e-mozi

மடல் 099: மானமிலாப் பன்றியாம் வாழ்வு !!

First published: Date: Fri, 09 Mar 2001 15:47:45 +0200

மனித ஜீனோம் (Human Genome) திட்டம் முடிவுற்ற நிலையில் - நிறத்தால்,மொழியால், எல்லைகளால் பிரிவுற்று நிரந்தர போர்ச்சூழலில் வாழும் மனித இனத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் நடந்திருக்கிறது!


சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர் செலவழித்து மனித மரபு மொழியைப் புரிந்து அது சொல்லும் சேதியைக் கேட்டறிய வேண்டும் என்று தோன்றியதற்கே (basic research) அமெரிக்காவைப் பாராட்ட வேண்டும். உண்மையை அறிந்து கொள்ள வேண்டுமென்ற அவா இன்னும் மனித மரபில் ஊறிக்கிடக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று. இத்தகைய தேடுதலில் எதிர்பார்க்காத பல சேதிகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்று விஞ்ஞானிகளுக்குத் தெரியும்.ஆனால் அரசியல்வாதிகளுக்கும், சனாதனிகளுக்கும், வலதுசாரிகளுக்கும், மற்றவர்களுக்கும் இது அதிர்ச்சியாக இருக்கலாம்.

ஆர்வ மிகுதியில் முதலில் மனித ஜீன்களின் எண்ணிக்கையை மிக அதிகமாக எதிர்பார்த்து இருக்கிறார்கள். கடைசியில் சுண்டெலியின் ஜீன்களும், மனித ஜீன்களும் எண்ணிக்கையில் ஒத்துப் போவது அதிசியம்தான். சுண்டெலியையும் மனிதனையும் பிரித்துக் காட்டுவது அவன் வளரும் சூழல், அவனது ஜீன்களின் மொழியைப் புரிந்து செயல்படும் புரத ஆக்கம் (Protein synthesis) இவைதான். சுண்டெலிக்கும் மனிதனுக்கும்தான் இத்தகைய உறவுப் பிணைப்பா என்றால் "இல்லை" என்றுதான் அறிவியல் சொல்கிறது. ஆரம்பத்தில் உருவான அமிபாவிற்கும், மனிதனுக்கும் கூட நெருக்கமான தொடர்பு உள்ளது. உலக உயிர்கள் அனைத்தும் ஏறக்குறைய 90 விழுக்காட்டிற்கு மேல் ஜீன் அமைப்பில் ஒத்துப் போகின்றன.

சட்டம் என்பது பொதுவாக இருக்க அதை சமயத்திற்கு ஏற்றவாறு அர்த்தம் கொண்டு வாதிடும் ஒரு வழக்கறிஞர் போல் ஒவ்வொரு உயிரினமும் ஜீன் மொழியை, சூழலின் தேவைக் கேற்றவாறு அர்த்தம் செய்து கொண்டு செயல்படுகிறது என்று இந்த ஆய்வு காட்டுகிறது. ஆரம்ப கட்டங்களில் அனைத்தையும் செயல்படுத்துவது ஜீன்கள்தான் என்று பல விஞ்ஞானிகள் சொல்லி வந்தார்கள். "சுய நல ஜீன்கள்" (Selfish genes) என்ற கோட்பாடு வலுவாக கேட்ட காலமுண்டு. எல்லாம் மரபணுவில் உள்ளதென்றால், அது நமது "குலக்கல்வியை" "வர்க்கப் பிரிவை" அதன் வக்கிரப் பார்வையில் அர்த்தப்படுத்துவதாகப் போய்விடும்.ஏன்? ஆரிய மேலாண்மை பேசிய ஹிட்லர் செய்தது கூட சரி என்பதாகிவிடும்!

ஆனால் ஜீனோம் செயல்பாடு முடிவில் காட்டிய செய்தி உன்னதமானது. மங்கோலிய, ஆப்பிரிக்க,ஐரோப்பிய, பூர்வ குடிகள் என்று வெளிப்படையாகத் தெரியும் மனித இனங்கள் கூடஅடிப்படையில் வேறுபட்டவை அல்ல என்று சொல்கிறது உயிரியல். தோற்றத்தில்தான் வேறுபாடு. இருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு! ஆயின் அடிப்படையில் நாமெல்லாம் சகோதரர்கள் என்பதுதான் உண்மை. ஹிட்லர் செய்தது, சமீபத்தில் இலங்கையில் நடப்பது, அமெரிக்க, ஆஸ்திரேலியக் கண்டங்களில் பூர்வ குடிகளுக்கு எதிராக ஐரோப்பியர்கள் செய்தது, காலம் காலமாக தலித்துகளுக்கு இந்தியர்கள் செய்து வருவது இவை மனித மடமையின் உச்சம் என்று வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது ஜீனோம் புரோஜக்ட்.

அடிப்படையில் அறிவு என்பது மனிதனுக்குப் பொதுவாகத்தான் உள்ளது. வாய்ப்பையும்,வசதியையும் பொருத்து அது விருத்தியாகி, முழு வளர்ச்சியடைகிறது. வயிற்றுக்குக் கஞ்சியில்லாமல் மண்ணாங்கட்டியை உண்ணும் புரதமற்ற குழந்தைக்கு கல்வி வரவில்லை,அது குலத்தின் நீட்சி என்று சொல்வது படு அயோக்கியத்தனம்.உண்மை இப்படியிருக்க உலகத்தை பெரும் மாயையில் அமுக்கி வைத்திருக்கின்றன ஆதிக்க சக்திகள். இந்தியாவில் மேல்சாதி மேலாண்மை நியாயப்படுத்தப் பட்டுள்ளது.உலகளவில் ஐரோப்பியர்களின் வெள்ளை மேலாண்மை கோலோச்சுகிறது. வெள்ளை மேலாண்மையை ஒத்துக் கொண்டு, கருப்பு நிறத்தை தாழ்வாகப் பார்க்கும் ஜப்பானியர்கள் கோடையில் கருத்துப் போய் தாய்லாந்து மக்கள் போல் ஆகிவிடுகின்றனர்! வெள்ளையர்களிடையே கோடை வெய்யிலில் கருத்துப் போதலும், மற்ற காலங்களில் செயற்கையாகவேனும் (சோனாபாத்) கருத்துப் போதலும் பாஷனாக உள்ளது. வாழும் சூழல் மனிதநிறத்தை, குணத்தை நிர்ணயிக்கிறது போலும்.

மற்ற ஐரோப்பியர்களிலிருந்து மொழியால்,பண்பாட்டால் வேறுபடும் பின்லாந்து மக்கள் ஆசிய பரம்பரையினர் என்று தோன்றுகிறது. இவர்களது பெயர்கள், மொழி, பூர்வ கதைகள் (கலேவலா) இவை தமிழுடன் ஒத்துப்போகின்றன. ஏன்? ஐரோப்பாவில் இவர்கள் ஒருவர்தான் தமிழன் போல் நீர் கொண்டு........ கழுவுகிறார்கள் :-)) (கீல் பல்கலைக் கழக சரித்திரப் பேராசிரியர் ஹெர்மான் குல்க வேடிக்கையாகச் சொல்வார், ஜெர்மானியர்கள் கூட பூர்வ இந்திய வம்சாவளியினர் என்று! -ஐரோப்பா வந்ததால் வெளிறிப் போய்விட்டனர் போலும்:-) இத்தாலியர்கள் கூட கொஞ்சம் கருத்து விட்டால் நம்ம ஊர் ராஜூக்கள் போல்தான் தோன்றுகின்றனர். செங்கிஸ்கான் விட்டுச் சென்றுள்ள ஜீன்கள் ஐரோப்பாவில் அவ்வப்போது வெளிச்சம் காட்டும்.

Nature versus nurture என்ற வாதம் டார்வின் காலத்திலிருந்து பேசப்படுவது. மனிதபரிணாம வளர்ச்சியில் இயற்கையின் பங்கு (மரபு ரீதியாக) எவ்வளவு, சூழலின் (nurture)பங்கு எவ்வளவு என்பது சூடான கேள்வி. மனித ஜீனோம் திட்டம் சூழலின் முக்கியத்துவத்தைசு ட்டுவதாக அமைந்துள்ளது வேடிக்கை!

பண்டைய தமிழகத்தில் இதுபற்றி ஒரு கேள்வி எழுப்பட்டு, பதில் கிடைத்திருக்கிறது.


கேள்வி:
செத்ததின் வயிற்றில் சின்னது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?
பதில்:
அத்தைத்தின்று அங்கே கிடக்கும்!(இது பற்றிய தத்துவார்த்தமான மடலைக் காண:மடல் 39 காண்க. அதாவது, முயற்சியும், சுயதேடலும் இல்லாத மனிதர்கள் தாங்கள் வாழும் சூழல்தான் உண்மை என்று நம்பி, அப்படி, இப்படி "அட்ஜெஸ்ட்" செய்து கொண்டு வாழ்ந்து விடுகின்றனர். இந்தியாவின் போக்குவரத்தைக் காணும் ஒவ்வொருவருக்கும் இது புரியும். ரோட்டில் இப்போது முகமூடிக் கொள்ளைக்காரன் போனால் கூட அடையாளம் தெரியாத வண்ணம் காவல் துறையினரிலிருந்து, கல்லூரி மாணவிவரை எண்லோரும் புகை நாற்றம் தாங்காது முகமூடி அணிந்துதான் ஓட்டுகின்றனர். கூவத்தின் நாற்றத்தில் கொசு கூட ஓடிப்போக நினைக்க அங்கேயே வாழ்ந்து, மணம் முடித்து, பிள்ளை பெற்று காலத்தை ஓட்டி விடுகின்றனர் மக்கள். "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்பது போல்! எந்தக் கேள்வியும் கேட்காது வாழ்ந்து முடித்து விடுகின்றனர்.

பன்றியாய் அவதாரம் எடுத்த பரந்தாமன் கூட மானமில்லாமல் அதையே ருசித்து வாழ்ந்ததாக ஆண்டாள் இடித்துக்காட்டுகிறாள்.

பாசிதூர்த்துக் கிடந்த பார்மகட்கு, பண்டொருநாள்
மாசுடம்பில் நீர் வார மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே
(நாச்சியார் திருமொழி 11-8)

இப்படி பரந்தாமன் பன்றி வாழ்க்கையை சுகித்து வாழ்ந்து வரும் போது ஈசன் ஈட்டியால் பன்றியின் முதுகில் குத்தி, "ஐயா பெருமாளே! நீர் முழுமுதற் கடவுள், இது கூடமறந்து, மானமில்லாமல் எப்படி பன்றி வாழ்க்கை வாழ்கிறீர்?" என்று கேட்டு ஞாபகப்படுத்தியதாக ஒரு கர்ண பரம்பரைக் கதையுண்டு. சூழலுக்கு அவ்வளவு வலு உண்டு! எல்லாம் நமக்கு பழகி விடுகிறது. நிறவாதம் பழகிவிடுகிறது, இனவாதம் பழகிவிடுகிறது, போர்ச்சூழல் கூட இலங்கையருக்கு பழகி விட்டது! சென்னை, மும்பை, கொல்கொத்தாவில் வாழும் சேரி மக்களுக்கு அந்த வாழ்வு பழகிப் போகிறது. அவர்கள் அதையே சுகிக்கும் படி அரசியலும், சாதீய மேலாண்மையும் பார்த்துக் கொள்கின்றன. சுய முயற்சி, சுயமரியாதை,சுய விழித்தல், வாய்மையின் தேடல் இவை இல்லாத மானுடம் சூழலின் கைதியாய்,கிடைப்பதை உண்டு, கிடைப்பதில் மகிழ்ந்து - "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்"என்பதுதான் வருத்தமான நடைமுறை.


6 பின்னூட்டங்கள்:

  Padma

Saturday, December 30, 2006

பிறிதொரு நாளில் விரிவாக இது குறித்துப் பேசுவோம். சிந்தனையை பல விதங்களிலும் தூண்டி இருக்கிறீர்கள்.

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Sunday, December 31, 2006

சூழலுக்கு வலு உண்டு என்று சொல்லும் நாம் அதே சமயத்தில் சூழலுக்கு ஏற்றாற் போல் மாறிக் கொள்கிறான் என்றும் இடித்துரைக்கிறோமே! அது ஏன் கண்ணன் சார்?

மனிதன் தன்னளவில் மாற்றம் விழைபவன் தானே? முதலில் உண்ண உணவு, பின்ன்ர் உடை, இடம், வாகனம், வசதி என்று ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டு தானே போகிறான்?

இந்தத் தேடுதல் எங்கோ ஒரு இடத்தில் மட்டும் நின்று போகிறது! அப்போது தான் அத்தைத் தின்று அங்கே கிடப்பவன் ஆகின்றான்!

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Sunday, December 31, 2006

மனித ஜீனோம் பற்றிய உங்கள் குறிப்பு புதிய செய்தி!

இனி என்னை யாரும் எலியே, நாயே என்று திட்டினால் கூட சரி சரி, மனிதன் என்று தான் சொல்கிறான் என்று எடுத்துக்கொண்டு போய் விடலாம் பாருங்கள் :-)

  நா.கண்ணன்

Sunday, December 31, 2006

தேடுதல் உள்ள மனிதனுக்கே வாழ்வில் பசி இருக்கும். உண்மைதான். ஆனால் பொது ஜன ஓட்டத்தில் இவர்களின் தொகை மிகக் குறைவு. பெரும்பாலோர் 'அத்தைத் தின்று அங்கே கிடக்கும்' என்றே வாழ்கின்றனர்.

ஒரு ஆச்சர்யமான அறிவியல் சோதனை உண்டு. அதில், இரண்டு அறைகள் கொண்ட ஒரு cage-ல் ஒரு நாயைப் பழக்கினர். ஒரு அறையில் மெல்லிய மின்சாரம் பாய்ந்து கொண்டே இருக்கும். மற்றதில் அது கிடையாது. நல்ல அறையில் வாழ்ந்த நாயை முதலில் மின்சார அறைக்கு மாற்றியவுடன் அது அசௌகர்யப்பட்டது. ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு அதுவே அதற்குப் பழகிவிட்டது. பின் அந்த அறையை விட்டு வர மறுத்தது.

இதுதான் சம்சாரிகளின் நிலை. ஜீவிதம் எத்தனை கஷ்டமானதாக இருந்தாலும், எத்தனை ஜென்மங்கள் ஆனாலும் இதிலேயே சுழல ஆயத்தமாக இருக்கிறார்களே தவிர, மோட்ச சாதனம் குறிந்த சிந்தனை வருவதில்லை. இதைத்தான் நம்மாழ்வார் குறிக்கிறார் என்று தோன்றுகிறது.

  ஜீவா (Jeeva Venkataraman)

Sunday, December 31, 2006

//இப்படி பரந்தாமன் பன்றி வாழ்க்கையை சுகித்து வாழ்ந்து வரும் போது ஈசன் ஈட்டியால் பன்றியின் முதுகில் குத்தி, "ஐயா பெருமாளே! நீர் முழுமுதற் கடவுள், இது கூடமறந்து, மானமில்லாமல் எப்படி பன்றி வாழ்க்கை வாழ்கிறீர்?" என்று கேட்டு ஞாபகப்படுத்தியதாக ஒரு கர்ண பரம்பரைக் கதையுண்டு. //
குத்திக்காட்ட ஒரு ஈசன் - அதுவும் Part of the design தானே - there is some part of the whole design that will go correct the irregularities - thus the whole system is self-correcting in nature!

இது வேறு அது வேறு என்று பகுதி பகுதியாய் பார்க்கும் நமக்குத்தான் இந்த குறைபாடெல்லாம் என்று நினைக்கிறேன்!

  நா.கண்ணன்

Sunday, December 31, 2006

ஜீவா:

Self-correcting mechanism என்பதை இராமகிருஷ்ண பரஹம்சர் ஒரு கதையில் சொல்லுவார். பரபிரம்மம், பல்வேறு வேடங்கள் போட சங்கல்பித்தது. தேர்ந்த நடிகனான அது, நடிப்பில் முழுவதும் மூழ்கி விடாதவாறு இருக்க 'ஞானம்' எனும் தன் பகுதியை காவலாக வைத்தது என்று சொல்லுவார். இதைத் தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி பிரதானப் படுத்தி 'Awakening of Intelligence' என்ற அற்புதமான புத்தகமாகச் செய்தார்.

அரியும் சிவனும் ஒண்ணு என்பது, அரியுள் சிவனும் ஒண்ணு எனும் ஆழ்வார்களின் formula மாற்றிச் சொல்லப்படுகிறதோ என்ற சம்சயம் வந்திருக்கிறது.