e-mozi

மடல் 077: வாழ்வின் துயரை எதிர் கொள்வது எப்படி?

First published date: Fri, 31 Mar 2000 09:03:07 +0200

மேருமலையை மத்தாகக் கொண்டு, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கொண்டு திருபாற் கடலைக் கடைந்ததாக ஒரு பழம் ஐதீகம் உண்டு. வெண்ணை கடைய ஒரு ஆள் போதும். ஒரு கடலையே கடைவதென்றால்? எத்தனை ஆயிரம் பேர் வேண்டும்? ஒரு புறம் அசுரர், ஒரு புறம் தேவர் என்று கை கோர்த்து கடைகின்றனர். பாலைக் கடைந்தால் வெண்ணெய் திரளும். கடலைக் கடைந்தால்? பல விஷயங்கள் திரண்டன! தன்வந்திரி என்ற ஆயூர்வேத வைத்தியர் வந்தார், கேட்டதைக் கொடுக்கும் காமதேனு வந்தது, திருமகளே வந்தாள், கையில் அமிர்தத்துடன்!

இந்தக் கடலைக் கடைந்த ஐதீகத்திற்கு பல அர்த்தங்கள் கொடுக்கப் படுகின்றன. முழுவதும் புனைவுள்ள புராணங்களிலிருந்து, மிகவும் ஆய்வு பூர்வமான காரணங்கள் வரை. புராணக் கதையை விடுவோம். திருமகள் கொண்டுவந்த அமிர்தம் கடலிலிருந்து வரும் உப்பைக் குறிக்கலாம் என்கிறார். பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி. முதன் முதல் உப்புக் காய்ச்ச தெரிந்த போது உருவான ஐதீகமாக இருக்க வேண்டும் இது. ரொம்பப் பழசு. திருமகளின் வருகை கடல் என்னும் உணவுக் களஞ்சியத்தை (மானிடர்க்குக் கிடைத்த அமிர்தம்!) கண்டு கொண்டதை குறிக்கலாம் என்கிறார் இவர்.

ஐதீகங்கள் உருவகங்களாக (metaphors) இருப்பதால் புதுப்புதுக் காரணங்களை உருவாக்கிக் கொள்ளலாம். உருவகங்களின் சிறப்பு அது. என்னைக் கேட்டால் கடலைக் கடைவது என்பது மனித ஜீவனின் ஆவியைக் கடைவது என்று சொல்வேன். திருவின் வருகை உள்ளத்தில் வருவது அவ்வளவு எளிதான காரியம் அல்லவே! கஷ்டம் இல்லாமல் தெளிவு வருவதில்லை. வாழ்வு மனிதனுக்கு கஷ்டம் கொடுப்பதே அவனை உயர்வுறச் செய்யத்தான். கஷ்டங்கள் இல்லையேல் அறிவு வளர்ச்சி இல்லை. பரிட்சைகள் இல்லையேல் வெற்றி என்பது இல்லைதானே!

கடலைக் கடைவது சாமானிய விஷயமில்லை. கடைந்த கடைசலின் கஷ்டம் பொறுக்காமல் வாசுகி ஆலகால விஷத்தைக் கக்கி விட்டது!

கஷ்டம் வந்தது, செத்தான் என்றால் கதையின் பயன் என்ன? கஷ்டத்திலிருந்து மீட்பு வேண்டும், சில சமயங்களில் மீட்பான் வேண்டும். சுயமாக மீள முடியாத கஷ்ட காலங்களில் இறைவனைத் தவிர வேறு யார் துணை?

முதலில் கடலைக் கடைவது என்று தீர்மானபோது ஆகப் பெரிய மேரு மலையை கடலில் மூழ்கி விடாமல் தாங்க ஒரு சுமைதாங்கி வேண்டும். அந்த பளுவான பொறுப்பை ஏற்கிறான் பரந்தாமன். ஆக உலகின் முதல் கூலி கடவுள்தான். மூட்டை சுமந்து முதுகு கூனியவன் அவன்தான். ஆலகால விஷம் வந்தவுடன் அந்த நஞ்சை உண்டவன் தில்லை அம்பலன். சாதாரணமானவர்கள் காரியத்தின் லாபத்தை எடுத்துக் கொள்வர். உதாரணமாக கடலிலிருந்து வரும் அமிர்ததிற்காகத்தான் தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டனர். ஆனால் இந்தக்
கதையில் நஷ்டத்தை விரும்பி எடுத்துக் கொண்டவன் இறைவன். நஞ்சுண்டதால் அவன் திருநீலகண்டன் ஆகிப் போனான். ஒருவன் நஞ்சு உண்டதால் நீலமானான், இன்னொருவன் பிறவியிலேயே நீல நிறமாக உள்ளான். உலகின் அத்துணை துயர்களையும், ஜீவன்களின் எண்ணிலா பாவங்களை-நஞ்சை உண்டு, உண்டு உடல் முழுவதும் நீலமாகிப் போனான் போலும்! என்னைப் போலவே எண்ணுகிறார், திருமங்கை மன்னனும், "நஞ்சுதான் கண்டீர்
நம்முடைவினைக்கு, நாராயணா என்னும் நாமம் (2) 1.1.10" என்று அவர் வழி மொழிகிறார்.

மானிடரின் பாவத்திற்காக ஒருவன் சிலுவை ஏந்தவில்லையா?

மானிடர் வாழ்வில் கசக்கிப் பிழியும் கஷ்டங்கள் வந்து போகின்றன. கஷ்டங்கள் வரும் போது தனிமையாகி விட்டோமெனில் அந்தக் கஷ்டங்களின் துயர் பன்மடங்கு கூடுகிறது. இந்தக் கஷ்டங்களைக் கண்டு தப்பித்து ஓடுபவர்கள் (உ.ம். மது, மருந்து) ஒருக்காலும் காட்சி பெருவதில்லை. ஆனால் இந்தக் கஷ்ட காலங்களைத் துணிவுடன் தாங்கும் மனிதன் கடைசியில் பெரிய பாடம் கற்றுக் கொண்டு ஆன்ம விடுதலை அடைந்து விடுகிறான். அப்போது அவனுக்கு அமிர்தம் கிடைத்து விடுகிறது!

ஜீவன்களுக்கு வரும் கஷ்டங்கள் தாங்களாகவே சேமித்துக் கொள்வதுதான். சபலம், ஆசை, அறிவின்மை இன்னோறன்ன பிற காரணங்களால் மனிதன் தனக்கு கஷ்டங்களை வரவழைத்துக் கொள்கிறான். தவறுகள் திருத்திக் கொள்ளத்தான். அக்கினியில் போட்டால்தான் தங்கம் மிளிர்கிறது. கஷ்டங்கள் இல்லையெனில் தெளிவு பிறப்பதில்லை. பக்தி ஊறுவது இல்லை.

உதாரணமாக திருமங்கையாழ்வார் சொல்லும் காட்சிகளைப் பார்ப்போம். பெண்கள் தரும் சுகம் கருதி அவர்கள் பின்னால் அலைந்து தன் நாளை வீணாக்கியதை எண்ணி வருந்துகிறான் ஒருவன் (நமது கல்லூரி மாணவருக்காக வந்த பாடல் போல் உள்ளது!):

ஆவியே! அமுதே! என நினைந்துருகி
அவரவர்ப் பணைமுலை துணையா
பாவியேன் உணராது எத்தனை பகலும்
பழுது போய் ஒழிந்தன நாள்கள்!


அதுமட்டுமல்ல. இன்னொருவன் திருடன். வழிப்பறிக் கொள்ளை அது இதுவென கண்டவா திரிந்திருக்கிறான். அந்தச் சூழலிலும் தெளிவு வரத்தான் செய்கிறது.

கள்வனேன்; னேன் படிறு செய்திருப்பேன்

கண்டவா திரிதந்தேனேலும்
தெள்ளியேனானேஞ் செல்கதிக்கமைந்தேன்
சிக்கெனத்திருவருள் பெற்றேன்
உள்ளெலாமுருகிக்குரல் தழுத்தொழிந்தேன்
உடம்பெலாம் கண்ணீர்சோர
நல்லிருளளவும் பகலும் நான் அழைப்பேன்
நாராயணாவென்னும் நாமம்.
(பெரிய திருமொழி-1.5)

எத்தனை தவறுகள்தான் செய்திருப்பினும் பெற்றவள் பொறுப்பதில்லையா? அதுபோல் இங்கு படிறு (நயவஞ்சகம், திருடு) செய்திருப்பினும் இறைவன் நேரடியாக வந்து ஆட்கொள்கிறான். அதன் பின் வரும் நிலையை திருமங்கையை விட வேறு யாரால் இவ்வளவு அழகாகச் சொல்லி விட முடியும்?

ஒரு கதை உண்டு. ஒரு பக்திமான். அவனும் கடவுளும் இணைபிரியாமல் எப்போதும் இருப்பார்கள். இருந்தாலும் அவனுக்கும் கஷ்ட காலங்கள் வருகின்றன. முடிந்த பின், கஷ்ட காலத்தை பின்னோக்கிப் பார்க்கிறான். கடல் மணலில் தனியாக ஒருவர் தடம். வருத்தத்துடன் அவன் கடவுளைக் கேட்டானாம். "ஏப்பா! நான் நல்லா இருந்த காலத்திலே எல்லாம் என் கூட நடந்து வந்தியே, இப்ப பாரு, கஷ்ட காலத்திலே என்னைய மட்டும்
தனியா நடக்க விட்டுட்டியே?" என்றானாம். கடவுள் சிரித்துக் கொண்டாராம். "அப்பா! நீ பார்த்தது உன் காலடித் தடமில்லை. அது என் காலடித்தடம்! அப்போது உன்னை நான் தோள் மீது சுமந்து வந்தேன். உன் காலடித்தடம் பதியவே இல்லை" என்றாராம்.

கசக்கிப் பிழியும் காலம் வரும் போது பாரதி சொல்வது போல்
"தெய்வம் நமக்குத் துணை பாப்பா,
ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா" என்றும்
"நம்பினார் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு!" என்றும்
திட நம்பிக்கை கொண்டுவிட்டால் மரணம்தான் சிக்கல்களுக்கு தீர்வு என்ற முடிவிலிருந்து தப்பலாம். இந்த நம்பிக்கைதான் நம்மைக் கை தூக்கி விடுகிறது. இல்லையெனில் இந்தியா போன்ற கஷ்டம் நிறைந்த நாட்டில் வாழ்வு நரகமாகும்.

தன் பக்தி குறைந்து விடக்கூடாது என்று தனக்கு கஷ்டமே தருமாறு வேண்டிய பக்த கபீர்கள் பாரினில் உண்டு. அது வேறு விஷயம்! தியாகராஜரை எப்படி வகைப் படுத்துவது என்று தெரியவில்லை. சாகாவரம் பெற்ற கீர்த்தனைகளை கர்னாடக சங்கீதத்திற்கு தந்திருக்கிறார். சில கீர்த்தனைகளில் அவரது துயர் நெஞ்சைப் பிழியுமாறு வருணிக்கப் பட்டுள்ளது. அவருக்கு என்ன கஷ்டம் வந்திருக்கும்? ஏழ்மையா? அப்படியெனில், நிதி சால சுகமா? என்று பாடி அரசனின் ராஜமரியாதையை உதறுவானேன்? இறைவனுடன் கலக்க முடியாத வேதனையா? இராம தரிசனம் கிட்டவில்லையே என்ற ஏக்கமா?

இந்தக் குலசேகர மன்னனுக்கு என்ன கவலை? ராஜாவாட்டம் இருக்க வேண்டியதுதானே?
அதைவிடுத்து மீளாத் துயர் வந்தாலும் அரங்கன் பாலுள்ள அன்பு மாறாது என்கிறாரே இவர்.
அவரது மிகச் சிறந்த இரண்டு பாசுரங்கள் (பெருமாள் திருமொழி) இதோ:

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் போயாளன் போல் மாயத்தால்
மீளாத்துயர் தரினும் விற்றுவக் கோட்டம்மா
நீளா உனதருளே பார்ப்பன் அடியேனே!
(691)

மருத்துவன் வயிற்றையே வெட்டுகிறான் என்றாலும் அவன் மேல் நாம் கோபப்படுவதில்லையே! அறுவை சிகிச்சை முடிந்த பின் "ரொம்ப தாங்ஸ் சார்!" என்றுதானே வழிகிறோம். அதுபோல் மாயத்தால் இறைவன் தரும் துன்பங்களை துன்பங்களாகப் பார்க்காமல், நம் ஆரோக்கியத்திற்குதான் அது என்று பார்க்கப்பழகி விட்டால்?

செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம்
அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லால் அலராவால்
வெந்துயர் வீட்டாவிடினும் விற்றுவக் கோட்டம்மா உன்
அந்தமில் சீர்க் கல்லால் அகங்குழைய மாட்டேனே
(693)

சூரியன் வெந்தழலே வீசினாலும் தாமரை சூரியனைக் கண்டுதானே மலர்கிறது, அதுபோல் வெந்துயரே தந்தாலும் இறைவா உனக்கல்லால் வேறு எவர்க்கும் அகம் குழைய மாட்டேன் என்கிறார்.

இப்படி இருப்பதில் பாரிய லாபம் இருக்கிறது. இந்த மனோபாவத்தை குழந்தையிலிருந்து சொல்லித்தர வேண்டும். ஏனெனில், நமது பெரும்பாலான துயர்கள் உறவுகளைப் பிரிவதால் வருகிறது. சாவு வந்து நம் உறவுகளை நாம் எதிர்பார்க்காத தருணங்களில் பிரித்து விடுகிறது. சில நேரங்களில் வேறு காரணங்களால் உறவுகள் பிரிவதும் உண்டு. இத்துயரைக் களைய நல்ல சாதனம் இறை பக்தி. உண்மையில்ஆன்மாவின் ஒரே உறவு இறைவன்தான். இதை கர்னாடக மாநிலத்தைச் சேர்ந்த தேவரதாசிமையின் ஒரு வசனம் சுட்டும்:

மேலே முடிவந்தால் பெண்ணென்பர்
தாடிமீசை வந்தால் ஆணென்பர்
நடுவில் சுற்றும் ஆன்மா
ஆணுமல்ல பெண்ணுமல்ல காண் இராமநாதா!

_______
ஆயுள் போய்க் கொண்டிருக்கிறது
எதிர்காலம் குறைந்து வருகின்றது
கூடியிருந்த மனைவி மக்கள்
தத்தம் வழியில் நீங்கிச் செல்கின்றனர்
வேண்டாம்! வீணான வாழ்க்கையை
வீணாகக் கழிக்க வேண்டாம் மனமே!
(அக்கம்மாதேவி)

உலகத் துன்பங்களைக் கண்டு வருத்தமுறுவது இன்னொரு வகை. அன்னை தெரசா இந்தியத் துன்பம் கண்டு இங்கு வந்து உழன்றார். முதலில் அவளைக் கண்டோர் முறுவலித்தனர், கேலி பேசினர், ஏழையின் துயரை மீட்க முடியாது என்றனர். இது உலக இயற்கை என்று கண்டாள் தெரசா. மானிடர்க்குச் செய்யும் பணி இறைவனுக்கு செய்யும் பணி என்ற திட நம்பிக்கை கொண்டாள். அது கடைசியில் வென்றது. அவளுக்கு நோபல் பரிசும் வாங்கித் தந்தது. தாகூர், இராமன் இவர்களுக்குப் பிறகு இந்தியாவிற்கொரு நோபல் பரிசும் நிடைத்தது. இதை அப்படியே வருணிக்கின்றார் நம்மாழ்வார்:

நண்ணாதார் முறுவலிப்ப

நல்லுற்றார் கரைந்தேங்க
எண்ணாராத் துயர் விளைக்கும்
இவையென்ன உலகியற்கை!
கண்ணாளா! கடல் கடைந்தாய்
உனகழற்கே வரும் பரிசு
தண்ணாவா அடியேனைப்
பணி கண்டாய் சாமாறே.


திருவாய் மொழி (2) 4.9.

இந்தப் பின்னணியில் பாரதி, அரவிந்தர் போன்ற சுதந்திர வீரர்களின் சரித்திரத்தைக் காண வேண்டும். இருவருமே தீவிரவாதிகள். இருப்பினும் இருவரும் கடைசியில் இறைவனிடம் சரண் புகுந்து விட்டனர். உலகில் இது இன்னும் ஆச்சர்யமான ஒரு செயலாகவே பார்க்கப் படுகிறது. ஏன் இவர்கள் மார்க்சிசத்தையோ வேறு மார்க்கங்களையோ தேடிப் போகாமல் ஆன்மீகத்திற்கு வந்தனர்? புரட்சி வீரர் சுபாஷ் சந்திரபோஸ் கூட முதலில் விவேகானந்தரின் சொற்பொழிவுகளைக் கேட்டு ஆன்மீகத்திற்குள் புக நினைத்தார். அவருக்கு சரியான குரு கிடைக்காத காரணத்தால் அவர் கெளரவக் கூட்டத்தோடு (நாட்சி, ஜப்பானியர்) சேர்ந்து கடைசியில் அவச்சாவு அடைந்தார் என்று சரித்திரம் காட்டுகிறது (ஒரு வகையில் கர்ணன் கதைதான்!).

"மனிதன் பெரும்பாலும் வரம்பு கடந்த தன்னலமிக்க விலங்கு. அவனை முழுமையாக அறிந்து கொள்வதற்கு இயற்கை அறிவியல், இயற்பியல், வேதியியல், அல்லது பொருள் முதல்வாதிகள் பின்பற்றும் முழுவதும் பண்பு அடிப்படையிலான உளவியல் போன்றவை
பயன்படா. கடவுளுடன் உறவுடைய மனித இருப்பு என்பதை விளக்கப் பகுத்தறிவு வினாக்கள் போதுமான சான்று ஆகா. அது ஒரு சமய அனுபவம். ஒவ்வொரு தனி மனிதனும் தன் வாழ்வில் உள் நோக்கிய சிந்தனையாலும் செயலாலும் மட்டுமே உணர முடியும்; அது அறிவியல் போன்று கோட்பாடுகளின் அமைப்பால் உருவானது அன்று."
(இந்திரா பார்த்தசாரதி-தமிழ் இலக்கியங்களில் வைணவம்)

4 பின்னூட்டங்கள்:

  வடுவூர் குமார்

Thursday, August 02, 2007

கஷ்டம் கொடுப்பதே அவனை உயர்வுறச் செய்யத்தான
இது பலருக்கு புரிவதில்லை,ஏன் சில சமயம் நமக்கு கஷ்டம் வரும் போது கூட இந்த எண்ணம் தோன்ற மாட்டேன் என்கிறது.எல்லாம் முடிந்து எழுந்த பிறகு தான் உறைக்கிறது.
கடல் மண்,மனிதன் & காலடி அருமையான உதாரணங்கள்.
கடைசி 2 பத்திகள் தானே திரு.இந்திரா பார்த்தசாரதி யுடையது?

  நா.கண்ணன்

Thursday, August 02, 2007

இந்த எண்ணம் ஊறிப்போக வேண்டும், குமார். திரும்பத்திரும்ப இப்படிப் பார்த்துப் பழக வேண்டும். நிறைய சத் சங்கம் கேட்க வேண்டும். பின் இந்த மனோநிலை வந்துவிடும். பின் அவன் இட்டதே ஆணை என்று கொள்ளும் மனது, அது கஷ்டமோ, நஷ்டமோ!

கடைசிப்பத்திதான் இ.பாவினுடைது. இப்போது அதை இட்டாலிக்கில் மாற்றிவிட்டேன்.

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Thursday, August 02, 2007

இங்கும் அகமரபு தான் கண்ணன் சார்!
காதல் மனத்துக்குள் ஊறி விட்டால், வாழ்வின் துயரை விசாரித்து தள்ளி வைக்க முடியும் என்பதை ஆழ்வார்கள் தான் எவ்வளவு அருமையாகக் காட்டுகிறார்கள்!

வாளால் அறுத்துச் சுடினும், மருத்துவனும்
செந்தழலே வந்தழலைச் செய்தாலும், தாமரையும் எவ்வளவு அழகிய எடுத்துக்காட்டுகள்?

இந்தப் பாசுரத்தை விட்டு விட்டீரே!
மனுசனையே எடுத்துக்காட்டா காட்டறாரே ஆழ்வார்! அகமரபு துயரை எதிர்கொள்ளும் பாசுரம்...

கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியாக் குலமகள்போல்
விண்டோய் மதிள்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மா! நீ
கொண்டாளா யாகிலும் உன் குரைகழலே கூறுவனே!

  நா.கண்ணன்

Friday, August 03, 2007

கண்ணபிரான்: குணா படத்து கமலஹாசன் ஞாபகம் வருகிறது. "இது மனிதர் உணர்ந்து கொள்ள மனிதக் காதல் அல்ல. அதையும் தாண்டிப் புனிதமானது" எனும் பாட்டில், "என்ன பட்டாலும், அது என்னமோ எனக்கு ஒண்ணுமே ஆகறதில்லே" என்பார். காதல் நோய் பெரிதாய் இருக்கும் போது மற்ற நோய் தெரியாது போலும்.

நல்ல எடுத்துக்காட்டு!