e-mozi

மடல்-096: அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் (2)

First Publication: Date: Fri, 24 Nov 2000 17:25:18 +0200

பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி இன்றைய அறிவியலுடன் ஒத்துப் போகும் அளவிலான கருத்துக்களை தமிழ் மறைகள் கொண்டுள்ளன என முன்பு கண்டோம். பிரபஞ்சம் தோன்றி 15 பில்லியன் ஆண்டுகளுக்குப் பின் பூமியின் மேற்பகுதி இறுகத் தொடங்குகிறது (இது ஒரு பழைய கணக்கு. சமீபத்திய கணக்கின் படி பிரபஞ்சம் நாம் நினைக்கும் அளவிற்கு பழசல்ல என்பது.) இதைக் கவிதையில் சொல்வதானால்.....

ஒழிவொன்றில் லாதபல் ஊழிதோறூழி நிலாவ,.... 3.9.3

இப்படித் தோன்றிய பூமிப் பந்தில் ஒழிவொன்றில்லாமல் பல கோடி ஆண்டுகள் மழை பெய்து நாம் இன்று காணும் கடல்கள் உருவாகின்றன. அன்று

மழையுயிர் தேவும்மற் றும்அப்பன்அன்று முதலுல கம்செய் ததுமே. 7.4.9

மழைக்கும், உயிருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதை இரண்டு வகைகளில் உணரலாம். வள்ளுவன் சொன்னது போல் "நீரின்றி அமையாது உலகு". அதாவது நீரின்றி விவசாயம் நடக்காது, நீர் வற்றிப் போனால் மனிதன் தொண்டை வற்றிப்போய்ச் சாவான். இரண்டாவது அர்த்தம் நீர் இவ்வுலகில் உருவாகவில்லையெனில் உயிர்த் தோன்றலே நடந்திருக்காது (அதாவது, நமக்குத் தெரிந்த உலக உயிர்கள் :-) எவ்வாறெனினும் உயிருக்கும் நீருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.


இந்தப் பெருநீரிலே முதல் உயிர்கள் தோன்றுகின்றன. முதலில் உயிர்த் தோன்றலுக்குத் தேவையான அமினோ அமிலங்களாக, பின் ஒரு செல் உயிரிகளாக, பின் பல்செல் உயிரிகளாகப், பின் முதுகெலும்பற்ற நீர்வாழ் உயிர்களாக (invertebrates), பின் முதுகெலும்புகொண்ட நீர், நில வாழ் உயிர்களாக (vertebrates).

தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள்
கண்வளரும்வானோர் பெருமான் .....
1.5.4

இதைப் பிரதிபலிப்பது போல் அமைகிறது இத்திருவாய் மொழி. வானோர் பெருமான் என்பதை வானவரும் வணங்கும் பெருமான் என்றும் கொள்ளலாம், வானத்திலிருந்து உலகைப் படைத்த பெருமான் என்றும் கொள்ளலாம். ஆச்சர்யமான வகையில் கடவுள் எங்கிருக்கிறார் என்று எந்த மதத்தினரைக் கேட்டாலும் வானத்தைக் காட்டுவது இதனால்தான் போலும்!

நமது ஆரம்பம் விண்ணும், கடலும்தான்.ஆனால் இந்தக் கடற் தோற்றம் ரொம்பப் பேருக்குத் தெரிவதில்லை. நிலத்தில் உயிர்கள் வாழ்கின்றன அத்துடன் நமக்குப் பரிச்சியமுண்டு. கடலிலும் உயிர்கள் வாழ்கின்றன. அதுவும் பரிச்சியமானதே. ஆனால் நாம் கடலிலிருந்து வந்திருக்கமுடியும் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது. அதற்கு ஆராயும் மனம் வேண்டும். ஆய்வுகள் வேண்டும். Naked Ape (Desmond Morris) என்ற புத்தகம் மனிதன் நிலத்தில் தோன்றி பின் கடலுள் வாழ்ந்து பின் மீண்டும் நிலத்திற்கு வந்திருக்கலாம் என்கிறது. எத்தனையோ பாலூட்டிகள் நிலத்திலிருந்து கடலுக்குப் போய் இன்றளவும் கடலில் வாழ்ந்து வருகின்றன. உதாரணம் திமிங்கலம், பாம்பு. ஆனால் இது பின்னால் நடந்த நிகழ்வு.

முதலில் கடலில் தோன்றிய உயிர் மெல்ல, மெல்ல நிலத்திற்குப் பறவுகிறது. இதைப் பற்றி விரிவாக பின்னால் காண்போம். சார்லஸ் டார்வின் (1809-82) என்ற ஆங்கிலேயர் H.M.S Beagle (1831) என்ற கப்பலில் உலகத்தை சுற்றி வந்த போது உயிர்களுக்கிடையேயான தொடர்புகளைக் கண்டு கொண்டார்.அவை கூர்தலினால்(process of evolution) வளர்ச்சியுற்று, இயற்கைத் தேர்வு(natural selection) முறையில் பூரணமடைகின்றன என்று கண்டு சொன்னார். பரம கிருத்துவரான டார்வினால் இதை உடனடியாக வெளியிட முடியவில்லை. ஏனெனில் அது கிருத்துவ நம்பிக்கைக்கு எதிரானதாக அமைந்துவிடும் என்ற அச்சம். சுமார் 20 வருட யோசனைக்குப் பின் தனது "இனங்களின் தோற்றம்" (origin of species) என்ற புத்தகத்தை வெளியிடுகிறார். குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பதை ஏற்றுக் கொள்ளவியலாத அன்றைய எலிசபெத் அரசாங்கம் இவருக்கு பல தொல்லைகளைத்தருகிறது. இவரது காப்புநாய் (bulldog of Darwin) என்று தன்னை அழைத்துக் கொள்ளும் T.H.Huxley இக்கோட்பாடு நிலைபெற உதவுகிறார். இன்று அறிவியல் உலகு இதைப்பூரணமாக ஏற்றுக் கொண்டாலும், அமெரிக்காவில் இன்றளவும் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கின்றன.

இந்த கூர்தலியல் கோட்பாட்டின் படி மனித பரிணாமத்தின் படி நிலைகளாவன:மீன் (fish), நில-நீர்வாழ்ப் பிராணி(amphibians), பல்லி (reptiles), மூஞ்சூறு (small mammals), குரங்குகள் (great apes), மனிதன் (homo sapiens sapiens).


இப்போது பாசுரம் தரும் வரிசையைக்கவனிப்போம்:


தேவுடைய மீனமாய்
ஆமையாய் ஏனமாய்
அரியாய்க் குறளாய்
மூவுருவினிராமனாய்க்
கண்ணனாய்க்
கற்கியாய்
முடிப்பாங்கோயில்


முதலில் மீன்(fish), ஆமை(amphibious reptile), பன்றி (mammals), நர-சிங்கம்,(animal-human) குள்ளன் (early primates), பல் வேறு நிலைப் பட்ட மனிதன்(australopithecus, ramapithicus, peking man etc) என்பதே அது. இந்த வரிசை கற்பனையானதா? இல்லை ஏதோ உண்மையைக் கண்டுணர்ந்த பண்டைய இந்தியர்கள் உருவகப் படுத்திப் புனைந்த புராணங்களா?

எப்படியாயினும் உயிர்களுக்குள் சம்மந்தமுண்டு என்று கண்டு சொல்லும் அளவிலாவது இது கவனிக்கப் படவேண்டிய ஒன்றே. அதற்கும் மேலும் இறைமை என்பது படிநிலைகளில் எட்டக் கூடியது என்னும் ஒரு பேருண்மையைச் சுட்டுவதால் இதுவழக்கம் போல் மேலைத்தைய விஞ்ஞானம் கூறாத ஒரு செய்தியையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. விரிவாகப் பார்ப்போம்.
0 பின்னூட்டங்கள்: