e-mozi

மடல் 101: கானல்

First published: Fri, 13 Apr 2001 19:32:34 +0200

தமிழ் இலக்கியத்தின் தனிச் சிறப்பு ஐந்திணைக் கோட்பாடு ஆகும். இதை வெறும் நிலஅமைவு (landscape) என்பதோடு அல்லாமல் ஒவ்வொரு திணையிலும் பல் வேறு உளவியல் சூட்சுமங்களை வைத்துப் போயினர் பண்டைத் தமிழர். ஐந்திணைகளில் உருவகமாக (metaphor) அமையும் கருப்பொருளைப் பற்றி முன்னைய மடல்களில் கண்டோம். இது புதிய உளவியல் ஆய்வுப் பொருள். இதை இன்னும் உளவியலார் கண்டு கொண்டனராவென்று தெரியவில்லை. நில அமைவு என்ற பருப்பொருளுடன் அரு-உருவாயுள்ள கருப் பொருளைச் சூசகமாக வைத்து ஒன்றின் நீட்சி மற்றது என்று காட்டிப் போயினர். அதே போல், நில அமைவு என்ற பருப் பொருளுடன் மனம் என்ற அரூபப் பொருளையும் (பொருள் என்பதைக் "கருத்து" என்று காண்க) உடன் வைத்து கவி சமைத்தனர் நம் தமிழர். மனம் என்பது பருப்பொருளின் நீட்சி (epi-phenomenon) என்ற கருத்தில் அவர்கள் சொல்லவில்லை. மனம் என்பது கருப்பொருளுடன் சேர்ந்த விஷயம். முதலில் காட்சியாகும் பிரபஞ்ச வஸ்துக்களில் மனது வருகிறது. பருப்பொருள் பின்வடிவாக உருவாகிறது. மனது இருப்பதால் மனிதன். எனவே மனதிற்கு முக்கியத்துவம் கொடுத்து அதையும் நில அமைவுடன் இணைத்தனர்.

திருவாய் மொழிக்கு உரை சொல்லும் ஈடு, "பிரிந்தார் இரங்குவது நெய்தல் நிலத்திலேயாகையாலே...." என்று கூறிப் பண்டைய மரபைச் சுட்டுகிறது:

போக்கெல்லாம் பாலை; புணர்தல் நறுங்குறிஞ்சி;
ஆக்கஞ்சேர் ஊடல் அணி மருதம்;
நோக்குங்கால் இவ்விருக்கை முல்லை;
இரங்கல் நறுநெய்தல்
சொல்லிருக்கும் ஐம்பால் தொகை"

ஆக நெய்தல் திணையின் உளப் பண்பு "இரங்குதல்" நெய்தல் நிலத்தில் தென்படுவது கானல். கானல் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது "கானல் நீர்தான்". ஆனால் பண்டையத் தமிழ் இலக்கியங்கள் கானல் என்பதை "கடற்கரையில் கானப்படும் சோலை" என்று பொருள் சொல்லுகின்றன. நம்மாழ்வார் என்ற சீரியத் தமிழ்க் கவி பிறந்த ஊர் ஆழ்வார் திருநகரி எனப்படும் குருகூர். இது மருதநிலத்தில் அமைந்தாலும் நெய்தல் வெகு அருகாமையிலே இருக்கின்றது. நாரைப் பறவைகள் இவ்விரு நிலத்திலும் காணப் படுகின்றன. அதுவே பாட்டுக்கு உதவும் கருவியாகிறது. நாரை என்பது தோழிக்கு ஆகி வருகிறது. சடகோபரின் கானல் கவிதை இதோ:

வாயுந்திரையுகளும் கானல்மடநாராய்,
ஆயும் அமருலகும்துஞ்சிலும் நீதுஞ்சாயால்,
நோயும் பயலைமையும் மீதூரவெம்மேபோல்,
நீயும்திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே. 2.1.1


வந்து, வந்து அலைகள் மோதுகின்ற கடற்பரப்பில் உள்ள கானல் மட நாரையே! என் தாயும், அமருலகில் உள்ளோரும் உறங்கினாலும் நீ உறங்க மாட்டாய் போலுள்ளது! (இங்கு "யாய்"என்ற (ஆய்) பழம் சொல் பயன் படுகிறது "யாயும் ஞாயும் யாராகியரோ" ) ஆதலால், என்னைப் போல் நீயும் பசலை நோய் கொண்டு, திருமாலிடம் நெஞ்சம் பறி கொண்டயோ? என்று அமைகிறது இப்பாசுரம்.

புருஷோத்தம நாயுடு பசலை என்பது காதல் வசத்தால் வரும் நிறவேறுபாடு அது, பீர்க்கு, கொன்றை மலரை ஒத்து இருக்கும் என்கிறார். அதனால்தான், வெண்மையான நாரையை உவமை காட்டுகிறார் ஆழ்வார். வெளிறிப் போதல் என்று சொல்லலாமென்று தோன்றுகிறது. பயலை = பசலை.

எம்கானல் அகம் கழிவாய் இரைத்தேர்ந்திங்கு இனிதமரும்,
செங்கால மடநாராய். திருமூழிக் களத்துறையும்,
கொங்கு ஆர்பூந் துழாய் முடி எம் குடக்கூத்தர்க்கு என் தூதாய்,
நும் கால்கல் என் தலைமேல் கெழுமீரோ நுமரோடே. 9.7.1

நம்மாழ்வார் வாயால் "எம் கானல்" என்று விழுகிறது! இது தோழமை குறித்து விழும் வார்த்தை! கானல் நிலத்து மக்கள் எப்போதும் இறை உணர்வுடன் "அவனுடன்" சங்கமிக்க மாட்டோமா? வென ஏங்கித் தவிப்பதால் கானல் நாரையுடன் ஒரு உறவு வந்து விடுகிறது. இன்று கூட இதே உணர்வு கொப்பளிக்க லட்சோப, லட்சம் மக்கள் மெக்காவில் கூடுவது விந்தை அல்லவே!இப்படி இறைத்தூது போகும் தூதுவரின் பாத கமலங்களைத் தன் தலையில் தாங்கத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார் நம்மாழ்வார்.

பண்டிவன் ஆயன், நங்காய்!படிறன்; புகுந்து, என்மகள்தன்
தொண்டையஞ் செங்கனிவாய்நுகர்ந்தானை யுகந்து, அவன்பின்
கெண்டைஒண் கண்மிளிரக்கிளிபோல்மிழற் றிநடந்து,
வண்டமர் கானல்மல்கும்வயலாலி புகுவர்க்கொலோ.
(பெரிய திருமொழி 3.7.2)

சங்கத்தமிழ் கற்க வேறெங்கும் போகவேண்டா! திவ்யப் பனுவல்களை வாசித்தால் போதும்!

அழகிய எளிய தமிழ், இனிய சொல்லாட்சி, நெஞ்சம் கவரும் கவிதை! என்ன காதற் காட்சிபாருங்கள்! பண்டிவன் - இவனுக்கு வயது யாரால் சொல்லமுடியும்? அதனால் பண்டிவன்! ஆயன்! ஒரு தாய் சொல்வது போல் அமையும் பாடல் இது. தன் மகளின் செங்கனிவாய் சுவைத்து அவன் நடக்க கெண்டை மீன் போன்ற கண்களையுடைய இவள் அவன் பின்னால் ஒரு கிளி போல் மிழற்றி நடந்து, வண்டுகள் சூழ்ந்த கானல் வயலுக்குள் புகுந்து விடுகின்றனர் எனபது காட்சி.
பாலையிலும் இருக்கும் இனிமை!

நன்னெஞ்சே! நம்பெருமான் நாளும் இனிதமரும்,
அன்னம்சேர் கானல் அணியாலி கைதொழுது,
முன்னம்சேர் வல்வினைகள் போக முகில்வண்ணன்,
பொன்னம்சேர் சேவடிமேல் போதணியப் பெற்றோமே! 11.3.9


கானல் என்பது இன்று காணும் பொருளில் அன்று கையாளப் படவில்லையெனத் தெரிகிறது. இன்று கானல் என்பது வறட்சி, வெறுமை, ஒரு வித மயக்கத்தில் தென்படும் காட்சி என்பது போல் இருக்கிறது. ஆனால் திருமழிசை கையாளும் விதம் மிகவும் இதமாக உள்ளது. நம் பெருமான் இனிது அமரும் அன்னம் எனும் பறவைகள் வந்து அமரும் கானல் சோலையினைக் கைதொழுவோம் என்கிறார். இப்படிச் செய்வதால் முன்னம் நாம் செய்த வல் வினைகள் போய், முகில் வண்ணனின் பொன் போன்ற சேவடிகள் காணும் பேரு உண்டு என்று சொல்கிறார். கானல் என்ற மிரட்சி போய், கானல் என்பது ஒரு நம்பிக்கை தரும் விஷயமாக இத்தேன் தமிழ்க்கவிகளால் மாற்றப் படுகிறது! வாழ்க தெய்வப் பனுவல்கள்!
ஐந்திணைகள் மற்றும் ஆறாம் திணை பற்றிய என் கட்டுரை!


0 பின்னூட்டங்கள்: