e-mozi

மடல் 093: உலகின் தோற்றமும், மழையுயிர் காத்தலும்

First published:Date: Sat, 18 Nov 2000 11:24:47 +0200

இம்மடலில் நீங்கள் காணும் பாசுரங்களைப் பார்த்தால் நம்மாழ்வார் ஏதோவொரு தெய்வத்தைப் பற்றி பேசுகிறார் என்பதை விட இவ்வண்டத்தின் தோற்றத்தையும், அதன் காத்தலையும், அதன் இயக்க நியதிகளையும் பற்றித்தான் பேசுகிறார் என்பது புரியும்.

இத்துணை செயல்களுக்கும் காரணமான ஒன்றைக்கண்டு கொண்ட ஆனந்தத்தில் அந்த ஒன்றை முதன்மைப் படுத்திப் பேசுவதுபுரியும். இதே ஆனந்தத்தை திருமூலத்திலும், வள்ளலாரின் பாடல்களிலும், பாரதியின் பாடல்களிலும் காணலாம்.

அன்றுமண் நீர் எரி கால்விண் மலைமுதல்,
அன்று சுடர் இரண் டும்பிற வும்பின்னும்
அன்று மழையுயிர் தேவும்மற் றும்அப்பன்
அன்று முதலுல கம்செய் ததுமே.
7.4.9அன்று, அன்று என்று நான்கு முறை சொல்கிறார். என்று? என்ற கேள்வி வருகிறது.

அதற்கு வேறொரு பாடலில் விடை தருகிறார்.

ஒன்றுந் தேவு முலகும் 
உயிரும் மற்றும் யாதுமில்லா
அன்று, நான்முகன் தன்னொடு
தேவ ருலகோ டுயிர்படைத்தான்,
குன்றம் போல்மணி மாடம்
நீடு திருக்குரு கூரதனுள்,
நின்ற ஆதிப்பி ரான்நிற்க
மற்றைத் தெய்வம் நாடுதிரே.
(2) 4.10.1


அதாவது, தேவர்கள், உலகம், உயிர் மற்றும் எதுவுமே இல்லாத காலத்தில் என்று சொல்கிறார். அன்று இந்த "ஒன்று" என்பது கூட இல்லையாம். கண்ணதாசன் சொல்லும் "பூஜ்யத்துக்குள்ளே நின்று இராஜியத்தை"ச் செய்வது இதுதான் போலும். விஞ்ஞானத்தாலும் தோற்றத்தின் சில நொடிகள் முன்பு வரைதான் இதுவரை சென்றிருக்க முடிகிறது. அந்த முதல் சில நொடிகள் இன்னும் ஆச்சர்யமான ஒன்றாகவே உள்ளது (கணையாழியில் நவீன இயற்பியலையும், மெய் ஞானத்தையும் ஒப்பிட்டு"பொருண்மையற்ற போழ்துகளில்" என்றொரு கதை எழுதியுள்ளேன். அது எனது"உதிர் இலை கால"த் தொகுப்பிலும் வந்துள்ளது. பல ஆச்சர்யமான ஒற்றுமைகள் இரண்டிற்கும் இடையில் உண்டு. இது உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை)"பெயர் வடிவங்களை இழந்து, "சத் ஒன்றே" இருந்தது என்கிற நிலையிலே, "பலபொருள் ஆகக் கடவேன் (பஹஸ்யாம் என்பது சாந்தோபநிஷத் 6.2:3)" என்று நினைத்த (சங்கல்பித்த) அன்று முதல்" என்று சொல்கிறது ஈடு.

எனவேதான் இறைவனை "முதல் வித்து" என்று மெய்ஞானிகள் சொல்கின்றனர். அவன்தான் காரணன். அவன் ஒருவனே.

தானோ ருருவே தனிவித்தாய்த்
தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும்
மற்றும் மற்றும் முற்றுமாய்
தானோர் பெருநீர் தன்னுள்ளே
தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மாமாயன்
வைகுந் தன்எ ம் பெருமானே.
1.5.4


இந்தத் தனி வித்திலிருந்து தெய்வங்களும், தேவர்களும் தோன்றுகின்றனர். படைத்தல், காத்தல், அழித்தல் போன்றவை செய்ய.அதாவது அண்டம் வெடித்த பின்னும் கிரகங்கள் தோன்றிக் கொண்டும், அழிந்து கொண்டும் இருப்பதை "ஹப்பில் வான் நோக்கி" படம் பிடித்துக் காட்டியுள்ளது. இதைத்தான் அவர்கள் உருவகப் படுத்திச் சொல்கின்றனர்.

காக்குமியல்வினன் கண்ணபெருமான்,
சேர்க்கைசெய்து தன்னுந்தியுள்ளே,
வாய்த்ததிசைமுக னிந்திரன்வானவர்,
ஆக்கினான் தெய்வவுலகுகளே.
2.2.9

எல்லாம் ஒன்றிலிருந்து வந்ததால் எல்லாச் செயல்களும் அவன் செயல்களாகவே ஆகின்றது. வேதியியல் சேர்க்கைகள் போல் இவனொரு சேர்க்கை செய்து மற்றவர்களைத் தோற்றுவித்தான் என்கிறார் நம்மாழ்வார்.

நாரணன்முழுவேழுலகுக்கும் நாதன்வேதமயன்,
காரணம்கிரிசை கருமமிவைமுதல்வனெந்தை,
சீரணங்கமரர்பிறர் பலரும்தொழுதேத்தநின்று,
வாரணத்தைமருப்பொசித்த பிரானென்மாதவனே
. 2.7.2

இவனே காரணம், கிரிசை மற்றும் கருமம் இவையெல்லாம். ஏழுலுகிற்கும், அதாவது பல்வேறு விண் மண்டலங்களுக்கும், இவனே நாதன். இவனைப்பற்றிப் பேசுவதால் வேதம் சிறப்புறுகிறது.

நம்மாழ்வார் ஒரு இயக்கத்தைப் பற்றிப் பேசுகிறார் என்பது கீழ்வரும் பாடல்களில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இது ஒழிவொன்றுமில்லாத ஒரு செயல் என்பதும், ஊழி தோறும் படைத்து, காத்து, கெடுத்து உழல்கின்ற செயல் என்றும் சுட்டுகிறார்.

ஒழிவொன்றில் லாதபல் ஊழிதோறூழி நிலாவ,போம்
வழியைத் தரும்நங்கள் வானவர் ஈசனை நிற்கப்போய்,
கழிய மிகநல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்,
இழியக் கருதியோர் மானிடம் பாடலென் னாவதே.
3.9.3

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும்
இடந்தும் கிடந்தும் நின்றும்,
கொண்ட கோலத் தொடுவீற்
றிருந்தும் மணங்கூடியும்,
கண்ட வாற்றால் தனக்கே
யுலகென நின்றான்தன்னை,
வண்தமிழ் நூற்க நோற்றேன்
அடியார்க் கின்பமாரியே
. 4.5.10


தானே உலகெலாம்
தானே படைத்திடந்து
தானே உண்டுமிழ்ந்து
தானே ஆள்வானே.
10.5.3

ஊழி முதல்வன் ஒருவனே என்னும்
ஒருவன் உலகெல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே
படைத்துக் காத்துக் கெடுத்துழலும்
ஆழி வண்ணன் என்னம்மான்
அந்தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே கைவிடேல்
உடலும் உயிரும் மங்கவொட்டே.
10.7.9


நாம் மண்ணில் வாழ்கிறோம். வாழ்வதே ஒரு அதிசயம். அதைப் பலர் காண்பதில்லை. மூச்சு விடுவது அதிசயம். மூட்டு சேர்ந்து நடை பயில்வது அதிசயம். மலர் மலர்வது அதிசயம். இசை செய்வது அதிசயம். இசை கேட்பது அதிசயம். இந்த அதிசயத்தைக் கண்ணுறும் போது மெய் சிலிர்க்காத உண்மையான விஞ்ஞானியும் இல்லை, மெய்ஞானியும் இல்லை. இதை நல்ல தமிழில் சொல்லச் செய்வதால், அவன் அடியார்க்கு இன்ப மழை என்கிறார் நம்மாழ்வார்.அவனே அகல் ஞாலம்படைத் திடந்தான்,
அவனே ய·அதுண் டுமிழ்ந்தான் அளந்தான்,
அவனே யவனும் அவனும் அவனும்,
அவனே மற்றெல்லா முமறிந் தனமே
. 9.3.2

இப்படி அவனே யவனும் அவனும் அவனும், அவனே மற்றெல்லாம் என்று அறிதல் ஒரு ஞானம். ஒரு தெளிவு. ஒரு காட்சி. ஒரு புரிதல். அதற்கு இட்டுச் செல்வதுதான் அறிவு. அதனால்தான் முதல் பாடலிலே நம்மாழ்வார் "மயர்வு அற்ற மதி நலத்தை" நல்கிய "அவனை"த் தொழுது ஏத்துகிறார்.Keywords: Origins, vedic perspective, wisdom of the east, creation, universe, myth, galaxy, milky way, vishnu, virat purusha, visvarupa, tiruvikrama, vamana

1 பின்னூட்டங்கள்:

  வடுவூர் குமார்

Tuesday, January 23, 2007

ஆழ்வார்கள் அந்த தொலைநோக்கியை எங்கு வைத்திருந்தார்கள்?
இந்த மாதிரி இவர்கள் பார்த்து சொல்வது ஆச்ச்ரியத்திலும் ஆச்சரியம்.
அந்த காலத்தில் இப்படி சொல்லியும் நம்மால் ஏன் அதற்கு மேல் போகமுடியவில்லை.
இல்லை எல்லாம் தான் சொல்லிமுடித்தாகிவிட்டதே!! இனி"மேல்" ஒன்றும் இல்லை என்று விட்டுவிட்டார்களா?