e-mozi

மடல் 063 வணங்கும் துறைகள் பலபல ஆக்கி....

First published on : Wed, 1 Dec 1999 08:34:02 -0800 (PST)

அருகில் ஒரு மீனாட்சி கோயில் உள்ளது. அன்னை, திசைக்கு ஒன்றாய் அருள் பாலிப்பாள் என்று அகதியாய் வந்திருக்கும் தமிழர்களுக்கு காட்சி கொடுக்க, கிழக்கே மீனாட்சி கோயில் ஒன்று உருவாகி வருகிறது. மேற்கே ஹம் நகரில் காஞ்சி காமாட்சி பெருங்கோயில் கொண்டுள்ளாள். அன்னை முதலில் வருவதுதான் சரி. காப்பவள் இல்லாமல் வாழ்தல் எப்படி? அதுவும் அந்நிய மண்ணில்!

மதுரைக் காரர்களுக்கு மீனாட்சி இல்லாமல் வாழ்தல் சிரமம் :-) வழக்கமாக போய்வரும் என்னை ஒரு நாள் ஒரு சிறுமி கேட்டாள், "என்ன மாமா? இன்று ரொம்ப லேட்?", தாமதித்து வந்த நான் பதில் சொன்னேன், "இல்லடியம்மா! பாசுர மடல்கள் எழுதி அனுப்பி விட்டு வர தாமதமாகிவிட்டது" என்று. அவளுக்கு ஒரே ஆச்சர்யம்! "பாசுரமடல்களை நீங்கள் எழுதுவானேன்? நீங்கள்தான் சைவராச்சே!" என்றாள்.

அவள் என்னை அன்புடன் "சைவன்" என்று சொன்ன சொல்லை என்னால் மறுதலிக்க முடியவில்லை. வைணவத்தைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம் என்று சொன்னேன். ஆழ்வார்களின் அருளிச் செயல் இல்லாமல் தமிழ் அவ்வளவு இனிக்காது என்று சொன்னேன். அவள் தலையாட்டி கேட்டுக் கொண்டாள்.

சட்டென எனக்கு ஆழ்வார்களில் மூத்தவரான பொய்கையார் நினைவு வந்துவிட்டது! அவர் யாத்த முதல்திருவந்தாதியில் சொல்கிறார்:

அரன்நாரணன் நாமம்; ஆன்விடைபுள் ளூர்தி;
உரைநூல் மறை; யுரையுங் கோயில்-வரை நீர்
கருமம் அழுப்பளிப்பு; கையதுவேல் நேமி
உருவம் எரி கார்; மேனி ஒன்று
(5)


அரன்-நாரணன் - நாமங்கள்; ஆன்விடை(எருது)-புள்(கருடன்) - ஊர்தி;
நூல் (ஆகமம்)-மறை (வேதம்)- உரை; வரை(கைலாச மலை)-நீர்(திருப்பாற்கடல்) - கோயில்;
அழிப்பு (அழித்தற் கடவுள்), அளிப்பு (காத்தற் கடவுள்) - கருமம்; வேல்,நேமி (சக்கரம்)- கையது;
எரி (சிவப்பு), கார் (கருப்பு) - உருவம்; மேனி ஒன்று - உடல் ஒன்று (உயிர் ஒன்று).

எவ்வளவு அன்பான பார்வை. அரனும், நாராணனும் உயிரும் உடலும் போல ஒன்று என்கிறார்.

அந்தக் காலத்து மனிதர்களே தனிதான்! சங்கம் முடிந்த பின் வரும் களப்பிரர் காலத்தில் தமிழ் சமயங்கள் அனாதைகளாய் இருந்த காலம். இருண்ட காலத்தில்தான் ஒளி வேண்டி இருக்கிறது. இக்காலக் கட்டத்தில் ஒளி தந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் உண்டு. அவர்களுக்குள் நல்லிணக்கமும் இருந்திருக்கிறது. அத்தகைய நாயன்மார்களுள் காரைக்கால் அம்மையார் முக்கியமானவர். தன்னைப் பேயாக மாற்றியேனும் சிவன் ஆடும் ஊழிக்
கூத்தை கண்ணுறும் ஆவல் கொண்ட மங்கை இவர். இவர் தலையால் நடந்து வருவதைக் கண்டு உமையவள் நகைத்தாளாம். அப்போது இறைவன் சொன்னாராம், இவள் பேயல்ல, என்னை ஈன்ற தாய் என்று! அந்தப் பேரு பெற்ற நங்கையார் ஒரு தங்கமான பாடல் அருளிச் செய்கிறார்

ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை
ஒருபால் உமையவளாம் என்றால்-இருபாலும்
நின்னுருவம் ஆக நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவமோ மின்னுருவோ நேர்ந்து


உமையொரு பாகன் மட்டுமல்ல அவன், மாலொரு பாகனும் கூட என்கிறார் இத்தாய். இவரும் பூதத்தாழ்வாரும் சேர்ந்து அந்தாதி என்ற அழகு தமிழை அளித்தாக ஒரு ஐதீகம் உண்டு. பூதத்தார், பேயாழ்வார், பொய்கையாழ்வார் மூவரும் சேர்ந்து திருமாலை அனுபவித்த அழகான கதையொன்று உண்டு (காண்க பாசுர மடல்: ஆழ்வார்களின் அறிமுகம்). அப்படியெனில் காரைக்கால் பேயாரும், பேயாழ்வாரும் சம காலத்தவராக இருந்திருக்க வாய்ப்புண்டு. பெயர் பொருத்தம் போதாதோ! அப்படியில்லை :-) அவர்கள் பார்வையிலும் ஒற்றுமை உள்ளது. திருவாலங்காட்டு ஈசனை காரைக்கால் பேயார் மாலொரு பாகனாய் பார்க்கிறார். பேயாழ்வார் திருவேங்கடவனை வேங்கடேஸ்வரனாக (வேங்கடம் + ஈசன்) பார்க்கிறார்:

தாழ்சடையும் நீள்முடியும், ஒண்மழுவும் சக்கரமும்
சூழ்அரவும் பொன் நாணும் தோன்றுமால்-சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து


(மூன்றாம் திருவந்தாதி-பேயாழ்வார்)

வேங்கடத்தான் பொல்லாத ஆசாமி :-) அவர் கோயிலை வெளியிலிருந்து பார்த்தால் சிம்மம் இருக்கும். சரிதான் இது ஆம்பாள் கோயில் போலுள்ளது என்று நினைக்கலாம். உள்ளே போனால் காஞ்சி ஆசார்யர் வில்வ பூஜை செய்து கொண்டிருப்பார். சரிதான் இது சிவன் கோயில் போலுள்ளது என்றால், காலையில்


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!


(குலசேகர ஆழ்வார் - பெருமாள் திருமொழி 4.9)

என்று வைணவ மெய்யடியார்கள் திவ்யப் பிரபந்தம் சொல்லிக் கொண்டிருப்பர். இராமானுசர் காலத்தில் இது குமரன் கோயிலாக தரிசிக்கப் பட்டதாக குருபரம்பரைக் கதைகள் சொல்லுகின்றன. (இத்தனை மூர்த்தங்களும் ஒன்றாய் இசைந்ததாலோ என்னமோ அங்கு அருள் மழையும், பொருள் மழையும் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது!)

சைவ சமயம் இன்றுள்ள நிலைக்கு திருஞான சம்மந்தரும், அப்பரும் பெருந்தொண்டு ஆற்றி உள்ளனர். ஊர் ஊராகப் போய் கோயில்களை உருவாக்கி, பழைய கோயில்களின் பெருமையை நிலை நாட்டி, வாது வந்தால் வாதிட்டு, மந்திரம் கேட்டால் மந்திரம் செய்து, தந்திரம் கேட்டால் தந்திரம் செய்து சிவத் தலங்களை நிலைப்படுத்தினர். அத்தகைய பேரருளாளரான அப்பர் பெருமான் பாடுகிறார்:

பண்டானைப் பரந்தானைக் குவிந்தான் றன்னைப்
பாரானை விண்ணா இவ்வுலகமெலாம்
உண்டானை உமிழ்ந்தானை உடையான் றன்னை
ஒருவருந்தம் பெருமைதனை யறிய ஒண்ணா
விண்ணடானை விண்டார்தம் புரங்கள் மூன்றும்
வெவ்வழலில் வெந்து பொடியாக வீழக்
கண்டானைக் கற்குடியில் விழுமியானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே! (திருநாவுக்கரசர்)

உலகம் உண்ட பெருவாயனான கண்ணனை தன்பால் கொண்டுள்ளான் புரம் அழித்த முக்கண்ணன் என்று சொல்கிறார்.

தமிழ் வைணவத்தின் பிதாமகரான நம்மாழ்வார் திருவாய்மொழியின் ஈற்றில்

அவாவறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவிலந் தந்தாதிகளால் இவையாயிரமும் முடிந்த
அவாவிலந் தாதி பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே.


என்று முடிக்கிறார். அவா அற சூழ் அரியை என்றால் விரும்பியவற்றை நல்குபவன் திருமால் என்று பொருள்.

சேர்த்து வாசித்தால் அரியை, அயனை, அரனை அலற்றி (கூப்பிட்டு) வீடு பெற்ற சடகோபன் என்று முடியும். ஒரு சன்மார்க்க நெறியை கோடி காட்டி விட்டுச் செல்கிறார் என்று பொருள் கொள்ளலாம்.

மாற்றாக, அயனை அரனை அவாவற்று, அரியை அலற்றி, வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் என்றும் சொல்லலாம். இது வைஷ்ணவர்களை மகிழ்வூட்டும் வியாக்கியானம்.

அயனை அரனை அவா அறச் சூழ் அரியை அலற்றி, வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் என்பது இன்னொரு வகை. அதாவது அயன், அரன் இவர்களுக்கும் மங்களத்தை நல்குபவனான சர்வேஸ்வரனான அரியை வழி பட்டு முக்தி அடைந்த சடகோபன் என்பது இதன் பொருள். இதுதான் வீர வைஷ்ணவர்களுக்கான வியாக்கியானம் :-))


இப்படி வியாக்கியானம் சொல்லிச் சொல்லித்தான் சைவ-வைஷ்ணவச் சண்டைகள் உருவாகியிருக்க வேண்டும். முதல் மூவரும், காரைக்கால் அம்மமையாரும், அப்பரும் காணும் சமரச நோக்கு எப்படி பின்னால் காணாமல் போனது? எல்லாம் செல்வக் கொழுப்பு என்றுதான் சொல்ல வேண்டும். வலுப் பெற்றிருந்த சமணத்திடமும், பெளத்தத்திடமும் சண்டை போட்டு பண்டைத் தமிழ் தெய்வங்களை காப்பாற்ற வேண்டிய கால கட்டத்தில் சைவ-வைணவ வேற்றுமைகள் கண்ணுக்குத் தெரியவில்லை. இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து காணப் பட்டது அப்போது. ஆனால் சமணர்களை கழுவேற்றி, பெளத்தர்களை சிலோனுக்கு அனுப்பிவிட்டு (இது பகடி!) சைவமும், வைணவமும் தமிழ் மண்ணில் செழித்தபோது பங்காளிச் சண்டைகள் ஆரம்பமாகி இருக்கின்றன. இது என்ன பேதமை கண்டீரோ?

சேரமான் பெருமாள் நாயனாரின் பார்வையல்லவோ நமக்கு வேண்டும்:

இடம் மால் வலம்தான்; இடப்பால் துழாய்
வலப்பால் ஒண்கொன்றை
வடமால்; இடம் துகில் தோல் வலம்
ஆழி இடம் வலம்மான்
இடமால் கரிதால் வலம் சேது
இவனுக்கெழில் நலஞ்சேர்
குடமால் இடம், வலம் கொக்கரை
யாம் எங்கள் கூத்தனுக்கு

(பொன் வண்ணத்தந்தாதி - சேரமான் பெருமாள் நாயனார்)

இடதுபுறம் திருமால்- திருத்துழாய் மாலை, துகிலாடை, சுடராழி, கரிய நிறம்
வலது புறம் சிவன்- சிவப்பு நிறம், கொன்றை, புலித்தோல், மான்.

சிங்கப்பூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் முருகனுக்கும், பிள்ளையாருக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. கள்ளழகர் சந்நிதியில் பிள்ளையார் உட்கார்ந்து இருக்கிறார். நல்ல வேளை நல்ல திருநாமத்துடன் (பிழைத்தார்!). விஜயவாடாவில் உள்ள நரசிம்மப் பெருமாள் கோயிலை நான் முன், பின் கண்டதில்லை. என் தோழன் அழைத்துச் சென்றான். நல்ல
வைணவ குடும்பத்தில் வந்தவன். கோயிலுக்குப் போகுமுன் அவனது பூஜை புனஸ்காரங்களை முடிக்கும் தருவாயில் எனக்குத் தோன்றியது ஒரு பிள்ளையார் பெருமாள் கோயிலில் இருப்பதாக. போய் பார்த்தால் பிள்ளையார் இருக்கிறார்! பின் விசாகப் பட்டிணம் போய் சிம்மாச்சலம் போய் வந்தேன். மிக, மிக அழகான வனப் பிரதேசம். "இதுதான் பெருமாள்" என்று சந்நிதியைக் காட்டினால் இருக்கிறார் சிவலிங்கம்! "என்ன மாற்றமிது?"
என்று கேட்டால், "நரசிம்மரின் உக்கிரத்தை தனிக்க சந்தனக் காப்பு செய்து, செய்து அது லிங்கம் போல் வந்துவிட்டது" என்றார்கள். அந்த சந்தனக் காப்பை சுரண்ட வேண்டுமென்று அவா உள்ளத்தில் வந்தது. எலும்பு முறிந்துவிடும் என்று தெரிந்ததால் அப்பரைப் போல், பொய்கையாழ்வார் போல், காரைக்கால் அம்மையார் போல், பேயாழ்வார் போல், சேரமான் பெருமாள் நாயனார் போல் நானும் இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து இருப்பதாய் எண்ணி தரிசித்து மீண்டேன்!!
_______________________________________________________________________________
முதலாம் திருவுருவம் மூன்றென்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர்- முதல்வா!
நிகரிலகு காருருவா! நின்னகத்த தன்றே
புகரிலகு தாமரையின் பூ!
(நம்மாழ்வார்)

4 பின்னூட்டங்கள்:

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Monday, August 27, 2007

//இராமானுசர் காலத்தில் இது குமரன் கோயிலாக தரிசிக்கப் பட்டதாக குருபரம்பரைக் கதைகள் சொல்லுகின்றன//

இல்லை!

குருபரம்பரைக் கதைகள் அவ்வாறு சொல்லவில்லை! குமரன் கோவிலாகவும் பார்க்கப்படவில்லை!
ஒரு சாரார் மட்டுமே சிவனோ, முருகனோ என்று ஐயுறுகிறார்கள். அவ்வளவே! அப்போதும் திருமால் வழிபாடு தான் நடந்து கொண்டிருந்தது!

பார்க்கவும்: அனந்தாழ்வானின் வேங்கடேச இதிகாச மாலை. இதில் வரலாற்றுக் குறிப்புகளும், சமயவாதிகளின் வாதங்களும் அதை மறுத்துரைக்கும் ராமானுசரின் வாதங்களும் உள்ளன!

திவாகர் சார் எழுதிய புதினத்தில் கூட இப்படி காணப்படவில்லை! சர்ச்சை தான் எழுப்பப்படுகிறது!

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Monday, August 27, 2007

//சேர்த்து வாசித்தால் அரியை, அயனை, அரனை அலற்றி (கூப்பிட்டு) வீடு பெற்ற சடகோபன் என்று முடியும். ஒரு சன்மார்க்க நெறியை கோடி காட்டி விட்டுச் செல்கிறார் என்று பொருள் கொள்ளலாம்//

உண்மையும் அஃதே கண்ணன் சார்!
முனியே நான்முகனே முக்கண்ணப்பா என்று பிறிதொரு இடத்திலும் சொல்கிறாரே!

ஒரு திவ்யதேசத்தில் பெருமாளுக்கு ஆண்டுக்கொரு முறை விபூதி அணிவிக்கிறார்கள். தனிப் பதிவு இடுகிறேன்!

  நா.கண்ணன்

Monday, August 27, 2007

திருமலை பற்றிய சர்ச்சைகள் அவ்வப்போது வருவதுண்டு. அவனை "பாலாஜி" என்று சொல்வதே அது "பாலா"(ம்பிகா) கோயில் எனும் அர்த்ததில் என்று சொல்வார் உளர். அதுவொரு சமணர் கோயில் என்ற சர்ச்சை வந்ததுண்டு. இராமானுசர் காலத்தில் இதைச் சரிகட்ட அவர் எல்லாத் தெய்வங்களின் ஆயுதங்களையும் வைத்து மூடிவிட்டு அவன் எதைத் தேர்ந்தெடுக்கிறானோ அதுவே சத்தியம் என்று செய்தார் என்றும், அடுத்த நாள் கதவு திறந்த போது வேங்கடேசன் சங்கு, சக்கிரத்துடன் இருந்ததாக ஒரு கதை உண்டு!

  மதுரையம்பதி

Monday, September 03, 2007

நானும் கேள்விப் பட்டிருக்கிறேன், திருவேங்கடத்தில் முன்பு குமரக்கடவுள் இருந்ததாக......

கருவறை விமானத்திலும் ஏதோ இதற்கு சான்று இருப்பதாக கூறுவார்கள், (மறந்துவிட்டேன்).