e-mozi

மடல் 065 - மானிடரைப் பாடாது மாதவனை ஏத்துதல்

Date of publication: Wed, 15 Dec 1999 15:09:30 +0100அகத்தியர் மன்றத்தில் ஒரு கேள்வி எழுந்துள்ளது. மானிடர் தன்னை மாதவன் என்னும் போது மானிடரைப் பாடுவதா அல்லது மாதவனைப் பாடுவதா? என்று.


இந்தக் கேள்விக்குரியவர் பலரால் இன்று வழிபடப் படும் சத்திய சாயிபாபா. இவரை பகவான் சத்தியசாயி என்றும், இறைவனின் திருஅவதாரமாக வந்துள்ளார் என்றும் பல அன்பர்கள் வழிபடுகின்றனர். இவர் செய்யும் சித்துகளைப் பற்றிய ஆங்கில மற்றும் தமிழ் புத்தகங்கள் உள்ளன.


தமிழ் மண்ணில் கோடான கோடி சித்தர்கள் உதித்துள்ளனர். மரணமில்லாப் பெருவாழ்வு கண்டு, காட்டிய சித்தர்கள் உண்டு. யோகானந்தர் தன் புத்தகத்தில் காட்டிய படி, இரண்டு இடத்தில் ஒரே சமயத்தில் தோன்றும் சித்திகள் உடைய யோகிகள் உண்டு. தமிழ் மண்ணின் கதை கேட்டால் இன்னும் இது போல் பல்வேறு விசித்திர சித்தி கொண்ட சித்தர்கள் கதை உண்டு.


திருமழிசை ஆழ்வார் ஒரே சமயத்தில் சித்தர்கள் கூட்டத்திலும், ஆழ்வார்கள் கூட்டத்திலும் உள்ளார். இதற்கான காரணத்தை ஒரு ஐதீகம் விளக்குகிறது.


ஒருமுறை திருமழிசை நிஷ்டை கலைந்து அமர்ந்திருக்கும் போது ககன மார்க்கமாக வந்த ஒரு சித்தர் இவரைக் கண்டு பல சித்திகள் பற்றி பேசினாராம். இவருக்கும் ஆர்வமிருந்தால் சில சித்திகளைச் சொல்லித் தருவதாகச் சொன்னாராம். திருமழிசை சிரித்துக் கொண்டு தனது காதைக் குடைந்து கொஞ்சம் குரும்பை எடுத்துக் காட்டி, மாதவன் நாமம் முன்னால் உன் சித்துகள் இந்தக் குரும்பைக்குச் சமானம் என்று சொன்னாராம்.


இது சுவாரசியமான கதை. தமிழக சித்தர்களையும், மேலை தேசத்து Alchemists களையும் ஒப்பு நோக்க முடியும். மேலைத் தேசத்து ஆய்வு எப்படி இரும்பை பொன்னாக்குவது என்பதில் கவனம் செலுத்தியது. அதன் விளைவுதான் நவீன வேதியியல் என்று அறிவியல் சரித்திரம் கூறுகிறது. இந்த ரசவாதிகள் சரித்திரத்தில் முக்கிய பங்கை அளித்துள்ளனர். அவர்கள் இரும்பை தங்கமாக மாற்றினார்களோ இல்லையோ,ஆனால் ஒவ்வொரு உலோகத்தின் மூலக்கூறு சேர்க்கை பற்றிய நவீன ஆய்விற்கு வித்திட்டுள்ளார்கள். அந்த அளவில் பாராட்டப் பட வேண்டியவர்கள்தான்.


இந்திய ரசவாதம் வேறொரு தடத்தில் சென்று விட்டது. வழக்கம் போல் இந்திய ஆய்வு உளவியல் நோக்கில் போய், அதற்கு மேலும் சென்று மாயும் தேகத்தை நிரந்தரமாக்கும் மார்க்கத்தில் சென்று விட்டது. இதைக் காணும் போது உலோக மாற்றும் ரசவாதம் சிறுபிள்ளை விளையாட்டு என்று தோன்றும். இது ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது, கலிபோர்னியாவில் யோகானந்தரால். அவர் இறந்த பின்னும் அவர் உடல் ஒரு மாதம் மட்டும் அழுகாமல் வாழ்ந்து வந்ததை மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர். அறிவியல் புதின (Science Fiction) எழுத்தாளர் ஆர்தர் கிளார்க் "வினோத உலகம்" என்ற புத்தகத்தில் உலகின் மாபெரும் அதிசயம், எப்படி? யோகிகள் கற்பூரம் காற்றில் கரைவது போல் தங்களது மேனியை கரைத்துக் கொள்கின்றனர் என்று வியக்கிறார்.


இத்தனை அதிசயத்தக்கதாக இருந்தாலும் இச்செயல்கள் இறைவனின் வல்லமைக்கு ஒப்பாகாது என்று சொல்லுகிறார் திருமழிசை. அவரே சித்தராக இருந்து கொண்டு சொல்வதன் காரணம் இரும்பைப் பொன்னாக மாற்றுவதோ, மாயும் மேனியை அரூபமாக மாற்றுவதோ ஒரு "கலை"தான். ஆனால் உள் மன அகங்காரம் முழுமையையாய் கரைந்து இறைவனின் கருணையில் பக்திக் கண்ணீர் சிந்துவது இதையெல்லாம் விட மேல் என்று சொல்லும் போது சித்தர் ஆழ்வார் ஆகி விடுகிறார்.


பெளத்த உலகில் இன்னொரு கதை உண்டு. இதை ஈழ எழுத்தாளர் தர்முசிவராம் "அங்குலிமாலா" என்றொரு சொல்லோவியமாக படைத்துள்ளார். கதை இதுதான், ஆயிரம் பேருடைய சுண்டுவிரல்களைச் சேர்த்து மாலையாகப் போட்டால் அளப்பரிய சக்தி வரும் என்று நம்பி ஒருவன் 999 பேருடைய சுண்டு விரல்களை பதம் பார்த்து விட்டான். அவன் வழியில் 1000வது ஆளாக நமது சித்தார்த்த, கெளதம புத்தர் வந்து சேர்ந்தார். அவன் சுண்டு விரல் கேட்டான். கருணை வடிவான புத்தர் தருவதாக ஒத்துக் கொண்டார். ஆனால் தவறான பாதையில் இருக்கும் இவனை எப்படியாவது "மடை" மாற்ற வேண்டுமென்று விரும்பினார். எனவே, அவனை அழைத்து, "அந்த மரத்திலிருந்து ஒரு இலை பறித்து வா!" என்றார். அவனும் இலை பறித்துக் கொடுத்தால் சுண்டு விரல் கிடைக்கும் என்ற ஆசையில் இலை பறித்துக் கொடுத்தான். சிரித்துக் கொண்டே புத்தர், "அதை மீண்டும் மரத்தில் சேர்த்து விடு" என்றார். பறித்த இலையை ஒட்டவைக்க முடியவில்லை அவனால். அழிப்பது எளிது. உருவாக்குவது கடினம். எத்தனையோ ஆய்வுகள் செய்தாலும் நம்மால் ஒரு உயிரை இன்றளவும் உருவாக்க முடியவில்லை. ஒன்றிலிருந்துதான் ஒன்று வர முடியும். ஒன்றுமே இல்லாத நிலையிலிருந்து ஒன்றை உருவாக்க முடியாது. இறைமை என்பது ஒன்றுமில்லாத, "பாழ்" நிலையிலிருந்து இந்த அண்ட, சராசரங்களை உருவாக்கி வைத்துள்ளது.


இதை அப்படி இரசித்து அனுபவிக்க வேண்டுமென்று நம்மாழ்வார் சொல்லித் தருகிறார்:


நீராய், நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்களிரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண் சங்கேந்திக் கொடியேன் பால்
வாராய் ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே
(தி.வா.மொ. 6.9.1)


இத்தனையுமாய் உள்ள பெருந்திரு நம்மை அனுகிரகிக்க வரும்படி வேண்டி மகிழ்தலில் உள்ள இன்பம் தனி. நம்மாழ்வார் போன்ற ஞானிகள் தங்களை "கொடியேன்" என்று சொன்னால், நித்தம் பல பாவம் என்று வாழும் சாதாரணனின் நிலை என்ன? அப்படி இருந்தாலும் அவனுக்கும் எளியனாய் இறைவன் வரும் போதுதான் அவனது மகிமை புலப்படுகிறது. "அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே" என்று இதனால்தான் சொல்வது. அன்பு என்பது இரண்டாக இருக்கும் போது வழிந்தோட வழி உண்டு. இறைமை ஒன்றாக இருந்து விட்டால் இந்த அன்புப் பரிமாற்றம் இல்லாமல் போய் விடும். இறைவனும், அவனை பக்தி செய்ய பக்தனும் இருக்கும் போதுதான் வாழ்வில் அன்பு என்ற ஜூவ ஓட்டம் நடைபெறுகிறது. இதை உணர்துவதுதான் ஆழ்வார்களின் அருளிச் செயல்கள். எனக்கு அது தெரியும், இது தெரியும் என்று காட்டுவதில் பெருமை உண்டோ?


மனிதன் தன்னை மாதவனாக நினைப்பதற்கு காரணம் எது? இறைவன் மனித உடலிலும் வியாபித்து இருப்பதால்தான். அறிவியல் சொல்கிறது நாமெல்லோரும் அந்த சூரியக் குழந்தைகள் என்று. அதாவது சூரியன் என்று கோள் உருவாகும் காலத்தில் வெடித்து, சிதறிய மற்ற கோள்களில் ஒன்றுதான் பூமி. பூமியிலிருந்துதான் உயிரின் தோற்றம் நடைபெறுகிறது. எனவே நாம் பூமி புத்திரர்/ரிகள். ஒருவகையில் சூரியன் நமக்கு தாத்தா உறவு. சூரியனின் பேரப் பிள்ளைகள் என்பதற்காக நாம் சூரியன் என்று அதனிடம் சென்றால் பொசுங்கி பஸ்பமாகிவிடுவோம். சூரியன், சூரியன்தான், நாம், நாம்தான். இப்போது நம்மாழ்வாரின் இந்த பாசுரத்தை வாசியுங்கள். அர்த்தம் புரியும்:


தானேயாகி நிறைந்தெல்லா   
உலகும் உயிரும் தானேயாய்
தானேயானேன் பானாகித்
தன்னைத்தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே
அமுதே திருமாலிருஞ்சோலை
கோனேயாகி நின்றொழிந்தான்
என்னை முற்றும் உயிருண்டே.
(தி.வா.மொ. 10.7.2)

தன்னைத் தானே துதித்து என்ற வார்த்தை முக்கியம். சத்தியசாயிபா சொல்லும் வார்த்தை "நான் கடவுள் என்பதை நான் அறிகிறேன்,ஆனால் நீங்கள் அறிவதில்லை" என்று. நம்மாழ்வாரும்தான் இதைச் சொல்கிறார். ஆனால் அவரைக் கேசவன் என்று கொண்டாடுவதில்லையே. இயேசு நாதரிடம் சீடர்கள் கேட்டனராம், "பிதாவின் இராச்சியம் பூமியில் நிலைப்படும் என்று சொல்கிறார்களே, அது எப்போது நடக்கும்?" என்று. அதற்கு இயேசு சொன்னாராம், "பிதாவின் இராச்சியம் நடந்து கொண்டுதான் உள்ளது, அதைக் காணும் திறன் அற்று உள்ளீர்கள்" என்று. அதுபோல் இறைவனின் இராச்சியம் நம் கண்ணுக்குத் தெரியாமல் மறைப்பது என்ன? யோசிக்க வேண்டும்.


"அகம் பிரம்மாஸ்மி" என்று சொன்னால் அதன் பொருளை உணரத் தலைப்பட வேண்டும். அதை விட்டு சொன்னவரை வழிபடத் தொடங்கினால் நம் புத்தி எங்கே போச்சு? சாயி பாபா சீடர்களைப் பொறுத்தவரை "மடை மாற்றம்" தேவை. உலகு வந்ததிலிருந்து எத்தனையோ அவதாரங்கள் வந்தாகிவிட்டது, எத்தனையோ மகான்களும், தேவ தூதர்களும் வந்தாகிவிட்டது. அந்தந்தக் காலத்தின் தேவைக் கேற்றவாறு அவர்களின் பணி இருந்தது. இன்னும் பணி தேவைப் படும் அளவில் உலகில் அறியாமை மண்டிக் கிடக்கிறது. அவர்கள் செய்யும் பணிகள் முக்கியம். கல்விச் சாலைகள் முக்கியம், மருத்துவ நிலையங்கள் முக்கியம். பாரதி சொல்லுவான் ஆயிரம் கோடி புண்ணியத்தை விட மேலானது ஆங்கோர் எழைக்கு எழுத்தறிவித்தல் என்று. அந்தப் பணியைச் செய்வோரை போற்ற வேண்டும்.

கரை படிந்த கைகளில் வரும் பணம் என்று தூற்றுதல் தகுமோ? திருப்பதி உண்டியலில் பக்தனின் பணமும் விழுகிறது, திருடனின் பணமும் விழுகிறது. அதற்காக பரந்தாமனை பழிக்க முடியுமா? திருப்பதி கோயில் வருமானத்தில் செய்யப்படும் நல்ல காரியங்களைப் பாராட்ட வேண்டும். இறைவனின் பெயரால் ஒரு சங்கத்தையோ, ஒரு கோயில் என்று நிருவாக/நிறுவனத்தையோ ஏற்படுத்தும் போது ஊழல் அழைக்காமலே வந்து சேர்கிறது. அது மனிதப் பிழை. அதை மனிதன்தான் சீரிய சிந்தனைகள் மூலம் திருத்தி கொள்ள வேண்டும். சாயிபாபா தானே கடவுள் என்று சொன்னாலும் கேட்பவன் புத்தி எங்கே போகிறது? நமக்கு எதற்காக சுயஅறிவு உள்ளது?


எத்துணை சீர்மை கொண்டது நமது பாரம்பரியம். அதை கண்ணுற்றால் எவர் சொல்வதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரியாதோ?


"எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு" என்பதல்லவோ வள்ளுவம். மேலும், உண்மையான பக்தனுக்கு- அது சிவ பக்தனாக இருந்தாலும் சரி, திருமால் பக்தனாக இருந்தாலும் சரி மற்றவர் மேல் காழ்ப்புணர்ச்சி கொள்ளுதல் அவசியமற்ற ஒன்று.


ஏனெனில் நம் சம்பிரதாயப் படி, இராவணனும், உலகை தன் அடிமைக்கு கீழ் கொண்டு வந்த மாபலிச் சக்கிரவர்த்தியும் அடிப்படையில் பக்தர்கள்தான். அதனால்தான், யாரும் காண முடியாத இறைவனின் திருவடி பாக்கியம் அவர்களுக்கு கிடைத்தது. பாரதத்தில் கடைசியாக தர்மரும், ஒரு நாயும் சொர்க்கம் போகிறது, போய் பார்த்தால் துரியோதனன் இவருக்கு முன்னால் உட்கார்ந்து இருக்கிறான். எல்லாம் ஒரு பெரிய நாடகம். அதில் வில்லனாக நடிப்பவன் உண்மையில் வில்லன் அல்ல. படையப்பா படம் பார்த்து விட்டு ரம்யா கிருஷ்ணனை தாக்குவது எவ்வளவு பேதமை? வில்லன் எம்.என். நம்பியார் பெரிய பக்தர், உண்மையில்.! அதனால் நமக்கு சாயிபாபா பக்தர்களிடம் எந்த காழ்ப்புணர்ச்சியும் தேவையில்லை. நாம் செய்ய வேண்டியது எல்லாம் அவர்களை "மடை" மாற்றம் செய்வதுதான். எதை, எதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று காட்டவேண்டியது.


இதில் ரொம்ப கவனம் வேண்டும். ஆனானப் பட்ட நம்மாழ்வாரே இந்த விஷயத்தில் மிக கவனமாக உள்ளார். அவர் சொல் கேட்போம்:


சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ?
என்னாவில் இன்கவி யானொரு வர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்து
என்னானை என்னப்பன் எம்பெருமானுளனாகவே.

1 பின்னூட்டங்கள்:

  வடுவூர் குமார்

Saturday, August 25, 2007

அழகாக நம்மாழ்வாரையும் பாபாவையும் முடிந்திருக்கீர்கள்.
இந்த ரசவாதம் எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்கு தெரியாது ஆனால் சமீபத்தில் திரு இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய சிவமயம் என்ற புத்தகத்தில் இதைப்பற்றிய கருத்து வருகிறது.