e-mozi

மடல் 093: உலகின் தோற்றமும், மழையுயிர் காத்தலும்

First published:Date: Sat, 18 Nov 2000 11:24:47 +0200

இம்மடலில் நீங்கள் காணும் பாசுரங்களைப் பார்த்தால் நம்மாழ்வார் ஏதோவொரு தெய்வத்தைப் பற்றி பேசுகிறார் என்பதை விட இவ்வண்டத்தின் தோற்றத்தையும், அதன் காத்தலையும், அதன் இயக்க நியதிகளையும் பற்றித்தான் பேசுகிறார் என்பது புரியும்.

இத்துணை செயல்களுக்கும் காரணமான ஒன்றைக்கண்டு கொண்ட ஆனந்தத்தில் அந்த ஒன்றை முதன்மைப் படுத்திப் பேசுவதுபுரியும். இதே ஆனந்தத்தை திருமூலத்திலும், வள்ளலாரின் பாடல்களிலும், பாரதியின் பாடல்களிலும் காணலாம்.

அன்றுமண் நீர் எரி கால்விண் மலைமுதல்,
அன்று சுடர் இரண் டும்பிற வும்பின்னும்
அன்று மழையுயிர் தேவும்மற் றும்அப்பன்
அன்று முதலுல கம்செய் ததுமே.
7.4.9அன்று, அன்று என்று நான்கு முறை சொல்கிறார். என்று? என்ற கேள்வி வருகிறது.

அதற்கு வேறொரு பாடலில் விடை தருகிறார்.

ஒன்றுந் தேவு முலகும் 
உயிரும் மற்றும் யாதுமில்லா
அன்று, நான்முகன் தன்னொடு
தேவ ருலகோ டுயிர்படைத்தான்,
குன்றம் போல்மணி மாடம்
நீடு திருக்குரு கூரதனுள்,
நின்ற ஆதிப்பி ரான்நிற்க
மற்றைத் தெய்வம் நாடுதிரே.
(2) 4.10.1


அதாவது, தேவர்கள், உலகம், உயிர் மற்றும் எதுவுமே இல்லாத காலத்தில் என்று சொல்கிறார். அன்று இந்த "ஒன்று" என்பது கூட இல்லையாம். கண்ணதாசன் சொல்லும் "பூஜ்யத்துக்குள்ளே நின்று இராஜியத்தை"ச் செய்வது இதுதான் போலும். விஞ்ஞானத்தாலும் தோற்றத்தின் சில நொடிகள் முன்பு வரைதான் இதுவரை சென்றிருக்க முடிகிறது. அந்த முதல் சில நொடிகள் இன்னும் ஆச்சர்யமான ஒன்றாகவே உள்ளது (கணையாழியில் நவீன இயற்பியலையும், மெய் ஞானத்தையும் ஒப்பிட்டு"பொருண்மையற்ற போழ்துகளில்" என்றொரு கதை எழுதியுள்ளேன். அது எனது"உதிர் இலை கால"த் தொகுப்பிலும் வந்துள்ளது. பல ஆச்சர்யமான ஒற்றுமைகள் இரண்டிற்கும் இடையில் உண்டு. இது உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை)"பெயர் வடிவங்களை இழந்து, "சத் ஒன்றே" இருந்தது என்கிற நிலையிலே, "பலபொருள் ஆகக் கடவேன் (பஹஸ்யாம் என்பது சாந்தோபநிஷத் 6.2:3)" என்று நினைத்த (சங்கல்பித்த) அன்று முதல்" என்று சொல்கிறது ஈடு.

எனவேதான் இறைவனை "முதல் வித்து" என்று மெய்ஞானிகள் சொல்கின்றனர். அவன்தான் காரணன். அவன் ஒருவனே.

தானோ ருருவே தனிவித்தாய்த்
தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும்
மற்றும் மற்றும் முற்றுமாய்
தானோர் பெருநீர் தன்னுள்ளே
தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மாமாயன்
வைகுந் தன்எ ம் பெருமானே.
1.5.4


இந்தத் தனி வித்திலிருந்து தெய்வங்களும், தேவர்களும் தோன்றுகின்றனர். படைத்தல், காத்தல், அழித்தல் போன்றவை செய்ய.அதாவது அண்டம் வெடித்த பின்னும் கிரகங்கள் தோன்றிக் கொண்டும், அழிந்து கொண்டும் இருப்பதை "ஹப்பில் வான் நோக்கி" படம் பிடித்துக் காட்டியுள்ளது. இதைத்தான் அவர்கள் உருவகப் படுத்திச் சொல்கின்றனர்.

காக்குமியல்வினன் கண்ணபெருமான்,
சேர்க்கைசெய்து தன்னுந்தியுள்ளே,
வாய்த்ததிசைமுக னிந்திரன்வானவர்,
ஆக்கினான் தெய்வவுலகுகளே.
2.2.9

எல்லாம் ஒன்றிலிருந்து வந்ததால் எல்லாச் செயல்களும் அவன் செயல்களாகவே ஆகின்றது. வேதியியல் சேர்க்கைகள் போல் இவனொரு சேர்க்கை செய்து மற்றவர்களைத் தோற்றுவித்தான் என்கிறார் நம்மாழ்வார்.

நாரணன்முழுவேழுலகுக்கும் நாதன்வேதமயன்,
காரணம்கிரிசை கருமமிவைமுதல்வனெந்தை,
சீரணங்கமரர்பிறர் பலரும்தொழுதேத்தநின்று,
வாரணத்தைமருப்பொசித்த பிரானென்மாதவனே
. 2.7.2

இவனே காரணம், கிரிசை மற்றும் கருமம் இவையெல்லாம். ஏழுலுகிற்கும், அதாவது பல்வேறு விண் மண்டலங்களுக்கும், இவனே நாதன். இவனைப்பற்றிப் பேசுவதால் வேதம் சிறப்புறுகிறது.

நம்மாழ்வார் ஒரு இயக்கத்தைப் பற்றிப் பேசுகிறார் என்பது கீழ்வரும் பாடல்களில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இது ஒழிவொன்றுமில்லாத ஒரு செயல் என்பதும், ஊழி தோறும் படைத்து, காத்து, கெடுத்து உழல்கின்ற செயல் என்றும் சுட்டுகிறார்.

ஒழிவொன்றில் லாதபல் ஊழிதோறூழி நிலாவ,போம்
வழியைத் தரும்நங்கள் வானவர் ஈசனை நிற்கப்போய்,
கழிய மிகநல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்,
இழியக் கருதியோர் மானிடம் பாடலென் னாவதே.
3.9.3

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும்
இடந்தும் கிடந்தும் நின்றும்,
கொண்ட கோலத் தொடுவீற்
றிருந்தும் மணங்கூடியும்,
கண்ட வாற்றால் தனக்கே
யுலகென நின்றான்தன்னை,
வண்தமிழ் நூற்க நோற்றேன்
அடியார்க் கின்பமாரியே
. 4.5.10


தானே உலகெலாம்
தானே படைத்திடந்து
தானே உண்டுமிழ்ந்து
தானே ஆள்வானே.
10.5.3

ஊழி முதல்வன் ஒருவனே என்னும்
ஒருவன் உலகெல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே
படைத்துக் காத்துக் கெடுத்துழலும்
ஆழி வண்ணன் என்னம்மான்
அந்தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே கைவிடேல்
உடலும் உயிரும் மங்கவொட்டே.
10.7.9


நாம் மண்ணில் வாழ்கிறோம். வாழ்வதே ஒரு அதிசயம். அதைப் பலர் காண்பதில்லை. மூச்சு விடுவது அதிசயம். மூட்டு சேர்ந்து நடை பயில்வது அதிசயம். மலர் மலர்வது அதிசயம். இசை செய்வது அதிசயம். இசை கேட்பது அதிசயம். இந்த அதிசயத்தைக் கண்ணுறும் போது மெய் சிலிர்க்காத உண்மையான விஞ்ஞானியும் இல்லை, மெய்ஞானியும் இல்லை. இதை நல்ல தமிழில் சொல்லச் செய்வதால், அவன் அடியார்க்கு இன்ப மழை என்கிறார் நம்மாழ்வார்.அவனே அகல் ஞாலம்படைத் திடந்தான்,
அவனே ய·அதுண் டுமிழ்ந்தான் அளந்தான்,
அவனே யவனும் அவனும் அவனும்,
அவனே மற்றெல்லா முமறிந் தனமே
. 9.3.2

இப்படி அவனே யவனும் அவனும் அவனும், அவனே மற்றெல்லாம் என்று அறிதல் ஒரு ஞானம். ஒரு தெளிவு. ஒரு காட்சி. ஒரு புரிதல். அதற்கு இட்டுச் செல்வதுதான் அறிவு. அதனால்தான் முதல் பாடலிலே நம்மாழ்வார் "மயர்வு அற்ற மதி நலத்தை" நல்கிய "அவனை"த் தொழுது ஏத்துகிறார்.Keywords: Origins, vedic perspective, wisdom of the east, creation, universe, myth, galaxy, milky way, vishnu, virat purusha, visvarupa, tiruvikrama, vamana

மடல் 094 - மேவி கற்பாருக்கான மாமருந்து

பிரபத்தி அல்லது இறைச் சரணம் என்பது மிக விசித்திரமான வகைகளில் நடக்கிறது. ஞானஸ்தர்களுக்கு பூர்வ ஜென்ம பலாபலனாக குழந்தைப்பருவத்திலே ஞானம் வந்து தங்களது வாழ்வை இறைச் சரணத்தில் கழிக்க முடிகிறது. நல்ல உதாரணங்கள் கர்த்தர் இயேசு, ஆதி சங்கரர், இரமண மகரிஷி, அருட்ஜோதி வள்ளலார் போன்றவர்கள். சிலருக்கு நல்ல கல்வி, கேள்வியின் பலனாக இறைச் சரணம் சித்திக்கிறது. இங்கு குரு அருள் முக்கிய பங்கு வகிக்கிறது. மாணிக்கவாசகருக்கு அம்பலத் தாண்டவன் அருள் புரிந்தான். ஸ்ரீஇராமானுஜருக்கு பல்வேறு குருவடிவில் இறைவன் பிரபத்தி செய்வித்தான்.

சில முரட்டு சுபாவம் கொண்டவர்களுக்கு அவர்கள் வழியில் இறைவன் ஆட்கொள்வது என்பதும் நடந்திருக்கிறது. வேல் கொண்டு போர் புரியும் திருமங்கையாருக்கு காட்டில் காட்சி கிடைக்கிறது. நமது சனாதன சம்பிரதாயத்தில் இறைமைக்கு இட்டு செல்லும் வழிகள் பல்வேறு பட்டவை. அது ஒரு திறந்த கதவு. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சொல்வதுபோல் பாதைகள் அற்ற திறந்த வெளி. அவரவர் மனோபாவத்திற்கு ஏற்றவாறு பிரபத்தி நடக்கிறது.தாமோதரனாக கண்ணனைக் காட்டினால் மென்மையான மனம் கொண்டவர்களுக்கு இதமாக இருக்கிறது. எல்லோருக்குமா விட்டு சித்தர் போல் தாய் மனம் வாய்க்கிறது? சிலருக்கு பயம் காட்டினால்தான் இறைவன் மேல் பற்று வருகிறது. அதாவது தனது பலம் அவனது பாராக்கிரமங்களுக்கு முன் தூசுக்குச் சமானம் என்று காட்டும் போது மனது நெகிழ்ந்து சரணமடைகிறது. அந்த வகையில்தான் திருவாய்மொழியின் ஏழாம் பத்தின் நான்காம் திருவந்தாதிப் பாசுரங்கள் அமைகின்றன.நம்மில் பலருக்கு உள்ளுள் உறைந்து விட்ட உயிரியல் பயம் என்பது பல நேரங்களில் இறைத் தரிசனத்தை எட்டவிடாமல் தடுத்துவிடுகின்றன. இந்த உயிரியல் சார்ந்த பயங்களைப் போக்குவதற்குத்தான் மந்திர உபாசனைகள் உதவுகின்றன. மிக நல்ல உதாரணமாக பல்கோடி தமிழர்களுக்கு உளமருந்தாக இன்றும் பயன்படுவது கந்தர் சஷ்டி. இந்த உத்தி வைணவ மறைகளிலும் காணக் கிடைக்கிறது. முன்பொரு மடலில் பெரியாழ்வாரின் "பட்டிணம் காப்பு"என்ற பாசுரங்களை விளக்கி அவை எவ்வாறு கந்தர் சஷ்டி போல் செயல் படுகிறது என்று காட்டினேன். இந்தப் பத்திற்கும் அத்தகைய உபயோகம் இருப்பதை ஈடுகாட்டுகிறது.
குன்றம் எடுத்த பிரான்அடி யாரொடும்,
ஒன்றிநின் றசட கோபன் உரைசெயல்,
நன்றி புனைந்த ஓராயிரத் துள்ளிவை
வென்றி தரும்பத்தும் மேவிக்கற் பார்க்கே. (2) 7.4.11"எம்பெருமானுடைய வெற்றிச் செயல்களைத் தொடுத்துச் சொன்ன இப்பத்தும் என்னுதல், மேவிக் கற்பாருக்கு வெற்றி தரும் -ஆசையோடு கற்பார் யாவர் சிலர், அவர்களுக்கு வெற்றியைப் பண்ணிக் கொடுக்கும். செல்வத்தை விரும்புகிறவனுக்குச் செல்வத்திற்கு தடையாகவுள்ளனவற்றை வென்று கொடுக்கும்; கேவலனுக்கு விரோதியைப் போக்கிக் கொடுக்கும்; பகவானைச் சரணம் அடைந்தவர்களில் உபாசகனுக்கு ஐம்புலன்களை வெல்லுதல் முதலியவற்றைச் செய்து கொடுக்கும்; பிரபந்நனுக்குக் கைங்கரிய விரோதிகளை வென்று கொடுக்கும்" என்று சொல்கிறது ஈடு.

ஈடு ஆசிரியர் கொடுக்கும் உதாரணங்கள் இரசிக்கத் தக்கவை. கல்வி, செல்வம், வீரம் இவைகளை முறையாகச் சொல்லி விட்டு, பக்தி செய்வாருக்குள்ள தடைகளையும் இது நீக்க வல்லது என்று சொல்வது இனிமை. உண்மையான வைணவருக்கு அடியார் தொண்டு அல்லது பகவத் கைங்கர்யம் என்பது உள மகிழ்வான ஒன்று. அதற்கும் சிலர் தடையாக இருப்பர் என்பது கண்கூடு. அதையும் இப்பாசுரங்கள் விலக்கும் என்று சொல்வது நயம்.

இப்பயம் போக்கும் மருந்தில் சந்த வலிமையைக் கூட்டுவது அதன் உச்சாடனத் திறனைக் கூட்டும் என்று தோன்றுகிறது. அருணகிரியின் திருப்புகழ், பால தேவராயரின் கந்தர் சஷ்டி இவைகளைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் நம்மையறியாமல் உள்ளே தைர்யம் கூடுவது கண்கூடு. அதே போன்ற ஒரு அருளை இப்பாசுரங்களும்தரும் என்பதை நீங்கள் உச்சாடனம் செய்து பார்த்தால் புரியும். உங்கள்வாசிப்பிற்காக ஏழாம் பத்தின் நான்காந்திருவாய்மொழி இதோ:1
ஆழி யெழச்சங்கும் வில்லு மெழ,திசை
வாழி யெழத்தண்டும் வாளு மெழ,அண்டம்
மோழை யெழமுடி பாத மெழ,அப்பன்
ஊழி யெழவுல கங்கொண்ட வாறே.(2)
ஆறு மலைக்கெதிர்ந் தோடு மொலி,அர
வூறு சுலாய்மலை தேய்க்கு மொலி,கடல்
மாறு சுழன்றழைக் கின்ற வொலி, அப்பன்
சாறு படவமு தங்கொண்ட நான்றே. 7.4.2(3)
நான்றில வேழ்மண்ணும் தானத்த, வே,பின்னும்
நான்றில வேழ்மலை தானத்த வே,பின்னும்
நான்றில வேழ்கடல் தானத்த வே,அப்பன்
ஊன்றி யிடந்தெயிற் றில்கொண்ட நாளே. 7.4.3(4)
நாளு மெழநில நீரு மெழவிண்ணும்
கோளு மெழேரி காலு மெழ,மலை
தாளு மெழச்சுடர் தானு மெழ,அப்பன்
ஊளி யெழவுல கமுண்ட வூணே. 7.4.4(5)
ஊணுடை மல்லர் ததர்ந்த வொலி,மன்னர்
ஆணுடை சேனை நடுங்கு மொலி,விண்ணுள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட வொலி,அப்பன்
காணுடைப் பாரதம் கையரைப் போழ்தே. 7.4.5(6)
போழ்து மெலிந்தபுன் செக்கரில்,வான்திசை
சூழு மெழுந்துதி ரப்புன லா,மலை
கீழ்து பிளந்தசிங் கமொத்த தால்,அப்பன்
ஆழ்துயர் செய்தசு ரரைக்கொல்லு மாறே. 7.4.6(7)
மாறு நிரைத்திரைக் கும்சரங் கள்,இன
நூறு பிணம்மலை போல்புர ள,கடல்
ஆறு மடுத்துதி ரப்புன லா,அப்பன்
நீறு படவிலங் கைசெற்ற நேரே. 7.4.7(8)
நேர்சரிந் தாங்கொடிக் கோழிகொண் டான்,பின்னும்
நேர்சரிந் தானெரி யுமன லோன்,பின்னும்
நேர்சரிந் தான்முக்கண் மூர்த்திகண் டீர்,அப்பன்
நேர்சரி வாணந்திண் டோள்கொண்ட அன்றே. 7.4.8(9)
அன்றுமண் நீரெரி கால்விண் மலைமுதல்,
அன்று சுடரிரண் டும்பிற வும்,பின்னும்
அன்று மழையுயிர் தேவும்மற் றும்,அப்பன்
அன்று முதலுல கம்செய் ததுமே. 7.4.9(10)
மேய்நிரை கீழ்புக மாபுர ள,சுனை
வாய்நிறை நீர்பிளி றிச்சொரி ய,இன
ஆநிரை பாடியங் கேயொடுங் க,அப்பன்
தீமழை காத்துக் குன்ற மெடுத்தானே. 7.4.10

Keywords: bravery of Lord Vishnu, Krishna, Narasimha, Varaha, creation myth, hindus, cataclysms, nammalvar, nalayira divya prabandam, dravida vedam

மடல்-095: அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் (1)

First published: Date: Fri, 24 Nov 2000 14:27:17 +0200

இந்தியப் பண்பாட்டின் தொன்மை ஆழங்காண முடியாதது. இதுவரை நாம் ஆங்கிலக் காலனித்துவ கணிப்பின் பிரகாரமே நமது இருப்பை, நமது தொன்மையை,நமது கெளவரவத்தைக் கணக்கிட்டு வந்திருக்கிறோம்.

"விட்டு விடுதலையாகி" நிற்கும் இவ்வுலகில் கணக்குகள் மாறத் தொடங்கியுள்ளன. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டார் என்று பாடம் படித்தால் அமெரிக்க இந்தியர்களுக்குக் கோபம் வருவது நியாயமானதே. எகிப்திய நாகரிகம் ஒரு கருப்பு நாகரிகம் என்று துணிந்து சொல்ல ஒரு கருப்பு அமெரிக்கனால் இன்று முடிகிறது. மாற்றி எழுதப்பட்ட பண்டைய சரித்திரம் மீள் பார்வைக்கு வரவேண்டிய காலமிது.

இங்கிலாந்தும் பிற ஐரோப்பிய நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு ஆசிய,ஆப்பிரிக்க நாடுகளை காலனிகளாக ஆக்கிக் கொண்டிருந்த போது அவர்களது செய்கைகளுக்கு துணை போகும் வண்ணமே ஆய்வுகள் செய்யப் பட்டன*. அந்தநோக்குடன் செய்யப் பட்ட ஆய்வில் இந்தியத் தொன்மையை குறைத்து கணக்கிட்டு இவர்களுக்கு கண் போல் உள்ள வேத, இதிகாசங்களை நாடோடிகளாய்த் திரிந்த ஆரியர்கள் இயற்றியது என்று கூறி இந்தியர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை விதைத்து, இந்தியர்களை திராவிடர்கள்-ஆரியர்கள் என்று பிரித்து மாளாக் குழப்பத்தை உருவாக்கி இறுதியில் நம்மை அடிமை கொண்டு ஆண்டு போயினர்.

அந்தக் குழப்பத்திலிருந்து நாம் மீண்டோமாவென்றால் இல்லை என்பதுதான் வருத்தமான பதில். நம் குழந்தைகள் 'பிளா, பிளா பிளாக் ஷிப்' பென்று ஆங்கிலக்காலனித் துரைகள் சொன்ன பாடத்தையே இன்றுவரை ஒப்பித்துக் கொண்டு, அதில் பெருமிதமும் அடைந்து கொண்டிருக்கிறோம். நம் சரித்திரம் நமக்குச் சரியாகத் தெரியாது. ஆனால் அமெரிக்க 'பாஸ்டன் தேநீர்' விருந்து பற்றித் தெரியும்.

மார்க்கோனி ரேடியோவைக் கண்டுபிடித்தார் என்று ஐரோப்பா சொன்னால் அதை அப்படியே இரஷ்யா ஒத்துக் கொள்வதில்லை. ரேடியோவைக் கண்டுபிடித்த ஒரு இரஷ்ய விஞ்ஞானியின் பெயர்தான் பாடத்திட்டத்தில் வருகிறது.இ து தேசிய நம்பிக்கை வளர்க்கும் விஷயம். ஐரோப்பாவில் ஒவ்வொரு குட்டிநாட்டிற்கும் தனித்தனி அடையாளங்கள் உள்ளன. அது இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியா போன்ற ஒரு உப கண்டத்தின் அடையாளத்தை ஒரு நூற்றாண்டுக்குள் அழித்து விட்டனர் வெள்ளையர்.

இப்படி ஐரோப்பிய பார்வையினால் உலகம் பார்க்கப் படுவதை எதிர்த்து குரல்கள் வரத் தொடங்கியுள்ளன. மருத்துவத்திலும், வான் இயலிலும் அரேபியர்கள் பல நூற்றாண்டு காலம் அனுபவம் பெற்றவர்கள். அந்தப் பார்வையில் இலண்டனில் ஒரு மாநாடு நடத்தப் பட்டது. அதை இஸ்லாமிய அறிவியல் என்றே அவர்கள் அழைத்தனர். இப்படி தங்களது வேர்களை மீள் பார்வை செய்வது மிகவும் அவசியமான ஒன்று.

பாரத சரித்திரம் நமது புராணங்களிலும், இதிகாசங்களிலும் மறைந்து கிடக்கிறது. அறிவியல் பார்வை என்று சொல்லி இவைகளை கட்டுக் கதைகள் எனக் கேலியாகப் பார்க்கும் ஒரு பார்வை இன்று நிலை பெற்றுப் போனது. ஆயின் சென்ற நூற்றாண்டின் உளவியல் ஆய்வுகள் தொன்மம் என்பது ஒரு சமூகத்தின் வரலாற்றை, அதன் அறிவியலை கனவு போல் பதிவு செய்யும் ஒரு உத்தி என்று சொல்கிறது. இதில் கற்பனைக்கு நிரம்ப இடமிருந்தாலும் இதன் அடிக்கோடாய் இருப்பது ஒரு உண்மை என்பதை ஆராய்தால் புரியும். சரித்திரம் நிலைப்பதை விட இக்கதைகள் என்றும் மக்கள் மனதில் நிற்கும். எனவே தொன்மம், ஐதீகம் என்பதை சரியாக வாசித்துப் பழக கற்க வேண்டுமென்கிறார் அமெரிக்க உளவியல் அறிஞரும், இந்தியவியலாளருமான ஜோசப் கேம்பல்."Myth is the secret opening through which the inexhaustible energies of the cosmos pour into human manifestation..." (Joseph Campbell, Hero with a Thousand Faces)


தொன்மங்கள் என்பவை ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு சமூகத்திலும் மண்டிக் கிடக்கின்றன. அதை ஆராயப் புகுந்தால் பல ஆச்சர்யமான உண்மைகள் வெளி வரும் என்பதை உலகம் கண்டுள்ளது. உதாரணம் எகிப்திய பிரமிடுகள், நோவாவின் கப்பல் போன்றவை. இந்த வகையில் இந்தியத் தொன்மங்களை ஆராய்ந்தால் பல உண்மைகள் வெளிவரும். இப்படிச் செய்வது பழம் பெருமை பேசுதல் அல்ல. மனிதன் அடிப்படையில் ஆராயும் உள்ளம் கொண்டவன். எனவே இன்றைய ஆய்வுகள் பண்டைய ஆய்வுகளிலிருந்து மிக வேறுபட்டவை அல்லது மிகச் சிறப்பு வாய்ந்தவை என்று மார் தட்ட முடியாது.

இன்றுவரை பிரமிடுகள் எப்படிக் கட்டப் பட்டன என்பது அதிசயமாக உள்ளது. தஞ்சைக் கோபுரம் ஒரு அதிசயம்தான். மருத்துவ வசதிகள் ஏதுமில்லாத அந்தக் காலத்தே மருத்துவம் இருந்திருக்கிறது. ஆனால் அது இன்று போல் பரவலாக்கப் படாமல் இருந்திருக்கலாம். சித்தர்களின் மருத்துவம் அந்த வகையைச் சார்ந்தது. வங்காளத்தில் கை நாடி பார்த்து ஒருவனின் இறக்கும் தருணத்தைக் கணிக்கும் ஒரு மருத்துவ முறை உள்ளது. இது என்ன வகை என்று நாம் கண்டு சொல்லும் முன்னமே அது மேலைத்திய அலோபதியின் முன் மடிந்து விடுகிறது. இது பரிதாபம்.

இந்தக் கண்ணோட்டத்தில் வைணவத்திலுள்ள அவதாரத் தொன்மங்களைக் கவனிப்போம்.19ம் நூற்றாண்டில் மேற்கத்திய உலகை உலுக்கிய ஒரு செய்தி கூர்தலியல் (பரிணாமம்)ஆகும். கிருத்துவ ரோம மரபில் வந்தவர்களால், மனிதன் கூர்தலின் ஒரு பரிமாணம் என்று ஒத்துக் கொள்ள முடியவில்லை. அந்தக் கோட்பாடு அன்றைய இந்தியாவை அடைந்த போது ஒரு சிறு அலையைக் கூட உருவாக்க வில்லை. காரணத்தை ஒரு இராமகிருஷ்ண மிஷன் சாது நியூயார்க்கில் விளக்குகிறார். காரணம் அவதாரங்கள் என்ற தொன்மங்களில் இக்கூர்தலியல் ஒளிந்து கொண்டிருப்பதால்!

தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய்
அரியாய்க் குறளாய் மூவுருவினிராமனாய்க் கண்ணனாய்க்
கற்கியாய் முடிப்பாங்கோயில்என்று


பேசுகிறது பெரியாழ்வார் திருமொழி.

திருமால் மீனாய், ஆமையாய், பன்றியாய், பறவையாய், நரசிங்கமாய், வாமனனாய், பரசுராமனாய், பலராமனாய், சக்கிரவர்த்தித் திருமகனாய், கண்ணனாய், பின் கல்கியாய் அவதாரமெடுப்பான் என்று சொல்கிறது நமது புராணம். இதில் அறிவியல் எங்கிருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

* The Myth of the Aryan Invasion of India By David Frawley -"The IndiaTimes".

மடல்-096: அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் (2)

First Publication: Date: Fri, 24 Nov 2000 17:25:18 +0200

பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி இன்றைய அறிவியலுடன் ஒத்துப் போகும் அளவிலான கருத்துக்களை தமிழ் மறைகள் கொண்டுள்ளன என முன்பு கண்டோம். பிரபஞ்சம் தோன்றி 15 பில்லியன் ஆண்டுகளுக்குப் பின் பூமியின் மேற்பகுதி இறுகத் தொடங்குகிறது (இது ஒரு பழைய கணக்கு. சமீபத்திய கணக்கின் படி பிரபஞ்சம் நாம் நினைக்கும் அளவிற்கு பழசல்ல என்பது.) இதைக் கவிதையில் சொல்வதானால்.....

ஒழிவொன்றில் லாதபல் ஊழிதோறூழி நிலாவ,.... 3.9.3

இப்படித் தோன்றிய பூமிப் பந்தில் ஒழிவொன்றில்லாமல் பல கோடி ஆண்டுகள் மழை பெய்து நாம் இன்று காணும் கடல்கள் உருவாகின்றன. அன்று

மழையுயிர் தேவும்மற் றும்அப்பன்அன்று முதலுல கம்செய் ததுமே. 7.4.9

மழைக்கும், உயிருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதை இரண்டு வகைகளில் உணரலாம். வள்ளுவன் சொன்னது போல் "நீரின்றி அமையாது உலகு". அதாவது நீரின்றி விவசாயம் நடக்காது, நீர் வற்றிப் போனால் மனிதன் தொண்டை வற்றிப்போய்ச் சாவான். இரண்டாவது அர்த்தம் நீர் இவ்வுலகில் உருவாகவில்லையெனில் உயிர்த் தோன்றலே நடந்திருக்காது (அதாவது, நமக்குத் தெரிந்த உலக உயிர்கள் :-) எவ்வாறெனினும் உயிருக்கும் நீருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.


இந்தப் பெருநீரிலே முதல் உயிர்கள் தோன்றுகின்றன. முதலில் உயிர்த் தோன்றலுக்குத் தேவையான அமினோ அமிலங்களாக, பின் ஒரு செல் உயிரிகளாக, பின் பல்செல் உயிரிகளாகப், பின் முதுகெலும்பற்ற நீர்வாழ் உயிர்களாக (invertebrates), பின் முதுகெலும்புகொண்ட நீர், நில வாழ் உயிர்களாக (vertebrates).

தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள்
கண்வளரும்வானோர் பெருமான் .....
1.5.4

இதைப் பிரதிபலிப்பது போல் அமைகிறது இத்திருவாய் மொழி. வானோர் பெருமான் என்பதை வானவரும் வணங்கும் பெருமான் என்றும் கொள்ளலாம், வானத்திலிருந்து உலகைப் படைத்த பெருமான் என்றும் கொள்ளலாம். ஆச்சர்யமான வகையில் கடவுள் எங்கிருக்கிறார் என்று எந்த மதத்தினரைக் கேட்டாலும் வானத்தைக் காட்டுவது இதனால்தான் போலும்!

நமது ஆரம்பம் விண்ணும், கடலும்தான்.ஆனால் இந்தக் கடற் தோற்றம் ரொம்பப் பேருக்குத் தெரிவதில்லை. நிலத்தில் உயிர்கள் வாழ்கின்றன அத்துடன் நமக்குப் பரிச்சியமுண்டு. கடலிலும் உயிர்கள் வாழ்கின்றன. அதுவும் பரிச்சியமானதே. ஆனால் நாம் கடலிலிருந்து வந்திருக்கமுடியும் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது. அதற்கு ஆராயும் மனம் வேண்டும். ஆய்வுகள் வேண்டும். Naked Ape (Desmond Morris) என்ற புத்தகம் மனிதன் நிலத்தில் தோன்றி பின் கடலுள் வாழ்ந்து பின் மீண்டும் நிலத்திற்கு வந்திருக்கலாம் என்கிறது. எத்தனையோ பாலூட்டிகள் நிலத்திலிருந்து கடலுக்குப் போய் இன்றளவும் கடலில் வாழ்ந்து வருகின்றன. உதாரணம் திமிங்கலம், பாம்பு. ஆனால் இது பின்னால் நடந்த நிகழ்வு.

முதலில் கடலில் தோன்றிய உயிர் மெல்ல, மெல்ல நிலத்திற்குப் பறவுகிறது. இதைப் பற்றி விரிவாக பின்னால் காண்போம். சார்லஸ் டார்வின் (1809-82) என்ற ஆங்கிலேயர் H.M.S Beagle (1831) என்ற கப்பலில் உலகத்தை சுற்றி வந்த போது உயிர்களுக்கிடையேயான தொடர்புகளைக் கண்டு கொண்டார்.அவை கூர்தலினால்(process of evolution) வளர்ச்சியுற்று, இயற்கைத் தேர்வு(natural selection) முறையில் பூரணமடைகின்றன என்று கண்டு சொன்னார். பரம கிருத்துவரான டார்வினால் இதை உடனடியாக வெளியிட முடியவில்லை. ஏனெனில் அது கிருத்துவ நம்பிக்கைக்கு எதிரானதாக அமைந்துவிடும் என்ற அச்சம். சுமார் 20 வருட யோசனைக்குப் பின் தனது "இனங்களின் தோற்றம்" (origin of species) என்ற புத்தகத்தை வெளியிடுகிறார். குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பதை ஏற்றுக் கொள்ளவியலாத அன்றைய எலிசபெத் அரசாங்கம் இவருக்கு பல தொல்லைகளைத்தருகிறது. இவரது காப்புநாய் (bulldog of Darwin) என்று தன்னை அழைத்துக் கொள்ளும் T.H.Huxley இக்கோட்பாடு நிலைபெற உதவுகிறார். இன்று அறிவியல் உலகு இதைப்பூரணமாக ஏற்றுக் கொண்டாலும், அமெரிக்காவில் இன்றளவும் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கின்றன.

