e-mozi

மடல் 105: உயர்வற உயர்நலம் உடையவன்

First Published on: Fri May 11,2001 9:25 pm

உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே


நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியின் முதற்பாடல் இது. இறைவனை நம்பும் அனைத்து சமயங்களுக்கும் பொருந்துமாறு ஆரம்பிக்கிறார். இறைவனின் தன்மைகள் பற்றி முழுதுமாய் சொல்லமுடியாதஅளவு உயர் நலம் உடையவனாக அவன் இருக்கிறான். அவனைப் பற்றி அறிந்துகொள்ளுவதற்கான நல்லறிவைத் தந்தவனுமாய் உள்ளான். இறைத் தூதர்கள்,சித்தர்கள், முக்தர்கள் போன்ற அமர நிலை அறிந்தவர்களும் என்றும் போற்றும் அதிபதியாக உள்ளான். அப்படிப் பட்டவனின் சுடர் போன்ற அடிகளைத் தொழுது, உயர்வு கொள் மனமே என்பது எளிமையான பொருள்.

அவன், யவன் என்று ஆண்பாலில் சொன்னாலும்

"அவன் ஆணுமல்லன்,பெண்ணுமல்லன் அன்றி அலிவுமல்லன்"

என்று பிற பாடல்களில் சொல்லி அவனது அருவருவ நிலை பற்றி நிரம்பச் சொல்வதால் இதில் பால் வேறுபாடு கிடையாது. சுடரடி தொழுவதைப் பற்றி பொதுமறை தந்த வள்ளுவன் பாயிரத்தில் 7 (பத்தில் ஏழு) இடங்களில் சொல்கிறான்.முதல் பத்தில் வரும் பல பாசுரங்கள் இப்படித்தான் அமைந்துள்ளன.

இறைமை என்பதை ஒரு பிரபஞ்ச இயக்கம் போல அதன் அளவு, குணங்களைப்பற்றி பேசுவதாகவும் கூட இதற்கு வியாக்கியானம் சொல்ல முடியும். உதாரணமாக ஆதி காலம் தொட்டு அண்டவெளி பற்றி ஆராய்ச்சி நடந்து கொண்டுதான் உள்ளது. இன்றைய ஆய்வுகள் வரை அண்டத்தின் அளவை அளந்து சொன்னவர் இல்லை. கருங்குழியில் விழுந்து புறப்பட்டால் மீண்டுமொரு பிரபஞ்சத்தில் நிற்போம் என்கிறது இன்றைய ஆய்வு. பிரபஞ்சத்திற்குள், பிரபஞ்சமாய் அது விரிந்துகொண்டே போவதாகவே காண்கின்றனர் விஞ்ஞானிகள். அது உயர்வு அற உயர் நலம் உடையதாய் அமைகிறது. பிரபஞ்ச பரிணாமத்தில் மனிதன் ஒருவனுக்குத்தான் மயர்வற மதிநலம் அமையப்பெற்றுள்ளது (பல நேரங்களில் இது கேள்விக் குறியாவது வேறு விஷயம் :-). இதை அருளப் பெற்றவன் இவன் ஒருவனே. உலகம் பிறந்து எத்தனையோ தூதர்கள் வந்தாயிற்று, தன்னையே இறைவன் என்று சொல்லிக் கொள்பவர்களையும் பார்த்தாயிற்று. ஆனாலும் அவர்களுக்கும் அருள்பவனாய், அவர்களுக்கும் மேலான அதிபதியாய் அவன் உள்ளான். இப்பிரபஞ்ச விஸ்தாரணத்தைக் கண்ணுறும் எவரும் மண்டியிட்டு தொழாமல் இருக்க முடியாது. வாழ்க்கை என்பது ஒரு எதிர் நீச்சல். எத்தனையோ இடர்களுக்கு சவால் கொடுத்துக் கொண்டு வாழ்வு ஓடுகிறது. இதுவெல்லாம்தன் சுய முயற்சியில்தான் என்று அறிவுடைய எவரும் சொல்ல மாட்டார், எனவே இவ்வியக்கத்தின் முன் அடக்கமாக இரு என்பதும் ஒரு பொருள்.

இந்தப் பார்வையை விண்ணெறி அனுமதிக்கிறது. இதுபற்றிப் பேசும் மிகப்பழமையான தமிழ் நூல் பரிபாடல்

"பாழ்என, கால்என, பாகு என ஒன்றுஎனஇரண்டுஎன, மூன்று என, நான்குஎன, ஐந்துஎன.....

என்பதில் இறைமை என்பது ஐந்து நிலைகளில் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதாய் சொல்கிறது. பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம்,அர்ச்சை என்பதாகும் அவை. இது பற்றி முன்னைய மடல்களில் விரிவாகக் கண்டுள்ளோம்.

அறிவியல் மொழி கணிதம் என்பார்கள். அதனால்தான் பரிபாடல் கணித மொழி வழியாக இறைமை பேசுகிறது. பாழ் என்பது பண்டைய இந்தியர் கண்டு சொன்ன ஒன்று. பூஜ்யத்துக்குள்ளே நின்று இராஜ்ஜியத்தை நடத்துபவன் அவன். அதனால்தான் அவனது தொடக்கத்தைப்பற்றிப் பேசும் போது "பாழ் என" என ஆரம்பிக்கிறது பரிபாடல்! பாழ்என்பதில் சர்வமும் அடக்கம். எனவே பாழ் இல்லாமல் தொடக்கம் இல்லை. பாழ் என்பது எல்லையற்றது. பாழ் என்பது அனந்தம். பாழ் என்பது பரிபூரணம்.பாழ் என்பது சூன்யமல்ல (அதாவது வெற்று அல்ல). உயர் நலம் உடையது பாழ்.அது செய்வது அலகில்லா விளையாட்டு!!

ஆயின் விண்ணெறியின் மிகப் பெரும் பலமாக திருவாய்மொழி இருப்பதால் அதற்கான வைணவ விளக்கங்களைப் பார்த்து இரசிப்பதில் தவறில்லை. உரைவளம் மிக்க வைணவ இலக்கியத்தில் வரிக்கு, வரி, அடிக்கு அடி வியாக்கியானம் உண்டு. இறைவனை இரசித்து அனுபவிக்க வேண்டும் என்பதே நம் முன்னோர்களின் அவா.

உயர்வற என்ற முதல் வரியில் வரும் வியாக்கியானத்தில் எவ்வளவு நுணுக்கமாக இவர்கள் பிரபந்தத்தைப் பார்க்கிறார்கள் என்பது புரியும். சாதாரண வாழ்வில் ஒருவன் உயர்வு அடைய வேண்டுமெனில் வருந்தி உழைத்து மேலே வர வேண்டும்.நம்மாழ்வார் உள்ளக்கிடக்கை அப்படி அமைய முடியாதே எனக் கண்டு, அவனுக்கு உயர்வு என்பது இயல்பான ஒன்றே என்கிறார் ஆளவந்தார். 'ஆயின் மற்றையோருடைய உயர்வுகளை எல்லாம் இல்லை என்னலாம்படி செய்தால் தனக்கு ஓரெல்லை உண்டாய் இருக்குமோ?' என்னில், உயர்-காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையில் அனுபவித்தாலும் அப்பாற்பட்டு, வாக்காலும் மனத்தாலும் அளவிட்டு அறியமுடியாதபடி உயராநிற்கும் என்கிறது ஈட்டுரை!

செல்வம், அழிதலை முடிவாகவுடையன, உயர்வு,இறங்குதலை முடிவாகவுடையன, சேர்க்கை பிரிதலை முடிவாகவுடையன, வாழ்தல் சாதலை முடிவாகவுடையன, என்கின்றபடியே, இங்குக் கூறப்படும் உயர்வும் ஒருகாலத்தில் தாழுமோவெனக் கேட்டு, அன்று! 'உயர்' என்ற சொல்லால் இவ்வளவு என்று அளவிட்டுக் கூறமுடியாமையைக் கூறியபடி என்று சொல்கிறது ஈடு.

நலம் என்பது ஆனந்த குணம் ஒன்றனையே சொல்லுகிறது என்றும், எண்இல்லாதனவாய் உள்ள கல்யாண குணங்களின் கூட்டத்தையுடையவன் என்கிறார்ஆளவந்தார்.

மயர்வு அற - ஞாநாநுதயம், அந்யதா ஞானம், விபரீத ஞானம் என்கின்ற இவை வாசனையோட போகும் படியாக என்று சொல்லி, ஞாநாநுதயமாவது தேகத்தையே ஆத்துமாவாக நினைத்தல், அந்யதா ஞானமாவது பிற தெய்வங்கட்குத் தன்னை அடிமையாக நினைத்தல் (பரம் பொருள் அல்லாத சிறு தேவதைகள்), விபரீத ஞானமாவது தனக்குத்தானே உரியவனாகவும் ஆத்துமாவோடு அனுபவிக்கின்ற இன்பமே இன்பமாகவும் நினைக்கும் கேவல ஞானம் போன்ற அழுக்குகளை நீக்கி என்றாகிறது.

மதி நலம் -ஞான பத்திகள் இரண்டினையும் தந்தான் என்று இராமானுசருக்கு முன்பிருந்த பெரியவர்கள் கூறுவதுண்டு என்று ஈடு சொல்லி நலம் மதி எனக் கொண்டு நலமான மதி என்றும் பொருள் கொள்ளாலாம் என்கிறது.

அருளினன் - பற்றிப் பேசும் போது ஒரு அழகான உவமை சொல்கிறது ஈடு. மார்பின் கடுப்பாலே தரையிலே பாலைப் பீச்சுவாரைப் போன்று, தானகவே அருள் செய்துகொண்டு நின்றான் என்கிறது. ஒரு காலத்தில் தமிழகத்தில் தேனும், பாலும் ஓடித்தான் இருக்கிறது போலும் :-)

மேலும் அழகாக, இறைவன் திருவருள் புரிதற்கு முன்னர் ஆழ்வார் தம்மை இல்லாத பொருளுக்குச் சமமாக நினைத்திருந்தார் ஆதலின் "எனக்குஅருளினன் என்கிலார். இத்தோடு எங்க ஊர்க்காரரான மாணிக்கவாசகப் பெருமான் சொல்லிய, "அவன் அருளால் அவன்தாள் வணங்கி" என்ற வாசகத்தை ஒப்பிடுக. அயர்வறும் அமரர்கள் - என்பது கேவலம் மரணமில்லாத அமரர்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது என்று சொல்லி, இறைவனுடன் ஒன்றி இருக்கும் பெரியவர்களுக்கு இவ்வனுபவம் தடைப்படுமானால் அப்பிரிவை தரியாதவர்கள் எனவே அப்பிரிவு ஏற்படா வண்ணம் என்றும் இறைத்தியானத்தில் இருப்பவர்கள் என்று பொருள் என்றுவிளக்கமளித்து,

ஸ்ரீராமாயணத்தில் அயோத்தியா காண்டத்திலிருந்து மேற்கோள்காட்டுகிறது ஈடு :
இராகவரே, உம்மைப் பிரிந்து பிராட்டி பிழைக்க மாட்டாள்,நானும் பிழைக்கமாட்டேன் என்பது இளையபெருமாள் (இலக்குவண்) திருவார்த்தை.இப்படிப்பட்ட அமரர்களுக்கு எப்படி அவன் அதிபதியாக இருப்பான் என்றால், "யானைக்குக் குதிரை வைத்து அவ்வருகாய் இருப்பான்" என்பதாம் என்கிறது உரை!அதாவது யானையின் வேகத்தைப் பரிட்சிப்பவர், குதிரையை முன் நடத்தி, யானையின் துதிக்கையாலே குதிரையைத் தொடும் படி கிட்டச் சென்று பின்னையும் தொடமாட்டாதே ஒழியச் செய்வது. அப்படியே நித்தியசூரிகட்கும் அப்பாற்பட்டவன் இறைவன் என்கிறதுஈடு. கதை இப்படி இருக்கும் போது தனி மனிதன் ஒருவன் தான் இறைவன் என்பதைநாம் எப்படி நம்புவது? அத்வைதத்தை இப்படியெல்லாம் பொருள் கொள்பவர் வரும்வரை!

சுடர் அடி - எல்லையற்ற ஒளி உருவமான இறைவன். பால் குடிக்கும் குழந்தைகள்,தம் தாயின் மார்பிலே வாய் வைக்குமாறு நம்மாழ்வாரும், உன் தேனே மலரும் திருப்பாதம் என்கிறார் என்று சொல்கிறது ஈடு. ஈடு படிப்பதில் உள்ள உரைநயங்களில் இதுவும் ஒன்று.

உயர்வு அற உயர்நலம் உயைவன் யவன்? அவன்
மயர்வு அற மதி நலம் அருளினன்;

மயர்வு அற மதி நலம் அருளினன் யவன்? அவன்
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி;

அயர்வு அறும் அமரர்கள் அதிபதி யவன்? அவன்
சுடரடி தொழுது எழு.

சுடர் அடி - எல்லையற்ற ஒளி உருவமான இறைவன்.

5 பின்னூட்டங்கள்:

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Saturday, December 23, 2006

//பாழ் என்பது எல்லையற்றது. பாழ் என்பது அனந்தம். பாழ் என்பது பரிபூரணம்.பாழ் என்பது சூன்யமல்ல//

எல்லாம் அற எனை இழந்த நலம்
சொல்லாய் முருக சுர பூபதியே

இழப்பு எப்படி நலமாகும்? அதே தான் இங்கும்! பாழும் நலமே!

அருமையான ஈடு விளக்கம் கண்ணன் சார்!

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Saturday, December 23, 2006

//மயர்வற மதிநலம்//

இந்த மதியைக் கொண்டு என்னென்னவோ செய்யலாம்! மதியால் விதியை வெல்லலாம் என்றும் சொல்லுவார்கள்!

அப்பேர்ப்பட்ட
மதியால் விஞ்ஞானம் சித்திக்கும்!
மயர்வற மதியால் மெய்ஞானம் சித்திக்கும்!!

அதனால் அன்றோ வெறுமனே மதி என்னாது மயர்வறு மதி என்கிறார்!

//தொழுது எழு என் மனனே//

துயர்அறு சுடர்அடி வீழ்ந்து தொழுத பின், எல்லாரும் எழுந்து நிற்பதையா ஆழ்வார் குறிக்கின்றார்?

தொழுத பின் எழுவது மனம்!
காற்றுள்ள பந்து எப்படி என்ன தான் நீரில் முக்கினாலும், மீண்டும் மீண்டும் மேலே எழுகின்றதோ, அதே போல் துயரறு சுடரடிச் சுவையை உணர்ந்து விட்ட மனம், எப்படியும் மேலே எழுந்து விடும்! விசையுறு பந்தினைப் போல் என்று பாரதி சொல்வானே அது போல மேலே எழும்!

அதையே தொழுது-எழு என்று தொடர்பு குறித்துப் பாடுகிறார்!

வினையேன் அடியேன், உனை
அழுதால் பெறலாம்!
தொழுதால் எழலாம்!!

  enRenRum-anbudan.BALA

Sunday, December 24, 2006

அற்புதமான விளக்கம், கண்ணன் சார், வாசித்தததில் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி !
எ.அ.பாலா

FYI,
http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv6.html
http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv5.html

  குமரன் (Kumaran)

Monday, January 29, 2007

எனக்கு மிகவும் பிடித்த பாசுரங்களில் ஒன்று கண்ணன் ஐயா இது. பெரியவர்களின் வியாக்கியானங்களைப் படிக்காத குறையைத் தங்களின் மடல்கள் தீர்க்கின்றன. இந்த முறை தமிழகம் செல்லும் போது வியாக்கியானங்களை வாங்கிவரவேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். எந்த புத்தகத்தை வாங்கலாம்? எங்கே கிடைக்கும்?

  நா.கண்ணன்

Monday, January 29, 2007

குமரன்: திருவாய்மொழி 'ஈடு' வியாக்கியானம் புருஷோத்தம நாயுடுவால் தமிழ்ப் படுத்தப்பட்டுள்ளது. 10 புத்தகங்கள். சென்னைப் பல்கலைக் கழக நூலகத்தில் வாங்கலாம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் புத்தகக் கடையில் புத்தகங்கள் கிடைக்கின்றன. 'சுதர்சனம்' கிருஷ்ணசுவாமி ஐயங்கார் பதிப்பு authentic.