e-mozi

மடல் 086: கண்ணனிற் கொடியது அவன் குழலோசை!

First published: Date: Sat, 15 Jul 2000 13:18:37 +0200

தீராத விளையாட்டு உடைய கண்ணனின் லீலைகளைக் கண்டு சொக்கிப் போகாத கவிஞன் இல்லை, மெய்ஞானி இல்லை, இசைஞானி இல்லை, நாட்டிய மணிகள் இல்லை. எத்தனையோ காவியங்கள், நாடகங்கள், கவிதைகள், இசைச் சித்திரங்கள்,பக்திப் பாடல்கள் இதை வைத்து இந்திய மண்ணில் வந்துள்ளன. ஜெயதேவரின் விரக கவிதையிலிருந்து, பெரியாழ்வாரின் பாகவதம், ஆண்டாளின் காதற்பெருக்கு, பாரதியின் கண்ணம்மா, கண்ணதாசனின் காதல் கவிதைகள் என அனைத்திற்கும் ஜீவனாக கண்ணன் செய்த லீலைகள் அமைகின்றன. வீட்டிற்கு வீடு கண்ணன் உண்டு. கொஞ்சு மொழிப் பெண்கள் உள்ள இடத்தில் கண்ணன் நிச்சயம் உண்டு.

கண்ணனின் இராசலீலை உண்மையில் ஆன்ம தவிப்பின் அழகிய உருவக வெளிப்பாடு. வைஷ்ணவ ஜனதோ எழுதிய நரசிம்மமேத்தா சிறுவனாய் இருக்கும் போது அவன் உறங்கிய கோயில்த் திருமகனான சிவபெருமான் அவனை அழைத்துச் சென்று கண்ணனின் இராசலீலையைக் காணுற வைத்ததாகவும், அதிலிருந்து அவனும் ஒருகண்ணதாசன் ஆனான் எனவும் வடக்கில் கதைகள் வழங்குகின்றன.

"மல்லிகை கமழ்தென்றல் ஈரும் ஆலோ" என்று தொடங்கும் பத்துப்பாடல்களில் கண்ணன் செய்த கலவி நிலையை தமிழ் அகமரபின் வாயிலாக நம்மாழ்வார் நமக்குச் சொல்லி, கலவி பிரிந்தார் நிலையில் உள்ள சோகத்தையும், அப்போது தோன்றும் ஒரு வெறுமை நிலையையும்,ஆற்றாமையையும், மீண்டும் சேருவோமா, மாட்டோமாவெனத் தவிக்கும் உள்ளத் தவிப்பையும் மிக அழகாக விளக்குகின்றார்.

இராமாயணம் செய்த வால்மீகி , "சோகவிஷயமாக இருபத்துநாலாயிரம் கிரந்தம் சொன்னவன் கலவி விஷயமாக ஒன்றும் சொல்லினன்" என்று குறை கூறுகிறது ஈடு. ஆயின் அகமரபின் செழுமை உள்ள தமிழுக்குக் அக்குறை கிடையாது என்பது போல் அமைகின்றன இப்பத்தும்.மீண்டும், மீண்டும் சொன்ன விஷயத்தைத்தானே சொல்கிறார், சொன்ன உவமானங்களைத்தானே பயில்கிறார் என்ற கேள்வி எழலாம். அதுவெறும் ஏட்டுச்சுரைத்தனமாகவே இருக்கும். ஏனெனில் காதலில் ஈடுபட்டவர்க்கு காதலை நினைக்காத பொழுதுகள் வெட்டிப்பொழுதுகளே. உடலையும், உயிரையும் பணயம் வைப்பது காதல்! உடலையும், உயிரையும் நீராய்க் கரைக்க வல்லது காதல்! கலவியின்உச்சத்தில் அடையும் இன்பத்தில் அப்படியே உயிர் போய்விட்டால் என்ன என்று தோன்றும். இன்பமயமாகவே வாழ்வு முடிந்துவிடத்துடிக்கும் மனம். ஆனால் பாராங்குச நாயகி சொல்வது போல் கலவி என்பதே பிரிவின் சுமையைச் சொல்ல வந்ததுதான்! கலவி இல்லையேல் பிரிவும் இல்லைதானே! அந்த ஆற்றமையைச் சொல்வதே இப்பாசுரங்கள்.


புதுமணம் முகந்துகொண்டு எறியும் ஆலோ!
பொங்குஇள வாடைபுன் செக்கர் ஆலோ!
அதுமணந்து அகன்றநம் கண்ணன் கள்வம்
கண்ணனிற் கொடியதுஇனி அதனில் உம்பர்
மதுமணம் மல்லிகை மந்தக் கோவை
வண்பசுஞ் சாந்தினில் பஞ்ச மம்வைத்து
அதுமணந்து இன்அருள் ஆய்ச்சி யர்க்கே
ஊதும் அத்தீம் குழற்கே உய்யேன்

(திருவாய்மொழி 9.9.8)

கவி உள்ளம் துள்ளும் பாசுரங்கள். பொங்கு இள வாடை என்கிறார். அப்படியே தெருவில் நடந்து கொண்டு இருக்கும் போது திடீரென எங்கிருந்தோ பொங்கி வரும் ஒரு இள வாடை, அது மல்லிகையின் மணத்தைச் சுமந்து வரும். அவ்வளவுதான், அந்த மணம் நம் மனத்தை எங்கோ இட்டுச் செல்லும். நம்மை மறந்து எதிரே வரும் எருமை மாடு தெரியாமல் முட்டிக் கொண்டு நிற்போம் :-)) அது இள வாடையாகத்தானேஇருக்க வேண்டும்? :-)

நம்மாழ்வாரும் சேட்டை விடுகிறார் பாருங்கள் :-))கொஞ்சப் பொழுதே வந்து மறையும் மாலை என்பதைச் சுட்ட,"செக்கர்" என்ற ஒரே சொல்! " ஆலோ! என்று வரும் விளிச் சொல். அதில் அடக்கிவிடுகிறார் பெரும் சோகத்தை!! கொஞ்ச நேரம் வரும் சின்னமாலைப் பொழுது பெருந்துயரத்தைத் தந்து போகிறது (புன் செக்கர்)!

அடாடா!கண்ணன் கள்வம். ஓகோ! இது புதிய செய்தி :-))ஆனால் கண்ணனின் கொடியது ஒன்று உண்டு என்கிறார்?! அது என்னவெனில்அது அவன் பேசிய காதல் மொழிகள். வார்த்தை தவறும் அத்தனை கண்ணம்மாக்களின் ஒன்றை உருவம் நம் கண்ணன் :-) கலக்கும் போது நம்முடையவனாக உள்ளான் கண்ணன். கலந்து முடிந்த பிறகு ஆள் மற்ற கோபியருடன் போய் விடுகிறான். அப்படியா? என்ன சொல்ல வருகிறார்கள் நம் முன்னோர்கள்?

தெய்வம் என்பது நம் அகத்துள் உள்ள பொருள் என்றுசொல்லுகிறோம். அதைக் காண்பதே சுத்த ஞானம் என்கிறோம். அதே நேரத்தில் மனித சேவையே மகேசன் சேவை என்கிறோம்! நானே கடவுளாக இருக்கும் போது மற்றவனைப் பற்றி கவலைப் படுவானேன்? ஊக்கூம்....அங்குதான் கிருஷ்ண லீலை ஆரம்பமாகிறது!

இராசலீலை ஆரம்பமாகிறது.உன் உள்ளே வந்து கலந்து உனக்கு தெய்வ இன்பம் காட்டும் அதே தெய்வம்தான் பக்கத்து வீட்டுக்காரன் வீட்டிலும் உள்ளான். இதுமனித அகந்தைக்கு விடும் பெரும் சவால். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் கொடு என்றால் எவன் கொடுப்பான்? பகைவனுக்கு அருள்வாய் நன் நெஞ்சே என்றுதானே நம் நெஞ்சிடமே கதற வேண்டியுள்ளது. அதுதான் இராசலீலை காட்டும் தத்துவம்.

கண்ணன் ஒரு கோபியரிடம் வந்து கலந்து இன்பம் தந்து, கொஞ்சிப் பேசி நான் உன்னவன் என்று சொல்லி "வார்த்தை தவறி" அடுத்தவளிடம் போய்விடுகிறான். "பிருந்தாவனமும், நந்தகுமாரனும் அனைவருக்கும் பொது சொந்தமடி" என்று காட்டுவதுதான் இராசலீலை.

அதன் அடிப்படை உண்மை கண்ணன் எல்லோருள்ளும் உள்ளான். ஒரு இராதையின் மனம் கவர்ந்த அதே கள்வன், மற்ற கோபியரின் உள்ளத்தையும் கவர்கிறான். அவன் குழல் இசையில் மயங்காத ஜீவன் ஏது? நாமெல்லோரும் ஒரு குடும்பம். மானுடம் முழுமைக்கும் ஒரே தெய்வம். இத்தனை சேதிகள்அடங்கியுள்ளன கண்ணனின் விளையாட்டில். இது அவனுக்கு விளையாட்டு. ஆனால் இதைப் புரிந்து கொள்ளாதலால் மனிதனுக்கு உலகு ஒரு குருசேத்திரம். இந்தப் போரைத் தந்திரமாக ஒரு முடிவுக்குகொண்டுவரும் திறமையும் அக்கண்ணனுக்கே இருக்கிறது!

மதுமணம் மல்லிகை மந்தக் கோவை
வண்பசுஞ் சாந்தினில் பஞ்ச மம்வைத்து
அதுமணந்து இன்அருள் ஆய்ச்சி யர்க்கே
ஊதும் அத்தீம் குழற்கே உய்யேன்!


மது நிறைந்த மல்லிகை என்கிறார். இரண்டுமே மயக்கும் பொருள்கள்!மந்தக் கோவை என்று மயக்கும் தன்மையுள்ள மாலையை நம் கழுத்தில் சூட்டுகிறார். போதை தலைக்கு ஏறுகிறது :-) மேலும் மணமுள்ள சாந்துநெஞ்சில்! இன் அருளுடைய ஆய்ச்சியர்க்கே அவன் குழல் ஊதுகிறான். இன் அருள் ஆய்ச்சியர் என்று மிக பாந்தமாக ஆயர்பாடி மக்களைச்சுட்டும் அழகென்ன! யார் இந்த ஆய்ச்சியர். வேறு யார்? நாம்தான்!!

கண்ணனின் குழல் ஓசைக்காகத்தானே இந்தப் பாசுர மடல்களே! காதல், கலவி, இரசம், அகம் இவை தமிழுடன் கலந்த விஷயங்கள். பிரிக்க முடியாது. இதில் ஆச்சாரம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. தாயின் கருக்குடம் நீரின்றி வற்றி விட்டால் கரு வளருமோ? அதுபோல்தான் இதுவும். இதை மிக நன்றாகப் புரிந்து கொண்டு பெருமாள் சந்நிதியில் நடக்கும் வியாக்கியனத்தைக் கேளுங்கள்!

"இன்அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அத்தீம் குழற்கு" என்பதற்கு இப்படிச்சொல்கிறது ஈடு: "காவல் காத்துக்கிடக்கிறவர்களைத் தொடை குத்தி உறங்கச்செய்து, ஒரு பருவத்திற் பெண்களை மயிரைப்பற்றி இழுக்குமாயிற்று இக்குழல் ஓசை" என்ன வருணனை!

ஏதோ ஆங்கிலப் படம் பார்ப்பது போன்றஒரு உணர்வு! Wild eroticism!! எம் மதிப்பிற்குரிய ஆச்சாரியர்கள் ஆச்சாரம் பார்க்கவில்லை. மடி, மடிசாரம் என்று சொல்லி புழுதியில் களைந்து வரும் பிள்ளையைத் தள்ள வைக்கும் மனோநிலையை கண்டிக்கும் குரல் எம் ஆச்சார்ரியர்களது. மனிதம், மனித உணர்வுகள்,மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையில் உள்ள பாசத்தில், காதலில்,யாரும் இடையில் புகுந்து ஆச்சாரம், விதி, அதுவென்று குழப்பிவிடாமல் காத்து நிற்கும் குரல் எம் ஆச்சாரியர்களது. அதன் புனிதத்தைப்புரிந்து கொள்வோம்.

குழலோசை கேட்க வேண்டுமா ?கிருஷ்ணப்பிரேமாம்ருதம்

மடல் 087: மாலையும் வந்தது மாயன் வாரான்!

First published: Date: Mon, 17 Jul 2000 13:13:23 +0200

கண்ணன் குழல் ஊதும் அழகையும், அவன் ஆயர்பாடியில் ஆயர்தம் கொழுந்தாய் இருந்ததையும் யார் முதலில் கண்டு விளம்பினார்கள் என்று, இன்று சொல்வது கடினம். கிருஸ்து பிறப்பதற்கு பலநூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கண்ணன், பலராமன் கதைகள் தமிழ் மண்ணில் உலவி வந்ததாக பேரா. க.பார்த்தசாரதி தனது முனைவர் ஆய்வேட்டில் சொல்கிறார்.

கண்ணன் என்ற அழகிய இடைச்சிறான் பற்றிய கதையும், வர்ணனைகளும் கிருஸ்து பிறந்தநாட்டிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த ஆபிரர்கள் கொண்டு வந்ததாக இருக்கலாமென முனைவர் இரமணி நாயுடு எழுதுகிறார். கிருஸ்துவிற்கும், கண்ணனுக்குமுள்ள பெயர் ஒற்றுமைகளைப் பற்றி வியக்கிறார் முனைவர் இரமணி. இயேசுவின் போதனைகளுக்கும் தமிழ் வைணவத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதும் உண்மை. எது, எங்கிருந்து போனது என்றறிவது சுவாரசியமானது, அதைஆய்வாளர்களுக்கு விடுவோம். கண்ணன் இந்திய மண்ணின்,அகமரபின் அழகிய படிமம். அது நிச்சயமாகத் தெரிகிறது. கண்ணன் என்ற படிமத்தை வைத்து ஆழ் மனக்காதலை, அதன் நளினங்களைநம் கவிகள் மிக அழகாகவே வெளிக் கொணருகின்றனர் என்பது வெள்ளிடை மலை. இது பாரசீக நாட்டில் உண்டாவென்பதை ஆய்வாளர்கள் சொல்லட்டும்!

கண்ணனின் குழல் ஓசை உலகை உய்விக்கும் திறனுடையது. ஆயின் கண்ணனைப் பிரிந்த ஆயர் கன்னிகளுக்கு அவனைக் காணாது வெறும் குழலோசை மட்டும் கேட்டும் போது தீங்குழல் இசையாகவே உள்ளது. இப்படிச் சொல்வது செல்லக் கோபத்தில் சொல்வது. உண்மை என்று நம்பிவிடக் கூடாது:-)

"கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்கோபாலன் குழலைக் கேட்டு நாலு படி பால் கறக்கும், இராமாயி!"என்கிறான் கண்ணதாசன்.


கோபாலா! என்ற பெயரோ, அல்லது அவன் குழலோ போதும், "வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்".கண்ணன் உலகிற்குத் தாய், ஆனால் பசுக்களே கண்ணனின் பெயர் கேட்டாலே தாய்மை மிகப் பொலிந்து தானாக பால் வார்க்கின்றன. ஆயின் இக்குழல் தீங்குழல் ஆனது ஏதோ?

"வாடிக்கை மறப்பதினாலோ?
"என்ன வாடிக்கை?

கண்ணன் குழல் ஊதிக் கொண்டே கண்களால் ஆயர்பாடிப் பெண்களுடன் சல்லாபம் செய்கிறான். சரி, பாசுரத்தைப் படித்துவிட்டு மேல் செல்வோம்:


ஊதும்அத் தீங்குழற் கேஉய் யேன்நான்
அதுமொழிந்து இடைஇடைத் தன்செய் கோலம்
தூதுசெய் கண்கள்கொண்டு ஒன்று பேசித்
தூமொழி இசைகள்கொண்டு ஒன்று நோக்கிப்
பேதுறு முகம்செய்து நொந்து நொந்து
பேதைநெஞ்சு அறவு அறப்பாடும் பாட்டை
யாதும்ஒன்று அறிகிலம்; அம்ம! அம்ம!
மாலையும் வந்தது மாயன் வாரான்

(திருவாய்மொழி 9.9.9)

கண்ணாலே பேச முடியுமா? (பத்மினி, சிவாஜியைத்தான் கேட்க வேண்டும்)கம்பனைக் கூடக் கேட்கலாம்!

நினைந்தமுனி பகர்ந்தவெலாம் நெறிஉன்னி அறிவனும்தன்
புனைந்தசடை முடிதுளக்கிப் போரேற்றின் முகம்பார்த்தான்;
வனைந்தனைய திருமேனி வள்ளலும் அம்மாதாவத்தோன்
நினைந்தவெலாம் நினைந்துஅந்த நெடுஞ்சிலையை நோக்கினான்!


(கம்ப. பால. கார்முகம் 25)

மரவுரி தரித்த மாமன்னன், மாதவத் தோளன் இராகவன், "நினைந்தவெலாம் நினைந்து அந்த நெடுஞ்சிலையை நோக்கினான்". அடடா! என்ன வர்ணனை. இராகவனைக் கண்ணுற்ற மைதிலி சிலையாய் நிற்கிறாள். அது போதாதோ? மேலும் இவன் நினைத்ததெலாம் கண்கள் மூலமாக அவளுக்கு தந்தி அனுப்புகிறான். அவள் மேலும் சிலையாகிறாள்!!

இதைத்தான் "தூதுசெய் கண்கள்" என்கிறார் நம்மாழ்வார். இந்த அகமும், இக்கவிகளும் இல்லையெனில் தமிழ் வாழ்வில் அழகில்லை, ஏன் இன்றைய சினிமாக் காதலே இல்லை எனலாம். அத்துணை கற்பனை வளத்துடன் வாழ்வியல் வளங்களை அள்ளி வாரிவிட்டுச் சென்றுள்ளனர் நம் மூத்தோர்!

கண்ணன் செய்து கொண்ட கோலம் தானகவே கற்பனையாகச் செய்ததாம். அவ்வளவு எளிமையாக, ஆனால் அழகாக பூக்களைக் கொய்து அலங்காரம் செய்து கொள்ளத் தெரிந்திருக்கிறது கண்ணன் என் நம் கள்வனுக்கு. நம்பியும், நம்பி மூத்தபிரானும் (பலதேவன்) செய்து கொள்ளும் அழகை எப்படிக லித்தொகை வர்ணிக்கிறது தெரியுமா?

சாதாரணமாக கிளி போன்ற மூக்கு,அன்ன நடை, என்று இயற்கையை வைத்துதான் மனிதர்களை வர்ணிப்பது. ஆயின் கலித்தொகை நம்பி மூத்தபிரான் பூங்குழல் அழகை வைத்து பூங்கொத்தை வர்ணிக்கிறது!!!

"நீர் பொருகின்ற கரையில் நிற்கும் ஒரு பூங்குழையையுடைய நம்பி மூத்தபிரானைப் போலப் பூங்கொத்துக்கள் பொருந்தின வெண்கடம்பும்" என்பது நச்சினார்கினியார் உரை!

இத்துணை நயம் பொருந்தியது ஆயர்பாடி! ஆயர்பாடி என்பது நம் மனம்தான். அம்மனத்தில் இறைவன் குடிகொள்ளும் போது அது கோகுலமாகிறது. இறைவன் நம்முடன் செய்யும் ஊடல்களும், கூடல்களும் ஆழ்மனப் படிமங்களாய், உருவகங்களாய் கவிதையில் வெளியாகின்றன. அவன் நம் மனத்தே வந்து விட்டால் அது கோகுலம். அவன் இடம் பெயர்ந்து சைத்தான்கள் குடிபுகுந்தால் அது குருசேத்திரம். பிறகு, தினம் போர்தான்:-(

எனவேதான், நம் மனதைக் கோகுலமாக மாற்ற வேண்டிய கடமைநமக்குள்ளது. அதற்கு பாசுரங்கள் உதவுகின்றன. இறைவன் எப்போதும் மனதில் குடிகொண்டுவிட்டால் அது வைகுந்தமாகிவிடும். ஆயின் அவ்வப்போது வந்து, வந்து போகும் போது, அது ஆயர்பாடி ஆகிறது! ஏனெனில்,அவன் வந்து போனபின் விரகதாபம் வருகிறது. "அவன் வருவானா?" என் மனம் ஏங்குகிறது. அப்போது, அவனுடனான நம் உறவு அடிக்கொருதரம் புதுப்பிக்கப் படுகிறது.இத்தகைய மனமுடைய ஆயர்பாடியரின் (அதாவது, நம்மை) மனதுநொந்து போய்விடாமல் இருக்க வேண்டுமே என கண்ணனின் நெஞ்சுபதைப்பதுண்டாம். அப்போது அவன் வேய் குழல் இசை செய்து, தூதுசெய்கண்கள் கொண்டு நமக்கு ஆறுதல் மொழிகள் சொல்வதுண்டாம். இதுதான் வாடிக்கை. ஆனால் சில நேரம் வாடிக்கை மறந்து விடுதல்உண்டு போலும். அப்போது "வாடிக்கை மறந்திடலாமோ?" என நாம்கேள்வி கேட்கவேண்டும் என்று சொல்கிறது திருவாய்மொழி!

அம்ம! அம்ம! மாலையும் வந்தது மாயன் வாரான்!!!


கிருஷ்ணப்பிரேமாம்ருதம்

மடல் 088: ஏறுடைப் பெருநிரை கண்ட முல்லைத் தமிழ்வளம்!

First published: Date: Tue, 18 Jul 2000 00:12:53 +0200


மாலையும் வந்தது; மாயன் வாரான்;
மாமணி புலம்பல் ஏறுஅ ணைந்த;
கோலம்நல் நாகுகள் உகளும் ஆலோ!
கொடியன குழல்களும் குழறும் ஆலோ!
வால்ஒளி வளர்முல்லைக் கருமு கைகள்
மல்லிகை அலம்பிவண்டு ஆலும் ஆலோ!
வேலையும் விசும்பில்விண்டு அலறும் ஆலோ!
என்சொல்லி உய்வன்இங்கு அவனை விட்டே?

(திருவாய்மொழி 9.9.10)

நோபல் பரிசு பெற்ற தாகூரின் கீதாஞ்சலியில் ஒரு பாடல்.அவர் வீட்டு வாசல் கதவை "ஆ" வென்று திறந்து வைத்து விட்டுக்காத்திருக்கிறார். காத்து, காத்து கண்கள் பூத்ததுதான் மிச்சம். கண்கள் கொஞ்சம் அசந்த பொழுதில் கண்ணன் (இறைவன்) வந்து போகிறான். விழித்த போதுதான் தெரிந்தது அவன் வந்து போனது! இந்த ஆற்றமையை கவிதையாக்குகிறார் தாகூர்.

தியாகராஜர் மெய் மறந்து நாத உபாசனையில் நிற்கிறார், சீதா தேவி சமேதராய் இராமன் வந்து போகிறார். மனைவி சொல்லித்தான் தெரிகிறது.அவரது மனது என்ன பாடு பட்டிருக்கும். கீர்த்தனைகளாய் பொழிகிறார்.

இப்படி மாலையும் வந்தது. கண்ணன் வரக் காணோம்.
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா, மார்பு துடிக்குதடீ! இனி உயிர் இருந்து என்ன, போய் என்ன? மாமணிகள் ஒலிக்க ஏறுகள் வீடு திரும்பிவிட்டன. எங்கு பார்த்தாலும் ஆக்களின், கன்றுகளின் ஓசை! ஆனால் கண்ணன் வரக் காணோம்!
குழல் ஓசை எங்கிருந்தோ கேட்கிறது. ஆனால் கண்ணன்வரக் காணோம்.
வெண்ணிலவைப் பழிக்கும் முல்லை, மல்லிகை, கருமுகை போன்றவை மலர்ந்து சிரித்து வண்டுகளுடன் சங்கமித்துகூடி நிற்கின்றன. ஆனால் கண்ணன் வரக் காணோம். இக்கொடுமைகண்டு பொறுக்காது, கடலும் விண்ணில் முட்டி ஆர்ப்பரித்துஅலறுகிறது. ஆயின் கண்ணன் வரக் காணோம்.

இப்படி அவனை விட்டுப் பிரிந்த நான் இனி எதைச் சொல்லிப் பிழைப்பேன் என்று முடிக்கிறார் நம்மாழ்வார். இனி சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை என்று அவரே சொல்லி விட்டார்! கன்றுகள் வந்து போகும் மாட்டுக் கொட்டில் உள்ள வீட்டில் வசித்தால் தெரியும், பிரிவும், சேருதலும் மனிதர்க்கு மட்டும் உரித்தான உணர்வு அல்ல அன்று. ஆவுடைப் பெரு வாழ்வு சங்கப் பாடல்களில் சிலாகித்துப் பேசப் படுகிறது.

தேய்பயில் இறும்பின் கோவலர் யாத்த
ஆபூண்தென்மணி இயம்பும்
உதுக்காண் தோன்றும்எம் சிறுநல் லூரே!

என்று நற்றிணை, நல்லூரின் சிறப்பை ஆ வளம் கொண்டு செப்புகிறது.

எல்லூர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப்
பூல்லார் நல்லான் பூண்மணி


என்கிறது குறுந்தொகை.

கறங்குமணி துவைக்கும் ஏறுடைப் பெருநிரை

என்கிறது மலைபடுகடாம்.

ஆக, கோக்களும், கோவலர்களும் தமிழ்நில அமைவின் நிரந்தரப் பங்காளர்களே. அப்படி இருக்கையில் கண்ணன் கதைகள் கோவலர் நிறைந்த முல்லைத் திணையில் இயல்பாய் தோன்றி வளர்ந்திருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. மேலும்,"மாயோன் மேவ காடுறை உலகமும்" என்று செப்புவதால்முல்லைத் திணையின் ஆன்மீக வெளிப்பாடாக கண்ணன் வந்து நிற்கிறான். கண்ணன் என்னும் கருந்தெய்வம் தமிழ்த் தெய்வம். சூலுடை மேகங்களை நினைவுறுத்தும் அவன் மேனி தற்செயலாக வந்தது அன்று. அது அந்த நில அமைவின் சீரிய பண்பே!

மீரா பஜன் கேட்க:


கிருஷ்ணப்பிரேமாம்ருதம்

மடல் 089: மீட்பர் வருவாரோ?

First published: Date: Tue, 18 Jul 2000 00:13:06 +0200


அவனைவிட்டு அகன்றுஉயிர் ஆற்ற கில்லா
அணிஇழை ஆய்ச்சியர் மாலைப் பூசல்
அவனைவிட்டு அகல்வதற் கேஇ ரங்கி
அணிகுரு கூர்ச்சட கோபன் மாறன்
அவனிஉண்டு உமிழ்ந்தவன் மேல்உ ரைத்த
ஆயிரத் துள்இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றிநின்று உய்ம்மின் தொண்டீர்
அச்சொன்ன மாலை நண்ணித் தொழுதே
(திருவாய் மொழி 9.9.11)


கண்ணனை விட்டு இமைப் பொழுதும் அகலா ஆய்ச்சியர். அகன்ற பொழுதில் உயிர் பிரியும் தன்மையர்.

"கொங்கை மேல்குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து" (ஆண்டாள்) என்கின்றபடியே திருவாய்ப்பாடியில் ஐந்து லக்ஷம் குடியில் பெண்கள் அவன் வரவிற்கு உடலாய்த் தங்களை அலங்கரித்திருக்க, வருங்காலத்தில் அவன்வரக் காணாமையாலே, கிருஷ்ணனைப் பிரிந்த விரகத்தாலே ஒரு மாலைப் பொழுதில் கூப்பிட்ட கூப்பீடு ஆயிற்று என்று சொல்கிறது ஈடு.

ஆண்டாளை உவமை காட்டிப் பேசுகிறது ஈடு.மறைந்த ஒரு சம்பிரதாயத்தை மீட்டுத் தந்தவள் ஆண்டாள். ஆயர்பாடியில் ஐந்து லட்சம் பெண்கள் என்கிறது ஈடு. ஆண்களையும் சேர்த்து ஆயர்பாடி பெரிய நகரமாக இருந்திருக்க வேண்டும். அல்லது கிராமங்கள் பல சேர்ந்த காலனியாக இருந்திருக்க வேண்டும். ஆய்விற்கான ஆவணம் இது.

ஆய்ச்சியர் பட்ட துன்பத்தை தனதாக்கிக் கொண்டு நம்மாழ்வார் செய்விக்கிறார் இப்பாசுரங்களை. பிரிதலும் கூடலுமான இவ்விரகதாபக் கவிதைகளை "அவனி உண்டு உமிழ்ந்தவனான" சர்வேஸ்வரன் பாதாரவிந்தங்களில் சமர்பித்தாயிற்று.பிரிவு-சேர்தல். உலகை விழுங்குதல்,மீண்டும் உருவாக்கல். இதுவொரு அலகில விளையாட்டு. இதுதான் வாழ்வின் சாரம். காயிலே புளித்து, கனியிலே இனித்து, நோயிலே படுத்து,நோன்பிலே தளிர்த்து........அலகிலா விளையாட்டு. காலம், வெளிகடந்த பேருண்மை, காலம்/வெளிக்குள் கட்டுண்ட ஜீவன்களை உய்விக்க காயிலே புளித்து, கனியிலே இனித்து, நோயிலே படுத்து,நோன்பிலே தளிர்த்து........அலகிலா விளையாட்டு. இதைச் சொன்ன நம்மாழ்வாரின் இப்பாசுர மாலையை நண்ணித்தொழுது, அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின், தொண்டீர்காள்!என்று முடிக்கிறார். பாசுரங்களின் கையொப்பம் கடைசிப் பாட்டில் வந்து விழுகிறது. இதில் ஒன்றில்தான் நாம் சரித்திரத்தைத் தொட முடிகிறது. இதுவும் இல்லை என்றால் பெருங்கவிகள் யார் என்றே தமிழ் உலகிற்கு தெரியாமல் போயிருக்கும். இந்த கையொப்பத்தை வைத்துதான் நாலாயிரப் பிரபந்தத் தொகுப்பே தமிழ் உலகிற்குக் கிடைக்கிறது. இப்படியான பலன் சொல்லும் கடைசிப் பாட்டை ஒருவர் சொல்லக் கேட்டு நாதமுனிகள், அப்படியாயின் ஆயிரம் பாடல்கள் எங்குள்ளன என ஆழ்வார் திருநகரி போய், உ.வே.சா போல் ஏடுகளைத் தேடி திருவாய்மொழியை உலகிற்குக் காட்டுகிறார். இதுபோல் இன்னும் எத்தனை பொக்கிஷங்கள் கண்டு கொள்ளப்படாமல் இருக்கின்றனவோ?

கும்மி கொட்டும் பழக்கம் போய்வருகிறது, நாட்டுப் பாடல்களை ஏற்றம் இரைத்து யாரும் பாடுவதில்லை. ஏற்றம் போய் பம்பு செட்டு வந்துவிட்டது! மாட்டு வண்டி கட்டிக் கொண்டு ஒயிலாகப் பாடிப் போகும் வணிகர்கள் இல்லாமலே போய்விட்டனர். பாவைப் பெண்டிரும், இன்ன பிற சம்பிரதாய வழிமுறைகளும் சினிமா மோகத்தில் அழிந்து வருகின்றன. அவைபோயின் நம் பழமைக்குத் திறவு கோல் இல்லாமலே போய்விடும். நாளும் அழியும் தாவர இனங்களும், விலங்கினங்களும் போல் நாளும் அழியும் நம் பழமையும்.

என்று வருவர் மீட்பர்?யார் அந்த மீட்பர்?
அலை பாய்கிறதே மனது? என்ன செய்ய?


கிருஷ்ணப்பிரேமாம்ருதம்