e-mozi

மடல் 076 - கலி நீக்கம் - நிழல் வெளியும், நிஜவெளியும்

First published on : Mon, 13 Mar 2000 10:04:09 +0200

தமிழம், மலையகம் இவை தோன்றி சூட்சுமமாக இருக்கும் நமது நிழல்வெளி சமுதாயத்திற்கு ஒரு நிஜவெளி அந்தஸ்த்து கொண்டுவந்திருப்பதைக் கண்டு ஆனந்திக்கிறேன். அமீரகக் குழுமம் இதற்கொரு முன்னோடி. மின் மன்றங்கள் போல் மின் தமிழ், அ.ஐ.கூ.நாடுகளில் உருவாகும் நேரமிது. வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

நிழல்வெளி நிஜமாகும் போதுதான் உண்மைகள் நிஜமாகச் சுடுவது தெரியும். மின் அஞ்சல் என்பது வெள்ளை மாளிகையில் உட்கார்ந்து கொண்டு ஈராக் மக்களுடன் சண்டை போடுவது போன்றது. ஆனால் தமிழம், மலையகம் என்பவை நேரடியாக களத்தில் இறங்கி சண்டை போடுவது. களத்தில் இறங்கினால் காயம் படும். அது தவிர்க்க இயலாதது. அதை தாங்கும் பலம் உள்ளவர்கள்தான் இதை ஆரம்பித்து உள்ளார்கள் என்பதும் தெரிகிறது. அறியாமை என்பதுதான் நமது பொது எதிரி. அதை அறிவுத் தீயால் சுட்டெரிக்க வேண்டியது நமது கடமை ("படித்தவன் சூதும், வாதும் செய்தால் ஐயோ என்று போவான்" என்பது பாரதி வாக்கு). அறியாமை என்பது நிழல்வெளியைப் பொருத்தவரை ஒரு கருத்து. காற்றில் எல்லோராலும் கத்தியை வீச முடியும்! ஆனால் நிஜ வாழ்வில் அறியாமை மனித உருக் கொள்கிறது. கொடுமைகள் செய்கிறது.

இதற்கு நல்ல உதாரணம் தருமபுரி. அறியாமை இருளில் அப்பித் திரிபவர்கள் தன் கையில் ஆளுமையைக் கொண்டு வரும் போது? "பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" - ஆம்! அதுதான் தமிழ் மண்ணில் நடந்திருக்கிறது. சுற்றுலா போய் வந்த மாணவியர் எரிக்கப் பட்டனர். போய் வந்தவர் சொல்கிறார்கள், குழுத் தலைவி இன்னும் சில மாணவிகள் இறங்கவில்லை, பொறுங்கள் ஐயா! என்று கெஞ்சியும் அரக்கர்கள் வண்டியில் எண்ணெய் ஊற்றி பற்ற வைத்திருக்கின்றனர். இது ஒளிப்பதிவு செய்யப் பட்டிருக்கிறதாம். இது நிஜம். அறியாமைக்கு அசுரபலம் உண்டு என்பதை இது காட்டுகிறது. இது தடுக்கப் பட வேண்டும்.

அறிவொளி இயக்கம் இணையத்தின் துணையுடன் மீண்டும் உலாவரச் செய்ய வேண்டும். மக்களிடம் உண்மை போய்ச் சேர வேண்டும். அடுத்து ஒரு செய்தி. தமிழக அரசு தமிழ் எழுத மின் செயலிகள் ஒன்று 6000 ரூபாய் என்று கொடுத்து மதுரையிலிருந்து வாங்க எண்ணியுள்ளதாம். வேடிக்கை எண்ணவெனில் 70 களிலேயே ஆதமி என்றொரு தமிழ்ச் செயலியை இலவசமாகக் கொடுத்து சாதனை புரிந்தவர் முனைவர்.சீனிவாசன். முனைவர்.கல்யாண் தமிழுக்குச் செய்துவரும் தொண்டு ஊர் அறிந்தது. அவர் மெக்கின்டாஷ் போன்ற கணினித் தளங்களுக்கும் உதவும் வகையில் "மயிலை" செய்து இலவசமாகத் தந்தார். முத்துவின் முரசு, முனைவர் குப்புசாமியின் கம்பன், சிவகுருநாதனின் நளினம், முனைவர். நா.கோவிந்தசாமியின் கணியன் இப்படி எத்தனை தமிழ்ச் செயலிகள் இலவசமாக உலா வருகின்றன. ஆனால் ஏழை நாடான தமிழகம் 6000 ரூபாய் விலை கொடுத்து புதிய செயலிகளை வாங்க எண்ணியுள்ளது. இலவசமாகக் கொடுப்பதாக சொல்லிக் கொண்டும் கொடுக்கும் 6 முழ வேட்டியில் ஒரு முழம் வெட்டி காசு பார்த்த தமிழகம்!! படித்தவனும், படிக்காதவனும் சூதும், வாதும் செய்துதான் பிழைத்துக் கொண்டு உள்ளார்கள். இவர்கள் சமூகத்தின் காளான்கள். ஒட்டுண்ணிகள். இவர்களின் பேயாட்டம் தமிழ் மண்ணில் சாயவேண்டும்.

தமிழமும், மலையகமும், அமீரகமும், மின்தமிழும் இதற்கு உதவுமா? உதவ வேண்டும்.

கொன்று உயிர் உண்ணும் விசாதி
பகைபசி தீயன வெல்லாம்
நின்றிவ் வுலகில் கடிவான்
நேமிப் பிரான் தமர் போந்தார்
நன்றிசை பாடியும் துள்ளியாடியும்
ஞாலம் பறந்தார்
சென்று தொழுதுய்ம்மின்; தொண்டீர்!
சிந்தையைச் செந்நிறுத்தியே
(தி.வா.மொ. 5.2.6)

சிந்தையை செம்மையாக நிறுத்தி, கொன்று உயிர் உண்ணும் பகைவர்களாகிய தீயனவெல்லாம் தமிழ் மண்ணில் நில்லாமல் செய்யவேண்டும். நம் அறிவு அதைச் செய்யுமா? அப்படிச் செய்து மகிழும் காலையில் எம் அடியார்கள் நன்று இசை பாடி, துள்ளி ஆடி ஞாலத்தில் பறப்பர் என்பது உறுதி. ஆழ்வார்களின் பாடல்களில் இத்தகைய முழக்கங்களை நிரம்பக் கேட்கலாம். ஏனெனில் ஆழ்வார்கள் மோட்சம் பெற காவி உடை அணிந்து காடு போகச் சொல்லவில்லை. பெண்ணைத் துறந்து பொய் வேஷம் போடச் சொல்லவில்லை. சுடர் விளக்கம் என்பது இங்கே, இப்போது, நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் நடைபெற வேண்டும். சிறு துளி பெருவெள்ளம் போல் அத்துளிகள் ஒரு இயக்கமாகச் செயல்படும் போது அதற்கு அளப்பரிய சக்தி வந்து விடுகிறது. அந்த சக்தியை அவர்கள் உருவகப் படுத்திச் சொல்லிச் சென்றனர். இப்பாடலைப் பாருங்கள்.

நாட்டில் பிறந்தவர் நாரணற் காளன்றி யாவரோ?
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை யளித்துய்யச் செய்து நடந்தமை கேட்டுமே!
(தி.வா.மொ. 7.5.2)

தமிழ் நாட்டில் பிறந்து படாதன படும் நம் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் யார் குரல் கொடுக்கப் போகிறார்கள்? நாட்டில் நலிந்து, படர்ந்து, பலம் பெறும் அரக்கர் குழாமை நாடித் தடிந்திட்டு, தமிழ் நாட்டை உய்யச் செய்யப் போவது யார்? கல்கி அவதாரத்திற்காக காத்திருக்க வேண்டுமா? இல்லை. ஆழ்வார் சொல் கேளுங்கள். நாட்டில் பிறந்தவர் நாரணர்கள் அன்றி யாவரோ? நாம்தான் அந்த நாரணர்கள். நாம்தான் அந்த கல்கிகள். அவதாரங்கள் வெற்றிடங்களிலிருந்து தோன்றுவதில்லை. அவதாரத்திற்கு ஒரு சமூக காரணம் உள்ளது. "ஆகாவென்றெழுந்ததுபார் யுகப் புரட்சி" என்று வியக்கும் வண்ணம் யுகப் புரட்சிகள் தோன்றுவது சிறு, சிறு இயக்கங்களினால்தான். மடமை ஒழிக்கும் உறுதி உள்ள குழுக்கள்தான் அத்தகைய மாபெரும் புரட்சிகளைச் செய்திருக்கின்றன. ஆழ்வார்கள் முன் மொழிவது இத்தகைய இயக்கங்களையே.

மோட்சங்கள் விண்ணீல் இல்லை, நண்பா! மண்ணில்த்தான் அதைக் காண வேண்டும். அதை நாம்தான் செய்விக்க வேண்டும். அதைச் செய்விக்கும் சக்தியின் உருவகம்தான் இறைவன். இதை ஒரு கவிஞனிடம் கொடுத்தால் அவனால் இப்படித்தான் எழுத முடியும்:

கண்ணன் அல்லால், இல்லை கண்டீர் சரண்! அது நிற்க, வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே, வடமதுரைப் பிறந்தான்
திண்ண மாதும் உடைமையுண்டேல், அவனடிசேர்ந்துய்ம்மினோ
எண்ணவேண்டா, நும்ம தாததும் அவனன்றி மற்றில்லையே
(தி.வா.மொ. 9.9.10)

கண்ணன் மண்ணின் பாரத்தை நீக்க வந்தான் என்று சொன்னால் அதர்மம் எங்கு நடக்கும் போதும் அதைத் தட்டிக் கேட்கும் வலுவை நம் உள்ளத்தில் ஏற்றிக் கொள்ள வேண்டும் என்று பொருள். கண்ணன் திருவடி எண்ணுக! என்பதன் பொருள் இதுதான். கண்ணனின் அடியார்கள் என்று சொல்லிக் கொண்டு கோயில் மதில் சுவரைச் சுற்றி வந்தால் மடமை போய் விடுமா? இல்லை, கொடுமை அழிந்திடுமா? கொடுமை அழிய கண்ணன் மல்லனுடன் போர் செய்தான். அவன் அடியார்கள் அவனைப் போல் அறப்போர் செய்ய வேண்டாமோ? அதுவல்லவோ கண்ணனின் உள்ளத்தைப் புரிந்து கொண்டதாக ஆகும்.

நிழல்வெளியில் தோன்றும் இப்பொறிகள் நிஜவெளியில் தீயாகட்டும். இத்தீச்சுடர் பட்டு, ஆண்டாள் சொல்வது போல் அறியாமை என்பது "தீயினில் தூசாகட்டும்". அதற்கு தமிழமும், மின் தமிழும், மலையகமும், அமீரகமும் துணை போகட்டும்.

பொலிக! பொலிக! பொலிக!
போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த
நமனுக்கிங் கியாதொன்றுமில்லை
கலியும் கெடும் கண்டு கொண்மின்
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்திசை பாடியாடி
யுழிதரக் கண்டோம்
(தி.வா.மொ. 5.2.1)

0 பின்னூட்டங்கள்: