e-mozi

மடல் 082: பெண்மை அம்பூ இது!

First published: Date: Fri, 20 Oct 2000 10:25:29 +0200

முனைவர் நா.கணேசனின் (NASA) தூண்டுதலால் நம்மாழ்வாரின் அகப்பாடல்களில் தோயும் போது பல கேள்விகள் உள்ளெழுகின்றன. திரு.சந்திரா (in Agathiyar, Tamil.net)சுட்டிக் காட்டியபடி சங்கப் பாடல்களில் பெரும் பகுதி அகத்தில் அடங்கிவிடுகிறது. அந்த ஒருகாரணத்திற்காக, ஒரு மரபைப் பேணும் கருத்தோடு ஆழ்வார்களும், நாயன்மார்களும் அகமரபில் கவி யாத்தனர் என்று முழுதும் சொல்வதற்கில்லை. அகமரபு என்பதே ஆதி தொட்டு ஆன்ம வெளிப்பாடாவே உள்ளது என்பதுதான் உண்மை. எப்படி எனப் பார்ப்போம்.

புறம் சார்ந்து நம் வாழ்வு இருந்தாலும், அதாவது உடை, உறைவிடம், உணவு என்ற புறம் சார்ந்து நம் வாழ்வு அமைந்தாலும். அவை மட்டுமே ஒருவனுக்கு நிம்மதியைத் தருவதில்லை. பூவின் உள்ளே குடையும் வண்டின் குடைச்சலும், பழத்தின் உள்ளே நெளியும் புழுவின் அரித்தலும் எப்படி வெளியே சட்டெனப் புலப்படுவதில்லையோ அது போல நம் ஒவ்வொருவர் உள்ளும் ஒரு வண்டு தொடர்ந்து குடைந்து கொண்டே இருப்பது வெளியே தெரிவதில்லை.

இவ்வண்டு, உருவற்ற ஒரு ஆன்ம வண்டு. அது ஒரு பொருள் அல்ல. ஒரு இயக்கம். ஒரு மலரைக் காணும் போது வரும் ஒரு சிலிர்ப்பு. ஒரு கவிதையில் தோயும்போது வரும் நிறைவு. இசையில் மயங்கும் போது வரும் மயக்கம். இவையெல்லாம் இந்த ஆன்ம இயக்கத்தின் வெளிப்பாடுகள். இத்தனை மெல்லிய அந்த இயக்கம் - அதாவது வெளியே போன காற்று உள்ளே திரும்பி வராவிட்டால் இது போச்சு - தொடர்ந்து நடக்க ஒரு உடல் தேவைப்படுகிறது. புறம் இன்றி அகம் இல்லை. எனவேதான் ஊனுடம்பு ஆலயம் என்பார் திருமூலர்.

ஆனால் இந்த ஊனுடம்பை ஆட்டி வைப்பது இந்த அகக் காட்சிதான்.அக இயக்கம் ஆடி ஓயும் போது புறம் செயலிழந்து விடுகிறது. எனவே அகமின்றி புறம் இல்லை.ஒரு மலரைக் காணும் போது, ஒரு மயிலைக் காணும் போது, ஒருபெண்ணைக் காணும் போது உள் இயக்கம் சிலிர்க்கிறது (ஆணின் பார்வையில்-பெண்ணிற்கும் இது பொருந்தும்).

உயிர்ப்பின்அடையாளமாக.கண்களும் கண்களும் கலக்கும் போது காதல் பிறக்கிறது.காதல் பிறக்கும் போதே கவிதையும் பிறந்து விடுகிறது. உடனே உருவமில்லாதொரு உருண்டை (ஐயோ! வைரமுத்து ஏனிப்படியொரு உவமை?) உள்ளே உருளத் தொடங்கிவிடுகிறது. கார்டூன் படங்களில் காட்டுவது போல இதயம் பெருத்து, உடலை விட்டு வெளியே வரத்துடிக்கிறது. அல்லது பெண்ணென்ற உடலின் உள்ளே இருக்கும் அந்த இயக்கத்துடன் இரண்டறக் கலக்கத் துடிக்கிறது. இத்துடிப்பு கவிதையாய், காதலாய்,மடலேறுதலாய், வீர பராக்கிரமங்களாய் வெடித்துச் சிதறுகிறது. காதலி கிடைத்தவுடன் அது நின்று விடுவதில்லை. அவளுடன் கலக்கத்துடிக்கிறது. கலவி என்று அதனால்தான் அதற்குப் பெயர். பாரதி சொல்வதுபோல் "முத்தமிட்டு, பல முத்தமிட்டு கூடிடத் துடிக்கிறது". அதில் வரும் இன்பம் அகம் சார்ந்தது. உடம்பு இயைந்து கொடுக்கிறது, அவ்வளவே.

கூடிக் கூடி நிரந்தரமாய் கலக்க ஆன்மா துடித்தாலும் பருப்பொருள் எடுத்த நம் உடல் என்ற தடையால் அது நிகழாமலே போய் விடுகிறது.எனவேதான் கலவியின் முடிவு பிரிவில் நின்று போய்விடுகிறது.அலை கடல் ஓய்வதில்லை. இந்த ஆன்ம முயற்சியும் அலை கடல் போல்மீண்டும், மீண்டும் கலந்து-பிரிந்து, கலந்து-பிரிந்து, கலந்து-பிரிந்து, முயன்று கொண்டே இருக்கிறது. இந்த முயற்சிக்குப் பலன் இல்லாமல் இல்லை.

காருண்யமிக்க இறைமை கலவி இன்பத்தை அருள்வதுடன், கலவியின் பயனாக இன்னொரு ஜீவனைப் படைத்தும் அருள்கிறது. ஆயினும் இது ஒரு சின்னப் பரிசுதான். ஏனெனில் ஆன்மாவினால் கடைசிவரை இரண்டறக் கலக்க முடிவதேயில்லை - உடல் இருக்கும் வரை (இந்த பருப்பொருளான உடம்பை சூட்சும உடம்பாக மாற்ற சித்தர்கள் முயன்றதின் பொருளும் மரணமற்ற பெருவாழ்வு என்பது இறைமையுடன் நித்தியமாய் இருத்தலையே குறிக்கும் என்று நம்புகிறேன்.ஆயினும், இப்பெருவாழ்வு கண்ட வள்ளலாரும் அகப்பாடல்கள் இயற்றியது கவனிக்க வேண்டியது! இங்கு அகம் சார்ந்த ஊடலும். கூடலும் ஆன்ம கலப்பிற்கு உருவகமாக நிற்கின்றன)

இரண்டாவது, உடல் உள்ளவரை ஆன்மா என்பது, இறைமையுடன் இரண்டறக் கலத்தல் இயலாமல் தடைப் படுகிறது. இதனால்தான் சித்தர்கள் ஸ்தூல உடம்பை, சூட்சும உடம்பாக மாற்றுவதில் காலத்தை செலவழித்தனர். இந்நிலையை வைணவம் நாராயணனின் வைகுந்தத்தில் பிறப்பு-இறப்பு அற்ற நித்யசூரிகள் சூழ்ந்துசதா காலமும் இறைவனை அனுபவித்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறது) இந்த ஏக்கம் நிறைவுறாத ஒரு ஏக்கம். இதைச் சரியாகப் புரிந்துகொண்டால் அகமரபு ஒன்றால்தான் இத்தகைய இரண்டறக் கலக்கமுயலும் ஆன்ம முயற்சியைச் சரியாகப் புரிந்து கொண்டு வெளிக்கொணர முடியும் என்பது புரியும். இது மிக, மிக மெல்லிய உணர்வுசார்ந்த ஒரு இயக்கத்தின் வெளிப்பாடு.

எனவேதான் ஆழ்வார்களும்,நாயன்மார்களும், பாரதியும் அகமரபில் பாடல்கள் யாத்தனர். அப்படித்தான் முடியும். வேறுவகையில் முடியவே முடியாது.இதில் எந்த ஆச்சாரமும் கிடையாது. முற்றும் துறவறம் எய்திய சங்கரனும், பட்டினத்தாரும் பெற்ற தாய்க்காக கடைசியில் இறங்கிவருவது அகம் வெல்வதைக் காட்டுகிறது.


பாவியேன் மனத்தேநின்று ஈரும் ஆலோ!
வாடைதண் வாடைவெவ் வாடை ஆலோ!
மேவுதண் மதியம்வெம் மதியம் ஆலோ!
மென்மலர்ப் பள்ளிவெம் பள்ளி ஆலோ!
தூவிஅம் புள்ளுடைத் தெய்வ வண்டு
துதைந்தஎம் பெண்மைஅம் பூஇது ஆலோ!
ஆவியின் பரம்அல்ல வகைகள். ஆலோ!
யாமுடை நெஞ்சமும் துணைஅன்று ஆலோ!

(திருவாய்மொழி 9.9.4)

பாவியேன் மனத்தில் நின்று அது பொல்லாத துன்பம் விளைவிக்கிறது. இத்துன்பம் இல்லையெனில் இன்று ஒரு அகமரபில்லை, இன்று ஒரு பாரதி இல்லை, ஒரு கம்பனில்லை, கண்ணதாசனில்லை, வைரமுத்து இல்லை.

வாடை வழக்கமாகக் குளிரும். இவள் உடம்புச் சூட்டில் அது வெவ்வாடையாகிப் போகிறது. (வைரமுத்துவின் "அந்திமழைபொழிகிறது பாடலை நினைவு படுத்திக் கொள்ளுங்கள் - "தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கிறது!"). குளிர் நிலவு வெம்மதியாய் போய் விடுகிறது. இப்படி புறப்பொருள்களுக்கு அஞ்சி படுக்கையில் விழுந்தால் மலர்ப் படுக்கையும் நோகிறது. அது தலைவனின் கூடலை நினைவு படுத்துகிறது.

நம்மாழ்வாரின் அழகியல் இப்பாடலில் பளிச்சென்று தெரிவது அடுத்தவரியில் , "புள்ளுடைத் தெய்வ வண்டு துதைந்த பெண்மைஅம் பூ!என்பதுதான் அது. கருடனை வாகனமாகக் கொண்டு திருமால் என்ற வண்டு நுகர்ந்த பூ இது என்று தன்னைச் சொல்கிறார். இது ஒரு மோகமுள் என்று சொல்கிறார். இந்த மோக முள் ஆதியில் நம் ஒவ்வொருவருள்ளும் குத்தி விட்டதால்தான் இன்றளவும் காதல் உலகில் நிற்கிறது. இறைவனை வண்டாகக் காணும் அழகுதான் என்னே!

ஆவியின் பரம் அல்ல வகைகள் என்பதை கலவியின் வகைகள் என்றே ஈடு சொல்கிறது. அதன் உள்ளர்த்தம் என்னவெனில், இறைவன் ஒருவனாக இருந்தாலும், அவ்வண்டு துளைக்கும் மலராக நாமெல்லோரும் இருந்தாலும் நம்முள் நிகழும் கலவி வெவ்வேறு வகையானதே. இல்லையெனில் வள்ளலாரின் கவிதையும், நம்மாழ்வாரின் கவிதையும் ஒன்றாகவே இருக்கும். ஒரு தாயுமானவர், மாணிக்கவாசகர், ஒருஆண்டாள், ஒரு காரைக்கால் அம்மையார் என்பது சாத்தியமில்லாமலே போயிருக்கும். இந்த வகைகளில் புணர்வது அவன் விளையாட்டு.இப்பாடலைப் படித்துவிட்டு நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கும்இறைமை வெவ்வேறானதே. அது அவன் சித்தம். அதுதான் கண்ணனின் ராசலீலை. ஒவ்வொரு கோபியின் பக்குவத்திற்கும் ஏற்றவாறு கலவி வேறுபடுகிறது.

தன் பெண்மை அழிந்தபடி பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே"பெண்மை அம்பூ அது" என்று அ·றிணையில் தன்னைக் குறிக்கிறார். கலவியின் உச்சத்தில் "நான்" என்பது இல்லாமல் போவதை நம்மில் பலர் உணர்ந்திருக்கலாம். இப்படி "நான்" என்பது இல்லாமல் அழிக்கும் இயக்கம்தான் இறைவன். பிரபஞ்சத்தில் ஒருவனே புருஷன்.நாமெல்லோரும் கோபிகளே!

கிருஷ்ணபிரேமாமிர்தம்

மடல் 083: யார் துணை கொண்டு வாழ்கிறது இவ்வுலகம்?

Date: Sun, 22 Oct 2000 00:27:45 +0200


யாமுடை நெஞ்சமும் துணைஅன்று ஆலோ!
ஆபுகு மாலையும் ஆகின்றது ஆலோ!
யாமுடை ஆயன்தன் மனம்கல் ஆலோ!
அவனுடைத் தீம்குழல் இரும் ஆலோ!
யாமுடைத் துணைஎன்னும் தோழி மாரும்
எம்மின்முன் அவனுக்கு மாய்வர் ஆலோ!
யாமுடை ஆர்உயிர் காக்கு மாறுஎன்?
அவனுடை அருள்பெறும் போது அரிதே.


(திருவாய்மொழி 9.9.5)

சரணாகதி பற்றிய பேச்சு நிகழும் தருணம்.
ஞான தேசிகன் நம்மாழ்வாரின் உள்ளக் கிடக்கை என்ன?
இப்பாசுரம் சொல்லும் சேதி என்ன?
நம்மால்ஒரு பொழுதாவது நம்மாழ்வார் பேசும் நிலையில் நிற்க முடிகிறதா?
பார்ப்போம்...

வாழ்வு நிலையற்றதாக இருக்கிறது. எத்தனையோ ஊழ்கள் உலகைப் புரட்டி அழிவை வைத்திருக்கின்றன. ஒவ்வொரு 10 மில்லியன் வருடத்திலும் இப்படியொரு உலக அழிவு நிகழ்ந்திருக்கிறது என்று பூமியின் சுவடு காட்டுகிறது. நியூட்டன் காலத்து பெளதீக நியதிகள் கேள்விக்கு வருகின்றன. ஒரு கடிகார நியமத்துடன் கோள்கள் உலா வருகின்றன என்று நம்பியிருந்த கதை போய், வின் கற்களும்,உடைந்த கோள்களும் ஒழுங்கற்ற கதியில் உலா வரும் பாதையில் நிர்கதியாய் பூமிப் பந்து சுழன்று கொண்டிருப்பதாக புதிய வானியல் செப்புகிறது. என்றாவது ஒன்று இடித்தால் ஆயிரம் ஹிரோஷிமாக்கள் இப்பூமியில் :-(சரி, பிறந்து விட்டோம். அதுவாவது சாஸ்வதமாக இருக்கிறதா? புத்தன் சொன்னபிரகாரம் சாவில்லாத வீடு உண்டோ இப்புவியில். நேற்றிருந்தார் இன்றில்லை என்பது உலக நியாயமாக உள்ளது. இது உலகிற்கு பெருமை என்று தாடிக்காரக்கிழவன் வேறு சொல்கிறான் :-) காதல் நிலைப்பதில்லை, கல்யாணம் நிலைப்பதில்லை, வீடு நிலைப்பதில்லை,வரும் நிம்மதி நிலைப்பதில்லை. உண்மையில் வாழ்வு வெளியே சுடர் விளக்கினைப்போல் ஆடிக் கொண்டுள்ளது. இதற்கிடையில் நாம் வாழவேண்டியுள்ளது.

நமது அறிவு சொல்கிறது கவலைப் படாதே நான் சாஸ்வதமென்று:-) அதை நம்பி நடக்க முடிகிறதோ? நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைப்பதாகவாழ்வு உள்ளது. துயிலிழந்த பாஞ்சாலி போல்தான் உள்ளது நம் வாழ்க்கை.

பிச்சேறியவளைப் போல்-அந்தப்
பேயனுந் துகிலினை உரிகையிலே
உட்சோதியிற் கலந்தாள்-அன்னை
உலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள்
ஹரி, ஹரி, ஹரி என்றாள்-கண்ணா
அபய மபய முனக் கபய மென்றாள்!


அப்போதுதான் வாய்க்கிறது நமக்கு சரணாகதி.ஆனால் பாராங்குச நாயகி பேசும் சரணாகதி இன்னும் கொஞ்சம் மென்மையானது.இத்தனை மாயங்களையும் செய்து உலகை சுழற்றிக் கொண்டிருக்கும் இறைமையை அனுபவித்து விட்டு அதை என்றும் தக்க வைத்துக் கொள்ள முடியாத ஒரு ஆற்றாமை! குவாண்டம் பெளதீகர்கள் சொல்வது போன்ற நிலையற்ற தன்மையால் விளைவது. இருப்பது போல் இருக்கிறது. எல்லா இன்பமும் தந்து பின் மறைந்து விடுகிறது. இருக்கிறது-இல்லாமலும் இருக்கிறது. பிடித்தால் கன்று போல் கழுத்தைக்காட்டிக் கொண்டு வருகிறது. பிறகு காற்றைப் போல் மறைந்து விடுகிறது! இதை எப்படி தக்கவைப்பது?

பக்தி என்பது தன் முயற்சியால் வருவதா?இல்லை "அவன் அருளால் அவன் தாள் வணங்கும்" தகையதா? பக்திக்குச்சாலை உண்டோ? குரங்கு போல் அவனைச் சிக்கெனப் பிடித்து நெருங்கமுடியுமா? பேதை நெஞ்சம் பதறுகிறது!

என்னுடை நெஞ்சமும் எனக்குத் துணையில்லாமல் போய்விட்டது! இதுசாத்தியமோ? சாத்தியமே! ஒரு இழப்பு நிகழ்ந்த சமயத்தில் எத்தனைதான் சமாதானம் செய்து கொண்டாலும் அது சுகத்தைத் தருமோ? நெஞ்சு அப்போது ஒரு துணை அல்ல. என்னுடைய துணை என்று இருக்கின்ற நண்பர்களும் (தோழிமார்) ஒரு துணையா? இல்லை என்றுதான் தோன்றுகிறது. அவர்களும் நெஞ்சு போல் சமாதானம் செய்பவர்தான்.அது போதுமோ துக்கத்தின் வலியை நிறுத்த?

பசுக்கள் வீடு வந்து சேருகின்ற மாலையாகிவிட்டது. இது மயக்கும் மாலை,மயங்கும் மாலை. ஆயர்தம் கொழுந்தாகிய கண்ணனுக்கும் கல் மனது என்றாகிவிட்டது. அவன் செய்யும் இனிய குழல் இசையும் ஆறுதல் அளிப்பதாய் இல்லை. அவனது அருள் கிடைப்பது அரிதென்று ஆகிவிட்ட நிலையில் என் உயிரைக் காக்கும் வழி என்ன?

ஞானம் கைவிட்டு விட்டது. அறிவு செயல் இழுந்து விட்டது. நிலைப்புலமான இப்புவியும், அதன் சாரமும் சுவாரசியமற்றதாய் போய்விட்டது. இந்நிலையில் ஒரே கதியென்ற இறைவனும் கல் மனத்தினன் ஆகிவிட்டால் ஐயோ! என் செய்வேன் விதியே?

இந்நிலையில் நாம் இருந்தால் நம் துணையென்று எதுவுமில்லாதிருந்தால் நம்மையறியாமல் சரணம் நிகழ்கிறது. ஐந்து பெரும் கணவர் இருந்தார்,மதி நிறைந்த மன்னர் இருந்தனர், கொதி கொண்ட மக்கள் இருந்தனர்,இருப்பினும் பாஞ்சாலி கதி என்ன? அந்நிலையில் அவளுக்குத் துணை யார்?

ஐம்பெரும் கணவர் யார்? ஐம்பெரும் பூதமா? ஐந்து இந்திரியங்களா? இந்திரியத் துணை கொண்டு தெரிக்கும் சிந்தனைச் சுடரா? அறிவா? எது துணை போனது? இந்நிலையில் நாம் இருந்தால் நம் துணையென்று எதுவுமில்லாதிருந்தால் அச்சரணத்தின் போது

பொய்யர் தந் துயரினைப் போல் - நல்ல
புண்ணிய வாணர் தம் புகழினைப் போல்
தையலர் கருணையைப் போல்-கடல்
சலசலத் தெறிந்திடும் அலைகளைப் போல்
பெண்ணொளி வாழ்த்திடுவார்-அந்த
பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல் போல்

கண்ண பிரான் அருள் சுரக்கின்றது. அவன் அருளால் அவன் கை பிடிக்கின்றோம். பிறவிப் பெருங்கடலை அத்தோணி கொண்டு கடக்கின்றோம். இது எவ்வகைச் சரணாகதி? குரங்கா? பூனையா?

கிருஷ்ணபிரேமாமிர்தம்

மடல் 084: அவ்வருள் அல்லன அருளும் அல்ல!

First published:Date: Sun, 09 Jul 2000 14:06:49 +0200

ஒன்றில் ஈடுபாடு வந்துவிட்டால், ஒன்றில் சுவை ஏற்பட்டுவிட்டால் பின்வேறொன்று கொடுத்து ஈடு செய்ய இயலாது. பாராங்குச நாயகிக்கு பிறந்ததிலிருந்து கன்னல் சுவை போன்ற கண்ணன் சுவை கண்டவள். பிள்ளைப் பிராயத்திலே அச்சுவையில் 16 வருடங்கள் உணவு, உறக்கம் இன்றி இருந்தவள். கண்ணனின் அருள் சுரக்கும் எளிமையைக் கவிதை செய்யப் போய் அவ்வரிகள் தந்த சுவையில் 6 மாதங்கள் நினைவற்று இலயித்தவள். இப்படி இறைமையை அனுபவித்தவளுக்கு மாற்றொன்று தர இயலுமோ? தரும் தகுதி யாருக்கு உண்டு? அதற்கு அதிகாரி யார்?


அவனுடை அருள்பெறும் போது அரிதால்
அவ்வருள் அல்லன அருளும் அல்ல
அவன் அருள் பெறும் அளவு ஆவி நில்லாது
அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனொடு பிரமன்வண் திருமடந்தை
சேர்திரு ஆகம்எம் ஆவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம்? எவன் செய்கேனோ?
ஆருக்குஎன் சொல்லுகேன்? அன்னை மீர்காள்!


(திருவாய்மொழி 9.9.6)

அவனுடைய அருள் பெறுவது அரிதான காரியமாகிவிட்டது. முனிவர்களும்,யோகிகளும் நித்தம் தவம் செய்தும் அரிதாக உள்ளான். அப்படி அரிதாகக் கிடைப்பதாலே அவன் அருள் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அவன் கோயில் வாசலிலே அடியாரும், வானவரும், அரம்பரையும் கிடக்கிறார். சுந்தரர், நெருங்கவிச் சாதரர், நூக்க இயக்கரும் மயங்கினர். அவன் அருள் கிடைக்கத்தான் ஏங்காத உள்ளமெது?

மேலுமாகிக் கீழுமாகி வேறுள திசையுமாகி
விண்ணுமண்ணு மானசக்தி வெள்ளம்-இந்த
விந்தையெல்லா மாங்கது செய் கள்ளம்-பழ
வேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த
வீரசக்தி வெள்ளம்விழும் பள்ளம்-ஆக
வேண்டும் நித்த மென்றனேழை யுள்ளம்!
(பாரதி)


அருள் சக்தி விழும் பள்ளமாக வேண்டுமென் உள்ளம்! அவ்வருள் வேண்டாது நம் நாட்கள் ஊமனார் கண்ட கனவாய், அக்கனவு கூட பழுதான ஒன்றாய் நிற்கிறது!

சேமமே வேண்டித் தீவினை பெருக்கித்
தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய்
ஒழிந்தன கழிந்த அந்நாள்கள்!
(திருமங்கை)

அவன் அருள் கிட்டும் வண்ணம் என்ன அருமை பெருமை உள்ளது என்னிடம்என்று வருந்துகிறார் வள்ளல் பெருமான்.

கற்குமுறை கற்றறியேன்; கற்பனகற் றறிந்த
கருத்தர்திருக் கூட்டத்திற் களித்திருக்க அறியேன்....

மருந்தறியேன் மணியறியேன் மந்திர மொன்றறியேன்
மதியறியேன் விதியறியேன் வாழ்க்கைநிலையறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன் மனமடங்குத் திறத்தனிலோரிடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்வதறிவேனோ?
(திருவருட்பா)

மரணமற்ற பெருவாழ்வு கண்ட வள்ளலார்க்கே அரிதாய் நின்று புலம்ப வைக்கும் அரி தா(ன்) அவன்!

அவனுடை அருள்பெறும் போது அரிதால்
அவ்வருள் அல்லன அருளும் அல்லஇச்சுவை கண்டபின் இந்திரலோகமாளும் அச்சுவை தரினும் வேண்டேன் அரங்கமா நகருளானே! கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து; இன்பரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்; எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலைமேல் தம்பகமாய் நிற்கும் தவம் கிடைத்தால் போதாதோ!

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோனணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!

(திருப்பாணாழ்வார்)


அக் கண்களின் அமுது உண்டவர்க்கு வேறொரு காட்சி இனிக்குமோ?குதம்பாய்! அவ்வருள் அல்லன அருளும் அல்ல...அல்ல..அல்ல.....

சிவனொடு பிரமன்வண் திருமடந்தை
சேர்திரு ஆகம்எம் ஆவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம்? எவன் செய்கேனோ?
ஆருக்குஎன் சொல்லுகேன்? அன்னை மீர்காள்!அவன் திருத்தேகத்தில் சிவனொடு பிரம்மன் உள்ளான். வேறு நொக்கறியா திருமடந்தை உள்ளாள். சமயாதீதமாய் அத்துணை சமயங்களும், அத்துணை தெய்வங்களுமாய் அவன் உள்ளான். இப்படி என்னுள்ளம் கவர்ந்தானைக் காணாது தவிக்கும் எனக்கு புகுமிடம் இனி ஏது? நான் இனி என்செய்கேன்? யாரிடம் என்ன சொல்லுவேன்? அன்னைமீர்காள்

அன்னைமீர்காள் ஒருபதில் சொல்லுங்கள்!........

கிருஷ்ணபிரேமாமிர்தம்

மடல் 085: கண்ணன் கள்வன்

First publication: Date: Mon, 10 Jul 2000 15:39:57 +0200

மேலை நாட்டில் வாழும் நம்மில் பலருக்கு குளிர் பழகிப் போய்விட்டது. குத்தும் பனியிலிருந்து கொடூரப் பனி வரை எல்லாம் நண்பர்களே! ஆனால்,இந்தியாவில் அப்படியல்ல. தாரை உருக்கி, உடலை உருக்கி முடிந்தால் கல்லையும் உருக்கும் வெயில். இப்போது பனிக்காலங்கள் வந்து போவது கூடத்தெரிவதில்லை அங்கு. நண்பர் நா.விச்வநாதன் எழுதுவார், "இந்தமுறை குளிர்அதிகம், சட்டை போடும் படி ஆகிவிட்டது!" என்று :-) நாம் இங்கு ஐம்பதுகிலோ உடை என்ற கவசத்துடன் அலைவது அவருக்குத் தெரியாது :-))ஆனால், மாதம் மும்மாரி பொழிந்த காலத்தில் வாடையும் இருந்தது அம்மாநிலத்தே! வாடை என்றால் எப்படிப் பட்ட வாடை, "அம்பைக்காய்ச்சி அழுத்த உடலினில் எறிவது" போன்ற வாடை. இந்த வாடைக்காலத்தில் எரியூட்டி அமர்ந்து மகிழும் போது காதலனும் உடனிருந்தால் கதகதப்பிற்கு கூடுதல் ருசி! ஆனால் காதலன் இல்லாதபோது?

வாரா ராயினும் வரினும் நமக்குயாரா கியரோ தோழி!
நீரநீலப் மைம்போது உளரிப் புதலபீலி ஒண்பொறிக்
கருவிளையாட்டிநுண்முன் ஈங்கைச் செவ்
வரும்பு ஊழ்த்தவண்ணத் துய்மலர் உதிரத் தண்ணென்றுஇன்னாது
எறிதரும் வாடையொடுஎன்னாயினள்கொல் என்னா தோரே? (குறுந்தொகை 110)

நம் பண்டைப் பழமையின் சித்திரமே போல் அமைவன இப்பாடல்களே.அன்றைய இலக்கியம் இல்லையேல் நம் சரித்திரமே இல்லை என்பது கண்கூடு. தண்ணென்று இருக்க வேண்டிய வாடை "எரிகிறது"! இந்த எரிச்சல்குறுகிய பொழுதாகவாவது அமைகிறதோ, அது "நெடு நல் வாடையாக"அமைந்து விடுகிறது. வருகின்ற எறிவாடை தனியாக வரக்கூடாதோ? சீற்உற்ற அகிற்புகை, அதனுடன்வரும் இனிய வாடை, யாழ் நரம்பில் வரும் பஞ்சமம் பண்ணிசை, தண்ணென்ற பசுஞ்சாந்து நறுமணம், மல்லிகையின் கொல்லும் மணம் இவையெல்லாம் கூட்டணி அமைத்துக் கொண்டு வருகின்றனவாம். எப்படி இருக்கும் நம் பாராங்குசநாயகிக்கு? அவளோ அடிபட்டு போயிருக்கிறாள்!

தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே பாங்கியோனுடன்


என்று சொல்லிவிட்டு, வார்த்தை தவறி விட்டான்.

மேனி கொதிக்குத்தடீ,தலைசுற்றி வேதனை செய்யுதடீ!
கடுமையுடையதடீ! தோழி! மார்பு துடிக்குதடீ!

பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு
தோயும் மது நீயெனக்கு, தும்பியடி நானுக்கு
வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மையெல்லாம்
தூய சுடர் வானெளியே! பாராங்குச நாயகியே!


என்று சொல்லிவிட்டு,

சொன்னமொழிதவறு மன்னவனுக்கே-எங்கும்
தோழமை யில்லையடி தங்கமே தங்கம்;
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிறான்?
அவை யாவும் தெளிவுபெறக் கேட்டு விடடீ!என்று அன்னைமார், தோழிமார் எல்லோரிடமும் முறையிட்டுக் கொண்டிருக்கும் எம் பாராங்குச நாயகிக்கு எறிவாடைதான் ஒன்று குறைச்சல்!


ஆருக்கு சொல்லுவேன் அன்னை மீர்காள்!
ஆர்உயிர் அளவு அன்றுஇக் கூர்தண் வாடை
கார்ஒக்கும் மேனிநம் கண்ணன் கள்வன்
கவர்ந்தஅத் தனிநெஞ்சம் அவன்க ணஃதே
சீர்உற்ற அகிற்புகை யாழ்நரம்பு
பஞ்சமம் தண்பழுஞ் சாந்துஅ ணைந்து
போர்உற்ற வாடைதண் மல்லி கைப்பூப்
புதுமணம் முகந்துகொண்டு எறியும்ஆலோ

(திருவாய்மொழி 9.9.7)

கார் ஒக்கும் கண்ணன் கள்வன்! கார்கால மேகம் போன்று கருணைபொழிகின்ற கண்ணன். வானம் பார்த்த பூமிக்கு கண்ணடித்து பதில்சொல்லும் கார்கால மேகம் போன்ற கண்ணன்.

நிறத்தினிலே கருமைகொண்டான்;-
அவன் நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்!

பாராங்குச நாயகியோ மறக்குலப் பெண்

*சோர மிழைத் திடையர் பெண்களுடனே-
அவன் சூழ்ச்சித் திறமை பல காட்டு வதெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே வேண்டியதில்லை
யென்று சொல்லி விடடீ!அவளிடம் வம்பு வைத்துக் கொள்ளலாமோ இக்கள்வன் கண்ணன்? அதுவும் "கண்ணன் கள்வம் கவர்ந்த அத்தனி நெஞ்சம்" எனவேதான்கேட்கிறாள்:

மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம்-தலை
மறைந்து திரிபவர்க்கு மானமுண்டோ?
ஆற்றங்கரை தனில் முன்ன மொருநாள்-எனை
அழைத்துத் தனியிடத்தில் பேசியதெல்லாம்
தூற்றி நகர்முரசு சாற்றுவ வென்றே
சொல்லி வருவையடி தங்கமே, தங்கம்!!


காலம் கடந்த பொருள் இறைமை என்பதற்கு அழகிய சாட்சிகள் நம் நம்மாழ்வாரும், பாரதியும். நம்மாழ்வாரின் மனோநிலையை வார்த்தைக்கு வார்த்தை படம் பிடிக்கிறான் எம் கவிக் குயில் பாரதி. நீவீர் வாழ்க.

கண்ணாமூச்சி ஏனடா என்று காதலனிடம் கேட்கத் தோன்றுகிறதா?

*நம்மாழ்வார் பாண்டிய அமைச்சரின் மகன்

கிருஷ்ணப்பிரேமாம்ருதம்