e-mozi

மடல் 094 - மேவி கற்பாருக்கான மாமருந்து

பிரபத்தி அல்லது இறைச் சரணம் என்பது மிக விசித்திரமான வகைகளில் நடக்கிறது. ஞானஸ்தர்களுக்கு பூர்வ ஜென்ம பலாபலனாக குழந்தைப்பருவத்திலே ஞானம் வந்து தங்களது வாழ்வை இறைச் சரணத்தில் கழிக்க முடிகிறது. நல்ல உதாரணங்கள் கர்த்தர் இயேசு, ஆதி சங்கரர், இரமண மகரிஷி, அருட்ஜோதி வள்ளலார் போன்றவர்கள். சிலருக்கு நல்ல கல்வி, கேள்வியின் பலனாக இறைச் சரணம் சித்திக்கிறது. இங்கு குரு அருள் முக்கிய பங்கு வகிக்கிறது. மாணிக்கவாசகருக்கு அம்பலத் தாண்டவன் அருள் புரிந்தான். ஸ்ரீஇராமானுஜருக்கு பல்வேறு குருவடிவில் இறைவன் பிரபத்தி செய்வித்தான்.

சில முரட்டு சுபாவம் கொண்டவர்களுக்கு அவர்கள் வழியில் இறைவன் ஆட்கொள்வது என்பதும் நடந்திருக்கிறது. வேல் கொண்டு போர் புரியும் திருமங்கையாருக்கு காட்டில் காட்சி கிடைக்கிறது. நமது சனாதன சம்பிரதாயத்தில் இறைமைக்கு இட்டு செல்லும் வழிகள் பல்வேறு பட்டவை. அது ஒரு திறந்த கதவு. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சொல்வதுபோல் பாதைகள் அற்ற திறந்த வெளி. அவரவர் மனோபாவத்திற்கு ஏற்றவாறு பிரபத்தி நடக்கிறது.தாமோதரனாக கண்ணனைக் காட்டினால் மென்மையான மனம் கொண்டவர்களுக்கு இதமாக இருக்கிறது. எல்லோருக்குமா விட்டு சித்தர் போல் தாய் மனம் வாய்க்கிறது? சிலருக்கு பயம் காட்டினால்தான் இறைவன் மேல் பற்று வருகிறது. அதாவது தனது பலம் அவனது பாராக்கிரமங்களுக்கு முன் தூசுக்குச் சமானம் என்று காட்டும் போது மனது நெகிழ்ந்து சரணமடைகிறது. அந்த வகையில்தான் திருவாய்மொழியின் ஏழாம் பத்தின் நான்காம் திருவந்தாதிப் பாசுரங்கள் அமைகின்றன.நம்மில் பலருக்கு உள்ளுள் உறைந்து விட்ட உயிரியல் பயம் என்பது பல நேரங்களில் இறைத் தரிசனத்தை எட்டவிடாமல் தடுத்துவிடுகின்றன. இந்த உயிரியல் சார்ந்த பயங்களைப் போக்குவதற்குத்தான் மந்திர உபாசனைகள் உதவுகின்றன. மிக நல்ல உதாரணமாக பல்கோடி தமிழர்களுக்கு உளமருந்தாக இன்றும் பயன்படுவது கந்தர் சஷ்டி. இந்த உத்தி வைணவ மறைகளிலும் காணக் கிடைக்கிறது. முன்பொரு மடலில் பெரியாழ்வாரின் "பட்டிணம் காப்பு"என்ற பாசுரங்களை விளக்கி அவை எவ்வாறு கந்தர் சஷ்டி போல் செயல் படுகிறது என்று காட்டினேன். இந்தப் பத்திற்கும் அத்தகைய உபயோகம் இருப்பதை ஈடுகாட்டுகிறது.
குன்றம் எடுத்த பிரான்அடி யாரொடும்,
ஒன்றிநின் றசட கோபன் உரைசெயல்,
நன்றி புனைந்த ஓராயிரத் துள்ளிவை
வென்றி தரும்பத்தும் மேவிக்கற் பார்க்கே. (2) 7.4.11"எம்பெருமானுடைய வெற்றிச் செயல்களைத் தொடுத்துச் சொன்ன இப்பத்தும் என்னுதல், மேவிக் கற்பாருக்கு வெற்றி தரும் -ஆசையோடு கற்பார் யாவர் சிலர், அவர்களுக்கு வெற்றியைப் பண்ணிக் கொடுக்கும். செல்வத்தை விரும்புகிறவனுக்குச் செல்வத்திற்கு தடையாகவுள்ளனவற்றை வென்று கொடுக்கும்; கேவலனுக்கு விரோதியைப் போக்கிக் கொடுக்கும்; பகவானைச் சரணம் அடைந்தவர்களில் உபாசகனுக்கு ஐம்புலன்களை வெல்லுதல் முதலியவற்றைச் செய்து கொடுக்கும்; பிரபந்நனுக்குக் கைங்கரிய விரோதிகளை வென்று கொடுக்கும்" என்று சொல்கிறது ஈடு.

ஈடு ஆசிரியர் கொடுக்கும் உதாரணங்கள் இரசிக்கத் தக்கவை. கல்வி, செல்வம், வீரம் இவைகளை முறையாகச் சொல்லி விட்டு, பக்தி செய்வாருக்குள்ள தடைகளையும் இது நீக்க வல்லது என்று சொல்வது இனிமை. உண்மையான வைணவருக்கு அடியார் தொண்டு அல்லது பகவத் கைங்கர்யம் என்பது உள மகிழ்வான ஒன்று. அதற்கும் சிலர் தடையாக இருப்பர் என்பது கண்கூடு. அதையும் இப்பாசுரங்கள் விலக்கும் என்று சொல்வது நயம்.

இப்பயம் போக்கும் மருந்தில் சந்த வலிமையைக் கூட்டுவது அதன் உச்சாடனத் திறனைக் கூட்டும் என்று தோன்றுகிறது. அருணகிரியின் திருப்புகழ், பால தேவராயரின் கந்தர் சஷ்டி இவைகளைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் நம்மையறியாமல் உள்ளே தைர்யம் கூடுவது கண்கூடு. அதே போன்ற ஒரு அருளை இப்பாசுரங்களும்தரும் என்பதை நீங்கள் உச்சாடனம் செய்து பார்த்தால் புரியும். உங்கள்வாசிப்பிற்காக ஏழாம் பத்தின் நான்காந்திருவாய்மொழி இதோ:1
ஆழி யெழச்சங்கும் வில்லு மெழ,திசை
வாழி யெழத்தண்டும் வாளு மெழ,அண்டம்
மோழை யெழமுடி பாத மெழ,அப்பன்
ஊழி யெழவுல கங்கொண்ட வாறே.(2)
ஆறு மலைக்கெதிர்ந் தோடு மொலி,அர
வூறு சுலாய்மலை தேய்க்கு மொலி,கடல்
மாறு சுழன்றழைக் கின்ற வொலி, அப்பன்
சாறு படவமு தங்கொண்ட நான்றே. 7.4.2(3)
நான்றில வேழ்மண்ணும் தானத்த, வே,பின்னும்
நான்றில வேழ்மலை தானத்த வே,பின்னும்
நான்றில வேழ்கடல் தானத்த வே,அப்பன்
ஊன்றி யிடந்தெயிற் றில்கொண்ட நாளே. 7.4.3(4)
நாளு மெழநில நீரு மெழவிண்ணும்
கோளு மெழேரி காலு மெழ,மலை
தாளு மெழச்சுடர் தானு மெழ,அப்பன்
ஊளி யெழவுல கமுண்ட வூணே. 7.4.4(5)
ஊணுடை மல்லர் ததர்ந்த வொலி,மன்னர்
ஆணுடை சேனை நடுங்கு மொலி,விண்ணுள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட வொலி,அப்பன்
காணுடைப் பாரதம் கையரைப் போழ்தே. 7.4.5(6)
போழ்து மெலிந்தபுன் செக்கரில்,வான்திசை
சூழு மெழுந்துதி ரப்புன லா,மலை
கீழ்து பிளந்தசிங் கமொத்த தால்,அப்பன்
ஆழ்துயர் செய்தசு ரரைக்கொல்லு மாறே. 7.4.6(7)
மாறு நிரைத்திரைக் கும்சரங் கள்,இன
நூறு பிணம்மலை போல்புர ள,கடல்
ஆறு மடுத்துதி ரப்புன லா,அப்பன்
நீறு படவிலங் கைசெற்ற நேரே. 7.4.7(8)
நேர்சரிந் தாங்கொடிக் கோழிகொண் டான்,பின்னும்
நேர்சரிந் தானெரி யுமன லோன்,பின்னும்
நேர்சரிந் தான்முக்கண் மூர்த்திகண் டீர்,அப்பன்
நேர்சரி வாணந்திண் டோள்கொண்ட அன்றே. 7.4.8(9)
அன்றுமண் நீரெரி கால்விண் மலைமுதல்,
அன்று சுடரிரண் டும்பிற வும்,பின்னும்
அன்று மழையுயிர் தேவும்மற் றும்,அப்பன்
அன்று முதலுல கம்செய் ததுமே. 7.4.9(10)
மேய்நிரை கீழ்புக மாபுர ள,சுனை
வாய்நிறை நீர்பிளி றிச்சொரி ய,இன
ஆநிரை பாடியங் கேயொடுங் க,அப்பன்
தீமழை காத்துக் குன்ற மெடுத்தானே. 7.4.10

Keywords: bravery of Lord Vishnu, Krishna, Narasimha, Varaha, creation myth, hindus, cataclysms, nammalvar, nalayira divya prabandam, dravida vedam

0 பின்னூட்டங்கள்: