e-mozi

மடல் 061 உளகளவும் யானும் உளன்!

முதற் பதிவு; Wed, 24 Nov 1999 11:12:09 -0800 (PST)

தெய்வ வழிபாடும், அற்புத சித்திகளும் உடன் பிறந்த இரட்டையர் போல் சேர்ந்தே போகின்றன இப்பூலகில்!

அற்புதங்கள் அற்பமானவை என்பதல்ல. அற்புதங்கள் இல்லாமல் சமயங்கள் வாழுமா? என்றும் சில நேரம் கேட்க வேண்டி உள்ளது.

எல்லா சமயங்களிலும் அற்புதச் செயல்கள் மண்டிக் கிடக்கின்றன. அது வைதீக மதங்களாக இருந்தாலும் சரி, அவைதீக மதங்களாக இருந்தாலும் சரி. உலக சமயங்கள் எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல!

மகாபாரதம், பாகவதம் முழுவதும் அற்புதச் செயல்கள் நிரம்பியுள்ளன. மதுரைக்காரர் களுக்குத் தெரியும் சிவன் செய்த திருவிளையாடல்கள். அவர் பிள்ளைக் கறி கேட்ட கதையை இன்று படித்தாலும் கொஞ்சம் பயம்தான் உள்ளூர....பிள்ளை திரும்ப ஓடோடி வந்தது என்று முத்தாய்ப்பு வைக்கும்வரை! வைதீக மதங்களைப் புறக்கணிக்கும் பெளத்தத்திலும், சமணத்திலும் உண்டு பல அற்புதங்கள். புத்தனும், மகாவீரரும் அற்புதமாகிப் போயினர் அங்கு! ஏசு கல்லறையில் இருந்து மீண்டார் என்பதற்காகவே கிறித்துவத்தில் இருப்போர் பலர். முகம்மது நபிகள் வாழ்வில் பல அற்புதங்கள் நிகழ்ந்ததாக இஸ்லாம் கூறும். புராணங்கள், இதிகாசங்கள் எல்லாம் "பிள்ளை விளையாட்டு" என்று கிண்டல் செய்த இராமலிங்க சுவாமிகள் வாழ்வையே அற்புதமாகத்தான் பார்க்கின்றனர் சன்மார்க்கிகள்! அவர் தண்ணீரால் விளக்கேற்றியது, பள்ளி செல்லாமல் பா இயற்றியது, இறுதியாக மரணமில்லாப் பெருவாழ்வு எது என்பதைக் காட்ட அறையில் புகுந்து அந்தர்தியானமாகியது இப்படி....

நான் வாழும் ஜெர்மனியில் சாயி பாபா பக்தர்கள் அதிகம் உண்டு. பாபாவின் பக்தர்களின் ஜீவ நாடி அவரின் அற்புதங்கள்தான். அவர் ஒருநாள் வானில் தோன்றி தான் கடவுள் என்பதை நிறுவுவார் என்பது வரை!

ஆக, யாரும்/எதுவும் தப்பவில்லை!!

மனிதன் ஒரு விசித்திரப் பிறவி! அவனது கற்பனைகளுக்குத் தீனி போட இறைவனாலும் முடியுமா என்று சில நேரம் தோன்றும். அவனது ஆழ்மனது ஆசைகள், இயற்கையைக் கடக்கும் அவனது மனோ வேகம்/பாவம் இவைதான் "தொன்மங்கள்/ஐதீகங்கள்" உருவாவதற்குக் காரணமாய் உள்ளன. ஐதீகங்கள் இல்லாத கலாச்சாரமே கிடையாது. அறிவியல் சார்ந்துள்ள இன்றைய உலகிலும் ஐதீகங்கள் உண்டு. ஸ்டார் வார், ஸ்டார் டிரக் போன்றவை நவீன தொன்மங்கள்! ஐதீகங்கள் எதுவும் இல்லாத பாலை வாழ்வை யாரும் விரும்புவதும் இல்லை. உளவியல் ரீதியாக பார்த்தோமெனில் இந்த ஐதீகங்கள் என்பவை எதையோ சொல்ல, எதை வைத்தோ வருகின்றன என்று புரியும். அந்த அளவில் ஐதீகங்கள் என்பவை உருவகங்களே. அதை, அப்படியே உண்மை என்று கொள்ளுதல் கூடாது. அப்படிக் கொள்ளும் போதுதான் பெரிய பிரச்சனைகள் வருகின்றன.

சாயி பாபா திருநீறு வரவழைப்பது எல்லோரும் அறிந்ததே. அவர் படத்திலிருந்து திருநீறு கொட்டுவதைப் பார்த்திருக்கிறேன். இந்தத் திருநீறை ஆராய்ந்த ஜெர்மன் ஆய்வாளர் குழு அது மாட்டுச் சாணத்திலிருந்து வரும் திருநீறு அல்ல என்று சொல்கிறது. மாஜிக் செய்யும் எனது நண்பர் சிவனடியான் ஸ்ரீபதி அன்று கோயிலில் கையிலிருந்து யாரும் அறியாமல் வீபூதி விழ வைத்துக் காட்டினார். சாயிபாபா ஏன் பெரும் பூசணிக்காயை உருவாக்குவது இல்லை என்று விதண்டாவாதம் பேசுவோரும் உளர். என்னளவில் உண்மையான மெய்யடியார் கவனம் அற்புதங்களிலிருந்து அறிவுக்குத் திரும்பவேண்டும் என்பதுதான். உதாரணமாக, சாயி பாபா ஏன் இப்படிச் செய்கிறார் என்பது சுவாரசியமான விஷயம். பாபா சிறப்பு மலர் கொண்டுவர கல்கி ஆசிரியர் சென்ற போது, வழக்கம் போல் பாபா அவருக்கு ஒரு மோதிரம் வரவழைத்து மாட்டினாராம். மாட்டி விட்டு வேடிக்கையாகக் கேட்டாராம், "எப்படி அது உனக்கு சரியாகப் பொருந்துகிறது பார்த்தாயா?" என்று. உடனே எவரது மனமும் அந்த அற்புதச் செயலில் மதிமயங்கிவிடும்! ஆனால் உடனே தொடர்ந்து, "ஏன் நான் உனக்கு இதைத் தருகிறேன் என்று யோசித்தாயா?" என்று கேட்டாராம். இங்குதான் உள்ளது சூட்சுமம்! "உன் மீதுள்ள அன்பினால்தான் இப்படிச் செய்கிறேன்" என்று சொன்னாராம். தனி மனிதராக அவர் செய்யும் நற்காரியங்களை நாத்திகர்கள் கூட ஒத்துக் கொள்ளவர். விவேகானந்தர், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி இவர்கள் செய்வித்தது போல் கல்விப் பணியில் போகிறது அவர் செலவு. கிருத்துவ வைத்தியசாலைகள் போல் அவரால் பல வைத்திய சாலைகள் நடத்தப்படுகின்றன. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், அவரது அற்புதங்களில் கவனம் செலுத்தினால் வேண்டாத விதாண்டாவாதங்களில்தான் போய் நிற்கும், அதற்குப் பதில் அவர் செய்வதன் நோக்கம், அல்லது அவர் செய்யும் நற்பணிகளில் கவனம் செலுத்தினால் அற்புதங்கள் சின்ன விஷயங்களாகப் போய்விடும்.

அற்புதங்களை அறவே ஒதுக்கி சமயங்கள் வாழ முடியாது. அற்புதங்களை, கேளிக்கை கேட்கும் மனத்திற்கு தீனியாகப் போட்டு விட்டு அதற்கும் மேலுள்ள தத்துவங்களை நோக்கிப் பழக வேண்டும். அற்புதங்கள், அற்புதங்கள் என்று மனது அலைவதற்குக் காரணம், கண்ணெதிரே நாம் தினம் காணும் அற்புதங்களை, அற்புதங்களாகப் பார்க்கத் தவறுவதுதான். நாம் இருப்பதே பெரிய அதிசயம்தான்!
வானில் தெரியும் நட்சத்திரம் எங்குள்ளது என்று ஒருவர் கேட்டாராம். அதற்கு பதில் சொன்னாராம் ஒருவர் "அது நம் மூளையில் உள்ளது" என்று! மூளை எவ்வளவு அதிசயமான விஷயம்! ஒரு பட்டுப் பூச்சிக்கு சின்னச் சின்ன கட்டங்களாகத் தெரியும் ஒரு பொருள், நம் கண்ணுக்கு மூப்பரிமாணத் தோற்றத்தில் தெரிகிறது. இந்த வெளவாலுக்கு எதுவுமோ தெரிவதில்லை. கேட்கப் படுகிறது!! அப்படியெனில் நாம் காணும் பொருளின் அர்த்தம்தான் என்ன? யோசித்துப் பார்த்தால் தெரியும் காலையில் உதிக்கும் சூரியன், மாலையில் வளரும் மதி, இரவில் கம, கமக்கும் பூக்கள், கண் எதிரே தெரியும் மனைவி, குழந்தைகள் எல்லாமே பெரிய அதிசயம்தான் என்று.

ககனமார்க்கமாகப் பறப்பதைக் காட்டிலும், நீரில் நடப்பதைக் காட்டிலும் அதிசயமானது நாம் வெளிவிடும் மூச்சு மீண்டும் உள்ளே வந்து நம்மை வாழ வைத்திருப்பதுதான்!

எனவேதான் "பார்வை" என்பது ஆன்மீகத்தில் மிகவும் முக்கியம். அற்புதங்களையும் பார்க்கத் தெரியவேண்டும்! நம்பிக்கை என்பதை விட இந்தப் "பார்வையை" நாம் புரிந்து கொள்ள வேண்டும். பின்னால் ஆன்மீகம் தேனாய், பாலாய் இனிக்கும். நமக்காக அதைச் சொல்லித் தருகிறார் திருக்குருகூர் சடகோபன்.

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலரென்றும் காண்தோறும்-பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று.


தெளிவாகச் சொல்கிறார். இங்கு நாம் காணும் காட்சிகள் அனைத்தும் தெய்வீகக் காட்சிதான் என்று. இப்படிப் பார்த்துப் பழகும் போது,

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம்
கண்ணன் எம்பெருமா னென்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி
திண்ண மென்னிய மான்புகு மூர் திருக்கோளூரே!

என்று ஆராதிக்கத் தோன்றும். உலகின் ஆகப் பெரிய அற்புதம் இப்படிப் பார்த்து ஆனந்திப்பதுதான்.

பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ
மற்றையார் வாரும் நீ! பேசில்-எற்றேயோ
மாய! மா மாயவளை மாயமுலை வாய் வைத்த
நீயம்மா! காட்டும் நெறி!

இதுதான் நெறி என்கிறார். இப்படிப் பார்த்து, ஆனந்திப்பதுதான் ஆன்மீக நெறி.

இது ஒருவகையான விழிப்பு. கண்கள் திறந்திருந்தும் நாம் உண்மையில் தூங்கிக் கொண்டுதான் உள்ளோம். கேள்வி கேட்பதில்லை. நம்மைச் சுற்றி/நம்முள்ளே நடக்கும் அற்புதங்களைக் காணத் திறனின்றி வாளாவிருக்கிறோம். அப்படி வாழ்வதால்தான் நாம் நம் வினைப் படலத்திலிருந்து மீளாமல், ஆண்டாள் சொல்வது போல், "ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டு" கட்டுண்டு கிடக்கிறோம். சூழ் வினையின் ஆழ் துயரில் அவதிப் பட்டு அல்லலுறுகிறோம்! ஆனால் நாமென்னும் அற்புதத்தை அறிந்து கொண்டு, நம்மைச் சூழ்துள்ள அற்புதங்களைக் கண்டு ஆனந்திக்கும் விழிப்பு வந்துவிட்டால் ஒருவகையில் நாம் பிறவிப் பெருங்கடலைக் கடந்து விடுகிறோம். பாரதி பேசும் அமரத்தன்மை இதுதான். உலகம் உள்ளளவும் நாமும் இருக்கிறோம். இதுதான் இராமலிங்கர் பேசும் "மரணமில்லாப் பெருவாழ்வு" என்பதும். இதோ சடகோபன் கூற்று:

உள்ளிலும் உள்ளத் தடிக்கும்; வினைப் படலம்
விள்ள விழித்துன்னை மெய்யுற்றால்-உள்ள
உலகளவு யானும் உளனாவன்; என்கொல்!
உலகளந்த மூர்த்தி! உரை.

மெய்யுணர்வு என்பது இந்த விழிப்புதான். இந்த நோக்குதான். இந்தப் பார்வைதான்.

2 பின்னூட்டங்கள்:

  மதுரையம்பதி

Sunday, September 02, 2007

//அவரது அற்புதங்களில் கவனம் செலுத்தினால் வேண்டாத விதாண்டாவாதங்களில்தான் போய் நிற்கும், அதற்குப் பதில் அவர் செய்வதன் நோக்கம், அல்லது அவர் செய்யும் நற்பணிகளில் கவனம் செலுத்தினால் அற்புதங்கள் சின்ன விஷயங்களாகப் போய்விடும்.//

சத்யமான வார்த்தைகள் சார். பல தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.

  குமரன் (Kumaran)

Friday, September 07, 2007

//அவர் ஒருநாள் வானில் தோன்றி தான் கடவுள் என்பதை நிறுவுவார் என்பது வரை!//

நீங்கள் சத்ய சாயி பாபாவைத் தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்த நம்பிக்கை சாயி பக்தர்களுக்கு இருக்கிறது என்பது எனக்குப் புதிய செய்தி.

//பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலரென்றும் காண்தோறும்-பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று.//

ஆகா. நேற்று பேருந்தில் வரும் போது அடர்ந்து வளர்ந்திருந்த மரக்கூட்டத்தைக் கண்டதும் தானாகவே கைகள் தொழுது வாய் நாராயனா என்று சொல்லி உருகியது. அதன் பொருள் அப்போது புரியவில்லை. இப்போது இந்த பாசுரத்தைப் படித்த பின் பச்சை மரங்கள் ஏன் நாரணன் உருவாய் தெரிந்தது என்று புரிந்தது.

//உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம்
கண்ணன் எம்பெருமா னென்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி
திண்ண மென்னிய மான்புகு மூர் திருக்கோளூரே!//

எனக்கு பிடித்தத் திருவாய்மொழிப் பாசுரம் இது. முதல் இரண்டு அடிகள் கீதையில் வரும் 'வாஸுதேவ ஸர்வமிதி ஸ மகாத்மா சுதுர்லப' என்ற கண்ணனின் வரிகளுக்கான விளக்கம் என்று சொல்வார்கள்.