e-mozi

மடல் 086: கண்ணனிற் கொடியது அவன் குழலோசை!

First published: Date: Sat, 15 Jul 2000 13:18:37 +0200

தீராத விளையாட்டு உடைய கண்ணனின் லீலைகளைக் கண்டு சொக்கிப் போகாத கவிஞன் இல்லை, மெய்ஞானி இல்லை, இசைஞானி இல்லை, நாட்டிய மணிகள் இல்லை. எத்தனையோ காவியங்கள், நாடகங்கள், கவிதைகள், இசைச் சித்திரங்கள்,பக்திப் பாடல்கள் இதை வைத்து இந்திய மண்ணில் வந்துள்ளன. ஜெயதேவரின் விரக கவிதையிலிருந்து, பெரியாழ்வாரின் பாகவதம், ஆண்டாளின் காதற்பெருக்கு, பாரதியின் கண்ணம்மா, கண்ணதாசனின் காதல் கவிதைகள் என அனைத்திற்கும் ஜீவனாக கண்ணன் செய்த லீலைகள் அமைகின்றன. வீட்டிற்கு வீடு கண்ணன் உண்டு. கொஞ்சு மொழிப் பெண்கள் உள்ள இடத்தில் கண்ணன் நிச்சயம் உண்டு.

கண்ணனின் இராசலீலை உண்மையில் ஆன்ம தவிப்பின் அழகிய உருவக வெளிப்பாடு. வைஷ்ணவ ஜனதோ எழுதிய நரசிம்மமேத்தா சிறுவனாய் இருக்கும் போது அவன் உறங்கிய கோயில்த் திருமகனான சிவபெருமான் அவனை அழைத்துச் சென்று கண்ணனின் இராசலீலையைக் காணுற வைத்ததாகவும், அதிலிருந்து அவனும் ஒருகண்ணதாசன் ஆனான் எனவும் வடக்கில் கதைகள் வழங்குகின்றன.

"மல்லிகை கமழ்தென்றல் ஈரும் ஆலோ" என்று தொடங்கும் பத்துப்பாடல்களில் கண்ணன் செய்த கலவி நிலையை தமிழ் அகமரபின் வாயிலாக நம்மாழ்வார் நமக்குச் சொல்லி, கலவி பிரிந்தார் நிலையில் உள்ள சோகத்தையும், அப்போது தோன்றும் ஒரு வெறுமை நிலையையும்,ஆற்றாமையையும், மீண்டும் சேருவோமா, மாட்டோமாவெனத் தவிக்கும் உள்ளத் தவிப்பையும் மிக அழகாக விளக்குகின்றார்.

இராமாயணம் செய்த வால்மீகி , "சோகவிஷயமாக இருபத்துநாலாயிரம் கிரந்தம் சொன்னவன் கலவி விஷயமாக ஒன்றும் சொல்லினன்" என்று குறை கூறுகிறது ஈடு. ஆயின் அகமரபின் செழுமை உள்ள தமிழுக்குக் அக்குறை கிடையாது என்பது போல் அமைகின்றன இப்பத்தும்.மீண்டும், மீண்டும் சொன்ன விஷயத்தைத்தானே சொல்கிறார், சொன்ன உவமானங்களைத்தானே பயில்கிறார் என்ற கேள்வி எழலாம். அதுவெறும் ஏட்டுச்சுரைத்தனமாகவே இருக்கும். ஏனெனில் காதலில் ஈடுபட்டவர்க்கு காதலை நினைக்காத பொழுதுகள் வெட்டிப்பொழுதுகளே. உடலையும், உயிரையும் பணயம் வைப்பது காதல்! உடலையும், உயிரையும் நீராய்க் கரைக்க வல்லது காதல்! கலவியின்உச்சத்தில் அடையும் இன்பத்தில் அப்படியே உயிர் போய்விட்டால் என்ன என்று தோன்றும். இன்பமயமாகவே வாழ்வு முடிந்துவிடத்துடிக்கும் மனம். ஆனால் பாராங்குச நாயகி சொல்வது போல் கலவி என்பதே பிரிவின் சுமையைச் சொல்ல வந்ததுதான்! கலவி இல்லையேல் பிரிவும் இல்லைதானே! அந்த ஆற்றமையைச் சொல்வதே இப்பாசுரங்கள்.


புதுமணம் முகந்துகொண்டு எறியும் ஆலோ!
பொங்குஇள வாடைபுன் செக்கர் ஆலோ!
அதுமணந்து அகன்றநம் கண்ணன் கள்வம்
கண்ணனிற் கொடியதுஇனி அதனில் உம்பர்
மதுமணம் மல்லிகை மந்தக் கோவை
வண்பசுஞ் சாந்தினில் பஞ்ச மம்வைத்து
அதுமணந்து இன்அருள் ஆய்ச்சி யர்க்கே
ஊதும் அத்தீம் குழற்கே உய்யேன்

(திருவாய்மொழி 9.9.8)

கவி உள்ளம் துள்ளும் பாசுரங்கள். பொங்கு இள வாடை என்கிறார். அப்படியே தெருவில் நடந்து கொண்டு இருக்கும் போது திடீரென எங்கிருந்தோ பொங்கி வரும் ஒரு இள வாடை, அது மல்லிகையின் மணத்தைச் சுமந்து வரும். அவ்வளவுதான், அந்த மணம் நம் மனத்தை எங்கோ இட்டுச் செல்லும். நம்மை மறந்து எதிரே வரும் எருமை மாடு தெரியாமல் முட்டிக் கொண்டு நிற்போம் :-)) அது இள வாடையாகத்தானேஇருக்க வேண்டும்? :-)

நம்மாழ்வாரும் சேட்டை விடுகிறார் பாருங்கள் :-))கொஞ்சப் பொழுதே வந்து மறையும் மாலை என்பதைச் சுட்ட,"செக்கர்" என்ற ஒரே சொல்! " ஆலோ! என்று வரும் விளிச் சொல். அதில் அடக்கிவிடுகிறார் பெரும் சோகத்தை!! கொஞ்ச நேரம் வரும் சின்னமாலைப் பொழுது பெருந்துயரத்தைத் தந்து போகிறது (புன் செக்கர்)!

அடாடா!கண்ணன் கள்வம். ஓகோ! இது புதிய செய்தி :-))ஆனால் கண்ணனின் கொடியது ஒன்று உண்டு என்கிறார்?! அது என்னவெனில்அது அவன் பேசிய காதல் மொழிகள். வார்த்தை தவறும் அத்தனை கண்ணம்மாக்களின் ஒன்றை உருவம் நம் கண்ணன் :-) கலக்கும் போது நம்முடையவனாக உள்ளான் கண்ணன். கலந்து முடிந்த பிறகு ஆள் மற்ற கோபியருடன் போய் விடுகிறான். அப்படியா? என்ன சொல்ல வருகிறார்கள் நம் முன்னோர்கள்?

தெய்வம் என்பது நம் அகத்துள் உள்ள பொருள் என்றுசொல்லுகிறோம். அதைக் காண்பதே சுத்த ஞானம் என்கிறோம். அதே நேரத்தில் மனித சேவையே மகேசன் சேவை என்கிறோம்! நானே கடவுளாக இருக்கும் போது மற்றவனைப் பற்றி கவலைப் படுவானேன்? ஊக்கூம்....அங்குதான் கிருஷ்ண லீலை ஆரம்பமாகிறது!

இராசலீலை ஆரம்பமாகிறது.உன் உள்ளே வந்து கலந்து உனக்கு தெய்வ இன்பம் காட்டும் அதே தெய்வம்தான் பக்கத்து வீட்டுக்காரன் வீட்டிலும் உள்ளான். இதுமனித அகந்தைக்கு விடும் பெரும் சவால். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் கொடு என்றால் எவன் கொடுப்பான்? பகைவனுக்கு அருள்வாய் நன் நெஞ்சே என்றுதானே நம் நெஞ்சிடமே கதற வேண்டியுள்ளது. அதுதான் இராசலீலை காட்டும் தத்துவம்.

கண்ணன் ஒரு கோபியரிடம் வந்து கலந்து இன்பம் தந்து, கொஞ்சிப் பேசி நான் உன்னவன் என்று சொல்லி "வார்த்தை தவறி" அடுத்தவளிடம் போய்விடுகிறான். "பிருந்தாவனமும், நந்தகுமாரனும் அனைவருக்கும் பொது சொந்தமடி" என்று காட்டுவதுதான் இராசலீலை.

அதன் அடிப்படை உண்மை கண்ணன் எல்லோருள்ளும் உள்ளான். ஒரு இராதையின் மனம் கவர்ந்த அதே கள்வன், மற்ற கோபியரின் உள்ளத்தையும் கவர்கிறான். அவன் குழல் இசையில் மயங்காத ஜீவன் ஏது? நாமெல்லோரும் ஒரு குடும்பம். மானுடம் முழுமைக்கும் ஒரே தெய்வம். இத்தனை சேதிகள்அடங்கியுள்ளன கண்ணனின் விளையாட்டில். இது அவனுக்கு விளையாட்டு. ஆனால் இதைப் புரிந்து கொள்ளாதலால் மனிதனுக்கு உலகு ஒரு குருசேத்திரம். இந்தப் போரைத் தந்திரமாக ஒரு முடிவுக்குகொண்டுவரும் திறமையும் அக்கண்ணனுக்கே இருக்கிறது!

மதுமணம் மல்லிகை மந்தக் கோவை
வண்பசுஞ் சாந்தினில் பஞ்ச மம்வைத்து
அதுமணந்து இன்அருள் ஆய்ச்சி யர்க்கே
ஊதும் அத்தீம் குழற்கே உய்யேன்!


மது நிறைந்த மல்லிகை என்கிறார். இரண்டுமே மயக்கும் பொருள்கள்!மந்தக் கோவை என்று மயக்கும் தன்மையுள்ள மாலையை நம் கழுத்தில் சூட்டுகிறார். போதை தலைக்கு ஏறுகிறது :-) மேலும் மணமுள்ள சாந்துநெஞ்சில்! இன் அருளுடைய ஆய்ச்சியர்க்கே அவன் குழல் ஊதுகிறான். இன் அருள் ஆய்ச்சியர் என்று மிக பாந்தமாக ஆயர்பாடி மக்களைச்சுட்டும் அழகென்ன! யார் இந்த ஆய்ச்சியர். வேறு யார்? நாம்தான்!!

கண்ணனின் குழல் ஓசைக்காகத்தானே இந்தப் பாசுர மடல்களே! காதல், கலவி, இரசம், அகம் இவை தமிழுடன் கலந்த விஷயங்கள். பிரிக்க முடியாது. இதில் ஆச்சாரம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. தாயின் கருக்குடம் நீரின்றி வற்றி விட்டால் கரு வளருமோ? அதுபோல்தான் இதுவும். இதை மிக நன்றாகப் புரிந்து கொண்டு பெருமாள் சந்நிதியில் நடக்கும் வியாக்கியனத்தைக் கேளுங்கள்!

"இன்அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அத்தீம் குழற்கு" என்பதற்கு இப்படிச்சொல்கிறது ஈடு: "காவல் காத்துக்கிடக்கிறவர்களைத் தொடை குத்தி உறங்கச்செய்து, ஒரு பருவத்திற் பெண்களை மயிரைப்பற்றி இழுக்குமாயிற்று இக்குழல் ஓசை" என்ன வருணனை!

ஏதோ ஆங்கிலப் படம் பார்ப்பது போன்றஒரு உணர்வு! Wild eroticism!! எம் மதிப்பிற்குரிய ஆச்சாரியர்கள் ஆச்சாரம் பார்க்கவில்லை. மடி, மடிசாரம் என்று சொல்லி புழுதியில் களைந்து வரும் பிள்ளையைத் தள்ள வைக்கும் மனோநிலையை கண்டிக்கும் குரல் எம் ஆச்சார்ரியர்களது. மனிதம், மனித உணர்வுகள்,மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையில் உள்ள பாசத்தில், காதலில்,யாரும் இடையில் புகுந்து ஆச்சாரம், விதி, அதுவென்று குழப்பிவிடாமல் காத்து நிற்கும் குரல் எம் ஆச்சாரியர்களது. அதன் புனிதத்தைப்புரிந்து கொள்வோம்.

குழலோசை கேட்க வேண்டுமா ?கிருஷ்ணப்பிரேமாம்ருதம்

4 பின்னூட்டங்கள்:

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Wednesday, April 11, 2007

அருமையான "அ"கவிதைகள், (அகக்கவிதைகள்) கண்ணன் சார்.

முப்பத்து மூவர் முன் சென்றது போல், ஆழ்வார்க்கடியானில், ஒரு முப்பது பதிவுகளும் பின் சென்று வாசிக்கணும்.

இராமாயணத்தில் கலவி கலவாததால் தானே ராமனைப் பருக முடியாமல், முனிவர்களும் யோகிகளும் கோபியராய்ப் பிறக்க ஆசை வைத்தனர். அடுத்த அவதாரத்தில் ஆழ்ந்து பருகினர்!

கலத்தலும், கலந்த பின் 'தான்' என்ற எண்ணம் ஆன்மாவிற்கு மிகும் போது புலத்தலும், இனிய லீலைகளே!

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ!
கலப்பார் கண்ணபிரானை அல்லால்
மற்றும் கலப்பரோ! :-)))

  நா.கண்ணன்

Wednesday, April 11, 2007

நன்றி. உண்மையில் வைணவ மரபில் இந்த 'ரச' விஷயங்களைப் பொதுவாகப் பேசுவதில்லை. கதவை அடைத்துக் கொண்டு, அதற்குரிய அதிகாரிகளுடன் ரசிப்பது வழக்கம். நாமும் இப்படியொரு கதவடைப்பு வைபவம் செய்ய வேண்டும்! அது Google Talk/ Yahoo Messenger/Skype-ஆல் முடியும்!

  செல்லி

Friday, April 13, 2007

நா. கண்ணன்
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்புடன்
செல்லி

  நா.கண்ணன்

Friday, April 13, 2007

நன்றி செல்லி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்