e-mozi

மடல் 064 - வாலைக்குமரியும், வண்ணநிலவனும்

Published on: Date: Sun, 12 Dec 1999 21:56:48 +0100

தமிழ் சொல்லும் ஆன்மீகமென்பது மிக, மிக ஆழமான ஒன்று. பல்வேறு தளங்களில், பல்வேறு பொருள் கொடுக்கும் வண்ணம் அமைந்துள்ள ஒரு அட்சய பாத்திரம். மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு சரித்திர தொடர்ச்சி காட்டும், அறிவியல் ஆய்விற்கு உட்படும் பொருளாகத் தோன்றும். வேறொரு பார்வையில் அதிக சடங்குகள் அடங்கிய, புராணங்கள் நிரம்பிய, கதைக் களஞ்சியம் போலும் தோன்றும். உளவியல் கண்ணோடு பார்த்தால் பரிபாஷைகள் அடங்கிய, குறியீடுகள் நிரம்பிய, ஆழ்ந்த பொருள் தரும் அறிவுக் களஞ்சியமாகத் தோன்றும். இன்னொரு கோணத்தில், நம் அறிவிற்கு அப்பாற்பட்டு, அற்புதங்கள் அடங்கிய, அமானுஷ்ய தளத்தில் இருப்பதும் புலப்படும். ஒரு சாதாரண தமிழன் இந்த நிலைகளுக்குள் உள்ளும், வெளியும் போய் வந்த வண்ணமே இருப்பது உலக அதிசயங்களில் ஒன்று. மிகையில்லை!இந்து மதம் என்று விதேசிகளால் பெயரிடப்பட்ட இந்திய மெய் ஞானம் காலம் கடந்து இன்றும் அதிசயதக்க விதத்தில் இருப்பதால்தான், காலத்திற்கு காலம் புதிய விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டு என்றும் இளமையுடன் திகழ்கிறது. இன்றைய இந்து மதம் ஆரிய சமய ஞானத்தையும், காலத்தால் முந்திய திராவிட மெய் ஞானத்தையும் உள் அடக்கி வாழ்கிறது. இதற்குள் உட்பூசல்கள் இருந்தாலும், இக்கூறுகளை இனம் கண்டு பிரித்துப் பார்த்து இனி நிலைப்படுத்துவதென்பது மலையை முடியால் இழுத்த கதையாகத்தான் போகும் என்பது விவேக சிந்தனை.

பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட மூட நம்பிக்கைகள் நிரம்பிய, சடங்குகள் மண்டிக்கிடக்கும் ஒரு பரிமாணமும் இம்மதத்திற்கு இருக்கிறது. அதுதான் அடிக்கடி வம்பில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குவது. அதைப் பற்றியல்ல இக்கட்டுரை. புராணங்களப் பற்றியும் அல்ல. அற்புதங்களைப் பற்றியுமல்ல.வேதாந்த, சித்தாந்த விசாரங்களப் பற்றியும் இல்லை.

திராவிட மெய்ஞானத்திற்குப் பின் புலமாக, பக்க பலமாக அமைந்திருப்பது, அறிவிற்கு உட்பட்டு, பின் அதை மேவி விரியும் தந்திரவியலாகும். தந்திரம், மந்திரம் என்பது மிக ஆழமாக, விரிவாக சைவ பாரம்பரியத்தில் காணக் கிடைக்கிறது. காலத்தால் பழமையுடைய வைணவ வழிமுறைகளில் அது பூடகமாகவே வெளிப்படுகிறது. பின்னால் வந்த வைணவக் குரவர்கள் சரணாகதி அல்லது பிரபத்தி என்பதற்கு கொடுத்துள்ள கவனம் இந்த வைணவ தந்திர வெளிப்பாட்டை பின்புலத்தில் தள்ளி வைத்திருக்கலாம். ஆனால் நிச்சயமாக முதல் மூன்று ஆழ்வார்கள் காலத்திலும், அவர்கள் காலத்தில் வாழ்ந்தாக நம்பப்படும் திருமழிசையின் காலத்திலும் பட்டவர்த்தனமாகவே உள்ளது என்று சொல்லலாம்.

உண்மையில் யோகமும், தந்திரமும் எந்த ஒரு இந்திய சமயத் துறைக்கும் பிரத்தியேகமானது என்று சொல்வதற்கில்லை. சமண, பெளத்த, சைவ, வைணவ, பின்னால் வந்த இஸ்லாமிய (சுபி), கிருத்தவ சமயங்கள் எல்லாவற்றிலும் இது காணக்கிடைக்கிறது. எனவே இதை சமயம் கடந்த, எல்லா சமயங்களுக்கும் அடித்தளமிடும் ஒரு அறிவியல் என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது.


இம்மடலில் சைவ, வைணவத் துறைகளில் அடி வேராய் அமையும் சில தந்திரங்களைப் பற்றிப் பார்ப்போம்.

சித்தர்கள் என்று சைவ உலகில் அறியப்படும் மெய் ஞான வித்தகர்கள், யோகிகள் என்று வைணவ உலகில் பேசப் படுவர். பொதுவாக இவர்களை ஞானிகள், ரிஷிகள் என்றும் சொல்வதுண்டு. சித்தர்கள் எத்தனையோ! பல்வேறு பட்டியல்கள் உள்ளன. அவர்களில் காகபுஜுண்டர் என்பரும் ஒருவர். இவர் கல்ப காலங்கலாக வாழ்ந்து வருவதாகவும், வஷிஷ்டர் முதல் பல ரிஷிகள் இவரிடம் பாடம் கேட்டதாகவும், அவர்களுக்கிணங்கி, அன்பால், சாகா வாழ்வு பற்றி அவர் செய்வித்த பெருநூல் காவியம் 1000 என்னும் நூல் தமிழில் உள்ளது. அதில் இவர் மரணமில்லாப் பெருவாழ்வு பற்றி நிரம்ப பேசுகிறார். இதற்கு வாலைச் சித்தர் என்பவர் தனது தவ வலிமையால் நல்லதொரு விளக்கம் செய்துள்ளார்.

காகம் என்பது நல்லதொரு உணவைக் கண்டவுடன் தன் சுற்றத்தை கூவி அழைத்து பகிர்துண்ணும் பண்புடையது. அது போல் காகபுஜண்டரும் தனது மெய் ஞானப் புரிதலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

மீதம் நீருடலுயிரும் நினைவும்போகும்
வேதாந்த மாகருவும் உள்ளே நிற்கும்
நாதம்நீர் அண்ணாக்கு வாசல்மார்க்கம்
நாம் நினையா தேயிருந்தும் பேசும்வாசல்
போதம்பார் பரிபாசை யாகப்பாடும்
பொய்யதுவுந் தாந்தெரியும் மெய்யுங்காணும்
நீதம்பா ரத்தனையும் தானேகாணும்
நில்லும் நில்லும் நானறிவேன் நினைத்த மார்க்கம்.
[61]

முக்கியமாக அவர் சொல்லும் சேதி இதுதான். இந்த யோகாப்பியாசத்தால் வரும் பலன்களில் முக்கியமானது வேதாந்தம், மெஞ்ஞான பரிபாஷைகள் எந்த வேத அப்பியாசமும் இல்லாமல் தானாகவே பாகம் படும் என்பது. அதாவது, வருஷக் கணக்காக குரான் ஓதிக் கொண்டு இஸ்லாமை அறியாத மூடன் போல, வேதம் ஓதிக் கொண்டு மறை பொருள் அறியாத மூடர்களும் உண்டு. திருமழிசை ஆழ்வார் தெரு ஓரம் நடக்கின்றார். அவர் வேதம் ஓதும் பார்ப்பனர் அல்லர். பார்ப்பனர்கள் வேதம் ஓதும் போது அறியாது தவறு செய்கின்றனர். அதை வழிநடை செல்லும் திருமழிசை திருத்துகிறார். வாதம் வருகிறது, அப்போது, அந்தணர்கள் அறிந்திடாத வேதத்தின் உட் பொருட்களை புட்டு, புட்டு வைக்கிறார். இது எப்படி சாத்தியமாகியது?

மெய்ஞானம் என்பது அனுபவத்தால் வர வேண்டும் என்று அழுத்திச் சொல்கிறார் காகபுஜண்டர். அதுவில்லாமல் வெறும் புத்தக அறிவுடையோரைக் கேலி பேசுகிறார் இப்படி:

திரும்பிக்கொள் வாரவர்கள் சித்தர்தானோ
செப்பினதைக் கேளாதார் பெரியோர்தானோ
திரும்பிக்கொள் மனமிருக்கச் சந்தேகத்தால்
தேசத்தில் சுகிக்கறியா விருதாஞானி
திரும்பிக்கொள் உலகருமே ஓடிப்போவார்
தேசத்தில் ஞானபரி பாஷையென்பார்
திரும்பிக்கொள் ளுலகத்தோர் கேட்டதற்குச்
சிவபூசை செய்ததுபோற் புலம்புவரே.
[66]

இப்படிப் பட்ட பொய் ஞானிகளை "விருதா" ஞானி என்று கேலி செய்கிறார். (சித்தர்களின் மொழி நடை பேச்சுத் தமிழை ஒத்து இருப்பது ஒரு அழகு). இவர்களைக் கேட்டால், "பரிபாஷை" என்பர், மெளன மொழி என்பர், சிவ பூசை முற்றும் அறிந்தது போல் புலம்புவர் என்று சாடுகிறார், காகபுஜண்டர்!

இவரது மெய்ஞானப் புரிதலாக வருவது, குண்டலினி சக்தி என்னும் கிரியா சக்தி சரியான யோக மார்க்கத்தில் ஈடுபடும் போது, சின்னஞ்சிறு கன்னியாக வெளிப்படும் என்பதுதான். இந்த கன்னியை "வாலைக் குமரி" என்றழைப்பர் சித்தர்கள். இவள் பார்ப்பதற்குத்தான் சிறியவள், ஆனால் அவள் பெற்ற அன்னையைவிட நம்மை வேண்டிக் காப்பள், வேண்டிய நல் அருள் தருவள். அந்த சுகானுபவத்தை சொல்ல வார்த்தை இல்லை என்கிறார் காகபுஜண்டர்:

உச்சிமேல் கைகாட்டும் பொங்கிச்சாயும்
உறுமுகிடாய் திருகுகொம்பு போலத்தானே
எச்சியே தான்விசிறும் உச்சிமூக்கால்
யிடதுகையைப் பத்தியவள் எதிர்ற்பாள்காண்
குச்சியே முண்டலித்தா யதனில் நிற்பாள்
கொடுங்குமரி வர்ணமதை யென்னசொல்வேன்
பச்சியே கேட்டதெல்லா மிந்தாவென்பாள்
பார்க்கவே கன்னிசிறு ரூபமாமே.
[147].


ரூபமே நாமமே ரூபாரூபம்
நுவலுகிறேன் வாலையென்றும் வெளியேயென்றும்
நாமமே கன்னியென்றும் மந்திரமென்றும்
நவிலுஞ்சொல் மொழியென்றும் கற்பமென்றும்
காமமே யிச்சையென்று மனதேயென்றும்
கண்டவர்கள் சத்திசிவ மாய்கையென்றும்
நாமமே வாசிபர தேசிபிர்மம்
நாடியுதித் தொடுங்குமிட மறிந்துபாரே.
148.


சித்தர்கள் கண்ட இந்த அனுபவம்தான் துர்க்கையை "சின்னஞ்சிறு பெண் போலே, சிற்றாடை உடையுடுத்தி, சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீதுர்க்கை" யாக அடியார்களை வழி பட வைத்துள்ளது என்று சொல்லலாம்.

சரி, ஒரு ஆணுக்கு இந்த அனுபவம் வரும் போது "வாலைக் குமரியாக" உருவகப்படுத்த முடிகிறது, ஆனால் அதையே ஒரு பெண் பார்வையில் பார்க்கும் போது?

சின்னஞ் சிறு பாலகிருஷ்ணன் ஞாபகம் வரவில்லை? அதுதான் ரகஸ்யம்!

கண்ணன்தான் அந்த குண்டலினி! அவன்தான் அந்த கிரியா சக்தி. அவனது ஆனந்த சயனம் எதைக் காட்டுகிறது? அந்த ஐந்து தலை ஆதிசேஷன் எதைக் காட்டுகிறது? குண்டலினியை வசப்படுத்தி வைத்திருக்கும் ஆனந்த பத்மனாபனைத்தானே?சித்தர் வழியில் வந்து கண்ணனை வழிபடும் பாரதியின் கவிதையில் அது வெளிவராமல் இருக்குமோ?

"கோலக் குயிலோசை-உனது
குரலினிமையடீ!
வாலைக்குமரியடீ-கண்ணம்மா!
மருவக்காதல் கொண்டேன்!"

பாரதியின் மிகப் பிரபலமான "சின்னஞ் சிறு கிளி" வேறு யார்? அது போகட்டும், காகபுஜண்டரும் கண்ணனை மறந்துவிடவில்லை!

காணலா மெத்தனையோ கோடாகோடி
கண்ணுக்குள் ளேதெரியுங் கிருஷ்ணனைப்போல்
தோணலா மேதிர்ற்கும் பாவனைபோல்
துயரெல்லா மாற்றிவிடுஞ் சுழினைவாசல்
வீணல்லால் மற்றொன்றிற் காண்பதுண்டோ
மிஞ்சினவர் சொற்கேட்ட வித்தைபோல
கால்லா வில்லெறிந்த வீரன்போல
நாமறியத் தன்மைவிட்டு நாடினாலே [218]

கண்ணன் கண்ணுக்குள்ளே உள்ளான் என்று தெளிவாகச் சொல்லி விடுகிறார். பிறகென்ன, ஆண்டாள் கண்ணன் நினைவாகவே இருந்து,

"கண்ணன் என்னும் கருந்தெய்வம்
காட்சி பழகிக் கிடப்பேனை"
(நாச்சியார் திருமொழி)


என்று சொல்வதில் தவறுண்டோ? பாரதி கண்ட "கரும் பெண்மை அழகும்", ஆண்டாள் கண்ட "கருந்தெய்வமும்" ஒன்றுதானோ?

குண்டலினி சக்தியை மாயா சக்தி என்று சொல்வதுண்டு. அது கன்னியாக வந்து மாயம் செய்யும் சக்தி. மிக கவனமாக கையாளப் படவேண்டிய சக்தி. இதை காகபுஜண்டர் பின்வரும் பாடலில் எச்சரிக்கிறார்:

மார்க்கம் போல் நேர்வழியே குருக்குமார்க்கம்
வாய்வழியே தான்வந்து வாசியேறும்
தீர்க்கம்போற் செப்பிவிடும் வாசிவாசி
செயவாசி கூறிவிடும் வாசிபாசை
கார்ப்பதுபோற் சொல்லிவைக்குந் தனக்குமுன்னால்
கண்டுகொள்ளும் பின்னாலே துடர்ந்துசெல்லும்
சேர்ப்பதுபோற் சொல்லிவைக்கும் பொருந்திடாதே
தீண்டாதே நீயிருந்து ஒடுங்கில்லே
[62]


"பெற்ற தாயைப்போல கூட இருந்து உன்னை தவத்தில் மேலேற்றும் அதேசமயம் பருவப்பெண்ணாகி அழகு சொரூபியாகி உன்னை மயக்க பார்க்கும். உஷாராய் இருந்து அவளை தாயாய் போற்றி உணர்வை அறிவில் ஒடுக்கி தனித்து நிற்பாயாக." என்று விளக்கம் தருகிறார் தர்மலிங்க சுவாமிகள்.

மகா கவி பாரதி இதைத்தான் பின்வரும் பாடலில் சுட்டிக் காட்டுகிறார்:

"பின்னோர் இராவினிலே கரும் பெண்மை அழகொன்று வந்தது கண்டு
கன்னி வடிவமென்றே களி கண்டு சற்றே அருகே சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா! இவள் ஆதி பரா சக்தி தேவியடா!
இவள் இன்னருள் வேண்டுமடா! பின்னர் யாவும் உலகில் வசப்பட்டு போகுமடா!"


காகபுஜண்டரும், பாரதியும் சுட்டுவது ஒன்றுதான். கவனம்! பூரண சித்தியாகிய சிவஞானம் கிடைக்கும் முன் இந்த மாதிரி சித்து விளையாட்டுக்கள் காட்டி திசை திருப்ப பார்ப்பள், அந்த இனிய நேரத்திலும் நமது கவனம் முழு சித்தி அடைவதில்தான் இருக்க வேண்டுமே தவிர சின்ன ஆசைகளில் சிதறி விடக்கூடாது என்பதுதான்.

இதே பின் புலத்தில் நம்மாழ்வார், தன்னை பாராங்குச நாயகியாக பாவித்து செய்வித்த பாசுரங்களைப் பார்த்தாலொரு அழகான உண்மை புலப்படும். கண்ணனும் பலவித லீலைகள் செய்து இவரது கவனத்தை திருப்புகிறான் ஆனால் நம் நம்மாழ்வாரா அதற்கெல்லாம் மசிவார்? என்ன சொல்கிறார் பாருங்கள்:

"மன்னுடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன்; இனியது
கொண்டு செய்வதேன்?
என்னுடைய பந்தும், கழலும் தந்து போகு நம்பீ!"


(திருவாய் மொழி 6.2.1)

மேலும், "உன் மாயங்கள் மேலை வானவரும் அறியார்; இனியெம் பரமே!" என்றும் சொல்கிறார்.

அதாவது, இந்த குண்டலினி சக்தியாகிய வாலை அம்பிகை செய்யும் மாயங்களை வானோர்கள் கூட அறிய மாட்டார், ஆனால் நான் அறிவேன். அதற்கு நான் மயங்க மாட்டேன், அதனால் என் பந்தும், கழலும் தந்து போகு நம்பீ! என்று சொல்கிறார். ஒரு திட யோகிக்கு இருக்க வேண்டிய வைராக்கியத்தை வெளிப்படுத்தும் வரிகள் இவை. அந்த திடம் இல்லையெனில் வைகுந்தம் எங்கே? கைலாசம்தான் எங்கே?

அதனால்தான் சங்கப் பாடல்களில் முல்லைத் தெய்வமாகிய கண்ணனை "மாயோன்" என்றும், பெண் தெய்வமாகிய தேவியை "மாயோள்" என்றும் அழைத்தனர்.

சைவத்தில் பெண் யோக முத்திரையாக இருக்கிறாள், வைணவத்தில் பெண்ணின் பார்வையில் அதுவே, ஆண் வடிவில் குறியீடாக உள்ளது. எவ்வளவு அழகான சீர்மைத்தல் (complement)!

உண்மையில் சித்தர்கள் பேசும் சூரியகலையும், சந்திர கலையும் வைணவ, சைவ நெறிகள்தான். அவை நம் இரு கண்கள்.

1 பின்னூட்டங்கள்:

  மதுரையம்பதி

Monday, August 27, 2007

உண்மையான செய்தி கண்ணன் சார். சைவமும்-வைணவமும் இரு கண்கள் தாம். அதை காகபுஜண்டர் சொன்னதைக் கொண்டு இணைத்தல் அருமை.....

சாக்தத்தில் முதல் படியே வாலைக்குமரி வழிபாடுதான்....பாலா திருபுரசுந்தரி என்பார்கள்....