e-mozi

மடல் 104: கொன்றை அலங்கல் மார்வன் யார் ?

First Published in: Sun, 29 Apr 2001 23:33:35 +0200

அண்மையில் கொன்றையும் பொன்னும் ( 4) என்னும் கட்டுரையில் முனைவர்.இராம.கிருஷ்ணன் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்

.......ஆனா, விண்ணெறியிலெ (வைணவத்திலெ) இப்படி இல்லைங்க; அவுங்களுக்கு கொன்றை மேலே கோபம் போலே இருக்கு...............கொன்றையை பத்தி ஒரு ஓரவஞ்சனை; நாலாயிரப் பனுவல் முழுக்கப் படிச்சிங்கின்னா மொத்தமா ரெண்டு இடம் தவிர மிச்ச எங்கெயும் கொன்றையைப் பத்திச் சொல்லிற மாட்டாங்க.......


இதில் இரண்டு பிழைகள்! ஒன்று ஆழ்வார்களுக்கு சிவனிடம் கோபம் கிடையாது, எனவே கொன்றை மீதும் கோபம் கிடையாது.

இரண்டாவது, எந்த ஓரவஞ்சனையுமின்றி பல இடங்களில் (இரண்டு மட்டுமல்ல!) ஆழ்வார்கள்கொன்றை பற்றிப் பேசுகின்றனர்.

பல்லாண்டு பாடிய பட்டர் திருப்பிரானிடமிருந்து தொடங்குவோம்.

கங்கைக் கரையிலுள்ள கண்டமெனும் திருப்பதிக்கு யாத்திரை போகிறார் பெரியாழ்வார். தென் தமிழ் நாடு போல் வடக்கில் இந்த சைவ-வைணவ பேதம் கிடையாது. இரண்டும் ஒண்ணு மண்ணாய் கிடக்கும். தெக்கத்திகாரர்கள் போல் ஐயர் மட்டும் சிவலிங்கத்தைத் தொட முடியும் என்ற பழக்கமும் கிடையாது. யாரும் சிவனுக்கு அபிஷேகம் செய்யலாம். இந்தப் பரந்த நோக்கைப் பிரதிபலிப்பது போல், நலம் திகழ் சடையனான சிவன் (சிவம் என்றால் மங்களம் அருள்பவன் என்று பொருள்) அணியும் கொன்றை மலரும், நாரணன் பாதம் படும் திருத்துழாயும் (துளசி) கலந்து புனலாடி வரும் "கண்டம்" என்றுபாடுகிறார்.

சலம்பொதியுடம்பின்தழலுமிழ்பேழ்வாய்ச்
சந்திரன்வெங்கதிர் அஞ்ச
மலர்ந்தெழுந்தணவி மணிவண்ண வுருவின்
மால் புருடோத்தமன் வாழ்வு
நலம் திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும் நாரணன்பாதத்துழாயும்
கலந்திழிபுனலால் புகர்படுகங்கைக்
கண்டமென்னும்கடிநகரே.

அடுத்து, பாண்டிநாட்டுக்காரரான பட்டருக்கு, திருமாலிருஞ்சோலை மேல் பெரும் காதல் உண்டு.

பொருப்பிடைக் கொன்றை நின்று விருப்புடன் பொன் வழங்கு வதாகச்சொல்கிறார். கொன்றை பூத்துக் குலுங்கும் திருமாலிருஞ்சோலை, பொன் வழங்கும்பெருமாளான கோவிந்தராஜனை நினைவிற்குக் கொண்டு வருதல் இயற்கை. ஆபரணப்பிரியனான திருமால் நிற்கும் மலை பின் ஜொலிக்காமல் என்ன செய்யும்?

உருப்பிணி நங்கைதன்னை மீட்பான் தொடர்ந்தோடிச்சென்ற
உருப்பனையோட்டிக்கொண்டிட் டுறைத்திட்டஉறைப்பன்மலை
பொருப்பிடைக்கொன்றை நின்று முறியாழியும்காசும்கொண்டு
விருப்பொடுபொன்வழங்கும் வியன்மாலிருஞ்சோலையதே. (2) 1.

நாச்சியார் திருமொழியில் ஆண்டாளின் வருணனை இன்னும் அழகு! மாலைப் பொழுதே பொன் நிறத்தில் இருக்கும் (பொன் மாலைப் பொழுது என்பதுதானே வழக்கு), அப்படியிருக்க, கொன்றையில் தூங்கும் பொன்மாலை எப்படியிருக்கும் பாருங்கள்?? அடடா! இந்த ரம்மியமானசூழலில் கண் வளர்கிறாள் கோதை. அவள் நினைவெல்லாம் கண்ணன்! சங்கம் எடுத்தூதிய திருமுகம் எப்படியிருக்கும்? சார்ங்கம் வைத்துக் கிளப்பும் நாணொலி எப்படியிருக்கும்? என்று மயங்குவதாகக் கொன்றைக் கவி செய்கிறாள் ஆண்டாள். இதில் ஓரவஞ்சனையின் சாயல் எங்காவது உண்டா?

கோங்கல ரும்பொழில்மா- லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல் தூங்குபொன் மாலைகளோ- டுடனாய்ன்று தூங்குகின்றேன்,
பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும்,
சார்ங்கவில் நாணொலியும் தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ.

இயற்கையை வருணிப்பதில் திருமங்கையை அடித்துக்கொள்ள யாரும் கிடையாது. அப்படிப் பட்டவர் கண்களில் கொன்றை தப்புமா?

வங்கத்தால் மாமணி வந் துந்து முந்நீர்
மல்லையாய்! மதிள்கச்சி யூராய்! பேராய்!
கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன்
குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான்,
பங்கத்தாய்! பாற்கடலாய்! பாரின் மேலாய்!
பனிவரையி னுச்சியாய்! பவள வண்ணா!
எங்குற்றாய்? எம்பெருமான்! உன்னை நாடி
ஏழையேன் இங்கனமே உழிதர் கேனே!
(திருநெடுந்தாண்டகம் 9)

மிக, நயமான பாடல் இது. முது நீர் நிற்கும் வங்கக் கடல் மல்லைத் தலைவனே (தலசயனப் பெருமாள் -திருக்கடல் மல்லை) என ஆரம்பிக்கிறது பாசுரம். முந்நீர் என்பது கடல்நீரைக் குறிக்கும். ஆற்று நீருக்கு முந்தியது கடல் நீர் என்ற புரிதலே விஞ்ஞான பூர்வமானதுதானே? கடல் நீர்தானே உலகு தோன்றியபோது முதலில் தோன்றியது! மல்லையாய்! மதிள்கச்சி யூராய்! பேராய்! என்று பெருமாள் உறையும் பதிகளைச் சொல்லிவருபவர், திடீரென்று, கொன்றை மலர் மார்பன் சிவன் தன் இடத்தில் மடப் பாவையைக் கொண்டான், பாற்கடலாய், பாரின் மேலாய், பனி சூழ்ந்த மலையின் உச்சியியாய் எங்குற்றாய்? என்றொரு கேள்வியை எழுப்புகிறார்? "அரியல்லால் தேவியில்லை ஐயன் ஐனார்க்கே" என்றால்,சிவன் நம்ம பெருமாளைக் கடத்திக் கொண்டு போய்விட்டார் என்று அர்த்தம்!அப்படியெனில் மல்லையாய்! மதிள்கச்சி யூராய்! பேராய்! எங்கே உள்ளாய் அப்பாவென்ற கேள்வி இயற்கைதானே :-))

திருமங்கையின் கேள்விக்கு விடையே போல், பதில் சொல்கிறார் நம்மாழ்வார். அவரேதான் இவரு, இவரேதான் அவரு என்று :-) நம்மாழ்வார் என்ற பாராங்குச நாயகிதன்னைப் பெருமாளாகப் பாவித்துக் கொள்கிறது. அப்போது அது சொல்லும் மொழிகள்தாயானவளுக்கு விளங்கவில்லை. அந்த இனிய பாடல் இதோ:

'முடிவிவள் தனக்கொன்று அறிகிலேன்' என்னும்
'மூவுல காளியே!' என்னும்,
'கடிகமழ் கொன்றைச் சடையனே!' என்னும்
'நான்முகக் கடவுளே!' என்னும்,
'வடிவுடை வானோர் தலைவனே!' என்னும்
'வண்திரு வரங்கனே!' என்னும்,
அடியடை யாதாள் போல் இவள் அணுகி
அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.
(திருவாய்மொழி 7.2.10)

எடுத்த முதல் அடியே வலுவானதாக விழுகிறது! தனக்கு முடிவு என்பது இல்லை என்று சொல்கிறாள் தலைவி! ஆதி-அந்தமற்ற பரம் பொருளுக்கு முடிவு ஏது? அவளே மூவுலகும் ஆளும் இந்திரன்! கடி கமழ் கொன்றைச் சடையன், பிரம்மா, வானவர் தலைவன், திருவரங்கன் எல்லாம். இந்தப் புரிதல் வந்த பின் முகில் வண்ணன் திருவடியை அவள் அடைந்துவிட்டாள் என்று பொருளாம்!

தலைவி, தலைவனின் வருகைக்காகக் காத்திருக்கிறாள். கார் காலத்தில் வருகிறேன் என்றுசொல்லிப் போனவன். இதோ வருகிறான்! எழில் திகழும் மாலை அணிந்து, கந்தம் நிறைய,பொரு கடல் தாவி உலகு அளந்த எம்பெருமான் வருகிறான்! உண்மைதான் கொன்றைகள் பூத்துக் குலுங்குகின்றனவே! அவன் வாக்கு மாறவில்லை. கார் காலத்தில் வந்து விட்டான்.

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப்பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப்பந்தர் தண்டுற நாற்றி, பொருகடல்சூழ்
நிலந்தா விய எம் பெருமான் தனதுவை குந்தம் அன்னாய்!
கலந்தார் வரவெதிர் கொண்டு! வன் கொன்றைகள் கார்த்தனவே. (திருவிருத்தம் 68)

சிவனும், மாலும் ஒன்றே என்று பொருள் படும் இன்னொறு பாடல் இதோ!

காத்த எங் கூத்தா! ஓ! மலை ஏந்திக் கன்மாரி தன்னைப்
பூத்தண் துழாய்முடி யாய்! புனை கொன்றையஞ் செஞ்சடையாய்!வாய்த்தவென் நான்முக னே! வந்து என் ஆருயிர் நீயானால்,
ஏத்தருங் கீர்த்தியி னாய்! உன்னை எங்குத் தலைப்பெய்வனே?
(திருவாய்மொழி 7.6.3)

புனை கொன்றைச் சடையனும், ஆருயிரும் எங்கள் கூத்தனே என்று சொல்கிறார். நடராசன் மட்டும் கூத்தன் அல்லேன். கண்ணனும் கூத்தனே! கல் மாரியாய் பெய்த போது குடை பிடித்துக் கூத்தாடியவன் தானே அவன்!இத்தனை பாடல்களிலும் எங்காவது ஓரவஞ்சனை தெரிந்ததா? சங்க மரபு எங்காவது பிறழ்ந்ததா? சிவ துவேஷம் தெரிந்ததா?

திருச்சந்த விருத்தத்தில் பேதம் தலைப் படுகிறது:

தாதுலாவு கொன்றைமாலை துன்னுசெஞ்ச டைச்சிவன்,
நீதியால் வ ணங்குபாத நின்மலா! நிலாயசீர்
வேதவாணர் கீதவேள்வி நீதியான கேள்வியார்,
நீதியால் வணங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே (9)

இப்படிப் பார்ப்பது கூட தவறாக இருக்கலாம். ஏனெனில், சிவன் நீதியால் திருமாலை வணங்குவதாகத்தான் கூறுகிறார். பல புராணங்களில் சிவன் திருமாலைத் தொழுவதும், இவர் அவரைத் தொழுவதும் காணக் கிடைக்கிறது. இராமாயணத்தில் இலங்கை செல்லும் முன் இராமன் சிவ பூஜை செய்துச் சிவனைத் தொழுத பின்னேதான் வெற்றி காண்கிறான். எனவே, புராணக் கணக்கில் இதைத் தோஷமாகக் கொள்ள முடியாது. ஒருவகையில் பார்த்தால் பெருமாளை ஆழ்வார்கள் "'கடிகமழ் கொன்றைச் சடையனே!' என்று வணங்குவதும் மகிழ்வான விஷயமே!

5 பின்னூட்டங்கள்:

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Saturday, December 23, 2006

மிக அருமையான பதிவு கண்ணன் சார்!

மின்னார் செஞ்சடை மேல்
மிளிர் கொன்றை அணிந்தவனே
என்ற தேவாரப் பாடல் நினைவுக்கு வருகிறது!

அரியும் சிவனும் ஒண்ணு
அறியாதான் வாயில மண்ணு என்று சொல்வது ஒரு வகை என்றால்,
அதையே இலக்கியத் தரமாக, ஆழ்வார்களும் நாயன்மார்களும் எப்படிப் பயின்று உள்ளார்கள் என்று படித்து அனுபவிப்பது ஒரு வித இன்பம்!

//கொங்கத்தார் வளங்கொன்றை அலங்கல் மார்வன்
குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான்//

என்ன அருமையான சந்தம்!

//பல புராணங்களில் சிவன் திருமாலைத் தொழுவதும், இவர் அவரைத் தொழுவதும் காணக் கிடைக்கிறது//

மிகவும் உண்மை!
அவர்கள் தான் இப்படி என்றால்,
இது அவர்கள் அடியார்கள் வரையிலும் பரவுகிறது!

ஆதிசேடன் ஈசன் நடனம் காணப் பதஞ்சலி ஆவதும்
நந்தி தேவர் பெருமாளைத் துதிக்க நந்திபுர விண்ணகரம் வருவதும்
இப்படி ஒன்றுக்கொன்று இயைந்து செய்யும்
இறை ஏத்துதல் அழகே அழகு!
இதை மன்மே நீயும் பழகே, பழகு!!

  குமரன் (Kumaran)

Monday, January 29, 2007

மிக அருமையான பாசுரங்களைக் கொண்டு கொன்றை அலங்கல் மார்வனைப் பற்றி ஆழ்வார்களும் பாடியிருக்கிறார்கள் என்று நன்கு காட்டியிருக்கிறீர்கள் கண்ணன் ஐயா. அருமை அருமை. மிகச் சிறப்பாக இருக்கிறது.

  நா.கண்ணன்

Monday, January 29, 2007

ஆழ்வார்களும், நாயன்மார்களும் ஒரே விஷயத்தை இருவேறு கோணங்களில், இருவேறு குறியீடுகளில் பேசுகிறார்கள். They are mutually inclusive. Complementary.

  பத்மா அர்விந்த்

Tuesday, February 13, 2007

அருமையான பதிவு. உங்கள் நண்பர் ஜடாயு இன்னும் கவைக்கவில்லையா:))

  நா.கண்ணன்

Tuesday, February 13, 2007

பத்மா வாங்க! நேற்று (உங்கள் இன்று) நினைத்தேன் இன்று (உங்கள் நேற்று) வந்துவிட்டீர்கள். ஜடாயு பக்ஷிதானே! எங்காவது இருக்கும். கழுகுக்கண்ணுக்கு இது எப்படித் தப்பும்?