e-mozi

மடல் 082: பெண்மை அம்பூ இது!

First published: Date: Fri, 20 Oct 2000 10:25:29 +0200

முனைவர் நா.கணேசனின் (NASA) தூண்டுதலால் நம்மாழ்வாரின் அகப்பாடல்களில் தோயும் போது பல கேள்விகள் உள்ளெழுகின்றன. திரு.சந்திரா (in Agathiyar, Tamil.net)சுட்டிக் காட்டியபடி சங்கப் பாடல்களில் பெரும் பகுதி அகத்தில் அடங்கிவிடுகிறது. அந்த ஒருகாரணத்திற்காக, ஒரு மரபைப் பேணும் கருத்தோடு ஆழ்வார்களும், நாயன்மார்களும் அகமரபில் கவி யாத்தனர் என்று முழுதும் சொல்வதற்கில்லை. அகமரபு என்பதே ஆதி தொட்டு ஆன்ம வெளிப்பாடாவே உள்ளது என்பதுதான் உண்மை. எப்படி எனப் பார்ப்போம்.

புறம் சார்ந்து நம் வாழ்வு இருந்தாலும், அதாவது உடை, உறைவிடம், உணவு என்ற புறம் சார்ந்து நம் வாழ்வு அமைந்தாலும். அவை மட்டுமே ஒருவனுக்கு நிம்மதியைத் தருவதில்லை. பூவின் உள்ளே குடையும் வண்டின் குடைச்சலும், பழத்தின் உள்ளே நெளியும் புழுவின் அரித்தலும் எப்படி வெளியே சட்டெனப் புலப்படுவதில்லையோ அது போல நம் ஒவ்வொருவர் உள்ளும் ஒரு வண்டு தொடர்ந்து குடைந்து கொண்டே இருப்பது வெளியே தெரிவதில்லை.

இவ்வண்டு, உருவற்ற ஒரு ஆன்ம வண்டு. அது ஒரு பொருள் அல்ல. ஒரு இயக்கம். ஒரு மலரைக் காணும் போது வரும் ஒரு சிலிர்ப்பு. ஒரு கவிதையில் தோயும்போது வரும் நிறைவு. இசையில் மயங்கும் போது வரும் மயக்கம். இவையெல்லாம் இந்த ஆன்ம இயக்கத்தின் வெளிப்பாடுகள். இத்தனை மெல்லிய அந்த இயக்கம் - அதாவது வெளியே போன காற்று உள்ளே திரும்பி வராவிட்டால் இது போச்சு - தொடர்ந்து நடக்க ஒரு உடல் தேவைப்படுகிறது. புறம் இன்றி அகம் இல்லை. எனவேதான் ஊனுடம்பு ஆலயம் என்பார் திருமூலர்.

ஆனால் இந்த ஊனுடம்பை ஆட்டி வைப்பது இந்த அகக் காட்சிதான்.அக இயக்கம் ஆடி ஓயும் போது புறம் செயலிழந்து விடுகிறது. எனவே அகமின்றி புறம் இல்லை.ஒரு மலரைக் காணும் போது, ஒரு மயிலைக் காணும் போது, ஒருபெண்ணைக் காணும் போது உள் இயக்கம் சிலிர்க்கிறது (ஆணின் பார்வையில்-பெண்ணிற்கும் இது பொருந்தும்).

உயிர்ப்பின்அடையாளமாக.கண்களும் கண்களும் கலக்கும் போது காதல் பிறக்கிறது.காதல் பிறக்கும் போதே கவிதையும் பிறந்து விடுகிறது. உடனே உருவமில்லாதொரு உருண்டை (ஐயோ! வைரமுத்து ஏனிப்படியொரு உவமை?) உள்ளே உருளத் தொடங்கிவிடுகிறது. கார்டூன் படங்களில் காட்டுவது போல இதயம் பெருத்து, உடலை விட்டு வெளியே வரத்துடிக்கிறது. அல்லது பெண்ணென்ற உடலின் உள்ளே இருக்கும் அந்த இயக்கத்துடன் இரண்டறக் கலக்கத் துடிக்கிறது. இத்துடிப்பு கவிதையாய், காதலாய்,மடலேறுதலாய், வீர பராக்கிரமங்களாய் வெடித்துச் சிதறுகிறது. காதலி கிடைத்தவுடன் அது நின்று விடுவதில்லை. அவளுடன் கலக்கத்துடிக்கிறது. கலவி என்று அதனால்தான் அதற்குப் பெயர். பாரதி சொல்வதுபோல் "முத்தமிட்டு, பல முத்தமிட்டு கூடிடத் துடிக்கிறது". அதில் வரும் இன்பம் அகம் சார்ந்தது. உடம்பு இயைந்து கொடுக்கிறது, அவ்வளவே.

கூடிக் கூடி நிரந்தரமாய் கலக்க ஆன்மா துடித்தாலும் பருப்பொருள் எடுத்த நம் உடல் என்ற தடையால் அது நிகழாமலே போய் விடுகிறது.எனவேதான் கலவியின் முடிவு பிரிவில் நின்று போய்விடுகிறது.அலை கடல் ஓய்வதில்லை. இந்த ஆன்ம முயற்சியும் அலை கடல் போல்மீண்டும், மீண்டும் கலந்து-பிரிந்து, கலந்து-பிரிந்து, கலந்து-பிரிந்து, முயன்று கொண்டே இருக்கிறது. இந்த முயற்சிக்குப் பலன் இல்லாமல் இல்லை.

காருண்யமிக்க இறைமை கலவி இன்பத்தை அருள்வதுடன், கலவியின் பயனாக இன்னொரு ஜீவனைப் படைத்தும் அருள்கிறது. ஆயினும் இது ஒரு சின்னப் பரிசுதான். ஏனெனில் ஆன்மாவினால் கடைசிவரை இரண்டறக் கலக்க முடிவதேயில்லை - உடல் இருக்கும் வரை (இந்த பருப்பொருளான உடம்பை சூட்சும உடம்பாக மாற்ற சித்தர்கள் முயன்றதின் பொருளும் மரணமற்ற பெருவாழ்வு என்பது இறைமையுடன் நித்தியமாய் இருத்தலையே குறிக்கும் என்று நம்புகிறேன்.ஆயினும், இப்பெருவாழ்வு கண்ட வள்ளலாரும் அகப்பாடல்கள் இயற்றியது கவனிக்க வேண்டியது! இங்கு அகம் சார்ந்த ஊடலும். கூடலும் ஆன்ம கலப்பிற்கு உருவகமாக நிற்கின்றன)

இரண்டாவது, உடல் உள்ளவரை ஆன்மா என்பது, இறைமையுடன் இரண்டறக் கலத்தல் இயலாமல் தடைப் படுகிறது. இதனால்தான் சித்தர்கள் ஸ்தூல உடம்பை, சூட்சும உடம்பாக மாற்றுவதில் காலத்தை செலவழித்தனர். இந்நிலையை வைணவம் நாராயணனின் வைகுந்தத்தில் பிறப்பு-இறப்பு அற்ற நித்யசூரிகள் சூழ்ந்துசதா காலமும் இறைவனை அனுபவித்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறது) இந்த ஏக்கம் நிறைவுறாத ஒரு ஏக்கம். இதைச் சரியாகப் புரிந்துகொண்டால் அகமரபு ஒன்றால்தான் இத்தகைய இரண்டறக் கலக்கமுயலும் ஆன்ம முயற்சியைச் சரியாகப் புரிந்து கொண்டு வெளிக்கொணர முடியும் என்பது புரியும். இது மிக, மிக மெல்லிய உணர்வுசார்ந்த ஒரு இயக்கத்தின் வெளிப்பாடு.

எனவேதான் ஆழ்வார்களும்,நாயன்மார்களும், பாரதியும் அகமரபில் பாடல்கள் யாத்தனர். அப்படித்தான் முடியும். வேறுவகையில் முடியவே முடியாது.இதில் எந்த ஆச்சாரமும் கிடையாது. முற்றும் துறவறம் எய்திய சங்கரனும், பட்டினத்தாரும் பெற்ற தாய்க்காக கடைசியில் இறங்கிவருவது அகம் வெல்வதைக் காட்டுகிறது.


பாவியேன் மனத்தேநின்று ஈரும் ஆலோ!
வாடைதண் வாடைவெவ் வாடை ஆலோ!
மேவுதண் மதியம்வெம் மதியம் ஆலோ!
மென்மலர்ப் பள்ளிவெம் பள்ளி ஆலோ!
தூவிஅம் புள்ளுடைத் தெய்வ வண்டு
துதைந்தஎம் பெண்மைஅம் பூஇது ஆலோ!
ஆவியின் பரம்அல்ல வகைகள். ஆலோ!
யாமுடை நெஞ்சமும் துணைஅன்று ஆலோ!

(திருவாய்மொழி 9.9.4)

பாவியேன் மனத்தில் நின்று அது பொல்லாத துன்பம் விளைவிக்கிறது. இத்துன்பம் இல்லையெனில் இன்று ஒரு அகமரபில்லை, இன்று ஒரு பாரதி இல்லை, ஒரு கம்பனில்லை, கண்ணதாசனில்லை, வைரமுத்து இல்லை.

வாடை வழக்கமாகக் குளிரும். இவள் உடம்புச் சூட்டில் அது வெவ்வாடையாகிப் போகிறது. (வைரமுத்துவின் "அந்திமழைபொழிகிறது பாடலை நினைவு படுத்திக் கொள்ளுங்கள் - "தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கிறது!"). குளிர் நிலவு வெம்மதியாய் போய் விடுகிறது. இப்படி புறப்பொருள்களுக்கு அஞ்சி படுக்கையில் விழுந்தால் மலர்ப் படுக்கையும் நோகிறது. அது தலைவனின் கூடலை நினைவு படுத்துகிறது.

நம்மாழ்வாரின் அழகியல் இப்பாடலில் பளிச்சென்று தெரிவது அடுத்தவரியில் , "புள்ளுடைத் தெய்வ வண்டு துதைந்த பெண்மைஅம் பூ!என்பதுதான் அது. கருடனை வாகனமாகக் கொண்டு திருமால் என்ற வண்டு நுகர்ந்த பூ இது என்று தன்னைச் சொல்கிறார். இது ஒரு மோகமுள் என்று சொல்கிறார். இந்த மோக முள் ஆதியில் நம் ஒவ்வொருவருள்ளும் குத்தி விட்டதால்தான் இன்றளவும் காதல் உலகில் நிற்கிறது. இறைவனை வண்டாகக் காணும் அழகுதான் என்னே!

ஆவியின் பரம் அல்ல வகைகள் என்பதை கலவியின் வகைகள் என்றே ஈடு சொல்கிறது. அதன் உள்ளர்த்தம் என்னவெனில், இறைவன் ஒருவனாக இருந்தாலும், அவ்வண்டு துளைக்கும் மலராக நாமெல்லோரும் இருந்தாலும் நம்முள் நிகழும் கலவி வெவ்வேறு வகையானதே. இல்லையெனில் வள்ளலாரின் கவிதையும், நம்மாழ்வாரின் கவிதையும் ஒன்றாகவே இருக்கும். ஒரு தாயுமானவர், மாணிக்கவாசகர், ஒருஆண்டாள், ஒரு காரைக்கால் அம்மையார் என்பது சாத்தியமில்லாமலே போயிருக்கும். இந்த வகைகளில் புணர்வது அவன் விளையாட்டு.இப்பாடலைப் படித்துவிட்டு நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கும்இறைமை வெவ்வேறானதே. அது அவன் சித்தம். அதுதான் கண்ணனின் ராசலீலை. ஒவ்வொரு கோபியின் பக்குவத்திற்கும் ஏற்றவாறு கலவி வேறுபடுகிறது.

தன் பெண்மை அழிந்தபடி பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே"பெண்மை அம்பூ அது" என்று அ·றிணையில் தன்னைக் குறிக்கிறார். கலவியின் உச்சத்தில் "நான்" என்பது இல்லாமல் போவதை நம்மில் பலர் உணர்ந்திருக்கலாம். இப்படி "நான்" என்பது இல்லாமல் அழிக்கும் இயக்கம்தான் இறைவன். பிரபஞ்சத்தில் ஒருவனே புருஷன்.நாமெல்லோரும் கோபிகளே!

கிருஷ்ணபிரேமாமிர்தம்

16 பின்னூட்டங்கள்:

  Anonymous

Saturday, May 12, 2007

ஏங்க நான் கேக்கறனேன்னு தப்பா நினைக்க மாட்டீங்கன்ற நம்பிக்கைல கேக்குறேன். நிஜமான சந்தேகம். இந்த பதிவு ஆத்திகர் அகம் சார்ந்தவர்கள்னு எழுதிருக்கதுனால இங்க தைரியமா கேக்கலாம்னு தோணுது. கேள்வி என்னன்னா (கடுப்பாகிறாதீங்க ப்ளீஸ்) அந்த வெள்ளை யூ வடிவ நாமமும் அதுக்கு நடுவுல இருக்கிற சிவப்பு நிற வட்டத்தில் முடியும் கோடும், கலவிய தானங்க குறிக்குது? ஒரே குழப்பம் என்னன்னா எப்பவும் சிவப்பு பெண், வெண்மை ஆணா இருக்கும், இதுல மாத்தி இருக்கே?

அய்யோ ஆட்டோ அனுப்பி ஆள் வச்சு அடிச்சிராதீங்க இந்த பின்னூட்டத்திக்கு. வேணா டெலீட் பண்ணீருங்க என்னைய "கஸ்மாலம்"னு திட்டீட்டு. :)

  நா.கண்ணன்

Saturday, May 12, 2007

என்னங்க நீங்க இதுக்குப்போயீ! நமது சமயம் அவ்வளவு பாசாண்டியாகிவிட்டது என்றா நினைக்கிறீர்கள். கலவி என்பதை அதன் யதார்த்த அர்த்தத்தில் கொச்சைப் படுத்தாமல் கையாளுவது வைணவம். கோயில் பிரவசனங்களில் கூட தைர்யமாக பல விஷயங்களை எம் முன்னோர் சொல்லியதுண்டு. எனவே உங்களை ஆளை வைத்து அடிக்க வேண்டிய அவசியமே இல்லை :-)

ஆனால், திருமண் என்று அழைக்கப்படும் நாமத்திற்கு இப்படியொரு பொருளுண்டு என்று கேள்விப்பட்டதில்லை. சிவப்பு திருமகளாகிய லக்சுமியைக் குறிப்பது. வெறும் வெள்ளை மண் திருமகள் வாசத்தால் 'திரு' மண் ஆகிறது. பொதுவாக அது திருமாலின் பாதத்தைக் குறிப்பது. பிரபத்தியின் குறியீடாக அது நிற்கிறது. வெறும் மண் திருமாலின் பெயரைச் சொல்லி இட்டுக் கொள்ளும் போது 'நாமம்' (பெயர்) என்றாகிறது. அவ்வளவுதாங்க.

நமது சமயத்தில் கலவிக் குறியீடுகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமெனில் மின்சுவடி எனும் குழுவில் பதிவாகியுள்ள சமீபத்திய மடல்களை வாசியுங்கள். பாரதி சொல்லியபடி முக்காடு போடுதல் தில்லி துருக்கர் பழக்கம். சங்கம் தொடக்கம் இயற்கை வாழ்வு நமது வழக்கம்.

  Anonymous

Sunday, May 13, 2007

பொறுமையாக, அருமையான பதில் தந்துள்ளீர்கள்! ஈ-சுவடி, படித்துப் பார்த்தேன் - பல கட்டுரை கடிதங்களை. ரசித்தேன், குறிப்பாக: சித்தாந்தம் என்பது சிந்தனையின் அந்தம் என்று இவ்வளவு நாள் பிரித்து யோசிக்காமல் விட்டேனே என்று
ஆச்சரியம் கொண்டேன்.

நாமம் என்பது "பெயரால்" என்பதும் இத்தனை நாள் சுயமாக தோணாமல் போனதும் ஆச்சரியமாய் இருக்கிறது. சுய புத்தி இல்லாத இடத்தில் சொல் புத்தி கொண்டு நிரப்பி கொள்கிறேன். அட ஆமா போட்டு கொள்கிறேன்! :)

என்னுள் பல மலங்கள் உண்டு புரிதல்களில். அவை என் பிற புரிதல்களையும் வண்ணம் சேர்த்து காட்டி விடும்! உதாரணத்திற்கு, உங்கள் திருமண் பற்றி விளக்கத்தில் "ஓ பாதமா?" என்று வேறு அர்த்தம் என் மனதில் உதித்தது உண்மை! என்னவோ அப்படியே பார்க்கிறது மனம். திருமாலையும் திருமகளையும் குறிப்பதனால் கலவியே தானோ என்று மீண்டும் என் மனக் குரங்கு கணக்கு போடுகிறது! :)

பதில் தந்தமைக்கு மிக்க நன்றி!

  நா.கண்ணன்

Monday, May 14, 2007

//திருமாலையும் திருமகளையும் குறிப்பதனால் கலவியே தானோ என்று மீண்டும் என் மனக் குரங்கு கணக்கு போடுகிறது! :)//

திரு + மால் = திருமகளை மால் (மயக்குபவன்) செய்பவன். இவர்கள் எப்போதும் ஒருவர் மீது ஒருவர் மயக்கத்தில்தான் இருப்பர். அதில் பாருங்கள் ஆயிரம் நாமங்கள் இருந்தாலும் திருமால் என்பது பிரபலமாக உள்ளது. அதுவொரு வினைச்சொல்! கலவியின் முதல் நிலை.

கலவி என்ற சொல் 'கலத்தல்' என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறக்கிறது. கலவி இல்லையேல் மனித வாழ்வு இல்லை. அதே போல் இறைத் தத்துவதில் சுத்த 'சத்'து (இறைவன்), மாயையுடன் (இறைவி) கலக்கும் போது பிரபஞ்சம் உருவாகிறது. அதனால்தான் சங்கத்தமிழ் இவனை 'மாயோன்' என்கிறது. அதுவும் ஒரு வினைச்சொல் (மாயையை உருவாக்குபவன் அல்லது மாயயையுடன் கலந்திருப்பவன்).

திருமண் இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு. ஒன்று நெற்றியில் பட்டை அடிப்பது (parallel lines), மற்றது நெற்றியில் நேர்கோடு போடுவது (நாமம்). இவை உடலியல் சார்ந்த சிகிச்சை முறைகள். நேர்கோடு போடுவதிலும், பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம், பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம் (நீங்கள் சுட்டுவது), சந்தனத்தில் கீற்று போல் இடும் கோபி (ஆழ்வார்க்கடியன் பதிவில் இருக்கும் பெரியவர் கிருஷ்ணப்பிரேமியின் நெற்றிச்சுட்டு) எனப் பல வகைகள் உண்டு.

கலவிக்குறியை நெற்றியில் இட்டுக்கொள்ளலாமா? என்பது போல் அமைகிறது உங்கள் கேள்வி. உண்மையில் அது அப்படியில்லை எனினும் உங்கள் பாணியில் யோசித்துப் பார்த்தாலும் தவறில்லை என்று தோன்றுகிறது.

யதிராஜா (துறவியின் அரசன்) எனப்படும் இராமானுஜ சீலரிடம் 'அறம், பொருள், இன்பம், வீடு' இவற்றில் எது மிக விசேஷமானது? எனக்கேட்டபோது காமம் என்று சொல்லியிருக்கிறார்!! ஆம்! அக்காமம் கண்ணன் மேல் இருக்க வேண்டும் என்பது. "கண்ணனுக்கே ஆம் அது காமம்" (இராமானுஜ நூற்றந்தாதி). அப்படி இருக்கும் பட்சத்தில், இறைக்கலவியை நெற்றியில் இட்டுக் கொள்வதில் தவறில்லை.

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Saturday, May 26, 2007

//சிவப்பு திருமகளாகிய லக்சுமியைக் குறிப்பது. வெறும் வெள்ளை மண் திருமகள் வாசத்தால் 'திரு' மண் ஆகிறது.
பொதுவாக அது திருமாலின் பாதத்தைக் குறிப்பது. பிரபத்தியின் குறியீடாக அது நிற்கிறது//

இது குறித்து அடியேனுடைய நெடுநாளைய எண்ணம் ஒன்று உள்ளது கண்ணன் சார்.

திருமாலின் பாதத்தைக் குறிப்பது. பிரபத்தியின் குறியீடாக அது நிற்கிறது என்றால்......,
பெருமாளின் நெற்றியிலும் அதே திருமண் இடப்படுகிறதே!
சுவாமி அவர் பாதத்தை அவரே நெற்றியில் தரிப்பது ஏனோ?

பலர் இதற்குப் பதில் சொன்னாலும், லயிக்கவில்லை!
உங்கள் புரிதலை அறிய ஆவலாக உள்ளேன்!

  நா.கண்ணன்

Sunday, May 27, 2007

திருப்பாதத்தை நாம் சுமப்பது சரி, அவன் ஏன் அதை சாற்றிக் கொள்வதாகச் சொல்கிறது, வைணவம்? என்பது கேள்வி.

கண்ணபிரான், நீர் வாழ்க.

இதைப் புரிந்து கொண்டுவிட்டால் வைணவம் பிடிபட்டு விட்டது என்று பொருள். விரிவாக பதில் சொல்ல வேண்டியது. பின்னூட்டத்தில் சூசகமாகச் சொல்கிறேன். உமக்கு விளங்கும், அவன் அருளால்.

பெத்த அப்பன் நான். எனக்கொரு மழலை. அறிவு தர வேண்டியது அப்பனாகிய என் கடமை. ஆனால் நான் என்ன செய்கிறேன்? அப்பிஞ்சு மழலையின், குஞ்சுப்பாதங்களைக் கையால் ஏந்தி என் கண்ணில் ஒற்றிக் கொள்கிறேன், நெற்றியில் வைத்துக் கொள்கிறேன். அப்போது என்ன உவப்பு, என்ன வாஞ்சை, என்ன அன்பு! ஏன் நான் அப்படிச் செய்கிறேன்? எது என்னை அப்படிச் செய்ய வைக்கிறது?

ஈஸ்வர லாபம் சேதனனுக்கா? சேதன லாபம் ஈஸ்வரனுக்கா? என்ற கேள்வி வரும் போது, ஈஸ்வரன்தான் லாபம் அடைகிறானாம்.

நம் நெற்றியில் இருப்பது திருமால் பாதம். திருமால் நெற்றியில் இருப்பது நம் பாதம்!

[நான் உன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே!
நீ என்னையின்றி இலை - திருமழிசை ஆழ்வார்]

புரிந்து கொள்ளப்படவில்லை எனில் இது அபசார விளக்கமாகப் படும். பிரபத்தி என்பது அதிகார விசேஷணம் என்று அதனால்தான் சொல்வது!

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Monday, May 28, 2007

//ஈஸ்வர லாபம் சேதனனுக்கா? சேதன லாபம் ஈஸ்வரனுக்கா?//

//நம் நெற்றியில் இருப்பது திருமால் பாதம். திருமால் நெற்றியில் இருப்பது நம் பாதம்!//

ஆகா
அருமையான விளக்கம் கண்ணன் சார். அடியேன் இன்று வரை புரிந்து கொண்டது நீங்கள் சொன்ன வண்ணமே தான்.

இறைவன் நம் பாதங்களைத் தாங்கிக் கொள்கிறான் என்பதைச் சற்றே தழைந்து, நம் பாதங்கள் போகும் பாதையை எண்ணிக் கொண்டு நம்மை கரை சேர்க்கவே, தன் சிந்தையில் தாங்கி உள்ளான் என்று அடியேன் ஒரு முறை சபையில் சொன்னது, பெரும் சர்ச்சைக்கு உள்ளானது!

இல்லை, பகவானின் திருவடிகளைத் தான் பகவானே தாங்கிக் கொண்டு உள்ளான். அவன் பாதுகா மகிமையும், தயையும் அவனைக் காட்டிலும் உயர்ந்தது என்பதால் தான் அவ்வாறு தாங்கி உள்ளான், என்று சிலர் மறுத்து உரைத்தார்கள்!

புரிந்து கொள்ளப்படவில்லை எனில் இது அபசார விளக்கமாகப் படும்....அப்படியே பட்டது!
அடியேன் அங்கு அமைதி காத்து விட்டேன்!
அடியார் மனம் நோக, கருத்தை வலியுறுத்தும் கல் நெஞ்சம் எனக்கு இருக்கவில்லை!

ஆனால் ஒரு சிலரே, இதனை, உள்வாங்கிக் கொண்டு ஒழுகிறார்கள்!
பெருமாளே அடியார் பாதங்களை எண்ணிக் கொண்டு உள்ளான் என்ற சிந்தனை வந்து விட்டால், பாகவத அபசாரம் என்ற ஒன்றே கனவிலும் வராதே! :-)

கொடுத்தது உன் தனை
எடுத்தது என் தனை
யார் கொலோ சதுரர் என்று சுந்தர்மூர்த்தி சுவாமிகளும் இதைப் பேசுவார்.

நான் உன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே!
நீ என்னையின்றி இலை
என்று ஆழ்வார் பாசுரமும் எத்தனை அழகாய் உணர்த்துகிறது!

அதை அன்புடன் காட்டிய உங்கள் அன்புக்கு நன்றிகள், பல!

  DHIVAKAR

Saturday, June 16, 2007

"பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடியரும் பகவரும் மிக்கது உலகே.."

நம்மாழ்வார் பாடும் இந்தப் பாடலுக்கு (பொலிக..பொலிக..பதிகத்தில் வரும்)எனக்கு பொருள் வேண்டும் கண்ணன்.

ஒருவேளை விளக்குத் திரியில் இருந்து கிடைக்கும் கரு-மை சாந்து மற்றும் நீர் (விபூதி?)யை அணிந்து கொண்டு - என்று பொருள் கொள்ளமுடியுமா?
தவறாக பொருள் இருந்தால் தயை செய்து மன்னிக்கவும்.

பொதுவாக திருமண் அணிவது என்பது உடையவர் காலத்தில் ஏற்பட்டதாக இருக்கலாம். அதற்கு முன்பு சந்தனம் கீற்று போல அணிவது வழக்கம் இருந்ததாக சில வரலாற்று ஆய்வாளர்கள் எழுதியுள்ளார்கள்.

திருமலைத் திருடன் புதினத்துக்காக நான் வைணவ நூல்களை (ஆச்சாரிய வைபவம், மஞ்சரி,கோயில் ஒழுகு)சற்று ஆழ்ந்து படிக்க நேர்ந்தது. திருமண் பற்றி விரிவாக என் கண்களில் படவில்லை. இதைப் பற்றி சற்று விளக்கமுடியுமா?

நன்றி
திவாகர்

  நா.கண்ணன்

Monday, June 25, 2007

திவாகர்!

அழகான பாசுரம். திருவாய்மொழி ஐந்தாம் பத்தில், இரண்டாம் திருவாய்மொழி, பாடல் ஒன்பது.

உலகிற்கு விளக்கம் சொல்லும் வள்ளுவ சூத்திரம் "நீரின்றி அமையாது உலகு" என்பது போன்ற பாடல் இது.

"உலகு அடியாரும், பகவரும் மிக்கது; நீவீர் மேவித்தொழுது உய்ம்மின்" என்பது சடகோப சூத்திரம். இந்த நல்லவர்கள் வேதங்களில் புனிதமான புருஷசூக்தத்தை நாவில் கொண்டு, பூ, புகை (சாம்பிராணி), சாந்து, தெளிந்த நீர் (தண்ணீர்) இவை கொண்டு அச்சுதனை எப்போதும் வழிபடுபவர்கள்" என்பது பாடல் பொருள். இங்கு நீர் என்பது சாம்பல் அல்ல. திருநீறு என்று அதைச் (சாம்பலை) சொல்வது உண்டு. நீறுபூத்த நெருப்பு என்பது வழக்கு.

வேறொரு பாசுரத்தில் நெற்றிச் சுட்டு பற்றிப் பேசுவார். நான் முன்பு சொன்னது போல் பட்டை, திருமண் இவை இரண்டுமே யோகச் சுட்டுகள். படுக்கையாகப் போடுவதைவிட நிற்கும் வடிவில் போடுவது சிறந்தது. இவை குண்டலிணி எழுச்சி பற்றிச் சுட்டுபவை. இராமானுசருக்கும் முன்னாலேயே திருநாம வழக்கம் உண்டு. இது பற்றி விரிவாகப் பேசும் வேதாந்த தேசிகன் (பல வகை திருமண் இடும் வழக்கம் பற்றி) பாதம் இட்டு போடுவது சிறப்பு என்று பகர்வார் (வேடிக்கை என்னவெனில் அவர் வழி எனச்சொல்லும் 'வடகலை' சம்பிரதாயத்தில் பாதம் இடுவதை விட்டு விடுகின்றனர் :-)

  DHIVAKAR

Monday, June 25, 2007

கண்ணன்,
தெளிவித்தமைக்கு நன்றி!

திருமண் பற்றிய கால விளக்கத்துக்கும் நன்றி. சரி! திருமண் இடுவது வைணவர்களின் ஐந்து ஆசாரங்களில் ஒன்றா?
(இதை ஏன் கேட்கிறேன் என்றால் மார்ச்-2003 குமுதம் பக்தி இதழில் என்னுடைய கதை ஒன்று 'ஆயிரமாவது நாள்' பிரசுரித்திருந்தார்கள். திருமங்கை மன்னன் 'குமுதாவின் வேண்டுகோள்படி வைணவராகும் கதை.அதில் திருமண் இடுவது வைணவ பஞ்ச ஆசாரத்தில் ஒன்று என்று நான் குறிப்பிட்டுருந்ததை ஒரு அன்பர் மறுத்து எழுதியிருந்தார்)

  நா.கண்ணன்

Tuesday, June 26, 2007

பாஞ்சராத்திர ஆகமத்தின் படி வைணவருக்கு ஐந்து ஸம்ஸ்காரங்கள் (நல்வினைச் சடங்குகள்)கூறப்பட்டிருக்கின்றன. அவை தாப(சூடு) சம்ஸ்காரம்,
புண்ட்ர(நெற்றி மற்றும் மற்ற இடங்களில் அடையாளமிடுதல்) ஸம்ஸ்காரம், நாம ஸம்ஸ்காரம்
(பெயரை தாஸன் அடியவன் என்று முடியும்படியான
ஒன்றாக வைத்துக்கொள்ளுதல்), மந்த்ர ஸம்ஸ்காரம்
(ஸ்ரீநாராயண மற்றும் பகவானின் மந்திரம் ஒன்றை
குரு ஒருவரால் அதன் மறைபொருளோடு காதில்
உபதேசமாகப் பெறுதல்), யாக ஸம்ஸ்காரம்(திருவாராதனம் மற்றும் பூஜைகளைச் செய்தல்).
பஞ்ச ஸம்ஸ்காரங்கள் பெற்றவன்தான் வைணவனாகக்
கருதப்படுகிறான். அதன்படி ஒருவர் வைணவர் ஆனதற்கு ஏற்ப அவருடைய மனம், சொல், உடல் ஆகியவற்றில் வைணவ நெறிக்கான சில நல்வினை அடையாளங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. அவற்றின் மூலம் அவர் தனக்கும் மற்றவர்க்கும் தான் வைணவராக ஆகிவிட்டதை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறார். இதனால் அவருடைய அக புறச் சூழல்களில் அவருடைய வைணவத்தன்மை
பதிவுபெற்றுக்கொண்டே இருக்கிறது.

ஸம்ஸ்காரங்கள் என்பது வேறு ஆசாரங்கள் என்பது வேறு என்று புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ஸம்ஸ்காரங்கள் -- அடையாளமாக ஏற்படுத்தப்படும் நல்வினைச் சடங்குகள்
ஆசாரங்கள் -- நெறிகளின் படி நடத்தல்.

  DHIVAKAR

Tuesday, June 26, 2007

நான் வைணவத்தைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ளவேண்டும்.

நன்றி கண்ணஞ்.
திவாகர்

  நா.கண்ணன்

Tuesday, June 26, 2007

திவாகர்: வாழ்த்துக்கள். முதலில் ருசி வர வேண்டும். பசித்த பின் புசித்தலே இன்பக்கூட்டு. "மயர்வற மதிநலம் அருள" அவனிடம் மன்றாடுங்கள். "அவன் அருள் அல்லன அருளும் அல்ல". அவன் கிருபாளு. செவி சாய்ப்பான். வாழ்க!

  துளசி கோபால்

Sunday, August 23, 2009

இன்றைக்கு எங்கெங்கேயோச் சுற்றி இங்கே வந்து விழுந்தேன்!! அப்படித்தான் சொல்லணும், வீழ்ந்தவள் இன்னும் எழுந்திரிக்கலை.

நம்ம செராங்கூன் ரோடில் இருக்கும் சிங்கைச்சீனுவின் கோவிலில், கொடிமரத்தை அடுத்து இருக்கும் பெரியதிருவடியின் சந்நிதியில் குட்டியான கோபுரத்தின் மேல் ரெண்டு வெண் பாதங்களும் நடுவில் சிவந்த த்ருஷ்ணமுமா வரைஞ்சு வச்சுருக்கு. அதைப் பார்க்கும்போதே எனக்கு நெஞ்சில் ஒரு ஜிலுஜிலுப்பு வரும். ஆனால்....பாதம் ஏன் என்பதுக்கான விளக்கம் கிடைக்கலை.( கேட்டால் கிடைச்சுருக்குமோ?)

இன்னிக்கு இங்கே எல்லாம் மனசிலாயி.

நன்றி கண்ணன்.

இன்னிக்கு ஹேப்பி பர்த்டே, நம்ம தும்பிக்கை ஆழ்வாருக்கு.

நாமம் வாழ்க!

  நா.கண்ணன்

Sunday, August 23, 2009

துளசி! வாங்கோ! வாங்கோ!! அங்கு சுற்றி, இங்கு சுற்றி அரங்கம் சேர் எனும் கதையாக எல்லாப்பாதைகளும் அரங்கம் நோக்கியே ;-) இது உங்கள் வீடு. துளசிதளம். இதற்குப் போய் என்னைப் பாராட்டுவானேன்? சரி, இன்னக்கி நம்ம தும்பிக்கை ஆழ்வாருக்கும் நாமம் சார்த்திவிடுவோம் ;-) (பதிவில் ஏதோ கோளாறு. சரியாகிவிடும்).

  துளசி கோபால்

Sunday, August 23, 2009

இன்னிக்கு(ம்) நாமம் சார்த்திட்டேன் காலங்கார்த்தாலேயே.....

http://thulasidhalam.blogspot.com/2009/08/blog-post_23.html

அதுக்குப் பதில் சொல்லப்போய்த்தான் அரங்கம் வந்து சேர்ந்தேன்:-)