e-mozi

மடல் 076 - கலி நீக்கம் - நிழல் வெளியும், நிஜவெளியும்

First published on : Mon, 13 Mar 2000 10:04:09 +0200

தமிழம், மலையகம் இவை தோன்றி சூட்சுமமாக இருக்கும் நமது நிழல்வெளி சமுதாயத்திற்கு ஒரு நிஜவெளி அந்தஸ்த்து கொண்டுவந்திருப்பதைக் கண்டு ஆனந்திக்கிறேன். அமீரகக் குழுமம் இதற்கொரு முன்னோடி. மின் மன்றங்கள் போல் மின் தமிழ், அ.ஐ.கூ.நாடுகளில் உருவாகும் நேரமிது. வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

நிழல்வெளி நிஜமாகும் போதுதான் உண்மைகள் நிஜமாகச் சுடுவது தெரியும். மின் அஞ்சல் என்பது வெள்ளை மாளிகையில் உட்கார்ந்து கொண்டு ஈராக் மக்களுடன் சண்டை போடுவது போன்றது. ஆனால் தமிழம், மலையகம் என்பவை நேரடியாக களத்தில் இறங்கி சண்டை போடுவது. களத்தில் இறங்கினால் காயம் படும். அது தவிர்க்க இயலாதது. அதை தாங்கும் பலம் உள்ளவர்கள்தான் இதை ஆரம்பித்து உள்ளார்கள் என்பதும் தெரிகிறது. அறியாமை என்பதுதான் நமது பொது எதிரி. அதை அறிவுத் தீயால் சுட்டெரிக்க வேண்டியது நமது கடமை ("படித்தவன் சூதும், வாதும் செய்தால் ஐயோ என்று போவான்" என்பது பாரதி வாக்கு). அறியாமை என்பது நிழல்வெளியைப் பொருத்தவரை ஒரு கருத்து. காற்றில் எல்லோராலும் கத்தியை வீச முடியும்! ஆனால் நிஜ வாழ்வில் அறியாமை மனித உருக் கொள்கிறது. கொடுமைகள் செய்கிறது.

இதற்கு நல்ல உதாரணம் தருமபுரி. அறியாமை இருளில் அப்பித் திரிபவர்கள் தன் கையில் ஆளுமையைக் கொண்டு வரும் போது? "பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" - ஆம்! அதுதான் தமிழ் மண்ணில் நடந்திருக்கிறது. சுற்றுலா போய் வந்த மாணவியர் எரிக்கப் பட்டனர். போய் வந்தவர் சொல்கிறார்கள், குழுத் தலைவி இன்னும் சில மாணவிகள் இறங்கவில்லை, பொறுங்கள் ஐயா! என்று கெஞ்சியும் அரக்கர்கள் வண்டியில் எண்ணெய் ஊற்றி பற்ற வைத்திருக்கின்றனர். இது ஒளிப்பதிவு செய்யப் பட்டிருக்கிறதாம். இது நிஜம். அறியாமைக்கு அசுரபலம் உண்டு என்பதை இது காட்டுகிறது. இது தடுக்கப் பட வேண்டும்.

அறிவொளி இயக்கம் இணையத்தின் துணையுடன் மீண்டும் உலாவரச் செய்ய வேண்டும். மக்களிடம் உண்மை போய்ச் சேர வேண்டும். அடுத்து ஒரு செய்தி. தமிழக அரசு தமிழ் எழுத மின் செயலிகள் ஒன்று 6000 ரூபாய் என்று கொடுத்து மதுரையிலிருந்து வாங்க எண்ணியுள்ளதாம். வேடிக்கை எண்ணவெனில் 70 களிலேயே ஆதமி என்றொரு தமிழ்ச் செயலியை இலவசமாகக் கொடுத்து சாதனை புரிந்தவர் முனைவர்.சீனிவாசன். முனைவர்.கல்யாண் தமிழுக்குச் செய்துவரும் தொண்டு ஊர் அறிந்தது. அவர் மெக்கின்டாஷ் போன்ற கணினித் தளங்களுக்கும் உதவும் வகையில் "மயிலை" செய்து இலவசமாகத் தந்தார். முத்துவின் முரசு, முனைவர் குப்புசாமியின் கம்பன், சிவகுருநாதனின் நளினம், முனைவர். நா.கோவிந்தசாமியின் கணியன் இப்படி எத்தனை தமிழ்ச் செயலிகள் இலவசமாக உலா வருகின்றன. ஆனால் ஏழை நாடான தமிழகம் 6000 ரூபாய் விலை கொடுத்து புதிய செயலிகளை வாங்க எண்ணியுள்ளது. இலவசமாகக் கொடுப்பதாக சொல்லிக் கொண்டும் கொடுக்கும் 6 முழ வேட்டியில் ஒரு முழம் வெட்டி காசு பார்த்த தமிழகம்!! படித்தவனும், படிக்காதவனும் சூதும், வாதும் செய்துதான் பிழைத்துக் கொண்டு உள்ளார்கள். இவர்கள் சமூகத்தின் காளான்கள். ஒட்டுண்ணிகள். இவர்களின் பேயாட்டம் தமிழ் மண்ணில் சாயவேண்டும்.

தமிழமும், மலையகமும், அமீரகமும், மின்தமிழும் இதற்கு உதவுமா? உதவ வேண்டும்.

கொன்று உயிர் உண்ணும் விசாதி
பகைபசி தீயன வெல்லாம்
நின்றிவ் வுலகில் கடிவான்
நேமிப் பிரான் தமர் போந்தார்
நன்றிசை பாடியும் துள்ளியாடியும்
ஞாலம் பறந்தார்
சென்று தொழுதுய்ம்மின்; தொண்டீர்!
சிந்தையைச் செந்நிறுத்தியே
(தி.வா.மொ. 5.2.6)

சிந்தையை செம்மையாக நிறுத்தி, கொன்று உயிர் உண்ணும் பகைவர்களாகிய தீயனவெல்லாம் தமிழ் மண்ணில் நில்லாமல் செய்யவேண்டும். நம் அறிவு அதைச் செய்யுமா? அப்படிச் செய்து மகிழும் காலையில் எம் அடியார்கள் நன்று இசை பாடி, துள்ளி ஆடி ஞாலத்தில் பறப்பர் என்பது உறுதி. ஆழ்வார்களின் பாடல்களில் இத்தகைய முழக்கங்களை நிரம்பக் கேட்கலாம். ஏனெனில் ஆழ்வார்கள் மோட்சம் பெற காவி உடை அணிந்து காடு போகச் சொல்லவில்லை. பெண்ணைத் துறந்து பொய் வேஷம் போடச் சொல்லவில்லை. சுடர் விளக்கம் என்பது இங்கே, இப்போது, நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் நடைபெற வேண்டும். சிறு துளி பெருவெள்ளம் போல் அத்துளிகள் ஒரு இயக்கமாகச் செயல்படும் போது அதற்கு அளப்பரிய சக்தி வந்து விடுகிறது. அந்த சக்தியை அவர்கள் உருவகப் படுத்திச் சொல்லிச் சென்றனர். இப்பாடலைப் பாருங்கள்.

நாட்டில் பிறந்தவர் நாரணற் காளன்றி யாவரோ?
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை யளித்துய்யச் செய்து நடந்தமை கேட்டுமே!
(தி.வா.மொ. 7.5.2)

தமிழ் நாட்டில் பிறந்து படாதன படும் நம் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் யார் குரல் கொடுக்கப் போகிறார்கள்? நாட்டில் நலிந்து, படர்ந்து, பலம் பெறும் அரக்கர் குழாமை நாடித் தடிந்திட்டு, தமிழ் நாட்டை உய்யச் செய்யப் போவது யார்? கல்கி அவதாரத்திற்காக காத்திருக்க வேண்டுமா? இல்லை. ஆழ்வார் சொல் கேளுங்கள். நாட்டில் பிறந்தவர் நாரணர்கள் அன்றி யாவரோ? நாம்தான் அந்த நாரணர்கள். நாம்தான் அந்த கல்கிகள். அவதாரங்கள் வெற்றிடங்களிலிருந்து தோன்றுவதில்லை. அவதாரத்திற்கு ஒரு சமூக காரணம் உள்ளது. "ஆகாவென்றெழுந்ததுபார் யுகப் புரட்சி" என்று வியக்கும் வண்ணம் யுகப் புரட்சிகள் தோன்றுவது சிறு, சிறு இயக்கங்களினால்தான். மடமை ஒழிக்கும் உறுதி உள்ள குழுக்கள்தான் அத்தகைய மாபெரும் புரட்சிகளைச் செய்திருக்கின்றன. ஆழ்வார்கள் முன் மொழிவது இத்தகைய இயக்கங்களையே.

மோட்சங்கள் விண்ணீல் இல்லை, நண்பா! மண்ணில்த்தான் அதைக் காண வேண்டும். அதை நாம்தான் செய்விக்க வேண்டும். அதைச் செய்விக்கும் சக்தியின் உருவகம்தான் இறைவன். இதை ஒரு கவிஞனிடம் கொடுத்தால் அவனால் இப்படித்தான் எழுத முடியும்:

கண்ணன் அல்லால், இல்லை கண்டீர் சரண்! அது நிற்க, வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே, வடமதுரைப் பிறந்தான்
திண்ண மாதும் உடைமையுண்டேல், அவனடிசேர்ந்துய்ம்மினோ
எண்ணவேண்டா, நும்ம தாததும் அவனன்றி மற்றில்லையே
(தி.வா.மொ. 9.9.10)

கண்ணன் மண்ணின் பாரத்தை நீக்க வந்தான் என்று சொன்னால் அதர்மம் எங்கு நடக்கும் போதும் அதைத் தட்டிக் கேட்கும் வலுவை நம் உள்ளத்தில் ஏற்றிக் கொள்ள வேண்டும் என்று பொருள். கண்ணன் திருவடி எண்ணுக! என்பதன் பொருள் இதுதான். கண்ணனின் அடியார்கள் என்று சொல்லிக் கொண்டு கோயில் மதில் சுவரைச் சுற்றி வந்தால் மடமை போய் விடுமா? இல்லை, கொடுமை அழிந்திடுமா? கொடுமை அழிய கண்ணன் மல்லனுடன் போர் செய்தான். அவன் அடியார்கள் அவனைப் போல் அறப்போர் செய்ய வேண்டாமோ? அதுவல்லவோ கண்ணனின் உள்ளத்தைப் புரிந்து கொண்டதாக ஆகும்.

