e-mozi

மடல் 092: ஊழிக்கூத்தும், மீண்டும் பிறப்பும்

First published-Date: Fri, 17 Nov 2000 11:58:39 +0200

நம்மாழ்வார் திருமாலின் பராக்கிரமத்தைச் சொல்லப் புகுந்து இவ்வண்டத்தின் தோற்றத்தையும், அது போது நடந்த நிகழ்வுகளையும் வரிசையாக சொல்லத்தலைப் படுகிறார். இது வெறும் செய்யுள் செய்யும் கவியின் படைப்பாக இருக்கவாய்ப்பில்லை. ஞானக் கவிகளாலேதான் இம்மாதிரி பிரபஞ்ச உண்மைகளைப்பற்றி துல்லியமாகப் பேசமுடியும். அதனால்தான் இக்கவிதைகள் காலத்தைக்கடந்து நிற்கின்றன.

அடுத்து வரும் பாசுரத்தைப் பாருங்கள். இதை யாராவது வெறும்மெஞ்ஞானம் என்று சொல்ல முடியுமா? இது விஞ்ஞானம் அல்லவோ?

நாளும் எழ! நிலம் நீரும் எழ! விண்ணும்
கோளும் எழ! எரி காலும் எழ! மலை
தாளும் எழச்சுடர் தானும் எழ! அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே. 7.4.4

திருவனந்தபுரத்தில் சயனித்திருக்கும் பத்மநாபன் ஒரு முறை புரண்டு படுத்தால்ஒரு யுகம் தோன்றி, அழியும் என்பது ஐதீகம். அதன்படி தோற்றத்தைப் பற்றி இதுவரை பேசியவர் அழிவைப் பற்றிப் பேசுகிறார்.

அவாந்தர பிரளயம் என்றும், மஹாபிரளயம் என்று இந்துப் புராணங்கள் பேசுவதைக் கோடி காட்டுகிறார். ஒரு சிற்பி சிலை வடிக்கிறான் என்றால் அவனுக்கு வடிக்க ஒரு வடிவான மாதிரி (model) வேண்டும். ஆனால் பிரளயத்தைப் பற்றிப் பேசும் போது இவர்களுக்கு முன் மாதிரியாக பிரளயங்கள் நடந்திருக்கின்றனவா? அப்படியெனில் அப்பிரளயங்களிலிருந்து இவர்கள் எப்படித் தப்பினர்?இல்லை, "சட்டச் சட, சட்டச் சட" எனப் பேயும் மழையைப் பார்த்துவிட்டு கற்பனை செய்து பேசுகின்றனரா?

பாசுரத்தின் மூலத்தையும் அதற்கான வியாக்கியானத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவர்கள் உண்மையான பிரளயங்களைப் பற்றித்தான் பேசுகின்றனர் என்பது புரிகிறது. ஆக, விஞ்ஞானிகள் இயற்கையில் காணும் உண்மைகளை வைத்து "கோட்பாடுகள்" (theory, hypothesis) செய்வது போல் மெய் ஞானிகளும் தாங்கள் அகத்தில் கண்ட உண்மைகளை வைத்து கோட்பாடுகளை முன் வைக்கின்றனர். சைவ,வைணவ, பெளத்த கோட்பாடுகள் இப்படித்தான் பிரபஞ்ச தோற்றத்தைப் பற்றிப்பேசுகின்றன.

