e-mozi

மடல் 062: பெருமாள்

First published on: Fri, 26 Nov 1999

இதுக்கு மேலே பஸ்ஸு போகாதுங்க! மாட்டு வண்டி வச்சுக்கிட்டு போங்க என்ற பஸ் கண்டக்டரின் பேச்சு இருபதாம் நூற்றண்டிற்கு ஒவ்வாத பேச்சாகப் பட்டாலும் தமிழகத்தில் இன்னும் இப்படிப்பட்ட கிராமங்கள் உள்ளன என்பதைத்தான் அது காட்டியது.

கட்டை வண்டி கட, புடாவென்று மலையும் மலை சார்ந்த மண்ணில் குடை கவிழாமல் போனதே அதிசயமாக இருந்தது. வண்டித்தடம், அதை ஒட்டி ஒத்தைத் தடம். அதில் செருப்போ, பூட்ஸோ போட்டுப் போனவர்களின் தடம் பதியவில்லை. மாடுகள் போய் வந்த தடங்கள் அங்கும், இங்கும் தெரிந்தன. வண்டித்தடம் மேடும் பள்ளமுமாக தேவை இல்லாத இடத்திலும், தேவையுள்ள இடத்திலுமென்று வளைந்து, வளைந்து சென்றது. பெரிதாக செழிப்பு என்று இல்லைதான். முட்புதர்கள் வழியெல்லாம் நிறைந்து இருந்தன. கோவர்த்தனகிரி போல் ஒரு மலை, அதைச் சுற்றி வந்த பசுமையில் மாடுகளின் மேய்ச்சல் வெளி. அங்கங்கே தேங்கிய மடுக்கள், கலங்கலாக. கண்ணில் தெரிந்த ஒரு பம்பு செட்டில் பொம்பிள்ளை சனங்கள் தண்ணீர் எடுத்துக்கொண்டு குடத்துடன் நடந்து சென்றனர். தூரத்தே குழந்தைகள் கும்மாளம்.

சின்ன கிராமம். குக்கிராமம். மொத்தம் 500 பேருக்கு மேலிருந்தால் அதிசயம். அந்த ஊரில் ஒரு சின்ன கோயில், ஒரு குளம், ஒரே ஒரு பம்பு செட்டு! கோவிலைச் சுற்றி சில வீடுகள். சில காரை வீடுகள், பல கூரை வீடுகள். ஒரே ஒரு வீட்டில்தான் திண்ணை. அது பெரியவருக்காக ஒதுக்கிய திண்ணை. வேரு யாரும் உட்காருவதுகூட இல்லை. திறந்த வெளியில் நிறைய காட்டுக் கருவேலிப் புதர்கள்.

“இங்கே, நீங்கள் தாராளமாகத் தங்கலாம்” வீடு திறக்கப்பட்டது. வரவேற்க கொடியாக நூலாம்படைகள். தரை முழுவதும் தூசுக்கம்பளம். “கொல்லையில் கிணறும், கக்கூசும் உண்டு”. கிணறின் அருகே வாளி இருந்தது. கயறில் பாதியைக் காணோம். கக்கூசைத் திறந்தபோது ஒரு எலும்புக் கூடு கிடந்தது. ஏதோ வளர்ப்புப் பிராணி! நாயோ, பூனையோ? அங்கு வந்து எதற்கு உயிரை விட்டது? இந்த வீட்டை விட்டுப் போன மனிதர்கள் வெகு காலமாக வந்து சேராதது அந்த எலும்புக்கூட்டில் தெரிந்தது!

“கோயில் திறக்க நாலு மணியாகும், அண்ணா, மூணரை மணிக்கு எழுந்திருவார். அதுவரை ஆசுவாசப் படித்திகொள்ளவும்”.

வீட்டை சுத்தம் பண்ணவே நாலு மணித்தியாலம் ஆகும் போலுள்ளதே?

நவநீதக்கண்ணன் கோயில் நடை சாத்தி இருந்தது. வெளி மண்டபத்தில் கொஞ்சம் நிழல், குளிர் காற்று.

“அண்ணா பிரசங்கம் கேட்க திவ்யமா இருக்கு, வைணவனிடத்திலே சாதி கேட்பது மாதாவின் கற்பை சோதிப்பது போலாகும் என்று சோல்றார். எல்லாம் சரிதான், சாதியை எங்கே விடறது?”

“நீர் விட்டாலும் அது உம்மை விடாதுங்காணும்!”

“என்ன ரெட்டியார்வாள்! இடக்காய் பேசுறீர்?”

“பார்த்தீரா? இதைத்தான் சொல்லரேன்! இந்த சந்நிதியிலே எல்லோரும் வைணவர்தானே ஐயா! ரெட்டியார் எங்கே வந்தார்? அதான் சொன்னேன், சாதியை நீர் விட்டாலும் அது உம்மை விடாதுன்னு!”

‘அது சரிதான்! அண்ணா சொல்லறார் என்பதற்காக சாதி இல்லாமல் போய் விடுமா என்ன?”

“அப்படி சொல்லலைங்காணும்! குலத்தாழ்ச்சி, உயர்வு பார்ப்பதுதான் பாவம் என்கிறேன். அது என்ன பூணூல் போட்ட ஆளுன்னா மட்டும் உடனே அண்ணாவைப் பார்க்க உள்ளே அனுப்புறீர்? அது தப்புதானே, ஓய்!”

“எதை எப்பப்ப, எப்படி பண்ணனும்ன்னு எனக்குத்தெரியாதா என்ன?”

“எப்ப பார்த்தாலும் அப்படித்தானே ஓய் பண்ணறீர்! அதுதானே இங்கே பிரச்சனை!”

இந்த உரையாடல் நடந்துகொண்டு இருக்கும் போது, ஹார்மோனியப் பெட்டியோடு ஒருவர் வந்து ஓரமாய் அமர்கிறார். பச்சை மா மலை போல் மேனி என்று ராகம் போட்டு பாட ஆரம்பிக்கிறார்.

“சபாஷ்! பலே! பலே! பாகவதர் எந்த ஊரு?”

“பக்கத்திலேதாங்க! இன்னோரு குக்கிராமம்!”

“கொண்டல் வண்ணனை... பாடமா?”

திருப்பாணாழ்வாரின் பாசுரத்தை உருக்கமாகப் பாடுகிறார். கண்களில் கண்ணீர் ஆற்று நீராய் பெருகிறது.

“கள்ளழகர் மேலுள்ள மங்களாசாசனம் சேவியுங்கோ!”

ஊழி முதல்வன் ஒருவனே என்று பாட ஆரம்பிக்கிறார்.

“நாச்சியார் திருமொழி?”

கருநீலப் பட்டு விரித்தார் போல் மேகங்காள்! என்று பாட ஆரம்பிக்கிறார்.

“குலம் தரும், செல்வம் தந்திடும்?”

திருமங்கை ஆழ்வாரின் பாசுரத்தை சேவிக்கிறார்.

“நாலாயிரமும் பாடமோ?”

“ஏறக்குறைய! இன்னும் பாடம் போய்க் கொண்டு இருக்கு!”

“யாரிடம் பாடம்?”

“எல்லாம் நம்ம பெருமாள்தான்!”

“எந்தப் பெருமாளைச் சொல்லறீர்? அந்த பரந்தாமன் இல்லைதானே?” என்று சொல்லி விட்டு அதற்கான் சிரிப்பையும் அவரே உதிர்த்தார்!

“இவர்தாங்க நமக்கு எல்லாமும். மாடு மேய்க்கிறச்சே கூடமாட உதவி செய்யறேன்னு வந்து சேந்தாரு, அப்படியே மாடு மேய்ச்சு, களனி பாத்து, வரப்பிலே வேலை பாத்து, வீட்டு சனங்களுக்கு கை வேலையிலே ஒத்தாசை பண்ணி, பிள்ளையை பாத்துகிட்டு...”

“ஏனையா! பெருமாளைப் பத்தி சொல்லச் சொன்னா உம்ம வீட்டு வேலைக்காரன் பிரதாபத்தை அளக்க ஆரம்பிச்சுட்டீரே?”

“பெருமாளை வேலைக்காரன்னு சொல்லறது தப்பு சாமி! நான் கூப்பிட்டா கணக்கா ஒடி வருவாரு வேலைகாரன் மாதிரி. அப்புறமா பாத்தா அவரு ஏதாச்சும் சொல்லக் கிளம்பிடுவாரு நான் வாயப்பாத்துக்கிட்டு ஒக்காந்துக்கிட்டு இருப்பேன். வேலைகாரன் மாதிரி காமிச்சுக்கிட்டு இருக்கற பெரிய ஆளுங்க அவரு. இல்லாட்டி கிராமத்திலே எவனுக்குத் தெரியும் திவ்யப்பிரபந்தம்? என் பாட்டுக்கே இப்படிச் சொல்லறீங்க, நீங்க அவர் பாடிக் கேக்கனும். அப்படிப் பட்ட சாரீரம். ரொம்ப அழகா அர்த்தமெல்லாம் சொல்லுவாரு.

“அடடா! அப்படியா? அவர் என்ன சாதி? நீங்க என்ன சாதி?”

“ஆரம்பிச்சுட்டீறா உம்ம குல விசாரனைய!”

“அதனாலெ என்னங்க சாமி, பெருமாளு ஆட்டு இடையர்ன்னு ஒரு முறை சொன்னாருங்க. நமக்கு மீன் பிடிக்கிற சாதிங்க.”

“சரி, அண்ணாவைப் பாக்கனுங்கற எண்ணம் எப்படி வந்தது உமக்கு?”

“இவரைப் பத்தி பெருமாளுக்கு நல்லா தெரிஞ்சு இருக்குங்கோ, அவர்தான் என்னை இங்கு அனுப்பிச்சாருங்கோ. இவரு இங்க இருக்கிற விபரம் ஸ்ரீரங்கம் போன பின்னாலதாங்கோ தெரிஞ்சது. அதாங்கோ அடிச்சு, பிடிச்சு ஓடி வரேன்!”

“நல்ல வேளை! சரியான சமயத்திலே வந்தீர். நாளைக்கு அண்ணா பிருந்தாவனம் கிளம்பறார். எப்படியோ அண்ணாவைப் பாக்கற சாக்கிலே உமக்கு ஸ்ரீரங்கவாசமும் கிடைச்சுதுன்னு வச்சுக்கும்!”

“உமக்கு என்ன வயசு இருக்கும்?”

“அதெல்லாம் யாருக்குங்க தெரியும்?”

“அட! எப்ப பொறந்தேன்னு கூட தெரியாதா? சரி, அம்மா வச்ச பேராவது உண்டா?”

“அப்படில்லாம் ஒண்ணுங் கிடையாதுங்க. ஊரு சனங்க, கட்டாரின்னு என்னைக் கூப்பிடுவாங்க. அதுக்கு அர்த்தம் என்னன்னு இன்னக்கி வரைக்கும் தெரியாதுங்க”

“சரிதான் போ! எப்ப பொறந்தேங்கற கால நியமம் தெரியலே, தனக்குன்னு ஒரு பேரு இருப்பத்தாயும் தெரியலே, என்ன ப்ரகிரதி இது!”

“அதெல்லாம் பட்டணத்திலே இருக்கிறவுங்களுக்கு தானுங்கோ, கிராமத்து ஆளுக்கு இதெல்லாம் எதுக்குங்கோ?”

“கிராமத்து ஆளுக்கு அண்ணாவோட பிரவச்சனமும் எதுக்குங்காணும்?”

“அவருக்கு சங்கீதம்ன்னா பிடிக்கும்ன்னு பெருமாளு சொன்னாருங்கோ. ஐயா கிட்டே பாடி காட்டனும்ன்னு ஆசைங்கோ”

“இருக்க இடம் கொடுத்தா மடத்தை பிடிக்க ஆசைப் படுவீர் போல! அப்புறமா அண்ணாவோட அகண்ட நாம பஜனையிலே சந்நிதியிலே பாடம்ன்னு ஆசை வரும். ஆசைப் படறதெல்லாம் நடந்துடுமா என்ன? இவ்வளவு நேரம் பாடீனீரே, அது போறாதோ? வெளியேயானாலும் பரந்தாமன் சந்நிதிதானே ஐயா!”

“அப்ப ஐயா கிட்ட பாடிக்காட்ட முடியாதுங்களா? போய் சொன்னா பெருமாளு வருத்தப் படுவாரே, நான் இப்ப என்ன செய்ய!”

“சரி, சரி, பேசிக்கிட்டே இருந்ததிலே நேரம் போனதே தெரியலே, அண்ணாவோட பிரவச்சனத்திற்கான காலம் வந்தாச்சு. எல்லாரும் மண்டபத்தி சுத்தி உட்காருங்கோ! நாழி ஆச்சு” என்று அவசரப் படுத்தினார் காரியதரிசியாக தன்னைக் கருதிக்கொள்ளும் நபர்.

ரெட்டியார் என்று அழைக்கப்பட்டவர் தனக்குள்ளே முணு, முணுத்துக்கொண்டார், “ இந்த ஆளு குலம், கோத்திரமெல்லாம் விசாரிச்சுப்பிட்டாரு, பாகவதர் இனி அண்ணாவைப் பார்த்த மாதிரித்தான்”

அந்தக் கோயிலை கட்டி நிறுவகித்துவரும் பெரியவர் அவ்வப்போதுதான் தன் ஸ்ரீரங்க வாசத்தை விட்டு கிராமத்திற்கு வருவார். பெரியவர் காணும் கோகுலம் அந்த ஊரில் இருந்தது. கள்ளமறியா ஆயர்கள், ஒரு சின்ன மலை, நிறையப் பசுக்கள். அவர் செய்யும் விரிவுரைகள் படித்த பண்டிதரையும் வாய் பிளக்க வைத்தன. பதின்மூன்றாம் நூற்றாண்டை நினைவு படுத்தும் மொழி நடை. சமிஸ்கிரதமும், தமிழும் முத்தும், பவளமும் சேர்ந்த மணியாரம் போல் அவர் வாயிலிருந்து கொட்டியது. நாலாயிர திவ்யபிரபந்தங்களுக்கு அவர் சொல்லும் வியாக்கியானங்கள், வியாக்கியானச் சக்கிரவர்த்தி எனப் புகழ் பெற்ற பெரியவாச்சான் பிள்ளையே மீண்டும் அவதாரம் எடுத்து வந்திருப்பதாக பலரை நம்ப வைத்தது. அவருக்காகத்தான் நகரத்தவர் இந்த பாடுபட்டு அந்த குக்கிராமத்திற்கு வருகின்றனர். இவரது உரைகள் காலம் கடந்து நிற்பதை உணர்ந்து, பாரிசில் நல்ல உத்தியோகம் பார்த்துக்கொண்டு இருந்த ஒருவர் இவர் பேச்சை ஊர், ஊராய் சென்று பதிவு செய்து வருகிறார். கேசட்டுப் போடும் வருமானத்தில் நல்ல சம்பாத்தியம் என்று கேள்வி. காரியதரிசி போல் இருப்பவருக்கும் இவருக்கும் பங்கு உண்டு என்றும் கேள்வி. மழை நீரைப் பங்கு போட யாரிடமும் அனுமதி கேட்கவேண்டிய அவசியமில்லை என்பது அவர்கள் வாதம். பெரியவர் கருமமே கண்ணாக கிராமம், நகரமென்று பார்க்காமல் எல்லோருக்கும் ஒரே மாதிரி விரிவுரை வழங்கி வருகிறார். நாட்டில் பக்தி பெருகி, வைணவம் தழைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

அன்றும் அப்படித்தான் விரிவுரை வழங்கினார். பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மணவாள மாமுனிகள் என்பவர் சொன்ன முற்போக்குக் கருத்துக்களை விளக்கிச் சொன்னார். பக்தி செய்வதற்கு சாதி, குலம் என்ற பேதம் இல்லை. இறைச்சரண் செய்வதற்கு இன்ன காலம், இன்ன இடம், இன்ன அதிகாரி, இன்ன வகை என்ற பேதம் இல்லை என்று பேசினார். பாஞ்சாலி சரணம் செய்த காலம் மாதவிடாய் காலம். கண்ணன் அவள் தேக சுத்தியைப் பார்க்கவில்லை, அவளது மனச்சுத்தியைத்தான் பார்த்தான். அர்ச்சுனன் சரணம் செய்தது, நல்லவர்கள் மத்தியில் இல்லை. நீசர்கள் நடுவே, பிணமும், நிணமும் உள்ள இடத்தில்தான். ஆயினும் அவனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்ட மறுக்கவில்லையே இறைவன். இன்னவர்தான் சரணம் செய்யவேண்டும் என்ற அதிகாரத்துவம் இல்லாமல் அரக்கனான வீபீடணனனும், காகமான பறவையும், காளிங்கனான பாம்பும், இளைய பெருமாளான இலக்குவனனும், சர்வ சரண்யனான இராமனும் சரணம் செய்யவிலையா? இன்ன குலம், இன்ன சாதி என்ற பாகுபாடு இறைவன் முன்பு உண்டோ?

இந்த இடம் வந்தபோது ரெட்டியார் காரியதரிசியைப் பார்த்தார். அவர் விரிவுரைகளை மற்றவர்களுக்கு விட்டு விட்டு, பட்டணத்து பணக்காரரிடம் வம்பளந்து கொண்டிருந்தார். மூலையில் மீனவர் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். ரெட்டியார் நினைத்தார், யார் கேட்க வேண்டுமோ அவர்கள் கேட்காமல், அதிகாரம் இல்லாதவர்கள் கேட்டு என்ன பிரயோசனம்? மீனவர் பேசாமல் குக்கிராமத்திற்கு போய்விடுவார் எந்த பாதகமும் இல்லாமல். பட்டணத்து சாமிகள், குலத்தாழ்ச்சி, உயர்வு சொல்லும் உயர் சாதி இந்துக்கள் அல்லவோ இதைக்கேட்கவேண்டும். அவர்கள்தானே பாதகம் செய்கின்றனர். இரத்தம் சிந்தா நூற்றாண்டு தமிழத்தில் என்றாவது தோன்றுமா? இராமானுசர் போன்ற புரட்சி வீரர்களை இந்த மண் மீண்டும் தருமா? அண்ணாவின் பேச்சு அருமையிலும், அருமை என்றாலும் அவரைச் சுற்றி உள்ளவர்கள் உயர் சாதி இந்துக்கள்தானே. ஏன் நல்ல விஷயங்கள் எல்லாவற்றிலும் முதல் பங்கை இவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்? இராமானுசர் போல் இந்த அண்ணாவும் கீழ்சாதிக்காரனின் தோள்மீது கை போட்டு பீடு நடை நடக்க வேண்டாமா? அதுதானே தமிழ் வைணவம் சொல்வது. ஆழ்வார்களின் அருளிச் செயல் அனைத்தும் வீணோ?

பிரவச்சனம் முடியும் தருவாயில் இரவு அகண்ட நாம பஜனை உள்ளதாகவும், ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென்றும் கூறி முடித்தார். அதன்முன் சமபந்தி போஜனம் உண்டு என்றும் சொன்னார்.

இரவு வருவதற்கு முன் பாகவதர் தன் மூட்டு முடிச்சுகளைக் கட்டிக்கோண்டு கிளம்ப ஏதுவானார். ரெட்டியார் கண்களில் இது பட்டது.

“என்ன பாகவதர், அதற்குள் கிளம்பிடீங்க? அண்ணாவுக்கு பாடிக்காட்டாமலே கிளம்பற எண்ணமா?

“இல்லைங்க சாமி, எதுக்கு வம்பு. அதான் ஐயரு சொன்னாரு இல்ல, எல்லாம் சாமி சந்நிதிதான்னு.”

“யோய், அவரு சொல்வாரு, அதற்காக? எல்லா இடத்திலேயும் சாமி இருக்காருன்னா அவரு ஏன் இவரு பின்னாலேயே சுத்தராரு. அவருக்கு ஒரு நியாயம், உமக்கு ஒரு நியாயமா? இருந்துதான் பாருமேன்? உமக்கு உங்க பெருமாளு சொல்வதிலே நம்பிக்கை உண்டு தானே?”

“அப்ப இருக்க சொல்லறீகளா?”

“பின்ன?”

“அப்ப நான் ஓரமா படுத்துக்கிட்டு கிடக்கேன், பஜனை ஆரம்பிச்சவுடனே சொல்லுங்க”

“என்னையா விவரம் கெட்ட ஆளா இருக்கே! சமபந்தி போஜனம்ன்னு அண்ணாவே சொன்னாரு இல்ல. வந்து சாப்பிடும்காணும். சாப்பிட்டு ஜம்முன்னு மெட்டுக்கட்டும்”

“பிரச்சினை ஒண்ணும் வராதுதானே?”

“வந்தா சமாளிக்க வேண்டியதுதான். பட்டணத்து சனம் கிராமத்திலே வந்து என்ன நாட்டாமை?”

“கிராமத்திலேயும் நாட்டாமைக்காரங்க இருக்கதானுங்க இருக்காங்க!”

“எல்லாம் மாறனும்காணும், மாறனும். பெரியவங்க கட்டிக்காத்த கட்டளையெல்லாம் காத்தோட போனா என்ன நியாயம்? அழகர்கோயில் கள்ளர்கள் தங்கள் மரியாதையை விடறாங்களா? புதுசா சட்டம் போட இவங்க யாரு?”

ரெட்டியார் சொன்ன தைரியத்தில் பாகவதர் உள்ளே சாப்பிடப்போனார். காரியதரிசி ஏதோ கையை காலை ஆட்டினார், அதற்குள் பெரியவர் உள்ளே வந்துவிட எல்லோரும் சாப்பிடத்துவங்கினர்.

இரவு பஜனைக்கு இளையவர், முதியவர், பெண்கள் என்று நிறையக் கூட்டம் வந்தது. பாகவதரும் வந்திருந்தார். காரியதரிசி அவரை முன் பக்கம் வர விடவில்லை. பஜனைக்கு வந்த அண்ணா ஆர்மோனியப் பெட்டியுடன் ஓரமாய் நின்றிருக்கும் பாகவதரை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தார். ரெட்டியார் அதை கவனித்தார்.

பஜனை சம்பிரதாயமாக அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்டு, மெது, மெதுவாக வேகம் கொண்டது. கிருஷ்ண சைதன்யர் போல் அண்ணா கையை தூக்கி ஆட ஆரம்பித்தார். அப்போது ஆர்மோனியப் பெட்டி பாகவதரைப் பார்த்து கண்ணால் ஜாடை காட்டி முன்னால் வந்து கலந்து கொள்ளுமாறு அண்ணா அழைத்தார். ரெட்டியாருக்கு கனகுஷியாகிவிட்டது. பாகவதர் கண்கள் பனிக்க, “கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன், என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!” என்று உருக்கமாகப் பாட ஆரம்பித்தார்.

சரியான பாட்டுத்தான் என்று நினைத்துக் கொண்டார் ரெட்டியார். திருப்பாணாழ்வார் செய்வித்த பாசுரம்! குலத்தில் தாழ்ந்தவர் என்று சொல்லி, கோபுர தரிசனம் செய்து கொண்டிருந்த திருப்பாணரை வழிவிடச்சொல்லி ஜாதி இந்து கல்லெறிய, அரங்கன் நெற்றியில் வழிந்ததாம் இரத்தம்! திருப்பாணாழ்வார் அரங்கனை “நீதி வானவன்” என்று புகழ்வது அதற்கல்ல. அதன் பின்னால் நடத்திக் காட்டிய விஷயத்திற்கு. நந்தனாருக்கு சிதம்பரத்தில் நந்தி வழிவிட்ட பின் அவரை தில்லைவாழ் அந்தணர்கள் எரியூட்டி விடுகின்றனர். ஆனால் திருவரங்கத்திலோ, அந்தணர் தோளில் சுமந்து கொண்டு அரங்கன் சந்நிதிக்கு வருமாறு செய்விக்கிறான். அதனால்தான் அரங்கனை நீதி வானவன் என்று புகழ்கிறார் திருப்பாணாழ்வார். அப்போது பாதாதி கேசம் பாடிய பத்தில் கடைசிப் பாட்டைத்தான் இப்போது குக்கிராமத்து பாகவதர் தெரிந்தோ, தெரியாமலோ பாடுகிறார். அவருக்கு திவ்யப் பிரபந்தம் சொல்லித்தந்த பெருமாள் அர்த்தம் சொல்லி, விளக்கிய பாட்டாகவும் இது இருக்கலாம். அப்படியெனில் பாகவதர் தெரிந்தேதான் சேவிக்கிறார் என்று கொள்ளவேண்டும். இருந்தாலும், ஒரு குறை! இத்தனை அர்த்தம் இந்த ஒரு பாடலில் இருப்பது எத்தனை பேருக்குத் தெரிகிறது? எத்தனை பேருக்கு தமிழ்ச் சமய வரலாறு தெரிகிறது? இனிப்புடன் மருந்தைக்கலந்து கொடுப்பது போல் தமிழ் சமயத்தில் எத்தனை புரட்சிகள் பக்தி என்ற போர்வையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பிள்ளைகள் பள்ளியில் படிப்பது ஐரோப்பிய சமய வளர்ச்சி பற்றிதானே? தன் நிழலில் நடப்பது என்னவென்று தெரியாமல் தூரதேசத்து சரித்திரதைப் படிப்பதால் யாருக்கு என்ன லாபம்? பிள்ளை அழுகிறதே என்று கூடையுடன் பிள்ளையைத் தூக்கி எறிந்த கதையாக தமிழகத்தில் கடவுளை வணங்குபவன் முட்டாள் என்று சொல்லி ஒட்டு மொத்தமாக முன்பு நடந்த (சமய) புரட்சிகள் வெளியே தெரியாதவண்ணம் மழுங்கடிக்கப்படுவதுதானே நடைமுறை!

பாகவதர் எல்லோருக்கும் சமமாக கலந்து கொண்டு ஆடிப்பாடி ஆனந்திப்பதைப் பார்த்து அனுபூதியடைந்தார் ரெட்டியார். இதைப் பெரிய புரட்சியின் "சின்ன அடையாளம்" என்று கொள்ளலாம் என்று ரெட்டியார் கருதினார். இப்படி மீனவரைப் பாகவதர் ஆக்கிய அந்தப் பெருமாளைக் காண வேண்டும் என்ற ஆவல் அவர் உள்ளத்தில் அப்போது தோன்றியது.

16 பின்னூட்டங்கள்:

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Monday, August 27, 2007

//திருப்பாணாழ்வார் அரங்கனை “நீதி வானவன்” என்று புகழ்வது அதற்கல்ல//

//நந்தனாருக்கு சிதம்பரத்தில் நந்தி வழிவிட்ட பின் அவரை தில்லைவாழ் அந்தணர்கள் எரியூட்டி விடுகின்றனர். ஆனால் திருவரங்கத்திலோ, அந்தணர் தோளில் சுமந்து கொண்டு அரங்கன் சந்நிதிக்கு வருமாறு செய்விக்கிறான். அதனால்தான் அரங்கனை நீதி வானவன் என்று புகழ்கிறார் திருப்பாணாழ்வார்//

ஹிஹி...
நந்தி வழிவிட்டது சிதம்பரத்தில் அல்ல, கண்ணன் சார்!
திருப்புன்கூர் என்னும் தலம்!

மேலும் நந்தனார் எரிக்கப்பட்டார் என்பது உறுதி செய்யப்படவில்லை!
எது எப்படியோ, ஆனால் சாதிக் கொடுமை காரணமாக ஆழ்வார்கள் எவருக்கும் இது போன்று அடாது செயல்கள் நிகழவில்லை!

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Monday, August 27, 2007

கதை தொடர் கதையா, கண்ணன் சார்?
//மீனவரைப் பாகவதர் ஆக்கிய அந்தப் பெருமாளைக் காண வேண்டும் என்ற ஆவல் அவர் உள்ளத்தில் அப்போது தோன்றியது//

எங்களுக்கும் தான்! :-)

//அண்ணாவின் பேச்சு அருமையிலும், அருமை என்றாலும் அவரைச் சுற்றி உள்ளவர்கள் உயர் சாதி இந்துக்கள்தானே.//

//இராமானுசர் போல் இந்த அண்ணாவும் கீழ்சாதிக்காரனின் தோள்மீது கை போட்டு பீடு நடை நடக்க வேண்டாமா? அதுதானே தமிழ் வைணவம் சொல்வது.//

இப்படி ஆங்காங்கே இராமானுசரின் உள்ளக் கிடக்கைகளைத் தூவியிருக்கீங்க!

  நா.கண்ணன்

Monday, August 27, 2007

கண்ணபிரான்: குறிப்பிற்கு நன்றி. நந்தனார் பற்றிய அபிப்பிராயம் பேரா.இ.பா வழி ஒட்டியது. அது தவறாக இருப்பின் ஆன்மீகத்திற்கு நல்லதே. ஆயினும் வன்முறைகள் அந்த மண்ணில் நிரம்ப நடந்துள்ளன.

  துளசி கோபால்

Monday, August 27, 2007

அடாடாடா........................ பெருமாள் பெத்தப் பெருமாளாத்தான் இருக்கா(ர்)ன்.

அருமையா இருக்கே கண்ணன்.

  நா.கண்ணன்

Monday, August 27, 2007

நன்றி! துளசி. முன்பு எழுதிய கதை. இது எனது சிறுகதைத் தொகுப்பில் இருக்கிறது. உங்க 'பெத்த பெருமாள்' தவிர மற்றதெல்லாம் உண்மை. அவரைப் பாரதி முன்னமே ஸ்வேகரித்து விட்டான் :-)

  மதுரையம்பதி

Sunday, September 02, 2007

நீங்கள் பெருமாளை, ஆழ்வார்களை, பரனுராரை உயர்த்திச் சொல்வது சரியே....ஆனால் நந்தனார் கதையெல்லாம் சரிதானா?........
என்னதான் மீள்பதிவென்றாலும், எனக்கென்னமோ இது சரியெனத் தெரியவில்லை.

  Anonymous

Sunday, September 02, 2007

Kannan sir,vanakkam.
Perumal ullam kavarndhan.Really very very interesting.
ARANGAN ARULVANAGA.
anbudan
k.srinivasan.

  நா.கண்ணன்

Sunday, September 02, 2007

மதுரையம்பதி: உங்கள் நந்தனார் கருத்து பதிவாகிறது. நான் முன்பு சொன்னது போல் அது இ.பா. வழியான ஒரு புரிதல். அது தவறாக இருக்கவே நானும் விரும்புகின்றேன். ஆனால் தில்லை வாழ் அந்தணர் இன்றளவும் கொடுக்கும் தொந்தரவுகள் (எல்லோருக்கும்தான்) பதிவாகியுள்ளன!

  நா.கண்ணன்

Sunday, September 02, 2007

ஸ்ரீநிவாசன் சார்:

உங்கள் இன்மொழிகளுக்கு நன்றி.

  Anonymous

Monday, September 03, 2007

//நந்தி வழிவிட்ட பின் அவரை தில்லைவாழ் அந்தணர்கள் எரியூட்டி விடுகின்றனர்.//

எவ்வளவோ துன்பங்களில் இருந்து காத்து உதவிய சிவன். நந்தியை விலகச் சொல்லி தரிசனம் கொடுத்த சிவன்,
அந்தணர்கள் எரிக்கும் போது மட்டும் பேசாதிருப்பாரோ!?

இதெல்லாம் இட்டுக்கட்டிய தில்லுமுல்லு என்பது சிறு குழந்தைக்கே புரிந்து விடும். :-))

  மதுரையம்பதி

Monday, September 03, 2007

நன்றி கண்ணன் சார்.

இன்றும் தில்லைவாழ் அந்தணர்கள்(???), தரும் தொல்லைகள் அறிவேன். மேலும் அவர்கள் இன்று நடந்து கொள்ளும் விதம் சைவமோ, சாக்தமோ, அத்வைதமோ அல்ல என்பதை நீங்களும் அறிவீர்.
:-)

  nAradA

Monday, August 04, 2008

Not to beat a dead horse, the nandanAr story has been morphed so many times. SEkkizhAr himself must have coined the story from some hearsay about nandanAr. What is known is that nandanAr lived in a cEri making musical instruments, kOrOjanai (from the cow's liver?) etc.,and supplying them to temples. SEkkizhAr emphasized that nandanAr was aware of his low caste and accordingly he himself stayed away from the close proximity of temples. In tiruppunkUr he stayed at the car park (tEraDi) and appealed to the Lord to let the bull (nandi) move slightly in order to let him see the Lord which the Lord ordered (this episode is from Gopalakrihsna Bharathi's nandan carittiram which is another morph). GKB had his own agenda.

nandanAr then wanted to visit Cidambaram but did not have the courage to enter the city. The Lord finally told him what to do. He asked him to enter the fire, get purified, and then enter the temple precincts. Simultaneously He appeared in the dreams of the dIkshitars and told them to raise the fire in the pit and let nandanAr enter it. That is the story. nandanAr entered the fire pit, got transformed as a brahmin with the pUNUl in his chest, entered the temple and disappeared. Even the fire pit episode was concocted by SEkkizhAr to accommodate the religious sentiments (not admirable though) that prevailed at that time. What shall we say? Society is very cruel and anybody who violates its current norms are punished. Bharathi is one such example in the 20th century.

  நா.கண்ணன்

Monday, August 04, 2008

நன்றி. அக்னிப்பிரவேசம் என்பது ஜெகன்மாதா சீதாவிற்கே ஆகியிருக்கிறது. சமூகத்தின் கெடுபிடிகள் அதிகம்தான். நல்ல வேளையாக நாம் 20ம் நூற்றாண்டில் பிறந்தோம்! வாழ்க நம் கர்மா!

  nAradA

Tuesday, August 05, 2008

An addendum to my previous post:
The episode of the bull moving aside in the temple at tiruppungUr was not concocted by GKB as my post implied. It was part of SEkkizhAr's periya purANam. GKB's concoction was converting nandanAr into a farmhand working for a disdainful brahmin landlord who was demanding so much of nandanAr as to prevent him from going to Cidambaram. Finally even that landlord begged nandanAr to let him in on the secret of nandanAr's greatness of being a devotee of the Lord. That was GKB's revenge on the brahmin community which was opposed to him despite GKB being a brahmin (The details of the wranglings between GKB and the brahmin community are not known).

SEkkizhAr himself while succumbing to social pressure in letting nandanAr undergo the fire ordeal redeemed himself in the end by devoting a few stanzas describing how the tillaivAzh andaNargaL were awestruck at the emergence of nandanAr like a sage from the firepit and worshipped him. There you see saivism being redeemed despite the bigotry exhibited earlier. This goes in line with sItA's second agnipravEsam after which she became one with her mother (bhUdEvi) like nandanAr did upon entering the sanctum sanctorum of the Lord.

  நா.கண்ணன்

Tuesday, August 05, 2008

அக்னிப்பிரவேசம் என்பது எக்காலத்திலும் வழக்காடக்கூடிய ஒரு விஷயம். கணபதி சச்சிதானந்த சுவாமிகள் அக்னி குண்டத்திலேயே இறங்குவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வள்ளலார் மீது அக்னி பட்டபோது அவரது உடல் தீயவில்லை என்றும் படித்திருக்கிறேன். இந்த அநுபூதி நிலை பற்றி பாமரன் அறிந்து கொள்வது மிகக்கடினம். எனவேதான் அரங்கநாதர் திருப்பாணாழ்வார் விஷயத்தில் அந்தணருக்குக் கனவில் வந்து நல்லுரை சொல்லித் திருத்தி ஆழ்வாரைத் தோளில் சுமந்து வரச்சொன்னது இயல்பாக ஏற்றுக் கொள்வதாய் உள்ளது.

அந்தணர் என்ற குறியீடு இங்கு 'ஆணவம்' எனும் செயல் ஆன்மீகத்திற்கு எதிர் என்பதைக் காட்டத்தான். இதைச் சரியாகப் பொருள் கொள்ள வேண்டிய கடமைப்பாடும் நமக்குண்டு ;-)

  Thamizth Thenee

Wednesday, November 26, 2008

அடடா என்னதான் படிக்காத கிராம வாசியென்றாலும் பக்தி செலுத்துவதற்கும், அவன் நாமம் சொல்லுவதற்கும் ஜாதி என்ன குலம் என்ன கோத்திரமென்ன அடியார் என்கிற ஒரு தகுதி போதுமே
அதை அழகாகக் சொல்லி இருக்கிறீர்கள்
அன்புடன்
தமிழ்த்தேனீ