இந்த கூர்தலியல் கோட்பாட்டின் படி மனித பரிணாமத்தின் படி நிலைகளாவன:மீன் (fish), நில-நீர்வாழ்ப் பிராணி(amphibians), பல்லி (reptiles), மூஞ்சூறு (small mammals), குரங்குகள் (great apes), மனிதன் (homo sapiens sapiens).


இப்போது பாசுரம் தரும் வரிசையைக்கவனிப்போம்:


தேவுடைய மீனமாய்
ஆமையாய் ஏனமாய்
அரியாய்க் குறளாய்
மூவுருவினிராமனாய்க்
கண்ணனாய்க்
கற்கியாய்
முடிப்பாங்கோயில்


முதலில் மீன்(fish), ஆமை(amphibious reptile), பன்றி (mammals), நர-சிங்கம்,(animal-human) குள்ளன் (early primates), பல் வேறு நிலைப் பட்ட மனிதன்(australopithecus, ramapithicus, peking man etc) என்பதே அது. இந்த வரிசை கற்பனையானதா? இல்லை ஏதோ உண்மையைக் கண்டுணர்ந்த பண்டைய இந்தியர்கள் உருவகப் படுத்திப் புனைந்த புராணங்களா?

எப்படியாயினும் உயிர்களுக்குள் சம்மந்தமுண்டு என்று கண்டு சொல்லும் அளவிலாவது இது கவனிக்கப் படவேண்டிய ஒன்றே. அதற்கும் மேலும் இறைமை என்பது படிநிலைகளில் எட்டக் கூடியது என்னும் ஒரு பேருண்மையைச் சுட்டுவதால் இதுவழக்கம் போல் மேலைத்தைய விஞ்ஞானம் கூறாத ஒரு செய்தியையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. விரிவாகப் பார்ப்போம்.
மடல் 097: அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் (3)

First Published: Date: Sat, 25 Nov 2000 15:42:39 +0200

அவதாரக் கோட்பாடு என்பது மிகத் தொன்மையான ஒரு இந்திய வழக்கு. தமிழின் முதற் சான்றுகளாக சங்கப் பாடல்களைச் சொல்லலாம். நற்றிணைக் கடவுள் வாழ்த்தில் திருமால் வேதத்தில் போற்றப் படும் பரம்பொருள் என்றும், அவர் உலகிற்குக் காரணப்பொருள் என்றும் அறிகிறோம். அகநானூற்றில் கிருஷ்ணாவதாரச் செய்தி ஒன்றும்,இராமாவதாரச் செய்தியொன்றும், பரசுராமாவதாரச் செய்தியொன்றும் வருகிறது. முதல் மூன்று ஆழ்வார்களின் பாடல்களில் கூர்மம், வராகம், நரசிம்மன், வாமனன்,இராமன், கண்ணன் அவதாரங்கள் இடம் பெறுகின்றன. பெரியாழ்வார் வாழ்ந்த எட்டாம் நூற்றாண்டிற்குள் இந்த அவதார வரிசை ஒரு ஒழுங்கிற்குள் வந்து விடுகிறது.

எனவே எப்படிப் பார்த்தாலும் இந்தியக் கூர்தலியச் சிந்தனை, ஆங்கிலச் சிந்தனையைவிட பல நூற்றாண்டுகள் முந்தியவை. எனவேதான், முதன் முதலாக ஐரோப்பாவை உலுக்கிய கூர்தலியச் செய்தி இந்தியா வந்த போது "கிணற்றுக்குள் போட்ட கல்" போல் சத்தமில்லாமல் இருந்தது :-)

சிலப்பதிகாரம் பேசும் ஒரு பாடலிலும் ஒரு செய்தி ஒளிந்து கொண்டுள்ளது. அதாவது,

வடவரையை மத்தாக்கி
வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாட்
கடற்வயிறு கலக்கினையே!


என்பது அது. இந்தக் கடல் வயிறு கலக்குதல் என்பது ஒரு ஆழமான தொன்மம். பல பொருள் கொண்டது. பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி தனது முனைவர் ஆய்வேட்டில் அது "உப்புக் காய்ச்சுவதை"க் குறிக்கலாம் என்கிறார். அல்லது கடல் என்பது உணவுக் களஞ்சியம் என்பதைச் சுட்டலாமென்றும் சொல்கிறார்.

கூர்தலியப் பார்வையில் உயிர்கள் தோன்றிய விதத்தைக் குறிப்பதோ இது என்றொரு சந்தேகம் இப்போது எழுகிறது. அதாவது முதல் உயிர்கள் தோன்றியகாலக் கட்டத்தில் கடல் என்பது வின் கற்களாலும், மின்னல், இடிகளாலும் தாக்கப் பட்டு கலங்கிய ஒரு நிலையில் இருந்திருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.Stanley L.Miller (1952) என்ற அமெரிக்க விஞ்ஞானி இத்தகைய ஒரு சூழலை ஆய்வகத்தில் உருவாக்கி சோதனை செய்ததில் உயிர் தோன்றுவதற்குத் தேவையான அமினோ அமிலங்கள் உருவாவதைக் கண்டார்! இப்படிக் கலங்கிய கடலின் அடிவயிற்றை விஞ்ஞானிகள் "hot soup" என்றுதான் சொல்கின்றனர்!!


ஆமையாய்க்
கங்கையாய்
ஆழ்கடலாய்
அவனியாய்
அருவரைகளாய்.......
தானுமானான்

என்ற பெரியாழ்வார் திருமொழி திருமாலைக் கங்கையாய், ஆழ்கடலாக வருணிப்பது இங்கு உற்று நோக்கத் தக்கது. இப்படியான ஒரு சூடான இரசித்திலிருந்து உயிர்கள் வேதிமச் சேர்க்கையால் உருவாகின்றன. இந்த வேதிமச் சேர்க்கைக்கு உயர் சக்தி தேவைப் படுகிறது. அதை இன்றைய பூமியால் தந்திருக்க முடியாது. ஏனெனில் இன்றைய பூமி மிகவும்குளிர்ந்து விட்டது. அன்று அவ்வாறில்லை. எரிமலைகளும், வின் கற்களும், இடியும், மின்னலும் சதா தாக்கிக் கொண்டிருந்தன. அமினோ அமிலங்கள் எரிமலை கக்கிய அமோனியா, கரியமில வாயு மற்றும் நைட்டிரஜன் இவைகளின் வேதிமச் சேர்க்கையால் உருவாகின்றன.

நம்மாழ்வார் என்ன சொல்கிறார்?

..........சேர்க்கை செய்து தன்னுந்தியுள்ளே,
ஆக்கினான் தெய்வவுலகுகளே.
2.2.9

இந்த "சேர்க்கை செய்து" என்ற பதம் உண்மையில் ஒரு வேதியியற் பதம். வேதிமற் சேர்க்கைகள்தான் உலகை இயக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த சேர்க்கைகளுக்குத் தேவையான சக்தியை அவை பஞ்சபூத பெளதீகத்தாற் பெருகின்றன. இப்படித்தான் உலகு உயிர் அவன் படைத்திருக்க வேண்டும் (அறிவியல் "படைப்பவன்" ஒருவன் வேண்டும் என்று எண்ணுவதில்லை. எல்லாம் தன்னிச்சையாக நடைபெறுகின்றன எனச் சொல்கிறது. அதுவேறு விஷயம்).

தேவவுலகு, தெய்வவுலகு என்பவை என்ன என்று பின்னால் சிந்திக்கலாம். முதலில் உயிர் கொண்ட பூவுலகு தோன்றியதைப்பார்ப்போம்.

கடல் வயிறு கலக்கிய புராணத்தில் வேறொரு செய்தியும் உண்டென்று படுகிறது. அதுதான் இந்த "ஆலகால விஷம்". அது என்ன ஆலகால விஷம்? அது புறப்பட்டு உயிர்களை அழித்துக் கொண்டு தேவர்களை விரட்ட அவர்கள் சிவனிடம் தஞ்சம் புக அவர் அதை உண்டு "நீல கண்டனாக"....

இந்த ஆலகால விஷம் என்பது இன்று உயிர் வளி என்று நம்பப்படும் "ஆக்ஸிஜன்" தான்!

ஆச்சர்யமாக இருக்கிறதா? முதல் உயிர்கள் தோன்றி பாக்டீரியாக்களும் பிறவும் கலக்கிய கடலைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் சூரிய ஒளியை வேதிமச் சேர்க்கையால் சக்கரையாக்கும் வித்தையை (ஒளிச்சேர்க்கை) சில உயிரனங்கள் (phyto-planktons) கற்றுக் கொள்கின்றன. இப்படியான ஒளிச்சேர்க்கையின் பக்க விளைவுதான் இந்த உயிர்வளி. இந்த உயிர்வளி ஒரு காலக் கட்டத்தில் இந்த உலகை பயமுறுத்தியது. ஏனெனில் முதலில் தோன்றிய உயிர்களுக்கு உயிர்வளியைப் பயன்படுத்தும் தேவை இல்லாததால் அதுவே நஞ்சாகப்போனது. உலகு முழுவதும் பரந்திருந்த உயிர்வளியைப் பயன்படுத்தி வாழும் தன்மையை பின்னர் உயிர்கள் பெறுகின்றன. அதற்கேற்ற ஒரு உயிர்வேதியியல் (biochemistry) உருவாகிறது. அப்போது உயிர்கள் "வாழ" இந்த வளி முக்கியமானதாகப் போய்விடுகிறது. இதுதான் சிவபெருமான் உலகைக் காத்த கதைக்கான அறிவியல் வாசிப்பு.

என்ன இப்படிச் சிந்தனை போகிறது என்ன எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் தொன்மங்களுள் புதைந்துள்ள உண்மைகள் மெதுவாகத்தான் தெரிய வருகின்றன. 1998ம் ஆண்டு பிப்ரவரி 20 தேதியிட்ட Science நோவாவின் கப்பல் (Noah's arc) புனைவு அல்ல என்று சொல்கிறது! மத்தியதரைக் கடல், போஸ்போரஸ் வழியாக உடைத்துக் கொண்டு கருங்கடலுள் உட்புகுந்த போது 200 நயாக்கரா நீர்வீழ்ச்சிகளின் அளவான தண்ணீர் 500 கிலோ மீட்டர் வட்டத்திற்குள் கேட்கும் வண்ணம் பெரும் சத்தத்துடன் உட்புகுந்து இருக்கிறது.

இது கிளப்பிய அழிவில் வெளியேறிய பண்டைய மக்கள் மெசபடோமிய,சுமேரிய நாடுகளுக்கு 7500 ஆண்டுகளுக்குமுன் வந்து குடியேறிய போது இக்கதைகளைக் கொண்டு வந்து அதுவே பின் நோவாவின் கப்பல் தொன்மமாக உருவெடுத்திருக்க வேண்டும்என்று Wiiliam Ryan, மற்றும் Walter Pitman என்ற ஆய்வாளர்களின் கருங்கடல் ஆய்வுசுட்டுகிறது. இதே நிகழ்வுதான் மச்சாவதாரத்திற்கும் ஆதாரமாக இருக்கவேண்டும். அதைப்பின்னால் பார்ப்போம்.The Black Sea with the former freshwater lake elevation (-350 feet) shown as a dotted line inside of the present sea level. Rivers flowed into the former freshwater lake from the north. The overflow of the Mediterranean Sea through the Bosporus Strait is believed to have initiated the flood which some uniformitarians believe to be the Flood of Genesis. Modified from Ross and Degens.எனவே தொன்மங்கள் என்பவை பண்டைய நாட்களில் நிகழ்ந்த நிகழ்வுகளை ஆழ்மனப்பதிவுகளாக எடுத்தியம்பும் கனவுடை உத்தி என்று புரிகிறது. இதற்கு அடுத்த ஒரு நிலையில்இந்திய மெஞ்ஞானிகள் காலம் தோன்றிய காலம் அளவிற்குச் சென்று சில உண்மைகளைப் பகர்ந்துள்ளனர் என்று நம்புவதற்கு வாய்ப்புள்ளது. விஞ்ஞானி, தான் காணும் உலகிலிருந்து தனது அனுமானங்களை எடுத்துக் கோட்பாடுகளை உருவாக்கி, பின் அதைச் சோதனைகள் செய்து மெய்ப்பிக்கிறான். இது போன்ற கோட்பாடுகள்தான் இந்திய மெஞ்ஞானிகளின் தொன்மங்களும் என்று நம்ப வாய்ப்புள்ளது. இல்லையெனில் பல விஷயங்கள் அவ்வளவுகன கச்சிதமாக இன்றைய ஆய்வு முடிவுகளுடன் பொருந்துவானேன்? (முன்னைய மடல்களைக்காண்க)

இது ஒரு திறந்த கேள்வி. ஒரு முற்று முடிவன்று. சிந்தனைக்கு ஒரு விருந்து அவ்வளவே. இத்தகைய நூல்கள் பல ஆங்கிலத்தில் வந்துள்ளன. நம் தொன்மங்களை மீள்பார்வை செய்ய இப்போது நல்ல தருணம்.

மடல் 098: மச்சாவதாரமும், கருங்கடல் பெருக்கும்

First published: Sat, 25 Nov 2000 21:59:38 +0200

திருமாலின் பத்து அவதாரங்களில், முதல் அவதாரம் மீன் அல்லது மச்ச அவதாரம்.மனு என்னும் அரசன் நதியில் நீராடும் போது ஒது மீன் அவன் கையில் அகப்பட்டதாம்.அவன் அதை மீண்டும் நீரில் விட எத்தனிக்க, மீன் அவனிடம் அபயம் கேட்டதாம்.நல்ல அரசனான மனு அதை ஒரு கலத்தில் போட, மீன் அதைவிட வளர, அவன் அதைக்குளத்திற்கு மாற்ற-அது அதைவிட வளர, அவன் நதிக்கு மாற்ற அதுவும் போதாமல் அதுவளர அவன் இறுதியில் இது தெய்வ மீன் என்று உணர்ந்து தஞ்சம் புக. மீன் வடிவில் இருந்த இறைவன் வரப்போகும் நீர்ப்பெருக்கைப் பற்றி எச்சரித்து ஒரு பெரிய கப்பல் செய்யுமாறு ஆணையிட்டு அதில் வகைக்கு ஒன்றாக தாவரங்கள், விலங்குகள் இவைகளை சேகரித்து காத்திருக்குமாறு சொல்ல, அவனும் அதுபடி செய்தான். கொஞ்ச நாளில் வெள்ளம் பெருகி ஓட, மீன் சொன்ன படி வந்து கப்பலை தள்ளிக் கொண்டு உயர்வான ஒருமலைக்கு இட்டுச் சென்று உயிர்களைக் காத்ததாம். இதுதான் மச்சாவதாரத்தின் கதை.
இக்கதை எவ்வளவு தூரம் விவிலியக் கதையுடன் ஒத்துப் போகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். அங்கு நோவா, இங்கு மனு. அங்கும் கப்பல், இங்கும் கப்பல். அங்கும் தாவர, விலங்குகள், இங்கும் அதே. ஒரே வெள்ளப் பெருக்கு!! எப்படி இவ்வளவு பொருத்தம்?

வெவ்வேறு நாடுகளில் இக்கதைகள் உலவினாலும் அதன் ஆக்கம் எங்கோ ஓரிடத்தில் நடந்திருப்பது தெரிகிறது. அது கருங்கடல் பகுதிகளான ஆசியா மைனரில் நடந்திக்க வாய்ப்பிருப்பதாக கடலியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இன்றைய கருங்கடல் சுமார் 7000-9000ஆண்டுகளுக்கு முன் ஒரு பெரிய ஏரி. மத்தியதரைக் கடலுக்கும், கருங்கடலுக்கும் அன்று தொடர்பு கிடையாது, ஏனெனில் மத்திய தரைக்கடல் இதைவிட தாழ்ந்தபகுதியில், குறைந்தளவே நீர் கொண்டு இருந்திருக்கிறது. ஆயின் இரண்டாம் பனிக்காலத்தில் உலகின் தட்ப வெப்பம் மாற, துருவப் பனி உருகி கடல் நீரின் அளவு அதிகமாகத் தொடங்கியது. அக்காலக் கட்டத்தில் தான் போஸ்போரஸ் வழியாககடல் உடைத்துக் கொண்டு 50 கியூபிக் கிலோ மீட்டர் கடற் தண்ணீர் உட்புகுந்து அன்றையக் கருங்கடலை நாளுக்கு சுமார் 15 செ.மீட்டர் உயரும் அளவிற்கு பெரிதாக்கி விட்டிருக்கிறது. (Science Vol.279, pp.1132, 1998)

இப்படியானதொரு நிகழ்வு அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு எத்தகைய பாதிப்புகளை நிகழ்த்தியிருக்கும் என்று ஊகிக்கலாம். குய்யோ, முறையோ என்று பல்வேறு திக்கும் ஓடிவந்த மக்களில் ஒரு பிரிவினர் அன்றைய மெசபடோமிய நாட்டில்குடி புகுந்திருக்கலாம். அவர்கள் வழியாக இச்செய்தி பண்டைய சுமேரிய வெள்ளப்பெருக்கு தொன்மமாகி பின் நோவா கப்பல் தொன்மமாகவும், மச்சவதாரத் தொன்மமாகவும் மாறியிருக்க வேண்டும். பண்டைய சுமேரியாவிற்கும், தமிழ் நாட்டிற்குமான தொடர்புகளை முனைவர் லோகநாதன் மொழியியல் வாயிலாக நிறுவ முனைகிறார். அத்தொடர்பு ஊர்ஜிதப் படும் போது இத்தொன்மங்களின் தொடர்பு நன்கு விளங்கும்.

வானோரளவும் முதுமுந்நீர் வளர்ந்த காலம்,
வலியுருவில்மீனாய் வந்து வியந்துய்யக்
கொண்ட கண்டா மரைக்கண்ணன்

என்று இக்கதையை பாசுரமாக வடிக்கிறார் திருமங்கை மன்னன் (பெரிய திருமொழி).வான் உயரத்திற்கு முது நீர் (அதாவது கடல் நீர்), முன்பு வந்த போது இழுக்கக் கூடியமீனாய் மக்கள் வியந்து உய்யுமாறு கொண்டவன் தாமரைக் கண்ணுடைய கண்ணன் என்பது அவரது வர்ணனை.


Matsya-Avataar Yantraகுன்றில்நின்று வானிருந்து நீள்கடல்கி டந்து,
மண்ஒன்றுசென்ற தொன்றையுண்ட தொன்றிடந்து
பன்றியாய்,நன்றுசென்ற நாளவற்றுள் நல்லுயிர்ப டைத்தவர்க்கு,
அன்றுதேவ மைத்தளித்த ஆதிதேவ னல்லயே?


என்கிறார் திருமழிசைப்பிரான் (திருச்சந்த விருத்தம்)

நன்று சென்ற நாள் அவற்றுள் நல்லுயிர் படைத்து, பின் நீள் கடல் கிடந்து பல்வேறுஅவதாரங்கள் எடுத்த ஆதிதேவன் திருமால் என்கிறார். தொடர்ந்து இவர்கள் ஒருதொடர்ச்சி பற்றிப் பேசுவது ஆய்விற்கு ஒத்தாசையாக இருக்கிறது. பரிணாமயியலிலும்ஒரு தொடர்ச்சி இருக்கிறது அவதாரத் தொன்மங்களிலும் ஒரு தொடர்ச்சி இருக்கிறது.இரண்டும் உயிர்களின் தோற்றம் பற்றி, அவை இன்றுள்ள நிலைக்கு வருவதற்கு முன்னுள்ள கூர்தல் பற்றிப் பேசுகின்றன.

தொன்மங்களுள் சரித்திர பூர்வமான ஒரு செய்தி இருக்கலாம், இல்லை ஒருகோட்பாடு இருக்கலாம். அதைக் கண்டு சொல்வது வல்லவர் கடன்..