e-mozi

மடல் 102: கனவில் கண்டேன் கண்ணபெருமானை!

Pasura Madal 102 - Dream state and divine realisation
First published on:Datum: Sun, 08 Apr 2001 10:36:02 +0200
In:"agathiyar@yahoogroups.com",
"meykandar@yahoogroups.com",
"tamil-ulagam@yahoogroups.com"

உண்மையில் நானொரு கனவுத்தொழிற்சாலை!

அதிகாலைக் கனவுகள்; பகற் பொழுதின் நெட்டைக் கனவுகள்; அவசரத் தூக்கத்தின் அரைகுறைக் கனவுகள்; கனவுமில்லாமல், நினைவுமில்லாத அலிக் கனவுகள் இப்படி வகை வகையாய் கனவுகள் வந்து போகும். நனவிடை தோய்தல் போல், கனவிடை தொய்ந்து கனவுகளை எழுதலாமென்றால் அவை நினைவிற்கு வருவதில்லை! கனவுகள் குறள் போல் சிறுத்து வருவதுண்டு. சிறுகதைக்குரிய கூர்மையுடன் வருவதுண்டு, அபூர்வமாக தொடர் கதையாவும் கூட வருவதுண்டு. நன்றாக ஞாபகம் வரும் அது ஒரு தொடர்ச்சி தானென்று. கனவில் மிதப்பதுண்டு, சிரிப்பதுண்டு, அழுவதுண்டு! கை கால் மறத்துப் போய் முடமாவதுண்டு. அதிகாலைக் கனவுகளில் M.S.சுப்புலட்சுமியின் குரலில் சுப்பிரபாதம் பாடுவதுண்டு :-) சில கனவுகள் என்னைத் தளிர்ப்பிப்பதுண்டு, சில கனவுகள் ஒரு நாளையே வீணடிக்க வைப்பதுண்டு!

கனவு ஒரு சாம்ராஜ்யம் என்று தோன்றுகிறது! கை, காலை உபயோகிக்காமல் நம்மை, நடக்க வைக்கிறது. இறக்கைகள் இல்லாமல் பறக்க வைக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய, புதிய கதைக் கரு கொண்டு, என்னைக் கேட்காமலே என்னை நடிகனாக்குகிறது! நிஜ வாழ்வில் செய்ய முடியாத பல செயல்களைக் கனவுக்குள் செய்ய முடிகிறது. ஒரு முறை இராஜீவ் காந்தியைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேன். அதற்கு முன்தான் இந்திரா காந்தியைப் பார்த்திருந்தேன்! அதிசயமாக வண்ணக் கனவுகள் வருவதுண்டு! சினுக்கும் விளக்குகள் கொண்ட வானயூர்திகளைக் (space ship) கண்டிருக்கிறேன். உபயம் spielberg-தானா வென்று யோசிப்பதுமுண்டு. பகலில் சேகரத்து வைத்த தகவல்கள் இரவில் அலசப்படும் போது அபூர்வச் சேர்க்கையாக கனவுகள் வருகின்றன போலும்.

கனவுகள் மீது எனக்கு மரியாதை உண்டு. என் வாழ் நாளில் மூன்றில் இரண்டு பங்கு தூங்கியே கழிக்க வேண்டிய விதி இருக்கும் போது கனவுகள் ஒரு நல்ல துணை. அது இல்லாவிட்டால் வாழ் நாளில் பெரும் பகுதி சுவாரசியமில்லாமல் போய்விடும்!

கனவுகளைப் பற்றிப் பேசும் ஜே.கே (J.Krishnamurti) தனக்கு கனவுகளே வருவதில்லை என்கிறார். யாரால் இதை நிரூபிக்க முடியும்? அவர் ஞானி. தூங்காத தூக்கம் போலது! அதன் சுகம் நமக்குத் தெரியுமோ?

ஆனால் கனவுகளைப் பற்றிய ஆழமான கேள்விகள் உண்டு. கனவுகள் வந்து முடிந்தவுடனேயே Real Audio-down load (may I run the application?) செய்வது போல் கனவுகளை மனது உடனேயே அலசுவது உண்டு. அதுவும் கனவில் சேர்த்தியாவென்பது தெரியவில்லை!

கனவுகள் என் தத்துவ உள்ளத்திற்கு உரம் சேர்க்கின்றன. எழுத்தாளும் எனக்கு கதைக் கரு வாகின்றன. இப்படி சமீபத்தில் ஒரு கதை எழுத இந்தப் பரோபகாரிக் கனவுகள் உதவி இருக்கின்றன. இந்தியா டுடே (இலங்கை பாஷையில் இந்தியா ருரே!) "அடி, முடி தேடி..." என்ற என் கனவிடை தோய்தலை வெளியிட்டது.

அடியும், முடியும் தேடி!

(இனிமேல் கொஞ்சம் புரியும் படி கதை எழுதவும் என்று ஆசிரியரிடமிருந்து தனிப்பட்ட ஒரு குறிப்பு வந்தது! கனவுகள் புரிந்தால் நான் என்றோ ஞானி ஆகியிருக்க மாட்டேனா!)

பல நேரங்களில் புராணங்களுக்கும், ஐதீகங்களுக்கும் ஒரு கனவுத் தன்மை உண்டு. இவை கனவு கானும் மனது செய்யும் கதைகளோவென்று கேட்கத் தோன்றுகிறது. நம் வில்லாதி வில்லன், கவிதாச் சக்கிரவர்த்தி திருமங்கை மன்னன் திருடனாக வழிப்பறி செய்த போது பெருமாள், தம்பதி சமேதராய் வந்து அவனை ஆட் கொண்ட கதையில் இக்கனவு சீன் தன்மை உண்டு. பெருமாளின் நகை மூட்டையை நம்ம ஆழ்வார் தூக்க முடியாமல் (திருவின் சீதனமல்லவொ அது!) திணற NTR ஸ்டைலில் புன்னகையுடன் பெருமாள் அவரை ஆட்கொண்டு "எண்ணெழுத்து மந்திரம்" உபதேசம் செய்வித்து.....நினைக்கவே சுவாரசியமாக உள்ளது.

பகுத்தறிவு பேசும் மேதைகள் கனவில் அபத்தமாக நடந்து கொள்வதற்கு அவர் பொறுப்பேற்பாரோ (யார் பொறுப்பு) ? கனவு இல்லையேல் கற்பனை இல்லை! கற்பனை இல்லையேல் வாழ்வே இல்லை. இறைவனைப் பற்றிய "பாவனை" முக்கியமென்று அந்தக் கால நம்மாழ்வாரும் சொல்கிறார், இந்தக் காலத்து லா.ச.ராவும் சொல்கிறார்.

திருமங்கை மன்னனின் கதையை நடந்தது போலவும், இவர் கூடவே இருந்து பார்த்தது போலவும் பெளராணிகர்கள் சொல்லும் போது கதை கேட்கச் சுகமாகவே உள்ளது. ஆனால், ஆழ்வார் வேறுவகையில் தனக்கு தரிசனம் கிடைத்தாதகச் சொல்கிறார்.

ஆழியும் சங்கு முடைய நங்கள் அடிகள்தாம்,
பாழிமை யான கனவில் நம்மைப் பகர்வித்தார்,
தோழியும் நானு மொழியவையம் துயின்றது,
கோழியும் கூகின்ற தில்லைக்கூரிரு ளாயிற்றே.

(பெரிய திருமொழி 11.2.6)

நாயகி பாவத்தில் பாடிய சங்கப் பாமாலையிது. கூர் இருள் நேரம். பாத கமலங்களை மட்டும் காட்டிவிட்டுப் போய் விடுகிறார். தோழிக்கும் இவருக்கும்தான் தெரியும். பாழ் இமை மூடிய நேரம். நேராகத் தரிசனம் கொடுக்கக் கூடாதோ?


சினவில் செங்கண் அரக்க ருயிர்மாளச்
செற்ற வில்லியென்று கற்றவர் தந்தம்
மனவுட் கொண்டு,என்று மெப்போதும் என்றேத்தும்
மாமுனி யைமர மேழெய்த மைந்தனை,
நனவில் சென்றார்க்கும் நண்ணற் கரியானை
நானடி யேன்நறை யூர்நின்ற நம்பியை,
கனவில் கண்டே னின்றுகண் டமையாலென்
கண் ணைகள் களிப்பக் களித்தேனே.
(2) 7.3.1

மிகத் தெளிவாகச் சொல்கிறார் தனது கனவை. நனவில் அவன் அரியன். எனவே இவர் கனவில் காண்கிறார். கண்டு களிக்கிறார். அக்கவின் வலிமையைத் திருக்குறுந்தாண்டகத்தில் செப்புகிறார்.


கண்டேன் திருமேனி யான்கனவில், அங்கவன்கைக்
கண்டேன் கனலுஞ் சுடராழி, - கண்டேன்
உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து, பின்னும்
மறுநோய் செறுவின் வலி.
67

பேயாழ்வார் போல் "திரு" மேனி காண்கிறார் கனவில். அக்கனவு அவரது உறு நோய் போக்கி, வினை போக்கி (ஓட்டுவித்து!) மீதி எதாவது தோஷம், கீஷம் இருந்தால் அதையும் போக்கி செறுக்குடன் நிற்கும் வலியதாம் அது. இங்கு சாதாரணக் கனவு ஒரு மந்திரத் தன்மை அடைவதைக் காண்கிறோம்.

நாடி ஜோதிடம் சொன்னவன் இத்தகைய "தெய்வீகக் கனவுகள்" எனக்கும் கிட்டுமென்று சொன்னான். இது உளவியலில் தோய்ந்த கலாச்சாரமாகிய இந்தியாவில்தான் முடியும். வெளி நாட்டுக் காரனிடம் சொன்னால் சிரிப்பான். ஆனால் இக்கனவுகளின் வலிமை என்னவென்று அனுபவித்துப் பார்த்தவற்கே புரியும்!

தான் அவனைக் கனவிலேயே கண்டதாகத்தான் ஆழ்வார் சொல்கிறார்.


பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன், - கனவில்
மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே - மிகக்கண்டேன்
ஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான்,
வின்திகழும் சோதி வடிவு.
81

இப்பாடலில் பகலிலேயே நாரண தரிசனம் கிடைத்ததாகத் தானே சொல்கிறார் என்றும் சொல்லலாம். ஆனால் நாரணனைச் சூரிய வடிவில் காண்கிறது வேதம். வின் திகழும் சோதி என்றுதான் ஆழ்வார் சொல்கிறார். பகல் என்பது சூரியனைக் குறிக்க வருகிறது என்பது அவர் அவனைக் கனவில்தான் மிகக் காண்கிறார் என்ற அடுத்த வரியில் புலப் படுகிறது.

இப்படிக் கனவு நிலையில் இறை தரிசனம் பற்றி இரண்டு ஆழ்வார்கள்தான் ஆழமாகப் பேசுகின்றனர். அந்த இரண்டாமவர், இற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் பற்றாகும் கரம் தன்னைப் பற்றியதாகக் கனாக் காண்கிறார்.

இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையில் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்.


ஆண்டாள் என்றொரு பெண் இப்படிக் கவிதை படிக்கா விட்டால் இன்றைய சினிமா உலகம் கனவு சீன் காட்சிகளுக்கு கற்பனை இன்றி வரண்டு போயிருக்கும். திருமங்கைக்கு கனவில் வெறும் பாதம் காட்டும் பெருமாள், ஆண்டாள் பாதத்தைப் பிடிப்பதாகக் கனவு கொடுக்கிறார் (கனவுக்கு யார் பொறுப்பு?).

இதை ஆண்டாளின் அபரிதமான நம்பிக்கை, கொள்கைப் பிடிப்பு என்றும் காணலாம். அந்தப் பிடிப்பு நம்மையும் கொஞ்சம் பிடித்தால் தேவலை.

3 பின்னூட்டங்கள்:

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Tuesday, December 26, 2006

//இது உளவியலில் தோய்ந்த கலாச்சாரமாகிய இந்தியாவில்தான் முடியும். வெளி நாட்டுக் காரனிடம் சொன்னால் சிரிப்பான். ஆனால் இக்கனவுகளின் வலிமை என்னவென்று அனுபவித்துப் பார்த்தவற்கே புரியும்!//

அதெல்லாம் சும்மா கண்ணன் சார்; இவங்க வெள்ளைக்காரங்களும் கனவுப் பைத்தியங்கள் தான்; டிஸ்னிலாண்ட், ட்ரீம்லாண்ட் என்று கனவுக்குத் தோட்டம் மாளிகையே கட்டி விடறவங்க தானே இவங்களும்!

சின்டரெல்லாக் கனவுகள், சாண்டா கனவுகள் எல்லாம் கனவு மயம்!

இவர்கள் கனவில் எம்பெருமான் தான் வருவதில்லை போலும்! :-))

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Tuesday, December 26, 2006

//அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்//

ஏனைய ஆழ்வார்கள் எல்லாம் அவன் திருமேனியும் அவன் திருவடிகளையும் பற்றக் கனாக் கண்டு கொண்டிருக்க,
நம் கோதை பாருங்கள், தன்னடியை அவன் பிடிக்கக் கனாக் காண்கிறாள்!

அஞ்சு குடிக்கு ஒரு
சந்ததியாய் வந்தவள் ஆயிற்றே!
சும்மாவா! அப்பா அழகிய மணவாளா, பார்த்து, எங்கள் கோதையின் பூவடிகள் நோகாமல் பிடி, புரிந்ததா? :-))

  நா.கண்ணன்

Tuesday, December 26, 2006

//கனவுக்குத் தோட்டம் மாளிகையே கட்டி விடறவங்க தானே இவங்களும்!//

கனவு யாருக்குத்தான் இல்லை. ஆனால் கனவை ஒரு 'பிரதி' (text) என்று வாசிக்கும் கலையை இந்தியா பன்னெடும் காலமாக ஆய்ந்து வளர்த்திருக்கிறது. கார்ல் யுங், ஜோசப் கேம்பல் போன்றோர் அதனாலேயே இந்திய மெஞ்ஞான அறிவை புகழ்ந்து பேசுகின்றனர்.

இப்போது எல்லோரின் கனவும் 'காசு' என்றாகிப் போனபின், 'கடவுள்' எப்படி வருவார் கனவில்? அமெரிக்கக் கனவு எது என்று உலகு அறிந்ததுதானே!!