e-mozi

மடல் 091 - பிரபஞ்ச ஆக்கமும், பூமியைக் காத்தலும்

First published: Date: Fri, 17 Nov 2000 00:05:36 +0200

சென்ற மடலில் அண்டத்தின் குமிழி வெடிப்பதைப் பற்றிச் சொன்னார் நம்மாழ்வார். அடுத்த பாடலில் அதுபோது உருவான பிரம்மாண்டமான ஒலிகளைப் பற்றிப் பேசுகிறார்.

ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி,அர
வூறு சுலாய்மலை தேய்க்கும் ஒலிகடல்
மாறு சுழன்று அழைக் கின்ற ஒலிஅப்பன்
சாறு படஅமு தம்கொண்ட நான்றே. 7.4.2


இப்பாசுரம் திருப்பாற் கடலை அமுது கடைந்த போது உண்டான ஒலிகளைப்பற்றிப் பேசுகிறது. அவரது மிகப் பிரம்மாண்டமான சித்தரிப்பிலிருந்தே புரிகிறது அவர் சாதாரண மத்து கடைதலைப் பற்றி பேசவில்லை என்பது! (யசோதையுடன் மத்து கடைந்த விஷயங்கள் மிக மென்மையானவை. விஷமத்தனமானவை. இவை வேறு).

ஒலிகள், புவியீர்ப்பின் வழி ஓடும் ஆற்றை திசை திருப்பி மலைகளை நோக்கி ஓட வைக்க வேண்டுமெனில் அது எப்படிப் பட்ட ஒலிச் சக்திக் கொண்டவையாக இருக்க வேண்டும்! நினைத்துப் பார்க்க முடியாத சக்திதனைப் பற்றிச் சாற்றுகிறார். இந்த ஒலி, வாசுகி என்னும் பாம்பு மந்தரம் என்னும் மலையுடன் உரசும் போது உண்டானதாம். பாம்பு என்ற உருவகம் இரண்டு வகைகளில் இங்கு பொருந்துகிறது.பாம்புத் தோல் சர சரப்பானது. வழு, வழுவென்று இருப்பது போல் தோன்றினாலும் பல்லாயிரக் கணக்கான சரகுகளைக் (scales) கொண்டது அது. எனவே அது உரசும் போதுஒலி உண்டாவது இயல்பானதே. இரண்டாவது, பால் வெளியைப் பார்ப்பவர்க்குத்தெரியும் அது நெளிந்து ஓடும் ஒரு ஓடையென்பது. எனவே பாம்பு என்று சொல்வதுதகும்.

Zoom in to get a closer look at snake skin

"கடல் மாறு சுழன்று" என்கிறார் நம்மாழ்வார். திருப்பாற் கடலே மாறுபட்டு சுற்றியதாகச் சொல்கிறார். அதாவது அண்ட மோழை வெடிக்கும் போது பருப்பொருள் உருவாகி சுறன்று வீசி வெளியேறி இருக்கிறது. இந்தச் சுழற்சி இன்றும் காணத்தக்கதாய் உள்ளது. பால்வெளி பற்றிய சித்திரங்கள் அது தயிர் கடையும் போது உள்ள ஒருநிலையைச் சுட்டுவதை பார்க்கும் எவரும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். நமது பால் வெளி ஒரு முறை சுழன்று வர 200 மில்லியன் வருடங்கள் ஆகின்றன. இந்தவேகத்திற்கு தாக்குப் பிடிக்க நமது சூரிய மண்டலம் மட்டும் விநாடிக்கு 280கிலோ மீட்டர் வேகத்தில் பால் வெளியின் உள்ளை நோக்கிப் பாய்கிறது. நம்மாழ்வார் பேசுவது இந்த சுழற்சியைப் பற்றி!

இங்கு "அப்பன்" என்பது "உபகாரன்" என்ற பொருளில். என்ன உபகாரம்? ஒவ்வொரு முறையும் 10,000 அடிக்கும் மேல் பறந்து கொண்டு பூமிப் பந்தைப்பார்க்கும் போது பயமுடன் சிந்திப்பேன். இம்மாம் பெரிய கோளத்தை தாங்கும் பலம் என்ன? அது ஒரு நியதியுடன் சுழன்று வர விதி செய்தவன் யார் (அல்லது எது?). அது "அதுவாக" இருந்தாலும் "அவனாக" இருந்தாலும் "அவளாக" இருந்தாலும் அச்செயல் பெரிய உபகாரம்தான் :-)

நான்றில ஏழ்மண்ணுந் தானத்த வேபின்னும்
நான்றில ஏழ்மலை தானத்த வேபின்னும்
நான்றில ஏழ்கடல் தானத்த வேஅப்பன்
ஊன்றி யிடந்தெயிற் றில்கொண்ட நாளே. 7.4.3


முதலில் அண்டக் குமிழி பற்றிப் பேசினார். பின் வின் மண்டலங்களைப் (Galaxy) பற்றிப் பேசினார். அதுபோது உண்டான உரசல் ஒலிகளைப் பற்றிப் பேசினார்.அதன் பிரம்மாண்டமான இயல்புகளைச் சொன்னார். அடுத்து பூமிப் பந்து உருவான கதையைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார். வைணவ மரபில் வராக அவதாரம் எடுத்து திருமால் பூமியைக் காத்தார் என்பது தொன்மம். இதுவும் சங்கத்திற்கு முற்பட்ட ஒரு தமிழகத் தொன்மம்.

அப்படி அவர் தோண்டி எடுக்கும் போது, "ஏழு தீவுகளாய் இருக்கின்ற பூமியை எடுக்கச் செய்தே" என்கிறது ஏடு! இவர்கள் நாவலத் தீவை விட்டு வெளியே போயிருப்பார்களா? இல்லை உலகம் சுற்றி வந்த சேதிகள் ஏதேனும் உண்டோ அக்காலத்தில்? அது என்ன சரியாக ஏழு தீவு? வட, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, யுரேசியா, ஆஸ்திரேலியா, அன்டார்டிக்கா, பச்சைத் தீவு (கிரீன் லாண்டு). எப்படி இவர்களுக்கு இந்தக் கணக்கு தெரிந்தது, கன கச்சிதமாக!மேலும் சொல்கிறார், கடலுக்குள் மறைந்திருக்கும் ஏழுமலைகள் என்று. இது உண்மையிலேயே சுவாரசியமான விஷயம். ஆழம் செல்லும் நீர்மூழ்கி ஆய்வுக்கலங்கள் வந்த பின்தான் நமக்குத் தெரிந்தது கடலுள்ளும் மலைகள் உள்ளன என்று, ஆனால் 12/13ம் நூற்றாண்டு ஈடு "பூமிக்கு ஆணி அடித்தாற்போல இருக்கின்ற ஏழு குல மலைகள்" என்று பேசுவது கொஞ்சம் அதிசயம்தான்!

Before multibeam technology was invented, surveys of sea mounts were made by simple echo sounders.

ஏழ் கடல் என்று சொல்கிறார். சரி வருகிறதா பார்ப்போம். இந்து மகா சமுத்திரம்,பசிபிக், அட்லாண்டிக், மத்தியதரைக் கடல், ஆர்ட்டிக் சமுத்திரம், கருங்கடல், காஸ்பியன்கடல். அட! இது கூட கன கச்சிதமாகப் பொருந்துகிறது.

அது சரி பூமி உருவாகிய காலத்தில் ஏழு தீவுகளும் (கண்டங்கள்) பாங்கே (Pangaea)என்ற ஒரே நிலப் பரப்பாய் இருந்ததாய் அன்றோ அறிவியல் பகல்கிறது? இங்கு மிக நாசுக்காக வியாக்கியனம் செய்யப் படுகிறது. "ஏழ் கடல் தானத்தவே,அப்பன், ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே" என்று சொல்கிறார் நம்மாழ்வார். அதாவது, பூமிப் பந்து உருவாகி கண்டங்களும், கடல்களும் நிலைத்த பின் அவை சிதையாது, குலையாது ஊன்றி கவனித்து எடுத்து வைத்தான் வைகுந்தன் என்று விவரமாகவே சொல்லிப் போகிறார் நம்மாழ்வார்.

Pangaea (அட! இங்கும் ஏழு!)

இங்கும் ஒரு "அப்பன்" போடுகிறார். ஏன்? ஒரு முறை உயரப் பறந்து பாருங்கள்.இந்த பூமிப் பந்து ஒரு சுழற்சி நின்றால் போனது பருவங்கள், போனது வேளாண்மை,போனது யாக்கை! கடல் ஒரு முறை ஊழிப் பெருக்கெடுத்தால்? உறைந்து போயிருக்கும் துருவப் பனி கரைந்து வழிந்தால்? நமது யாக்கை நிலையற்றது. இது நிலை பெறும்வண்ணம் நம்மைக் காக்கும் சக்தியை "அப்பன்" என்று சொல்வது மிகையோ?

பாடல்: வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி - சிலப்பதிகாரம்.

9 பின்னூட்டங்கள்:

  ஜீவா (Jeeva Venkataraman)

Saturday, February 10, 2007

//மத்தியதரைக் கடல், கருங்கடல், காஸ்பியன்கடல்//
இவற்றுக்கு மட்டும் தனி கவனிப்பென்னவோ?

உலகில் பத்து பெரிய கடல்கள்:
1 South China Sea
2 Caribbean Sea
3 Mediterranean Sea
4 Bering Sea
5 Gulf of Mexico
6 Sea of Okhotsk
7 Sea of Japan
8 Hudson Bay
9 East China Sea
10 Andaman Sea

  சேதுக்கரசி

Saturday, February 10, 2007

பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி..

கிருஷ்ணப்பிரேமி அவர்களின் புகைப்படத்தை உங்கள் பதிவில் பார்த்தேன். அவரைப் பற்றி நீங்கள் இட்டிருக்கும் பதிவு(கள்) சுட்டி தரமுடியுமா?

நான் அவரைப் பார்த்திருக்கிறேன், அவர் சொற்பொழிவுகள் பலவற்றைக் கேட்டிருக்கிறேன், ஆனால் அப்போது எனக்கு சிறுவயது, எனவே அதிகம் நினைவில்லை. மிகவும் சுவையாகப் பேசுவாரென்று சொல்வார்கள். அவருடைய சொற்பொழிவு என்றாலே எதிர்நோக்கிக் குதூகலமானவர்கள் என் குடும்பத்தார்.

  நா.கண்ணன்

Saturday, February 10, 2007

ஜீவா: ஆழி சூழ் உலகைப் பகுப்பது எளிது. அதை நம்மவர் சரியாகச் செய்துள்ளனர். கடலைப் பகுப்பது subjective. அதற்குப் பெயரிடுவதில் கூட அரசியல் தகராறுகள் உண்டு (Japan Sea vs East Sea; Baltic Sea vs East Sea).

  நா.கண்ணன்

Saturday, February 10, 2007

அரசி: கிருஷ்ணப்பிரேமி என்றவுடன் உள்ளம் துள்ளுகிறது. பாசுரமடல் உருவான காலத்தில் என் ஆதர்சம் அவர்தான். அப்போது வலைப்பதிவு நுட்பமில்லை. எனவே இப்போது என் ஆசையைத் தீர்த்துக் கொள்கிறேன். அவர் பற்றிய வலைப்பதிவொன்று உள்ளது. இரண்டொரு வலைப்பக்கங்களுமுண்டு. மேல் விவரம் விரைவில் தருகிறேன். [தலபுராணம் பற்றித் தந்தையிடம் விசாரித்தீர்களா?]

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Saturday, February 10, 2007

இதோ, வேலைப்பளுவெல்லாம் ஓரளவு முடிந்து மடல் சுவைக்க மீண்டும் வந்தேன்!

வந்தால் பரனூர் அண்ணா முகப்பில் சிரிக்கிறார்! அருமையான படம் கண்ணன் சார். இருங்க ஒரு எட்டு போய் பழைய பதிவுகளையும் படிச்சுட்டு வர்றேன்...

கடலுக்குள் ஏழு மலைகள் பற்றிய குறிப்பு வியப்பைத் தருகிறது...நம்மாழ்வார் மட்டுமே இது போன்று விஞ்ஞானக் குறிப்புகளை மிகப் பரவலாகத் தருகிறார்!

ஒலிக்கு புவியீர்ப்பு விசையினும் அதிக சக்தியா? 20 hz to 20000 hz வரை தான் நாம் கேட்க முடியும். அதிக அலைவரிசை ஒலியின் ஆற்றல் எப்படி இருக்குமோ?

  நா.கண்ணன்

Saturday, February 10, 2007

வாங்க கண்ணபிரான்: நீங்க இல்லாம களையே இல்லை ;-) இவைகளை மீண்டும் வாசிக்கும் போது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. என்ன ஞானம்! என்ன ஞானம்!! வியப்பின் மேல் வியப்பு! ஆழ்வாராதிகளும் சரி, நம் பூர்வாச்சார்யர்களும் சரி!! கி.பிரேமியின் பிரவச்சனம் இனி துளித்துளி எங்கும் பரவும்.

  சேதுக்கரசி

Saturday, February 10, 2007

//[தலபுராணம் பற்றித் தந்தையிடம் விசாரித்தீர்களா?]//

விரைவில் கேட்கிறேன். என் வீட்டிலுள்ள புத்தகங்களை முதலில் ஒழுங்கு செய்து அடுக்கினால் தான் தேடமுடியும், அந்த வேலையையும் துவங்கப் போகிறேன்!

  நா.கண்ணன்

Sunday, February 11, 2007

அரசி: ஸ்ரீகிருஷ்ணபிரேமி பற்றிய இணைப்புகளை புதிதாய் சேர்த்துள்ளேன். 'வைணவ மழை' இணைப்பில் அவரின் பிரவச்சனதாரையில் குளிக்கலாம்! அவரது கணீரென்ற குரலில் சாற்றும் 'திருப்பல்லாண்டு' சேர்த்திருக்கிறேன். மகிழ்ச்சிதானே!

  சேதுக்கரசி

Monday, February 12, 2007

//மகிழ்ச்சிதானே!//

நிச்சயம்! விரைவில் கேட்கிறேன். நன்றி...