e-mozi

மடல்-095: அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் (1)

First published: Date: Fri, 24 Nov 2000 14:27:17 +0200

இந்தியப் பண்பாட்டின் தொன்மை ஆழங்காண முடியாதது. இதுவரை நாம் ஆங்கிலக் காலனித்துவ கணிப்பின் பிரகாரமே நமது இருப்பை, நமது தொன்மையை,நமது கெளவரவத்தைக் கணக்கிட்டு வந்திருக்கிறோம்.

"விட்டு விடுதலையாகி" நிற்கும் இவ்வுலகில் கணக்குகள் மாறத் தொடங்கியுள்ளன. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டார் என்று பாடம் படித்தால் அமெரிக்க இந்தியர்களுக்குக் கோபம் வருவது நியாயமானதே. எகிப்திய நாகரிகம் ஒரு கருப்பு நாகரிகம் என்று துணிந்து சொல்ல ஒரு கருப்பு அமெரிக்கனால் இன்று முடிகிறது. மாற்றி எழுதப்பட்ட பண்டைய சரித்திரம் மீள் பார்வைக்கு வரவேண்டிய காலமிது.

இங்கிலாந்தும் பிற ஐரோப்பிய நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு ஆசிய,ஆப்பிரிக்க நாடுகளை காலனிகளாக ஆக்கிக் கொண்டிருந்த போது அவர்களது செய்கைகளுக்கு துணை போகும் வண்ணமே ஆய்வுகள் செய்யப் பட்டன*. அந்தநோக்குடன் செய்யப் பட்ட ஆய்வில் இந்தியத் தொன்மையை குறைத்து கணக்கிட்டு இவர்களுக்கு கண் போல் உள்ள வேத, இதிகாசங்களை நாடோடிகளாய்த் திரிந்த ஆரியர்கள் இயற்றியது என்று கூறி இந்தியர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை விதைத்து, இந்தியர்களை திராவிடர்கள்-ஆரியர்கள் என்று பிரித்து மாளாக் குழப்பத்தை உருவாக்கி இறுதியில் நம்மை அடிமை கொண்டு ஆண்டு போயினர்.

அந்தக் குழப்பத்திலிருந்து நாம் மீண்டோமாவென்றால் இல்லை என்பதுதான் வருத்தமான பதில். நம் குழந்தைகள் 'பிளா, பிளா பிளாக் ஷிப்' பென்று ஆங்கிலக்காலனித் துரைகள் சொன்ன பாடத்தையே இன்றுவரை ஒப்பித்துக் கொண்டு, அதில் பெருமிதமும் அடைந்து கொண்டிருக்கிறோம். நம் சரித்திரம் நமக்குச் சரியாகத் தெரியாது. ஆனால் அமெரிக்க 'பாஸ்டன் தேநீர்' விருந்து பற்றித் தெரியும்.

மார்க்கோனி ரேடியோவைக் கண்டுபிடித்தார் என்று ஐரோப்பா சொன்னால் அதை அப்படியே இரஷ்யா ஒத்துக் கொள்வதில்லை. ரேடியோவைக் கண்டுபிடித்த ஒரு இரஷ்ய விஞ்ஞானியின் பெயர்தான் பாடத்திட்டத்தில் வருகிறது.இ து தேசிய நம்பிக்கை வளர்க்கும் விஷயம். ஐரோப்பாவில் ஒவ்வொரு குட்டிநாட்டிற்கும் தனித்தனி அடையாளங்கள் உள்ளன. அது இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியா போன்ற ஒரு உப கண்டத்தின் அடையாளத்தை ஒரு நூற்றாண்டுக்குள் அழித்து விட்டனர் வெள்ளையர்.

இப்படி ஐரோப்பிய பார்வையினால் உலகம் பார்க்கப் படுவதை எதிர்த்து குரல்கள் வரத் தொடங்கியுள்ளன. மருத்துவத்திலும், வான் இயலிலும் அரேபியர்கள் பல நூற்றாண்டு காலம் அனுபவம் பெற்றவர்கள். அந்தப் பார்வையில் இலண்டனில் ஒரு மாநாடு நடத்தப் பட்டது. அதை இஸ்லாமிய அறிவியல் என்றே அவர்கள் அழைத்தனர். இப்படி தங்களது வேர்களை மீள் பார்வை செய்வது மிகவும் அவசியமான ஒன்று.

பாரத சரித்திரம் நமது புராணங்களிலும், இதிகாசங்களிலும் மறைந்து கிடக்கிறது. அறிவியல் பார்வை என்று சொல்லி இவைகளை கட்டுக் கதைகள் எனக் கேலியாகப் பார்க்கும் ஒரு பார்வை இன்று நிலை பெற்றுப் போனது. ஆயின் சென்ற நூற்றாண்டின் உளவியல் ஆய்வுகள் தொன்மம் என்பது ஒரு சமூகத்தின் வரலாற்றை, அதன் அறிவியலை கனவு போல் பதிவு செய்யும் ஒரு உத்தி என்று சொல்கிறது. இதில் கற்பனைக்கு நிரம்ப இடமிருந்தாலும் இதன் அடிக்கோடாய் இருப்பது ஒரு உண்மை என்பதை ஆராய்தால் புரியும். சரித்திரம் நிலைப்பதை விட இக்கதைகள் என்றும் மக்கள் மனதில் நிற்கும். எனவே தொன்மம், ஐதீகம் என்பதை சரியாக வாசித்துப் பழக கற்க வேண்டுமென்கிறார் அமெரிக்க உளவியல் அறிஞரும், இந்தியவியலாளருமான ஜோசப் கேம்பல்."Myth is the secret opening through which the inexhaustible energies of the cosmos pour into human manifestation..." (Joseph Campbell, Hero with a Thousand Faces)


தொன்மங்கள் என்பவை ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு சமூகத்திலும் மண்டிக் கிடக்கின்றன. அதை ஆராயப் புகுந்தால் பல ஆச்சர்யமான உண்மைகள் வெளி வரும் என்பதை உலகம் கண்டுள்ளது. உதாரணம் எகிப்திய பிரமிடுகள், நோவாவின் கப்பல் போன்றவை. இந்த வகையில் இந்தியத் தொன்மங்களை ஆராய்ந்தால் பல உண்மைகள் வெளிவரும். இப்படிச் செய்வது பழம் பெருமை பேசுதல் அல்ல. மனிதன் அடிப்படையில் ஆராயும் உள்ளம் கொண்டவன். எனவே இன்றைய ஆய்வுகள் பண்டைய ஆய்வுகளிலிருந்து மிக வேறுபட்டவை அல்லது மிகச் சிறப்பு வாய்ந்தவை என்று மார் தட்ட முடியாது.

இன்றுவரை பிரமிடுகள் எப்படிக் கட்டப் பட்டன என்பது அதிசயமாக உள்ளது. தஞ்சைக் கோபுரம் ஒரு அதிசயம்தான். மருத்துவ வசதிகள் ஏதுமில்லாத அந்தக் காலத்தே மருத்துவம் இருந்திருக்கிறது. ஆனால் அது இன்று போல் பரவலாக்கப் படாமல் இருந்திருக்கலாம். சித்தர்களின் மருத்துவம் அந்த வகையைச் சார்ந்தது. வங்காளத்தில் கை நாடி பார்த்து ஒருவனின் இறக்கும் தருணத்தைக் கணிக்கும் ஒரு மருத்துவ முறை உள்ளது. இது என்ன வகை என்று நாம் கண்டு சொல்லும் முன்னமே அது மேலைத்திய அலோபதியின் முன் மடிந்து விடுகிறது. இது பரிதாபம்.

இந்தக் கண்ணோட்டத்தில் வைணவத்திலுள்ள அவதாரத் தொன்மங்களைக் கவனிப்போம்.19ம் நூற்றாண்டில் மேற்கத்திய உலகை உலுக்கிய ஒரு செய்தி கூர்தலியல் (பரிணாமம்)ஆகும். கிருத்துவ ரோம மரபில் வந்தவர்களால், மனிதன் கூர்தலின் ஒரு பரிமாணம் என்று ஒத்துக் கொள்ள முடியவில்லை. அந்தக் கோட்பாடு அன்றைய இந்தியாவை அடைந்த போது ஒரு சிறு அலையைக் கூட உருவாக்க வில்லை. காரணத்தை ஒரு இராமகிருஷ்ண மிஷன் சாது நியூயார்க்கில் விளக்குகிறார். காரணம் அவதாரங்கள் என்ற தொன்மங்களில் இக்கூர்தலியல் ஒளிந்து கொண்டிருப்பதால்!

தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய்
அரியாய்க் குறளாய் மூவுருவினிராமனாய்க் கண்ணனாய்க்
கற்கியாய் முடிப்பாங்கோயில்என்று


பேசுகிறது பெரியாழ்வார் திருமொழி.

திருமால் மீனாய், ஆமையாய், பன்றியாய், பறவையாய், நரசிங்கமாய், வாமனனாய், பரசுராமனாய், பலராமனாய், சக்கிரவர்த்தித் திருமகனாய், கண்ணனாய், பின் கல்கியாய் அவதாரமெடுப்பான் என்று சொல்கிறது நமது புராணம். இதில் அறிவியல் எங்கிருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

* The Myth of the Aryan Invasion of India By David Frawley -"The IndiaTimes".

0 பின்னூட்டங்கள்: