e-mozi

மடல் 100: பிணக்குறும் சமயங்களும் அருங்கலைப் பொருட்களும்

First published: Date: Sun, 18 Mar 2001 18:51:22 +0200

உலகின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவரான சிவாஜி கணேசன் சாம்ராட் அசோகனாக நடிக்கும் படம் ஒன்று. கலிங்கத்துப் போரில் புத்த சந்நியாசியின் இன்மொழி கேட்காது பல்லாயிரக் கணக்கானோரைக் கொன்று குவித்து விட்டு பிணக் குவியலைக் கண்டு பிரம்மித்துப் போய் நிற்கும் போது புத்த சந்நியாசி குற்றுயிரும் குலை உயிருமாய் இருக்கும் பலருக்கு உதவிக் கொண்டிருப்பார். அப்போது சாம்ராட் அசோகன் கேட்பார், "கோட்டானும்,ஓநாய்களும் உலாவும் பிரதேசத்தில் சாமியாருக்கு என்ன வேலை" என்று. அவர் பதில்சொல்லுவார் "நோயிருக்கும் இடத்தில்தானே வைத்தியனுக்கு வேலை" என்று. மேலும்கீதையில் கண்ணன் செய்தது போல் போர் களத்தில் அன்பின் தத்துவங்களை அவர் விளக்குவார். அதன் பின் அசோகன் முற்றிலும் மாறிய மனிதாகி விடுவான். பெளத்தம் உலகெலாம் பரவும் வகை செய்வான்.உலகின் மூத்த சமயங்களில் ஒன்று பெளத்தம்.பெளத்தம் இந்தியக் கலைக்கு தந்திருக்கும் கொடை அளப்பரியது. அஜந்தா, எல்லோரா கோவிலுக்கு சென்றவர்களால் இதை உணர முடியும்.


சாதாரணமானவன் ஒரு மலையைப் பார்த்த போது பெளத்தக் கலைஞர்கள் கல்லிலே ஒரு கோயிலைக் (புத்த விகாரம்) கண்டனர். குடைவரைக் கோயில் என்பது இன்று திராவிடப் பண்பாட்டின் உயர் தனிச் சிறப்பாக அமைவதற்கு பெளத்தம் உதவியிருக்கிறது.

பெளத்தம் தமிழுக்குத் தந்திருக்கும் கொடை அளப்பரியது. பெளத்தர்களும், சமணர்களும் இல்லை யென்றால் அறநூல்களும், தமிழ் இலக்கணமும் இன்று இல்லாது போயிருக்கும். இந்த பெளத்தம் உலக கலாச்சாரத்திற்குஅ ளித்த பாமியான் கலைச் சிற்பங்கள் இன்று தாலிபான் போராளிகளால் சிதைக்கப்பட்டு வருகிறது. உலகம் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் இதயத்தில் மீண்டுமொரு குத்து விழுந்திருக்கிறது.தகர்க்கும் முன்


தகர்த்தபோது


பொதுவாக பெளத்தம் இந்தியாவில் மலிவுற்று பிற சமயங்கள் வந்த போது இந்த மாற்றம் நாகரீகமாகவே நடந்திருக்கிறது. நல்ல உதாரணம் அஜந்தா, எல்லோரா குகைச் சிற்பங்கள்.அங்கு பெளத்த விகாரங்களுக்குப் பக்கத்திலேயே சிவன் கோயில் அமைந்துள்ளது. அந்தக்குடைவரைக் கோயில் கலைகள் சிதைக்கப் படாமல் ஒரு கலை மரபு வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இதன் அருமை கண்டுதான் ஜோஸப் கேம்பல் போன்ற அறிஞர்கள்,"மென்மையான இந்திய மதங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறும் போது, முந்திய மதங்களின் விழுமியங்களை, கலை நுணுக்கங்களை உள் வாங்கிக் கொண்டு வளர்கிறது" என்று சொல்கிறார்கள். அதாவது, பெளத்தத்திற்கு முன்பிருந்த வேத காலத் தெய்வங்களான இந்திரன், பிரம்மா போன்றவர்கள் பெளத்த தொன்மங்களிலும் இருக்கிறார்கள். ஆனால்,பிரதான நிலைகளில் அல்ல. உப தெய்வங்களாக!!

இதை இன்றளவும் மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலுள்ள புத்த ஆலயங்களில் காணலாம். சிங்கைச் சீனர்களின் டாக்சிகளில் பிரம்மா காவல் தெய்வமாக உலா வருகிறார். பெளத்தம் அழிந்து வைணவம் கோலோச்சிய போது புத்தர் தன் பிரதான இடத்தை விட்டு நகர்ந்து திருமாலின் அவதாரங்களில் ஒன்றாகமாறிப் போகிறார். ஆனால் இப்படி நாகரீகமாக உருமாற்றங்கள் நடத்தப் பட்ட போக்கு ஒரு காலக் கட்டத்தில் இந்தியாவிலேயே மாறிப் போகிறது. சமயங்களுக்குள் போட்டிகளும் பொறாமைகளும் மிஞ்சிவிடுகின்றன.

மணிமேகலை காலத்தில் பட்டிமன்றங்களில் தத்துவ விவாதங்கள் செய்து மதம் மாற்றிய போக்கு போய், பட்டிமன்றத்தில் தோற்றவர் கழுவேற்றப் படுகிறார்கள். இங்கு அடிப்படை மனிதநேயம் காயடி பட்டு மரித்துப் போகிறது. அன்பின் அர்த்தம் நீர்த்துப்போகிறது. சோழர்கள் காலத்தில் சைவ நெறி பிரகாசிக்கும் போது பெளத்த சந்நியாசிகள் கபட சந்நியாசிகளாகிப் போகின்றனர். அதன் நீட்சியே போல் இன்று ஈழத்தில் கபட நாடகம் ஆடிக்கொண்டுள்ளார்கள்.

அந்தக் காலக் கட்டத்தின் காட்சியொன்று திருமாலையில் வருகிறது.

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில்சாக் கியர்கள், நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில் போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல் தலையை ஆங்கே,
அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகரு ளானே.
(8)

விப்ரநாராயணர் என்ற சாதுவான அந்தணர் தெருவில் சமணர்களும், பெளத்தர்களும் பொறுப்பில்லாமல், வெறுப்போடு திருமாலைத் திட்டுவதைக் காண்கிறார். அவருக்கே பொறுக்கவில்லை. பூப்பறித்த கைகள் தலையறுக்க சித்தமாகிறது. என்ன கொடுமை! அவர் அதற்குச் சொல்லும் காரணம் சுவாரசியமாக இருக்கிறது!

புலையற மாகி நின்ற புத்தொடு சமண மெல்லாம்,
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்ப ரோதாம்,
தலையறுப் புண்டும் சாவேன் சத்தியங் காண்மின் ஐயா,
சிலையினா லிலங்கை செற்ற தேவனே தேவ னாவான். (7)

சத்தியம் என்பதை நிறுவும் பொருட்டு தன் தலையறுபட்டு செத்தாலும் பரவாயில்லை இப்படி புலையறமாகிய பெளத்தமும், சமணமும் கலைகள் கற்ற மாந்தர் முன்னால் பொய் பேசித்திரிதல் காணேன் என்று புலம்புகிறார், தொண்டர் அடிப்பொடி.

இங்குதான் சிக்கல் ஆரம்பிக்கிறது. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டி போல் ஒருசமயத்தைப் பற்றி இன்னொரு சமயம் குறை சொல்லித் திரியும் போது சண்டை வலுக்கிறது. சைவமும், வைணவமும் கைகோர்த்துக் கொண்டு பெளத்தத்தை வேரோடு தமிழ் மண்ணில் அழித்து விட்டன. என்ன பரிதாபம்! இன்று பாமியானுக்கு நிகழும் அவலம் அன்று பல பெளத்த விகாரங்களுக்கு நிகழ்ந்திருக்கின்றன. எங்கே அந்த பெளத்த விகாரங்கள்?சங்க காலத்து வான் செழித்த பெளத்தத்தின் எச்சங்கள் தமிழ் மண்ணில் எங்கே?

கலியன் திருமங்கை மன்னன். கவிப்பேரரசன். ஆயிரம் வைணவர்களுக்கு தினம் சோறுபோட்டால்தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற குமுதவல்லியின் பேரழகிற்கு மயங்கி இவர் செய்யாத செய்கைகள் என்ன? சோழ நாட்டின் புத்தர் சிலைகளை உருக்கி அரங்க நாதனுக்கு பொன் வேய்கிறாரே? ஐயோ! "குலம் தரும் செல்வம் தந்திடும்" என்று வைணவத்தின் எண்ணெழுத்து மந்திரத்தை உலகிற்குத் தந்த பெரியவர் இப்படிச் செய்திருக்கலாமா?

"ஆசை அறுமின், ஆசை அறுமின்! ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்" என்ற திருமந்திரப்பொருள் புரியாமல் எத்தனை சைவர்கள், வைணவர்கள் இன்றையப் பழிக்கு ஆளாகிவிட்டனர். சமயம் என்பது ஒரு லாகிரி. பழக்கத்திற்காக எதைச் செய்யவும் மனிதன் தயங்குவதில்லை.

உலகின் பேரிரைச்சலைக் காது கேட்காமல் உலகின் மிகப் பெரிய புத்தர் சிலை தாலிபான்களால் உடைக்கப் படுகிறது. அட ஐயா! அது உன் மூதாதையர் செய்வித்த கலைச் பொக்கிஷம்தானே! தாஜ்மகால் இஸ்லாமிய அருங்காட்சிப்பொருள் என்றாலும் அதை செய்வித்த கலைஞன் இந்தியன்தானே. அவன் இந்துவாகக்கூட இருந்திருக்கலாமே. தாஜ்மகாலை அழிக்க முடியுமா? இந்தியாவின் முகத்தைக் குதறியது போலாகிவிடாது? பாமரர்களே! கலை, சரித்திரம் இவைகள் காலத்தை வென்றவை. மாற்ற முடியாது. ஒரு கலை படைப்பு இத்தனை ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி நின்றிருக்கிறது. அதைக் கண்டு தாலிபான் பெருமை கொள்ள வேண்டாமோ?

மலேசியா முஸ்லிம் நாடு என்பதால் அதன் சரித்திரத்தை 14 ம் நூற்றாண்டிலிருந்து எழுதுவது எத்தனை பேதமை? அதற்கு முன் மலேசியா கண்ட இந்து சாம்ராஜ்யம் அசிங்கப் படவேண்டிய சரித்திரமா? என்ன பேதமை!

இந்தோனிசியா இதில் தனித்து விலகித் தெரிகிறது. உலகின் ஆகப்பெரிய இஸ்லாம் நாடு அது. அதன் நாணயத்தில் பிள்ளையார் வீற்றிருக்கிறார். ஒரு சுகர்ணோ (சு-கர்ணோ -நற்சொல் கேட்பவன்- சமிஸ்கிரதம்) தலைவராகலாம். முஸ்லிம் பெயர்கள் சுத்த இந்துப் பெயர்களாக அங்கு இருக்கலாம். அது முக்கியமே இல்லை அங்கு. அங்குஒரு "பொரபடோர்" போன்ற உலகின் பெரிய புத்த விகாரங்கள் விகாரப் பட்டுப்போகாது. (கிருத்தவர்களுக்கும், முஸ்களுக்குமுள்ள உட்பகை காரணமாக பலர்கொல்லப் படுவதை சகித்துக் கொள்ள முடியவில்லைதான்.


நம்மாழ்வார் போல் ஆழமாகச் சிந்திப்பவர்களால் இந்தச் சிக்கலை விடுவிக்க முடியும்:

வணங்கும் துறைகள் பலபல ஆக்கி, மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்குநின் னோரையில் லாய்,நின்கண் வேட்கை எழுவிப்பனே.
(இயற்பா)

மனிதர்கள் வணங்கும் மதங்கள் பலப் பல. மதி விகற்பங்களால் அவற்றிற்குள் பிணக்குள் வருகின்றன. ஆனாலும் அவை யாவையுள்ளும் உரையும் மூர்த்தி ஒன்றுதான். இப்படி இணக்கம் தரும் அவன் இயல்பினை உணர்ந்தால் அவன் மேலும் வேட்கை எழுப்பி நம்மை முழுமையாய் ஆட் கொள்வான் - இதுதான் விடை.

