e-mozi

மடல் 084: அவ்வருள் அல்லன அருளும் அல்ல!

First published:Date: Sun, 09 Jul 2000 14:06:49 +0200

ஒன்றில் ஈடுபாடு வந்துவிட்டால், ஒன்றில் சுவை ஏற்பட்டுவிட்டால் பின்வேறொன்று கொடுத்து ஈடு செய்ய இயலாது. பாராங்குச நாயகிக்கு பிறந்ததிலிருந்து கன்னல் சுவை போன்ற கண்ணன் சுவை கண்டவள். பிள்ளைப் பிராயத்திலே அச்சுவையில் 16 வருடங்கள் உணவு, உறக்கம் இன்றி இருந்தவள். கண்ணனின் அருள் சுரக்கும் எளிமையைக் கவிதை செய்யப் போய் அவ்வரிகள் தந்த சுவையில் 6 மாதங்கள் நினைவற்று இலயித்தவள். இப்படி இறைமையை அனுபவித்தவளுக்கு மாற்றொன்று தர இயலுமோ? தரும் தகுதி யாருக்கு உண்டு? அதற்கு அதிகாரி யார்?


அவனுடை அருள்பெறும் போது அரிதால்
அவ்வருள் அல்லன அருளும் அல்ல
அவன் அருள் பெறும் அளவு ஆவி நில்லாது
அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனொடு பிரமன்வண் திருமடந்தை
சேர்திரு ஆகம்எம் ஆவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம்? எவன் செய்கேனோ?
ஆருக்குஎன் சொல்லுகேன்? அன்னை மீர்காள்!


(திருவாய்மொழி 9.9.6)

அவனுடைய அருள் பெறுவது அரிதான காரியமாகிவிட்டது. முனிவர்களும்,யோகிகளும் நித்தம் தவம் செய்தும் அரிதாக உள்ளான். அப்படி அரிதாகக் கிடைப்பதாலே அவன் அருள் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அவன் கோயில் வாசலிலே அடியாரும், வானவரும், அரம்பரையும் கிடக்கிறார். சுந்தரர், நெருங்கவிச் சாதரர், நூக்க இயக்கரும் மயங்கினர். அவன் அருள் கிடைக்கத்தான் ஏங்காத உள்ளமெது?

மேலுமாகிக் கீழுமாகி வேறுள திசையுமாகி
விண்ணுமண்ணு மானசக்தி வெள்ளம்-இந்த
விந்தையெல்லா மாங்கது செய் கள்ளம்-பழ
வேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த
வீரசக்தி வெள்ளம்விழும் பள்ளம்-ஆக
வேண்டும் நித்த மென்றனேழை யுள்ளம்!
(பாரதி)


அருள் சக்தி விழும் பள்ளமாக வேண்டுமென் உள்ளம்! அவ்வருள் வேண்டாது நம் நாட்கள் ஊமனார் கண்ட கனவாய், அக்கனவு கூட பழுதான ஒன்றாய் நிற்கிறது!

சேமமே வேண்டித் தீவினை பெருக்கித்
தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய்
ஒழிந்தன கழிந்த அந்நாள்கள்!
(திருமங்கை)

அவன் அருள் கிட்டும் வண்ணம் என்ன அருமை பெருமை உள்ளது என்னிடம்என்று வருந்துகிறார் வள்ளல் பெருமான்.

கற்குமுறை கற்றறியேன்; கற்பனகற் றறிந்த
கருத்தர்திருக் கூட்டத்திற் களித்திருக்க அறியேன்....

மருந்தறியேன் மணியறியேன் மந்திர மொன்றறியேன்
மதியறியேன் விதியறியேன் வாழ்க்கைநிலையறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன் மனமடங்குத் திறத்தனிலோரிடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்வதறிவேனோ?
(திருவருட்பா)

மரணமற்ற பெருவாழ்வு கண்ட வள்ளலார்க்கே அரிதாய் நின்று புலம்ப வைக்கும் அரி தா(ன்) அவன்!

அவனுடை அருள்பெறும் போது அரிதால்
அவ்வருள் அல்லன அருளும் அல்லஇச்சுவை கண்டபின் இந்திரலோகமாளும் அச்சுவை தரினும் வேண்டேன் அரங்கமா நகருளானே! கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து; இன்பரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்; எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலைமேல் தம்பகமாய் நிற்கும் தவம் கிடைத்தால் போதாதோ!

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோனணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!

(திருப்பாணாழ்வார்)


அக் கண்களின் அமுது உண்டவர்க்கு வேறொரு காட்சி இனிக்குமோ?குதம்பாய்! அவ்வருள் அல்லன அருளும் அல்ல...அல்ல..அல்ல.....

சிவனொடு பிரமன்வண் திருமடந்தை
சேர்திரு ஆகம்எம் ஆவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம்? எவன் செய்கேனோ?
ஆருக்குஎன் சொல்லுகேன்? அன்னை மீர்காள்!அவன் திருத்தேகத்தில் சிவனொடு பிரம்மன் உள்ளான். வேறு நொக்கறியா திருமடந்தை உள்ளாள். சமயாதீதமாய் அத்துணை சமயங்களும், அத்துணை தெய்வங்களுமாய் அவன் உள்ளான். இப்படி என்னுள்ளம் கவர்ந்தானைக் காணாது தவிக்கும் எனக்கு புகுமிடம் இனி ஏது? நான் இனி என்செய்கேன்? யாரிடம் என்ன சொல்லுவேன்? அன்னைமீர்காள்

அன்னைமீர்காள் ஒருபதில் சொல்லுங்கள்!........

கிருஷ்ணபிரேமாமிர்தம்

2 பின்னூட்டங்கள்:

  குமரன் (Kumaran)

Thursday, May 17, 2007

மிக மிக அருமையான பாசுரத்தை அறிமுகம் செய்தீர்கள் கண்ணன் ஐயா.

அவ்வருள் அல்லது அருளும் அல்ல என்னும் போதும் சிவனொடு பிரமன்வண் திருமடந்தை சேர்திரு ஆகம் என் ஆவி ஈரும் என்னும் போதும் உள்ளம் உருகுகிறது.

  நா.கண்ணன்

Thursday, May 17, 2007

நன்றி குமரன். கனி உண்டோருக்கன்றோ கனிச்சுவை புரியும்!