையும் கடந்து, வாக்கு, மனம் இவைக் கடந்த பேரருளை, முழுமுதலைக் காணவும், கருதவும் எளியதாய் உருவங் கொடுத்துப் பண்டைத் தமிழர்வழிபடலாயினர். இதனைக்,

'கொடிநிலை கந்தழி வள்ளி என்றவடுநீங்கு
சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே'

என்னும் தொல்காப்பியச் செய்யுளால் அறியலாம். இதனை ஒட்டியே வான் புகழ் வள்ளுவன் தந்த குறளும் அமைகிறது.

இதில் கொடிநிலை என்பது வான் சிறப்பு. நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு. கொடி என்பது கீழ்த்திசை, குணக்கினின்று வரும் மேகம் மழை தருவதால் அது 'கொண்டல்' என்பதாயிற்று.

கந்தழி என்பதில் கந்து-பற்று, அழி-அழித்தல் அதாவது பற்று அறுத்த பெரியவர் (நீத்தார்) பெருமை.

வள்ளி என்பது அறம்.

இம்முறையாலே, செந்தமிழ்ச் செல்வி ஆண்டாளும், 'கார்மேனிச் செங்கண், கதிமதியம்போல் முகத்தான் நாராயணனே! நமக்கே பறை தருவான்!' என்று சொல்லி நொன்புகாத்தாள். 'பையத் துயின்ற பரமன் அடிபாடி' நெய், பால் உண்ணாமல், மையிட்டு எழுதாமல், மலர் சூடாமல் நீத்து; ஐயம், பிச்சை போன்ற அறங்கள் செய்து நோன்புகொண்டாள். இதன் பயனாய், 'தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாறி...நீங்காதசெல்வம் நிறை' யும் என்கிறாள்.

வான் சிறப்பாக 'ஆழி மழைக் கண்ணா!' பாடல் வருகிறது. இப்பாடலில் மழை மேகங்கள் எப்படி ஆழ் கடலில் புகுந்து, நீரை முகர்ந்து, வானில்ஏறி, சார்ங்கம் உதைத்த சர மழியாகப் பொழிகிறது என்பது காட்டப் படுகிறது.

உருவகச் சிறப்பு மிக்க இப்பாடல் அறிவியற் சிறப்பும் பெற்றது. அது பாசுர மடல் 18-ல்விரிவாக விளக்கப் பட்டுள்ளது. இப்பாடலில் வரும் 'ஆழி மழைக் கண்ணா!' என்ற வரிகள் யாரைச் சுட்டுவன? இந்திரனையா? வருணனையா? இல்லைக் கண்ணனையா? ஆழி மழைக் கண்ணன் திருமாலாக இருப்பின் முன்னிலையில் விளித்து, பின் படர்க்கையில்'ஊழி முதல்வன் போல் மெய் கருத்து' என்று சொல்வானேன்? என்றொரு கேள்வி வருகிறது. இக்கேள்விகளை ஆய்வதே இம்மடலின் நோக்கம்.

முதலில், மழைக் கண்ணன் என்பதை ஆழ்வார்கள் எப்படி கையாளுகிறார்கள் என்று பார்ப்போம். கண்ணனின் நிறம் மேகத்தை ஒத்தது என்பது காலம் காலமாக நாவலற் தீவில் பயின்று வரும் ஒரு உருவகம். அவ்வழியே, ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வாரும் பல இடங்களில் கொண்டல் வண்ணன் புகழ் பேசினாலும், கீழ் வரும் பாடல்களை குறிப்பாக எடுத்துக் கொள்ளலாம். கோகுலத்துக் காட்சிகளை ஓவியமாய்த் தீட்டுகிறார் பட்டர் பெருமான்: கும்பலாக வரும் ஆயர் பாடிச் சிறார்களின் வருகை மழை மேகத்தை ஒத்து இருக்கிறதாம்!

கோவிந்தன்வருகின்றகூட்டம்கண்டு
மழைகொலோவருகின்றதென்றுசொல்லி (பெரியாழ்வார் திருமொழி 3.4.1)

இவர்கள்

வானத்தெழுந்த மழைமுகில்போல் எங்கும்
கானத்துமேய்ந்து களித்துவிளையாடி (பெரியாழ்வார் திருமொழி 2.10.9)

இவர்கள் நடுவே, நாயகனாக

திரண்டெழுந்த மழை முகில்வண்ணன்
செங்கமலமலர் சூழ்வண்டினம்போலே (பெரியாழ்வார் திருமொழி 3.6. 9)


நிற்கின்றான். எத்தனை உவமைகள் பாருங்கள்! அவன் திரண்டெழுந்த மழை முகில் வண்ணன், செங்கமல மலர்களைச் சுற்றும் வண்டு போன்ற நிறத்தினன்!!

பாரங்குச நாயகி 'எல்லாம் கண்ணனே!' என்று மயங்கும் நிலை கண்டு அவனது தாயார் விளிப்பது போன்று வரும் திருவாய்மொழியில்,

'நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான்'

என்று அவள்சொல்வதாக வருகிறது (இப்பத்தில் வரும் "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே! என்னும்!" வரிகளைப் பரிமேலழகர் தன் உரையில் பாவிக்கிறார்)

ஒன்றிய திங்களைக் காட்டி 'ஒளிமணி வண்ணனே' என்னும்
நின்ற குன்றத்தினை நோக்கி 'நெடுமாலே! வா! என்று கூவும்,
நன்றுபெய் யும்மழை காணில் 'நாரணன் வந்தான்' என் றாலும்,
என்றின மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத் தையே.

[திருவாய்மொழி 4.4.4]


கண்ணன் மழை முகில் வண்ணன் என்று உவமை சிறப்புடன் செப்புறும் போதே, மழைக் கண்ணன் என்பதை பக்தியின் வெளிப்பாடாகவும் ஆழ்வார்கள் கையாள்கின்றனர். உதாரணமாக, காதலால் கண்கள் சொரியும் நிலையை,

கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொ டென்செய் யுங்கொலோ? [திருவாய்மொழி 6.7.3]

என்கிறார் நம்மாழ்வார். வாய் துடித்து, கண்கண் வார்க்கின்றன - பக்தியால்.

கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே! [திருவாய்மொழி 7.2.7] .


மெள்ள, மெள்ள இவ்வுவமை உருவகமாக மாறும் விந்தையும் காணக் கிடைக்கிறது. கண்ணன் பேராயிரம் உடைய பேரருளாளன். இருந்தாலும், மழைக் கண்ணன் என்பது ஒரு பெயராக இன்னும் நிலைப்பெறா முன்னர்....

பேரா யிரமுடைய பேராளன்......
நீரார் மழைமுகிலே நீள்வரையேஒக்குமால் என்கின் றாளால்.....
(பெரிய திருமொழி 8.1.6)

நீள் வரையை ஒக்கும் என்றுதான் சொல்கிறார். ஆனால், மேகத்தை ஒக்கும் என்று சொல்வானேன்? அவன்தான் மழை முகில் என்று சொல்லி விடுகிறார் அடுத்து வரும்பாடல்களில்....

தருமான 'மழைமுகிலை'ப் பிரியாது தன்னடைந்தார்,
திருமாலை யம்மானை அமுதத்தைக் கடற்கிடந்த பெருமானை
(பெரிய திருமொழி 8.9.2)

பெருமாளைப் பிரிய மனம் வராத நிலையை மழை முகிலைப் பிரியாது தன்னடைந்தார் என்றுசொல்லி அவனே திருமால் என்று சொல்லி விடுகிறார். அவரது பெரிய திரு மடலில் மழைக் கண்ணன் என்பது கண்ணனே என்றுத் தெளிவாகப் புலனாகிறது.

மன்னும் மழைதழும் வாலா நீண்மதிதோய்,
மின்னின் ஒளிசேர் விசும்பூரும் மாளிகைமேல்,
மன்னும் மணி விளக்கை மாட்டி- மழைக்கண்ணார்
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்.......
[பெரிய திருமடல் -திருமங்கை]


மழைக் கண்ணன் விசித்திரமாய் படுத்த பாம்பனைப் பள்ளி என்று சொல்லி விடுகிறார்!!

ஆழ்வார்கள் பல்வேறு உவமைகளைக் கையாண்ட போதும் பரிபாடல் மரபைச் சற்றும் வழுவறாது அனைத்தும் கண்ணனே என்று பல இடங்களில் சுட்டுகின்றனர். அவ்வாறு வரும் திருவாய் மொழி ஒன்று.

அங்கள் மலர்த்தண் துழாய்முடி அச்சுத னே! அருளாய்,
திங்களும் ஞாயிறு மாய்ச்செழும் பல்சுட ராய் இருளாய்,
பொங்கு பொழிமழை யாய்ப்புக ழாய்பழி யாய்ப்பின்னும்நீ,
வெங்கண்வெங் கூற்றம் ஆம்-இவை யென்ன விசித்திரமே!

[திருவாய்மொழி 7.8.2]


திருமங்கை ஆச்சர்யப் படுவது போல் நம்மாழ்வாரும் திங்களாய், விசும்பாய், சுடராய்,பொங்கு பொழில் மழையாய் கண்ணனே இருக்கும் அதிசயத்தை, விசித்திரத்தைச் சொல்கிறார். நெடுமால்தான் நான்கு வேதங்களும், அதன் பின் வந்த உபநிடதங்களும் என்று திருமங்கை ஆழ்வார் ஐயம் திரிபுர விளக்கி விடுகிறார்.

என்மனத் தேமன்னி ன்றாய் மால்வண் ணா!
மழை போலொளி வண்ணா!
சந்தோ கா! பெளழி யா! தைத் திரியா!
சாம வேதிய னே! நெடு மாலே!
(பெரிய திருமொழி 7.7.2)

இத்தனை ஆழ்வார்களில் கடைக் குட்டியான ஆண்டாள் இப்பதத்தைக் கையாளும் போதுமனத்தளவிலாவது வருணனையோ, இந்திரனையோ நினைக்க வாய்ப்பே இல்லை. மேலும், இந்திரன் முதலான தேவாதி தேவர்களும் செறுக்குற்று தன்னால் எதுவும் முடியும் என்று கல் மாரி பொழிந்த போது குன்றக் குடை பிடித்து ஆயரைக் காத்தவன் கண்ணன். இந்நிகழ்வால் கோகுலத்தில் எல்லாம் கண்ணன் என்பது நிலை நாட்டப் படுகிறது. ஆண்டாள் வாழ்ந்தது இந்த ஆயர்பாடியில்தானே!!

இந்திர னுக் கென் றாயர்கள் எடுத்த எழில்விழ வில்பழ நடை செய்,
மந்திர விதியில் பூசனை பெறாது மழைபொழிந் திடத்தளர்ந்து,
ஆயர்எந்தமோ டினஆ நிரைதள ராமல் எம் பெரு மான்! அள் என்ன,
அந்தமில் வரையால் மழைதடுத் தானைத் திருவல்லிக் கேக்கண் டேனே.
[பெரிய திருமொழி 2.3.4]

இம்மடலுக்காக நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் துளாவிய மோது 'மயக்கம் அடைந்து விடாத'அளவில் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது! அதுதான் 'ஆழி மழைக் கண்ணா' திருப்பாவையின்முன் வடிவம். மெதுவாக இதை வாசியுங்கள்.......

அழைக்கும் கருங்கடல் வெண்திரைக் கைகொண்டு போய் அலர்
மழைக்கண் மடந்தை அரவணை யேற மண் மாதர் விண்வாய்

[வாய்அழைத்துப் புலம்பி முலைமலை மேல் நின்றும்
ஆறுகளாய் மழைக்கண்ண நீர் திரு மால்கொடி யான்
என்று வார்கின்றதே!

[திருவிருத்தம்-இயற்பா 52]

இன்னும் மயங்கி விழவில்லை? அச்சாக அதே பாடல்!! நம்மாழ்வார் திருவாய் மலர்ந்தருளிஇருக்கிறார். வேறு என்ன சான்று வேண்டும் எமக்கு?ஆழ்வார்கள் பல்வேறு உவமைகளைக் கையாண்ட போதும் பரிபாடல் மரபைச் சற்றும்வழுவறாது அனைத்தும் கண்ணனே என்று பல இடங்களில் சுட்டுகின்றனர். ........

பாடல்: இப்பாசுரத்தை மீரா கிருஷ்ணனின் குரலில் கேட்க இங்கே சொடுக்கவும்!

பாசுர மடல் 108: ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து

Datum: Mon, 02 Jul 2001 00:51:58 +0200 An: "agathiyar@yahoogroups.com"

பாசுர மடல் 108 (இரண்டாம் பகுதி) ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து.....

நமது ஆய்வை சங்க இலக்கியங்களுள் ஒன்றான நற்றிணையிலிருந்து ஆரம்பிப்போம்.

மானிலம் சேவடி யாகத் தூநீர்
வளைநரல் பெளவம் உடுக்கை யாக
விசும்பு மெய்யாகத் திசைகை யாகப்
பசங்கதிர் மதியமொடு சுடர் கண்ணக
இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே!

பொருள் புரியக் கூடிய மிகப் பழைய பாடல் இது. தமிழின் சீரிளமைக்குச் சான்று பகரும் பாடல்.'இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன்' என்றால் உலகத்தில் தோன்றியுள்ள எல்லாப் பொருள்களிலுள்ளும் (உயிர்/உயிரல் எல்லாம் அடக்கம்) அந்தர்யாமியாக நின்று, அவ்வெல்லாப் பொருள்களையும் தன்னுள்ளெ அடக்கியுள்ள, வேதத்தால் உணரப் படும் முதற் பொருள் என்று மெய்யுணர்ந்தோர் கூறுவர்.

இந்த முதல் வித்து, பரிபாடல் சொல்லும் வகையில் ஐந்து நிலைகளாக அமைகிறது. பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்பவை அவை. பரம் என்பது மிக உயர்ந்த நிலை -undifferentiated basic stuff. இதை பரபிரம்மன் அல்லது நாராயணன் என்பர். இவன்தான் ஆண்டாள் விளிக்கும் , 'ஊழி முதல்வன்'! நிறமற்ற, உருவற்ற ஒன்று (உடல் கருத்து-ஆண்டாள்). வியூகம் என்பது அவனது வெளிப்பாடு - getting differentiated! விபவம் என்பது பரம் தன்னை தோற்றரவாக வெளிப்படுத்தல் (அவதாரம்). கடைசியாக அர்ச்சை என்பது. இது புனிதமான இறைத்திரு மேனி (கோயில்களில் இருப்பன).

எனவேதான் ஆண்டாள் தன் பாடலில் ஆழி மழை கண்ணா! என்று முன்னிலையில் விளித்து, ஊழி முதல்வனின் தோற்றரவு நீ என்று படர்க்கையில் செப்புகிறாள்.

ஊழி, ஊழியாக படைத்து, ஒடுக்கி ஆளும் பிரானின் திறனை திருமங்கை விளக்குகிறார்.

ஏழுலகும் தாழ்வரையும் எங்கும் மூடி
எண்டிசையு மண்டலமும் மண்டி, அண்டம்
மோழையெழுந் தாழிமிகும் ஊழி வெள்ளம்
முன், அகட்டில் ஒடுக்கிய எம்மூர்த்தி கண்டீர்,
ஊழிதோறும் ஊழிதோறும் உயர்ந்த செல்வத்
தோங்கியநான் மறையனைத்தும் தாங்கும் நாவர்,
சேழுயர்ந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த்
திருத்தேற்றி யம்பலத் தென் செங்கண் மாலே (பெரிய திருமொழி 4.4.9)


இந்த ஊழி முதல்வன் கரு நீல வண்ணனான கண்ணனே என்ற திருநெடுந் தாண்டகத்தில் விளக்குகிறார்.

திருவடிவில் கருநெடுமால் சேயன் என்றும்
திரேதைக்கண் வளையுருவாய்த் திகழ்ந்தா னென்றும்,
பெருவடிவில் கடலமுதம் கொண்ட காலம்
பெருமானைக் கருநீல வண்ணன் றன்னை,
ஒருவடிவத் தோருரு வென் றுணர லாகாது
ஊழிதோ றூழின் றேத்தல் அல்லால்,
கருவடிவில் செங்கண்ண வண்ணன் றன்னைக்
கட்டுரையே யாரொருவர் காண்கிற் பாரே? [திருநெடுந் தாண்டகம் 3]

நாரணனின் பராக்கிரமம் பேசும் நம்மாழ்வார் அவன் அண்டத்தை உண்டு உருவாக்கியதைப் பாடுகிறார்.

ஆழி யெழச்சங்கும் வில்லும் எழ திசை
வாழி யெழத்தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை யெழமுடி பாதம் எழ அப்பன்
ஊழி யெழவுல கங்கொண்ட வாறே. [திருவாய்மொழி 7.4.1]

இந்த ஊழி முதல்வனே மும்முனிக்கும் முதல்வன் என்பதை கீழ்க்காணும் திருவாய் மொழி சொல்லும்:

திருமால் நான்முகன் செஞ்சடை யா னென் றிவர்கள்,எம்
பெருமான் தன்மையை யாரறி கிற்பார்? பேசியென்?
ஒருமா முதல்வா! ஊழிப் பிரான்! என்னையாளுடை,
கருமா மேனியன் என்பன் என் காதல் கலக்கவே. [திருவாய்மொழி 8.3.9]

நான் குழந்தைப் பருவத்திலிருந்து வழிபடும் திருமாலிருஞ்சோலைத் தேன் நம்மாழ்வாருக்கு தன் படைப்புலகை காட்டி இருக்கிறது. இதோ அவரது மங்களாசாசனம்!


திருமாலிருஞ்சோலைமலையே
திருப்பாற் கடலே என்தலையே
திருமால்வைகுந்தமே தண்
திருவேங்கடமே எனதுடலே
அருமாமாயத் தெனதுயிரே
மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என்
ஊழி முதல்வன் ஒருவனே. [திருவாய்மொழி 10.7.8]


ஊழி முதல்வன் ஒருவனே
என்னும் ஒருவன் உலகெலாம்
ஊழி தோறும் தன்னுள்ளே
படைத்துக் காத்துக் கெடுத்துழலும்
ஆழி வண்ணன் என்னம்மான்
அந்தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே கைவிடேல்
உடலும் உயிரும் மங்கவொட்டே. [திருவாய்மொழி 10.7.9]

ஆக, ஆண்டாளின் திருப்பாவையில் வரும் 'ஆழி மழைக் கண்ணனும்', ஊழி முதல்வனும் ஒருவனே என்பதை மிக, மிக அழகாக கீழ்வரும் திருவாய் மொழி செப்பும்.

ஊழிதோ றூழி யுலகுக்குநீர்க்கொண்டு,
தோழியரும்யாமும்போல் நீராய் நெகிழ்கின்ற,
வாழிய வானமே! நீயும் மதுசூதன்,
பாழிமையிற் பட்டவன்கட்பாசத்தால்நைவாயே? [திருவாய்மொழி. 2.1.5]

கடைசியில் நண்பர்கள் எழுப்பிய இரண்டு கேள்விகளூக்கும் பதில் திருவாய் மொழியில் உள்ளது என்பதுதான் சிறப்பு.

எந்தைதந் தைதந்தை தந்தைதம் மூத்தப்பன்
ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்....

என்னும் பெரியாழ்வார் திருமொழிக்கு ஒப்ப வழி, வழியாக வரும் ஆண்டாள் வருணனையோ, இந்திரனையோ விளிக்காமல் பரம்பொருளான நாரணன் நம்பியையே தனது 'ஆழி மழைக் கண்ணா' என்ற பாடலில் விளிக்கின்றாள்.

நாரணனின் பரத்துவத்தை உணரும் பக்குவமில்லை! அவன் தோற்றரவு கொண்ட காலத்தில் இல்லை! அவன் ஊழிக்கு முன்னால் இருந்ததை அறியும் திறமில்லை. ஆயின் நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்னும் மறை நிலத்தில் (spiritual field) நுழைந்த போதில் காரணம் அவன், காரியம் அவன் என்பது புரிந்தது.

நம்பனே! நவின்றேத்தவல்லார்கள்
நாதனே! நரசிங்கமதானாய்!
உம்பர் கோன்! உலகேழும்அளந்தாய்!
ஊழியாயினாய்! ஆழிமுன்னேந்தி
கம்பமாகரிகோள்விடுத்தானே!
காரணா! கடலைக்கடைந்தானே!
எம்பிரான்! என்னையாளுடைத் தேனே!
ஏழையேனிடரைக்களை யாயே! [பெரியாழ்வார் திருமொழி 5.1.9]

எனவே எந்தை பட்டர்பிரான் சொல்வது போல் அவனை விளித்து 'ஏழை இடர் களையாயோ'? என்று இறைஞ்சத்தான் தெரிகிறது. அது கூட நல்லாசிரியர்கள் இட்ட பிச்சை என்பதும் புரிகிறது.....

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள்சுரந்த
முன்னைப் பழவினை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன்பரன் பாதமும் என்
சென்னித் தரிக்கவைத் தான்எனக் கேதும் சிதைவில்லையே.
[இராமானுச நூற்றந்தாதி -4]

*************************

ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல்வாழி
தாழ்வியாதும் இல்குரவர் தாம்வாழி - ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம்வாழி
செய்யமறை தன்னுடனே சேர்த்து.

எதிரொலி

தமிழ் இணையம் என்பது தமிழ் கூறும் நல்லுலகத்தின் சின்ன மாடல் கிராமம் என்று சொல்லிவிட்டு பாசுர மடல்களுக்கு இணையத்தில் எழுந்த எதிரொலிகளைச் சொல்ல வில்லையென்றால் சரியாகாது. எனது கருத்துக்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளப் பட்டனவென இப்புத்தகத்தை வாசிக்கும் வாசகர்கள் நினைத்து விடக்கூடாது என்பதற்காக இணையத்தில் வெளியான கடிதங்களை இங்கு அப்படியே தருகிறேன். பத்திரிக்கையில் கட்டுரை வெளிவரும் போது கண்டனமோ, பாராட்டோ வர ஒரு வாரமோ, மாதமோ ஆகலாம். இணையத்தில் அப்படியல்ல. கட்டுரை வெளியான நொடிகளில் விமர்சனங்கள் வந்து நிற்கும். விஷய ஞான மில்லாமல் அறிஞர்கள் சபையான இணையத்தில் தொடர்ந்து எழுத முடியாது. அது இக்கடிதங்களை வாசித்துப் பார்த்தால் புரியும். இப்புத்தகத்தை வாசித்து விட்டு பதில் எழுத முடியவில்லையே என ஆதங்கப் படும் உள்ளங்கள் இருந்தால் - தங்கள் கேள்விகள் கேட்கப்பட்டு விட்டன என அறிந்து ஆறுதல் கொள்ளலாம்.

கடிதங்களை வாசித்துப் பாருங்கள்.

இதில் பல சுவையான விஷயங்கள் காணக்கிடைக்கும்.