e-mozi

மடல் 080: புலி, புலி எனும் பூசல் தோன்ற!

First published on: Wed, 05 Jul 2000 08:54:50 +0200

வாழ்வும், இறைமையும் இரண்டறக் கலந்திருக்கின்றன. வாழ்வு இறைமை பற்றிய கேள்வியை நம்முள் எழுப்புகிறது. தேடும் சுகம் இறைமையை கிட்ட வைத்தும், தூர வைத்தும் நம்முடன் விளையாடுகிறது. இந்தத் தேடலை, இக்கேள்வியை உள்ளொழுப்பும் இறை உணர்வு நம்மில் ஒன்றுடன் ஒன்றாய் இருப்பதால் இறைமை என்பது புறப்பொருள் அல்ல. என்னுள், என் உணர்வுள், என் இன்பத்துள், என் சோகத்துள் கலந்துதான் அது செயல்படுகிறது அல்லது வெளிப்படுகிறது. எனவே உணர்வுடன் கலந்தும், உறவுடன் பிணைந்தும் வாழும் அது சட்டென அடையாளப் படுத்த முடியாத அளவு உள்ளின் ஆழத்துள் ஆழமாய், நம் உயிருடன் உயிராய், நம் நிழலுடன், நிழலாய் கலந்து நிற்கும் போது அதைத் தேடும் மனோநிலை எப்படி இருக்கவேண்டும்? காதலன்-காதலியிடம் பெறும்
அந்நியோன்னியமான உணர்வை விட இவ்வுணர்வு அந்நியப்பட்டதா? ஒரு தாய் தன் குழவி தழுவும் முலையுணர்வுப் பரவச நிலையில் இறைவனை நினைக்க முடியுமா? நினைக்கலாமா? துறவிலும், தனிமையிலும்தான் இறைமை அகப்படுமா? இல்லை உறவிலும், அதன் இனிமையிலும் அது தென்படுமா?

இத்தகைய கேள்விகளுக்கு விடைபகர்வது போல் அமைகின்றன நம் பக்தி இலக்கியங்கள். மாதர் பிறையானின் பாத தரிசனத்தின் போது, கண்டறியாதன காணும் போது காதல் மடப்பிடி ஏன் அப்பர் சுவாமிகளுக்கு ஞாபகம் வரவேண்டும்? இறைவனுடன் இரண்டறக் கலக்க வேண்டும் எனச் சொல்ல வரும் ஆண்டாள், "குற்றமற்ற முலை தன்னை குமரன் பனைத் தோளுடன், அற்ற குற்றம் அவைதீர அனைய அமுக்கிக் கட்டீரே!" என்று
ஊரார் பலருக்கு ஏன் ஏவல் இட வேண்டும்? குழந்தையின் ஒரு கை மார்பில் துளைய, கால்கள் அல்குலை இடற, ஒரு தாய் எய்தும் பரவச நிலையை இறைவனுடன் ஆன்மா கலந்து நிற்கும் நிலைக்கு உவமானமாகச் சொல்ல எது பெரியவர் விட்டுச்சித்தரை ஏவுகிறது? இறைமையா? தமிழா? அதன் அகமரபா? அதன் தெளிந்த, திறந்த பார்வையா?

எவ்வளவோ கட்டு திட்டத்துடன் வாழ்வை அமைத்தாலும் பல சமயங்களில் வாழ்வு நம்மை புகலற்ற நிலைக்கு தள்ளிவிடுவதுண்டு. புகலற்றவர்க்கும் புகல் கொடுக்கும் மனித நேயத்தில், அன்பில், காருண்யத்தில் தோய்ந்து நிற்கிறது இறைமை. புகலற்ற இந்நிலையில் தானிருந்து கொண்டு ஞான தேசிகனான நம்மாழ்வார் இப்படிப் புலம்புகிறார்:

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ!
புலம்புறு மணிதென்றல் ஆம்பல் ஆலோ!
பகல்அடு மாலைவண் சாந்தம் ஆலோ!
பஞ்சமம் முல்லைதண் வாடை ஆலோ!
அகல்இடம் படைத்துஇடந்து உண்டு உமிழ்ந்து
அளந்துஎங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன்
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான்
இனிஇருந்து என்உயிர் காக்கு மாறுஎன்?


(ஒன்பதாம் பத்து, ஒன்பதாம் திருவாய்மொழி-பாடல் 2)

சில தினங்களுக்கு முன் ஒரு நிகழ்வில் உரையாற்ற சுவிட்சர்லாந்து சென்றிருந்தேன். வெள்ளிப் பனிமலை முகடு ஏகாந்தமாய் மோனித்திருந்தது. அதன் பள்ளத் தாக்குகளோ காறாம் பசுமாடுகளின் கழுத்து மணியோசையால் நிரம்பி வழிந்தது. இடையர்கள் இருக்குமிடத்தில் மணியோசையும், குழலோசையும் இயல்பானவைதானே. இச்சூழல் இந்தக் காலத்தில் சுவிஸ் சாக்கலெட்டை ஞாபகப் படுத்துமாறு விளம்பர உலகம் இயங்குகிறது. ஆனால் அன்றைய இந்தியாவில் அது இறைமையை நினைவு படுத்தியிருக்கிறது.
மணியோசை புலம்புகிறது என்கிறாள், ஆம்பல் குழலின் ஓசையும், தென்றலும் வருத்துகின்றன என்கிறாள்.

ஆயர்தம் கொழுந்து கண்ணன். அவன் வேய்ங்குழல் கேட்டு உலகே சொக்கிப் போய் உள்ளது. காற்றினிலே வரும் கீதம் - நீ, நான் என்ற நினைவுகளை அழிக்கும் கீதம்...இப்படியெல்லாம் கண்ணன் நினைவாக இருக்கும் போது கண்ணன் வரக் காணாவிடில்? வாக்கு தவறி விட்டாய்
கண்ணம்மா மார்பு துடிக்குதடி! உன் குழல் ஓசையை நினைவு படுத்தும், உன்னுடன் சதா உலாவரும் பசுக்களின் மணியோசை. அப்படி இருக்கையில் நீ இல்லாமல் அவை எப்படி சுகிக்கும்?

கன்று குணிலாக் கனிஉதிர்த்த மாயவன்
இன்றுநம் னுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையம் தீங்குழல் கேளாமோ தோழி!
கொல்லையம் சாரல் குருந்துஓசித்த மாயவன்
எல்லிநம் னுள் வருமேல் அவன்வாயில்
முல்லையம் தீங்குழல் கேளாமோ தோழி
!


என்றுதானே சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை அமைகிறது!

தன் தலைவன் பிரிவால்.பகற் காலம் நீங்க வந்து சேர்ந்த மாலை மயக்குகிறது, சந்தன வாடை பிரிவாற்றாமையைக் கூட்டுகிறது. பாராங்குச நாயகி தன் பாட்டி, முப்பாட்டி வழியில் மயங்குகிறாள்? ஏனப்படி? இதோ, அவள் முன் வாழ்ந்த தலைவியர் பிரிவை இப்படிப் பேசும் கலித்தொகை:

வாலிழை மகளிர் உயிர்பொதி அவிழ்க்கும்,
காலை யாவது அறியார்,
மாலை என்மனார் மயங்கியரோ

இம்மாலைப் பொழுது எங்கள் அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்தும், அவர் கன்னியராகி நிலவினிலாடிக் களித்தும், தங்கள் பொன்னுடல் இன்புற நீர்விளையாடி இல்போந்தும், பின்........

ஒன்றே எயிற்றது ஒருபெரும்பேய் உலகம் விழுங்க அங்காந்து
நின்றாற் போல நிழலுமிழ்ந்து நெடுவெண் திங்கள் எயிறிலங்க
இன்றே குருதி வானவாய் அங்காந்து என்னை விழுங்குவான்
அன்றே வந்தது இம்மாலை? அளியேன் ஆவி யாதாங்கொல்?


என மயங்கியும் வாழ்ந்ததனால் அன்றோ இன்று எம் பாராங்குச நாயகியும் தன் தலைவன் பிரிவு தாங்காமல் துயருகிறாள்!

இவள் தலைவன் எப்பேர்ப்பட்டவன்?

பரந்த உலகம் முழுவதையும் படைத்தும், ஒரு காலத்தில் இடந்தும், ஒரு காலத்தில் உமிழ்ந்தும், ஒரு காலத்தில் அளந்தும் எல்லா உலகங்களையும் பாதுகாப்பவன்.

கலகத்தரக்கர் பலர் கருத்தினுள்ளே புகுந்து விட்டால், பல கற்றும் பல கேட்டும் பயனொன்றுமில்லை அதனால், அக்கலகத்தரக்ருக்கு கூற்றுவனாக வரத்தக்க ஞான வடிவினனானவன் என் தலைவன்.

இத்துணைப் பெருமைகள் கொண்ட எம் கண்ணன் வரக்காணில், இனி உயிர் இருந்து என்ன? போய் என்ன?

பாராங்குச நாயகி பட்ட துயரைக் காட்டிலும் துயர் படுகின்றனர் அதன் உரையாசிரியர்கள்! இவர்கள் வியாக்கியனச் செழுமையை, தமிழ்ப் புலமையை கொண்டு வந்து இப்புவியில் நாட்ட வந்து நிற்கின்றன ஆழ்வார் பாசுரங்கள் என்று சொல்லுதலும் தகும். பாருங்கள், முதல் பாசுரத்தையும், இரண்டாம் பாசுரத்தையும் இணைத்து வரும் வியாக்கியான அழகை. "ஈரும், தவரும், மயங்கும்" என்று முதல் பாசுரத்தில் அருளிச் செய்தது போல் அருளிச் செய்யாமல், வாளா, "மணி, தென்றல், ஆம்பல்" என்று சொல்வானேன்? ஏனெனில், "புலி, புலி" என்பது போன்று இவற்றின் பெயரைச் சொல்லவே அச்சம் உண்டாகிறது, எனச் சொல்லுகிறது ஈடு உரை. இவர் எங்கிருந்து பிடித்தார் "புலி, புலி" எனும் உவமானத்தை. அதைக் காண அகநானூறு படிக்கவேண்டும்!

ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழிப்
புலிபுலி என்னும் பூசல் தோன்ற............

குயமண்டு கம் செஞ்சாந்து நீவி
வரிபுனை வில்லன் ஒருகணை
.........

இத்தகைய ஈரப் பாசுரங்கள் ஏன் நமக்குத் தேவை? அதற்கும் ஈடு ஒரு உவமை தருகிறது, "உயிர்க்கழுவிலே இருக்கிறவனுக்குத் தண்ணீர் வேட்கையும் பிறந்து, தண்ணீரும் குடித்து, தண்ணீர் வேட்கையும் தணிந்தால் பிறக்கும் இன்பம் போல" இப்பாசுரங்கள் அமைகின்றன என்று. இப்பாசுரங்களில் தோயும் போதுதான் தெரிகிறது கழுவில் ஏற்றப் பட்ட ஒரு வாழ்வை நாம் வாழ்ந்து கொண்டிருப்பது!

கிருஷ்ணபிரேமாமிர்தம்

0 பின்னூட்டங்கள்: