e-mozi

மடல் 061 உளகளவும் யானும் உளன்!

முதற் பதிவு; Wed, 24 Nov 1999 11:12:09 -0800 (PST)

தெய்வ வழிபாடும், அற்புத சித்திகளும் உடன் பிறந்த இரட்டையர் போல் சேர்ந்தே போகின்றன இப்பூலகில்!

அற்புதங்கள் அற்பமானவை என்பதல்ல. அற்புதங்கள் இல்லாமல் சமயங்கள் வாழுமா? என்றும் சில நேரம் கேட்க வேண்டி உள்ளது.

எல்லா சமயங்களிலும் அற்புதச் செயல்கள் மண்டிக் கிடக்கின்றன. அது வைதீக மதங்களாக இருந்தாலும் சரி, அவைதீக மதங்களாக இருந்தாலும் சரி. உலக சமயங்கள் எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல!

மகாபாரதம், பாகவதம் முழுவதும் அற்புதச் செயல்கள் நிரம்பியுள்ளன. மதுரைக்காரர் களுக்குத் தெரியும் சிவன் செய்த திருவிளையாடல்கள். அவர் பிள்ளைக் கறி கேட்ட கதையை இன்று படித்தாலும் கொஞ்சம் பயம்தான் உள்ளூர....பிள்ளை திரும்ப ஓடோடி வந்தது என்று முத்தாய்ப்பு வைக்கும்வரை! வைதீக மதங்களைப் புறக்கணிக்கும் பெளத்தத்திலும், சமணத்திலும் உண்டு பல அற்புதங்கள். புத்தனும், மகாவீரரும் அற்புதமாகிப் போயினர் அங்கு! ஏசு கல்லறையில் இருந்து மீண்டார் என்பதற்காகவே கிறித்துவத்தில் இருப்போர் பலர். முகம்மது நபிகள் வாழ்வில் பல அற்புதங்கள் நிகழ்ந்ததாக இஸ்லாம் கூறும். புராணங்கள், இதிகாசங்கள் எல்லாம் "பிள்ளை விளையாட்டு" என்று கிண்டல் செய்த இராமலிங்க சுவாமிகள் வாழ்வையே அற்புதமாகத்தான் பார்க்கின்றனர் சன்மார்க்கிகள்! அவர் தண்ணீரால் விளக்கேற்றியது, பள்ளி செல்லாமல் பா இயற்றியது, இறுதியாக மரணமில்லாப் பெருவாழ்வு எது என்பதைக் காட்ட அறையில் புகுந்து அந்தர்தியானமாகியது இப்படி....

நான் வாழும் ஜெர்மனியில் சாயி பாபா பக்தர்கள் அதிகம் உண்டு. பாபாவின் பக்தர்களின் ஜீவ நாடி அவரின் அற்புதங்கள்தான். அவர் ஒருநாள் வானில் தோன்றி தான் கடவுள் என்பதை நிறுவுவார் என்பது வரை!

ஆக, யாரும்/எதுவும் தப்பவில்லை!!

மனிதன் ஒரு விசித்திரப் பிறவி! அவனது கற்பனைகளுக்குத் தீனி போட இறைவனாலும் முடியுமா என்று சில நேரம் தோன்றும். அவனது ஆழ்மனது ஆசைகள், இயற்கையைக் கடக்கும் அவனது மனோ வேகம்/பாவம் இவைதான் "தொன்மங்கள்/ஐதீகங்கள்" உருவாவதற்குக் காரணமாய் உள்ளன. ஐதீகங்கள் இல்லாத கலாச்சாரமே கிடையாது. அறிவியல் சார்ந்துள்ள இன்றைய உலகிலும் ஐதீகங்கள் உண்டு. ஸ்டார் வார், ஸ்டார் டிரக் போன்றவை நவீன தொன்மங்கள்! ஐதீகங்கள் எதுவும் இல்லாத பாலை வாழ்வை யாரும் விரும்புவதும் இல்லை. உளவியல் ரீதியாக பார்த்தோமெனில் இந்த ஐதீகங்கள் என்பவை எதையோ சொல்ல, எதை வைத்தோ வருகின்றன என்று புரியும். அந்த அளவில் ஐதீகங்கள் என்பவை உருவகங்களே. அதை, அப்படியே உண்மை என்று கொள்ளுதல் கூடாது. அப்படிக் கொள்ளும் போதுதான் பெரிய பிரச்சனைகள் வருகின்றன.

சாயி பாபா திருநீறு வரவழைப்பது எல்லோரும் அறிந்ததே. அவர் படத்திலிருந்து திருநீறு கொட்டுவதைப் பார்த்திருக்கிறேன். இந்தத் திருநீறை ஆராய்ந்த ஜெர்மன் ஆய்வாளர் குழு அது மாட்டுச் சாணத்திலிருந்து வரும் திருநீறு அல்ல என்று சொல்கிறது. மாஜிக் செய்யும் எனது நண்பர் சிவனடியான் ஸ்ரீபதி அன்று கோயிலில் கையிலிருந்து யாரும் அறியாமல் வீபூதி விழ வைத்துக் காட்டினார். சாயிபாபா ஏன் பெரும் பூசணிக்காயை உருவாக்குவது இல்லை என்று விதண்டாவாதம் பேசுவோரும் உளர். என்னளவில் உண்மையான மெய்யடியார் கவனம் அற்புதங்களிலிருந்து அறிவுக்குத் திரும்பவேண்டும் என்பதுதான். உதாரணமாக, சாயி பாபா ஏன் இப்படிச் செய்கிறார் என்பது சுவாரசியமான விஷயம். பாபா சிறப்பு மலர் கொண்டுவர கல்கி ஆசிரியர் சென்ற போது, வழக்கம் போல் பாபா அவருக்கு ஒரு மோதிரம் வரவழைத்து மாட்டினாராம். மாட்டி விட்டு வேடிக்கையாகக் கேட்டாராம், "எப்படி அது உனக்கு சரியாகப் பொருந்துகிறது பார்த்தாயா?" என்று. உடனே எவரது மனமும் அந்த அற்புதச் செயலில் மதிமயங்கிவிடும்! ஆனால் உடனே தொடர்ந்து, "ஏன் நான் உனக்கு இதைத் தருகிறேன் என்று யோசித்தாயா?" என்று கேட்டாராம். இங்குதான் உள்ளது சூட்சுமம்! "உன் மீதுள்ள அன்பினால்தான் இப்படிச் செய்கிறேன்" என்று சொன்னாராம். தனி மனிதராக அவர் செய்யும் நற்காரியங்களை நாத்திகர்கள் கூட ஒத்துக் கொள்ளவர். விவேகானந்தர், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி இவர்கள் செய்வித்தது போல் கல்விப் பணியில் போகிறது அவர் செலவு. கிருத்துவ வைத்தியசாலைகள் போல் அவரால் பல வைத்திய சாலைகள் நடத்தப்படுகின்றன. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், அவரது அற்புதங்களில் கவனம் செலுத்தினால் வேண்டாத விதாண்டாவாதங்களில்தான் போய் நிற்கும், அதற்குப் பதில் அவர் செய்வதன் நோக்கம், அல்லது அவர் செய்யும் நற்பணிகளில் கவனம் செலுத்தினால் அற்புதங்கள் சின்ன விஷயங்களாகப் போய்விடும்.

அற்புதங்களை அறவே ஒதுக்கி சமயங்கள் வாழ முடியாது. அற்புதங்களை, கேளிக்கை கேட்கும் மனத்திற்கு தீனியாகப் போட்டு விட்டு அதற்கும் மேலுள்ள தத்துவங்களை நோக்கிப் பழக வேண்டும். அற்புதங்கள், அற்புதங்கள் என்று மனது அலைவதற்குக் காரணம், கண்ணெதிரே நாம் தினம் காணும் அற்புதங்களை, அற்புதங்களாகப் பார்க்கத் தவறுவதுதான். நாம் இருப்பதே பெரிய அதிசயம்தான்!
வானில் தெரியும் நட்சத்திரம் எங்குள்ளது என்று ஒருவர் கேட்டாராம். அதற்கு பதில் சொன்னாராம் ஒருவர் "அது நம் மூளையில் உள்ளது" என்று! மூளை எவ்வளவு அதிசயமான விஷயம்! ஒரு பட்டுப் பூச்சிக்கு சின்னச் சின்ன கட்டங்களாகத் தெரியும் ஒரு பொருள், நம் கண்ணுக்கு மூப்பரிமாணத் தோற்றத்தில் தெரிகிறது. இந்த வெளவாலுக்கு எதுவுமோ தெரிவதில்லை. கேட்கப் படுகிறது!! அப்படியெனில் நாம் காணும் பொருளின் அர்த்தம்தான் என்ன? யோசித்துப் பார்த்தால் தெரியும் காலையில் உதிக்கும் சூரியன், மாலையில் வளரும் மதி, இரவில் கம, கமக்கும் பூக்கள், கண் எதிரே தெரியும் மனைவி, குழந்தைகள் எல்லாமே பெரிய அதிசயம்தான் என்று.

ககனமார்க்கமாகப் பறப்பதைக் காட்டிலும், நீரில் நடப்பதைக் காட்டிலும் அதிசயமானது நாம் வெளிவிடும் மூச்சு மீண்டும் உள்ளே வந்து நம்மை வாழ வைத்திருப்பதுதான்!

எனவேதான் "பார்வை" என்பது ஆன்மீகத்தில் மிகவும் முக்கியம். அற்புதங்களையும் பார்க்கத் தெரியவேண்டும்! நம்பிக்கை என்பதை விட இந்தப் "பார்வையை" நாம் புரிந்து கொள்ள வேண்டும். பின்னால் ஆன்மீகம் தேனாய், பாலாய் இனிக்கும். நமக்காக அதைச் சொல்லித் தருகிறார் திருக்குருகூர் சடகோபன்.

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலரென்றும் காண்தோறும்-பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று.


தெளிவாகச் சொல்கிறார். இங்கு நாம் காணும் காட்சிகள் அனைத்தும் தெய்வீகக் காட்சிதான் என்று. இப்படிப் பார்த்துப் பழகும் போது,

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம்
கண்ணன் எம்பெருமா னென்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி
திண்ண மென்னிய மான்புகு மூர் திருக்கோளூரே!

என்று ஆராதிக்கத் தோன்றும். உலகின் ஆகப் பெரிய அற்புதம் இப்படிப் பார்த்து ஆனந்திப்பதுதான்.

பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ
மற்றையார் வாரும் நீ! பேசில்-எற்றேயோ
மாய! மா மாயவளை மாயமுலை வாய் வைத்த
நீயம்மா! காட்டும் நெறி!

இதுதான் நெறி என்கிறார். இப்படிப் பார்த்து, ஆனந்திப்பதுதான் ஆன்மீக நெறி.

இது ஒருவகையான விழிப்பு. கண்கள் திறந்திருந்தும் நாம் உண்மையில் தூங்கிக் கொண்டுதான் உள்ளோம். கேள்வி கேட்பதில்லை. நம்மைச் சுற்றி/நம்முள்ளே நடக்கும் அற்புதங்களைக் காணத் திறனின்றி வாளாவிருக்கிறோம். அப்படி வாழ்வதால்தான் நாம் நம் வினைப் படலத்திலிருந்து மீளாமல், ஆண்டாள் சொல்வது போல், "ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டு" கட்டுண்டு கிடக்கிறோம். சூழ் வினையின் ஆழ் துயரில் அவதிப் பட்டு அல்லலுறுகிறோம்! ஆனால் நாமென்னும் அற்புதத்தை அறிந்து கொண்டு, நம்மைச் சூழ்துள்ள அற்புதங்களைக் கண்டு ஆனந்திக்கும் விழிப்பு வந்துவிட்டால் ஒருவகையில் நாம் பிறவிப் பெருங்கடலைக் கடந்து விடுகிறோம். பாரதி பேசும் அமரத்தன்மை இதுதான். உலகம் உள்ளளவும் நாமும் இருக்கிறோம். இதுதான் இராமலிங்கர் பேசும் "மரணமில்லாப் பெருவாழ்வு" என்பதும். இதோ சடகோபன் கூற்று:

உள்ளிலும் உள்ளத் தடிக்கும்; வினைப் படலம்
விள்ள விழித்துன்னை மெய்யுற்றால்-உள்ள
உலகளவு யானும் உளனாவன்; என்கொல்!
உலகளந்த மூர்த்தி! உரை.

மெய்யுணர்வு என்பது இந்த விழிப்புதான். இந்த நோக்குதான். இந்தப் பார்வைதான்.

மடல் 062: பெருமாள்

First published on: Fri, 26 Nov 1999

இதுக்கு மேலே பஸ்ஸு போகாதுங்க! மாட்டு வண்டி வச்சுக்கிட்டு போங்க என்ற பஸ் கண்டக்டரின் பேச்சு இருபதாம் நூற்றண்டிற்கு ஒவ்வாத பேச்சாகப் பட்டாலும் தமிழகத்தில் இன்னும் இப்படிப்பட்ட கிராமங்கள் உள்ளன என்பதைத்தான் அது காட்டியது.

கட்டை வண்டி கட, புடாவென்று மலையும் மலை சார்ந்த மண்ணில் குடை கவிழாமல் போனதே அதிசயமாக இருந்தது. வண்டித்தடம், அதை ஒட்டி ஒத்தைத் தடம். அதில் செருப்போ, பூட்ஸோ போட்டுப் போனவர்களின் தடம் பதியவில்லை. மாடுகள் போய் வந்த தடங்கள் அங்கும், இங்கும் தெரிந்தன. வண்டித்தடம் மேடும் பள்ளமுமாக தேவை இல்லாத இடத்திலும், தேவையுள்ள இடத்திலுமென்று வளைந்து, வளைந்து சென்றது. பெரிதாக செழிப்பு என்று இல்லைதான். முட்புதர்கள் வழியெல்லாம் நிறைந்து இருந்தன. கோவர்த்தனகிரி போல் ஒரு மலை, அதைச் சுற்றி வந்த பசுமையில் மாடுகளின் மேய்ச்சல் வெளி. அங்கங்கே தேங்கிய மடுக்கள், கலங்கலாக. கண்ணில் தெரிந்த ஒரு பம்பு செட்டில் பொம்பிள்ளை சனங்கள் தண்ணீர் எடுத்துக்கொண்டு குடத்துடன் நடந்து சென்றனர். தூரத்தே குழந்தைகள் கும்மாளம்.

சின்ன கிராமம். குக்கிராமம். மொத்தம் 500 பேருக்கு மேலிருந்தால் அதிசயம். அந்த ஊரில் ஒரு சின்ன கோயில், ஒரு குளம், ஒரே ஒரு பம்பு செட்டு! கோவிலைச் சுற்றி சில வீடுகள். சில காரை வீடுகள், பல கூரை வீடுகள். ஒரே ஒரு வீட்டில்தான் திண்ணை. அது பெரியவருக்காக ஒதுக்கிய திண்ணை. வேரு யாரும் உட்காருவதுகூட இல்லை. திறந்த வெளியில் நிறைய காட்டுக் கருவேலிப் புதர்கள்.

“இங்கே, நீங்கள் தாராளமாகத் தங்கலாம்” வீடு திறக்கப்பட்டது. வரவேற்க கொடியாக நூலாம்படைகள். தரை முழுவதும் தூசுக்கம்பளம். “கொல்லையில் கிணறும், கக்கூசும் உண்டு”. கிணறின் அருகே வாளி இருந்தது. கயறில் பாதியைக் காணோம். கக்கூசைத் திறந்தபோது ஒரு எலும்புக் கூடு கிடந்தது. ஏதோ வளர்ப்புப் பிராணி! நாயோ, பூனையோ? அங்கு வந்து எதற்கு உயிரை விட்டது? இந்த வீட்டை விட்டுப் போன மனிதர்கள் வெகு காலமாக வந்து சேராதது அந்த எலும்புக்கூட்டில் தெரிந்தது!

“கோயில் திறக்க நாலு மணியாகும், அண்ணா, மூணரை மணிக்கு எழுந்திருவார். அதுவரை ஆசுவாசப் படித்திகொள்ளவும்”.

வீட்டை சுத்தம் பண்ணவே நாலு மணித்தியாலம் ஆகும் போலுள்ளதே?

நவநீதக்கண்ணன் கோயில் நடை சாத்தி இருந்தது. வெளி மண்டபத்தில் கொஞ்சம் நிழல், குளிர் காற்று.

“அண்ணா பிரசங்கம் கேட்க திவ்யமா இருக்கு, வைணவனிடத்திலே சாதி கேட்பது மாதாவின் கற்பை சோதிப்பது போலாகும் என்று சோல்றார். எல்லாம் சரிதான், சாதியை எங்கே விடறது?”

“நீர் விட்டாலும் அது உம்மை விடாதுங்காணும்!”

“என்ன ரெட்டியார்வாள்! இடக்காய் பேசுறீர்?”

“பார்த்தீரா? இதைத்தான் சொல்லரேன்! இந்த சந்நிதியிலே எல்லோரும் வைணவர்தானே ஐயா! ரெட்டியார் எங்கே வந்தார்? அதான் சொன்னேன், சாதியை நீர் விட்டாலும் அது உம்மை விடாதுன்னு!”

‘அது சரிதான்! அண்ணா சொல்லறார் என்பதற்காக சாதி இல்லாமல் போய் விடுமா என்ன?”

“அப்படி சொல்லலைங்காணும்! குலத்தாழ்ச்சி, உயர்வு பார்ப்பதுதான் பாவம் என்கிறேன். அது என்ன பூணூல் போட்ட ஆளுன்னா மட்டும் உடனே அண்ணாவைப் பார்க்க உள்ளே அனுப்புறீர்? அது தப்புதானே, ஓய்!”

“எதை எப்பப்ப, எப்படி பண்ணனும்ன்னு எனக்குத்தெரியாதா என்ன?”

“எப்ப பார்த்தாலும் அப்படித்தானே ஓய் பண்ணறீர்! அதுதானே இங்கே பிரச்சனை!”

இந்த உரையாடல் நடந்துகொண்டு இருக்கும் போது, ஹார்மோனியப் பெட்டியோடு ஒருவர் வந்து ஓரமாய் அமர்கிறார். பச்சை மா மலை போல் மேனி என்று ராகம் போட்டு பாட ஆரம்பிக்கிறார்.

“சபாஷ்! பலே! பலே! பாகவதர் எந்த ஊரு?”

“பக்கத்திலேதாங்க! இன்னோரு குக்கிராமம்!”

“கொண்டல் வண்ணனை... பாடமா?”

திருப்பாணாழ்வாரின் பாசுரத்தை உருக்கமாகப் பாடுகிறார். கண்களில் கண்ணீர் ஆற்று நீராய் பெருகிறது.

“கள்ளழகர் மேலுள்ள மங்களாசாசனம் சேவியுங்கோ!”

ஊழி முதல்வன் ஒருவனே என்று பாட ஆரம்பிக்கிறார்.

“நாச்சியார் திருமொழி?”

கருநீலப் பட்டு விரித்தார் போல் மேகங்காள்! என்று பாட ஆரம்பிக்கிறார்.

“குலம் தரும், செல்வம் தந்திடும்?”

திருமங்கை ஆழ்வாரின் பாசுரத்தை சேவிக்கிறார்.

“நாலாயிரமும் பாடமோ?”

“ஏறக்குறைய! இன்னும் பாடம் போய்க் கொண்டு இருக்கு!”

“யாரிடம் பாடம்?”

“எல்லாம் நம்ம பெருமாள்தான்!”

“எந்தப் பெருமாளைச் சொல்லறீர்? அந்த பரந்தாமன் இல்லைதானே?” என்று சொல்லி விட்டு அதற்கான் சிரிப்பையும் அவரே உதிர்த்தார்!

“இவர்தாங்க நமக்கு எல்லாமும். மாடு மேய்க்கிறச்சே கூடமாட உதவி செய்யறேன்னு வந்து சேந்தாரு, அப்படியே மாடு மேய்ச்சு, களனி பாத்து, வரப்பிலே வேலை பாத்து, வீட்டு சனங்களுக்கு கை வேலையிலே ஒத்தாசை பண்ணி, பிள்ளையை பாத்துகிட்டு...”

“ஏனையா! பெருமாளைப் பத்தி சொல்லச் சொன்னா உம்ம வீட்டு வேலைக்காரன் பிரதாபத்தை அளக்க ஆரம்பிச்சுட்டீரே?”

“பெருமாளை வேலைக்காரன்னு சொல்லறது தப்பு சாமி! நான் கூப்பிட்டா கணக்கா ஒடி வருவாரு வேலைகாரன் மாதிரி. அப்புறமா பாத்தா அவரு ஏதாச்சும் சொல்லக் கிளம்பிடுவாரு நான் வாயப்பாத்துக்கிட்டு ஒக்காந்துக்கிட்டு இருப்பேன். வேலைகாரன் மாதிரி காமிச்சுக்கிட்டு இருக்கற பெரிய ஆளுங்க அவரு. இல்லாட்டி கிராமத்திலே எவனுக்குத் தெரியும் திவ்யப்பிரபந்தம்? என் பாட்டுக்கே இப்படிச் சொல்லறீங்க, நீங்க அவர் பாடிக் கேக்கனும். அப்படிப் பட்ட சாரீரம். ரொம்ப அழகா அர்த்தமெல்லாம் சொல்லுவாரு.

“அடடா! அப்படியா? அவர் என்ன சாதி? நீங்க என்ன சாதி?”

“ஆரம்பிச்சுட்டீறா உம்ம குல விசாரனைய!”

“அதனாலெ என்னங்க சாமி, பெருமாளு ஆட்டு இடையர்ன்னு ஒரு முறை சொன்னாருங்க. நமக்கு மீன் பிடிக்கிற சாதிங்க.”

“சரி, அண்ணாவைப் பாக்கனுங்கற எண்ணம் எப்படி வந்தது உமக்கு?”

“இவரைப் பத்தி பெருமாளுக்கு நல்லா தெரிஞ்சு இருக்குங்கோ, அவர்தான் என்னை இங்கு அனுப்பிச்சாருங்கோ. இவரு இங்க இருக்கிற விபரம் ஸ்ரீரங்கம் போன பின்னாலதாங்கோ தெரிஞ்சது. அதாங்கோ அடிச்சு, பிடிச்சு ஓடி வரேன்!”

“நல்ல வேளை! சரியான சமயத்திலே வந்தீர். நாளைக்கு அண்ணா பிருந்தாவனம் கிளம்பறார். எப்படியோ அண்ணாவைப் பாக்கற சாக்கிலே உமக்கு ஸ்ரீரங்கவாசமும் கிடைச்சுதுன்னு வச்சுக்கும்!”

“உமக்கு என்ன வயசு இருக்கும்?”

“அதெல்லாம் யாருக்குங்க தெரியும்?”

“அட! எப்ப பொறந்தேன்னு கூட தெரியாதா? சரி, அம்மா வச்ச பேராவது உண்டா?”

“அப்படில்லாம் ஒண்ணுங் கிடையாதுங்க. ஊரு சனங்க, கட்டாரின்னு என்னைக் கூப்பிடுவாங்க. அதுக்கு அர்த்தம் என்னன்னு இன்னக்கி வரைக்கும் தெரியாதுங்க”

“சரிதான் போ! எப்ப பொறந்தேங்கற கால நியமம் தெரியலே, தனக்குன்னு ஒரு பேரு இருப்பத்தாயும் தெரியலே, என்ன ப்ரகிரதி இது!”

“அதெல்லாம் பட்டணத்திலே இருக்கிறவுங்களுக்கு தானுங்கோ, கிராமத்து ஆளுக்கு இதெல்லாம் எதுக்குங்கோ?”

“கிராமத்து ஆளுக்கு அண்ணாவோட பிரவச்சனமும் எதுக்குங்காணும்?”

“அவருக்கு சங்கீதம்ன்னா பிடிக்கும்ன்னு பெருமாளு சொன்னாருங்கோ. ஐயா கிட்டே பாடி காட்டனும்ன்னு ஆசைங்கோ”

“இருக்க இடம் கொடுத்தா மடத்தை பிடிக்க ஆசைப் படுவீர் போல! அப்புறமா அண்ணாவோட அகண்ட நாம பஜனையிலே சந்நிதியிலே பாடம்ன்னு ஆசை வரும். ஆசைப் படறதெல்லாம் நடந்துடுமா என்ன? இவ்வளவு நேரம் பாடீனீரே, அது போறாதோ? வெளியேயானாலும் பரந்தாமன் சந்நிதிதானே ஐயா!”

“அப்ப ஐயா கிட்ட பாடிக்காட்ட முடியாதுங்களா? போய் சொன்னா பெருமாளு வருத்தப் படுவாரே, நான் இப்ப என்ன செய்ய!”

“சரி, சரி, பேசிக்கிட்டே இருந்ததிலே நேரம் போனதே தெரியலே, அண்ணாவோட பிரவச்சனத்திற்கான காலம் வந்தாச்சு. எல்லாரும் மண்டபத்தி சுத்தி உட்காருங்கோ! நாழி ஆச்சு” என்று அவசரப் படுத்தினார் காரியதரிசியாக தன்னைக் கருதிக்கொள்ளும் நபர்.

ரெட்டியார் என்று அழைக்கப்பட்டவர் தனக்குள்ளே முணு, முணுத்துக்கொண்டார், “ இந்த ஆளு குலம், கோத்திரமெல்லாம் விசாரிச்சுப்பிட்டாரு, பாகவதர் இனி அண்ணாவைப் பார்த்த மாதிரித்தான்”

அந்தக் கோயிலை கட்டி நிறுவகித்துவரும் பெரியவர் அவ்வப்போதுதான் தன் ஸ்ரீரங்க வாசத்தை விட்டு கிராமத்திற்கு வருவார். பெரியவர் காணும் கோகுலம் அந்த ஊரில் இருந்தது. கள்ளமறியா ஆயர்கள், ஒரு சின்ன மலை, நிறையப் பசுக்கள். அவர் செய்யும் விரிவுரைகள் படித்த பண்டிதரையும் வாய் பிளக்க வைத்தன. பதின்மூன்றாம் நூற்றாண்டை நினைவு படுத்தும் மொழி நடை. சமிஸ்கிரதமும், தமிழும் முத்தும், பவளமும் சேர்ந்த மணியாரம் போல் அவர் வாயிலிருந்து கொட்டியது. நாலாயிர திவ்யபிரபந்தங்களுக்கு அவர் சொல்லும் வியாக்கியானங்கள், வியாக்கியானச் சக்கிரவர்த்தி எனப் புகழ் பெற்ற பெரியவாச்சான் பிள்ளையே மீண்டும் அவதாரம் எடுத்து வந்திருப்பதாக பலரை நம்ப வைத்தது. அவருக்காகத்தான் நகரத்தவர் இந்த பாடுபட்டு அந்த குக்கிராமத்திற்கு வருகின்றனர். இவரது உரைகள் காலம் கடந்து நிற்பதை உணர்ந்து, பாரிசில் நல்ல உத்தியோகம் பார்த்துக்கொண்டு இருந்த ஒருவர் இவர் பேச்சை ஊர், ஊராய் சென்று பதிவு செய்து வருகிறார். கேசட்டுப் போடும் வருமானத்தில் நல்ல சம்பாத்தியம் என்று கேள்வி. காரியதரிசி போல் இருப்பவருக்கும் இவருக்கும் பங்கு உண்டு என்றும் கேள்வி. மழை நீரைப் பங்கு போட யாரிடமும் அனுமதி கேட்கவேண்டிய அவசியமில்லை என்பது அவர்கள் வாதம். பெரியவர் கருமமே கண்ணாக கிராமம், நகரமென்று பார்க்காமல் எல்லோருக்கும் ஒரே மாதிரி விரிவுரை வழங்கி வருகிறார். நாட்டில் பக்தி பெருகி, வைணவம் தழைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

அன்றும் அப்படித்தான் விரிவுரை வழங்கினார். பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மணவாள மாமுனிகள் என்பவர் சொன்ன முற்போக்குக் கருத்துக்களை விளக்கிச் சொன்னார். பக்தி செய்வதற்கு சாதி, குலம் என்ற பேதம் இல்லை. இறைச்சரண் செய்வதற்கு இன்ன காலம், இன்ன இடம், இன்ன அதிகாரி, இன்ன வகை என்ற பேதம் இல்லை என்று பேசினார். பாஞ்சாலி சரணம் செய்த காலம் மாதவிடாய் காலம். கண்ணன் அவள் தேக சுத்தியைப் பார்க்கவில்லை, அவளது மனச்சுத்தியைத்தான் பார்த்தான். அர்ச்சுனன் சரணம் செய்தது, நல்லவர்கள் மத்தியில் இல்லை. நீசர்கள் நடுவே, பிணமும், நிணமும் உள்ள இடத்தில்தான். ஆயினும் அவனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்ட மறுக்கவில்லையே இறைவன். இன்னவர்தான் சரணம் செய்யவேண்டும் என்ற அதிகாரத்துவம் இல்லாமல் அரக்கனான வீபீடணனனும், காகமான பறவையும், காளிங்கனான பாம்பும், இளைய பெருமாளான இலக்குவனனும், சர்வ சரண்யனான இராமனும் சரணம் செய்யவிலையா? இன்ன குலம், இன்ன சாதி என்ற பாகுபாடு இறைவன் முன்பு உண்டோ?

இந்த இடம் வந்தபோது ரெட்டியார் காரியதரிசியைப் பார்த்தார். அவர் விரிவுரைகளை மற்றவர்களுக்கு விட்டு விட்டு, பட்டணத்து பணக்காரரிடம் வம்பளந்து கொண்டிருந்தார். மூலையில் மீனவர் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். ரெட்டியார் நினைத்தார், யார் கேட்க வேண்டுமோ அவர்கள் கேட்காமல், அதிகாரம் இல்லாதவர்கள் கேட்டு என்ன பிரயோசனம்? மீனவர் பேசாமல் குக்கிராமத்திற்கு போய்விடுவார் எந்த பாதகமும் இல்லாமல். பட்டணத்து சாமிகள், குலத்தாழ்ச்சி, உயர்வு சொல்லும் உயர் சாதி இந்துக்கள் அல்லவோ இதைக்கேட்கவேண்டும். அவர்கள்தானே பாதகம் செய்கின்றனர். இரத்தம் சிந்தா நூற்றாண்டு தமிழத்தில் என்றாவது தோன்றுமா? இராமானுசர் போன்ற புரட்சி வீரர்களை இந்த மண் மீண்டும் தருமா? அண்ணாவின் பேச்சு அருமையிலும், அருமை என்றாலும் அவரைச் சுற்றி உள்ளவர்கள் உயர் சாதி இந்துக்கள்தானே. ஏன் நல்ல விஷயங்கள் எல்லாவற்றிலும் முதல் பங்கை இவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்? இராமானுசர் போல் இந்த அண்ணாவும் கீழ்சாதிக்காரனின் தோள்மீது கை போட்டு பீடு நடை நடக்க வேண்டாமா? அதுதானே தமிழ் வைணவம் சொல்வது. ஆழ்வார்களின் அருளிச் செயல் அனைத்தும் வீணோ?

பிரவச்சனம் முடியும் தருவாயில் இரவு அகண்ட நாம பஜனை உள்ளதாகவும், ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென்றும் கூறி முடித்தார். அதன்முன் சமபந்தி போஜனம் உண்டு என்றும் சொன்னார்.

இரவு வருவதற்கு முன் பாகவதர் தன் மூட்டு முடிச்சுகளைக் கட்டிக்கோண்டு கிளம்ப ஏதுவானார். ரெட்டியார் கண்களில் இது பட்டது.

“என்ன பாகவதர், அதற்குள் கிளம்பிடீங்க? அண்ணாவுக்கு பாடிக்காட்டாமலே கிளம்பற எண்ணமா?

“இல்லைங்க சாமி, எதுக்கு வம்பு. அதான் ஐயரு சொன்னாரு இல்ல, எல்லாம் சாமி சந்நிதிதான்னு.”

“யோய், அவரு சொல்வாரு, அதற்காக? எல்லா இடத்திலேயும் சாமி இருக்காருன்னா அவரு ஏன் இவரு பின்னாலேயே சுத்தராரு. அவருக்கு ஒரு நியாயம், உமக்கு ஒரு நியாயமா? இருந்துதான் பாருமேன்? உமக்கு உங்க பெருமாளு சொல்வதிலே நம்பிக்கை உண்டு தானே?”

“அப்ப இருக்க சொல்லறீகளா?”

“பின்ன?”

“அப்ப நான் ஓரமா படுத்துக்கிட்டு கிடக்கேன், பஜனை ஆரம்பிச்சவுடனே சொல்லுங்க”

“என்னையா விவரம் கெட்ட ஆளா இருக்கே! சமபந்தி போஜனம்ன்னு அண்ணாவே சொன்னாரு இல்ல. வந்து சாப்பிடும்காணும். சாப்பிட்டு ஜம்முன்னு மெட்டுக்கட்டும்”

“பிரச்சினை ஒண்ணும் வராதுதானே?”

“வந்தா சமாளிக்க வேண்டியதுதான். பட்டணத்து சனம் கிராமத்திலே வந்து என்ன நாட்டாமை?”

“கிராமத்திலேயும் நாட்டாமைக்காரங்க இருக்கதானுங்க இருக்காங்க!”

“எல்லாம் மாறனும்காணும், மாறனும். பெரியவங்க கட்டிக்காத்த கட்டளையெல்லாம் காத்தோட போனா என்ன நியாயம்? அழகர்கோயில் கள்ளர்கள் தங்கள் மரியாதையை விடறாங்களா? புதுசா சட்டம் போட இவங்க யாரு?”

ரெட்டியார் சொன்ன தைரியத்தில் பாகவதர் உள்ளே சாப்பிடப்போனார். காரியதரிசி ஏதோ கையை காலை ஆட்டினார், அதற்குள் பெரியவர் உள்ளே வந்துவிட எல்லோரும் சாப்பிடத்துவங்கினர்.

இரவு பஜனைக்கு இளையவர், முதியவர், பெண்கள் என்று நிறையக் கூட்டம் வந்தது. பாகவதரும் வந்திருந்தார். காரியதரிசி அவரை முன் பக்கம் வர விடவில்லை. பஜனைக்கு வந்த அண்ணா ஆர்மோனியப் பெட்டியுடன் ஓரமாய் நின்றிருக்கும் பாகவதரை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தார். ரெட்டியார் அதை கவனித்தார்.

பஜனை சம்பிரதாயமாக அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்டு, மெது, மெதுவாக வேகம் கொண்டது. கிருஷ்ண சைதன்யர் போல் அண்ணா கையை தூக்கி ஆட ஆரம்பித்தார். அப்போது ஆர்மோனியப் பெட்டி பாகவதரைப் பார்த்து கண்ணால் ஜாடை காட்டி முன்னால் வந்து கலந்து கொள்ளுமாறு அண்ணா அழைத்தார். ரெட்டியாருக்கு கனகுஷியாகிவிட்டது. பாகவதர் கண்கள் பனிக்க, “கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன், என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!” என்று உருக்கமாகப் பாட ஆரம்பித்தார்.

சரியான பாட்டுத்தான் என்று நினைத்துக் கொண்டார் ரெட்டியார். திருப்பாணாழ்வார் செய்வித்த பாசுரம்! குலத்தில் தாழ்ந்தவர் என்று சொல்லி, கோபுர தரிசனம் செய்து கொண்டிருந்த திருப்பாணரை வழிவிடச்சொல்லி ஜாதி இந்து கல்லெறிய, அரங்கன் நெற்றியில் வழிந்ததாம் இரத்தம்! திருப்பாணாழ்வார் அரங்கனை “நீதி வானவன்” என்று புகழ்வது அதற்கல்ல. அதன் பின்னால் நடத்திக் காட்டிய விஷயத்திற்கு. நந்தனாருக்கு சிதம்பரத்தில் நந்தி வழிவிட்ட பின் அவரை தில்லைவாழ் அந்தணர்கள் எரியூட்டி விடுகின்றனர். ஆனால் திருவரங்கத்திலோ, அந்தணர் தோளில் சுமந்து கொண்டு அரங்கன் சந்நிதிக்கு வருமாறு செய்விக்கிறான். அதனால்தான் அரங்கனை நீதி வானவன் என்று புகழ்கிறார் திருப்பாணாழ்வார். அப்போது பாதாதி கேசம் பாடிய பத்தில் கடைசிப் பாட்டைத்தான் இப்போது குக்கிராமத்து பாகவதர் தெரிந்தோ, தெரியாமலோ பாடுகிறார். அவருக்கு திவ்யப் பிரபந்தம் சொல்லித்தந்த பெருமாள் அர்த்தம் சொல்லி, விளக்கிய பாட்டாகவும் இது இருக்கலாம். அப்படியெனில் பாகவதர் தெரிந்தேதான் சேவிக்கிறார் என்று கொள்ளவேண்டும். இருந்தாலும், ஒரு குறை! இத்தனை அர்த்தம் இந்த ஒரு பாடலில் இருப்பது எத்தனை பேருக்குத் தெரிகிறது? எத்தனை பேருக்கு தமிழ்ச் சமய வரலாறு தெரிகிறது? இனிப்புடன் மருந்தைக்கலந்து கொடுப்பது போல் தமிழ் சமயத்தில் எத்தனை புரட்சிகள் பக்தி என்ற போர்வையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பிள்ளைகள் பள்ளியில் படிப்பது ஐரோப்பிய சமய வளர்ச்சி பற்றிதானே? தன் நிழலில் நடப்பது என்னவென்று தெரியாமல் தூரதேசத்து சரித்திரதைப் படிப்பதால் யாருக்கு என்ன லாபம்? பிள்ளை அழுகிறதே என்று கூடையுடன் பிள்ளையைத் தூக்கி எறிந்த கதையாக தமிழகத்தில் கடவுளை வணங்குபவன் முட்டாள் என்று சொல்லி ஒட்டு மொத்தமாக முன்பு நடந்த (சமய) புரட்சிகள் வெளியே தெரியாதவண்ணம் மழுங்கடிக்கப்படுவதுதானே நடைமுறை!

பாகவதர் எல்லோருக்கும் சமமாக கலந்து கொண்டு ஆடிப்பாடி ஆனந்திப்பதைப் பார்த்து அனுபூதியடைந்தார் ரெட்டியார். இதைப் பெரிய புரட்சியின் "சின்ன அடையாளம்" என்று கொள்ளலாம் என்று ரெட்டியார் கருதினார். இப்படி மீனவரைப் பாகவதர் ஆக்கிய அந்தப் பெருமாளைக் காண வேண்டும் என்ற ஆவல் அவர் உள்ளத்தில் அப்போது தோன்றியது.

மடல் 063 வணங்கும் துறைகள் பலபல ஆக்கி....

First published on : Wed, 1 Dec 1999 08:34:02 -0800 (PST)

அருகில் ஒரு மீனாட்சி கோயில் உள்ளது. அன்னை, திசைக்கு ஒன்றாய் அருள் பாலிப்பாள் என்று அகதியாய் வந்திருக்கும் தமிழர்களுக்கு காட்சி கொடுக்க, கிழக்கே மீனாட்சி கோயில் ஒன்று உருவாகி வருகிறது. மேற்கே ஹம் நகரில் காஞ்சி காமாட்சி பெருங்கோயில் கொண்டுள்ளாள். அன்னை முதலில் வருவதுதான் சரி. காப்பவள் இல்லாமல் வாழ்தல் எப்படி? அதுவும் அந்நிய மண்ணில்!

மதுரைக் காரர்களுக்கு மீனாட்சி இல்லாமல் வாழ்தல் சிரமம் :-) வழக்கமாக போய்வரும் என்னை ஒரு நாள் ஒரு சிறுமி கேட்டாள், "என்ன மாமா? இன்று ரொம்ப லேட்?", தாமதித்து வந்த நான் பதில் சொன்னேன், "இல்லடியம்மா! பாசுர மடல்கள் எழுதி அனுப்பி விட்டு வர தாமதமாகிவிட்டது" என்று. அவளுக்கு ஒரே ஆச்சர்யம்! "பாசுரமடல்களை நீங்கள் எழுதுவானேன்? நீங்கள்தான் சைவராச்சே!" என்றாள்.

அவள் என்னை அன்புடன் "சைவன்" என்று சொன்ன சொல்லை என்னால் மறுதலிக்க முடியவில்லை. வைணவத்தைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம் என்று சொன்னேன். ஆழ்வார்களின் அருளிச் செயல் இல்லாமல் தமிழ் அவ்வளவு இனிக்காது என்று சொன்னேன். அவள் தலையாட்டி கேட்டுக் கொண்டாள்.

சட்டென எனக்கு ஆழ்வார்களில் மூத்தவரான பொய்கையார் நினைவு வந்துவிட்டது! அவர் யாத்த முதல்திருவந்தாதியில் சொல்கிறார்:

அரன்நாரணன் நாமம்; ஆன்விடைபுள் ளூர்தி;
உரைநூல் மறை; யுரையுங் கோயில்-வரை நீர்
கருமம் அழுப்பளிப்பு; கையதுவேல் நேமி
உருவம் எரி கார்; மேனி ஒன்று
(5)


அரன்-நாரணன் - நாமங்கள்; ஆன்விடை(எருது)-புள்(கருடன்) - ஊர்தி;
நூல் (ஆகமம்)-மறை (வேதம்)- உரை; வரை(கைலாச மலை)-நீர்(திருப்பாற்கடல்) - கோயில்;
அழிப்பு (அழித்தற் கடவுள்), அளிப்பு (காத்தற் கடவுள்) - கருமம்; வேல்,நேமி (சக்கரம்)- கையது;
எரி (சிவப்பு), கார் (கருப்பு) - உருவம்; மேனி ஒன்று - உடல் ஒன்று (உயிர் ஒன்று).

எவ்வளவு அன்பான பார்வை. அரனும், நாராணனும் உயிரும் உடலும் போல ஒன்று என்கிறார்.

அந்தக் காலத்து மனிதர்களே தனிதான்! சங்கம் முடிந்த பின் வரும் களப்பிரர் காலத்தில் தமிழ் சமயங்கள் அனாதைகளாய் இருந்த காலம். இருண்ட காலத்தில்தான் ஒளி வேண்டி இருக்கிறது. இக்காலக் கட்டத்தில் ஒளி தந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் உண்டு. அவர்களுக்குள் நல்லிணக்கமும் இருந்திருக்கிறது. அத்தகைய நாயன்மார்களுள் காரைக்கால் அம்மையார் முக்கியமானவர். தன்னைப் பேயாக மாற்றியேனும் சிவன் ஆடும் ஊழிக்
கூத்தை கண்ணுறும் ஆவல் கொண்ட மங்கை இவர். இவர் தலையால் நடந்து வருவதைக் கண்டு உமையவள் நகைத்தாளாம். அப்போது இறைவன் சொன்னாராம், இவள் பேயல்ல, என்னை ஈன்ற தாய் என்று! அந்தப் பேரு பெற்ற நங்கையார் ஒரு தங்கமான பாடல் அருளிச் செய்கிறார்

ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை
ஒருபால் உமையவளாம் என்றால்-இருபாலும்
நின்னுருவம் ஆக நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவமோ மின்னுருவோ நேர்ந்து


உமையொரு பாகன் மட்டுமல்ல அவன், மாலொரு பாகனும் கூட என்கிறார் இத்தாய். இவரும் பூதத்தாழ்வாரும் சேர்ந்து அந்தாதி என்ற அழகு தமிழை அளித்தாக ஒரு ஐதீகம் உண்டு. பூதத்தார், பேயாழ்வார், பொய்கையாழ்வார் மூவரும் சேர்ந்து திருமாலை அனுபவித்த அழகான கதையொன்று உண்டு (காண்க பாசுர மடல்: ஆழ்வார்களின் அறிமுகம்). அப்படியெனில் காரைக்கால் பேயாரும், பேயாழ்வாரும் சம காலத்தவராக இருந்திருக்க வாய்ப்புண்டு. பெயர் பொருத்தம் போதாதோ! அப்படியில்லை :-) அவர்கள் பார்வையிலும் ஒற்றுமை உள்ளது. திருவாலங்காட்டு ஈசனை காரைக்கால் பேயார் மாலொரு பாகனாய் பார்க்கிறார். பேயாழ்வார் திருவேங்கடவனை வேங்கடேஸ்வரனாக (வேங்கடம் + ஈசன்) பார்க்கிறார்:

தாழ்சடையும் நீள்முடியும், ஒண்மழுவும் சக்கரமும்
சூழ்அரவும் பொன் நாணும் தோன்றுமால்-சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து


(மூன்றாம் திருவந்தாதி-பேயாழ்வார்)

வேங்கடத்தான் பொல்லாத ஆசாமி :-) அவர் கோயிலை வெளியிலிருந்து பார்த்தால் சிம்மம் இருக்கும். சரிதான் இது ஆம்பாள் கோயில் போலுள்ளது என்று நினைக்கலாம். உள்ளே போனால் காஞ்சி ஆசார்யர் வில்வ பூஜை செய்து கொண்டிருப்பார். சரிதான் இது சிவன் கோயில் போலுள்ளது என்றால், காலையில்


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!


(குலசேகர ஆழ்வார் - பெருமாள் திருமொழி 4.9)

என்று வைணவ மெய்யடியார்கள் திவ்யப் பிரபந்தம் சொல்லிக் கொண்டிருப்பர். இராமானுசர் காலத்தில் இது குமரன் கோயிலாக தரிசிக்கப் பட்டதாக குருபரம்பரைக் கதைகள் சொல்லுகின்றன. (இத்தனை மூர்த்தங்களும் ஒன்றாய் இசைந்ததாலோ என்னமோ அங்கு அருள் மழையும், பொருள் மழையும் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது!)

சைவ சமயம் இன்றுள்ள நிலைக்கு திருஞான சம்மந்தரும், அப்பரும் பெருந்தொண்டு ஆற்றி உள்ளனர். ஊர் ஊராகப் போய் கோயில்களை உருவாக்கி, பழைய கோயில்களின் பெருமையை நிலை நாட்டி, வாது வந்தால் வாதிட்டு, மந்திரம் கேட்டால் மந்திரம் செய்து, தந்திரம் கேட்டால் தந்திரம் செய்து சிவத் தலங்களை நிலைப்படுத்தினர். அத்தகைய பேரருளாளரான அப்பர் பெருமான் பாடுகிறார்:

பண்டானைப் பரந்தானைக் குவிந்தான் றன்னைப்
பாரானை விண்ணா இவ்வுலகமெலாம்
உண்டானை உமிழ்ந்தானை உடையான் றன்னை
ஒருவருந்தம் பெருமைதனை யறிய ஒண்ணா
விண்ணடானை விண்டார்தம் புரங்கள் மூன்றும்
வெவ்வழலில் வெந்து பொடியாக வீழக்
கண்டானைக் கற்குடியில் விழுமியானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே! (திருநாவுக்கரசர்)

உலகம் உண்ட பெருவாயனான கண்ணனை தன்பால் கொண்டுள்ளான் புரம் அழித்த முக்கண்ணன் என்று சொல்கிறார்.

தமிழ் வைணவத்தின் பிதாமகரான நம்மாழ்வார் திருவாய்மொழியின் ஈற்றில்

அவாவறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவிலந் தந்தாதிகளால் இவையாயிரமும் முடிந்த
அவாவிலந் தாதி பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே.


என்று முடிக்கிறார். அவா அற சூழ் அரியை என்றால் விரும்பியவற்றை நல்குபவன் திருமால் என்று பொருள்.

சேர்த்து வாசித்தால் அரியை, அயனை, அரனை அலற்றி (கூப்பிட்டு) வீடு பெற்ற சடகோபன் என்று முடியும். ஒரு சன்மார்க்க நெறியை கோடி காட்டி விட்டுச் செல்கிறார் என்று பொருள் கொள்ளலாம்.

மாற்றாக, அயனை அரனை அவாவற்று, அரியை அலற்றி, வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் என்றும் சொல்லலாம். இது வைஷ்ணவர்களை மகிழ்வூட்டும் வியாக்கியானம்.

அயனை அரனை அவா அறச் சூழ் அரியை அலற்றி, வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் என்பது இன்னொரு வகை. அதாவது அயன், அரன் இவர்களுக்கும் மங்களத்தை நல்குபவனான சர்வேஸ்வரனான அரியை வழி பட்டு முக்தி அடைந்த சடகோபன் என்பது இதன் பொருள். இதுதான் வீர வைஷ்ணவர்களுக்கான வியாக்கியானம் :-))


இப்படி வியாக்கியானம் சொல்லிச் சொல்லித்தான் சைவ-வைஷ்ணவச் சண்டைகள் உருவாகியிருக்க வேண்டும். முதல் மூவரும், காரைக்கால் அம்மமையாரும், அப்பரும் காணும் சமரச நோக்கு எப்படி பின்னால் காணாமல் போனது? எல்லாம் செல்வக் கொழுப்பு என்றுதான் சொல்ல வேண்டும். வலுப் பெற்றிருந்த சமணத்திடமும், பெளத்தத்திடமும் சண்டை போட்டு பண்டைத் தமிழ் தெய்வங்களை காப்பாற்ற வேண்டிய கால கட்டத்தில் சைவ-வைணவ வேற்றுமைகள் கண்ணுக்குத் தெரியவில்லை. இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து காணப் பட்டது அப்போது. ஆனால் சமணர்களை கழுவேற்றி, பெளத்தர்களை சிலோனுக்கு அனுப்பிவிட்டு (இது பகடி!) சைவமும், வைணவமும் தமிழ் மண்ணில் செழித்தபோது பங்காளிச் சண்டைகள் ஆரம்பமாகி இருக்கின்றன. இது என்ன பேதமை கண்டீரோ?

சேரமான் பெருமாள் நாயனாரின் பார்வையல்லவோ நமக்கு வேண்டும்:

இடம் மால் வலம்தான்; இடப்பால் துழாய்
வலப்பால் ஒண்கொன்றை
வடமால்; இடம் துகில் தோல் வலம்
ஆழி இடம் வலம்மான்
இடமால் கரிதால் வலம் சேது
இவனுக்கெழில் நலஞ்சேர்
குடமால் இடம், வலம் கொக்கரை
யாம் எங்கள் கூத்தனுக்கு

(பொன் வண்ணத்தந்தாதி - சேரமான் பெருமாள் நாயனார்)

இடதுபுறம் திருமால்- திருத்துழாய் மாலை, துகிலாடை, சுடராழி, கரிய நிறம்
வலது புறம் சிவன்- சிவப்பு நிறம், கொன்றை, புலித்தோல், மான்.

சிங்கப்பூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் முருகனுக்கும், பிள்ளையாருக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. கள்ளழகர் சந்நிதியில் பிள்ளையார் உட்கார்ந்து இருக்கிறார். நல்ல வேளை நல்ல திருநாமத்துடன் (பிழைத்தார்!). விஜயவாடாவில் உள்ள நரசிம்மப் பெருமாள் கோயிலை நான் முன், பின் கண்டதில்லை. என் தோழன் அழைத்துச் சென்றான். நல்ல
வைணவ குடும்பத்தில் வந்தவன். கோயிலுக்குப் போகுமுன் அவனது பூஜை புனஸ்காரங்களை முடிக்கும் தருவாயில் எனக்குத் தோன்றியது ஒரு பிள்ளையார் பெருமாள் கோயிலில் இருப்பதாக. போய் பார்த்தால் பிள்ளையார் இருக்கிறார்! பின் விசாகப் பட்டிணம் போய் சிம்மாச்சலம் போய் வந்தேன். மிக, மிக அழகான வனப் பிரதேசம். "இதுதான் பெருமாள்" என்று சந்நிதியைக் காட்டினால் இருக்கிறார் சிவலிங்கம்! "என்ன மாற்றமிது?"
என்று கேட்டால், "நரசிம்மரின் உக்கிரத்தை தனிக்க சந்தனக் காப்பு செய்து, செய்து அது லிங்கம் போல் வந்துவிட்டது" என்றார்கள். அந்த சந்தனக் காப்பை சுரண்ட வேண்டுமென்று அவா உள்ளத்தில் வந்தது. எலும்பு முறிந்துவிடும் என்று தெரிந்ததால் அப்பரைப் போல், பொய்கையாழ்வார் போல், காரைக்கால் அம்மையார் போல், பேயாழ்வார் போல், சேரமான் பெருமாள் நாயனார் போல் நானும் இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து இருப்பதாய் எண்ணி தரிசித்து மீண்டேன்!!
_______________________________________________________________________________
முதலாம் திருவுருவம் மூன்றென்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர்- முதல்வா!
நிகரிலகு காருருவா! நின்னகத்த தன்றே
புகரிலகு தாமரையின் பூ!
(நம்மாழ்வார்)

மடல் 064 - வாலைக்குமரியும், வண்ணநிலவனும்

Published on: Date: Sun, 12 Dec 1999 21:56:48 +0100

தமிழ் சொல்லும் ஆன்மீகமென்பது மிக, மிக ஆழமான ஒன்று. பல்வேறு தளங்களில், பல்வேறு பொருள் கொடுக்கும் வண்ணம் அமைந்துள்ள ஒரு அட்சய பாத்திரம். மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு சரித்திர தொடர்ச்சி காட்டும், அறிவியல் ஆய்விற்கு உட்படும் பொருளாகத் தோன்றும். வேறொரு பார்வையில் அதிக சடங்குகள் அடங்கிய, புராணங்கள் நிரம்பிய, கதைக் களஞ்சியம் போலும் தோன்றும். உளவியல் கண்ணோடு பார்த்தால் பரிபாஷைகள் அடங்கிய, குறியீடுகள் நிரம்பிய, ஆழ்ந்த பொருள் தரும் அறிவுக் களஞ்சியமாகத் தோன்றும். இன்னொரு கோணத்தில், நம் அறிவிற்கு அப்பாற்பட்டு, அற்புதங்கள் அடங்கிய, அமானுஷ்ய தளத்தில் இருப்பதும் புலப்படும். ஒரு சாதாரண தமிழன் இந்த நிலைகளுக்குள் உள்ளும், வெளியும் போய் வந்த வண்ணமே இருப்பது உலக அதிசயங்களில் ஒன்று. மிகையில்லை!இந்து மதம் என்று விதேசிகளால் பெயரிடப்பட்ட இந்திய மெய் ஞானம் காலம் கடந்து இன்றும் அதிசயதக்க விதத்தில் இருப்பதால்தான், காலத்திற்கு காலம் புதிய விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டு என்றும் இளமையுடன் திகழ்கிறது. இன்றைய இந்து மதம் ஆரிய சமய ஞானத்தையும், காலத்தால் முந்திய திராவிட மெய் ஞானத்தையும் உள் அடக்கி வாழ்கிறது. இதற்குள் உட்பூசல்கள் இருந்தாலும், இக்கூறுகளை இனம் கண்டு பிரித்துப் பார்த்து இனி நிலைப்படுத்துவதென்பது மலையை முடியால் இழுத்த கதையாகத்தான் போகும் என்பது விவேக சிந்தனை.

பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட மூட நம்பிக்கைகள் நிரம்பிய, சடங்குகள் மண்டிக்கிடக்கும் ஒரு பரிமாணமும் இம்மதத்திற்கு இருக்கிறது. அதுதான் அடிக்கடி வம்பில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குவது. அதைப் பற்றியல்ல இக்கட்டுரை. புராணங்களப் பற்றியும் அல்ல. அற்புதங்களைப் பற்றியுமல்ல.வேதாந்த, சித்தாந்த விசாரங்களப் பற்றியும் இல்லை.

திராவிட மெய்ஞானத்திற்குப் பின் புலமாக, பக்க பலமாக அமைந்திருப்பது, அறிவிற்கு உட்பட்டு, பின் அதை மேவி விரியும் தந்திரவியலாகும். தந்திரம், மந்திரம் என்பது மிக ஆழமாக, விரிவாக சைவ பாரம்பரியத்தில் காணக் கிடைக்கிறது. காலத்தால் பழமையுடைய வைணவ வழிமுறைகளில் அது பூடகமாகவே வெளிப்படுகிறது. பின்னால் வந்த வைணவக் குரவர்கள் சரணாகதி அல்லது பிரபத்தி என்பதற்கு கொடுத்துள்ள கவனம் இந்த வைணவ தந்திர வெளிப்பாட்டை பின்புலத்தில் தள்ளி வைத்திருக்கலாம். ஆனால் நிச்சயமாக முதல் மூன்று ஆழ்வார்கள் காலத்திலும், அவர்கள் காலத்தில் வாழ்ந்தாக நம்பப்படும் திருமழிசையின் காலத்திலும் பட்டவர்த்தனமாகவே உள்ளது என்று சொல்லலாம்.

உண்மையில் யோகமும், தந்திரமும் எந்த ஒரு இந்திய சமயத் துறைக்கும் பிரத்தியேகமானது என்று சொல்வதற்கில்லை. சமண, பெளத்த, சைவ, வைணவ, பின்னால் வந்த இஸ்லாமிய (சுபி), கிருத்தவ சமயங்கள் எல்லாவற்றிலும் இது காணக்கிடைக்கிறது. எனவே இதை சமயம் கடந்த, எல்லா சமயங்களுக்கும் அடித்தளமிடும் ஒரு அறிவியல் என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது.


இம்மடலில் சைவ, வைணவத் துறைகளில் அடி வேராய் அமையும் சில தந்திரங்களைப் பற்றிப் பார்ப்போம்.

சித்தர்கள் என்று சைவ உலகில் அறியப்படும் மெய் ஞான வித்தகர்கள், யோகிகள் என்று வைணவ உலகில் பேசப் படுவர். பொதுவாக இவர்களை ஞானிகள், ரிஷிகள் என்றும் சொல்வதுண்டு. சித்தர்கள் எத்தனையோ! பல்வேறு பட்டியல்கள் உள்ளன. அவர்களில் காகபுஜுண்டர் என்பரும் ஒருவர். இவர் கல்ப காலங்கலாக வாழ்ந்து வருவதாகவும், வஷிஷ்டர் முதல் பல ரிஷிகள் இவரிடம் பாடம் கேட்டதாகவும், அவர்களுக்கிணங்கி, அன்பால், சாகா வாழ்வு பற்றி அவர் செய்வித்த பெருநூல் காவியம் 1000 என்னும் நூல் தமிழில் உள்ளது. அதில் இவர் மரணமில்லாப் பெருவாழ்வு பற்றி நிரம்ப பேசுகிறார். இதற்கு வாலைச் சித்தர் என்பவர் தனது தவ வலிமையால் நல்லதொரு விளக்கம் செய்துள்ளார்.

காகம் என்பது நல்லதொரு உணவைக் கண்டவுடன் தன் சுற்றத்தை கூவி அழைத்து பகிர்துண்ணும் பண்புடையது. அது போல் காகபுஜண்டரும் தனது மெய் ஞானப் புரிதலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

மீதம் நீருடலுயிரும் நினைவும்போகும்
வேதாந்த மாகருவும் உள்ளே நிற்கும்
நாதம்நீர் அண்ணாக்கு வாசல்மார்க்கம்
நாம் நினையா தேயிருந்தும் பேசும்வாசல்
போதம்பார் பரிபாசை யாகப்பாடும்
பொய்யதுவுந் தாந்தெரியும் மெய்யுங்காணும்
நீதம்பா ரத்தனையும் தானேகாணும்
நில்லும் நில்லும் நானறிவேன் நினைத்த மார்க்கம்.
[61]

முக்கியமாக அவர் சொல்லும் சேதி இதுதான். இந்த யோகாப்பியாசத்தால் வரும் பலன்களில் முக்கியமானது வேதாந்தம், மெஞ்ஞான பரிபாஷைகள் எந்த வேத அப்பியாசமும் இல்லாமல் தானாகவே பாகம் படும் என்பது. அதாவது, வருஷக் கணக்காக குரான் ஓதிக் கொண்டு இஸ்லாமை அறியாத மூடன் போல, வேதம் ஓதிக் கொண்டு மறை பொருள் அறியாத மூடர்களும் உண்டு. திருமழிசை ஆழ்வார் தெரு ஓரம் நடக்கின்றார். அவர் வேதம் ஓதும் பார்ப்பனர் அல்லர். பார்ப்பனர்கள் வேதம் ஓதும் போது அறியாது தவறு செய்கின்றனர். அதை வழிநடை செல்லும் திருமழிசை திருத்துகிறார். வாதம் வருகிறது, அப்போது, அந்தணர்கள் அறிந்திடாத வேதத்தின் உட் பொருட்களை புட்டு, புட்டு வைக்கிறார். இது எப்படி சாத்தியமாகியது?

மெய்ஞானம் என்பது அனுபவத்தால் வர வேண்டும் என்று அழுத்திச் சொல்கிறார் காகபுஜண்டர். அதுவில்லாமல் வெறும் புத்தக அறிவுடையோரைக் கேலி பேசுகிறார் இப்படி:

திரும்பிக்கொள் வாரவர்கள் சித்தர்தானோ
செப்பினதைக் கேளாதார் பெரியோர்தானோ
திரும்பிக்கொள் மனமிருக்கச் சந்தேகத்தால்
தேசத்தில் சுகிக்கறியா விருதாஞானி
திரும்பிக்கொள் உலகருமே ஓடிப்போவார்
தேசத்தில் ஞானபரி பாஷையென்பார்
திரும்பிக்கொள் ளுலகத்தோர் கேட்டதற்குச்
சிவபூசை செய்ததுபோற் புலம்புவரே.
[66]

இப்படிப் பட்ட பொய் ஞானிகளை "விருதா" ஞானி என்று கேலி செய்கிறார். (சித்தர்களின் மொழி நடை பேச்சுத் தமிழை ஒத்து இருப்பது ஒரு அழகு). இவர்களைக் கேட்டால், "பரிபாஷை" என்பர், மெளன மொழி என்பர், சிவ பூசை முற்றும் அறிந்தது போல் புலம்புவர் என்று சாடுகிறார், காகபுஜண்டர்!

இவரது மெய்ஞானப் புரிதலாக வருவது, குண்டலினி சக்தி என்னும் கிரியா சக்தி சரியான யோக மார்க்கத்தில் ஈடுபடும் போது, சின்னஞ்சிறு கன்னியாக வெளிப்படும் என்பதுதான். இந்த கன்னியை "வாலைக் குமரி" என்றழைப்பர் சித்தர்கள். இவள் பார்ப்பதற்குத்தான் சிறியவள், ஆனால் அவள் பெற்ற அன்னையைவிட நம்மை வேண்டிக் காப்பள், வேண்டிய நல் அருள் தருவள். அந்த சுகானுபவத்தை சொல்ல வார்த்தை இல்லை என்கிறார் காகபுஜண்டர்:

உச்சிமேல் கைகாட்டும் பொங்கிச்சாயும்
உறுமுகிடாய் திருகுகொம்பு போலத்தானே
எச்சியே தான்விசிறும் உச்சிமூக்கால்
யிடதுகையைப் பத்தியவள் எதிர்ற்பாள்காண்
குச்சியே முண்டலித்தா யதனில் நிற்பாள்
கொடுங்குமரி வர்ணமதை யென்னசொல்வேன்
பச்சியே கேட்டதெல்லா மிந்தாவென்பாள்
பார்க்கவே கன்னிசிறு ரூபமாமே.
[147].


ரூபமே நாமமே ரூபாரூபம்
நுவலுகிறேன் வாலையென்றும் வெளியேயென்றும்
நாமமே கன்னியென்றும் மந்திரமென்றும்
நவிலுஞ்சொல் மொழியென்றும் கற்பமென்றும்
காமமே யிச்சையென்று மனதேயென்றும்
கண்டவர்கள் சத்திசிவ மாய்கையென்றும்
நாமமே வாசிபர தேசிபிர்மம்
நாடியுதித் தொடுங்குமிட மறிந்துபாரே.
148.


சித்தர்கள் கண்ட இந்த அனுபவம்தான் துர்க்கையை "சின்னஞ்சிறு பெண் போலே, சிற்றாடை உடையுடுத்தி, சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீதுர்க்கை" யாக அடியார்களை வழி பட வைத்துள்ளது என்று சொல்லலாம்.

சரி, ஒரு ஆணுக்கு இந்த அனுபவம் வரும் போது "வாலைக் குமரியாக" உருவகப்படுத்த முடிகிறது, ஆனால் அதையே ஒரு பெண் பார்வையில் பார்க்கும் போது?

சின்னஞ் சிறு பாலகிருஷ்ணன் ஞாபகம் வரவில்லை? அதுதான் ரகஸ்யம்!

கண்ணன்தான் அந்த குண்டலினி! அவன்தான் அந்த கிரியா சக்தி. அவனது ஆனந்த சயனம் எதைக் காட்டுகிறது? அந்த ஐந்து தலை ஆதிசேஷன் எதைக் காட்டுகிறது? குண்டலினியை வசப்படுத்தி வைத்திருக்கும் ஆனந்த பத்மனாபனைத்தானே?சித்தர் வழியில் வந்து கண்ணனை வழிபடும் பாரதியின் கவிதையில் அது வெளிவராமல் இருக்குமோ?

"கோலக் குயிலோசை-உனது
குரலினிமையடீ!
வாலைக்குமரியடீ-கண்ணம்மா!
மருவக்காதல் கொண்டேன்!"

பாரதியின் மிகப் பிரபலமான "சின்னஞ் சிறு கிளி" வேறு யார்? அது போகட்டும், காகபுஜண்டரும் கண்ணனை மறந்துவிடவில்லை!

காணலா மெத்தனையோ கோடாகோடி
கண்ணுக்குள் ளேதெரியுங் கிருஷ்ணனைப்போல்
தோணலா மேதிர்ற்கும் பாவனைபோல்
துயரெல்லா மாற்றிவிடுஞ் சுழினைவாசல்
வீணல்லால் மற்றொன்றிற் காண்பதுண்டோ
மிஞ்சினவர் சொற்கேட்ட வித்தைபோல
கால்லா வில்லெறிந்த வீரன்போல
நாமறியத் தன்மைவிட்டு நாடினாலே [218]

கண்ணன் கண்ணுக்குள்ளே உள்ளான் என்று தெளிவாகச் சொல்லி விடுகிறார். பிறகென்ன, ஆண்டாள் கண்ணன் நினைவாகவே இருந்து,

"கண்ணன் என்னும் கருந்தெய்வம்
காட்சி பழகிக் கிடப்பேனை"
(நாச்சியார் திருமொழி)


என்று சொல்வதில் தவறுண்டோ? பாரதி கண்ட "கரும் பெண்மை அழகும்", ஆண்டாள் கண்ட "கருந்தெய்வமும்" ஒன்றுதானோ?

குண்டலினி சக்தியை மாயா சக்தி என்று சொல்வதுண்டு. அது கன்னியாக வந்து மாயம் செய்யும் சக்தி. மிக கவனமாக கையாளப் படவேண்டிய சக்தி. இதை காகபுஜண்டர் பின்வரும் பாடலில் எச்சரிக்கிறார்:

மார்க்கம் போல் நேர்வழியே குருக்குமார்க்கம்
வாய்வழியே தான்வந்து வாசியேறும்
தீர்க்கம்போற் செப்பிவிடும் வாசிவாசி
செயவாசி கூறிவிடும் வாசிபாசை
கார்ப்பதுபோற் சொல்லிவைக்குந் தனக்குமுன்னால்
கண்டுகொள்ளும் பின்னாலே துடர்ந்துசெல்லும்
சேர்ப்பதுபோற் சொல்லிவைக்கும் பொருந்திடாதே
தீண்டாதே நீயிருந்து ஒடுங்கில்லே
[62]


"பெற்ற தாயைப்போல கூட இருந்து உன்னை தவத்தில் மேலேற்றும் அதேசமயம் பருவப்பெண்ணாகி அழகு சொரூபியாகி உன்னை மயக்க பார்க்கும். உஷாராய் இருந்து அவளை தாயாய் போற்றி உணர்வை அறிவில் ஒடுக்கி தனித்து நிற்பாயாக." என்று விளக்கம் தருகிறார் தர்மலிங்க சுவாமிகள்.

மகா கவி பாரதி இதைத்தான் பின்வரும் பாடலில் சுட்டிக் காட்டுகிறார்:

"பின்னோர் இராவினிலே கரும் பெண்மை அழகொன்று வந்தது கண்டு
கன்னி வடிவமென்றே களி கண்டு சற்றே அருகே சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா! இவள் ஆதி பரா சக்தி தேவியடா!
இவள் இன்னருள் வேண்டுமடா! பின்னர் யாவும் உலகில் வசப்பட்டு போகுமடா!"


காகபுஜண்டரும், பாரதியும் சுட்டுவது ஒன்றுதான். கவனம்! பூரண சித்தியாகிய சிவஞானம் கிடைக்கும் முன் இந்த மாதிரி சித்து விளையாட்டுக்கள் காட்டி திசை திருப்ப பார்ப்பள், அந்த இனிய நேரத்திலும் நமது கவனம் முழு சித்தி அடைவதில்தான் இருக்க வேண்டுமே தவிர சின்ன ஆசைகளில் சிதறி விடக்கூடாது என்பதுதான்.

இதே பின் புலத்தில் நம்மாழ்வார், தன்னை பாராங்குச நாயகியாக பாவித்து செய்வித்த பாசுரங்களைப் பார்த்தாலொரு அழகான உண்மை புலப்படும். கண்ணனும் பலவித லீலைகள் செய்து இவரது கவனத்தை திருப்புகிறான் ஆனால் நம் நம்மாழ்வாரா அதற்கெல்லாம் மசிவார்? என்ன சொல்கிறார் பாருங்கள்:

"மன்னுடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன்; இனியது
கொண்டு செய்வதேன்?
என்னுடைய பந்தும், கழலும் தந்து போகு நம்பீ!"


(திருவாய் மொழி 6.2.1)

மேலும், "உன் மாயங்கள் மேலை வானவரும் அறியார்; இனியெம் பரமே!" என்றும் சொல்கிறார்.

அதாவது, இந்த குண்டலினி சக்தியாகிய வாலை அம்பிகை செய்யும் மாயங்களை வானோர்கள் கூட அறிய மாட்டார், ஆனால் நான் அறிவேன். அதற்கு நான் மயங்க மாட்டேன், அதனால் என் பந்தும், கழலும் தந்து போகு நம்பீ! என்று சொல்கிறார். ஒரு திட யோகிக்கு இருக்க வேண்டிய வைராக்கியத்தை வெளிப்படுத்தும் வரிகள் இவை. அந்த திடம் இல்லையெனில் வைகுந்தம் எங்கே? கைலாசம்தான் எங்கே?

அதனால்தான் சங்கப் பாடல்களில் முல்லைத் தெய்வமாகிய கண்ணனை "மாயோன்" என்றும், பெண் தெய்வமாகிய தேவியை "மாயோள்" என்றும் அழைத்தனர்.

சைவத்தில் பெண் யோக முத்திரையாக இருக்கிறாள், வைணவத்தில் பெண்ணின் பார்வையில் அதுவே, ஆண் வடிவில் குறியீடாக உள்ளது. எவ்வளவு அழகான சீர்மைத்தல் (complement)!

உண்மையில் சித்தர்கள் பேசும் சூரியகலையும், சந்திர கலையும் வைணவ, சைவ நெறிகள்தான். அவை நம் இரு கண்கள்.

மடல் 065 - மானிடரைப் பாடாது மாதவனை ஏத்துதல்

Date of publication: Wed, 15 Dec 1999 15:09:30 +0100அகத்தியர் மன்றத்தில் ஒரு கேள்வி எழுந்துள்ளது. மானிடர் தன்னை மாதவன் என்னும் போது மானிடரைப் பாடுவதா அல்லது மாதவனைப் பாடுவதா? என்று.


இந்தக் கேள்விக்குரியவர் பலரால் இன்று வழிபடப் படும் சத்திய சாயிபாபா. இவரை பகவான் சத்தியசாயி என்றும், இறைவனின் திருஅவதாரமாக வந்துள்ளார் என்றும் பல அன்பர்கள் வழிபடுகின்றனர். இவர் செய்யும் சித்துகளைப் பற்றிய ஆங்கில மற்றும் தமிழ் புத்தகங்கள் உள்ளன.


தமிழ் மண்ணில் கோடான கோடி சித்தர்கள் உதித்துள்ளனர். மரணமில்லாப் பெருவாழ்வு கண்டு, காட்டிய சித்தர்கள் உண்டு. யோகானந்தர் தன் புத்தகத்தில் காட்டிய படி, இரண்டு இடத்தில் ஒரே சமயத்தில் தோன்றும் சித்திகள் உடைய யோகிகள் உண்டு. தமிழ் மண்ணின் கதை கேட்டால் இன்னும் இது போல் பல்வேறு விசித்திர சித்தி கொண்ட சித்தர்கள் கதை உண்டு.


திருமழிசை ஆழ்வார் ஒரே சமயத்தில் சித்தர்கள் கூட்டத்திலும், ஆழ்வார்கள் கூட்டத்திலும் உள்ளார். இதற்கான காரணத்தை ஒரு ஐதீகம் விளக்குகிறது.


ஒருமுறை திருமழிசை நிஷ்டை கலைந்து அமர்ந்திருக்கும் போது ககன மார்க்கமாக வந்த ஒரு சித்தர் இவரைக் கண்டு பல சித்திகள் பற்றி பேசினாராம். இவருக்கும் ஆர்வமிருந்தால் சில சித்திகளைச் சொல்லித் தருவதாகச் சொன்னாராம். திருமழிசை சிரித்துக் கொண்டு தனது காதைக் குடைந்து கொஞ்சம் குரும்பை எடுத்துக் காட்டி, மாதவன் நாமம் முன்னால் உன் சித்துகள் இந்தக் குரும்பைக்குச் சமானம் என்று சொன்னாராம்.


இது சுவாரசியமான கதை. தமிழக சித்தர்களையும், மேலை தேசத்து Alchemists களையும் ஒப்பு நோக்க முடியும். மேலைத் தேசத்து ஆய்வு எப்படி இரும்பை பொன்னாக்குவது என்பதில் கவனம் செலுத்தியது. அதன் விளைவுதான் நவீன வேதியியல் என்று அறிவியல் சரித்திரம் கூறுகிறது. இந்த ரசவாதிகள் சரித்திரத்தில் முக்கிய பங்கை அளித்துள்ளனர். அவர்கள் இரும்பை தங்கமாக மாற்றினார்களோ இல்லையோ,ஆனால் ஒவ்வொரு உலோகத்தின் மூலக்கூறு சேர்க்கை பற்றிய நவீன ஆய்விற்கு வித்திட்டுள்ளார்கள். அந்த அளவில் பாராட்டப் பட வேண்டியவர்கள்தான்.


இந்திய ரசவாதம் வேறொரு தடத்தில் சென்று விட்டது. வழக்கம் போல் இந்திய ஆய்வு உளவியல் நோக்கில் போய், அதற்கு மேலும் சென்று மாயும் தேகத்தை நிரந்தரமாக்கும் மார்க்கத்தில் சென்று விட்டது. இதைக் காணும் போது உலோக மாற்றும் ரசவாதம் சிறுபிள்ளை விளையாட்டு என்று தோன்றும். இது ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது, கலிபோர்னியாவில் யோகானந்தரால். அவர் இறந்த பின்னும் அவர் உடல் ஒரு மாதம் மட்டும் அழுகாமல் வாழ்ந்து வந்ததை மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர். அறிவியல் புதின (Science Fiction) எழுத்தாளர் ஆர்தர் கிளார்க் "வினோத உலகம்" என்ற புத்தகத்தில் உலகின் மாபெரும் அதிசயம், எப்படி? யோகிகள் கற்பூரம் காற்றில் கரைவது போல் தங்களது மேனியை கரைத்துக் கொள்கின்றனர் என்று வியக்கிறார்.


இத்தனை அதிசயத்தக்கதாக இருந்தாலும் இச்செயல்கள் இறைவனின் வல்லமைக்கு ஒப்பாகாது என்று சொல்லுகிறார் திருமழிசை. அவரே சித்தராக இருந்து கொண்டு சொல்வதன் காரணம் இரும்பைப் பொன்னாக மாற்றுவதோ, மாயும் மேனியை அரூபமாக மாற்றுவதோ ஒரு "கலை"தான். ஆனால் உள் மன அகங்காரம் முழுமையையாய் கரைந்து இறைவனின் கருணையில் பக்திக் கண்ணீர் சிந்துவது இதையெல்லாம் விட மேல் என்று சொல்லும் போது சித்தர் ஆழ்வார் ஆகி விடுகிறார்.


பெளத்த உலகில் இன்னொரு கதை உண்டு. இதை ஈழ எழுத்தாளர் தர்முசிவராம் "அங்குலிமாலா" என்றொரு சொல்லோவியமாக படைத்துள்ளார். கதை இதுதான், ஆயிரம் பேருடைய சுண்டுவிரல்களைச் சேர்த்து மாலையாகப் போட்டால் அளப்பரிய சக்தி வரும் என்று நம்பி ஒருவன் 999 பேருடைய சுண்டு விரல்களை பதம் பார்த்து விட்டான். அவன் வழியில் 1000வது ஆளாக நமது சித்தார்த்த, கெளதம புத்தர் வந்து சேர்ந்தார். அவன் சுண்டு விரல் கேட்டான். கருணை வடிவான புத்தர் தருவதாக ஒத்துக் கொண்டார். ஆனால் தவறான பாதையில் இருக்கும் இவனை எப்படியாவது "மடை" மாற்ற வேண்டுமென்று விரும்பினார். எனவே, அவனை அழைத்து, "அந்த மரத்திலிருந்து ஒரு இலை பறித்து வா!" என்றார். அவனும் இலை பறித்துக் கொடுத்தால் சுண்டு விரல் கிடைக்கும் என்ற ஆசையில் இலை பறித்துக் கொடுத்தான். சிரித்துக் கொண்டே புத்தர், "அதை மீண்டும் மரத்தில் சேர்த்து விடு" என்றார். பறித்த இலையை ஒட்டவைக்க முடியவில்லை அவனால். அழிப்பது எளிது. உருவாக்குவது கடினம். எத்தனையோ ஆய்வுகள் செய்தாலும் நம்மால் ஒரு உயிரை இன்றளவும் உருவாக்க முடியவில்லை. ஒன்றிலிருந்துதான் ஒன்று வர முடியும். ஒன்றுமே இல்லாத நிலையிலிருந்து ஒன்றை உருவாக்க முடியாது. இறைமை என்பது ஒன்றுமில்லாத, "பாழ்" நிலையிலிருந்து இந்த அண்ட, சராசரங்களை உருவாக்கி வைத்துள்ளது.


இதை அப்படி இரசித்து அனுபவிக்க வேண்டுமென்று நம்மாழ்வார் சொல்லித் தருகிறார்:


நீராய், நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்களிரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண் சங்கேந்திக் கொடியேன் பால்
வாராய் ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே
(தி.வா.மொ. 6.9.1)


இத்தனையுமாய் உள்ள பெருந்திரு நம்மை அனுகிரகிக்க வரும்படி வேண்டி மகிழ்தலில் உள்ள இன்பம் தனி. நம்மாழ்வார் போன்ற ஞானிகள் தங்களை "கொடியேன்" என்று சொன்னால், நித்தம் பல பாவம் என்று வாழும் சாதாரணனின் நிலை என்ன? அப்படி இருந்தாலும் அவனுக்கும் எளியனாய் இறைவன் வரும் போதுதான் அவனது மகிமை புலப்படுகிறது. "அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே" என்று இதனால்தான் சொல்வது. அன்பு என்பது இரண்டாக இருக்கும் போது வழிந்தோட வழி உண்டு. இறைமை ஒன்றாக இருந்து விட்டால் இந்த அன்புப் பரிமாற்றம் இல்லாமல் போய் விடும். இறைவனும், அவனை பக்தி செய்ய பக்தனும் இருக்கும் போதுதான் வாழ்வில் அன்பு என்ற ஜூவ ஓட்டம் நடைபெறுகிறது. இதை உணர்துவதுதான் ஆழ்வார்களின் அருளிச் செயல்கள். எனக்கு அது தெரியும், இது தெரியும் என்று காட்டுவதில் பெருமை உண்டோ?


மனிதன் தன்னை மாதவனாக நினைப்பதற்கு காரணம் எது? இறைவன் மனித உடலிலும் வியாபித்து இருப்பதால்தான். அறிவியல் சொல்கிறது நாமெல்லோரும் அந்த சூரியக் குழந்தைகள் என்று. அதாவது சூரியன் என்று கோள் உருவாகும் காலத்தில் வெடித்து, சிதறிய மற்ற கோள்களில் ஒன்றுதான் பூமி. பூமியிலிருந்துதான் உயிரின் தோற்றம் நடைபெறுகிறது. எனவே நாம் பூமி புத்திரர்/ரிகள். ஒருவகையில் சூரியன் நமக்கு தாத்தா உறவு. சூரியனின் பேரப் பிள்ளைகள் என்பதற்காக நாம் சூரியன் என்று அதனிடம் சென்றால் பொசுங்கி பஸ்பமாகிவிடுவோம். சூரியன், சூரியன்தான், நாம், நாம்தான். இப்போது நம்மாழ்வாரின் இந்த பாசுரத்தை வாசியுங்கள். அர்த்தம் புரியும்:


தானேயாகி நிறைந்தெல்லா   
உலகும் உயிரும் தானேயாய்
தானேயானேன் பானாகித்
தன்னைத்தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே
அமுதே திருமாலிருஞ்சோலை
கோனேயாகி நின்றொழிந்தான்
என்னை முற்றும் உயிருண்டே.
(தி.வா.மொ. 10.7.2)

தன்னைத் தானே துதித்து என்ற வார்த்தை முக்கியம். சத்தியசாயிபா சொல்லும் வார்த்தை "நான் கடவுள் என்பதை நான் அறிகிறேன்,ஆனால் நீங்கள் அறிவதில்லை" என்று. நம்மாழ்வாரும்தான் இதைச் சொல்கிறார். ஆனால் அவரைக் கேசவன் என்று கொண்டாடுவதில்லையே. இயேசு நாதரிடம் சீடர்கள் கேட்டனராம், "பிதாவின் இராச்சியம் பூமியில் நிலைப்படும் என்று சொல்கிறார்களே, அது எப்போது நடக்கும்?" என்று. அதற்கு இயேசு சொன்னாராம், "பிதாவின் இராச்சியம் நடந்து கொண்டுதான் உள்ளது, அதைக் காணும் திறன் அற்று உள்ளீர்கள்" என்று. அதுபோல் இறைவனின் இராச்சியம் நம் கண்ணுக்குத் தெரியாமல் மறைப்பது என்ன? யோசிக்க வேண்டும்.


"அகம் பிரம்மாஸ்மி" என்று சொன்னால் அதன் பொருளை உணரத் தலைப்பட வேண்டும். அதை விட்டு சொன்னவரை வழிபடத் தொடங்கினால் நம் புத்தி எங்கே போச்சு? சாயி பாபா சீடர்களைப் பொறுத்தவரை "மடை மாற்றம்" தேவை. உலகு வந்ததிலிருந்து எத்தனையோ அவதாரங்கள் வந்தாகிவிட்டது, எத்தனையோ மகான்களும், தேவ தூதர்களும் வந்தாகிவிட்டது. அந்தந்தக் காலத்தின் தேவைக் கேற்றவாறு அவர்களின் பணி இருந்தது. இன்னும் பணி தேவைப் படும் அளவில் உலகில் அறியாமை மண்டிக் கிடக்கிறது. அவர்கள் செய்யும் பணிகள் முக்கியம். கல்விச் சாலைகள் முக்கியம், மருத்துவ நிலையங்கள் முக்கியம். பாரதி சொல்லுவான் ஆயிரம் கோடி புண்ணியத்தை விட மேலானது ஆங்கோர் எழைக்கு எழுத்தறிவித்தல் என்று. அந்தப் பணியைச் செய்வோரை போற்ற வேண்டும்.

கரை படிந்த கைகளில் வரும் பணம் என்று தூற்றுதல் தகுமோ? திருப்பதி உண்டியலில் பக்தனின் பணமும் விழுகிறது, திருடனின் பணமும் விழுகிறது. அதற்காக பரந்தாமனை பழிக்க முடியுமா? திருப்பதி கோயில் வருமானத்தில் செய்யப்படும் நல்ல காரியங்களைப் பாராட்ட வேண்டும். இறைவனின் பெயரால் ஒரு சங்கத்தையோ, ஒரு கோயில் என்று நிருவாக/நிறுவனத்தையோ ஏற்படுத்தும் போது ஊழல் அழைக்காமலே வந்து சேர்கிறது. அது மனிதப் பிழை. அதை மனிதன்தான் சீரிய சிந்தனைகள் மூலம் திருத்தி கொள்ள வேண்டும். சாயிபாபா தானே கடவுள் என்று சொன்னாலும் கேட்பவன் புத்தி எங்கே போகிறது? நமக்கு எதற்காக சுயஅறிவு உள்ளது?


எத்துணை சீர்மை கொண்டது நமது பாரம்பரியம். அதை கண்ணுற்றால் எவர் சொல்வதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரியாதோ?


"எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு" என்பதல்லவோ வள்ளுவம். மேலும், உண்மையான பக்தனுக்கு- அது சிவ பக்தனாக இருந்தாலும் சரி, திருமால் பக்தனாக இருந்தாலும் சரி மற்றவர் மேல் காழ்ப்புணர்ச்சி கொள்ளுதல் அவசியமற்ற ஒன்று.


ஏனெனில் நம் சம்பிரதாயப் படி, இராவணனும், உலகை தன் அடிமைக்கு கீழ் கொண்டு வந்த மாபலிச் சக்கிரவர்த்தியும் அடிப்படையில் பக்தர்கள்தான். அதனால்தான், யாரும் காண முடியாத இறைவனின் திருவடி பாக்கியம் அவர்களுக்கு கிடைத்தது. பாரதத்தில் கடைசியாக தர்மரும், ஒரு நாயும் சொர்க்கம் போகிறது, போய் பார்த்தால் துரியோதனன் இவருக்கு முன்னால் உட்கார்ந்து இருக்கிறான். எல்லாம் ஒரு பெரிய நாடகம். அதில் வில்லனாக நடிப்பவன் உண்மையில் வில்லன் அல்ல. படையப்பா படம் பார்த்து விட்டு ரம்யா கிருஷ்ணனை தாக்குவது எவ்வளவு பேதமை? வில்லன் எம்.என். நம்பியார் பெரிய பக்தர், உண்மையில்.! அதனால் நமக்கு சாயிபாபா பக்தர்களிடம் எந்த காழ்ப்புணர்ச்சியும் தேவையில்லை. நாம் செய்ய வேண்டியது எல்லாம் அவர்களை "மடை" மாற்றம் செய்வதுதான். எதை, எதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று காட்டவேண்டியது.


இதில் ரொம்ப கவனம் வேண்டும். ஆனானப் பட்ட நம்மாழ்வாரே இந்த விஷயத்தில் மிக கவனமாக உள்ளார். அவர் சொல் கேட்போம்:


சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ?
என்னாவில் இன்கவி யானொரு வர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்து
என்னானை என்னப்பன் எம்பெருமானுளனாகவே.

மடல் 066: அக்கம்மா தேவியும், ஆண்டாளும்

First published on Fri, 17 Dec 1999 18:26:38 +0200

இங்கு பனி பெய்து மலையெல்லாம் மூடிக் கிடக்கிறது. குளம், குட்டைகள் குளிர்ந்து உறைந்து கிடக்கின்றன. பெரும்பாலான வன விலங்குகள் தெற்கு நோக்கி வலசை போய்விட்டன. காட்டுக் கரடிகள் புதரில் ஒளிந்து பனிக்கால உறக்கத்தில் ஆழ்ந்து விட்டன.மரங்கள் இலை உதிர்த்து மெளனித்து விட்டன. மனிதன் தன் சிந்தனா சக்தியால் இயற்கை நியதியை வென்று தனித்து இருக்கிறான். அவன் உள்ளத்தில் அமைதியை நிலை நாட்ட பனிக்காலம் பார்த்து இறைவன் ஜனிக்கிறான். சூழல் வறண்டு போய் வெறுப்புத் தட்டாமல் இருக்க, தேவதூதன் பிறக்கிறான் பனிக்காலத்தில்! "மாதங்களில்நான் மார்கழி" என்று சொல்லி தனிமைப் பட்டு போயிருக்கும் மனித மனத்தை தியானத்தில் திருப்புகிறான் கார் குழல் வண்ணன்.

பெரும்பாலான நோன்புகள் ஆண்களின் சாதிப்புத் திறனை வெளிக் கொணரும் பொழுதுகள் போல் நிர்மாணிக்கப் பட்டிருக்கின்றன! பண்டைய சமணர்கள் பெண்களுக்கு முக்தியே கிடையாது என்று சொல்லி விட்டனர். அவர்கள் ஆணாகப் பிறந்து நோன்பிருந்துதான் வீடுபேறு அடைய வேண்டும் என்கிறது சமணம். கருணா மூர்த்தியான சித்தார்த்த கெளதம புத்தர் கூட சங்கத்தில் பெண்களைச் சேர்க்க தயங்குகிறார். அவரது பிரதம சீடர் ஆனந்தரின் வேண்டுகோளுக்கிணங்க சம்மதிக்கிறார், "பெண்களிடம் கவனமாக இருக்க வேண்டும்" என்ற மேற் குறிப்புடன்! பெண்களைக் கண்டு பயந்து போய் சித்தர்களான பேர்கள் உண்டு சரித்திரத்தில் :-) ஆண்கள் பயப்படுவது, உண்மையில் பெண்களைக் கண்டு அல்ல. தன்னுள் பீரிட்டு எழும் பாலியல் இச்சைகளை கட்டும் திறனின்றித் தவிக்கும் தவிப்பின் வெளிப்பாடே பெண்களின் மீதான அத்தனை கட்டுப் பாடுகளும். பெண் ஆன்மீகத்திற்கு தடையானவள் என்று உருவகப் படுத்தப் படடிருப்பதின் உளவியல் காரணம் இதுதான்.

மேலும், பெண்களுக்கு இயற்கை பல திறன்களை வழங்கியுள்ளது. அதில் முதலாவது,ஒரு உயிரை உலகிற்கு கொண்டு வருவது. பத்து மாதம் தன் உயிருடனும், உடலுடனும் அணைத்து ஒரு உயிரைக் கொண்டு வந்து காப்பது. இது இறைவனின் தன்மைகளுக்கு ஒப்பான ஒரு திறனாகும். பெரும்பாலான ஆண்களால் இதை உட்கொள்ள முடிவதில்லை.இந்த தாழ்வு மனப் பான்மையின் வெளிப்பாடாகவும் பெண்களின் மீதான ஆன்மீகக்கட்டுப்பாடுகள் எழுந்திருக்கலாம்.

குண்டலினி என்று சொல்லப்படும் உயிர் சக்தி வெளிப்படும் பொழுதுகளை வருணிக்கும் காகபுஜண்டர் "அது பிரசவ வலிக்கு ஒக்கும்" என்கிறார். இந்தப் பிரசவத்தை தாங்கியவர்கள் அதற்கு மேல் பெண்களைத் திட்டுவதில்லை :-) பட்டிணத்தாரின் பிற்காலப் பாடல்களில்பெண்கள் சரியாக பார்க்கப் படுகின்றனர்.

இத்தகைய ஒரு பின் புலத்தில்தான் நாம் ஆன்மீகத்தில் பெண்களைக் காண வேண்டியுள்ளது. தமிழின் நீண்ட ஆன்மீக/இலக்கிய சரித்திரத்தில் குறிப்பிடப்படும் பெண்கள் ஒருசிலரே! ஒளவையார் பெண் என்றாலும் அவரது பல பாடல்களில் அவர் ஆணின் பார்வை கொண்டிருப்பது விளங்கும் (யார் வேண்டுமானாலும் ஒளவையார் என்று பெயர் வைத்துக்கொண்டு எழுதலாமோ என்னவோ?). களப்பிரர் காலம் என்று ஒன்று. அப்போது பெண்களின் நிலை எவ்வளவு மோசம் என்று தெரியவில்லை. இந்த கடுமையான சூழல்தான் முதல் பெண் ஆன்மீகவாதியை தமிழ் மண்ணிற்குத் தருகிறது.

அவர்தான், காரைக்கால் அம்மையார். ஆழ் மனதில் சிவனின் மீது காதல் கொண்டு,புற உலகின் நீதிக்கிணங்க, ஒரு சமணரை மணந்து "சாதாரண தாம்பத்தியம்" நடத்திபின் இறைவனின் திருவிளையாடலால் முழுத் துறவியாகிறார். அந்தக் காலக்கட்டத்தின் நெருக்கமும், சமூக இடர்பாடுகளும், ஆளும் ஆண் சமூகத்திற்கு முன் நிற்கும் பூங்கொடி போன்ற இவர் தன்னை "காரைக்கால் பேய்" என்று சொல்வதிலிருந்து தெரிகிறது. ஆண்களின் காமக் கண்களிலிருந்து தன்னைத் தனிமைப் படுத்தி, நிறுத்தி ஆன்மீகத்திற்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள அவர் செய்திருக்கும் முயற்சிகள் கண்ணீர் சிந்த வைப்பவை. தனது மார்பகங்களைக் களைந்தெறிந்து, எலும்பும் தோலுமாய் நின்று பார்ப்போர் பேய் என்று அலற்றும் படி வாழ்ந்திருக்கிறார். எப்போதுமே, விடுதலை கோரும் முதல் மனிதன் பலியாகி விடுவது சரித்திர உண்மை. இவர் அன்று செய்த புரட்சி, பின்னால் வரும் செல்வப் பெண்ணான ஆண்டாளை "மானிடர்க்கென்று பேச்சுப் படில் வாழகில்லேன்" என்று தைர்யமாகச் சொல்ல வைத்தது என்று சொன்னால் மிகையாகாது. அதே போல் காரைக்கால் அம்மையாரின் அகமன வெளிப்பாடுகளும் அவர் வாழ்ந்த காலத்தின் நெருக்கத்தை வெளிப்படுத்துவதாய் உள்ளது. பின்னால் வந்த ஆண்டாள் அனுபவித்தது போல் இறைவனுக்கு மாலையிட்டு, சூடிக் கொடுத்து, "கண்ணன் என்னும் கருந்தெய்வத்தின் காட்சிபழகிக் கிடக்கும்" சூழல் அல்ல காரைக்கால் அம்மை வாழ்ந்த காலம்.
பாரதி சொல்லுவது போல், "பேய்கள் அரசாளும் போது சாத்திரங்கள் பிணந்தின்னத்தானே வேண்டும்". அதே போல், காரைக்கால் அம்மையார் இறைவனின் மிகக் கடுமையான,ருத்ர தா ண்டவத்தை, ஊழிக் கூத்தை, பேய்களுடனும், பூத கணங்களுடனும் ஒன்று மன்றாய் மயானத்தில் இருந்து கண்டு களிக்கிறார். பெண்கள் செல்லும் இடமா மயானம்? ஆனால் அந்த கால கட்டம் அதை நிர்பந்தித்து இருக்கிறது.பெண்களுக்கு வீடு பேறு இல்லை என்று சொல்லி கடுந்தவம் நெறியாய் இருந்த சமண கால கட்டத்தில் உதித்த காரைக்கால் அம்மையாரின் ஆன்மீக வெளிப்பாட்டிலும் இந்த தவக் கனல் தெறிக்கிறது.

ஆனால், ஆண்டாள், அக்கம்மா தேவிகள் தோன்றிய காலத்திற்குள் பெண்கள் ஆன்மீகத்தில் நுழையக் கற்றுக் கொண்டு விட்டனர். அதிலும் ஆண்டாள் காலத்தில் "வாரணம் ஆயிரம் வலம் வர" கோலாகலமாக இறைவன் வந்து பெண்களுக்கு வீடு பேறு வழங்கும் நிலைக்கு சமூகம் முன்னேறி விட்டது. இவர்கள் காரைக்கால்அம்மைக்கு மிகவும் கடன் பட்டு இருக்கிறார்கள்.

ஆண்டாளை நமக்குத் தெரியும். ஆனால் அக்கம்மா தேவி யார்?
இவர் ஆண்டாளுக்குப் பின் வந்தவர் (12ம் நூற்றாண்டு). நாயன்மார்களின் சரித்திரம் அறிந்து, பெண்களும் ஆன்மீகத்தில் நுழையலாமென்றறிந்து, பசவர், அல்லமர்,சித்தராமர், சென்ன பசவண்ணா போன்ற தீவிர முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு வீர சைவக் குழுவுடன் இவர் ஆன்மீகப் பயணம் செய்கிறார். இவர் வாழ்ந்தது கர்நாடகம். இவரும் காரைக்கால் அம்மை போல் முதலில் ஒரு சமணருக்கு வாக்குப் பட்டு, பின் வெளிப்பட்டு, திகம்பர சாமியாராய் ஆன்மீகப் பயணத்தை மேற் கொள்கிறார். காரைக்கால் அம்மை செய்தது போல் இவர் தன்னை சிதைத்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லாமல் போய்விட்டது. அதற்கு மாறாக இவர், காமக் கண் கொண்டு பார்க்கும் ஆண்களுக்கு அறிவுரை கூறும் நிலை வந்து விடுகிறது. அக்கா என்று அன்பாக கர்னாடக மக்களால் விளிக்கப் படும் அக்கம்மா தேவி சொல்கிறார்:

என் அழகிய முலையும் மலரும் யெளவனமும்
காண்பதற்கு வந்தீரண்ணா!அண்ணா!
நான் பெண்ணல்ல!அண்ணா!
நான் கணிகை அல்ல!அண்ணா!
பின் ஏன் என்னைக் கண்டு கண்டு
யாரென்று கேட்டு வந்தீரண்ணா?
சென்ன மல்லிகார்ச்சுனனைத் தவிர
வேறெ பரபுருஷனின் முகமும்
எனக்குப் பிடிக்காது பாரண்ணா!


அடடா! ஜொள்ளுக் கொட்டும் ஆட்கள் எக்காலத்திலும் உண்டு போலும். ஆண்டாளின் அதிரடியைப் பாருங்கள்!அங்கைத் தலத்திடை யாழிகொண்டான்
அவன்முகத் தன்றி விழியேனென்று
செங்கச்சுக் கொண்டுகண் ணாடை பார்த்துச்
சிறுமானிடரைக் காணில்நாணும்
கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர்
கோவிந்தனுக்கில்லால் வாயில் போகா
இங்குத்தை வாழ்வை யொழியவே போய்
யமுனைக் கரைக்கென்னை யுய்திடுமின்
(நா.தி.மொ. 12.4)


பாவம் அக்கம்மா தேவி, அண்ணா! அண்ணா! என்று மரியாதையாகத் திட்டுகிறார்.நம்ம ஆண்டாள், "சிறு மானிடா!" என்று வாயாரத் திட்டுகிறாள் :-) ஆக, பெண்கள்ஆன்மீகத்திற்கு வரும் போது விழும் பெருந்தடை இந்த ஆண்களின் இச்சைக் கண்கள்தான் என்பது புலப்படுகிறது. இந்த வேட்டையைச் சமாளித்து, வெளிவந்த பின்தான் பெண்களால் ஆன்மீகத்தில் நுழையவே முடிகிறது. இந்தச் சூழல் இன்றளவும் நிலைத்திருப்பது தமிழ் ஆன்மீகத்தின் அவமானச் சின்னம். பெண்களை குடும்ப விளக்காக பார்க்கவே ஆண் சமூகம் விரும்புகிறது. குடத்தில் இட்டவிளக்காக அவள் ஆன்மீகப் பணி செய்ய வேண்டும் என்று ஆண் சமூகம் கட்டளை இடுகிறது. ஆண்களைப் போல் சரி சமமாக பெண்களால் உலாவ முடியாத படி சித்தாந்தச் சிக்கல்கள், போலிச் சம்பிரதாயங்கள், போலிப் புராணங்கள். வெளி வந்து அலுவலகம் செல்லும் பெண்களை வேசிகள் என்று கூசாமல் சொல்லும் ஆன்மீக மடங்கள்! இதற்கிடையில்தான் பெண்களின் ஆன்மீகப் பணி தொடர வேண்டியுள்ளது.

அக்கா சொல்கிறார்:

சமுத்திரத்தின் கரையில் வீட்டைக் கட்டிக் கொண்டு
நுரைக்கு அஞ்சினால் எப்படி ஐயா?
சந்தைக்குள்ளே வீடைக் கட்டிக் கொண்டு
சத்தத்திற்கு நாணினால் எப்படி ஐயா?

இத்தனை தடைகள் இருந்தாலும் அவைகளை சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டும்என்று சொல்கிறார் அக்கா. ஆனால் ஆண்டாள் சிறுமையைக் கண்ட இடத்தில் சிறுமை என்று சொல்ல வேண்டுமென்பதை "சிறு மானிடா!" என்று விளிப்பதின் மூலம் அறிவுறுத்துகிறார். இதனால்தான் பாரதி சொன்னான் போலும்,"ரெளத்திரம் பழகு" என்று. ஆண்டாளின் குரல் உரிமைக் குரல், அக்கம்மாதேவியின் குரல் தணிந்த குரல்.

அக்கம்மா தேவிக்கும், ஆண்டாளுக்கும் வேறு விதத்திலும் பார்வைகள் வேறு படுகின்றன.அக்கம்மாதேவி ஆண்கள் விதித்த துறவற உத்தியைத்தான் வீடு பேற்றிற்கு எடுத்துக்கொள்கிறார்:

பசியெடுத்தால் பிச்சை உணவு உண்டு
தாகமெடுத்தால் அருவி, கிணறு, குளங்கள் உண்டு
உறங்குதற்கோ பாழுங் கோயிலுண்டு
சென்ன மல்லிகார்ச்சுனய்யா!
ஆத்ம நட்பிற்கு நீ எனக்குண்டு.

என்கிறார். ஆனால் ஆண்டாள், இறைவன் தன் உரிமை என்கிறாள்! அக்கம்பக்கத்தவர் பேசினால் அது அவர்கள் பிரச்சனை என்கிறாள் (வாவ்!)நாணி யினியோர் கருமமில்லை
நாலய லாரும் அறிந்தொழிந்தார்
பாணியா தென்னை மருந்துசெய்து
பண்டுபண்டாக்க வுறுதிராகில்
மாணி யுருவா யுலகளந்த
மாயனைக் காணில் தலைமறியும்
ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில்
ஆய்ப்பாடிக்கேயென்னை யுய்த்திடுமின்.


ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை அருகே. இந்த மதுரைப் பெண்களுக்கே இந்த வம்பு,வீம்பு அதிகம்:-) மதுரை மீனாட்சி செய்யவில்லையா? சொக்கனைப்பார்க்கும் போதுதான் தலை குனியும், மூன்றாவது தனம் மறையும் இப்படி...ஆண்டாள் சொல்கிறாள், "மாயனைக் காணில் தலைமறியும்" என்று. இதனால்தானோ என்னவோ தென் தமிழகத்தின் மிக உயர்ந்த கோபுரங்கள் இவர்கள் இருவரின் கோயில்களிலும் உள்ளன. தமிழ் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்பதன் அடையாளமாக!

ஆயினும் ஒரு வித்தியாசம் உண்டு. மீனாட்சி இறைவி. ஆண்டாள் மானுடப் பெண்.இருந்தாலும் அவளின் உத்தி மிகப் பலமானது. அது பிரேம பக்தி. இதுவே வைணவத்தின் அடிக்கோடுமாகும். இவள் பக்தியைக் கண்டு இறைவன் இறங்கி வரவேண்டும்.
"இறைவன் அவதாரமாக கீழே இறங்கி வருவது, மானுடனை இறைவனின் நிலைக்கு உயர்த்துவதற்குத்தான்" என்பது வைணவத்தின் நிலைப்பாடு. இது அளிக்கும் மனோபலம்அனுபவித்துப் பார்த்தவற்குப் புரியும்.பிகு: அக்கம்மா தேவியாரின் "வசனங்கள்" "காரைக்கால் அம்மையாரும் அக்கம்மாதேவியும்"என்ற ஒப்பாய்விலிருந்து எடுத்தாளப் பட்டுள்ளன. ஆசிரியர் முனைவர்.சாந்தா.


மன்னு மதுரை தொடக்கமாக
வண்துவராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்யவேண்டித்
தாழ்குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை
இன்னிசை யால் சொன்ன செஞ்சொல்மாலை
ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே!! (ஆண்டாள்)


மடல் 067: தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அவர்க்கொரு குணம் உண்டு!

First published on : Date: Sat, 01 Jan 2000 15:22:05 +0200

அன்றொரு நாள் பல்கலைக் கழக வளாகத்தில் ஒரு சீன மாணவரின்உரையாடலைக் கேட்டும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் மிக ஆச்சர்யமாக நோன்புக்கு போகும் ஒரு பாலஸ்தீனரைப் பார்த்துக் கேட்டார். "ஏன்? இப்படி நோன்பு, அது, இதுவென்று அவஸ்தைப் படுகிறீர்கள்" என்று. அந்த நேரம் பார்த்து ஒரு இந்தியப் பெண் வந்து சேர்ந்தாள். அவளைப் பார்த்து, "நீ!சாமி குப்பிடுவாயா?" என்று கேட்டான். இயல்பாக உள்ள ஒன்றைப் பற்றி ஒருவர் ஆச்சர்யத்துடன் கேட்பதைப் பார்த்து அவள் ஆச்சர்யப் பட்டுக்கொண்டிருக்கும் போது நான் அவர்களைக் கடந்து சென்றேன்.சிலருக்கு இயல்பாக உள்ள செயல் சிலருக்கு அதிசயமாக உள்ள இந்த உலகத்தை எண்ணி வியந்தவாரே!சோவியத் நாட்டில் கூட கடவுளைப் பற்றிபேசுவது அநாகரியமாக இருந்தது ஒரு காலத்தில். சீனர்கள் தங்களுக்கு தாய்வழிச் சீதனமாய்க் கிடைத்த பெளத்த டாவோயிசம் இவைகளை துறந்து விட்டு நிர்வாணமாய் நிற்கின்றனர். ஒருகாலத்தில் உலகை ஆச்சர்யத்தில் போட்ட பிரமிடுகளின் மூதாதயர் கொண்டசமய மரபு பின்னால் வந்த கிரேக்க,ரோம,கிருத்துவ, முகம்மதிய சிந்தனைகளால் மழுங்கடிக்கப் பட்டு இன்று காணாமல் போய்விட்டது. மயன், அஸ்தகா பண்பாடுகள் கூட தங்களது சமயச் சிந்தனை மரபை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. மீதமிருந்த கொஞ்ச நஞ்சமும் ஸ்பானிய பாதிரிகளால் உருமாற்றப் பட்டு இன்றுள்ள அமெரிக்க இந்திய வம்சாவளியினர் வேர்கள் அற்று வெள்ளை அமெரிக்காவின் "குடி" மக்களாய் வாழ்கின்றனர்.
இதே காலகட்டத்தில் இந்திய உப கண்டத்தில் தோன்றிய சமய சிந்தனை மரபு ஆரிய, கிரேக்க, யூத, கிருத்துவ, முகம்மதிய சமயச் சிந்தனைகளின் பாதிப்பையும் உள்வாங்கி இன்றும் நிலைத்து நிற்கிறது. இந்த சிந்தனை மரபிற்கு "மதம்" என்று பின்னால் பெயர் கொடுக்கப் பட்டது.

ஆக, மனிதக் குரங்களிலிருந்து மானுடம் வெளிப்பட்டு புல்வெளிகளில் மேவத் தொடங்கிய காலம் தொட்டு காணக்கிடைக்கும் ஒரு சமய மரபாக இதைக் கொள்ளலாம். நான்கு கால் விலங்கு நிலையிலிருந்து "நட்டக் குத்தாக" மனிதன் நடக்கத் தொடங்கியகாலக் கட்டம்தான், சமயச் சிந்தனைகளின் பிறப்பிடம் என்று சொன்னால் தவறில்லை. மிருகங்கள் தங்களுக்குள் மதங்கள் தோற்றுவித்து, தொழுகை நடத்துவதாக ஆய்வுகள் இல்லை. ஆக சமயம் என்பது மனித பரிணாமத்துடன் இயல்பாக வளர்ந்துள்ள ஒரு இயக்கம். மனிதன் சுய பிரக்ஞை கொண்ட காலத்தில் எழுந்தகேள்விதான், "தான் யார், தன்னைச் சுற்றியுள்ள இப்பிரபஞ்சத்திற்குமுள்ள உறவுஎன்ன?" போன்ற ஆதி கேள்விகள்தான் சமயத்தின் தோற்றுவாய்.ஒன்றிலிருந்துதான் ஒன்று உருவாக முடியும். ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து ஒன்றுமே தோன்ற வாய்ப்பில்லை. அப்படியெனில் தன்னையும், தன்னைச் சுற்றியுள்ள இப்பிரபஞ்சத்திற்கும் தோற்றுவாயாக "ஒன்று" உள்ளது என்ற புரிதலின் விவரிப்புகளே நமது வேதம் மற்றும் தமிழ் மறைகள். இந்த ஆதி தொடர்பின் ஆய்வுகளே உபநிடதங்கள்,வேதாந்தங்கள், சித்தாந்தங்கள், தேவாரங்கள், திவ்யப் பிரபந்தங்கள். வாக்கினால், மனத்தினால், தொடமுடியாத ஒன்றை வாக்கு, மனம் கொண்ட மனித வாழ்விற்குள் உட்புக வைத்து, தக்க வைத்துக் கொள்ளும் மனித யத்தனிப்பே நம் மறைகள் என்றுசொன்னால் தப்பில்லை.

தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த்
தயங்கொளிசேர் மூவுலகும் தானாய்வானாய்
தன்னாலே தன்னுருவில் மூர்த்தி மூன்றாய்த்
தானாயன் ஆயினன் சரணென்றுய்வீர்
- பெ.தி.மொ.6.6


என்று சொல்கிறார் திருமங்கை ஆழ்வார். அரூபமாக இருந்தும், உருவம் எடுக்கும் அதன்பாங்கை விளக்கும் வண்ணம் "தன்னாலே தன்னுருவம் கொள்ளும்" என்று சொல்கிறார். அந்த ஒன்றுதான் இந்திய சமய மூம்மூர்த்திகளான சிவ, விஷ்ணு, பிரம்மாவாகத் தன்னை உருவாக்கிக் கொள்கிறது என்கிறார்.

அந்த "ஒன்றின்" தன்மைகளை மெய்யுணர்வுடைய எவரும் உணர முடியும். ஒரு நாள் சடகோபன் அடிப்பொடி என்பவர் கீழ்கண்ட பாடலை வலையில் வளைய விட்டார்.

ஆற்றுடன் அசையும் படித்துறைப் பாசியாய்
காற்றுடன் இசைக்கும் கடற்கரை நாணலாய்
புனல் அலை மீதொரு ஆலிலைச் சிசுவாய்
மணல் அசை காற்றின் மந்திரப் படிகளாய்
ஆலயப் பண்ணின் அழகின் அடுக்காய்
அலைகடல் அமுதின் கடையொரு மத்தாய்
குணதிசைக் கதிரில் ஒளிர்விடும் பனியாய்
தணல் சுடும் நெருப்பின் தகனத்தின் மீட்சியாய்
அதிர்வுரும் அனைத்தின் அந்திம சாட்சியாய்
இலத்திரன் இயங்கும் மின்னணுக் கவிதையாய்
அங்கும், இங்கும், எங்கும் நான்.


(இதன் இசை வடிவம்!)

இது ஈகோவின் வெளிப்பாடு இல்லை. பிரபஞ்சத்துடன் ஒருமைப் படும் பொழுதுகளின் வெளிப்பாடு. அதனால்தான் வள்ளலார் "ஒருமையுடன் நினது திருவடி" நினைக்கவேண்டும் என்கிறார். மனிதன் பார்க்கின்ற பொருள்களுடன் ஒருமைப் படுவது,அவைகளை தன் உணர்வின் வெளிப்பாட்டிற்கு பயன்படுத்து இயல்பான ஒன்று.திருவாதவூரில் பிறந்த ஒரு மெய்ஞானி இப்படி தன் உணர்வை வெளிக் கொணர்கிறார்.

புல்லாகிப் பூடாய்
புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப்
பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்
பேயாய் கணங்களாய்
வல் அசுராகி
முனிவராய்த் தேவராய்
செல்லா அநின்ற இத்
தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும்
பிறந்து இளைத்தேன்!


இதைப் பரிணாம வளர்ச்சியின் இயற்பியல் வெளிப்பாடாகக் கட்டுடைக்கலாம். அதற்குப்பொருந்துமாறு பல நிலைகளை எடுத்துச் சொல்கிறார். ஆனால் இந்த பேய், கணங்கள்,அசுரர் என்பவையும் பரிணாம வளர்ச்சியின் கட்டங்களா? என்று கேட்டால் அதற்கு இயற்பியல் ரீதியில் பதில் இல்லை. ஆனால் பாரதி போன்ற கவிஞர்கள் இதை இயல்பான உருவக வெளிப்பாகவே பொருள் கொள்வர். நாம் ஆசையில் அல்லாடும் போது பேய் நிலை, உண்ட வீட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் போது அசுரர்கள் இப்படி.

"மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்" என்று சொல்லி வீடுற்ற நிலையில் இறைமையைக் கண்ட விதத்தையும் சொல்கிறார், "பொய்ஆயின எல்லாம் போய் அகல வந்து அருளி மெய்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே" என்று. இது ஏதோ திருக்குரானில் இருந்து எடுத்த வாசகம் போல் தோன்றலாம். ஆனால் சைவமறையிலிருந்து வரும் வாசகம் இது. வைணவத்தில் இந்த "நோக்கரிய நோக்கும், நுணுக்கரிய நுண்னுணர்வும்" இல்லையா? என்று கேட்டால், திருமங்கை ஆழ்வார் விடுவதாய் இல்லை:

மின்னுருவாய் முன்னுருவில், வேதம் நான்காய்
விளக்கொளியாய், முளைத்தெழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய், முன்னுருவில் பிணிமூப்பிலாப்
பிறப்பிலாயாய், மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்
புனலுருவாய், அனலுருவில் திகழுஞ் சோதி
தன்னுருவாய், என்னுருவில் நின்ற எந்தை
தளிர்புரையும் திருவடியென் தலைமேலவே
- திருநெடுந்தாண்டகம்


இறைமையின் தன்மைகளை தெள்ளத் தெளிவாக விளக்கும் பாசுரம் இது. திருமால் பிறப்பிலி என்றுதான் சொல்கிறார் இவர். எனவே அவதாரம் என்பதை நாம் "metaphorical" ஆகத்தான் பார்க்க வேண்டும். மேலும் அவர் மின்னுருவாகவும் உள்ளார் என்று சொல்கிறார். ஆக, திருமால் "மின்னம்பலத்திலும்" உள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். சுக முனிவர் "கடவுளே, கடவுளே யோ!" என்று கதறிக் கொண்டு போயினராம், உடனே அங்கிருந்த மலை, சுனை, மேகம், நதி, ஓடை, மரம், செடி, கொடி, மலர், பறவை, விலங்கு - என எல்லாப் பொருள்களும் "ஏன்? ஏன்?" என்று கேட்டனவாம். இதை தாயுமானவர், "அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ எங்கும் 'ஏன்?ஏன்?' என்று கேட்டனவாம்" என்று அழகாகச்சொல்கிறார்.இப்படியான மெய் ஞான புரிதல் உள்ள இந்திய சிந்தனை வட்டம் பின் ஏன் இறைவனை உருவகப் படுத்தத் தொடங்கியது? இதற்கு பல்வேறு வகையில் பதில் சொல்லலாம். ஒன்று, "கவிஞன் முற்றினால் ஞானி" என்பது பழமொழி. தமிழ் மறை தந்த ஞான சம்மந்தனாகட்டும், நம்மாழ்வராகட்டும், திருமூலராகட்டும்-இவர்கள்அடிப்படையில் தமிழ் கவிகள். நானும் பார்த்து விட்டேன் எந்தை திருமூலர் சொன்ன சொல்லை விஞ்ச வோறொருவன் இன்றுவரை வரவில்லை. அப்படி என்ன அவர் சொல்லிவிட்டார்? " என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே!" என்பதுதான் அது. "நற்றமிழை வித்தி நீ உள்ளத்தில் நீ விதைத்தாய் கற்ற மொழியாகக் கலந்து" என்று சொல்கிறார் திருமழிசை. ஆக, தமிழ்தான் முந்திக் கொண்டு நிற்கிறது. இந்த தமிழ்த் தொடர்பை உடன் ஆராய்வோம். அதற்கு முன் சொல்ல வேண்டியது என்னவெனில் "கவிஞனின் மொழிஉருவகம்" என்பதே. கவிஞனால் உருவகிக்காமல் பேசவே முடியாது. நிற்க.

இரண்டாவது, தமிழ் மண்ணிற்கு என்று சில பண்புகள் உண்டு. அவர்களுக்கென்றுசில நோக்கரிய நோக்கு உள்ளது. அதன்படி இறைவன் என்பது "உள்ளுறை உவமம் அல்லது Metaphor" என்பது. நில அமைவின் ஒட்டு மொத்த வெளிப்பாடே இறைவன் என்று கண்டனர் பழந்தமிழர். முல்லைத் தெய்வமான கண்ணனை, பூ, பூண்டில்லாத பாலை வெளியில் வைத்துப் பார்க்க தமிழ் மனம் இடம்கொடா. இது நமது விழுமியம். இதைச் சும்மா நக்கல் அடிக்க முடியாது. இது தமிழன் ஒவ்வொருவனின் பாரம்பரியம்.தமிழ் அடையாளங்களில் இதுவும் ஒன்று. முனைவர் லோகநாதன் சொல்லும்,அகம், புறம் மற்றும் உகம் என்பது நம் அடையாளம். இதைப் பற்றி கேலியாகப் பேசுவது தன் தாயின் கற்பைச் சோதிப்பதற்கு ஒப்பாகும்.

இது இருபத்தியோராம் நூற்றாண்டிலும் "தமிழ் கூறும் நல்லுலகத்தில்" காணக்கிடைக்கிறது. ஐரோப்பா, மற்றும் கானடாவில் லட்சக் கணக்கில் குடிபுகுந்துள்ளனர் ஈழத் தமிழர்கள். இவர்கள் செல்லுமிடங்களிலெல்லாம் ஆலயங்கள் அமைக்கின்றனர். ஆனால் ஒரு பெருத்த வித்தியாசத்துடன்! இவர்கள் அமைப்பது சிவாலயங்களோஅல்லது பெருமாள் கோயில்களோ அல்ல. நூற்றுக்கு 90 சதவிகிதம் இவர்கள் அமைத்திருக்கும் ஆலயங்கள் பிள்ளையார் அல்லது மாரியம்மன் (தாயார்) ஆலயங்கள்தான்.அந்த வகையில் இவை அமெரிக்க ஆலய உருவாக்கத்திலிருந்து வெகுவாகவேறுபடுகிறது. ஏன்?

ஈழத்தமிழன் அகதியாக வெளி நாட்டில் புகுகிறான். நிற்க ஓர் இடமில்லை. தனக்கென ஒரு அடையாளமில்லை. இந்த நேரத்தில் அவனுக்கு தன் தாய் மொழியும், அதன் மெத்த நல்விழுமியமான "உகமும்" துணை செய்கின்றன. தன்னைக் காக்கும் தெய்வமாக, தடைகளைக் களையும் தெய்வமாக அவன் "விக்னேஸ்வரனை" ப் பார்க்கிறான். மேலும்,தாய் மண்ணை இழந்த நிலையில் அவனுக்கு தாய்க்கு தாயாக வந்து துணை செய்யக்கூடியவளாக மாரியம்மனைப் பார்க்கிறான். இவன் அக உளைச்சலின் வெளிப்பாடே பிள்ளையார் கோயிலும், தாயார் போயில்களும். (மாரியம்மன் கோயில்கள் உருப்பெருவதற்கு முன் மாதா கோயில்களில் தாலிக் கொடியை காணிக்கை செய்யும் தமிழ்த் தாயின் அக வெளிப்பாடும் ஐரோப்பாவில் காணக் கிடைக்கிறது). இது மிக, மிக இயல்பானது. மிக, மிக தமிழ் மயமானது. தெய்வம் என்பது உள்ளுறை உவமம் என்று 2000 ஆண்டுகளுக்கு முன் கண்டு சொன்ன தொல்காப்பியனின் கூற்று இன்றளவும் மெய்ப்படுகிறதே. இதை என்ன சொல்ல?

"தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அவர்க்கொரு குணம் உண்டு"

மடல் 068: நரகும் சுவர்க்கமும்!

First published on Sat, Sat, 08 Jan 2000 21:36:06 +0200 15:22:05 +0200

இரண்டு மாதங்களுக்கு முன் இவ்வுலகம் வேறாய் இருந்தது! கருப் பச்சை போய் வெளிர் பச்சையாகி, அதுவே பின் வெளிர் மஞ்சளாகி, சிவப்பாகி, கருஞ்சிவப்பாகி, ஏதோ கருமாரியம்மனுக்கு மஞ்சள் காப்பு செய்தது போல் காடுகள் வர்ணக் களஞ்சியமாகி இலைகள் உதிர்ந்து கொட்டி..ஏதோ தவத்திற்கு முன்னேற்பாடு போல்! விழுந்த இலைகள் மண்ணோடு மண்ணாகி, மட்கி, மண் புழுவிற்கு உணவாகி, ஒரு நிலையில் பழம் இலை மண்புழுவாகி நின்றது. பனி தாங்க உடல் உறுதி தேடும் குருவிகளுக்கு தானிய உணவேது? இந்த புழுக்கள்தான் இரை. அடடா! விழுந்த பழம் இலை இப்போது வண்ணப் பறவையாகி நிற்கிறது. வண்ணப் பறவையும் கடுங்குளிர் தாங்காமல் நேற்று விறைத்து விழுந்து விட்டது. பல நாட்கள் குளிர் பதனப்படுத்தி வைத்தாலும், எங்கிருந்தோ வந்த நுண்கிருமிகளும், எறும்புகளும் இக்குருவியையும் சிதைத்து விட்டன காண். அன்று விழுந்த ஓர் இலை இன்று எறும்பாய், நுண்கிருமியாய் ஆகிப் போனது ஞானப்பெண்ணே! ஆக உலகில் மாற்றம் என்பது ஒவ்வொரு நொடியிலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நேற்று பார்த்த உலகு இல்லை இன்று. அதுதான் விஞ்ஞான உண்மை. எந்த ஒரு மனிதனும் ஒரே ஆற்றில் இருமுறை கால் வைத்தது இல்லை. ஆற்று ஓட்டம் போல்தான் வாழ்வும்.

ஆக பிறப்பு என்பது விசேஷமான ஒன்றில்லை. அதே போல் இறப்பு என்பதும் விசேஷமில்லை. இறப்பு, பிறப்பு என்பது உருமாறும் நிலைகளின் தோற்றங்கள். வாழ்வு என்பது இந்த மாற்றங்களில் நிகழும் ஒரு அற்புத அனுபவம். சாதாரண இந்த உண்மையை கற்பனை மிகுந்த நம் மனது ஏற்றுக் கொள்வதில்லை. நமது பிறப்பிற்கு விசேஷம் கற்பிக்கிறது மனது. நாம் பெறும் அனுபவங்களை வைத்து "நான்" என்ற ஒன்றை மனது உருவாக்கி வெற்றி கொள்கிறது. உடலின் இச்சைகள், அதன் வழி அனுபவங்கள், உடலின் நோவுகள், அதன் வழி வேதனைகள் இவை "நம்" வாழ்வாக மாறுகின்றன. பிறந்த சில வருடங்களில் நமக்கிட்ட பெயருடன் நாம் ஐக்கியப் பட்டுப் போய்விடுகிறோம். அந்த "நான்" சக்தி இருக்கும் வரை அதிகாரம் செய்து, அகங்காரம் கொண்டு வாழ்ந்து, நோயுற்ற போது வலிமை குன்றி, மீண்டெழுந்த பின் மீண்டும் வீறு கொண்டு, தன்னிச்சையாக தனக்கென ஒரு உலகை உருவாக்கிக் கொள்கிறது.

இப்படி உருவான உலகு, பிறப்பு, இறப்பு என்ற சுழற்சியில் பங்கேற்க மறுக்கிறது. அது தன்னளவில் மரணமற்ற ஒன்றெனவே கருதுகிறது. இந்த சுழற்சி மற்றவர்க்குத்தான் தனக்கில்லை என சிந்திக்கிறது. விளைவு "மரணம்" என்பது ஒரு பெருந்துயர் ஆகிப் போகிறது. மரணத்தைப் பற்றிய பயம் உள்ளுக்குள் விதைக்கப் பட்டுவிடுகிறது. அதன் பின் மரணத்தைப் பார்ப்பது, அதன் அருகில் நிற்பது கூட சங்கடமான செய்கையாகி விடுகிறது.
விலங்குகளும், தாவரங்களும் மரணத்தை எண்ணிக் கலங்குவதாகத் தெரிவதில்லை. அவைகள் தற்காப்பு உணர்ச்சி கொண்டவை. அது வாழ்வின் தேவையும் கூட. ஆனால் இறப்பு என்பதை நிகழும் தறுவாயில் ஏற்றுக் கொள்கின்றன. அதை நோக்கி வியாக்கியானம் செய்வதில்லை. மரணத்திற்காக நினைவாலயம் அமைப்பதில்லை. மண்ணில் வந்தது, மண்ணோடு போனது என்று வசனம் பேசாமல் அதுவாகவே வாழ்கின்றன.

ஆனால் மனிதனின் கதை வேறு. அவன் வாழ்வு தோன்றிய தருணங்கள் கைவசப் படாததால், அவன் சாவை நோக்கி அதி தீவிர கற்பனைகளில் இறங்குகிறான். மரணத்திற்கு பின் நிகழும் நிகழ்வுகளில் ஆசை கொள்கிறான். சுழற்சியின் அங்கமாக மறுக்கும் மன நிலையே தன் தனித்துவத்தை நிலை நாட்டும் முகமாக சொர்க்கம், நரகம் என்ற நிலைகளைப் பற்றிய ஆய்வில் இறங்க தூண்டுகோலாய் இருக்கும் என்று நம்புவதற்கு இடமுண்டு. மேலும், மனித வாழ்வு என்பது அறன் சார்ந்து நிற்கிறது. ஒழுங்கு இல்லாமல் மனித வாழ்வு சிறப்படைய வாய்ப்பில்லை, ஏனெனில் மனிதன் ஒரு சமூகப் பிராணியும் கூட. அறனை வலியுறுத்தும் முகமாக நல்லது-கெட்டது என்பது அளவிடப் படுகிறது. இது சார்புடைய ஒன்று என்பது நல்லது-கெட்டது என்பது சமூகத்திற்கு, சமூகம் வேறு படுவதிலிருந்து தெரிகிறது. நன்மை செய்தால் பரிசும், கேடு செய்தால் தண்டனையும் என்பது நெறிப்படுத்தும் வழிகள். இவை மானுடத்திற்கென்றே உருவானவை போல் தோன்றுகிறது (அல்லது சமூகப் பிராணிகளுக்கு பொதுவானவையாக இருக்கலாம்).

சமயம்-மதம் என்பவை மனிதனை ஒழுக்கமுள்ள சமூக ஜீவியாக தக்க வைத்துக் கொள்ள உருவான உத்திகள். எனவே பரிசு/தண்டனை என்ற கோட்பாடு மனிதனது வாழ்வு முழுவதும் நிறைந்து நிற்கிறது- அவனது மரணத்திலும் கூட! நல்ல வாழ்வின் பரிசு சொர்க்கம், கேடுகெட்ட வாழ்வின் பரிசு நரகம் என்று வகைப் படுத்துகிறது மனித மனம். இது பண்டைய காலம் தொட்டு இருந்துவரும் ஒரு செயல்பாடு, நம்பிக்கை. இந்தப் பழம் (archaic) துணிபு பக்தி இயக்கம் தோன்றி வலுப்பெற்ற நாட்களில் மெல்லக் குறைந்து இறைமை என்பது நீதிபதி அல்ல, அது ஒரு மாபெரும் இயக்கம், அந்த இயக்கத்தின் அங்கத்தினர் நாம், எனவே அந்த இயக்கத்தை/அந்த இறைமையை அனுபவிப்பது நமது பிறவிப் பயன், அதுவே நமது வீடுபேறு என்றும் கண்டு சொல்லின. இது உண்மையில் ஒரு மாபெரும் தமிழ்க் கண்டுபிடிப்பு என்றுதான் சொல்லவேண்டும். ஏன்? பக்தி இயக்கம் ஒரு தமிழ் இயக்கம்.


மேலும் மத்திய கிழக்கில் தோன்றிய சமயக் கொள்கைகளும், பண்டைய ஆசியா மைனரிலிருந்து வந்த ஆரிய சமயக் கொள்கைகளும் இந்த பழம் துணிபு (theory) களுக்கு உரம் கொடுத்து, சிரார்த்தம், பிண்டம் சமர்ப்பித்தல் போன்ற சடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க பக்தி இயக்கம் இவைகளை புறந்தள்ளின. உதாரணமாக, வைணவ நெறிகளை ஏற்றுக் கொண்டு வைணவன் ஆன பின் (அதாவது சங்கு-சக்ர முத்திரைகளை தோளில் ஏற்றுக் கொண்டபின்) அவனுக்கு மரணத்தைப் பற்றிய பயம் போய்விடுகிறது. ஒரு உண்மையான வைணவன் இறப்பதில்லை என்பது ஆச்சார்யர்களின் வாக்கு. இதன் பொருள், அவன் "ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்துழலும்" ஒரு சக்தியின் தன்மையைப் புரிந்து கொண்டு அந்த இயக்கத்தை மனப்பூர்வமாக அனுபவிக்கக் கற்றுக் கொண்டு விட்டான் என்று பொருள். எனவேதான் அநுபூதி நிலையை மிக உயர்வாகப் பேசுகின்ற தமிழ் மெய்ஞானம். அந்த நிலையில் ஒருவன் அழுவதையோ, ஆடிக் களிப்பதையோ, பித்தன் போல் இருப்பதையோ கேலியாகக் காணாமல் மிக உயர்வாகப் பேசுகின்றன தமிழ்ச் சமயங்கள். ஆரிய சமய விளக்கங்களில் இந்த சடங்குகள், பூஜைகள், அதன் விளைவால் பெரும் சக்திகள், தேவர்களை திருப்திப் படுத்துதல், அதன் விளைவால் நன்மை பெறுதல் போன்ற ஒரு வியாபார நோக்கே உரத்துக் கேட்கிறது. இந்த ஆரியக் கலப்புதான் இன்றளவும் தமிழ் சமயங்களை ஆட்டிப் படைக்கும் சக்தியாய் இருந்து வருவது சடங்குகள் நிறைந்த நமது வாழ்விலிருந்தே தெரிய வரும்.

நான் இதுவரை மேற்சொன்ன கருத்துக்களுக்கான அகச்சான்றுகளை ஆழ்வார்கள் பாசுரங்களில் தேடுவோம். நமது முதல்தாய் போன்ற நம்மாழ்வார் வாழ்வைக் காணும் விதத்தைப் பாருங்கள்:


வாங்குநீர் மலருலகில் நிற்பனவும் மீதிரிவனவும்
ஆங்குயிர்கள் பிறப்பிறப்புப் பிணிமூப்பால் தகர்ப்புண்ணும்
ஈங்கிதன்மேல் வெந்நரகம் இவையென்ன உலகியற்கை?
வாங்கெனைநீ மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே
(தி.வா.மொ. 4.9.5)


இவர் வாழ்வை மிகுந்த அறிவியல் கண்ணோடு பார்ப்பது தெரியவருகிறது. நீர், நில உலகில் பிறப்பிறப்பு என்பதும், பிணி மூப்பு என்பதும், அதன்மேல் மனிதனின் துணிபான வெந்நரகம் என்பதும் உலக இயற்கை என்று சொல்கிறார்.

பிரபஞ்சம் முழுவதும் இறைவன் நீக்கமற நிறைந்துள்ளான். அவன் ஒவ்வொருவர் உள்ளும் காரணனாக அமர்ந்துள்ளான். அவனே அரு நரகமுமாய் உள்ளான். அவனே வானுயர் இன்பமும். இந்தத் தெளிவு வந்தபின் நரகத்தைக் கண்டு அஞ்சுவதேன்? என்று கேட்கிறார் சடகோபன். அவரது திருவாய்மொழி இதோ:

யானும் நீதானே யாவதோ மெய்யே

அருநரகவையும் நீயானால்,

வானுயரின்பம் எய்திலென் மற்றை

நரகமே யெய்திலென்? எனினும்

யானும்நீ தானாய்த் தெளிதொறும் நன்றும்

அஞ்சுவன் நரகம் நானடைதல்.

வானுயரின்பம் மன்னிவீற் றிருந்தாய்!

அருளுநின் தாள்களை யெனக்கே
(தி.வா.மொ. 8.1.9)


இந்த இரண்டு பாடல்களின் கடைசி வரிகளில் அவர் இறைச் சரணத்தைச் சுட்டுகிறார். அச்சரணம்தான் இந்நிலைக்கு மார்க்கம் என்று பொருள். இச்சரணம் என்பது பக்தியால் விளைவது. பக்தியோ ஞானத்தால் விளைவது. ஆக உள்ளத் தெளிவு இம்மார்க்கங்களால் கிடைக்கப் பெற சொர்க்கம்/நரகம் என்பது வெறும் கோட்பாட்டளவே என்பது நம்மாழ்வார் கருத்து.

ஆயினும் வைணவர்கள் சிரார்த்தம் செய்யாமல் இருப்பதில்லை. மோட்சம் தரும் சொல் "நாராயணா!" என்று சொல்லத் தவறுவதில்லை. எவ்வளவு தேடிப் பார்த்தாலும் இந்த நரகத்தைப் பற்றிய விவரணையை எந்த ஆழ்வார்களும் தரவில்லை, ஒருவரைத் தவிர. அவர்தான் திருமங்கை ஆழ்வார். அவர் தரும் காட்சி இதோ:

வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து

பிறர்பொருள், தாரமென்றிவற்றை

நம்பினார் இறந்தால் நமன்தமர் பற்றி

எற்றிவைத்து எரியெழுகின்ற செம்பினால்

இயன்ற பாவையைப் பாவீ!

தழுவென மொழிவதற்கஞ்சி

நம்பனே! வந்துன் திருவடி யடைந்தேன்-

நைமிசா ரணியத்துள் எந்தாய்!
(பெ.தி.மொ. 6-4)


இவர் தரும் காட்சி யூத, கிருத்துவ, இஸ்லாமிய வர்ணனைகளுடன் ஒத்துப் போகிறது. அதாவது எம தூதர்கள் வந்து, எற்றிவைத்து, எரிகின்ற தீயில் கொதிக்கும் செம்பினாலான பாத்திரத்தில் போட்டு வதைத்தெடுப்பர் என்பது. எல்லோரையுமல்ல! கேடு செய்பவர்களை என்று சொல்கிறார். இவருக்கு மட்டும் என்ன ஆய்விட்டது?

பெரியாழ்வாருக்கோ யசோதை பாவத்தில் காணும் கண்ணன் உலகை மயக்கும் குழந்தை. அந்த பாவத்தில் நரகத்தைப் பற்றிய நினைவேது? ஆண்டாளுக்கோ எப்போதும் கல்யாணக் கனவு:-) அவள் உலகில் நரகம் என்பது அவளது பிரிவுத் துயரே அன்றி வேறல்ல! திருப்பாணாழ்வார் தனியாக நரகத்தைப் பற்றி எழுத வேண்டிய அவசியமில்லை. அவர் வாழ்வே ஒரு சமயம் நரகமாகிப் போனது உண்மை! தொண்டரடிப்பொடிக்கு சமணர்களுடனும், பெளத்தர்களுடனும் யுத்தம் செய்து வைணவத்தை மீட்டெடுப்பதில் பொழுது போய்விட்டது! முதல் மூவர்களுக்கு வைணவத்தை ஒரு சமூக இயக்கமாக மாற்றும் பணியில் நேரம் போய் விட்டது. திருமழிசையோ ஒரு சித்தர். அவருக்கு நரகம் ஒரு சிறு நக வலி! மதுரகவிக்கு நம்மாழ்வாரின் இன்னமுதம் உயர் சுவர்க்கம்-எப்போதும்! நம்மாழ்வார் தெள்ளத் தெளிவாக சுத்த-அத்வைத நிலையைச் செப்பிவிட்டார். ஆக, மிஞ்சியவர் திருமங்கை ஆழ்வார்தான். இவர் வாழ்வு கொலையும், திருடும் என்று ஆரம்பித்து பெரும் குற்ற உணர்விற்கு இடம் கொடுத்து விட்டது. அதை அவர் பல பாடல்களில் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறார். எனவே இவரால் குற்ற உணர்விற்கு இடம் கொடுக்கும் யூத, கிருத்துவ, இஸ்லாம் சமயங்கள் போல் பேச முடிகிறது. ஆனாலும் இவரது வாழ்விலேயே இவர் செய்த குற்றத்தைக் களைந்து அவருக்கு வீடுபேறும் கிடைக்கிறது. எனவே இவர் பேசுவது தன்னனுபம் என்றில்லாமல் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு என்று கொள்வதற்கும் இடமிருக்கிறது.

ஆழ்வார்களின் உள்ளக்கிடக்கை பின்னால் வந்த ஆசார்யர்களால் மிக, மிக நுணுக்கமாக ஆராயப் பட்டு வெளிப் படுத்தப் பட்டுள்ளது. எனவேதான் வடக்கு திருவீதிப் பிள்ளை என்பார் எம்பெருமான் இராமானுசரின் அருள் கிடைக்கப் பெறும் போது நம்மை இன்னிடும் தொல்லைகள் செல்லும் நரகத்திற்கு, ஆயின் இன்னருளும், சுவர்க்கமும் நம்மை வந்தடையும் என்று சொல்கிறார். இதுதான் சொர்க்கம்/நரகம் என்பது பற்றிய வைணவப் புரிதல் என்று சொன்னால் தவறில்லை.

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னம் நரகலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர் தரு தொல்லைச் சூழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே
விடுமே சரணமென்றால், மனமே நையல் மேவுதற்கே!

மடல் 069 பகவத்கீதையும், ஆழ்வார்களும்

First published on : Sat, Sat, 15 Jan 2000 01:16:52 +0200 15:22:05 +0200

மகாபாரதக் கதை உலகின் தொண்டுப் பழசான கதை. தமிழின் முதும் பெரும் நூல்களில் மகாபாரதம் பற்றிப் பேசப்படுகிறது. ஒரு தமிழ் மன்னன் பாண்டவர்களுடன் சேர்ந்து போர்ச்சோறு உண்டதாக ஒரு புறநானூற்றுப் பாடலொன்று சொல்லும். இது உயர்வு நவிற்சியா இல்லை மாபாரதப் போர் தமிழ் மண்ணில் நடந்ததா என்பதை சரித்திர ஆய்வாளர்களுக்கு விட்டுவிடுவோம். எப்படி இருப்பினும் இரண்டு ஆரிய வம்சத்து மன்னர் குழுவிற்குள் நடந்ததாக நம்பப்படும் ஒரு போரில் ஆரிய இனம் சாராத விருஷ்ணி குலத்திலகமான வசுதேவன் கிருஷ்ணன் சூத்திரதாரியாக இருந்தது சுவாரசியமான விஷயம். இதை திராவிட மேலாண்மையை ஆரியம் ஒத்துக் கொண்டதின் முதல் அறிகுறி என்று சொல்வாரும் உளர்.

இந்தியாவின் மூன்று தத்துவ பேரமைப்புகளான உபநிடதம், கீதை, பிரம்மசூத்திரம் என்பவற்றுள் அடங்கும் கீதை பிற்காலத்தில் மகாபாரதக் கதையின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. இதை முதலில் செய்வித்தவர் யார் என்பது கேள்விக் குறி. ஆனால் வர்ணாசிர முறை பற்றி பேசும் 18வது அத்தியாயத்தை உள்ளடக்கியதாகக் கொள்ளப் படும் கீதையை கண்ணன் சொன்னதாக உட்புகுத்தியது ஆரியர்கள் தாங்கள் இழந்த மேலாண்மையை சரிகட்ட செய்த சதி என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

வேத காலத்து சமூகத்தில் ஒரு குருவிடம் கல்வி கேட்கவரும் சீடர்களை அவரவரது இயல்பு கண்டு அந்தணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரித்துப் பார்ப்பது வழக்கத்தில் இருந்த ஒன்று. அதன் படி கல்வி, கேள்விகளில் அதிக ஈடுபாடு காட்டி மெய்ஞான சிரத்தை உள்ளவர்கள் அந்தணர் என்று அழைக்கப் பட்டனர். உதாரணமாக தன் இயல்புகளால் சத்திரியராக இருந்த கெளசிகர் தவ பலத்தால் அந்தணர் என்ற நிலைக்கு உயர்ந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. டாக்டர். அம்பேத்கார் இப்படி இருந்த நிலை படிப்படியாக மாறி, சமூகத்தில் சிறப்பு இடம் பெறும் அந்தணர்கள், அந்த இடத்தை என்றும் தக்கவைத்துக் கொள்ள வர்ணம் என்பது பிறப்பால் வருவது என்று மாற்றி இந்திய சமூகத்தில் மேலாண்மை கொண்டனர் என்று சொல்கிறார் தனது, "பார்ப்பனீயத்தின் வெற்றி" என்ற நூலில்.

இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் முல்லைத் தெய்வமான கண்ணன் (இவன் இடையர் குலத்து இளவல்) வர்ணாசிர முறை சொல்லி "தொண்டு செய்தல் சூத்திரனுக்கு அவனியற்கையாக ஏற்பட்ட தொழில்" (கீதை 18:44) என்று இந்தியாவின் அடிமைத் தொழிலுக்கு வித்திட்டான் என்ற பழி வந்து சேர்கிறது. இது எவ்வளவு தூரம் உண்மை என்று இம்மடலில் கொஞ்சம் காண்போம்.

கண்ணன் வழிபாடு என்பது தமிழ் மண்ணில் தொன்று தொட்டு உள்ள ஒரு மரபு. பரிபாடல், சிலப்பதிகாரம், மதுரைக் காஞ்சி, முல்லைப் பாட்டு, திருமுருகாற்றுப் படை, திரிகடுகம் போன்ற பல்வேறு பண்டைய நூல்கள் இதற்கு சான்று பகரும். பரிபாடலில் காணும் "ஆர்வம்" என்பது பக்தியாக பின்னால் மலர்கிறது என்பார் "தமிழ் இலக்கியங்களில் வைணவம்" நூல் ஆசிரியர் இந்திரா பார்த்தசாரதி. "இடையில் தோன்றிய சில நீதி நூல்களை ஒதுக்கிவிட்டு பார்ப்போமானால் சங்க இலக்கியம் பக்தி இலக்கியமாக மாறிவந்த வளர்ச்சியைக் கவனிக்கலாம்" என்று சொல்கிறார் டாக்டர்.மு.வரதராசனார். ஆக, இந்த பண்பாட்டு வளர்ச்சியின் உச்ச கட்டம்தான் ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழ் மண்ணிற்குத் தந்த பக்தி இலக்கிய காலம். எனவே ஆழ்வார் பாடல்களில் கீதை பற்றிய மேற்கோள்கள் உள்ளனவா எனத் தேடுவது நாம் முன் சொன்ன புதிருக்கு விளக்கம் அளிக்கும்.

