e-mozi

மடல் 098: மச்சாவதாரமும், கருங்கடல் பெருக்கும்

First published: Sat, 25 Nov 2000 21:59:38 +0200

திருமாலின் பத்து அவதாரங்களில், முதல் அவதாரம் மீன் அல்லது மச்ச அவதாரம்.மனு என்னும் அரசன் நதியில் நீராடும் போது ஒது மீன் அவன் கையில் அகப்பட்டதாம்.அவன் அதை மீண்டும் நீரில் விட எத்தனிக்க, மீன் அவனிடம் அபயம் கேட்டதாம்.நல்ல அரசனான மனு அதை ஒரு கலத்தில் போட, மீன் அதைவிட வளர, அவன் அதைக்குளத்திற்கு மாற்ற-அது அதைவிட வளர, அவன் நதிக்கு மாற்ற அதுவும் போதாமல் அதுவளர அவன் இறுதியில் இது தெய்வ மீன் என்று உணர்ந்து தஞ்சம் புக. மீன் வடிவில் இருந்த இறைவன் வரப்போகும் நீர்ப்பெருக்கைப் பற்றி எச்சரித்து ஒரு பெரிய கப்பல் செய்யுமாறு ஆணையிட்டு அதில் வகைக்கு ஒன்றாக தாவரங்கள், விலங்குகள் இவைகளை சேகரித்து காத்திருக்குமாறு சொல்ல, அவனும் அதுபடி செய்தான். கொஞ்ச நாளில் வெள்ளம் பெருகி ஓட, மீன் சொன்ன படி வந்து கப்பலை தள்ளிக் கொண்டு உயர்வான ஒருமலைக்கு இட்டுச் சென்று உயிர்களைக் காத்ததாம். இதுதான் மச்சாவதாரத்தின் கதை.
இக்கதை எவ்வளவு தூரம் விவிலியக் கதையுடன் ஒத்துப் போகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். அங்கு நோவா, இங்கு மனு. அங்கும் கப்பல், இங்கும் கப்பல். அங்கும் தாவர, விலங்குகள், இங்கும் அதே. ஒரே வெள்ளப் பெருக்கு!! எப்படி இவ்வளவு பொருத்தம்?

வெவ்வேறு நாடுகளில் இக்கதைகள் உலவினாலும் அதன் ஆக்கம் எங்கோ ஓரிடத்தில் நடந்திருப்பது தெரிகிறது. அது கருங்கடல் பகுதிகளான ஆசியா மைனரில் நடந்திக்க வாய்ப்பிருப்பதாக கடலியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இன்றைய கருங்கடல் சுமார் 7000-9000ஆண்டுகளுக்கு முன் ஒரு பெரிய ஏரி. மத்தியதரைக் கடலுக்கும், கருங்கடலுக்கும் அன்று தொடர்பு கிடையாது, ஏனெனில் மத்திய தரைக்கடல் இதைவிட தாழ்ந்தபகுதியில், குறைந்தளவே நீர் கொண்டு இருந்திருக்கிறது. ஆயின் இரண்டாம் பனிக்காலத்தில் உலகின் தட்ப வெப்பம் மாற, துருவப் பனி உருகி கடல் நீரின் அளவு அதிகமாகத் தொடங்கியது. அக்காலக் கட்டத்தில் தான் போஸ்போரஸ் வழியாககடல் உடைத்துக் கொண்டு 50 கியூபிக் கிலோ மீட்டர் கடற் தண்ணீர் உட்புகுந்து அன்றையக் கருங்கடலை நாளுக்கு சுமார் 15 செ.மீட்டர் உயரும் அளவிற்கு பெரிதாக்கி விட்டிருக்கிறது. (Science Vol.279, pp.1132, 1998)

இப்படியானதொரு நிகழ்வு அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு எத்தகைய பாதிப்புகளை நிகழ்த்தியிருக்கும் என்று ஊகிக்கலாம். குய்யோ, முறையோ என்று பல்வேறு திக்கும் ஓடிவந்த மக்களில் ஒரு பிரிவினர் அன்றைய மெசபடோமிய நாட்டில்குடி புகுந்திருக்கலாம். அவர்கள் வழியாக இச்செய்தி பண்டைய சுமேரிய வெள்ளப்பெருக்கு தொன்மமாகி பின் நோவா கப்பல் தொன்மமாகவும், மச்சவதாரத் தொன்மமாகவும் மாறியிருக்க வேண்டும். பண்டைய சுமேரியாவிற்கும், தமிழ் நாட்டிற்குமான தொடர்புகளை முனைவர் லோகநாதன் மொழியியல் வாயிலாக நிறுவ முனைகிறார். அத்தொடர்பு ஊர்ஜிதப் படும் போது இத்தொன்மங்களின் தொடர்பு நன்கு விளங்கும்.

வானோரளவும் முதுமுந்நீர் வளர்ந்த காலம்,
வலியுருவில்மீனாய் வந்து வியந்துய்யக்
கொண்ட கண்டா மரைக்கண்ணன்

என்று இக்கதையை பாசுரமாக வடிக்கிறார் திருமங்கை மன்னன் (பெரிய திருமொழி).வான் உயரத்திற்கு முது நீர் (அதாவது கடல் நீர்), முன்பு வந்த போது இழுக்கக் கூடியமீனாய் மக்கள் வியந்து உய்யுமாறு கொண்டவன் தாமரைக் கண்ணுடைய கண்ணன் என்பது அவரது வர்ணனை.


Matsya-Avataar Yantraகுன்றில்நின்று வானிருந்து நீள்கடல்கி டந்து,
மண்ஒன்றுசென்ற தொன்றையுண்ட தொன்றிடந்து
பன்றியாய்,நன்றுசென்ற நாளவற்றுள் நல்லுயிர்ப டைத்தவர்க்கு,
அன்றுதேவ மைத்தளித்த ஆதிதேவ னல்லயே?


என்கிறார் திருமழிசைப்பிரான் (திருச்சந்த விருத்தம்)

நன்று சென்ற நாள் அவற்றுள் நல்லுயிர் படைத்து, பின் நீள் கடல் கிடந்து பல்வேறுஅவதாரங்கள் எடுத்த ஆதிதேவன் திருமால் என்கிறார். தொடர்ந்து இவர்கள் ஒருதொடர்ச்சி பற்றிப் பேசுவது ஆய்விற்கு ஒத்தாசையாக இருக்கிறது. பரிணாமயியலிலும்ஒரு தொடர்ச்சி இருக்கிறது அவதாரத் தொன்மங்களிலும் ஒரு தொடர்ச்சி இருக்கிறது.இரண்டும் உயிர்களின் தோற்றம் பற்றி, அவை இன்றுள்ள நிலைக்கு வருவதற்கு முன்னுள்ள கூர்தல் பற்றிப் பேசுகின்றன.

தொன்மங்களுள் சரித்திர பூர்வமான ஒரு செய்தி இருக்கலாம், இல்லை ஒருகோட்பாடு இருக்கலாம். அதைக் கண்டு சொல்வது வல்லவர் கடன்..
2 பின்னூட்டங்கள்:

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Monday, January 08, 2007

நல்ல பதிவு கண்ணன் சார்; உங்கள் மடல் கிடைத்தும் வரத் தாமதம் ஆனது! சென்ற வாரம் தணிக்கை காரணமாகப் பணி மிகுதி!

மச்சாவதாரத்துக்குள் இத்தனை குறிப்புகளா? வேதங்களை மீட்கவும் மச்சாவதாரம் என்று வேறு ஒரு கதையும் இருக்கிறதே!

அந்தக் கடைசிப் படம் எங்கு எந்த ஊர் கண்ணன் சார்? மலை அப்படியே படகு வடிவில்!

  நா.கண்ணன்

Monday, January 08, 2007

வேதங்கள் தொலைந்தது என்பது அந்த பிரளய நீரில் காணாமல் போனது என்று கொள்ளலாம். விஷ்ணு அதை மீட்டெடுத்துக் கொடுத்தார் என்று சொல்லலாம். Parallels in Tamilnadu are: சைவ மறைகளை அந்தணர்கள் ஒளித்து வைக்க ராஜ, ராஜ சோழன் மீட்டெடுத்தது. நாலாயிர திவ்யப் பிரபந்தம் காணாமல் போக நாத முனிகள் மீட்டெடுத்தது. பின்னவை இரண்டும் சரித்திர காலத்திற்குள் விழுந்து விடுவதால் யார், எப்படி மீட்டெடுத்தார் என்பது தெளிவாக உள்ளது. முதல் கதை புராண காலத்திற்குப் போய்விடுகிறது! சமீபத்தில் ரஷ்யாவில் விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டத்திலிருந்து தெரிகிறது வேத கலாச்சாரம் என்பது பால்டிக் கடலிருந்து பசிபிக் கடல் வரை பரவி இருந்தது. எனவே அழிந்து போன வேதங்களை இந்த -delugeக்குப் பிறகு கண்டெடுத்து இருக்கிறார்கள் போலும். வியாசர் அவர் காலத்தில் கிடைத்ததை தொகைப் படுத்தியிருக்கிறார். இன்னும் காணமல் போனது எவ்வளவோ? யார் கண்டது?

Noah's arc என்று தேடினேன். அப்படம் கிடைத்தது. இது குறித்து நிறையக் கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றன.