e-mozi

மடல் 083: யார் துணை கொண்டு வாழ்கிறது இவ்வுலகம்?

Date: Sun, 22 Oct 2000 00:27:45 +0200


யாமுடை நெஞ்சமும் துணைஅன்று ஆலோ!
ஆபுகு மாலையும் ஆகின்றது ஆலோ!
யாமுடை ஆயன்தன் மனம்கல் ஆலோ!
அவனுடைத் தீம்குழல் இரும் ஆலோ!
யாமுடைத் துணைஎன்னும் தோழி மாரும்
எம்மின்முன் அவனுக்கு மாய்வர் ஆலோ!
யாமுடை ஆர்உயிர் காக்கு மாறுஎன்?
அவனுடை அருள்பெறும் போது அரிதே.


(திருவாய்மொழி 9.9.5)

சரணாகதி பற்றிய பேச்சு நிகழும் தருணம்.
ஞான தேசிகன் நம்மாழ்வாரின் உள்ளக் கிடக்கை என்ன?
இப்பாசுரம் சொல்லும் சேதி என்ன?
நம்மால்ஒரு பொழுதாவது நம்மாழ்வார் பேசும் நிலையில் நிற்க முடிகிறதா?
பார்ப்போம்...

வாழ்வு நிலையற்றதாக இருக்கிறது. எத்தனையோ ஊழ்கள் உலகைப் புரட்டி அழிவை வைத்திருக்கின்றன. ஒவ்வொரு 10 மில்லியன் வருடத்திலும் இப்படியொரு உலக அழிவு நிகழ்ந்திருக்கிறது என்று பூமியின் சுவடு காட்டுகிறது. நியூட்டன் காலத்து பெளதீக நியதிகள் கேள்விக்கு வருகின்றன. ஒரு கடிகார நியமத்துடன் கோள்கள் உலா வருகின்றன என்று நம்பியிருந்த கதை போய், வின் கற்களும்,உடைந்த கோள்களும் ஒழுங்கற்ற கதியில் உலா வரும் பாதையில் நிர்கதியாய் பூமிப் பந்து சுழன்று கொண்டிருப்பதாக புதிய வானியல் செப்புகிறது. என்றாவது ஒன்று இடித்தால் ஆயிரம் ஹிரோஷிமாக்கள் இப்பூமியில் :-(சரி, பிறந்து விட்டோம். அதுவாவது சாஸ்வதமாக இருக்கிறதா? புத்தன் சொன்னபிரகாரம் சாவில்லாத வீடு உண்டோ இப்புவியில். நேற்றிருந்தார் இன்றில்லை என்பது உலக நியாயமாக உள்ளது. இது உலகிற்கு பெருமை என்று தாடிக்காரக்கிழவன் வேறு சொல்கிறான் :-) காதல் நிலைப்பதில்லை, கல்யாணம் நிலைப்பதில்லை, வீடு நிலைப்பதில்லை,வரும் நிம்மதி நிலைப்பதில்லை. உண்மையில் வாழ்வு வெளியே சுடர் விளக்கினைப்போல் ஆடிக் கொண்டுள்ளது. இதற்கிடையில் நாம் வாழவேண்டியுள்ளது.

நமது அறிவு சொல்கிறது கவலைப் படாதே நான் சாஸ்வதமென்று:-) அதை நம்பி நடக்க முடிகிறதோ? நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைப்பதாகவாழ்வு உள்ளது. துயிலிழந்த பாஞ்சாலி போல்தான் உள்ளது நம் வாழ்க்கை.

பிச்சேறியவளைப் போல்-அந்தப்
பேயனுந் துகிலினை உரிகையிலே
உட்சோதியிற் கலந்தாள்-அன்னை
உலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள்
ஹரி, ஹரி, ஹரி என்றாள்-கண்ணா
அபய மபய முனக் கபய மென்றாள்!


அப்போதுதான் வாய்க்கிறது நமக்கு சரணாகதி.ஆனால் பாராங்குச நாயகி பேசும் சரணாகதி இன்னும் கொஞ்சம் மென்மையானது.இத்தனை மாயங்களையும் செய்து உலகை சுழற்றிக் கொண்டிருக்கும் இறைமையை அனுபவித்து விட்டு அதை என்றும் தக்க வைத்துக் கொள்ள முடியாத ஒரு ஆற்றாமை! குவாண்டம் பெளதீகர்கள் சொல்வது போன்ற நிலையற்ற தன்மையால் விளைவது. இருப்பது போல் இருக்கிறது. எல்லா இன்பமும் தந்து பின் மறைந்து விடுகிறது. இருக்கிறது-இல்லாமலும் இருக்கிறது. பிடித்தால் கன்று போல் கழுத்தைக்காட்டிக் கொண்டு வருகிறது. பிறகு காற்றைப் போல் மறைந்து விடுகிறது! இதை எப்படி தக்கவைப்பது?

பக்தி என்பது தன் முயற்சியால் வருவதா?இல்லை "அவன் அருளால் அவன் தாள் வணங்கும்" தகையதா? பக்திக்குச்சாலை உண்டோ? குரங்கு போல் அவனைச் சிக்கெனப் பிடித்து நெருங்கமுடியுமா? பேதை நெஞ்சம் பதறுகிறது!

என்னுடை நெஞ்சமும் எனக்குத் துணையில்லாமல் போய்விட்டது! இதுசாத்தியமோ? சாத்தியமே! ஒரு இழப்பு நிகழ்ந்த சமயத்தில் எத்தனைதான் சமாதானம் செய்து கொண்டாலும் அது சுகத்தைத் தருமோ? நெஞ்சு அப்போது ஒரு துணை அல்ல. என்னுடைய துணை என்று இருக்கின்ற நண்பர்களும் (தோழிமார்) ஒரு துணையா? இல்லை என்றுதான் தோன்றுகிறது. அவர்களும் நெஞ்சு போல் சமாதானம் செய்பவர்தான்.அது போதுமோ துக்கத்தின் வலியை நிறுத்த?

பசுக்கள் வீடு வந்து சேருகின்ற மாலையாகிவிட்டது. இது மயக்கும் மாலை,மயங்கும் மாலை. ஆயர்தம் கொழுந்தாகிய கண்ணனுக்கும் கல் மனது என்றாகிவிட்டது. அவன் செய்யும் இனிய குழல் இசையும் ஆறுதல் அளிப்பதாய் இல்லை. அவனது அருள் கிடைப்பது அரிதென்று ஆகிவிட்ட நிலையில் என் உயிரைக் காக்கும் வழி என்ன?

ஞானம் கைவிட்டு விட்டது. அறிவு செயல் இழுந்து விட்டது. நிலைப்புலமான இப்புவியும், அதன் சாரமும் சுவாரசியமற்றதாய் போய்விட்டது. இந்நிலையில் ஒரே கதியென்ற இறைவனும் கல் மனத்தினன் ஆகிவிட்டால் ஐயோ! என் செய்வேன் விதியே?

இந்நிலையில் நாம் இருந்தால் நம் துணையென்று எதுவுமில்லாதிருந்தால் நம்மையறியாமல் சரணம் நிகழ்கிறது. ஐந்து பெரும் கணவர் இருந்தார்,மதி நிறைந்த மன்னர் இருந்தனர், கொதி கொண்ட மக்கள் இருந்தனர்,இருப்பினும் பாஞ்சாலி கதி என்ன? அந்நிலையில் அவளுக்குத் துணை யார்?

ஐம்பெரும் கணவர் யார்? ஐம்பெரும் பூதமா? ஐந்து இந்திரியங்களா? இந்திரியத் துணை கொண்டு தெரிக்கும் சிந்தனைச் சுடரா? அறிவா? எது துணை போனது? இந்நிலையில் நாம் இருந்தால் நம் துணையென்று எதுவுமில்லாதிருந்தால் அச்சரணத்தின் போது

பொய்யர் தந் துயரினைப் போல் - நல்ல
புண்ணிய வாணர் தம் புகழினைப் போல்
தையலர் கருணையைப் போல்-கடல்
சலசலத் தெறிந்திடும் அலைகளைப் போல்
பெண்ணொளி வாழ்த்திடுவார்-அந்த
பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல் போல்

கண்ண பிரான் அருள் சுரக்கின்றது. அவன் அருளால் அவன் கை பிடிக்கின்றோம். பிறவிப் பெருங்கடலை அத்தோணி கொண்டு கடக்கின்றோம். இது எவ்வகைச் சரணாகதி? குரங்கா? பூனையா?

கிருஷ்ணபிரேமாமிர்தம்

2 பின்னூட்டங்கள்:

  R.DEVARAJAN

Monday, October 20, 2008

நம் கோணத்தில் நாம் துயருற்றது போலவும், அதை நீக்க முயன்றது போலவும், இது போன்ற நிலை வேறு யாருக்குமே ஏற்பட்டதில்லை என்றும் ஒரு தோற்றம், அம்மட்டே.
சூழ்நிலையை ஏற்படுத்தியதே அவன்தான்; கல்லாய்க் கிடந்த அஹல்யைக்கு வாழ்வு தந்தது யார் ? அவள் என்ன ஸாதனை செய்தாள் ? அயலானை விரும்பியவள். விமோசனம் தந்ததோடு மட்டுமின்றி அவளை விழுந்து வணங்கினானே !
த்ரௌபதியைக் காத்தான்; வைகுந்தம் போகையில் ‘கோவிந்தா!’ என்று கூப்பிட்ட கடனைக் கழிக்காமல் போகின்றேன் என்றான்.
க்ருஷ்ண தத்வம் நிர்ணயங்களைத் தாண்டியது.
ஆசார்ய புருஷர்கள் ஒருவாறு அனுமானிக்கிறார்கள்.யாரையும் குறைத்துச் சொல்லும் நோக்கம் இல்லை. அவர்கள் இல்லையெனில் இந்த அளவு கூட வெளிச்சம் கிடைத்திருக்காது.

நஞ்சு தந்தவளுக்கு நலமந்தமில்லதோர் பெருநாடு !
வெஞ்சொல் தந்தவனுக்கு வீடு !!

பூதனையும், சிசுபாலனும் எந்த ந்யாயத்தின்படி கடைத்தேறினர் ? எல்லாம் வ்யாஜ மாத்ரமே. ஏதோ ஒரு ஸம்பந்தம் ஏற்பட வேண்டும்.
முக்யோபாயம் முகுந்தன் மட்டுமே.
ஏதோ மனத்தில் பட்டதை எழுதினேன்.

தேவ்

  நா.கண்ணன்

Monday, October 20, 2008

//
முக்யோபாயம் முகுந்தன் மட்டுமே//

மனதில் பதிய வேண்டிய வார்த்தை!