e-mozi

பாசுர மடல் 108: ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து

Datum: Mon, 02 Jul 2001 00:51:58 +0200 An: "agathiyar@yahoogroups.com"

பாசுர மடல் 108 (இரண்டாம் பகுதி) ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து.....

நமது ஆய்வை சங்க இலக்கியங்களுள் ஒன்றான நற்றிணையிலிருந்து ஆரம்பிப்போம்.

மானிலம் சேவடி யாகத் தூநீர்
வளைநரல் பெளவம் உடுக்கை யாக
விசும்பு மெய்யாகத் திசைகை யாகப்
பசங்கதிர் மதியமொடு சுடர் கண்ணக
இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே!

பொருள் புரியக் கூடிய மிகப் பழைய பாடல் இது. தமிழின் சீரிளமைக்குச் சான்று பகரும் பாடல்.'இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன்' என்றால் உலகத்தில் தோன்றியுள்ள எல்லாப் பொருள்களிலுள்ளும் (உயிர்/உயிரல் எல்லாம் அடக்கம்) அந்தர்யாமியாக நின்று, அவ்வெல்லாப் பொருள்களையும் தன்னுள்ளெ அடக்கியுள்ள, வேதத்தால் உணரப் படும் முதற் பொருள் என்று மெய்யுணர்ந்தோர் கூறுவர்.

இந்த முதல் வித்து, பரிபாடல் சொல்லும் வகையில் ஐந்து நிலைகளாக அமைகிறது. பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்பவை அவை. பரம் என்பது மிக உயர்ந்த நிலை -undifferentiated basic stuff. இதை பரபிரம்மன் அல்லது நாராயணன் என்பர். இவன்தான் ஆண்டாள் விளிக்கும் , 'ஊழி முதல்வன்'! நிறமற்ற, உருவற்ற ஒன்று (உடல் கருத்து-ஆண்டாள்). வியூகம் என்பது அவனது வெளிப்பாடு - getting differentiated! விபவம் என்பது பரம் தன்னை தோற்றரவாக வெளிப்படுத்தல் (அவதாரம்). கடைசியாக அர்ச்சை என்பது. இது புனிதமான இறைத்திரு மேனி (கோயில்களில் இருப்பன).

எனவேதான் ஆண்டாள் தன் பாடலில் ஆழி மழை கண்ணா! என்று முன்னிலையில் விளித்து, ஊழி முதல்வனின் தோற்றரவு நீ என்று படர்க்கையில் செப்புகிறாள்.

ஊழி, ஊழியாக படைத்து, ஒடுக்கி ஆளும் பிரானின் திறனை திருமங்கை விளக்குகிறார்.

ஏழுலகும் தாழ்வரையும் எங்கும் மூடி
எண்டிசையு மண்டலமும் மண்டி, அண்டம்
மோழையெழுந் தாழிமிகும் ஊழி வெள்ளம்
முன், அகட்டில் ஒடுக்கிய எம்மூர்த்தி கண்டீர்,
ஊழிதோறும் ஊழிதோறும் உயர்ந்த செல்வத்
தோங்கியநான் மறையனைத்தும் தாங்கும் நாவர்,
சேழுயர்ந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த்
திருத்தேற்றி யம்பலத் தென் செங்கண் மாலே (பெரிய திருமொழி 4.4.9)


இந்த ஊழி முதல்வன் கரு நீல வண்ணனான கண்ணனே என்ற திருநெடுந் தாண்டகத்தில் விளக்குகிறார்.

திருவடிவில் கருநெடுமால் சேயன் என்றும்
திரேதைக்கண் வளையுருவாய்த் திகழ்ந்தா னென்றும்,
பெருவடிவில் கடலமுதம் கொண்ட காலம்
பெருமானைக் கருநீல வண்ணன் றன்னை,
ஒருவடிவத் தோருரு வென் றுணர லாகாது
ஊழிதோ றூழின் றேத்தல் அல்லால்,
கருவடிவில் செங்கண்ண வண்ணன் றன்னைக்
கட்டுரையே யாரொருவர் காண்கிற் பாரே? [திருநெடுந் தாண்டகம் 3]

நாரணனின் பராக்கிரமம் பேசும் நம்மாழ்வார் அவன் அண்டத்தை உண்டு உருவாக்கியதைப் பாடுகிறார்.

ஆழி யெழச்சங்கும் வில்லும் எழ திசை
வாழி யெழத்தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை யெழமுடி பாதம் எழ அப்பன்
ஊழி யெழவுல கங்கொண்ட வாறே. [திருவாய்மொழி 7.4.1]

இந்த ஊழி முதல்வனே மும்முனிக்கும் முதல்வன் என்பதை கீழ்க்காணும் திருவாய் மொழி சொல்லும்:

திருமால் நான்முகன் செஞ்சடை யா னென் றிவர்கள்,எம்
பெருமான் தன்மையை யாரறி கிற்பார்? பேசியென்?
ஒருமா முதல்வா! ஊழிப் பிரான்! என்னையாளுடை,
கருமா மேனியன் என்பன் என் காதல் கலக்கவே. [திருவாய்மொழி 8.3.9]

நான் குழந்தைப் பருவத்திலிருந்து வழிபடும் திருமாலிருஞ்சோலைத் தேன் நம்மாழ்வாருக்கு தன் படைப்புலகை காட்டி இருக்கிறது. இதோ அவரது மங்களாசாசனம்!


திருமாலிருஞ்சோலைமலையே
திருப்பாற் கடலே என்தலையே
திருமால்வைகுந்தமே தண்
திருவேங்கடமே எனதுடலே
அருமாமாயத் தெனதுயிரே
மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என்
ஊழி முதல்வன் ஒருவனே. [திருவாய்மொழி 10.7.8]


ஊழி முதல்வன் ஒருவனே
என்னும் ஒருவன் உலகெலாம்
ஊழி தோறும் தன்னுள்ளே
படைத்துக் காத்துக் கெடுத்துழலும்
ஆழி வண்ணன் என்னம்மான்
அந்தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே கைவிடேல்
உடலும் உயிரும் மங்கவொட்டே. [திருவாய்மொழி 10.7.9]

ஆக, ஆண்டாளின் திருப்பாவையில் வரும் 'ஆழி மழைக் கண்ணனும்', ஊழி முதல்வனும் ஒருவனே என்பதை மிக, மிக அழகாக கீழ்வரும் திருவாய் மொழி செப்பும்.

ஊழிதோ றூழி யுலகுக்குநீர்க்கொண்டு,
தோழியரும்யாமும்போல் நீராய் நெகிழ்கின்ற,
வாழிய வானமே! நீயும் மதுசூதன்,
பாழிமையிற் பட்டவன்கட்பாசத்தால்நைவாயே? [திருவாய்மொழி. 2.1.5]

கடைசியில் நண்பர்கள் எழுப்பிய இரண்டு கேள்விகளூக்கும் பதில் திருவாய் மொழியில் உள்ளது என்பதுதான் சிறப்பு.

எந்தைதந் தைதந்தை தந்தைதம் மூத்தப்பன்
ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்....

என்னும் பெரியாழ்வார் திருமொழிக்கு ஒப்ப வழி, வழியாக வரும் ஆண்டாள் வருணனையோ, இந்திரனையோ விளிக்காமல் பரம்பொருளான நாரணன் நம்பியையே தனது 'ஆழி மழைக் கண்ணா' என்ற பாடலில் விளிக்கின்றாள்.

நாரணனின் பரத்துவத்தை உணரும் பக்குவமில்லை! அவன் தோற்றரவு கொண்ட காலத்தில் இல்லை! அவன் ஊழிக்கு முன்னால் இருந்ததை அறியும் திறமில்லை. ஆயின் நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்னும் மறை நிலத்தில் (spiritual field) நுழைந்த போதில் காரணம் அவன், காரியம் அவன் என்பது புரிந்தது.

நம்பனே! நவின்றேத்தவல்லார்கள்
நாதனே! நரசிங்கமதானாய்!
உம்பர் கோன்! உலகேழும்அளந்தாய்!
ஊழியாயினாய்! ஆழிமுன்னேந்தி
கம்பமாகரிகோள்விடுத்தானே!
காரணா! கடலைக்கடைந்தானே!
எம்பிரான்! என்னையாளுடைத் தேனே!
ஏழையேனிடரைக்களை யாயே! [பெரியாழ்வார் திருமொழி 5.1.9]

எனவே எந்தை பட்டர்பிரான் சொல்வது போல் அவனை விளித்து 'ஏழை இடர் களையாயோ'? என்று இறைஞ்சத்தான் தெரிகிறது. அது கூட நல்லாசிரியர்கள் இட்ட பிச்சை என்பதும் புரிகிறது.....

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள்சுரந்த
முன்னைப் பழவினை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன்பரன் பாதமும் என்
சென்னித் தரிக்கவைத் தான்எனக் கேதும் சிதைவில்லையே.
[இராமானுச நூற்றந்தாதி -4]

*************************

ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல்வாழி
தாழ்வியாதும் இல்குரவர் தாம்வாழி - ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம்வாழி
செய்யமறை தன்னுடனே சேர்த்து.

4 பின்னூட்டங்கள்:

  குமரன் (Kumaran)

Saturday, December 23, 2006

அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் ஐயா. ஆழிமழைக்கண்ணன் பர்ஜன்யன் என்றே சில விளக்கங்களிலும் பொருளுரைகளிலும் படித்திருந்தேன். ஆனால் அவன் ஊழி முதல்வனே என்று மிக நன்றாக இங்கே விளக்கியிருக்கிறீர்கள். இதே எண்ண ஓட்டத்தில் மார்கழி நான்காம் நாள் அடியேன் எழுதிய குறுங்கவிதையை இங்கே இட்டிருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்.

அந்தக் கவிதை கோதையின் திருவுள்ளத்திலிருந்து உதித்ததாகவே எண்ணுகிறேன். நேரமிருப்பின் பின்னூட்டங்களையும் பாருங்கள்.

http://kannansongs.blogspot.com/2006/12/8.html

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Sunday, December 24, 2006

பாசுர மடலைப் பின்னால் இருந்து (descending order) படிக்க வைக்கிறீர்களே கண்ணன் சார்! ஏனோ?

மிக அழகிய கட்டுரை! அடியோங்கள் குல தனம் இப்படி 108 குடத்தில் அடைத்துக் கொடுக்க முயலும் உங்களை என் சொல்லி வாழ்த்த!

//அவனை விளித்து 'ஏழை இடர் களையாயோ'? என்று இறைஞ்சத்தான் தெரிகிறது. அது கூட நல்லாசிரியர்கள் இட்ட பிச்சை என்பதும் புரிகிறது//

சத்தியமான வார்த்தை!

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Sunday, December 24, 2006

//திருமாலிருஞ்சோலைமலையே
திருப்பாற் கடலே என்தலையே
திருமால்வைகுந்தமே தண்
திருவேங்கடமே எனதுடலே//

இப்போது இன்னும் நன்றாகப் புரிகிறது திருவேங்கடத்தான் மோக்ஷ குரு என்று!
சோலைமலையைப் பார்த்து ஆழ்வார் பாற்கடல் என் தலையே என்கிறார்!
திவ்யதேசம் ஒன்றைப் பார்த்து, எட்டாத பாற்கடலைத் தலை என்று பேசுகிறார்!

ஆனால் அதேபோல் வேங்கடத்தைப் பார்த்து வைகுந்தம் என் ஜீவனே என்று சொல்லி இருக்கலாமே!
ஆனால் அதை அப்படியே மாற்றிப்போட்டு, வைகுந்தத்தைப் பார்த்து, திருவேங்கடம் எனது உடலே என்கிறார்!

உடலால் நான் வேங்கடம் மேய்ந்தேன்;
வைகுந்தமே, உன்னிடம் வர உடலை இங்கே வேங்கடத்தில் கிடத்தினேன்!
மற்று உன்னிடம் வர அவன் என்னை நடத்துவான்!

மாம் ஏகம் சரணம் என்று தானே காட்டிக் கொண்டு நிற்கிறான்! அங்கு உடலைக் கிடத்திய பின், கிடத்தியதை நடத்துதல் அவன் கடன் அன்றோ?

சிறப்பான பதிவு கண்ணன் சார்!

  நா.கண்ணன்

Sunday, December 24, 2006

//பாசுர மடலைப் பின்னால் இருந்து (descending order) படிக்க வைக்கிறீர்களே கண்ணன் சார்! ஏனோ?//

இதற்கான விடை

http://thirumozi.blogspot.com/2006/11/blog-post.html

இங்கு இருக்கிறது :-)