நிழல்வெளியில் தோன்றும் இப்பொறிகள் நிஜவெளியில் தீயாகட்டும். இத்தீச்சுடர் பட்டு, ஆண்டாள் சொல்வது போல் அறியாமை என்பது "தீயினில் தூசாகட்டும்". அதற்கு தமிழமும், மின் தமிழும், மலையகமும், அமீரகமும் துணை போகட்டும்.

பொலிக! பொலிக! பொலிக!
போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த
நமனுக்கிங் கியாதொன்றுமில்லை
கலியும் கெடும் கண்டு கொண்மின்
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்திசை பாடியாடி
யுழிதரக் கண்டோம்
(தி.வா.மொ. 5.2.1)

மடல் 077: வாழ்வின் துயரை எதிர் கொள்வது எப்படி?

First published date: Fri, 31 Mar 2000 09:03:07 +0200

மேருமலையை மத்தாகக் கொண்டு, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கொண்டு திருபாற் கடலைக் கடைந்ததாக ஒரு பழம் ஐதீகம் உண்டு. வெண்ணை கடைய ஒரு ஆள் போதும். ஒரு கடலையே கடைவதென்றால்? எத்தனை ஆயிரம் பேர் வேண்டும்? ஒரு புறம் அசுரர், ஒரு புறம் தேவர் என்று கை கோர்த்து கடைகின்றனர். பாலைக் கடைந்தால் வெண்ணெய் திரளும். கடலைக் கடைந்தால்? பல விஷயங்கள் திரண்டன! தன்வந்திரி என்ற ஆயூர்வேத வைத்தியர் வந்தார், கேட்டதைக் கொடுக்கும் காமதேனு வந்தது, திருமகளே வந்தாள், கையில் அமிர்தத்துடன்!

இந்தக் கடலைக் கடைந்த ஐதீகத்திற்கு பல அர்த்தங்கள் கொடுக்கப் படுகின்றன. முழுவதும் புனைவுள்ள புராணங்களிலிருந்து, மிகவும் ஆய்வு பூர்வமான காரணங்கள் வரை. புராணக் கதையை விடுவோம். திருமகள் கொண்டுவந்த அமிர்தம் கடலிலிருந்து வரும் உப்பைக் குறிக்கலாம் என்கிறார். பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி. முதன் முதல் உப்புக் காய்ச்ச தெரிந்த போது உருவான ஐதீகமாக இருக்க வேண்டும் இது. ரொம்பப் பழசு. திருமகளின் வருகை கடல் என்னும் உணவுக் களஞ்சியத்தை (மானிடர்க்குக் கிடைத்த அமிர்தம்!) கண்டு கொண்டதை குறிக்கலாம் என்கிறார் இவர்.

ஐதீகங்கள் உருவகங்களாக (metaphors) இருப்பதால் புதுப்புதுக் காரணங்களை உருவாக்கிக் கொள்ளலாம். உருவகங்களின் சிறப்பு அது. என்னைக் கேட்டால் கடலைக் கடைவது என்பது மனித ஜீவனின் ஆவியைக் கடைவது என்று சொல்வேன். திருவின் வருகை உள்ளத்தில் வருவது அவ்வளவு எளிதான காரியம் அல்லவே! கஷ்டம் இல்லாமல் தெளிவு வருவதில்லை. வாழ்வு மனிதனுக்கு கஷ்டம் கொடுப்பதே அவனை உயர்வுறச் செய்யத்தான். கஷ்டங்கள் இல்லையேல் அறிவு வளர்ச்சி இல்லை. பரிட்சைகள் இல்லையேல் வெற்றி என்பது இல்லைதானே!

கடலைக் கடைவது சாமானிய விஷயமில்லை. கடைந்த கடைசலின் கஷ்டம் பொறுக்காமல் வாசுகி ஆலகால விஷத்தைக் கக்கி விட்டது!

கஷ்டம் வந்தது, செத்தான் என்றால் கதையின் பயன் என்ன? கஷ்டத்திலிருந்து மீட்பு வேண்டும், சில சமயங்களில் மீட்பான் வேண்டும். சுயமாக மீள முடியாத கஷ்ட காலங்களில் இறைவனைத் தவிர வேறு யார் துணை?

முதலில் கடலைக் கடைவது என்று தீர்மானபோது ஆகப் பெரிய மேரு மலையை கடலில் மூழ்கி விடாமல் தாங்க ஒரு சுமைதாங்கி வேண்டும். அந்த பளுவான பொறுப்பை ஏற்கிறான் பரந்தாமன். ஆக உலகின் முதல் கூலி கடவுள்தான். மூட்டை சுமந்து முதுகு கூனியவன் அவன்தான். ஆலகால விஷம் வந்தவுடன் அந்த நஞ்சை உண்டவன் தில்லை அம்பலன். சாதாரணமானவர்கள் காரியத்தின் லாபத்தை எடுத்துக் கொள்வர். உதாரணமாக கடலிலிருந்து வரும் அமிர்ததிற்காகத்தான் தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டனர். ஆனால் இந்தக்
கதையில் நஷ்டத்தை விரும்பி எடுத்துக் கொண்டவன் இறைவன். நஞ்சுண்டதால் அவன் திருநீலகண்டன் ஆகிப் போனான். ஒருவன் நஞ்சு உண்டதால் நீலமானான், இன்னொருவன் பிறவியிலேயே நீல நிறமாக உள்ளான். உலகின் அத்துணை துயர்களையும், ஜீவன்களின் எண்ணிலா பாவங்களை-நஞ்சை உண்டு, உண்டு உடல் முழுவதும் நீலமாகிப் போனான் போலும்! என்னைப் போலவே எண்ணுகிறார், திருமங்கை மன்னனும், "நஞ்சுதான் கண்டீர்
நம்முடைவினைக்கு, நாராயணா என்னும் நாமம் (2) 1.1.10" என்று அவர் வழி மொழிகிறார்.

மானிடரின் பாவத்திற்காக ஒருவன் சிலுவை ஏந்தவில்லையா?

மானிடர் வாழ்வில் கசக்கிப் பிழியும் கஷ்டங்கள் வந்து போகின்றன. கஷ்டங்கள் வரும் போது தனிமையாகி விட்டோமெனில் அந்தக் கஷ்டங்களின் துயர் பன்மடங்கு கூடுகிறது. இந்தக் கஷ்டங்களைக் கண்டு தப்பித்து ஓடுபவர்கள் (உ.ம். மது, மருந்து) ஒருக்காலும் காட்சி பெருவதில்லை. ஆனால் இந்தக் கஷ்ட காலங்களைத் துணிவுடன் தாங்கும் மனிதன் கடைசியில் பெரிய பாடம் கற்றுக் கொண்டு ஆன்ம விடுதலை அடைந்து விடுகிறான். அப்போது அவனுக்கு அமிர்தம் கிடைத்து விடுகிறது!

ஜீவன்களுக்கு வரும் கஷ்டங்கள் தாங்களாகவே சேமித்துக் கொள்வதுதான். சபலம், ஆசை, அறிவின்மை இன்னோறன்ன பிற காரணங்களால் மனிதன் தனக்கு கஷ்டங்களை வரவழைத்துக் கொள்கிறான். தவறுகள் திருத்திக் கொள்ளத்தான். அக்கினியில் போட்டால்தான் தங்கம் மிளிர்கிறது. கஷ்டங்கள் இல்லையெனில் தெளிவு பிறப்பதில்லை. பக்தி ஊறுவது இல்லை.

உதாரணமாக திருமங்கையாழ்வார் சொல்லும் காட்சிகளைப் பார்ப்போம். பெண்கள் தரும் சுகம் கருதி அவர்கள் பின்னால் அலைந்து தன் நாளை வீணாக்கியதை எண்ணி வருந்துகிறான் ஒருவன் (நமது கல்லூரி மாணவருக்காக வந்த பாடல் போல் உள்ளது!):

ஆவியே! அமுதே! என நினைந்துருகி
அவரவர்ப் பணைமுலை துணையா
பாவியேன் உணராது எத்தனை பகலும்
பழுது போய் ஒழிந்தன நாள்கள்!


அதுமட்டுமல்ல. இன்னொருவன் திருடன். வழிப்பறிக் கொள்ளை அது இதுவென கண்டவா திரிந்திருக்கிறான். அந்தச் சூழலிலும் தெளிவு வரத்தான் செய்கிறது.

கள்வனேன்; னேன் படிறு செய்திருப்பேன்

கண்டவா திரிதந்தேனேலும்
தெள்ளியேனானேஞ் செல்கதிக்கமைந்தேன்
சிக்கெனத்திருவருள் பெற்றேன்
உள்ளெலாமுருகிக்குரல் தழுத்தொழிந்தேன்
உடம்பெலாம் கண்ணீர்சோர
நல்லிருளளவும் பகலும் நான் அழைப்பேன்
நாராயணாவென்னும் நாமம்.
(பெரிய திருமொழி-1.5)

எத்தனை தவறுகள்தான் செய்திருப்பினும் பெற்றவள் பொறுப்பதில்லையா? அதுபோல் இங்கு படிறு (நயவஞ்சகம், திருடு) செய்திருப்பினும் இறைவன் நேரடியாக வந்து ஆட்கொள்கிறான். அதன் பின் வரும் நிலையை திருமங்கையை விட வேறு யாரால் இவ்வளவு அழகாகச் சொல்லி விட முடியும்?

ஒரு கதை உண்டு. ஒரு பக்திமான். அவனும் கடவுளும் இணைபிரியாமல் எப்போதும் இருப்பார்கள். இருந்தாலும் அவனுக்கும் கஷ்ட காலங்கள் வருகின்றன. முடிந்த பின், கஷ்ட காலத்தை பின்னோக்கிப் பார்க்கிறான். கடல் மணலில் தனியாக ஒருவர் தடம். வருத்தத்துடன் அவன் கடவுளைக் கேட்டானாம். "ஏப்பா! நான் நல்லா இருந்த காலத்திலே எல்லாம் என் கூட நடந்து வந்தியே, இப்ப பாரு, கஷ்ட காலத்திலே என்னைய மட்டும்
தனியா நடக்க விட்டுட்டியே?" என்றானாம். கடவுள் சிரித்துக் கொண்டாராம். "அப்பா! நீ பார்த்தது உன் காலடித் தடமில்லை. அது என் காலடித்தடம்! அப்போது உன்னை நான் தோள் மீது சுமந்து வந்தேன். உன் காலடித்தடம் பதியவே இல்லை" என்றாராம்.

கசக்கிப் பிழியும் காலம் வரும் போது பாரதி சொல்வது போல்
"தெய்வம் நமக்குத் துணை பாப்பா,
ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா" என்றும்
"நம்பினார் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு!" என்றும்
திட நம்பிக்கை கொண்டுவிட்டால் மரணம்தான் சிக்கல்களுக்கு தீர்வு என்ற முடிவிலிருந்து தப்பலாம். இந்த நம்பிக்கைதான் நம்மைக் கை தூக்கி விடுகிறது. இல்லையெனில் இந்தியா போன்ற கஷ்டம் நிறைந்த நாட்டில் வாழ்வு நரகமாகும்.

தன் பக்தி குறைந்து விடக்கூடாது என்று தனக்கு கஷ்டமே தருமாறு வேண்டிய பக்த கபீர்கள் பாரினில் உண்டு. அது வேறு விஷயம்! தியாகராஜரை எப்படி வகைப் படுத்துவது என்று தெரியவில்லை. சாகாவரம் பெற்ற கீர்த்தனைகளை கர்னாடக சங்கீதத்திற்கு தந்திருக்கிறார். சில கீர்த்தனைகளில் அவரது துயர் நெஞ்சைப் பிழியுமாறு வருணிக்கப் பட்டுள்ளது. அவருக்கு என்ன கஷ்டம் வந்திருக்கும்? ஏழ்மையா? அப்படியெனில், நிதி சால சுகமா? என்று பாடி அரசனின் ராஜமரியாதையை உதறுவானேன்? இறைவனுடன் கலக்க முடியாத வேதனையா? இராம தரிசனம் கிட்டவில்லையே என்ற ஏக்கமா?

இந்தக் குலசேகர மன்னனுக்கு என்ன கவலை? ராஜாவாட்டம் இருக்க வேண்டியதுதானே?
அதைவிடுத்து மீளாத் துயர் வந்தாலும் அரங்கன் பாலுள்ள அன்பு மாறாது என்கிறாரே இவர்.
அவரது மிகச் சிறந்த இரண்டு பாசுரங்கள் (பெருமாள் திருமொழி) இதோ:

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் போயாளன் போல் மாயத்தால்
மீளாத்துயர் தரினும் விற்றுவக் கோட்டம்மா
நீளா உனதருளே பார்ப்பன் அடியேனே!
(691)

மருத்துவன் வயிற்றையே வெட்டுகிறான் என்றாலும் அவன் மேல் நாம் கோபப்படுவதில்லையே! அறுவை சிகிச்சை முடிந்த பின் "ரொம்ப தாங்ஸ் சார்!" என்றுதானே வழிகிறோம். அதுபோல் மாயத்தால் இறைவன் தரும் துன்பங்களை துன்பங்களாகப் பார்க்காமல், நம் ஆரோக்கியத்திற்குதான் அது என்று பார்க்கப்பழகி விட்டால்?

செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம்
அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லால் அலராவால்
வெந்துயர் வீட்டாவிடினும் விற்றுவக் கோட்டம்மா உன்
அந்தமில் சீர்க் கல்லால் அகங்குழைய மாட்டேனே
(693)

சூரியன் வெந்தழலே வீசினாலும் தாமரை சூரியனைக் கண்டுதானே மலர்கிறது, அதுபோல் வெந்துயரே தந்தாலும் இறைவா உனக்கல்லால் வேறு எவர்க்கும் அகம் குழைய மாட்டேன் என்கிறார்.

இப்படி இருப்பதில் பாரிய லாபம் இருக்கிறது. இந்த மனோபாவத்தை குழந்தையிலிருந்து சொல்லித்தர வேண்டும். ஏனெனில், நமது பெரும்பாலான துயர்கள் உறவுகளைப் பிரிவதால் வருகிறது. சாவு வந்து நம் உறவுகளை நாம் எதிர்பார்க்காத தருணங்களில் பிரித்து விடுகிறது. சில நேரங்களில் வேறு காரணங்களால் உறவுகள் பிரிவதும் உண்டு. இத்துயரைக் களைய நல்ல சாதனம் இறை பக்தி. உண்மையில்ஆன்மாவின் ஒரே உறவு இறைவன்தான். இதை கர்னாடக மாநிலத்தைச் சேர்ந்த தேவரதாசிமையின் ஒரு வசனம் சுட்டும்:

மேலே முடிவந்தால் பெண்ணென்பர்
தாடிமீசை வந்தால் ஆணென்பர்
நடுவில் சுற்றும் ஆன்மா
ஆணுமல்ல பெண்ணுமல்ல காண் இராமநாதா!

_______
ஆயுள் போய்க் கொண்டிருக்கிறது
எதிர்காலம் குறைந்து வருகின்றது
கூடியிருந்த மனைவி மக்கள்
தத்தம் வழியில் நீங்கிச் செல்கின்றனர்
வேண்டாம்! வீணான வாழ்க்கையை
வீணாகக் கழிக்க வேண்டாம் மனமே!
(அக்கம்மாதேவி)

உலகத் துன்பங்களைக் கண்டு வருத்தமுறுவது இன்னொரு வகை. அன்னை தெரசா இந்தியத் துன்பம் கண்டு இங்கு வந்து உழன்றார். முதலில் அவளைக் கண்டோர் முறுவலித்தனர், கேலி பேசினர், ஏழையின் துயரை மீட்க முடியாது என்றனர். இது உலக இயற்கை என்று கண்டாள் தெரசா. மானிடர்க்குச் செய்யும் பணி இறைவனுக்கு செய்யும் பணி என்ற திட நம்பிக்கை கொண்டாள். அது கடைசியில் வென்றது. அவளுக்கு நோபல் பரிசும் வாங்கித் தந்தது. தாகூர், இராமன் இவர்களுக்குப் பிறகு இந்தியாவிற்கொரு நோபல் பரிசும் நிடைத்தது. இதை அப்படியே வருணிக்கின்றார் நம்மாழ்வார்:

நண்ணாதார் முறுவலிப்ப

நல்லுற்றார் கரைந்தேங்க
எண்ணாராத் துயர் விளைக்கும்
இவையென்ன உலகியற்கை!
கண்ணாளா! கடல் கடைந்தாய்
உனகழற்கே வரும் பரிசு
தண்ணாவா அடியேனைப்
பணி கண்டாய் சாமாறே.


திருவாய் மொழி (2) 4.9.

இந்தப் பின்னணியில் பாரதி, அரவிந்தர் போன்ற சுதந்திர வீரர்களின் சரித்திரத்தைக் காண வேண்டும். இருவருமே தீவிரவாதிகள். இருப்பினும் இருவரும் கடைசியில் இறைவனிடம் சரண் புகுந்து விட்டனர். உலகில் இது இன்னும் ஆச்சர்யமான ஒரு செயலாகவே பார்க்கப் படுகிறது. ஏன் இவர்கள் மார்க்சிசத்தையோ வேறு மார்க்கங்களையோ தேடிப் போகாமல் ஆன்மீகத்திற்கு வந்தனர்? புரட்சி வீரர் சுபாஷ் சந்திரபோஸ் கூட முதலில் விவேகானந்தரின் சொற்பொழிவுகளைக் கேட்டு ஆன்மீகத்திற்குள் புக நினைத்தார். அவருக்கு சரியான குரு கிடைக்காத காரணத்தால் அவர் கெளரவக் கூட்டத்தோடு (நாட்சி, ஜப்பானியர்) சேர்ந்து கடைசியில் அவச்சாவு அடைந்தார் என்று சரித்திரம் காட்டுகிறது (ஒரு வகையில் கர்ணன் கதைதான்!).

"மனிதன் பெரும்பாலும் வரம்பு கடந்த தன்னலமிக்க விலங்கு. அவனை முழுமையாக அறிந்து கொள்வதற்கு இயற்கை அறிவியல், இயற்பியல், வேதியியல், அல்லது பொருள் முதல்வாதிகள் பின்பற்றும் முழுவதும் பண்பு அடிப்படையிலான உளவியல் போன்றவை
பயன்படா. கடவுளுடன் உறவுடைய மனித இருப்பு என்பதை விளக்கப் பகுத்தறிவு வினாக்கள் போதுமான சான்று ஆகா. அது ஒரு சமய அனுபவம். ஒவ்வொரு தனி மனிதனும் தன் வாழ்வில் உள் நோக்கிய சிந்தனையாலும் செயலாலும் மட்டுமே உணர முடியும்; அது அறிவியல் போன்று கோட்பாடுகளின் அமைப்பால் உருவானது அன்று."
(இந்திரா பார்த்தசாரதி-தமிழ் இலக்கியங்களில் வைணவம்)

மடல் 078: மாறன் திருவுள்ளமும் பொய்த்துப்போன புரட்சிகளும்

First published on : Date: Wed, 26 Apr 2000 21:08:56 +0200

தமிழ் வைணவ நெறியின் சிறப்பு மற்றும் வளர்ச்சி குறித்த கட்டுரைகள் வந்து கொண்டிருக்கின்றன. பிராமணீய மேளாண்மை கொண்ட இந்திய ஆன்மீக உலகில் ஆரிய பாரம்பரியத்தில் வாராமலும், பிராமண குலத்தில் பிறக்காமலும் இருந்தும் ஸ்ரீவைணவத்தின் மூத்த ஆசாரியனாக கருதப்படும் மாறன் (நம்மாழ்வார்) பற்றிய இன்றைய புரிதல் வைணவ நெறி தமிழ் மண்ணில் தொட்ட மைல்கற்களை அறிந்துகொள்வதுடன் அதை ஒரு மீள் பார்வைக்கு கொண்டுவரவும் உதவுகிறது.

ஆரிய மேளாண்மை குறித்து இந்த நூற்றாண்டில் பல அரசியல், ஆன்மீகத் தலைவர்கள் உரத்த சிந்தனையை முன்வைத்து இயக்கங்களை நடத்திய போதிலும் இந்த மேளாண்மை முற்றும் நீங்கிவிடவில்லை என்பதை காலம் காட்டுகிறது. இதற்கு நல்ல உதாரணம் தமிழ் மண்ணில் தாய் மொழிக்கல்வி என்பது நிலை பெறமுடியாமல் உளத்தடை இன்றளவும் இருப்பது. இரண்டாவது, தாய் மொழி இன்றளவும் கோயில் மொழி ஆகாமல் இருப்பது. காலம் காலமாக உயர் தனிச் செம்மொழியான தமிழ் ஆரிய மேளாண்மையை கேள்விக் குறியாக்கிய வரலாறு காணக் கிடைக்கிறது. வைணவ சரித்திரம் இதற்கொரு நல்ல உதாரணம். இருப்பினும் தமிழனின் தாழ்வு மனப்பான்மை காலம் காலமாக ஆரிய மேளாண்மையை ஏதோ ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதில்லை என்பதும் உண்மை. இன்று வாய் கிழியப் பேசும் அரசியல், முற்போக்குவாதிகள் தம்மை அறியாமலே ஆங்கிலம் என்னும் ஆரிய மொழிக்கு அடிமையாகி இருப்பது முரண்நகை. இப்படி நாம் வாழும் இத்தருணத்தில் வைணவ சரித்திரத்தை மீள் பார்வை செய்வது, நாம் கண்ட வெற்றிகளை அறிந்து கொள்ளவும், மீள நாமடைந்த பின்னடைவுகளைப் புரிந்து கொள்ளவும் உதவும்.

தமிழ் மண்ணில் வளர்ந்த எவருக்கும் தெரியும் வைணவம் என்பது மல்லிகை மலர் போல் தமிழ் மண்ணில் வளர்ந்து தமிழ் பண்பாட்டின் மணம் பரப்பும் ஒரு ஆன்மீகநெறி என்பது. தமிழ் மொழியில் இருக்கும் தொன்மையான இலக்கியங்கள் திருமால் வழிபாடு பற்றிப் பேசுகின்றன. திருமால் வழிபாட்டின் ஆரம்பக் கூறுகள் சுமேரியப் பண்பாட்டிலும் இருப்பதாக முனைவர் லோகனாதனின் ஆய்வுகள் சுட்டுகின்றன. அன்று தொட்டு இன்றுவரை அறுபடாத ஒரு ஆன்மீக நெறியாக அது தமிழ் மண்ணில் இருந்து வருகிறது. ஆரிய வழிபாட்டுக் கூறுகள் காலப்போக்கில் கலந்து நின்றாலும் தமிழ் மண்ணிற்கேயுரிய செம்மை மரபுகளை அது என்றும் இழந்ததாக வரலாறு கிடையாது.

1. தமிழ் மண்ணிற்கே தனிச்சிறப்புடைய ஐந்திணை மரபின் அழகிய வெளிப்பாடாகிய உள்ளுரை உவமமாக திருமால் முல்லைத் தெய்வமான கண்ணனாக வழிபடப் படுகிறார்.

சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்
ஆயன் துவரைக்கோன் ஆய் நின்ற மாயன் அன்று
ஓதிய வாக்(கு) அதனைக் கல்லார் உலகத்தில்
ஏதிலராய் மெய்ஞ்ஞான மில்
(நான்முகன் திருவந்தாதி)

இறைவன் என்பவன் நமக்கு மிக அருகே உள்ளான், அதே சமயத்தில் நம் கைக்கு அகப்படாமல் எட்டவும் உள்ளான். இத்தகைய இறைச்சக்தியை, உள்ளுறை உவமமாகப் பார்க்கும் போது அவன் முல்லை நிலத்தின் பண்புகளைப் பிரதிபலிப்பவனாகப் பார்த்தனர் பண்டையத் தமிழர். அதனால் அவனை ஆயனாகக் கண்டனர். ஆரிய வம்சத்து மன்னர்களிடையே நடந்த ஒரு மகாயுத்ததை ஆரியனல்லாத ஆயனான கண்ணன் தன் மதியுகத்தால் நடத்தி நீதியை நிலைநிறுத்தி, உலக மக்களுக்கு வாழ்வு நெறிகளைக் காட்டிச் சென்றான். துவாரகை அதிபன் அன்று (பாரத யுத்தமதில்) ஓதிய சொல் (பகவத்கீதை) கல்லார் மெஞ்ஞான வாசமற்றார் என்பது திருமழிசை வாக்கு.

அன்று தொடக்கம் இன்று வரை அரங்கத்தில் உரையும் நெடுமால் நீதிவானவனாகவே இருப்பது வைணவம் கொஞ்சமேனும் அறிந்த ஒருவருக்கும் புரியும். அவன் உள்படியும் உவமமாக இருப்பதால் மனிதர்களை வைத்தே மனிதர் செய்யும் தவறுகளைத் திருத்துகிறான்.

2. வெண்ணிற ஆரியத் தெய்வங்களுக்கு நடுவே கரும் நெடுமாலாக இவன் நிற்பதும், இந்திரன், வருணன் போன்ற வேதகாலத் தெய்வ வழிபாட்டிற்கு சவால் விடுத்து தத்துவச் செழிப்புடன் இவன் முழுமுதற் கடவுளாக காணப்படுவதை திராவிடப் பண்பாடு ஆரிய மேளாண்மையை தன்னுள் அடக்கி மேலெழுந்ததாக சரித்திர ஆசிரியர்கள் கூறுவர்.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ? விடை அடர்ந்த
பத்தி யுழவன் பழம்புனத்து-மொய்த்தெழுந்த
கார்மேகம் அன்ன கருமால் திருமேனி
நீர்வானம் காட்டும் நிகழ்ந்து
(நா.தி.அ 23)

மொய்த்தெழுந்த கார்மேகம் அன்ன கரிய திருமேனி. விதை போட்டால் செடி வளரும். பத்தி என்ற ஏர் கொண்டு உழும் போது, கார்மேகம் போன்ற அவனது கருணைக்கு ஆட்பட்டு விதையொன்றும் இல்லாமலே தளிர்ப்பித்தல் நம்மிடையே நடைபெருகிறது என்று சொல்கிறார் திருமழிசை. இந்திரன் முதலான தெய்வங்களுக்கு ஏதாவது செய்தால் பலனாக அருள் கிடைக்கும், ஆயின் கரிய திருமாலோ தானாகவே உழுதல், விதைத்தல் முதலிய அத்துணை செயல்களையும் நம் சார்பில் செய்து உய்விக்கின்றான். நமக்கு வர வேண்டியது இறைவன் பால் ருசி. அவ்வளவே.

இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை....
செந்திறத்த தமிழ் ஓசை வட சொல் ஆகி...
அந்தரத்தில் தேவர்க்கும் அறியகிலா...மந்திரம்
(தி.நெ.தா-4)

இந்திராதிகளுக்கும் தலைவன் அவனே. அவனே செம்மை நிறைந்த தமிழ் வேதமாகிய திவ்யப் பிரபந்தங்கள். அவனே வட சொல்லில் அமையும் வேதமும் என்கிறார் திருமங்கை. தமிழை முதலில் வைத்ததுமல்லாமல், தமிழைப் பற்றிப் பேசும் போது செம்மை நிறைந்த மொழி என்று தனிச்சிறப்பு கொடுத்து, வட சொல் என்று ஒற்றை வரியில் நிறுத்திக் கொள்கிறார். ஆழ்வார்களில் தோயும் போது, அவர்கள் தாய் மொழிக்கு கொடுக்கும்
மரியாதை எண்ணி, எண்ணி உயர்வுறவேண்டிய ஒரு செயல். தாய் மொழிச் சொல்தான் மந்திரம். வேறல்ல.

3. தமிழ்ப் பண்பாடு அகவாழ்வை சிறப்பித்துப் பேசும் பண்பாடு. ஆரிய ஆன்மீகம் பேசும் தவ வாழ்வின் சிறப்பை தமிழ்ச் சமயங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டாலும், வீடுபேறு என்று வரும் போது மணவாழ்வை ஒரு தடையாக தமிழ் ஆன்மீகம் கருதுவதில்லை. இதற்கேற்ப இறைமையில் ஆழங்கால் பட்ட ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் தமிழ் அகமரபின் அழகிய வெளிப்பாடாக அமைந்திருக்கின்றன. ஆண்டாளின் கன்னித் தமிழும், மற்றைய ஆழ்வார்களின் நாயகிப் பாடல்களும் இதற்கு நல்ல சான்று.

காறைபூணும் கண்ணாடிகாணும் தன் கையில் வளைகுலுக்கும்
கூறை உடுக்கும் அயர்க்கும்தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித்தேறி நின்று ஆயிரம பேர்த்தேவன் திறம்பிதற்றும்
மாறில்மா மணிவண்ணன் மேலிவள் மாலுறுகின்றாளே
(பெ.தி.மொ. 3-7-8)

ஆண்டாளைப் பற்றிப் பேசும் போது அவள் தந்தை விட்டுசித்தரைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. தன் மகள் இருந்த நிலை காணும் ஒரு தந்தையின் வரிகளைப் பாருங்கள் ! மேலோட்டமாக- விரகதாபத்தில் இருக்கும் ஒரு தலைவியின் நிலை கூறும் பாங்கியின் சங்கப்பாடல் போல் இது இருந்தாலும், ஆழப் பார்க்கும் போது பல ஆன்மீக நிலைகளைச் சுட்டுவதாக இதை விளக்க முடியும். தமிழ் அகமரபைப் பேணும் அதே சமயத்தில் அம்மரபிற்கு ஒரு புதிய பரிமாணத்தையும், ஒரு ஆழத்தையும், ஒரு கனத்தையும் அருளிச் செய்கின்றனர் ஆழ்வார்கள். தமிழ் மரபை நன்கு உணர்தவர்களுக்கு மட்டுமே இதன் சிறப்பு புலப்படும். விதண்டாவாதம் பேசும் தமிழ் அபிமானிகளுக்கு இதில் உள்ள காமவரிகள் மட்டுமே கண்ணில் படும்.

அப்படிப்பட்டவர்களைப் பற்றி எண்ணாத போதெல்லாம் இனிய பொழுதுகளே என்பதை வெளிப்படையாகவே சொல்கிறார் திருமங்கை மன்னன். இதோ...

கண்ணாளன் கண்ணமங்கை நகராளன்
கழல் சூடி அவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை
எண்ணாத போதெல்லாம் இனியவாறே!


4. வைணவக் குரவர்கள் வடமொழிப் பண்டிதர்களாக இருந்த அதே சமயத்தில் தமிழ் மரபின் செழுமையை நன்கு உணர்ந்தே இருந்தனர் என்பதற்கு நல்ல சான்று நாதமுனி தொடக்கம் மணவாள மாமுனிவரைக்கும் சங்கத் தமிழ் மாலைகளான திவ்யப் பிரபந்தங்களை வேதத்திற்கும் மேலாக உயரே பிடித்து கோயில் சாற்று முறைகளாக்கியதுதான். அகத்தமிழ் சொட்டும் இப்பாசுரங்களை நாள் தோறும் மாலவன் மொழியாக திருமால் கோயில்களில் ஒலிக்க வைத்தனர். இது சாதரணமான செயல் அன்று. சம்பிரதாயங்களை மாற்றுவதென்பது மனித மனத்தை மாற்றுவதாகும். பழகிப்போன ஒரு காரியத்தை மாற்ற மனம் என்றும் இடம் கொடாது. மேலும் ஆரிய மேளாண்மை கொண்ட கோயில்களில் இப்படியானதொரு மாற்றம் நிகழ்வது பிரம்மப் பிரயர்த்தனம் என்பது வாழ்வைத் துச்சமாக மதித்து செயல் பட்ட இவர்களின் சரித்திரத்திலிருந்து தெரிகிறது.

5. தமிழ் என்று வரும் போது எந்த வைணவக் குரவரும் இம்மியளவும் விட்டுக் கொடுத்ததாக சரித்திரமில்லை. வடகலை மரபைப் பேணும் வைணவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தென்கலை சம்பிரதாயம் மட்டுமே இதைப் பேணுவதாக உலவும் தொன்மங்களுக்கு எந்த ஆதாரமுமில்லை என்று நிறுவுகிறார் முனைவர் ஸ்ரீலதா முல்லர் தனது ஆய்வில்.

6. அகமரபை ஒட்டி தங்கள் வாழ்வு முறையை அமைத்துக் கொண்ட வைணவ ஆச்சார்யர்களும் திருமணவாழ்வில் முழுதும் தோய்ந்த பின்னரே துற வாழ்வை சிபாரிசு செய்கின்றனர். ஆரிய சம்பிரதாயத்தில் வரும் அத்துவைத ஆசாரியர்கள் மாறாக முழு பிரம்மச்சரியம் என்பது ஆன்மீக விடைபெறுதலுக்கு அவசியம் என்று கருதுகிறார்கள். இதற்கிணங்க காஞ்சி சங்கர மடத்தில் சுத்த பிரம்மச்சாரிகள் இருக்க, வைணவபீடத்தின் தலைமையில் இருப்போர் கட்டாயம் திருமணம் செய்தவர்களாக இருக்கிறார்கள்.

7. அத்துவைத பீடமான காஞ்சி - பெண்கள், அதிலும் விதவைகள் மற்றும் தாழ்ந்த குலத்தோர் விஷயங்களில் இன்றளவும் பிற்போக்காக இருப்பதும், வைணவ மடங்கள் இந்த விஷயங்களில் அன்றிலிருந்து புரட்சிகரமாக இருப்பதும் காணக் கிடைக்கிறது. ஸ்ரீவைஷ்ணவ பிரதம ஆச்சாரியர் ஸ்ரீராமானுஜர் சாதி வேறுபாடுகளைப் புறம் தள்ளியவர் என்பதோடு, பெண்கள் ஆன்மீக விஷயங்களில் ஆண்களுக்கு நிகர் என்று வழிமொழிகிறார். தனது ஆன்மீக குருவாக அவர் ஆண்டாளைக் கொண்டு "ஆண்டாள் ஜீயர்" என்ற அடைமொழியைத் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

8. ஆரிய வேதத்தை முன் மொழியும் பிராமண சனாதானிகள், பிராமணர் தவிர்த்து மற்றவர் வேதத்தை ஓதுவது கூடாத செயல் என்று நீதிகள் செய்யும் போது, நாதமுனிகள் தொடக்கம், வேதாந்த தேசிகர் வரைக்குமான வைணவ ஆசாரியர்கள் நம்மாழ்வார் செய்வித்த திருவாய் மொழியை திராவிட வேதமென முன்மொழிந்து அது அனைவர்க்கும் பொது என்ற புது மொழியை செய்வித்தனர்.

9. வைணவ நெறிகளைப் பரப்ப பின்வரும் புராணங்கள், தொன்மங்கள் என்பதிலும் கூட புரட்சிகர கருத்துக்கள் இருப்பதை அவதானிக்க முடியும். ஆழ்வார்கள் நம்மைப் போல் வாழ்ந்து வீடுபேறு கொண்டாலும் அவர்களின் ஆன்மீக உயர்வு கருதி எழும் தொன்மங்களில் இருவர் மிகுந்த சிறப்புப் பெருகின்றனர். இவர்கள் இருவர் மட்டுமே திருமாலுடன் கலக்கும் பாக்கியம் பெற்றதாக தொன்மங்கள் கூறுகின்றன. அவர்கள் ஆண்டாள் என்ற பெண்ணும், திருப்பாணர் என்ற தாழ்ந்த குல இளவலும். இதற்கும் மேலாக துருக்கிய இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் ஆண்டாள் போல் திருமாலுடன் கலந்த ஒரு தொன்மத்தை தாங்கி வருகிறது வைணவம். இப்பெண்ணை துருக்க நாச்சியார் என்றே இன்றளவும் வழிபடும் முறையையும் வைணவம் வகுத்துள்ளது!

இவை தற்செயலான நிகழ்வு என்று வைணவ சரித்திரம் அறிந்த எவரும் கூறத்துணியார். பெண்ணியம் பேசும் பின் நவீனத்துவ காலத்திற்கு முன்பும், தலித்தியம் பேசும் சம கால நோக்கிற்கு முன்பும் இது தமிழ் மண்ணில் சாத்தியப் பட்டிருக்கிறது.

10. இந்து மதம் என்பது காலப் போக்கில் மற்ற மாநிலங்களிலிருந்து வந்த வழிபாட்டு முறைகளையும், தெய்வங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளது. உதாரணமாக, சங்க இலக்கியங்களில் பேசப்படாத விக்னேசுவர் (விக்னம்=இடர் - இடர் களையும் கடவுள்), ஐயப்பன், மற்றும் நவக் கிரகங்கள் இந்து மதவழி பாட்டில் கலந்து விட்டன. ஐக்கியப் படுத்துதல் என்பது தேவையான ஒரு காரியம் எனினும், இப்படியானதொரு இக்கட்டான காலகட்டத்திலும் வைணவம் தன் நெறியை மாற்றிக் கொள்ளவில்லை. திருமால் முழுமுதற் கடவுள் என்பதிலிருந்து வழுவவில்லை. நவக்கிரக பூஜை என்பது திருமால் கோயில்களில் இல்லாத ஒரு வழக்கம். இதற்கான காரணத்தை ஆராயப்புகுந்தால் முல்லைத் திணையின் முக்கிய பண்பான கற்பு இக்கோயில் வழிபாட்டில் இன்றளவும் காக்கப்படுவதே காரணம் என்பது புரியும்.

இத்துணை சிறப்புகளும் கொண்ட தமிழ்ச் சமயம் ஒன்றிருந்தும், காலப் போக்கில் மக்களுக்கு பல்வேறு ரசனைகளுக்கு ஈடு கொடுக்கும் சமயப் பழக்கங்கள் வரலாயின. தன் பண்பாடு மறந்து, தனது போராட்டங்கள் மறந்து, லாகிரி போன்றதொரு அடிமைத்தனத்திற்கு தமிழன் உட்பட்டுவிட்டான். அதன் பலன்தான் இன்று கோயில்களில் தமிழைக் கொண்டுவரப் போராட்டங்கள், பள்ளிகளில் தமிழைக் கொண்டுவரப் போராட்டங்கள் என்பன. இது அடிமைத்தனத்தின் அறிகுறி. அகமரபு தன் அழகியல் இழந்து, கோயில் அடிமனத்திலிருந்து விலகி விட்டது. பத்தி என்னும் ஏர் உழவன் போய், கோயில் வியாபாரத்தலமாகி, கடவுளே விலை பேசப்படுகிறார். சமயக் குரவர்கள் போய், பொய் வேடதாரிகள் நிரம்பிவிட்டனர். எரிகின்ற வீட்டில் கிடைத்தது ஆதாயம் என்பது போல் கடவுளை நிந்திப்பவருக்கும் ஒரு கட்சி, ஒரு கழகம் என்று வியாபாரம் நடக்கிறது. புரட்சிகள் நடத்திய வைணவ மடங்கள் பூனை மடங்களாகி உறங்கிக் கொண்டிருக்கின்றன. உட்பூசல்,
ஊழல் என்று திருத்தலங்கள் போர்களங்களாகி வருகின்றன. எல்லோரையும் உள் அமைக்கும் தமிழ்ச் சமயங்களுக்குப் பதில், மனிதர்களை இனம் பிரிக்கும் ஆரியச் சமய வழக்கங்கள் பெருகி வருகின்றன. சாதிகள் தளைப்பது போல் சாமிகளும் தளைக்கின்றன! மாறன் திருவுள்ளமறிந்து தன்னுயிர் ஈந்தும் தமிழ்ப் பண்பாடு காத்த புரவலர்கள் போய், அவர் செய்த புரட்சிகள் பொய்த்துப்போயின.

நம்மாழ்வார் கண்ட காட்சியை மீண்டும் தமிழகம் காணுமா ?

கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம்
தொண்டீர் ! எல்லீரும் வாரீர் ! தொழுது தொழுது நின்றார்த்தும்
வண்டார் தண்ணந் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்தான் பாடி நின்றாடிப் பரந்து திரிகின்றனவே
(தி.வா.மொ. 5.2.2)

மடல் 079 - மயக்கும் மாலைப் பொழுதே நீ போ! போ!

First published on Sat, 24 Jun 2000 16:01:29 +0200

மல்லிகை கமழ்தென்றல் ஈரும் ஆலோ!
வண்குறிஞ் சிஇசை தவரும் ஆலோ!
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ!
செக்கர்நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ!
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறுஅரி ஏறுஎம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியல் ஆலோ!

(திருவாய்மொழி 9.9.1)

சடகோபன், மாறன், பாராங்குசன் என்ற இயற்பெயர் கொண்ட நம்மாழ்வார் இங்கு தன்னைப் பாராங்குச நாயகியாக பாவித்து, கண்ணன் வாழும் கோகுலத்தில் கண்ணனின் சிறுபிரிவையும் தாங்காத கோபியர் மனோநிலையை இங்கு தமிழ் அகமரபின் வழியாக படம் பிடித்துக் காட்டுகிறார்.

இராமாவதாரத்தில் இராமனைப் பிரிந்து அயோத்தி 14 ஆண்டுகள் பட்ட பாட்டை கோகுலத்தில் கண்ணனைப் பிரிந்த ஆய்ச்சியர் ஒரு மாலைப் பொழுதில் பெறுகின்றனராம்!

"விளைவான் மிகவந்து நாள்திங்கள் ஆண்டுஊழி நிற்கஎம்மை
உளைவான் புகுந்துஇது வோர்கங்குல் ஆயிரம் ஊழிகளே
!" (திருவிருத்தம் 70)

ஐன்ஸ்டைன் திவ்யப்பிரபந்தம் படித்தாராவென்று தெரியவில்லை, ஆனால் தனது சார்புடைமைத் தத்துவத்தை விளக்க, நம்மாழ்வார் போல் காதலியின் காத்திருத்தலை உதாரணமாகச் சொல்கிறார். காதலிக்காக காத்திருக்கும் பொழுது ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகிறது. அதே நேரத்தில் காதலியுடன் இருக்கும் போது ஒரு யுகம் கூட ஒரு நொடி போல் கரைந்து விடுகிறது. இதோ, நளவெண்பா:

"ஊழி பலஓர் இரவு ஆயிற்றோ என்னும்"

இந்த காதலர் மனோநிலையை சட்டம் போட்டுக் காட்டும் இன்னொரு காட்சி, கம்பராமாயணத்திலிருந்து.....

விரிமலர்த் தென்றலாம் வீசு பாசமும்
எரிநிறச் செக்கரும் இருளும் காட்டலால்
அரியவட்கு அனல்தரும் அந்தி மாலையாம்
கருநிறச் செம்மயிர்க் காலன் தோன்றினான்


கம்பன் போடும் கம்பளம் (ஓவியப் படுதா) எப்போதுமே பிரம்மாண்டமாக இருக்கும். மிதிலையில் சீதையின் நிலையைப் பாருங்கள். வழக்கம் போல் சூரியன், தன்பாட்டுக்கு மாலையில் மறைகிறது. ஆயின் சீதைக்கு அது எப்படி இருக்கிறது? "கருநிறச் செம்மயிர்க் காலன்" போல் தோன்றுகிறது!! அப்பாடா! பிரிவுத் துயர் என்பது கொடுமையானது. தன் இன்னுயிராக இருக்கும் காதலன், காதலி பிரிவு என்பது மிகக் கொடுமையானது.

"சீதையுடன் இருக்கும்போது எந்தப் பொருள்கள் இனியனவாய் இருந்தனவோ,
அந்தப் பொருள்களே அவள் இல்லாமல் இருக்கும் போது துன்பம் பயப்பனவாய்
இருக்கின்றன
" (கிஷ்கிந்தா காண்டம் 1:69)"

"மலர்களின் வாசனையுடன் கூடியதும் இளமையாக வீசுவதும், குளிர்ச்சியுடன் கூடியதுமான இந்தக் காற்று, அந்தச் சீதையைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கையிலே எனக்கு நெருப்புக்குச் சமானமாய் இருக்கிறது (கிஷ் 1:52)

என்கிறான் இராமன். இதுவும் சார்புடைமைதான். நமக்குப் பிரியமானவர்கள் இருக்கும் போது உலகமே பிரியமானதாக உள்ளது. அதுவே சோக மனோநிலையில் வெறுக்கத் தக்கதாய் உள்ளன.

வேறு:
கம்பன் நம்மாழ்வாரின் பரம பக்தன். நம்மாழ்வார் கையாளும் சொற்களை ஆசையுடன் இவனும் கையாள்வான் (அவனது முதற்பாடலே அதற்கு சாட்சி). இங்கும் "செக்கர் நன் மேகங்கள்" என்னும் நம்மாழ்வாரின் உபயோகத்தை "எரிநிறச் செக்கரும் இருளும்" என்று பயில்கிறான்.

இப்பொது பாராங்குச நாயகி விரிக்கும் கம்பளத்தைப் பார்ப்போம். இந்தியா போன்ற சூடான நாட்டில் தென்றல் என்பது ஒரு சுகானுபவம். அந்தத் தென்றல் வரும் வழியில் மல்லிகை மணத்தையும் சேர்த்துக் கொண்டு வந்தால்? ஆகா! என்ன சுகம். இல்லையா? இல்லை! என்கிறாள். பாராங்குச நாயகி. இந்த பாழாப்போன தென்றல் என்று திட்டுகிறாள்! இந்தத் தென்றலும், மல்லிகை மணமும் எப்படி உள்ளதாம்? வாளினால் வெட்டினால் தரும் துன்பம் போல், அது மட்டுமல்ல அது நஞ்சு தீட்டிய வாள் வேறு!! ஐயோ! ஏற்கனவே பிரிவுத்
துயரில் பிரிந்து போயிருக்கும் உயிரை இது இன்னும் கூறு, கூறாய் அறுக்கிறது.

குறிஞ்சி இசை வருகிறது (கவனிக்க: இங்கு குறிஞ்சி இசை என்கிறார் மாறன். முல்லை இசை என்று சொல்லவில்லை. கண்ணனைக் குறிஞ்சித் தலைவன் என்று ஈடு சொல்வதற்கு இதுதான் காரணம்). இசை எவ்வளவு இன்பம் தரக் கூடியது. ஐயோ, வண் குறிஞ்சி இசை தவரும் என்கிறாளே பாராங்குச நாயகி! "புண்ணிற்
புளிப் பெய்தாற் போல்
" (ஆண்டாள்) ஆகிவிட்டது நிலமை. காற்றும், மல்லிகையும்
கூட்டிய பிரிவை இசை மேலும் கூட்டுகிறது. இவையெல்லாம் தங்களுக்குள் இரகசிய கூட்டணி அமைத்துக் கொண்டு இராப்படை ஏறுவாரைப் போல் இவளை தப்பித்து ஓடா வண்ணம் துன்புறுத்துகின்றன. இந்த அவதியை, இம்சையை கவி நயத்தோடு ஒப்புமைப் படுத்திக் காட்டும் ஈடு - துன்புறுத்துகின்ற பொருட்கள் எல்லாம், முன்பு தனித்தனியே, இழி சொற்களைப் பேசி நலிந்த ஒற்றைக்கண்ணள், ஒற்றைக்காதள் உள்ளிட்ட அரக்கிகள் பின்பு அவ்வளவில் நில்லாதே எல்லாரும் ஒரு சேர மேல் விழுந்து, அதற்கு மேலே நலிவுகளைச் செய்ய நினைத்தாற் போல - என்று அசோக வனத்தில் சீதை பட்ட அவதியுடன் ஒப்புநோக்குகிறது.

செல் கதிர் மாலையின் மையலில் அவதியுற்ற அனுபவம் உண்டோ? நான் இந்தியாவில் இருந்த மட்டும் மாலைப் பொழுதை வெளியே களிக்கவே விருப்ப முற்றேன். அது மறைந்து இரவு வருவதைக் கண்ணால் காண வேண்டும். அப்போதுதான் ஒரு நிம்மதி. அது மயக்கும் மாலை. இரண்டும் கெட்டான் பொழுது. விவரிக்க முடியாத ஒரு சோகம் கவ்வும் பொழுது. அதனால்தானோ "மயக்கும் மாலைப் பொழுதே நீ போ! போ! இனிக்கும் இன்ப இரவே நீ வா! வா!" என்று பாடினான் இன்னாளைய கவிஞன்.

இந்தியாவின் மாலைகள் சிறப்பு வாய்ந்தன. மாலை நேரத்தின் செந்நிறத்தையும் கருமையான நிறத்தையுமுடையவான மேகங்கள் கண்ணனின் நிறத்தை ஒத்து இருத்தலால் அவையும் துன்பம் தருவனவாயின.

அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறு அரி ஏறு ஏம மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியம்.


காதல் பற்றிச் பேசுவதால் கண்ணனின் தாமரைக் கண்னை முன்னால் சொல்கிறார். ஏன்? கண்கள்தானே காதலின் சாளரம்!

நண்ணரு நலத்தினான் இளையள் நின்றுழி
கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றைஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
(கம்பராமாயணம்)

கண்ணன் நம்மாழ்வாரைப் பார்த்த போது என்ன நடந்ததாம்?
"கலக்கும் போது மின்மினி பறக்கும்படி காணும் கலந்தது" என்கிறது ஈடு. இப்படி உவமைக்கு மேல் உவமை வைத்துப் பேசும் வைணவ ஆசார்யர்களின் உரைகள் பால், கலந்து தேன் கலந்து ஊனுடன் உயிர் கலத்தல் போல் இனிமைக்கு இனிமை செய்கின்றன. அவர்தம் தமிழ், வட மொழிப் புலமை மெய் மறக்க வைக்கிறது.

இன்னும் வியாக்கானத்தைப் பாருங்கள்! கண்ணன் வந்த போது தழுவிய முலைகளும், தோள்களும் அவன் இல்லாத இப்பாலைப் பொழுதில்
"பஞ்ச காலத்தில் குழந்தைகள் சோறு, சோறு என்னுமாறு போல படுத்தாநின்றன" என்கிறது ஈடு :-))

இத்தனை அவதியும் எப்படி உண்டாயின?

இறைவனைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் மேலோங்க, அதற்கு அனுகூலமாக ஒரு சங்கின் ஒலியோ, நாண் ஒலியோ, திருவடி, திருச்சிறகு ஒலி போன்ற நற் சகுனங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் அனுகூலமாகக் கருதப்படும் பொருள்கள் கூட துன்புறுத்தத் துவங்கின.

இந்த சுகமான சோகம் அனுபவித்தவர்களுக்கே புரியும்.

கிருஷ்ணபிரேமாமிர்தம்

மடல் 080: புலி, புலி எனும் பூசல் தோன்ற!

First published on: Wed, 05 Jul 2000 08:54:50 +0200

வாழ்வும், இறைமையும் இரண்டறக் கலந்திருக்கின்றன. வாழ்வு இறைமை பற்றிய கேள்வியை நம்முள் எழுப்புகிறது. தேடும் சுகம் இறைமையை கிட்ட வைத்தும், தூர வைத்தும் நம்முடன் விளையாடுகிறது. இந்தத் தேடலை, இக்கேள்வியை உள்ளொழுப்பும் இறை உணர்வு நம்மில் ஒன்றுடன் ஒன்றாய் இருப்பதால் இறைமை என்பது புறப்பொருள் அல்ல. என்னுள், என் உணர்வுள், என் இன்பத்துள், என் சோகத்துள் கலந்துதான் அது செயல்படுகிறது அல்லது வெளிப்படுகிறது. எனவே உணர்வுடன் கலந்தும், உறவுடன் பிணைந்தும் வாழும் அது சட்டென அடையாளப் படுத்த முடியாத அளவு உள்ளின் ஆழத்துள் ஆழமாய், நம் உயிருடன் உயிராய், நம் நிழலுடன், நிழலாய் கலந்து நிற்கும் போது அதைத் தேடும் மனோநிலை எப்படி இருக்கவேண்டும்? காதலன்-காதலியிடம் பெறும்
அந்நியோன்னியமான உணர்வை விட இவ்வுணர்வு அந்நியப்பட்டதா? ஒரு தாய் தன் குழவி தழுவும் முலையுணர்வுப் பரவச நிலையில் இறைவனை நினைக்க முடியுமா? நினைக்கலாமா? துறவிலும், தனிமையிலும்தான் இறைமை அகப்படுமா? இல்லை உறவிலும், அதன் இனிமையிலும் அது தென்படுமா?

இத்தகைய கேள்விகளுக்கு விடைபகர்வது போல் அமைகின்றன நம் பக்தி இலக்கியங்கள். மாதர் பிறையானின் பாத தரிசனத்தின் போது, கண்டறியாதன காணும் போது காதல் மடப்பிடி ஏன் அப்பர் சுவாமிகளுக்கு ஞாபகம் வரவேண்டும்? இறைவனுடன் இரண்டறக் கலக்க வேண்டும் எனச் சொல்ல வரும் ஆண்டாள், "குற்றமற்ற முலை தன்னை குமரன் பனைத் தோளுடன், அற்ற குற்றம் அவைதீர அனைய அமுக்கிக் கட்டீரே!" என்று
ஊரார் பலருக்கு ஏன் ஏவல் இட வேண்டும்? குழந்தையின் ஒரு கை மார்பில் துளைய, கால்கள் அல்குலை இடற, ஒரு தாய் எய்தும் பரவச நிலையை இறைவனுடன் ஆன்மா கலந்து நிற்கும் நிலைக்கு உவமானமாகச் சொல்ல எது பெரியவர் விட்டுச்சித்தரை ஏவுகிறது? இறைமையா? தமிழா? அதன் அகமரபா? அதன் தெளிந்த, திறந்த பார்வையா?

எவ்வளவோ கட்டு திட்டத்துடன் வாழ்வை அமைத்தாலும் பல சமயங்களில் வாழ்வு நம்மை புகலற்ற நிலைக்கு தள்ளிவிடுவதுண்டு. புகலற்றவர்க்கும் புகல் கொடுக்கும் மனித நேயத்தில், அன்பில், காருண்யத்தில் தோய்ந்து நிற்கிறது இறைமை. புகலற்ற இந்நிலையில் தானிருந்து கொண்டு ஞான தேசிகனான நம்மாழ்வார் இப்படிப் புலம்புகிறார்:

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ!
புலம்புறு மணிதென்றல் ஆம்பல் ஆலோ!
பகல்அடு மாலைவண் சாந்தம் ஆலோ!
பஞ்சமம் முல்லைதண் வாடை ஆலோ!
அகல்இடம் படைத்துஇடந்து உண்டு உமிழ்ந்து
அளந்துஎங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன்
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான்
இனிஇருந்து என்உயிர் காக்கு மாறுஎன்?


(ஒன்பதாம் பத்து, ஒன்பதாம் திருவாய்மொழி-பாடல் 2)

சில தினங்களுக்கு முன் ஒரு நிகழ்வில் உரையாற்ற சுவிட்சர்லாந்து சென்றிருந்தேன். வெள்ளிப் பனிமலை முகடு ஏகாந்தமாய் மோனித்திருந்தது. அதன் பள்ளத் தாக்குகளோ காறாம் பசுமாடுகளின் கழுத்து மணியோசையால் நிரம்பி வழிந்தது. இடையர்கள் இருக்குமிடத்தில் மணியோசையும், குழலோசையும் இயல்பானவைதானே. இச்சூழல் இந்தக் காலத்தில் சுவிஸ் சாக்கலெட்டை ஞாபகப் படுத்துமாறு விளம்பர உலகம் இயங்குகிறது. ஆனால் அன்றைய இந்தியாவில் அது இறைமையை நினைவு படுத்தியிருக்கிறது.
மணியோசை புலம்புகிறது என்கிறாள், ஆம்பல் குழலின் ஓசையும், தென்றலும் வருத்துகின்றன என்கிறாள்.

ஆயர்தம் கொழுந்து கண்ணன். அவன் வேய்ங்குழல் கேட்டு உலகே சொக்கிப் போய் உள்ளது. காற்றினிலே வரும் கீதம் - நீ, நான் என்ற நினைவுகளை அழிக்கும் கீதம்...இப்படியெல்லாம் கண்ணன் நினைவாக இருக்கும் போது கண்ணன் வரக் காணாவிடில்? வாக்கு தவறி விட்டாய்
கண்ணம்மா மார்பு துடிக்குதடி! உன் குழல் ஓசையை நினைவு படுத்தும், உன்னுடன் சதா உலாவரும் பசுக்களின் மணியோசை. அப்படி இருக்கையில் நீ இல்லாமல் அவை எப்படி சுகிக்கும்?

கன்று குணிலாக் கனிஉதிர்த்த மாயவன்
இன்றுநம் னுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையம் தீங்குழல் கேளாமோ தோழி!
கொல்லையம் சாரல் குருந்துஓசித்த மாயவன்
எல்லிநம் னுள் வருமேல் அவன்வாயில்
முல்லையம் தீங்குழல் கேளாமோ தோழி
!


என்றுதானே சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை அமைகிறது!

தன் தலைவன் பிரிவால்.பகற் காலம் நீங்க வந்து சேர்ந்த மாலை மயக்குகிறது, சந்தன வாடை பிரிவாற்றாமையைக் கூட்டுகிறது. பாராங்குச நாயகி தன் பாட்டி, முப்பாட்டி வழியில் மயங்குகிறாள்? ஏனப்படி? இதோ, அவள் முன் வாழ்ந்த தலைவியர் பிரிவை இப்படிப் பேசும் கலித்தொகை:

வாலிழை மகளிர் உயிர்பொதி அவிழ்க்கும்,
காலை யாவது அறியார்,
மாலை என்மனார் மயங்கியரோ

இம்மாலைப் பொழுது எங்கள் அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்தும், அவர் கன்னியராகி நிலவினிலாடிக் களித்தும், தங்கள் பொன்னுடல் இன்புற நீர்விளையாடி இல்போந்தும், பின்........

ஒன்றே எயிற்றது ஒருபெரும்பேய் உலகம் விழுங்க அங்காந்து
நின்றாற் போல நிழலுமிழ்ந்து நெடுவெண் திங்கள் எயிறிலங்க
இன்றே குருதி வானவாய் அங்காந்து என்னை விழுங்குவான்
அன்றே வந்தது இம்மாலை? அளியேன் ஆவி யாதாங்கொல்?


என மயங்கியும் வாழ்ந்ததனால் அன்றோ இன்று எம் பாராங்குச நாயகியும் தன் தலைவன் பிரிவு தாங்காமல் துயருகிறாள்!

இவள் தலைவன் எப்பேர்ப்பட்டவன்?

பரந்த உலகம் முழுவதையும் படைத்தும், ஒரு காலத்தில் இடந்தும், ஒரு காலத்தில் உமிழ்ந்தும், ஒரு காலத்தில் அளந்தும் எல்லா உலகங்களையும் பாதுகாப்பவன்.

கலகத்தரக்கர் பலர் கருத்தினுள்ளே புகுந்து விட்டால், பல கற்றும் பல கேட்டும் பயனொன்றுமில்லை அதனால், அக்கலகத்தரக்ருக்கு கூற்றுவனாக வரத்தக்க ஞான வடிவினனானவன் என் தலைவன்.

இத்துணைப் பெருமைகள் கொண்ட எம் கண்ணன் வரக்காணில், இனி உயிர் இருந்து என்ன? போய் என்ன?

பாராங்குச நாயகி பட்ட துயரைக் காட்டிலும் துயர் படுகின்றனர் அதன் உரையாசிரியர்கள்! இவர்கள் வியாக்கியனச் செழுமையை, தமிழ்ப் புலமையை கொண்டு வந்து இப்புவியில் நாட்ட வந்து நிற்கின்றன ஆழ்வார் பாசுரங்கள் என்று சொல்லுதலும் தகும். பாருங்கள், முதல் பாசுரத்தையும், இரண்டாம் பாசுரத்தையும் இணைத்து வரும் வியாக்கியான அழகை. "ஈரும், தவரும், மயங்கும்" என்று முதல் பாசுரத்தில் அருளிச் செய்தது போல் அருளிச் செய்யாமல், வாளா, "மணி, தென்றல், ஆம்பல்" என்று சொல்வானேன்? ஏனெனில், "புலி, புலி" என்பது போன்று இவற்றின் பெயரைச் சொல்லவே அச்சம் உண்டாகிறது, எனச் சொல்லுகிறது ஈடு உரை. இவர் எங்கிருந்து பிடித்தார் "புலி, புலி" எனும் உவமானத்தை. அதைக் காண அகநானூறு படிக்கவேண்டும்!

ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழிப்
புலிபுலி என்னும் பூசல் தோன்ற............

குயமண்டு கம் செஞ்சாந்து நீவி
வரிபுனை வில்லன் ஒருகணை
.........

இத்தகைய ஈரப் பாசுரங்கள் ஏன் நமக்குத் தேவை? அதற்கும் ஈடு ஒரு உவமை தருகிறது, "உயிர்க்கழுவிலே இருக்கிறவனுக்குத் தண்ணீர் வேட்கையும் பிறந்து, தண்ணீரும் குடித்து, தண்ணீர் வேட்கையும் தணிந்தால் பிறக்கும் இன்பம் போல" இப்பாசுரங்கள் அமைகின்றன என்று. இப்பாசுரங்களில் தோயும் போதுதான் தெரிகிறது கழுவில் ஏற்றப் பட்ட ஒரு வாழ்வை நாம் வாழ்ந்து கொண்டிருப்பது!

கிருஷ்ணபிரேமாமிர்தம்

மடல் 081: அறிவு அழிந்து மறந்து பிழைக்க ஒண்ணாதபடி!

Published in : agathiyar-egroups.yahoo.com & meykandar-egroups.yahoo.com
Date: Thu, 06 Jul 2000 16:15:05 +0200

இனிஇருந்து என்உயிர் காக்கு மாறுஎன்?
இணைமுலை நமுகதுண் இடைநு டங்கத்
துனிஇருங் கலவிசெய்து கம் தோய்ந்து
துறந்துஎமை இட்டுஅகல் கண்ணன் கள்வன்;
தனிஇளஞ் சிங்கம்எம் மாயன் வாரான்;
தாமரைக் கண்ணும்செவ் வாயும் நீலப்
பனிஇருங் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தேநின்று ஈரும் லோ!


(திருவாய்மொழி 9.9.3)


மல்லிகை மணம் வெறுத்தது, மென் குறிஞ்சி இசை வண்மையானது,செக்கதிர் மாலையும் செம்மயிர்க் காலனானது, ஆக்களின் மணியோசை புலம்பல் ஆனது, பஞ்சமம், முல்லைப் பண்கள் முகாரி இராகமாயின,சந்தனம் மணக்கவில்லை. என்ன ஆய்விட்டது எம் தலைவிக்கு?
பாலுங் கசந்ததடீ-சகியே!
படுக்கை நொந்ததடீ!
கோலக்கிளி மொழியும்-செவியில்
குத்தலெடுத்தடீ

தூண்டிற் புழுவினைப் போல்-வெளியே
சுடர்விளக்கினைப் போல்
நீண்டபொழுதாக-எனது
நெஞ்சந்துடிக்குதடீ!


புறப்பொருள்கள் கசக்கத் தொடங்கி, என்னது என்று அபிமானித்த உடம்பு பகை ஆயிற்று; என்னது என்று அபிமானித்த அழகு பகை ஆயிற்று; இனி இருந்து என்னுடைய உயிரைப் பாதுகாப்பது என்று ஒரு பொருள் உண்டோ? சகியே?

நினைவுகள் என்ற வஞ்சகன் மெல்ல, மெல்ல தன் விஷவலையைத் தூவிதூண்டிற் புழுவினைப் போல் உள்ளம் துடிக்க விடுகின்றான்.

எண்ணும் பொழுதிலெல்லாம்-அவன் கை
இட்டவிடத்தினிலே
தண்ணென் றிருந்ததடீ!


வன்னிலத்திலே மழை பெய்து நிலம் பதமாகி குழைதல் போல தலைவி தன் இணை முலைகள் அவன் சேர்க்கையின் போது குழைந்து பதமாகி நிற்கிறது. இணைமுலை என்று சொல்வதால் கர்வமோ என்றால் இல்லை என்று உடன் வந்து நம்மாழ்வாரை அணைத்துக் கொள்கிறார், உரை ஆசிரியர். கண்ணனின் சேர்க்கையால் வந்த அழகினால் அது "இணைமுலை" ஆகிறது என்று. ஒரு தேர்ந்த படைப்பாளி தன் படைப்பின் மூலம் வாசகன் இதயத்தை கொள்ளை கொள்வதுடன், அவனுடன் ஒரு மாபெரும் நட்பு உடன்படிக்கை செய்து கொள்கிறான் என்பது வைணவ இலக்கிய கர்த்தா-உரை ஆசிரியர் உறவு நமக்குக் காட்டுகிறது.

விளைந்து செழித்திருக்கும் நிலத்தில் வரப்பு கண்ணில் படாதது போல் தலைவியின் இடை மெலிந்து விடுகிறது. அவள் கண்ணனின் கலவியை நொந்து கொள்கிறாள். எப்படி? "துனி இருங்கலவி" என்று. கலவிதானே காதலின் உச்சம்? அதனை ஏன் வெறுக்கிறாள்? ஏனெனில் "கலவி பிரிவினை முடிவாகக் கொள்ளுதலால், அது துக்கத்தை விளைவிக்கும் கலவி" என்று

கூடிப் பிரியாமலே-ஓரி
ராவெல்லாம்கொஞ்சிக் குலவியங்கே
ஆடிவிளையாடியே, -உன்றன்
மேனியையிரங்கோடி முறை
நாடித் தழுவிமனக்-குறை தீர்ந்து
நான்நல்ல களி யெய்தியே,
பாடிப் பரவசமாய்-நிற்கவே
தவம்பண்ணிய தில்லையடி!


கூடிப் பிரியாமல் இருக்க முடியுமோ? என்ன தவம் செய்தாலும்? அதனால் "துனி இருங் கலவி" என்கிறாள் பாராங்குச நாயகி! வேனிற் காலத்திலே மடுவிலே மூழ்கிக் கிடப்பாரைப் போல் அகம் விட்டு நீங்காத இறைஉணர்வு வேண்டுமென்று மனம் ஏங்குகிறது. ஆனால்?

ஆசை முகமறந்து போச்சே-இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம்-எனில்
நினைவு முகமறக்க லாமோ?


கண்ணன் முகமறந்து போனால்-இந்தக்
கண்க ளிருந்தும் பயனுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய்-இனி
வாழும் வழியென்னடி-தோழி?


ஐயோ! என் பாட்டன் பாரதிக்கா இந்த கதி? நம்மாழ்வாரிடம் வாருமையா,அவன் ஒரு காட்சி தருகிறான்!

தனி இளஞ்சிங்கம்எம் மாயன் வாரான்
தாமரைக் கண்ணும்செவ் வாயும் நீலப்
பனிஇருங் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தேநின்று இரும் ஆலோ!


அவன் கண்களுக்குத் தோன்றாது ஒழியட்டும், ஆனால் நெஞ்சுக்கும் தோன்றாது ஒழியக் கூடாதா? போனதுதான் போகிறான், இவற்றை ஏன் என்னுள்ளே வைத்துவிட்டுப் போக வேண்டும்? என்கிறது ஈடு! தாமரைக் கண், செவ்வாய், நீலக்குழல்? பனி இருங்குழல் என்று சொல்வானேன்? குழல் பிரிந்து போய்க் கிடக்கிறது. விளக்கம் சொல்கிறது ஈடு - "கலவியாலே குலைந்து பிரிவினை நினைத்துப் பேணமாட்டாத போதைக் கறுத்தக் குளிர்ந்த பெரிய திருக்குழலும்"- அப்பாடீ! என்ன தமிழ், என்ன அழகு, என்ன பாந்தம்.

இங்குதான் வைணவ சம்பிரதாயம் அத்துவைத மத ஆச்சாரங்களிலிருந்து பிரிந்து நிற்கிறது. சங்கர மடத்துப் பெரியவரால் இப்படிப் பேச முடியாது. அவர் இருக்கும் பீடமோ, காமகோடி! ஆனால் கட்டைப் பிரம்மச்சாரிகளாக சட்டம் கட்டிப் போட்டு விட்டது. மதஸ்தாபகர் ஆதி சங்கரருக்குக் கூட கலவி பற்றிபேச "கூடு விட்டுக் கூடு பாயும்" தொன்மத்தை உலவ விட்டுள்ளது. ஏன்? அகமரபு என்பது ஆரிய வழியில் அபச்சாரமான ஒன்று. ரசம் சொட்டச் சொட்டஒரு ஞானியால் எப்படிப் பேச முடியும் என்று அவர்கள் கேட்பார்கள்! அதனால்தான் தி.ஜானகிராமன் இன்றளவும் பிரச்சனைக்குரிய எழுத்தாளனாக இருக்கிறான். நமது சமூகம்தான் எவ்வளவு மாறி விட்டது? நல்ல வேளையாக நம்மாழ்வாரின் அகமரபு ஏற்று, போற்றப் பட்டுள்ளது. இல்லையெனில் கண்ணனைத் தவிர ஒன்றுமறியாத கட்டைப் பிரம்மச்சாரி சடகோபரும் (சடகோபன் என்பதற்கு கட்டை போல், சடம் போல் இருந்தவன் என்றுபொருள்!) கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருக்க வேண்டும் ;-)

நம்மாழ்வார் "நான்கு தோளும்" என்று அருளிச் செய்கிறார். கண்ணனுக்கு நான்கு தோள்கள் உண்டோ? என்றொரு கேள்வியை அது விட்டு நிற்கிறது. கம்சன் முதலானோர்க்கு அதை மறைத்து தேவகி போன்றோருக்கு அவன் காட்டியதாக விஷ்ணு புராண சுலோகம் ஒன்றைச் சொல்கிறது ஈடு. இப்படி வரிக்கு, வரி நம்மாழ்வாரின் இதயம் அறிந்து இதமாகப் பொருள் சொல்கின்றன வைணவ உரைகள். அதனால்தான் அழகிய மணவாளர் தனது படைப்பை "ஆசார்ய ஹிருதயம்" என்றார்.

சங்கு சக்கரத்தையும், கதையையும் தரித்த திருக்கைகளை உடைய அவன்-இவ்வழகுகளை அனுபவித்து இழந்தால் மறந்திருக்கப் பெறாதபடியான பாவத்தை செய்தேன் என்று துடிக்கிறது ஈடு, மாற்றாக "அறிவு அழிந்துமறந்து பிழைத்திருப்பேனோ!" என்று முடிக்கிறது.
ஈரப் பாசுரங்கள்! தலை பேசாமல் இதயம் பேசும் மரபு! அது செந்தமிழ் அகமரபு!

கிருஷ்ணபிரேமாமிர்தம்