e-mozi

மடல் 090- அண்டம் மோழை எழ.......

First published: Date: Thu, 16 Nov 2000 16:41:10 +0200

மயற்வற மதி நலம் பெற்றிருந்த நம்மாழ்வார் அன்றைய முறைப்படி ஒரு முழுமையான பேராசிரியர். அதாவது கவிதை செய்யும் கவிஞானம் இருக்கும் போதே கவிதையில் விஞ்ஞானமும் பேசுகிறார். கவிதையும் அக்கவிதைக்கு காரணனும் ஒன்றே என்றுணர்ந்த உயர் மதி கொண்டோருக்கு விஞ்ஞானமும் அதன் காரணமும் ஒன்று என்பது புரியாதா என்ன?

அந்நிலையிலிருந்து கவி செய்யும் போது மெய்ஞானமும், விஞ்ஞானமும் ஒன்றிலிருந்து விரிந்து மலர்வது இயல்பாக அமைகிறது. சந்தத்தில் நம்மை மலைக்க வைப்பவர் அருணகிரி. நம்மாழ்வாரின் திருவாய் மொழியை ஒவ்வொரு முறை திருப்பும் போதும் ஒரு ஆச்சர்யம் காத்திருக்கும். வருகின்ற மடல்களில் சந்தம் மிளிரும் திருவாய் மொழிப் பாடல்களைப் பார்ப்போம்.

நமக்கு சாதாரணமாகப் பெய்யும் மழை, கவியில் திளைக்கும் பாரதிக்கு இப்படிப் படுகிறது:

திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்பாயுது பாயுது பாயுது-
தாம்தரிகிடதக்கத் ததிங்கிடதித்தோம்-
அண்டம் சாயுது, சாயுது, சாயுது
(மழை)

இப்படியாதொரு மனோ நிலை நம்மாழ்வாருக்கும் வந்திருக்கிறது. ஒரு பத்துப் பாடல்களில் சந்தத்தில் திளைத்து, தமிழில் குளித்து, அறிவியல் உண்மைகளை மாணிக்கப் பரல்களாக அள்ளித் தெளித்து நம்மை ஆனந்தத்தில் மூழ்க வைக்கிறார்.

"பத்துடை அடியவர்க்கு எளியவன்" என்று கண்ணனை அம்மா கட்டிய கயிறின் இறுக்கம் வயிறில் தெரிய வளைய வரும் தாமோதரனாகப் பார்த்த நம்மாழ்வாருக்கு அவன் "அரியவன்" என்பதால் அவனது பராக்கிரமங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. அவன் உலகளந்த செயலை நினைக்கிறார், பாடல் ஊற்றுப் பெருக்காய் வருகிறது. திருமால் உலகளந்த செயல் சங்க காலத்திற்கு முன்பிருந்தே தமிழில் பேசப் பட்டுவரும் ஒரு செய்தி. திருவிக்கிரமனைப் பற்றியே முதற் கட்ட ஆழ்வார்கள் நிரம்பப் பேசுகின்றனர். இறைவன் அளப்பரியவன் என்பதை விளக்கும் "அடி-முடி தேடும்" தொன்மங்கள் இந்த வகையைச் சார்ந்தவையே.

ஆழி யெழச்சங்கும் வில்லு மெழ,திசை
வாழி யெழத்தண்டும் வாளு மெழ,அண்டம்
மோழை யெழமுடி பாத மெழ,அப்பன்
ஊழி யெழவுல கங்கொண்ட வாறே. (2) 7.4.1


கீழைத்திசை சூரியோதத்திற்கு முன் வரும் புலர்வும், பறவைகளின் இசையும், கன்றுகளின் அழைத்தலும், இன்ன பிற நடமாட்டமும் போல திருமால் உலகளக்க உதிப்பதற்கு முன் அவன் ஆழியும், சங்கும், வில்லும், தண்டமும், வாளும் எழுகின்றன. இதற்கு அழகான உவமை சொல்கிறது ஈடு,

"ஆயிரம் காதம் பறப்பதன்குட்டி ஐந்நூற்றுக் காதம் சிறகு அடித்துக் கொள்ளுதல் போல" என்று.

அதாவதுதிருமால் ஆயிரம் காதம் பறக்கின்ற புள் என்றால் அவரது ஆயுதங்கள் (அவைகளையும் ஆழ்வார்கள் என்றே காண்கின்றனர் வைணவர்கள்) ஐந்நூறு காதம் சிறகடித்துப் பறக்கப் பழகும் குஞ்சாம்!! இப்படி உருவக லயிப்பில் இருக்கும் போதே ஒரு வரி நம்மை விழிக்க வைக்கிறது. அதுதான் "அண்டம் மோழை எழ" என்பது.

அண்டத்தில் ஒரு குமிழி (=மோழை) தோன்ற என்கிறார் நம்மாழ்வார். அடுத்தடுத்து வருகின்ற பாசுரங்களைப் படிக்கும்போது புரிகிறது, நம்மாழ்வார் இவ்வண்டத் தோற்றத்தைப் பற்றிப் பேசுகிறார் என்பது. அவர் சொல்லும் "அண்டக் குமிழி" என்பதையும், நாசா அனுப்பிய ஹப்பில் தொலை நோக்கி பார்த்து அனுப்பியிருக்கும் படங்களையும் ஒப்பிட்டால் பிரபஞ்சத் தோற்றமென்பது வெளியில் ஒரு குமிழி போல் உருவாகி வெடித்து, பின் வின் மண்டலங்களும், கிரகங்களும் தோன்றுகின்றன என்பது புரியும்.ஆக,நம்மாழ்வார் பேசுவது இன்றையப் புரிதலில் உள்ள "அண்ட வெடிக் கோட்பாட்டையா"? (Big bang theory). ஆம் என்பது அடுத்து வரும் பாசுரங்களைக் கண்ணுறும் போதுபுரியும்.

திருமால் பள்ளி கொள்ளும் திருபாற்கடல் என்பது "Milky way galaxy" என்பது திண்ணமாகப் புரிகிறது. அது பற்றியும் இப்பத்துப் பேசுகிறது. அண்டக் குமிழி பற்றிப் பேசும் ஈடு சில செய்திகளைத் தருகிறது,

"கணிசம் அவ்வளவு அல்லாமையாலே அண்டத்தின் இடமுள்ள அளவும் சென்று அளந்து, அண்டகடாஹத்திலே திருவடிசென்று "ஒண்மிதியிற் புனல் உருவி ஒருகால் நிற்ப" என்கின்ற படியே கீழேயுள்ள ஆவரண ஜலம் மேலே எழ. ஆவரண ஜலத்துக்கு நடுவே ஒரு கழல் போலே மிதக்குமித்தனை அன்றோ அண்டம்?" என்று கூறுகிறது.

புனல் உருவி என்று திருமங்கையாழ்வார் சொல்லும் "ஆவரண ஜலம்" என்பது அறிவியல் சொல்லும் "ஹைட்ரஜன்" (நீர்வளி) தான். ஏனெனில் அண்டத்தில் ஆகப் பெரும்பான்மையாக விரவி இருப்பது இந்நீர்வளிதான். இதுதான் பூமி உருவாகிய காலத்தில் நமது கடல்கள் உருவாகவும் காரணமாக இருந்தது. நம்மாழ்வார் எந்தப் பள்ளிக் கூடத்தில் படித்தார் என்பது தெரியாது. ஆனால்அ வருக்கு இப்பூமி ஒரு சுண்டைக்காய் என்பது தெரிந்திருக்கிறது. அவர் அண்டத்தைப்பற்றிப் பேசுகிறார். அண்டம் உருவாகத் தோன்றிய குமிழி பற்றிப் பேசுகிறார். அப்போது எழுந்த பேரிடி போன்ற சத்தத்தைப் பற்றிப் பேசுகிறார் (Big bang).

