e-mozi

மடல் 081: அறிவு அழிந்து மறந்து பிழைக்க ஒண்ணாதபடி!

Published in : agathiyar-egroups.yahoo.com & meykandar-egroups.yahoo.com
Date: Thu, 06 Jul 2000 16:15:05 +0200

இனிஇருந்து என்உயிர் காக்கு மாறுஎன்?
இணைமுலை நமுகதுண் இடைநு டங்கத்
துனிஇருங் கலவிசெய்து கம் தோய்ந்து
துறந்துஎமை இட்டுஅகல் கண்ணன் கள்வன்;
தனிஇளஞ் சிங்கம்எம் மாயன் வாரான்;
தாமரைக் கண்ணும்செவ் வாயும் நீலப்
பனிஇருங் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தேநின்று ஈரும் லோ!


(திருவாய்மொழி 9.9.3)


மல்லிகை மணம் வெறுத்தது, மென் குறிஞ்சி இசை வண்மையானது,செக்கதிர் மாலையும் செம்மயிர்க் காலனானது, ஆக்களின் மணியோசை புலம்பல் ஆனது, பஞ்சமம், முல்லைப் பண்கள் முகாரி இராகமாயின,சந்தனம் மணக்கவில்லை. என்ன ஆய்விட்டது எம் தலைவிக்கு?
பாலுங் கசந்ததடீ-சகியே!
படுக்கை நொந்ததடீ!
கோலக்கிளி மொழியும்-செவியில்
குத்தலெடுத்தடீ

தூண்டிற் புழுவினைப் போல்-வெளியே
சுடர்விளக்கினைப் போல்
நீண்டபொழுதாக-எனது
நெஞ்சந்துடிக்குதடீ!


புறப்பொருள்கள் கசக்கத் தொடங்கி, என்னது என்று அபிமானித்த உடம்பு பகை ஆயிற்று; என்னது என்று அபிமானித்த அழகு பகை ஆயிற்று; இனி இருந்து என்னுடைய உயிரைப் பாதுகாப்பது என்று ஒரு பொருள் உண்டோ? சகியே?

நினைவுகள் என்ற வஞ்சகன் மெல்ல, மெல்ல தன் விஷவலையைத் தூவிதூண்டிற் புழுவினைப் போல் உள்ளம் துடிக்க விடுகின்றான்.

எண்ணும் பொழுதிலெல்லாம்-அவன் கை
இட்டவிடத்தினிலே
தண்ணென் றிருந்ததடீ!


வன்னிலத்திலே மழை பெய்து நிலம் பதமாகி குழைதல் போல தலைவி தன் இணை முலைகள் அவன் சேர்க்கையின் போது குழைந்து பதமாகி நிற்கிறது. இணைமுலை என்று சொல்வதால் கர்வமோ என்றால் இல்லை என்று உடன் வந்து நம்மாழ்வாரை அணைத்துக் கொள்கிறார், உரை ஆசிரியர். கண்ணனின் சேர்க்கையால் வந்த அழகினால் அது "இணைமுலை" ஆகிறது என்று. ஒரு தேர்ந்த படைப்பாளி தன் படைப்பின் மூலம் வாசகன் இதயத்தை கொள்ளை கொள்வதுடன், அவனுடன் ஒரு மாபெரும் நட்பு உடன்படிக்கை செய்து கொள்கிறான் என்பது வைணவ இலக்கிய கர்த்தா-உரை ஆசிரியர் உறவு நமக்குக் காட்டுகிறது.

விளைந்து செழித்திருக்கும் நிலத்தில் வரப்பு கண்ணில் படாதது போல் தலைவியின் இடை மெலிந்து விடுகிறது. அவள் கண்ணனின் கலவியை நொந்து கொள்கிறாள். எப்படி? "துனி இருங்கலவி" என்று. கலவிதானே காதலின் உச்சம்? அதனை ஏன் வெறுக்கிறாள்? ஏனெனில் "கலவி பிரிவினை முடிவாகக் கொள்ளுதலால், அது துக்கத்தை விளைவிக்கும் கலவி" என்று

கூடிப் பிரியாமலே-ஓரி
ராவெல்லாம்கொஞ்சிக் குலவியங்கே
ஆடிவிளையாடியே, -உன்றன்
மேனியையிரங்கோடி முறை
நாடித் தழுவிமனக்-குறை தீர்ந்து
நான்நல்ல களி யெய்தியே,
பாடிப் பரவசமாய்-நிற்கவே
தவம்பண்ணிய தில்லையடி!


கூடிப் பிரியாமல் இருக்க முடியுமோ? என்ன தவம் செய்தாலும்? அதனால் "துனி இருங் கலவி" என்கிறாள் பாராங்குச நாயகி! வேனிற் காலத்திலே மடுவிலே மூழ்கிக் கிடப்பாரைப் போல் அகம் விட்டு நீங்காத இறைஉணர்வு வேண்டுமென்று மனம் ஏங்குகிறது. ஆனால்?

ஆசை முகமறந்து போச்சே-இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம்-எனில்
நினைவு முகமறக்க லாமோ?


கண்ணன் முகமறந்து போனால்-இந்தக்
கண்க ளிருந்தும் பயனுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய்-இனி
வாழும் வழியென்னடி-தோழி?


ஐயோ! என் பாட்டன் பாரதிக்கா இந்த கதி? நம்மாழ்வாரிடம் வாருமையா,அவன் ஒரு காட்சி தருகிறான்!

தனி இளஞ்சிங்கம்எம் மாயன் வாரான்
தாமரைக் கண்ணும்செவ் வாயும் நீலப்
பனிஇருங் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தேநின்று இரும் ஆலோ!


அவன் கண்களுக்குத் தோன்றாது ஒழியட்டும், ஆனால் நெஞ்சுக்கும் தோன்றாது ஒழியக் கூடாதா? போனதுதான் போகிறான், இவற்றை ஏன் என்னுள்ளே வைத்துவிட்டுப் போக வேண்டும்? என்கிறது ஈடு! தாமரைக் கண், செவ்வாய், நீலக்குழல்? பனி இருங்குழல் என்று சொல்வானேன்? குழல் பிரிந்து போய்க் கிடக்கிறது. விளக்கம் சொல்கிறது ஈடு - "கலவியாலே குலைந்து பிரிவினை நினைத்துப் பேணமாட்டாத போதைக் கறுத்தக் குளிர்ந்த பெரிய திருக்குழலும்"- அப்பாடீ! என்ன தமிழ், என்ன அழகு, என்ன பாந்தம்.

இங்குதான் வைணவ சம்பிரதாயம் அத்துவைத மத ஆச்சாரங்களிலிருந்து பிரிந்து நிற்கிறது. சங்கர மடத்துப் பெரியவரால் இப்படிப் பேச முடியாது. அவர் இருக்கும் பீடமோ, காமகோடி! ஆனால் கட்டைப் பிரம்மச்சாரிகளாக சட்டம் கட்டிப் போட்டு விட்டது. மதஸ்தாபகர் ஆதி சங்கரருக்குக் கூட கலவி பற்றிபேச "கூடு விட்டுக் கூடு பாயும்" தொன்மத்தை உலவ விட்டுள்ளது. ஏன்? அகமரபு என்பது ஆரிய வழியில் அபச்சாரமான ஒன்று. ரசம் சொட்டச் சொட்டஒரு ஞானியால் எப்படிப் பேச முடியும் என்று அவர்கள் கேட்பார்கள்! அதனால்தான் தி.ஜானகிராமன் இன்றளவும் பிரச்சனைக்குரிய எழுத்தாளனாக இருக்கிறான். நமது சமூகம்தான் எவ்வளவு மாறி விட்டது? நல்ல வேளையாக நம்மாழ்வாரின் அகமரபு ஏற்று, போற்றப் பட்டுள்ளது. இல்லையெனில் கண்ணனைத் தவிர ஒன்றுமறியாத கட்டைப் பிரம்மச்சாரி சடகோபரும் (சடகோபன் என்பதற்கு கட்டை போல், சடம் போல் இருந்தவன் என்றுபொருள்!) கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருக்க வேண்டும் ;-)

நம்மாழ்வார் "நான்கு தோளும்" என்று அருளிச் செய்கிறார். கண்ணனுக்கு நான்கு தோள்கள் உண்டோ? என்றொரு கேள்வியை அது விட்டு நிற்கிறது. கம்சன் முதலானோர்க்கு அதை மறைத்து தேவகி போன்றோருக்கு அவன் காட்டியதாக விஷ்ணு புராண சுலோகம் ஒன்றைச் சொல்கிறது ஈடு. இப்படி வரிக்கு, வரி நம்மாழ்வாரின் இதயம் அறிந்து இதமாகப் பொருள் சொல்கின்றன வைணவ உரைகள். அதனால்தான் அழகிய மணவாளர் தனது படைப்பை "ஆசார்ய ஹிருதயம்" என்றார்.

சங்கு சக்கரத்தையும், கதையையும் தரித்த திருக்கைகளை உடைய அவன்-இவ்வழகுகளை அனுபவித்து இழந்தால் மறந்திருக்கப் பெறாதபடியான பாவத்தை செய்தேன் என்று துடிக்கிறது ஈடு, மாற்றாக "அறிவு அழிந்துமறந்து பிழைத்திருப்பேனோ!" என்று முடிக்கிறது.
ஈரப் பாசுரங்கள்! தலை பேசாமல் இதயம் பேசும் மரபு! அது செந்தமிழ் அகமரபு!

கிருஷ்ணபிரேமாமிர்தம்

5 பின்னூட்டங்கள்:

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Saturday, July 28, 2007

//இங்குதான் வைணவ சம்பிரதாயம் அத்துவைத மத ஆச்சாரங்களிலிருந்து பிரிந்து நிற்கிறது. சங்கர மடத்துப் பெரியவரால் இப்படிப் பேச முடியாது.//

அப்படியே பேசினால்...அதோ கதி தான் :-) பின்னிப் பெடல் எடுத்து விடுவார்கள்.

நீங்கள் சொல்வது போல வைணவத்தில் அக மரபு பெரிதும் போற்றப்பட்டுள்ளது கண்ணன் சார். தமிழ் சார்ந்த மரபும் கூட!
பாருங்கள் வைணவ ஜீயர்கள் கூட பிரம்மச்சாரிகளில் தேர்வு செய்யப்படுவதில்லை! இல்லறம் வாழ்வாங்கு வாழ்ந்து, பின்னரே சன்னியாச ஆசிரமம் மேற்கொள்கிறார்கள்!

  நா.கண்ணன்

Saturday, July 28, 2007

கண்ணபிரான்: நன்றி. இங்கு காழ்ப்பினால் சொல்லவில்லையே! எல்லாமே நம் சொத்துதான். ஒன்றிலிருந்து ஒன்று எப்படி, எங்கு வேறுபடுகிறது என்று சொல்கிறேன். நாம் பிறக்கும் போதே ருசி பேதத்துடன் பிறக்கிறோம். வைணவம் எல்லோருக்கும் பிடிக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை!

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Saturday, July 28, 2007

கண்ணன் சார், உங்களிடம் ஒரு கேள்வி.
கண்ணனின் தலைவன்-தலைவி பாவத்தில் அதிகம் கரைந்தது திருமங்கை மன்னனா இல்லை நம் சடகோபனா? - மாதவிப் பந்தலில் பட்டிமன்றம் வைக்கலாம் என்றாலும் சொல்லுங்கள்! வைத்து விடலாம்! :-)

//கண்ணனுக்கு நான்கு தோள்கள் உண்டோ? என்றொரு கேள்வியை அது விட்டு நிற்கிறது. கம்சன் முதலானோர்க்கு அதை மறைத்து தேவகி போன்றோருக்கு அவன் காட்டியதாக//

பனி இருங் குழல்களும்
நான்கு தோளும்
பாவியேன் மனத்தே நின்று
இரும் ஆலோ

அடியேனுக்கு இன்னொன்றும் தோன்றுகிறது. கண்ணனை மட்டும் தலைவி எண்ணிக் கொண்டு இருக்க வில்லை! அவனோடு தானும் முயங்கியதைச் சேர்த்து தான் எண்ணிக் கொண்டு இருக்கிறாள்! அவனைக் கட்டி அணைத்த அணைப்பும் நினைவும் நீங்கிய பாடில்லை!

அணைப்புக்கு நான்கு தோள் தேவை ஆயிற்றே! :-)
ஒரு கால், அதான் போலும் இருங் குழல், நால் தோள்! :-))

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Saturday, July 28, 2007

//இங்கு காழ்ப்பினால் சொல்லவில்லையே!//

அச்சச்சோ! எனக்குத் தெரியாதா சார் நீங்கள் சொல்ல வந்தது!

நான் அண்மைக் கால சங்கர மடத்து நிகழ்ச்சிகளை வைத்துத் தான் சொன்னேன், அவரால் அப்படி பேசி விட முடியாது என்று! அப்படியே அவர் நல்ல நோக்கத்தில் பேசினாலும் கூட, இருக்கும் சூழ்நிலையில் ஊதி இன்னும் பெரிதாக்கி விடுவார்கள் என்று சொல்ல வந்தேன், ஒரு முரண் நகைக்காக :-)

  நா.கண்ணன்

Saturday, July 28, 2007

பரகால நாயகி, பாராங்குச நாயகி - யார் காதற்கனிரசம் சொட்ட கவி புனைந்தவர்!

சபாஷ்! நல்ல போட்டி :-)
பாவம் பாராங்குச நாயகி, வம்பு தெரியாத சமத்து. பரகால நாயகி ரவுடி! எல்லோரையும் சாப்பிட்டு முழுங்கிடும். பட்டிமன்றம் நடத்தும். சுவையாக இருக்கும்!

நான்கு தோள் விளக்கம் சுவையாக உள்ளது. ஆயினும் கலவியில் பன்மை தோன்றாது, ஒருமையே மிஞ்சும். நீர் இன்னும் பிரம்மச்சாரிதானே! பரவாயில்லை, பிழையில்லை :-)

சங்கரமடத்து..ஜோக்! பாவம் ஆச்சார்யர். இப்போதைக்கு பேச முடியாது!