e-mozi

மடல் 078: மாறன் திருவுள்ளமும் பொய்த்துப்போன புரட்சிகளும்

First published on : Date: Wed, 26 Apr 2000 21:08:56 +0200

தமிழ் வைணவ நெறியின் சிறப்பு மற்றும் வளர்ச்சி குறித்த கட்டுரைகள் வந்து கொண்டிருக்கின்றன. பிராமணீய மேளாண்மை கொண்ட இந்திய ஆன்மீக உலகில் ஆரிய பாரம்பரியத்தில் வாராமலும், பிராமண குலத்தில் பிறக்காமலும் இருந்தும் ஸ்ரீவைணவத்தின் மூத்த ஆசாரியனாக கருதப்படும் மாறன் (நம்மாழ்வார்) பற்றிய இன்றைய புரிதல் வைணவ நெறி தமிழ் மண்ணில் தொட்ட மைல்கற்களை அறிந்துகொள்வதுடன் அதை ஒரு மீள் பார்வைக்கு கொண்டுவரவும் உதவுகிறது.

ஆரிய மேளாண்மை குறித்து இந்த நூற்றாண்டில் பல அரசியல், ஆன்மீகத் தலைவர்கள் உரத்த சிந்தனையை முன்வைத்து இயக்கங்களை நடத்திய போதிலும் இந்த மேளாண்மை முற்றும் நீங்கிவிடவில்லை என்பதை காலம் காட்டுகிறது. இதற்கு நல்ல உதாரணம் தமிழ் மண்ணில் தாய் மொழிக்கல்வி என்பது நிலை பெறமுடியாமல் உளத்தடை இன்றளவும் இருப்பது. இரண்டாவது, தாய் மொழி இன்றளவும் கோயில் மொழி ஆகாமல் இருப்பது. காலம் காலமாக உயர் தனிச் செம்மொழியான தமிழ் ஆரிய மேளாண்மையை கேள்விக் குறியாக்கிய வரலாறு காணக் கிடைக்கிறது. வைணவ சரித்திரம் இதற்கொரு நல்ல உதாரணம். இருப்பினும் தமிழனின் தாழ்வு மனப்பான்மை காலம் காலமாக ஆரிய மேளாண்மையை ஏதோ ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதில்லை என்பதும் உண்மை. இன்று வாய் கிழியப் பேசும் அரசியல், முற்போக்குவாதிகள் தம்மை அறியாமலே ஆங்கிலம் என்னும் ஆரிய மொழிக்கு அடிமையாகி இருப்பது முரண்நகை. இப்படி நாம் வாழும் இத்தருணத்தில் வைணவ சரித்திரத்தை மீள் பார்வை செய்வது, நாம் கண்ட வெற்றிகளை அறிந்து கொள்ளவும், மீள நாமடைந்த பின்னடைவுகளைப் புரிந்து கொள்ளவும் உதவும்.

தமிழ் மண்ணில் வளர்ந்த எவருக்கும் தெரியும் வைணவம் என்பது மல்லிகை மலர் போல் தமிழ் மண்ணில் வளர்ந்து தமிழ் பண்பாட்டின் மணம் பரப்பும் ஒரு ஆன்மீகநெறி என்பது. தமிழ் மொழியில் இருக்கும் தொன்மையான இலக்கியங்கள் திருமால் வழிபாடு பற்றிப் பேசுகின்றன. திருமால் வழிபாட்டின் ஆரம்பக் கூறுகள் சுமேரியப் பண்பாட்டிலும் இருப்பதாக முனைவர் லோகனாதனின் ஆய்வுகள் சுட்டுகின்றன. அன்று தொட்டு இன்றுவரை அறுபடாத ஒரு ஆன்மீக நெறியாக அது தமிழ் மண்ணில் இருந்து வருகிறது. ஆரிய வழிபாட்டுக் கூறுகள் காலப்போக்கில் கலந்து நின்றாலும் தமிழ் மண்ணிற்கேயுரிய செம்மை மரபுகளை அது என்றும் இழந்ததாக வரலாறு கிடையாது.

1. தமிழ் மண்ணிற்கே தனிச்சிறப்புடைய ஐந்திணை மரபின் அழகிய வெளிப்பாடாகிய உள்ளுரை உவமமாக திருமால் முல்லைத் தெய்வமான கண்ணனாக வழிபடப் படுகிறார்.

சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்
ஆயன் துவரைக்கோன் ஆய் நின்ற மாயன் அன்று
ஓதிய வாக்(கு) அதனைக் கல்லார் உலகத்தில்
ஏதிலராய் மெய்ஞ்ஞான மில்
(நான்முகன் திருவந்தாதி)

இறைவன் என்பவன் நமக்கு மிக அருகே உள்ளான், அதே சமயத்தில் நம் கைக்கு அகப்படாமல் எட்டவும் உள்ளான். இத்தகைய இறைச்சக்தியை, உள்ளுறை உவமமாகப் பார்க்கும் போது அவன் முல்லை நிலத்தின் பண்புகளைப் பிரதிபலிப்பவனாகப் பார்த்தனர் பண்டையத் தமிழர். அதனால் அவனை ஆயனாகக் கண்டனர். ஆரிய வம்சத்து மன்னர்களிடையே நடந்த ஒரு மகாயுத்ததை ஆரியனல்லாத ஆயனான கண்ணன் தன் மதியுகத்தால் நடத்தி நீதியை நிலைநிறுத்தி, உலக மக்களுக்கு வாழ்வு நெறிகளைக் காட்டிச் சென்றான். துவாரகை அதிபன் அன்று (பாரத யுத்தமதில்) ஓதிய சொல் (பகவத்கீதை) கல்லார் மெஞ்ஞான வாசமற்றார் என்பது திருமழிசை வாக்கு.

அன்று தொடக்கம் இன்று வரை அரங்கத்தில் உரையும் நெடுமால் நீதிவானவனாகவே இருப்பது வைணவம் கொஞ்சமேனும் அறிந்த ஒருவருக்கும் புரியும். அவன் உள்படியும் உவமமாக இருப்பதால் மனிதர்களை வைத்தே மனிதர் செய்யும் தவறுகளைத் திருத்துகிறான்.

2. வெண்ணிற ஆரியத் தெய்வங்களுக்கு நடுவே கரும் நெடுமாலாக இவன் நிற்பதும், இந்திரன், வருணன் போன்ற வேதகாலத் தெய்வ வழிபாட்டிற்கு சவால் விடுத்து தத்துவச் செழிப்புடன் இவன் முழுமுதற் கடவுளாக காணப்படுவதை திராவிடப் பண்பாடு ஆரிய மேளாண்மையை தன்னுள் அடக்கி மேலெழுந்ததாக சரித்திர ஆசிரியர்கள் கூறுவர்.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ? விடை அடர்ந்த
பத்தி யுழவன் பழம்புனத்து-மொய்த்தெழுந்த
கார்மேகம் அன்ன கருமால் திருமேனி
நீர்வானம் காட்டும் நிகழ்ந்து
(நா.தி.அ 23)

மொய்த்தெழுந்த கார்மேகம் அன்ன கரிய திருமேனி. விதை போட்டால் செடி வளரும். பத்தி என்ற ஏர் கொண்டு உழும் போது, கார்மேகம் போன்ற அவனது கருணைக்கு ஆட்பட்டு விதையொன்றும் இல்லாமலே தளிர்ப்பித்தல் நம்மிடையே நடைபெருகிறது என்று சொல்கிறார் திருமழிசை. இந்திரன் முதலான தெய்வங்களுக்கு ஏதாவது செய்தால் பலனாக அருள் கிடைக்கும், ஆயின் கரிய திருமாலோ தானாகவே உழுதல், விதைத்தல் முதலிய அத்துணை செயல்களையும் நம் சார்பில் செய்து உய்விக்கின்றான். நமக்கு வர வேண்டியது இறைவன் பால் ருசி. அவ்வளவே.

இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை....
செந்திறத்த தமிழ் ஓசை வட சொல் ஆகி...
அந்தரத்தில் தேவர்க்கும் அறியகிலா...மந்திரம்
(தி.நெ.தா-4)

இந்திராதிகளுக்கும் தலைவன் அவனே. அவனே செம்மை நிறைந்த தமிழ் வேதமாகிய திவ்யப் பிரபந்தங்கள். அவனே வட சொல்லில் அமையும் வேதமும் என்கிறார் திருமங்கை. தமிழை முதலில் வைத்ததுமல்லாமல், தமிழைப் பற்றிப் பேசும் போது செம்மை நிறைந்த மொழி என்று தனிச்சிறப்பு கொடுத்து, வட சொல் என்று ஒற்றை வரியில் நிறுத்திக் கொள்கிறார். ஆழ்வார்களில் தோயும் போது, அவர்கள் தாய் மொழிக்கு கொடுக்கும்
மரியாதை எண்ணி, எண்ணி உயர்வுறவேண்டிய ஒரு செயல். தாய் மொழிச் சொல்தான் மந்திரம். வேறல்ல.

3. தமிழ்ப் பண்பாடு அகவாழ்வை சிறப்பித்துப் பேசும் பண்பாடு. ஆரிய ஆன்மீகம் பேசும் தவ வாழ்வின் சிறப்பை தமிழ்ச் சமயங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டாலும், வீடுபேறு என்று வரும் போது மணவாழ்வை ஒரு தடையாக தமிழ் ஆன்மீகம் கருதுவதில்லை. இதற்கேற்ப இறைமையில் ஆழங்கால் பட்ட ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் தமிழ் அகமரபின் அழகிய வெளிப்பாடாக அமைந்திருக்கின்றன. ஆண்டாளின் கன்னித் தமிழும், மற்றைய ஆழ்வார்களின் நாயகிப் பாடல்களும் இதற்கு நல்ல சான்று.

காறைபூணும் கண்ணாடிகாணும் தன் கையில் வளைகுலுக்கும்
கூறை உடுக்கும் அயர்க்கும்தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித்தேறி நின்று ஆயிரம பேர்த்தேவன் திறம்பிதற்றும்
மாறில்மா மணிவண்ணன் மேலிவள் மாலுறுகின்றாளே
(பெ.தி.மொ. 3-7-8)

ஆண்டாளைப் பற்றிப் பேசும் போது அவள் தந்தை விட்டுசித்தரைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. தன் மகள் இருந்த நிலை காணும் ஒரு தந்தையின் வரிகளைப் பாருங்கள் ! மேலோட்டமாக- விரகதாபத்தில் இருக்கும் ஒரு தலைவியின் நிலை கூறும் பாங்கியின் சங்கப்பாடல் போல் இது இருந்தாலும், ஆழப் பார்க்கும் போது பல ஆன்மீக நிலைகளைச் சுட்டுவதாக இதை விளக்க முடியும். தமிழ் அகமரபைப் பேணும் அதே சமயத்தில் அம்மரபிற்கு ஒரு புதிய பரிமாணத்தையும், ஒரு ஆழத்தையும், ஒரு கனத்தையும் அருளிச் செய்கின்றனர் ஆழ்வார்கள். தமிழ் மரபை நன்கு உணர்தவர்களுக்கு மட்டுமே இதன் சிறப்பு புலப்படும். விதண்டாவாதம் பேசும் தமிழ் அபிமானிகளுக்கு இதில் உள்ள காமவரிகள் மட்டுமே கண்ணில் படும்.

அப்படிப்பட்டவர்களைப் பற்றி எண்ணாத போதெல்லாம் இனிய பொழுதுகளே என்பதை வெளிப்படையாகவே சொல்கிறார் திருமங்கை மன்னன். இதோ...

கண்ணாளன் கண்ணமங்கை நகராளன்
கழல் சூடி அவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை
எண்ணாத போதெல்லாம் இனியவாறே!


4. வைணவக் குரவர்கள் வடமொழிப் பண்டிதர்களாக இருந்த அதே சமயத்தில் தமிழ் மரபின் செழுமையை நன்கு உணர்ந்தே இருந்தனர் என்பதற்கு நல்ல சான்று நாதமுனி தொடக்கம் மணவாள மாமுனிவரைக்கும் சங்கத் தமிழ் மாலைகளான திவ்யப் பிரபந்தங்களை வேதத்திற்கும் மேலாக உயரே பிடித்து கோயில் சாற்று முறைகளாக்கியதுதான். அகத்தமிழ் சொட்டும் இப்பாசுரங்களை நாள் தோறும் மாலவன் மொழியாக திருமால் கோயில்களில் ஒலிக்க வைத்தனர். இது சாதரணமான செயல் அன்று. சம்பிரதாயங்களை மாற்றுவதென்பது மனித மனத்தை மாற்றுவதாகும். பழகிப்போன ஒரு காரியத்தை மாற்ற மனம் என்றும் இடம் கொடாது. மேலும் ஆரிய மேளாண்மை கொண்ட கோயில்களில் இப்படியானதொரு மாற்றம் நிகழ்வது பிரம்மப் பிரயர்த்தனம் என்பது வாழ்வைத் துச்சமாக மதித்து செயல் பட்ட இவர்களின் சரித்திரத்திலிருந்து தெரிகிறது.

5. தமிழ் என்று வரும் போது எந்த வைணவக் குரவரும் இம்மியளவும் விட்டுக் கொடுத்ததாக சரித்திரமில்லை. வடகலை மரபைப் பேணும் வைணவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தென்கலை சம்பிரதாயம் மட்டுமே இதைப் பேணுவதாக உலவும் தொன்மங்களுக்கு எந்த ஆதாரமுமில்லை என்று நிறுவுகிறார் முனைவர் ஸ்ரீலதா முல்லர் தனது ஆய்வில்.

6. அகமரபை ஒட்டி தங்கள் வாழ்வு முறையை அமைத்துக் கொண்ட வைணவ ஆச்சார்யர்களும் திருமணவாழ்வில் முழுதும் தோய்ந்த பின்னரே துற வாழ்வை சிபாரிசு செய்கின்றனர். ஆரிய சம்பிரதாயத்தில் வரும் அத்துவைத ஆசாரியர்கள் மாறாக முழு பிரம்மச்சரியம் என்பது ஆன்மீக விடைபெறுதலுக்கு அவசியம் என்று கருதுகிறார்கள். இதற்கிணங்க காஞ்சி சங்கர மடத்தில் சுத்த பிரம்மச்சாரிகள் இருக்க, வைணவபீடத்தின் தலைமையில் இருப்போர் கட்டாயம் திருமணம் செய்தவர்களாக இருக்கிறார்கள்.

7. அத்துவைத பீடமான காஞ்சி - பெண்கள், அதிலும் விதவைகள் மற்றும் தாழ்ந்த குலத்தோர் விஷயங்களில் இன்றளவும் பிற்போக்காக இருப்பதும், வைணவ மடங்கள் இந்த விஷயங்களில் அன்றிலிருந்து புரட்சிகரமாக இருப்பதும் காணக் கிடைக்கிறது. ஸ்ரீவைஷ்ணவ பிரதம ஆச்சாரியர் ஸ்ரீராமானுஜர் சாதி வேறுபாடுகளைப் புறம் தள்ளியவர் என்பதோடு, பெண்கள் ஆன்மீக விஷயங்களில் ஆண்களுக்கு நிகர் என்று வழிமொழிகிறார். தனது ஆன்மீக குருவாக அவர் ஆண்டாளைக் கொண்டு "ஆண்டாள் ஜீயர்" என்ற அடைமொழியைத் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

8. ஆரிய வேதத்தை முன் மொழியும் பிராமண சனாதானிகள், பிராமணர் தவிர்த்து மற்றவர் வேதத்தை ஓதுவது கூடாத செயல் என்று நீதிகள் செய்யும் போது, நாதமுனிகள் தொடக்கம், வேதாந்த தேசிகர் வரைக்குமான வைணவ ஆசாரியர்கள் நம்மாழ்வார் செய்வித்த திருவாய் மொழியை திராவிட வேதமென முன்மொழிந்து அது அனைவர்க்கும் பொது என்ற புது மொழியை செய்வித்தனர்.

9. வைணவ நெறிகளைப் பரப்ப பின்வரும் புராணங்கள், தொன்மங்கள் என்பதிலும் கூட புரட்சிகர கருத்துக்கள் இருப்பதை அவதானிக்க முடியும். ஆழ்வார்கள் நம்மைப் போல் வாழ்ந்து வீடுபேறு கொண்டாலும் அவர்களின் ஆன்மீக உயர்வு கருதி எழும் தொன்மங்களில் இருவர் மிகுந்த சிறப்புப் பெருகின்றனர். இவர்கள் இருவர் மட்டுமே திருமாலுடன் கலக்கும் பாக்கியம் பெற்றதாக தொன்மங்கள் கூறுகின்றன. அவர்கள் ஆண்டாள் என்ற பெண்ணும், திருப்பாணர் என்ற தாழ்ந்த குல இளவலும். இதற்கும் மேலாக துருக்கிய இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் ஆண்டாள் போல் திருமாலுடன் கலந்த ஒரு தொன்மத்தை தாங்கி வருகிறது வைணவம். இப்பெண்ணை துருக்க நாச்சியார் என்றே இன்றளவும் வழிபடும் முறையையும் வைணவம் வகுத்துள்ளது!

இவை தற்செயலான நிகழ்வு என்று வைணவ சரித்திரம் அறிந்த எவரும் கூறத்துணியார். பெண்ணியம் பேசும் பின் நவீனத்துவ காலத்திற்கு முன்பும், தலித்தியம் பேசும் சம கால நோக்கிற்கு முன்பும் இது தமிழ் மண்ணில் சாத்தியப் பட்டிருக்கிறது.

10. இந்து மதம் என்பது காலப் போக்கில் மற்ற மாநிலங்களிலிருந்து வந்த வழிபாட்டு முறைகளையும், தெய்வங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளது. உதாரணமாக, சங்க இலக்கியங்களில் பேசப்படாத விக்னேசுவர் (விக்னம்=இடர் - இடர் களையும் கடவுள்), ஐயப்பன், மற்றும் நவக் கிரகங்கள் இந்து மதவழி பாட்டில் கலந்து விட்டன. ஐக்கியப் படுத்துதல் என்பது தேவையான ஒரு காரியம் எனினும், இப்படியானதொரு இக்கட்டான காலகட்டத்திலும் வைணவம் தன் நெறியை மாற்றிக் கொள்ளவில்லை. திருமால் முழுமுதற் கடவுள் என்பதிலிருந்து வழுவவில்லை. நவக்கிரக பூஜை என்பது திருமால் கோயில்களில் இல்லாத ஒரு வழக்கம். இதற்கான காரணத்தை ஆராயப்புகுந்தால் முல்லைத் திணையின் முக்கிய பண்பான கற்பு இக்கோயில் வழிபாட்டில் இன்றளவும் காக்கப்படுவதே காரணம் என்பது புரியும்.

இத்துணை சிறப்புகளும் கொண்ட தமிழ்ச் சமயம் ஒன்றிருந்தும், காலப் போக்கில் மக்களுக்கு பல்வேறு ரசனைகளுக்கு ஈடு கொடுக்கும் சமயப் பழக்கங்கள் வரலாயின. தன் பண்பாடு மறந்து, தனது போராட்டங்கள் மறந்து, லாகிரி போன்றதொரு அடிமைத்தனத்திற்கு தமிழன் உட்பட்டுவிட்டான். அதன் பலன்தான் இன்று கோயில்களில் தமிழைக் கொண்டுவரப் போராட்டங்கள், பள்ளிகளில் தமிழைக் கொண்டுவரப் போராட்டங்கள் என்பன. இது அடிமைத்தனத்தின் அறிகுறி. அகமரபு தன் அழகியல் இழந்து, கோயில் அடிமனத்திலிருந்து விலகி விட்டது. பத்தி என்னும் ஏர் உழவன் போய், கோயில் வியாபாரத்தலமாகி, கடவுளே விலை பேசப்படுகிறார். சமயக் குரவர்கள் போய், பொய் வேடதாரிகள் நிரம்பிவிட்டனர். எரிகின்ற வீட்டில் கிடைத்தது ஆதாயம் என்பது போல் கடவுளை நிந்திப்பவருக்கும் ஒரு கட்சி, ஒரு கழகம் என்று வியாபாரம் நடக்கிறது. புரட்சிகள் நடத்திய வைணவ மடங்கள் பூனை மடங்களாகி உறங்கிக் கொண்டிருக்கின்றன. உட்பூசல்,
ஊழல் என்று திருத்தலங்கள் போர்களங்களாகி வருகின்றன. எல்லோரையும் உள் அமைக்கும் தமிழ்ச் சமயங்களுக்குப் பதில், மனிதர்களை இனம் பிரிக்கும் ஆரியச் சமய வழக்கங்கள் பெருகி வருகின்றன. சாதிகள் தளைப்பது போல் சாமிகளும் தளைக்கின்றன! மாறன் திருவுள்ளமறிந்து தன்னுயிர் ஈந்தும் தமிழ்ப் பண்பாடு காத்த புரவலர்கள் போய், அவர் செய்த புரட்சிகள் பொய்த்துப்போயின.

நம்மாழ்வார் கண்ட காட்சியை மீண்டும் தமிழகம் காணுமா ?

கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம்
தொண்டீர் ! எல்லீரும் வாரீர் ! தொழுது தொழுது நின்றார்த்தும்
வண்டார் தண்ணந் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்தான் பாடி நின்றாடிப் பரந்து திரிகின்றனவே
(தி.வா.மொ. 5.2.2)

9 பின்னூட்டங்கள்:

  கோவி.கண்ணன்

Tuesday, July 31, 2007

அழகான ஆய்வு, பல செய்திகளை அழகாக தொகுத்து தமிழையும் தற்காத்து இருக்கிறீர்கள் ஐயா !

பாராட்டுக்கள் !

  நா.கண்ணன்

Tuesday, July 31, 2007

மிக்க நன்றி. கோவி.கண்ணன்!

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Wednesday, August 01, 2007

பாசுர மடல்களில் மகுடமான கட்டுரை இது கண்ணன் சார்!
என்னை மிகவும் கவர்ந்த கட்டுரை!
பல அருமையான ஆனால் உண்மையான விஷயங்களைத் தொட்டுச் சென்றுள்ளீர்கள்.

நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பத்தியும்(pointஉம்), உரத்த சிந்தனை. ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாப் பதிவு போட்டால் தான் இன்னும் விளங்கும். மனத்தில் இன்னும் ஆழங்காற் படும்!

இதையே விரித்து, அடியேன் மாதவிப் பந்தலில் ஒவ்வொரு பதிவாக இட முனைகிறேன். இன்னும் முனைவேன்!

ஆண்டாள் கனவுகள், அகமரபு
இல்லறம் ஒட்டிய இறையியல்
துலுக்கா நாச்சியார் என்று பேதம் பாராட்டாப் பேராண்மை
நாதமுனிகள், இராமானுசரின் தமிழ்ப் பணிகள்.
தாய்மொழி சார்ந்த பக்தி
பிறமொழி வெறுக்காது, தாய்மொழியை முன்னிறுத்தும் பக்தி.
அந்தணனுக்கு வீடு பேறு அளித்த நம்பாடுவான்-சாதிப் பிரிவுகள் கடந்த வைணவம்.....
என்று இது வரை அடியேனால் இயன்ற அளவு, கதைகளாகவே, படிக்க எளிதாகப் பதித்துள்ளதை எண்ணிப் பார்க்கிறேன்...ஆனால் இன்னும் நிறைய இருக்கு! உங்கள் பட்டியலில் நிற்கும் ஒவ்வொன்றையும் விரித்துணர வேண்டும்!

//நம்மாழ்வார் கண்ட காட்சியை மீண்டும் தமிழகம் காணுமா ?//

காணும் காணும் காண வேண்டும்!
தொண்டீர் ! "எல்லீரும்" வாரீர்! என்று எல்லாரும் காண்பர்! எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!

பரனூர் அண்ணா போன்றவர்கள் எல்லாம் நல்வழி காட்டிகளாக இருக்க நிச்சயம் காண்போம்!
முன்பு ஒரு முறை நாம் பதிவில் விவாதித்த "இளைய தலைமுறைக்கு வைணவ வழிகாட்டி" நினைவுக்கு வருகிறது!

வைணவத்துக்கும் மானுடத்துக்கும் ஊக்கம் சேர்க்க மீண்டும் தேவை ஒரு இராமானுசர் அல்லது இராமனுசரைப் போன்ற ஒரு அப்துல் கலாம்!

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Wednesday, August 01, 2007

உங்கள் பட்டியலை முழுதாய்ப் படித்தவுடன்...
தமிழ்க் கடவுள் என்று மாயவனைச் சொல்ல அத்தனை சிறப்புகளும் உள்ளன என்று மீண்டும் உறுதியாகி விட்டது! :-)

  நா.கண்ணன்

Wednesday, August 01, 2007

அன்பின் கண்ணபிரான்: மிக்க நன்றி. இக்கட்டுரை ஸ்டுட்கார்ட்டில் (ஜெர்மனி) நடந்த இலக்கிய சந்திப்பிலும் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. மாதவிப் பந்தலில் இன்னும் ஆதாரங்கள் தந்து விரிவுபடுத்துங்கள். வைணவத்தின் இன்னொரு வழக்கம் "பேசற்றால் பேசலல்லால்" என்பதும்!

வேதத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டதாலும், மணிப்பிரவாள சம்பிரதாயத்தாலும் வைணவம் ஆரிய சமயம் என்று பல தமிழர்களால் நம்பப்படுகிறது. திராவிட வேர்களைத் தேடக் கண்ணன் கதையைவிட வேரென்ன வேண்டும்? பாண்டவ யுத்தத்தில் பாண்டிய மன்னன் ஒருவர் போர்ச்சோறு போட்டதாக ஒரு கதை உண்டு. பாண்டவர்களே ஆரியமல்ல என்றும் கொள்ளலாம். "பாண்டு" என்ற சொல்லும், "பண்டு" என்ற தமிழ்ச் சொல்லும் தொன்மையைக் குறிப்பன. பாண்டவர்கள் பாண்டிய அரசர்களா?

  குமரன் (Kumaran)

Thursday, August 02, 2007

கண்ணன் ஐயா. மிக நல்ல கட்டுரை. மறுபதிவு செய்ததற்கு நன்றி. நீங்கள் சொன்னது போல் வைணவம் ஆரிய சமயம் என்றும் சைவமே திராவிட சமயம் என்றும் பல தமிழர்களால் நம்பப்படுகிறது. நீங்கள் எடுத்துக்காட்டிய ஒவ்வொன்றும் மிக அருமை. படிக்கும் போது ஆகா இவற்றை விரித்து எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே வந்தேன். மாதவி பந்தலின் குயிலார் அதனைச் செய்யப் போவதாகச் சொல்லிவிட்டார். அருமை. அவரை விடப் பொருத்தமான வேறு ஒருவர் இந்தக் கால இளைய சமுதாயப் பதிவர்களில் இல்லை.

இரவிசங்கர் சொன்னது போல் கண்ணனும் தமிழ்க்கடவுள் என்று சொல்ல இலக்கியங்களிலும் வரலாற்றிலும் நிறைய செய்திகள் இருக்கின்றன. விரிசடைக்கடவுளையும் அவர்தம் குமரனையும் தமிழ்க் கடவுளராக முன் நிறுத்திய ஆய்வாளர்களைப் போல் மாயவன் கண்ணனும் தமிழ்க்கடவுள் என்று நிலை நிறுத்தும் ஆய்வுகளும் வர வேண்டும். அதற்கு இந்தக் கட்டுரையும் இரவிசங்கர் இனி எழுதப்போவதுவும் பயன்படும். அடியேனும் அணில் போல் இலக்கியங்களில் திருமால் என்று எழுத எண்ணியுள்ளேன். இப்போது சிலப்பதிகாரம் படித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் பரிபாடலும் படிப்பேன். அவற்றைப் பற்றி விரிவாக எழுத எண்ணம். இறையருளால் அவனுக்குத் தொண்டாக.

  நா.கண்ணன்

Thursday, August 02, 2007

குமரன்: நன்றி. இம்மாதிரி விஷயங்களில் அக்கறையுள்ள இளைஞர்களைக் காணுதல் அரிதாகிவரும் நேரத்தில் உங்களைப் போன்ற சிலரைக் காண்பதே நம்பிக்கை.

சிலப்பதிகாரம் "ஆய்ச்சியர் குரவை" பேசாத கண்ணனா! 'நாராயணா என்னா நாவென்ன நாவே'.

பரிபாடல் இனிக்கும். அங்கிருந்துதான் தொடங்குகிறது நம் நாதமுனிகள் சம்பிரதாயம்.

  Anonymous

Sunday, August 05, 2007

SIR, vanakkam,
Really very good infirmatons,i enjoyed it.
ARANGAN ARULVANAGA.
anbudan
k.srinivasan.

  நா.கண்ணன்

Monday, August 06, 2007

Thank you Mr.K.Srinivasan!