அதாவது, இன்றைய கண்ணோட்டத்தில் கீதை என்பது பார்த்தனுக்கு கண்ணன் பாரதப் போரில் நடத்திய உரை என்று கருதப் படுகிறது. டாக்டர் இராதா கிருஷ்ணன் "பகவத் கீதை உரை" என்ற புத்தகத்தில் கீதை ஒரு மதநூல் என்று எழுதுகிறார். தத்துவ நூலாக இருந்த கீதைக்கு மத ஸ்தானம் கிடைக்கிறது. மேலும் உலக அளவில் பிரசித்தி பெற்ற மத ஸ்தாபகர்களான பிரபுபாதா போன்றோர் கீதையை வைணவ நூலாகவே பிரகடணப் படுத்தி உள்ளனர். தமிழ் வைணவ ஆச்சாரியர்களும் திருவாய் மொழிக்கு உரை எழுதும் போது கீதை வரிகளை மேற்கோள் காட்டத் தவறியது இல்லை. ஸ்ரீவைஷ்ணவத்தின் பிதாமகர்களில் சிறந்த இராமானுசர் பகவத் கீதைக்கும், பிரம்ம சூத்திரத்திற்கும் உரை எழுதி உள்ளார். தத்துவ பேரமைப்புகளுக்கு உரை (பாஷ்யம்) எழுதுவது காலத்திற்குக் காலம் கற்றறிந்த சான்றோரால் செய்யப் பட்டே வந்திருக்கின்றது. ஆதி சங்கரர், மாத்துவர் போன்றோரும் உரை எழுதியுள்ளனர். அவரவர் கண்ணோட்டப்படி அதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.

கண்ணன் தோரோட்டிய செய்தி பல இடங்களில் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் சொல்லப் பட்டாலும் கீதை உபதேசம் கூறப் படவில்லை என்பதை முனைவர் ஆ.க.பார்த்தசாரதி தனது "பெரியாழ்வார் பாசுரங்கள்-ஆய்வு" என்ற நூலில் குறிப்படுகின்றார். மேலும் அவர், "மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்குக் கீதையை உபதேசித்தான் என்ற சரித்திரம் உண்டு. இந்தக் கீதைதான் பகவத் கீதை என்று பிரசித்தமாய் விளங்குவது. இக்கீதையைப் போற்றாத மக்களில்லை. இதைப் பற்றி ஆழ்வார் பாடல்களில் யாதொரு குறிப்பும் கிடையாது என்பது இங்கே மனங்கொள்ளத் தக்கது" என்ற திரு.வையாபுரியின் வரிகளை நினைவு கோர்கிறார் (எஸ்.வையாபுரிப் பிள்ளை-அகராதி நினைவுகள். ப97)

ஆழ்வார்களுக்கு கீதை பரிச்சியம்தான் என்று சொல்லும் வைணவர்கள் மேற்கோள் காட்டுவது இரண்டு திருவாய் மொழிப் பாடல்களை.

"பிணக்கற அறுவகைச் சமயமும்..." என்று தொடங்கும் திருவாய்மொழியில் (1.3.5) "வணக்குடைத் தவநெறி வழி நின்று" என்ற வரிகளுக்கு வியாக்கியானம் சொல்லும் போது, "பகவத் கீதையில் பத்தியைப் பற்றிக் கூறுமிடத்தில் (9:14) பத்தியினால் என்னை வணங்கி வழிபடுகின்றார்கள், என்று கூறி, பின்னர், என்னை வணங்குதலைச் செய்வாய் (9:34) என்றும் கூறுவதால் நம்மாழ்வாரும் வணக்குடைத் தவநெறி" என்று சொல்லுவார்கள் (ஈடு ப.156).

(இந்தப் பாடலை விரிவாக வேறொரு கருத்தில் பின்னொரு மடலில் காண்போம்)

கீதா உபதேசத்துடன் ஒத்துப் போகும் மற்றொரு திருவாய்மொழி 10.4.9.

கண்டேன் கமல மலர்ப்பாதம்; காண்டலுமே
விண்டே ஒழித்த வினையாயின எல்லாம்
தொண்டே செய்து, என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணிவகையே.


இந்த கடைசி வரிகளுக்கு பொருள் சொல்லும் போது பரமன் என்பது கிருஷ்ணனைக் குறிக்கும் என்றும் பணித்த பணிவகை என்பது பகவத்கீதை என்றும் சொல்வர்.

பண்டே பரமன் பணித்த பணி வகையே கண்டேன் கமல மலர்ப்பாதம் என்பதற்கு ஈடு, அவன், " என் ஒருவனையே புகலிடமாகப் பற்று (மாம் ஏகம் சரணம் வ்ரஜ-கீதை18:66) என்கிறபடியாலே நான் (நம்மாழ்வார்) அவன் திருவடிகளைக் காணப் பெற்றேன்" என்று பொருள் சொல்கிறது.

வேதாந்த தேசிகர் கீதையின் சாரத்தைச் சொல்லும் "கீதார்த்த சங்கிரகம்" என்ற நூல் செய்வித்த சேதியை "கீதை மொழிந்தருளும் வேதாந்த தேசிகனார் பாதார விந்தமலர் பற்று" என்னும் தனியன் சொல்லும்.

தத்துவ நூலாக இருந்த கீதை அதன் சிறப்பு குறித்து அடிக்கடி மேற்கோள் காட்டப் பட்டிருப்பது தெரியவருகிறது. அது உண்மையில் ஒரு மத நூலா? அதை வைணவர்கள் சொந்தம் கொண்டாடுவது சரியா? இல்லை, வையாபுரிப் பிள்ளை கேள்வி கேட்பது போல் மாபாரதப் போரில் சொல்லப் பட்டதாக வரும் கீதைதான், வைணவர்கள் மேற்கோள் காட்டும் பகவத் கீதையா? அடிமைத் தொழிலை முன்மொழியும் ஒரு ஏடு மத நூலாகக் கருத இடம் உள்ளதா? சாதீயத்தை எதிர்க்கும் ஆழ்வார்கள் இயக்கம் கீதையை நேரடியாக மேற்கோள் காட்டமைக்கு உள்காரணம் இருக்குமா? தொன்று தொட்டு வரும் தமிழ் மரபில் சாதீயக் கண்ணோட்டம் இருத்தலாகாது என்றுதான் ஆழ்வார்கள் செப்பாமல் விட்டனரா? இல்லை, இன்று பிரபலமாக இருக்கும் பகவத் கீதை ஆழ்வார்கள் காலத்திற்குப் பின் புனையப் பெற்றதா?

மடல் 070 முல்லை திரிந்து பாலையாகுதல் போல....

First published on :Sat, Wed, 19 Jan 2000 14:46:15 +0200 15:22:05 +0200

தொன்மையான பண்பாட்டின் வாரிசுகள் என்று சொல்லிக் கொள்வது ஒரு மலையின் மீதிரிந்து உலகைக் காண்பது போன்றது. பல நூற்றாண்டுகளாக செம்மைப் படுத்தப் பட்ட ஒரு சிந்தனை மரபின் ஊடாக உலகைக் காண்பதில் ஒரு தெளிவு இருக்கும். பண்பாட்டுச் செழுமை என்பது நொடிப் பொழுதில் நிகழ்வதன்று. அது ஒரு தொடர் நிகழ்ச்சி. செழுமை அடைவதற்கு முன் ஒவ்வொரு சமூகமும் பல்வேறு சோதனைகளுக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்ட பின்தான், முதிர்ச்சி வாய்க்கிறது. இவ்வகையில் தமிழ் சமூகம் எதிர் கொள்ளும்/கொண்ட முக்கிய சமூக முரண் தமிழ் மக்களின் சாதீயப் பிரிவு ஆகும். "குலந்தாங்கு சாதிகள் நான்கு" என்று இதைப் பதிவு செய்கிறார் நம்மாழ்வார். ஆசிரியர் தொல்காப்பியனார் மரபியலில் நான்கு வருணங்களைக் கூறியிருக்கிறார். "வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும், கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன் கட்படுமே" என்கின்றது புறநானூறு. தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டு விட்ட இப்பகுப்பின் தோற்றுவாய் ஆய்விற்குரியது. திராவிட இயக்கங்களின் சிந்தனை வழியில் இம்முறை ஆசியா மைனரிலிருந்து இந்திய துணைக் கண்டத்திற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த ஆரியர்களால் கொண்டுவரப் பட்டது என்பதாகும். இது உண்மையாகவே இருந்தாலும் கூட, இது வர்ணாசிரும முறையின் தோற்றத்திற்கு இட்டுச் செல்லவில்லை. பிரச்சனையை ஒரு இடத்திலிருந்து இன்றொரு இடத்திற்கு தள்ளி வைத்துள்ளது அவ்வளவே.

எந்தச் சமூகமும், எக்காலத்திலும் தனிப்பட்டு இருந்ததில்லை. மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து பாரிய உலகின் பல்வேறு மூலைகளுக்கு மனிதன் போய் வந்த வண்ணமே உள்ளான். பனியில் உறையும் வட துருவத்தின் அருகாமையில் கூட மனிதர்கள் வாழ்வது இதைக் காட்டுகிறது. இந்த இடப் பெயர்ச்சியினால் மனித இரத்தக் கலப்பு என்பது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. சுத்தமான இனம் என்ற ஒரு இனம் உலகில் கிடையாது என்பது உயிரியல் உண்மை.

பரிணாம வளர்ச்சியின் அடிப்படை அலகு species என்பதாகும். மனித இனம் ஒரு species. இப்படி இனங்கள் உருவாவதற்கு அடிப்படைத் தேவை, பெளதீக ரீதியில் இனக் கலப்பை தடுப்பதாகும். ஒரே பிரதேசத்தில் ஒரே இனமாக இருந்த உயிரினங்கள், அப்பிரதேசங்கள் இயற்கை செயற்பாடுகளால் பிரிவுறும் போது இனக் கலப்பிற்கு வகையின்றி வெவ்வேறு இனங்களாக பிரிந்திருப்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. இப்படி பல்வேறு இனங்களாக உயிரிகளை தக்க வைப்பது இயற்கையின் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு உயிரியல் திட்டம் (the agency of natural selection). இத்திட்டத்தின் அடிப்படை, உயிரினங்களை பல்வேறு வகைகளாய் பரிமளிக்க வைப்பதாகும். பல்வேறு வகைகள் இருக்கும் போதுதான் சோதனைக் காலங்களில் (ஊழிப் பேரலை, வெள்ளப் பெருக்கு போன்றவை) ஒரு இனம் அழிந்தாலும் மற்றவை தப்பி உயிர் வாழ்வதற்கு சாத்தியமாகிறது. (a strategy of life to counter (at least temporarily) the eternal and unavoidable second law of thermodynamics) இந்த சாத்தியப்பாடு உண்மை என்பதால் உயிரினங்கள் வகை, தொகையாய் பிரிவது ஒரு இயற்கை நிகழ்வென்று உயிரியல் வல்லுனர்கள் கணிக்கின்றனர் (variation is the basis of evolution.)

தனது ஓயாத இடப்பெயர்ச்சியாலும், சிந்தனை வளர்ச்சியாலும் மனிதன் இந்த இயற்கையின் நியதியை வெகுவாக புறந் தள்ளினாலும், ஏதோ ஒரு வகையில் இயற்கையின் உந்துதலாக மனித இனம் இனக் கலப்பைத் தடுத்து மற்றொரு இனமாக உருமாற விழைவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தமிழ் மண்ணில் ஆதியில் ஏற்பட்ட சமுதாயப் பகுப்பு இத்தகைய ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது. அறிவின் வளர்ச்சியாலும், பகுத்தறிவுச் சிந்தனையாலும் சமூகப் பகுப்புகள் உடையும் போதும், புதிய வகைகள் தோன்றிய வண்ணமே உள்ளன. உதாரணமாக, சாதியப் பிரிவை மனிதன் முறியடிக்கும் பொது, மதப் பிரிவு தலையெடுக்கிறது. மதப் பிரிவையும் எதிர் கொள்ளும் போது வர்க்கப் பிரிவு (ஏழை-பணக்காரன்) வந்து நிற்கிறது. அதை சமாளித்த பின்பு கற்றவன்-கல்லாதவன் என்ற பிரிவு வந்து நிற்கிறது. இப்படி, ஒன்று இல்லாவிடில் மற்றொன்று என்று மனித உயிரியை பிரித்து வேறுபடுத்தும் இயற்கை உந்துதல் காலம் காலமாக நடந்து கொண்டே இருக்கிறது. இயற்கையின் இந்தச் சவாலை எதிர் கொள்ள மனிதனிடம் உள்ள ஒரே சாதனம் அவனது அறிவுதான் (இதை ஞானம் என்று ஆன்மீகம் சொல்லும்).

குறிஞ்சித் திணையின் அங்கமாக, விலங்குகளை வேட்டையாடி வந்த மனிதன், இயற்கை அழிவுகளின் காரணமாக முல்லைத் திணைக்கு வந்த போது கால் நடைகள் மேய்ப்பதை வாழ்தலின் இருப்பிற்கு சாத்தியப் படுத்திக் கொண்டான். பின், கால் நடைகளின் உணவுகளை பயிர்த் தொழில் செய்வதன் மூலம் தனது மூல உணவாக மாற்றிக் கொள்ளக் கற்றான் (நெல் என்பது ஒருவகை புல் என்பது கண்கூடு). இப்படி வேடுவனாக இருந்த மனிதக் கூட்டம், விவசாயியாக மாறிய பின்பும், பண்டைய குறிச்சித் திணையின் தொழில்களால் ஏற்பட்ட பகுப்பை தக்க வைத்துக் கொண்டான் என்று சொல்கிறார் சொல்லாய்வாளர் திரு.இராம கிருஷ்ணன்.

இவரது ஆய்வின் படி, வனவிலங்குகளை வேட்டையாடித் திரிந்த ஆதித் தமிழனின் குறிச்சித் திணையிலிருந்து ஆரம்பமாகிறது வர்ணாசிரமம். வேடுவர்கள் கூட்டமாக வேட்டை ஆடும் போது தற்காலிக தலைவர்கள் தோன்றிக் கொண்டு இருப்பர் (விலங்குகளில் இதை "ஆல்பா ஆண்-alpha male" என்பார்கள்). ஆனால், முல்லை/மருத நிலத்திற்கு மனிதன் இடம் பெயர்ந்த பின், தற்காலிக தலைவனுக்கு மாற்றாக இறையாள்மை செய்யும் அரச பரம்பரை தேவைப் பட்டது. (உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் - என்று சொல்லி இறையாள்மையை முன் நிறுத்தி அரசன் என்பானை "இறைவன்" என்ற சொல்லால் பயில்கிறார் வள்ளுவர் (குறள் 778). முன்பு "அரம்" என்னும் ஆயுதம் கொண்டு வேட்டையாடிய மனிதன் ஒரு காலக் கட்டத்தில் "அரசன்" ஆகிறான். அவனுக்கு போர்/அரசு நடத்த உத்திகள் சொல்லும் முகமாக அறிவர்கள் (strategist) தோன்றுகின்றனர். முன்னவன் (போராளிக்கு முன் போர்த் தந்திரம் சொல்பவன்) என்ற பொருள்படும் "பரமன்" என்பது இவர்களுக்கான பெயரானது. அரசு என்ற நிறுவனம் உருவான பின் அரசுகளுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்த diplomats என்பார் தேவைப் படுகின்றனர். குறிச்சியில், வில்லாளனாக இருந்த "விசியன்" என்பார் முல்லை/மருதத் திணையில் வியாபாரிகளாக, அரசுத் தொடர்பாளர்களாக மாறுகின்றனர். அதே போல், குறிஞ்சியின் "வேலாளன்" மருதத்தில் "வேளாளன்" ஆகிறான். இவன் முன்பு சூல் கொண்டு காவல் செய்தவன்.
இப்படித் தொழில் அடிப்படையில் தோன்றிய பரமன், பிராமணனானகவும், அரையர்/கத்தியர் என்பார் க்ஷத்ரியராகவும், விசியர் என்பார் வைசியராகவும், வில்லாளர் என்பார் சூல் கொண்டவன் ஆதலால் பின்பு சூத்திரனாக பெயர் கொள்கின்றனர். ஏரணவியலின் அடிப்படையில், தமிழில் இருந்தே இவ்வருணாசிரம பெயர்கள் வடமொழிக்கு சென்றிருக்க வாய்ப்புள்ளது என்று கணிக்கிறார் முனைவர்.இராம.கிருஷ்ணன்.

தொழிலின் அடிப்படையில் மனித குழுக்களுக்கு பெயர் சூட்டுவது எல்லாக் காலக் கட்டங்களிலும், எல்லா சமூகங்களிலும் நடந்திருக்கிறது. ஜெர்மன் மொழியில் Goldschmied, Kaufmann, Koehler என்பது முறையே பொற் கொல்லர், வியாபாரி, கரி அள்ளுபவர் என்ற குடும்ப(குழு) பெயர்களாயின.

தொழில் அடிப்படையில் பிரிந்த ஆதி மனித குழுக்கள், முன்பு சொன்ன இயற்கையின் உந்துதலின் படி இனக் கலப்பின் சாத்தியப் பாடுகளை குறைக்கத் தொடங்கினர் (reproductive isolation). தங்களுக்குள் உயர்வு, தாழ்வு சொல்லிக் கொண்டு திருமண உறவுகளை சுருக்கிக் கொண்டனர். உதாரணமாக, அநுலோம விவாகம் என்பது மேல் சாதியினன், தனக்குக் கீழ்பட்ட சாதியில் செய்து கொள்ளும் மணம், பிரதிலோம விவாகமானது, கீழ்ச் சாதியினன் தனக்கு மேற்பட்ட சாதிகளில் செய்து கொள்ளும் மணம் என்று ஆடவர் வகையைப் பிரித்துக் கூறுகிறது பிங்கலத்தை.

உயர்ந்த ஆணினும் இழிந்த பெண்ணினும் வியந்த கூட்டத் தவர்அநு லோமர்.
உயர்ந்த பெண்ணினும் இழிந்த ஆணினும் வியந்த கூட்டத் தவர்பிரதி லோமர்

(ஆடவர் வகை 242, 243).

இதுவரை பரிணாமவியல் வழியாக பிரிவுகளின் காரணங்களைப் பார்த்தோம். உளவியல் ரீதியாக இதன் காரணங்களை ஜே.கிருஷ்ணமூர்த்தி மிக அழகாக விளக்குகிறார். மனித சிந்தனையின் மிகப் பெருஞ்சாதனைகள் அவனது பகுத்தாயும் மனத்தால் விளைந்தவையே. பகுத்தாய்வதற்கு பொருள்களை அளவிட வேண்டும். அளவிடுவதற்கு அலகுகள் வேண்டும். மனித சிந்தனை காலம் என்ற முழுமையான ஒன்றை நொடிகளாக, நிமிடங்களாக, மணியாக, தினங்களாக, வருடங்களாக பிரித்து, காலத்தின் பருவ மாற்றங்களை கணித்து வேளாண்மை செய்து இன்றுள்ள நிலைக்கு வந்துள்ளது. முழுமையான உலகை பல்வேறு நாடுகளாகப் பிரித்து இன்று வாழ்ந்து வருகிறது. கல்வியின் அலகாக மதிப்பெண்கள் இட்டு மாணவர்களை பிரித்து அளவிடுகிறது. இப்படி அளவிடுதல், பிரித்தல் என்பது சிந்தனையின் அடிப்படை குணங்களில் ஒன்றாகவே இருக்கிறது. எப்போது சிந்தனை, தனது பிரித்தாயும் குணத்தை வேண்டிய தருணங்களுக்கு மட்டும் தக்க வைத்துக் கொள்கிறதோ அப்போது மானுடம் மேன்மையுறும். அதை விடுத்து, காணும் அனைத்தையும் பிரித்துப் பார்த்தால் கேடுதான் விளையும் என்பதை அழுத்தமாகச் சொல்கிறார் ஜே.கே. இதனால்தான் இன்று வெண்ணிலவில் கால் வைக்கும் அளவிற்கு அறிவியல் முன்னேற்றம் கண்டாலும், சாதியாலும், மொழியாலும், வர்க்கத்தாலும், தேசியத்தாலும் மானுடம் பிரிந்து போர், வன்முறை, பசி, பட்டினி என்று சீரழிந்து கொண்டிருக்கிறது என்று மேற்கோள் காட்டுகிறார் ஜே.கே.

இதை மேலும் அறிந்து கொள்ள இந்திய ஆன்மீகப் பகுப்பாவை கொஞ்சம் நோக்க வேண்டும். அது, அடுத்த மடலில்.