நம் ஆச்சார்களும் இது பற்றிப் பேசினாலும் இதையெல்லாம் அவனது கல்யாணகுணங்களாகப் பார்த்து ஆனந்திக்கச் சொல்லித் தந்து விட்டுப் போயினர். அப்படியாயினும் பாசுரத்துள் ஒளிந்திருக்கும் அறிவியல் பொறி நம் கண்களுக்குத் தட்டுப் படாமல் போவதில்லை. ஆச்சார்யர்கள் மேலும் தப்பில்லை. ஏனெனில் இப்படி சர்வ வல்லமையுள்ள பேரியக்கங்கள்தான் மனிதன் தோன்றுவதற்கும் காரணமாக உள்ளன. இதையறிந்துதான் நம்மாழ்வார் " அப்பன் ஊழியெழ உலகம் கொண்டான்" என்கிறான்.

இங்குஅப்பன் என்று சொல்வதற்குக் காரணமாக ஈடு பகல்கிறது, "இவன் நமக்கு ஆத்துமாவைத் தந்தவன்" அதனால் "அப்பன்" என்று. ஆக இந்த ஆத்துமா என்பதும் கூட திருமூலர் சொல்வது போல் இவ்வண்டத்தின் ஒரு அங்கம்தானோ?

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிர மானால்
ஆவியின் கூறுநூ றாயிரத் தொன்றே
.

ஒரு மயிரை நூறு கூறிட்டு, மிஞ்சிய கூறில் ஆயிரம் பங்கு போட்டு அதில் விழும் கூறில் நூறாயிரத்தில் ஒன்றுதான் ஆவி என்கிறார். உண்மைதான். ஆவி அள்ளவவு நுண்ணியதுதான். மனிதன் இறப்பதற்கு முன்பும், இறந்த பின்பும் எடை போட்டுப் பார்த்தால் ஒரு வித்தியாசமும் தெரிவதில்லை. ஏனெனில் பிரிந்தவை அத்துணை நுண்ணியவை.

நம்மாழ்வார் செய்வித்த திருவாய்மொழி திராவிட இருக்கு வேதம் என்று கருதப் படுகிறது. வேதம் என்கின்ற போது அதில் இல்லாத விஷயம் உண்டோ?

2 பின்னூட்டங்கள்:

  Karthigesu

Friday, February 16, 2007

உயிர் போன பின் எடை போட்டுப் பார்த்தால் வேறுபாடு இல்லை என்கிறீர்கள். ஆவி என்பது ஒரு அனுமானம்தானே! அது இருக்கிறது இல்லை என்று எப்படி நிருபிப்பது?

ரெ.கா.

  நா.கண்ணன்

Friday, February 16, 2007

ஆன்மா என்பது ஒரு உயிரியல் செயற்பாட்டை விளக்கும் துறைச்சொல் (technical term). உயிர் இருக்கும் முன் x இறந்த பின் : கண் இருக்கிறது பார்க்க முடியவில்லை; வாய் இருக்கிறது உண்ண முடியவில்லை; காது இருக்கிறது கேட்க முடியவில்லை. 90 வயதுவரை வாழும் போது அழுகாமல் இருந்த உடல் இறந்த மூன்று நாட்களில் அழுகி விடுகிறது. ஏன்? எது இருந்து, அவ்வுடலை ஒரு நூற்றாண்டு காத்தது? எது அவ்வலுடலில் உணர்வாய் அத்தனை காலம் இருந்தது? எது இருந்தது? எது போனது? இறப்பு என்பதை வேறு எவ்வாறு புரிந்து கொள்ளலாம் என்று நீங்கள் சொல்லலாம். பின் தொடர்வோம். எனவே ஆவி என்பது அனுமானமல்ல. ஒரு விளக்கம்.