e-mozi

மடல் 103: தாய் நாடும் கன்றே போல்

First Published on: Sun, 22 Apr 2001 16:56:29 +0200

இவ்வுலகின் மிக அதிசயமான, ஆச்சர்யமான விஷயம் வாழ்தல் என்னும் இயக்கம்தான். இவ்வியக்கம் பல நேரங்களில் பொருள் பொதிந்தும், பல நேரங்களில் பொருளற்றும் தோன்றி மயக்கம் தருவதாக உள்ளதால், மனிதனின் தேடுதலின் முக்கிய குறிக்கோளாக இவ்வியக்கம் அமைந்து போனது.

ஒரு அழகான காட்சி, இனிய கீதம், மெய் மறக்க வைக்கும் ஓவியம், கவிதை, காவியம், நல்லுணவு, பெண்-ஆண் தீண்டல், மழழையின் ஸ்பரிசம் இவை வாழ்வைப் பொருள் உள்ளதாக மாற்றும் மருந்துகள்.

வஞ்சகம், போர், வன்முறை, வறுமை, ஏழ்மை, தனிமை இவை வாழ்வைப் பொருளற்றதாக மாற்றும் கசப்புகள்.

வாழ்வு என்ற விஷயம் மனிதனின் பிடிக்குள் கிடைத்திருந்தால் இத்தனை மதங்கள், இத்தனை தத்துவங்கள் தோன்றியிருக்காது. அறிவியல் என்பதும் வாழ்வின் நீட்சிதான். வாழ்வு பொருளற்றுப் போகும் போதும், தனிமைப் பட்டு துயருரும் போதும் மனிதனுக்கு வாழ நம்பிக்கை தேவைப்படுகிறது.

குழந்தைப் பருவத்திலிருந்து மனிதனுக்கு உற்ற துணையாக இயற்கையே அமைத்துக் கொடுத்ததுதான் தாய். தாய் உள்ளம் என்பது பரிவு காட்டுவது. இது மனித இயல்புமட்டுமன்றி அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். கொடும் விலங்குகளின் தாய்கூட தன் குட்டிகளிடம் பரிவாகத்தான் இருக்கும். எனவேதான், துன்பம் என்று வரும்போது தாயிடம் ஓடுவது இயல்பாக அமைகிறது. இதை நன்கு சுட்டும் வண்ணம் பொய்கை ஆழ்வார் தனது இயற்பாவில் குறிப்பிடுகிறார்:

தெளிதாக வுள்ளத்தைச் செந்றீஇ, ஞாலத்து
எளிதாக நன்குணர்வார் சிந்தை, எளிதாகத்
தாய்நாடு கன்றேபோல் தண்டுழா யான் அடிக்கே,
போய்நாடிக் கொள்ளும் புரிந்து.

தாயை நாடும் கன்று போல் இவரது உள்ளம் இயல்பாக இறைவனிடம் சரணமடைவதாகச் சொல்கிறார். எனவே தாய் என்பவள்தான் நமது முதற் சரணம். அவள் தந்தையைக் காட்ட தந்தை உடன் துணை. தாயும், தந்தையும் தெய்வத்தைக் காட்ட தெய்வம் நம் இறுதித் துணை.

பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ
மற்றையார் ஆவாரும் நீபேசில், எற்றேயோ
மாய! மாயவளை மாயமுலை வாய்வைத்த
நீயம்மா! காட்டும் நெறி?

[நம்மாழ்வார் (இயற்பா)]

ஆதி சங்கரரும், பட்டினத்தாரும், நம்மாழ்வாரும் எவ்வளவுதான் ஞானிகளாக இருந்தாலும் தாய், தந்தை உறவை நன்கு புரிந்தவர்கள்தான். எனவே சந்நியாசம் என்பது இவ்வுறவைப் புறக்கணிக்கவில்லை என்று கொள்ளலாம். இல்லையெனில் இறைவனை தாய், தந்தை என்று உவமிக்க வேண்டியது இல்லை! மிக்க அன்புடனேதான் அவர் திருமாலை, "நீயம்மா!காட்டும் நெறி!" என்று நெகிழ்ந்து கூறுகிறார்.

ஆனாலும், எல்லா அம்மாக்களும் நல்ல அம்மாக்கள் அல்லவே! பெண்ணாகப் பிறந்து விட்டதாலோ, தாய்மை அடைந்து விட்டதாலோ ஒரு பெண் நல்ல தாய் என்று சொல்ல முடிவதில்லையே. பரிவு என்பது இல்லாததால்தானே கைகேயி இராமனை காட்டுக்குப் போகும் படி சொன்னாள். தாய் போல வந்துதானே முலைப் பாலில் ஒருத்தி நஞ்சு வைத்தாள்.

எம் அன்னை பெரியாழ்வார் பரிவைப் பாருங்கள்:

மாற்றுத்தாய்சென்று வனம்போகே என்றிட
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான்! என்றழ
கூற்றுத்தாய்சொல்லக் கொடியவனம்போன
சீற்றமிலாதானைப்பாடிப்பற! சீதைமணாளனைப்பாடிப்பற!

என்று இளங்கோ அடிகள் போல் சிலம்பாடுகிறார் எம் பெரிய பட்டரும்.

குலசேகர மன்னன் இன்னொரு காட்சியை விரிக்கிறார். தாய் முலைப்பால் பொங்கி வழியும் போது யாராவது பேய் முலைக்குப் போவரோ? அப்படிச் செய்பவனை பித்தன் என்று ஊர் சொல்லாதோ? இவன் இப்படிப் பட்ட கிறுக்கனாக இருப்பதால்தான் ஆய்மிகு காதலோடு காதலி காத்திருக்க, கூட வந்த தோழியைக் கடத்திக் கொண்டு போய் விடுகிறான் இவன் என்று குலசேகரக் காதலி நம்மிடம் முறையிடுகிறாள் :-)

தாய்முலைப் பாலில்அமுதிருக்கத் தவழ்ந்து தளர்நடையிட்டுச்சென்று
பேய்முலை வாய்வைத்து நஞ்சையுண்டு பித்தனென் றேபிறர் ஏச நின்றாய்
ஆய்மிகு காதலோடு யானிருப்ப யான்விட வந்தவென் தூதியோடே
நீமிகு போகத்தை நன்குகந்தாய் அதுவுமுன் கோரம்புக் கேற்குமன்றே


[குலசேகரர் (பெருமாள் திருமொழி)6.4]

இந்தத் தாய்-தந்தை என்பவர்கள் நம்மை இவ்வுலகிற்கு அறிமுகப் படுத்தியவர் என்ற நன்றி உணர்வோடு இன்னும் கூட சிந்தித்தால் இத் தாய்-தந்தையருக்கும் ஒரு முதல் தேவைப் படுகிறது. இதை நம்மாழ்வார் அழகாக "உலகுக்கோர் முந்தைத் தாய்தந்தையே!"என்றழைத்து நம் உண்மையான அம்மையும் அப்பனும் அவன்தான் என்று காட்டுகிறார். இச்சுட்டு மிகவும் முக்கியம் வாய்ந்தது. எனவேதான் குரு அல்லது ஆச்சர்யன் என்பவன்தாய் தந்தையை விட ஒரு நிலையில் முக்கியத்துவமடைந்து விடுகிறான்! நம்மாழ்வாரின்மிகவும் பொருள் செறிந்த திருவாய்மொழியொன்று இதோ:

போகின்றகாலங்கள் போயகாலங்கள்
போகுகாலங்கள், தாய்தந்தையுயிர்
ஆகின்றாய் உன்னை நானடைந்தேன் விடுவேனோ?
பாகின்ற தொல்புகழ் மூவுலகுக்கும்
நாதனே! பரமா! தண்வேங்கடம்
மேகின்றாய்! தண்டுழாய் விரைநாறுகண்ணியனே. 2.6.10

பால் நினைந்தூட்டும் தாயினும் பரிந்து செயல் படக்கூடிய ஒரே பொருள் பரம்பொருளாகவே இருக்க முடியும் என்ற துணிபில்தான் "பெற்ற தாயினுமாயின செய்யும்" என்று திருமங்கை சொல்கிறார். அவன் நிகழ் காலத்தில் நமக்குத் துணை, போய் விட்ட காலத்தில் நம் மூத்தோருக்குத் துணை (தெய்வம் நமக்குத் துணை பாப்பா! ஒரு தீங்குவர மாட்டாது பாப்பா - பாரதி),இனி வரப் போகும் காலத்தில் நம் சந்ததியினருக்குத் துணை என ஆகின்றான். இப்புரிதல் வந்தபின் நமக்கு வேறென்ன வேண்டும்?

மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித்தொழும்,
மாலார் வந்தினநாள் அடியேன்மனத்தே மன்னினார்,
சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும்,
மேலாத் தாய்தந்தையும் அவரேயினி யாவாரே. 5.1.8

அவரே தாய், அவரே தந்தை, அவரே இனி யாவும். அப்புரிதலில் ஒரு களி வந்தால்,

நன்று நானுய்ய நான் கண்டு கொண்டேன்- நாராயணாவென்னும் நாமம்!
--------என்று சொல்லும்,

நம்பிகாள்! உய்ய நான் கண்டு கொண்டேன்-நாராயணாவென்னும் நாமம்!
--------என்று சொல்லும்,

நற்பொருள் காண்மின் பாடிநீ ருய்ம்மின்-நாராயணாவென்னும் நாமம்!
--------என்று சொல்லும்,

நற்றுணையாகப் பற்றினேன் அடியேன்நாராயணாவென்னும் நாமம்!
--------என்று சொல்லும்,

நலந்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்-நாராயணாவென்னும் நாமம்!
--------என்று சொல்லும்,

நஞ்சுதான் கண்டீர் நம்முடைய வினைக்கு-நாராயணாவென்னும் நாமம்!
--------என்றும் சொல்லும்.

4 பின்னூட்டங்கள்:

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Tuesday, December 26, 2006

//வாழ்வு என்ற விஷயம் மனிதனின் பிடிக்குள் கிடைத்திருந்தால் இத்தனை மதங்கள், இத்தனை தத்துவங்கள் தோன்றியிருக்காது//

கலக்குறீங்க, கண்ணன் சார்! நச்!

  நா.கண்ணன்

Tuesday, December 26, 2006

நன்றி, கண்ணபிரான்.

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Tuesday, December 26, 2006

//நாராயணாவென்னும் நாமம்//

நீங்கள் சொன்னது போல் சில தாய்மார்கள் நல்லவர்களாக இல்லாது போனாலும், "அம்மா" என்ற சொல் என்றென்றும் நல்லதே!

அதை மனிதிலிறுத்தித் தானோ என்னவோ நாராயணா என்னும் "நாமம்" என்று சொல்லைப் பிரதானமாக்கிப் பாடுகிறார்!
அவன் மறந்தாலும் அவன் நாமம் விடாது காக்கும் அல்லவா?

அன்று அப்படித் தானே சபையில் ஒரு பேதைக்கு அவன் வரும் முன்னே கோவிந்த நாமம் அவளைக் காத்தது!

ஆழ்வார் பாசுரத்தில் தான் எத்தனை சூட்சுமங்கள்!

  நா.கண்ணன்

Tuesday, December 26, 2006

//சில தாய்மார்கள் நல்லவர்களாக இல்லாது போனாலும், "அம்மா" என்ற சொல் என்றென்றும் நல்லதே!//

மிக வித்தியாசமான அணுகுதல்! 'நாமம்' காக்கும் என்பதற்கு இதைச் சான்றாகக் காட்டும் உங்கள் அணுகுமுறை! சபாஷ்! வைணவ அணுகுமுறை சபலமாகிவிட்டது! வாழ்த்துக்கள்!!