இவ்விடை தெரிந்திருந்தால் இன்று பாமியான் பள்ளத்தாக்கு மானுடக் கலைப் பொக்கிஷமாக போற்றிப் பாதுகாக்கப்பட்டிருக்கும். மேலைக்கு ரோம் நகரம் போல் கீழைக்கு பாமியான் இருந்திருக்கும்.பிணக்குறும் சமயங்களால் அரும் பொருட்கள் அழிவது மானிட அறியாமையின் அதி உச்ச வெளிப்பாடு.

12 பின்னூட்டங்கள்:

  Johan-Paris

Friday, December 29, 2006

இவ்விடை தெரிந்திருந்தால் இன்று பாமியான் பள்ளத்தாக்கு மானுடக் கலைப் பொக்கிஷமாக போற்றிப் பாதுகாக்கப்பட்டிருக்கும். மேலைக்கு ரோம் நகரம் போல் கீழைக்கு பாமியான் இருந்திருக்கும்.பிணக்குறும் சமயங்களால் அரும் பொருட்கள் அழிவது மானிட அறியாமையின் அதி உச்ச வெளிப்பாடு.
அண்ணா!
நீங்கள் கூறுவது மிகச்சரி!!!அதை இங்கு வாழும் நான் தெளிவாகப் புரிகிறேன்.நம் கலைப் பொக்கிசங்கள் "குரங்கின் கைப் பூமாலை யாகிவிட்டது உண்மை!!
தங்கள் தளப் பெயரின் கீழ் உள்ள வாசகம் "கண்ணமது படைக்கும் ஆழ்வார் சொல்லமுது"...இந்தக் கண்ணமது...புரியவில்லை அது கண்ணமுது எனவருமா???
யோகன் பாரிஸ்

  Johan-Paris

Friday, December 29, 2006

இவ்விடை தெரிந்திருந்தால் இன்று பாமியான் பள்ளத்தாக்கு மானுடக் கலைப் பொக்கிஷமாக போற்றிப் பாதுகாக்கப்பட்டிருக்கும். மேலைக்கு ரோம் நகரம் போல் கீழைக்கு பாமியான் இருந்திருக்கும்.பிணக்குறும் சமயங்களால் அரும் பொருட்கள் அழிவது மானிட அறியாமையின் அதி உச்ச வெளிப்பாடு
அண்ணா!
நீங்கள் கூறுவது மிகச்சரி!!!அதை இங்கு வாழும் நான் தெளிவாகப் புரிகிறேன்.நம் கலைப் பொக்கிசங்கள் "குரங்கின் கைப் பூமாலை யாகிவிட்டது உண்மை!!
தங்கள் தளப் பெயரின் கீழ் உள்ள வாசகம் "கண்ணமது படைக்கும் ஆழ்வார் சொல்லமுது"...இந்தக் கண்ணமது...புரியவில்லை அது கண்ணமுது எனவருமா???
யோகன் பாரிஸ்

  நா.கண்ணன்

Friday, December 29, 2006

யோகன்:
வருகைக்கு நன்றி!

கண்ணன் + அமுது = கண்ணமுது
நீங்கள் சொல்வதுதான் சரி. ஆனால், பேச்சு வழக்கில் 'கண்ணமது' என்று சொல்வது வழக்கம். இதன்படி
கண்ணன் + மது = கண்ணமது.

பாரதி கண்ணம்மா பாட்டில் சொல்லுவான்:

''ஏடி, சாத்திரங்கள் வேண்டேன்: - நின
தின்பம் வேண்டுமடி, கனியே, - நின்றன்
மோடி கிறுக்குதடி தலையை, - நல்ல
மொந்தைப் பழையகள்ளைப் போலே''

கண்ணன் 'கள்' போன்றவன். அவன் மது, அவன் அமுது!

உங்களுக்கு எது வேண்டும் சொல்லுங்கள் :-) அப்படியே மாற்றிவிடுகிறேன் :-))

  Johan-Paris

Friday, December 29, 2006

அண்ணா!
முடிவு (ஆழ்வாரமுது) அமுதாகவிருப்பதால் இந்த முதலும் அமுதாக(கண்ணனமுது) இருப்பது - சிறப்பாக இருக்கிறது.
அடடா!!இப்போ தான் கண்ணனமுதின் சூட்சுமம் புரிந்தது. கண்ணனண்ணா!!!! சொல்விளையாட்டு அருமை!
யோகன் பாரிஸ்

  மாசிலா

Friday, December 29, 2006

நல்ல பதிவு.
மதப்பிரச்சினைகள் சதா முளையை குழப்பிக்கொண்டே இருக்கின்றன. எதை எடுப்பது? எதை விடுவது? மனிதனுக்கு என்னதான் வேண்டும்? எதை நோக்கி நகர்கின்றான்? இருப்பதை கொண்டு, கிடைப்பதை வைத்து இயற்கையோடு இயற்கையாக ஒன்றி வாழத்தெரியாத மனிதன் எதற்கு இலாயக்கு?

  நா.கண்ணன்

Friday, December 29, 2006

மாசிலா:

நன்றி. பிணக்குகளைப் பார்த்தால் இறைமை, வாழ்வு இதற்கு பொருள் இல்லாதது போல் தோன்றும். மனிதன் என்ற ஒரு உயிரினத்தின் கையில் இந்த கோளமே மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறது. இவ்வளவு கலைகள், அற்புதங்களை உருவாக்கத் தெரிந்த மனிதனுக்கு தன்னைப் புரிந்துகொள்ள முடியவில்லையே!

இதுவும் 'அலகிலா விளையாட்டில்' ஒன்று போலும்!

  நா.கண்ணன்

Saturday, December 30, 2006

யோகன்:

மீண்டுமொருமுறை...

கண்ணன் + அமுது = கண்ணனமுது
கண்ணன் + மது = கண்ணமது

வழக்கத்தில் கண்ணமது என்பதே பிரபலம். இதற்குப் பாயசம் என்ற பொருளுமுண்டு.

அமுது என்றால் சோறு என்றொரு வழக்குமுண்டு. அமுது செய்தாகிவிட்டதா? என்றால் சாப்பிட்டாச்சா என்று பொருள்.

ஆழ்வார்களுக்கு கண்ணன் அமுதல்லவோ! 'உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்' அல்லவோ! இவர்கள் அவனது கல்யாண குணங்களில் ஈடுபடுதல் அவனை உண்பதற்கு ஒப்பாகும். ஆனால், அவனோ? 'உலகமுண்ட பெருவாயன்!' எல்லோரையும் சாப்பிட்டு முழுங்கிடுவான். இது திருவாய்மொழியில் வருகிறது.

இப்படி இவர்கள் அனுபவிக்கும் கண்ணமது நமக்கு சொல்லமுது. அதைச் சொல் மாலை என்றும் செப்புவதுண்டு.

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Sunday, December 31, 2006

//பெளத்தர்களும், சமணர்களும் இல்லை யென்றால் அறநூல்களும், தமிழ் இலக்கணமும் இன்று இல்லாது போயிருக்கும்//

அதைவிட சிற்பக்கலை, மருத்துவம் தான் படுத்துப் போயிருக்கும் கண்ணன் சார்! அறமும் மொழியும் பெளத்தர்களும், சமணர்களும் பங்களிக்கும் முன்னரே சிறப்புடனே தானே இருந்தது?

  நா.கண்ணன்

Sunday, December 31, 2006

தமிழ் மொழிக்கு என்றும் குறைவில்லை. சமணம் கர்நாடகம் வழியாக தமிழகத்திற்கு வருகிறது. சமண சாதுக்களுக்கு தமிழ் மொழி அறிந்து கொள்ள வேண்டிய தேவை வருகிறது. எனவே அதன் இலக்கணத்தை ஆராய்ந்து அவர்கள் சங்கத்திற்கு உதவுமென்று புத்தகம் எழுதி வைத்தனர்.

பேரா.வ.சே.குழந்தைசாமி என்னிடம் ஒருமுறை கூறினார். 'நன்னூல்'க்குப் பிறகு தமிழ் இலக்கண நூல் இன்றுவரை வரவில்லையென்று. தமிழனுக்கு அதில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். ஏனெனில் தமிழ் வாழும் மொழி. நாம் இலக்கணமறிந்து தமிழுக்குள் நுழையவில்லை. ஆனால், வேற்று மொழிக்காரர்கள் இலக்கணம் புரியாமல் தமிழ் இலக்கியம் படைக்கமுடியாது.

இக்காரணத்தாலே தொல்காப்பியர், வள்ளுவர் போன்றோர் சமணர்கள் (not native tamil speakers) என்ற கருத்து உள்ளது.

//அறமும் மொழியும் பெளத்தர்களும், சமணர்களும் பங்களிக்கும் முன்னரே சிறப்புடனே தானே இருந்தது?//

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Sunday, December 31, 2006

//மென்மையான இந்திய மதங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறும் போது, முந்திய மதங்களின் விழுமியங்களை, கலை நுணுக்கங்களை உள் வாங்கிக் கொண்டு வளர்கிறது//

முற்றிலும் உண்மை; இது முழுக்க முழுக்க பாரத தர்மத்தின் பொறையுடைமை பாற்பட்டது!
என்ன இந்தப் பொறையுடைமை சில நேரங்களில் மட்டும் தான், தாள மாட்டாமல் வெடிக்கிறது!

அதுவும் தத்துவம் காக்க அல்ல! தத்துபித்து என்று பேசும் மனிதரை அடக்க!

எது எப்படி ஆயினும் கலைப் பொக்கிஷங்களைப் பெருமையாகக் கருதாது தகர்த்தல் என்பது தாழ்ந்த செயலே! இது பெரும்பாலும் தன்னல அரசியல் காரணங்களுக்காகத் தான் இருக்கும்! ஆனால் வெளியில் இருந்து பார்க்கும் போது மதச் சாயம் பூசி விடுகிறார்கள்!

நம் அரசியல் மக்கள் பொங்கி எழுந்தால் உடனே பொதுச் சொத்தைத் தானே இன்றும் நாசப்படுத்துகிறார்கள்!
அய்யோ! அய்யோ!

  ENNAR

Sunday, December 31, 2006

சித்தன்ன வாசலில் உள்ள தாமரை மொட்டு அதாவது பூவின் நடுவில் மகரந்தத்துடன் இருக்குமே அது உடைந்து கிடக்கிறது. வேலூர் கோட்டையும் சிதைந்துள்ளது மதுரை மீனாட்சியம்கோவிலும் ஒரு காலத்தில் அழிக்கப்பட்டு மறுபடியும் கட்டப்பட்டது தான் வராற்றில் இப்படிப்பட்ட கொடுமைகள் ஏன் நடைபெறுகிறது.

  நா.கண்ணன்

Sunday, December 31, 2006

என்னார்:
உங்களுடைய சிந்தனையுடன் உடன் படுகிறேன். எதையுமே, ஒரு அளவிற்கு மேல் பொதுமைப் படுத்தவியலாது. தமிழர்கள் மிகவும் 'tolerant people' என்று சொல்லிவிட முடியாது. பௌத்தத்தின் ஒரு சுவடு கூட இன்று இல்லையே? ஏன்? சித்தன்னவாசல் குகை 'ஜல்லிக் கல்' வியாபாரத்திற்காக சிதைக்கப் படுகிறது என்ற சேதி கேட்டபின் பல பதிவுகள் செய்திருக்கிறேன். சமணப் பள்ளிகள் பல இப்படி இடிபட்டு வருகின்றன. இவை காக்கப்பட வேண்டியவையே. தமிழர்களுக்கு தங்கள் மரபு பற்றிய உண்மையான விழிப்புணர்வு இல்லை. சாதி, மதச் சண்டைகளே அங்கு பிரதானப் படுத்தப்படுகின்றன.

என் முன்னோர்களில் சிலர் பௌத்தராக இருந்திருக்கக் கூடும்! எப்படி முஸ்லிம் மக்களின் முன்னோர்கள் இந்துவாக இருந்தனரோ அது போல். எல்லாம் நம் மண் சார்ந்த மரபு என்று எடுத்துக் கொண்டு போனால் அருங்கலைப் பொருட்கள் பாதுகாக்கப்படும். இல்லையெனில் மலேசியாவில் நடப்பதுதான் நடக்கும்!