எடுத்த உடனேயே "நாளும் எழ" என்கிறார். அதாவது கால நியதிகள் குலைவு பட அல்லது அழிவு பட என்கிறார். விஞ்ஞானம் தெரியாத ஒரு பாமரக் கவியால் இப்படிப் பேச முடியாது. ஏனெனில் சாதாரணனுக்கு "காலம்" என்பது நித்தியமானதாகவே படும். ஆனால் ஆச்சார்யர்களின் அதிசயமான வியாக்கியனத்தைப் பாருங்கள் (மூலத்தை எழுதியவன் ஞானி என்றால் அதைப் புரிந்து விளக்குபவனும் ஞானிதானே!):

"அக்காலத்தில் பகல் இல்லை, இரவு இல்லை, ஆகாயம் இல்லை, பூமி இல்லை,இருள் இல்லை, சூரிய சந்திரர்கள் இல்லை, வேறு ஒன்றும் இல்லை, பிரஹ்மம் ஒன்றே சமஷ்டி புருஷரூபமாய் இருந்தது (ஸ்ரீவிஷ்ணு புராணம் 1.2:25) என்கின்றபடியே" என்றுஆரம்பித்து அழகான அறிவியல் விளக்கம் தருகிறார் ஈடு ஆசிரியர்,

"ஆண்டு என்றும், மாதம் என்றும், நாள் என்றும், கலை என்றும், காஷ்டை என்றும் சொல்லுகிறவைஎல்லாம் சூரியனுடைய செல்லுதல் வருதலாலே வருகின்றவை அன்றோ? பாகுபாட்டைச்செய்கிற சூரியன் உள்ளே புக்கால் பாகுபடுத்தப்படுகின்ற இவையும் போமித்தனை அன்றோ?" என்று.

சூரியன் இயங்கிக் கொண்டிருக்கும் பொருள் என்பதும், காலம் என்பதும், பருவங்கள் என்பதும் இப்படிச் சூரியனைச் சார்ந்து (relative) வரும் மானிடப் பகுப்பு என்பது தெள்ளத் தெளிவாகவே இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. எனவேதான் சார்ந்திருக்கும் ஒன்று சார்ந்த பொருள் போனபின் போய்விடும் என்று relativity theory பேசமுடிகிறது. ஆச்சர்யமில்லை, ஐன்ஸ்டைனுக்கு இந்திய மெஞ்ஞானம் பிடித்ததில்!

முன்பே கண்டோம், ஐரோப்பியர்கள் பூமி ஒரு வட்டமான தட்டு (தட்டு நிறைய லட்டு :-)) என்று நம்பிக் கொண்டிருக்கும் போது அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் பூமி மட்டுமல்ல கோளம்! ஆனால் இந்த அண்டமே கோளம்!! (அண்ட கோளத்து ஆரணுவாகி-நம்மாழ்வார்) என்று கண்டு சொல்லினர்.

அது மட்டுமல்ல இன்று "ஒளி வருடங்கள்" என்று பேசப் படும் தொலைவு பற்றி அவர்கள் பேசியிருப்பதுடன், அணுவுக்குள், அணுவாய்உள்ள Sub-atomic particles பற்றியும் பேசியிருக்கிறார்கள். இல்லையெனில் இவர்கள் கணிதத்தில் கோடிக்கு மேல் கோடிவரை எண்ணிக்கை இலக்கங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு அதைப் பயன்படுத்தும் தேவை இருந்திருக்கிறது. இதுஉண்மை வெறும் புகழ்ச்சி இல்லை.

நிலம் நீரும் எழ - என்பதற்கு விளக்கம் சொல்லும் போது ஈடு "காரியம் உள்ள இடத்தேகாரணம் தொடர்ந்து நிற்றலைக் காணாநின்றோம்" என்று சொல்லிப் போகிறது. இங்குதான் விஞ்ஞானத்திலிருந்து மெய்ஞானம் பிறக்கிறது. அதாவது நாம் காரியத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். காரணத்தைக் காணுவதில்லை. இந்த சூரியன் சுழல்கிறது. நாளும், திதியும் வருகிறது. விழாவெடுக்கிறோம். பயிர் விளைகிறது. புசிக்கிறோம். புணர்கிறோம், மகிழ்கிறோம். ஆனால் இந்த காரியம் என்பது சார்புடைத்து என்பது நமக்கு விளங்குவதே இல்லை. சார்புடைய காரணம் போய் விட்டால் காரியம் இல்லைதானே?

திருமழிசை ஆழ்வார் "காரணம் நீ, கற்றவை நீ, கற்பவை நீ, நற் கிரிசை நாரணன் நீ நன்கறிந்தேன் நான்" (நான்முகன் திருவந்தாதி) என்று சொல்லி நன்கு அறிந்து கொண்டேன் என்கிறார். இவர்கள் எல்லோரும் ஐன்டைன்னுக்கு முன்னோடிகள் என்றால் தவறில்லை. சார்புடைமை தத்துவத்தை வைத்துதான் "கருத்து முதல்வாதம்" நிற்கிறது.

சுடர்தானும் எழ என்பதற்கு "சொலப்படாத ஒளிப் பொருள்களும் உள்ளே புக" என்று ஈடு சொல்கிறது. அதென்ன சொலப்படாத ஒளிப் பொருள்.? வெறும் ஒளி மட்டுமல்ல, X-ray, nutrinos, quark இப்படிப் பட்ட சமாச்சாரங்கள் உண்டு என்று, அன்றே தெரிந்தது போலும். இல்லையெனில் அப்படியொரு வார்த்தை விழ வேண்டிய அவசியமென்ன?

இப்படி, நாள் (காலம்), நிலம், நீர், விண், கோள், நெருப்பு, காற்று, மலை, சுடர்போன்ற இவையனைத்தும் நாரணனின் வயிற்றுக்குள் போய் சங்கமித்தது.

சாதாரணமாக அல்ல பேரோசையுடன் (=ஊளி). அது சரி, அது என்ன வயிறு என்ற உருவகம்?

இன்றைய அறிவியல் அண்டம் ஒரு வெடிப்பில் (நீர்க்குமிழி உடைவது போல)தோன்றியிருக்க வேண்டும் என்று நம்புகிறது. வெடித்த அன்றிலிருந்து அண்டம்விரிந்து கொண்டே போவது கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது. இப்படி அண்டம் முடிவற்று விரிந்து கொண்டே போகுமா? இல்லை ஒரு நாள் சுருங்கி வந்தது போல் ஒருபுள்ளியில் அடங்கிவிடுமா? என்பது விவாதிக்கப் படுகிறது. கருங்குழிகள் அண்டத்தில் நிரம்பக் கிடப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இப்படிப் பட்ட கருங்குழிகள் பருப்பொருள் அனைத்தையும் உறுஞ்சும் தன்மை கொண்டவையாக உள்ளன. மிகமெலிதான ஒளி கூட உறிஞ்சப் படுகிறது. இதே போல் அண்டக் கடைசியில் ஒருநாள் அனைத்தும் உறிஞ்சப்படும் என்று அறிவியல் நம்புகிறது. இதற்கு "singularity"என்று பெயர். இதைத்தான் கவித்துவத்துடன் நம்மாழ்வார், "அப்பன் ஊளி எழ உலகம் உண்டான்"என்கிறார்.

ஹரிகதை கேட்பவர்கள் பயந்து விடக் கூடாதே என்று நயத்துடன் ஈடு,

"அடைய வளைந்தானுக்குள்ளே புகும் போது திருவாசலில் பிறக்கும் ஆரவாரம்போலே, திருவயிற்றிற்புகுகிற போது பிராணிகளுக்கு உண்டான பரபரப்பான ஒலிகள்கிளர" என்றும், "இவற்றை உறிஞ்சுகிற போதை ஒலிகாண்" என்றும் பேசுகிறது.

மேய்ச்சலுக்குப் போய் வரும் மாடுகள் கிடை சேர்தல் போல் படைக்கப் பட்டபொருள்கள் அனைத்தும் கா(நா)ரணனின் உள்ளே புகுந்து சரணமடைகின்றன!
0 பின்னூட்டங்கள்: