e-mozi

மடல் 066: அக்கம்மா தேவியும், ஆண்டாளும்

First published on Fri, 17 Dec 1999 18:26:38 +0200

இங்கு பனி பெய்து மலையெல்லாம் மூடிக் கிடக்கிறது. குளம், குட்டைகள் குளிர்ந்து உறைந்து கிடக்கின்றன. பெரும்பாலான வன விலங்குகள் தெற்கு நோக்கி வலசை போய்விட்டன. காட்டுக் கரடிகள் புதரில் ஒளிந்து பனிக்கால உறக்கத்தில் ஆழ்ந்து விட்டன.மரங்கள் இலை உதிர்த்து மெளனித்து விட்டன. மனிதன் தன் சிந்தனா சக்தியால் இயற்கை நியதியை வென்று தனித்து இருக்கிறான். அவன் உள்ளத்தில் அமைதியை நிலை நாட்ட பனிக்காலம் பார்த்து இறைவன் ஜனிக்கிறான். சூழல் வறண்டு போய் வெறுப்புத் தட்டாமல் இருக்க, தேவதூதன் பிறக்கிறான் பனிக்காலத்தில்! "மாதங்களில்நான் மார்கழி" என்று சொல்லி தனிமைப் பட்டு போயிருக்கும் மனித மனத்தை தியானத்தில் திருப்புகிறான் கார் குழல் வண்ணன்.

பெரும்பாலான நோன்புகள் ஆண்களின் சாதிப்புத் திறனை வெளிக் கொணரும் பொழுதுகள் போல் நிர்மாணிக்கப் பட்டிருக்கின்றன! பண்டைய சமணர்கள் பெண்களுக்கு முக்தியே கிடையாது என்று சொல்லி விட்டனர். அவர்கள் ஆணாகப் பிறந்து நோன்பிருந்துதான் வீடுபேறு அடைய வேண்டும் என்கிறது சமணம். கருணா மூர்த்தியான சித்தார்த்த கெளதம புத்தர் கூட சங்கத்தில் பெண்களைச் சேர்க்க தயங்குகிறார். அவரது பிரதம சீடர் ஆனந்தரின் வேண்டுகோளுக்கிணங்க சம்மதிக்கிறார், "பெண்களிடம் கவனமாக இருக்க வேண்டும்" என்ற மேற் குறிப்புடன்! பெண்களைக் கண்டு பயந்து போய் சித்தர்களான பேர்கள் உண்டு சரித்திரத்தில் :-) ஆண்கள் பயப்படுவது, உண்மையில் பெண்களைக் கண்டு அல்ல. தன்னுள் பீரிட்டு எழும் பாலியல் இச்சைகளை கட்டும் திறனின்றித் தவிக்கும் தவிப்பின் வெளிப்பாடே பெண்களின் மீதான அத்தனை கட்டுப் பாடுகளும். பெண் ஆன்மீகத்திற்கு தடையானவள் என்று உருவகப் படுத்தப் படடிருப்பதின் உளவியல் காரணம் இதுதான்.

மேலும், பெண்களுக்கு இயற்கை பல திறன்களை வழங்கியுள்ளது. அதில் முதலாவது,ஒரு உயிரை உலகிற்கு கொண்டு வருவது. பத்து மாதம் தன் உயிருடனும், உடலுடனும் அணைத்து ஒரு உயிரைக் கொண்டு வந்து காப்பது. இது இறைவனின் தன்மைகளுக்கு ஒப்பான ஒரு திறனாகும். பெரும்பாலான ஆண்களால் இதை உட்கொள்ள முடிவதில்லை.இந்த தாழ்வு மனப் பான்மையின் வெளிப்பாடாகவும் பெண்களின் மீதான ஆன்மீகக்கட்டுப்பாடுகள் எழுந்திருக்கலாம்.

குண்டலினி என்று சொல்லப்படும் உயிர் சக்தி வெளிப்படும் பொழுதுகளை வருணிக்கும் காகபுஜண்டர் "அது பிரசவ வலிக்கு ஒக்கும்" என்கிறார். இந்தப் பிரசவத்தை தாங்கியவர்கள் அதற்கு மேல் பெண்களைத் திட்டுவதில்லை :-) பட்டிணத்தாரின் பிற்காலப் பாடல்களில்பெண்கள் சரியாக பார்க்கப் படுகின்றனர்.

இத்தகைய ஒரு பின் புலத்தில்தான் நாம் ஆன்மீகத்தில் பெண்களைக் காண வேண்டியுள்ளது. தமிழின் நீண்ட ஆன்மீக/இலக்கிய சரித்திரத்தில் குறிப்பிடப்படும் பெண்கள் ஒருசிலரே! ஒளவையார் பெண் என்றாலும் அவரது பல பாடல்களில் அவர் ஆணின் பார்வை கொண்டிருப்பது விளங்கும் (யார் வேண்டுமானாலும் ஒளவையார் என்று பெயர் வைத்துக்கொண்டு எழுதலாமோ என்னவோ?). களப்பிரர் காலம் என்று ஒன்று. அப்போது பெண்களின் நிலை எவ்வளவு மோசம் என்று தெரியவில்லை. இந்த கடுமையான சூழல்தான் முதல் பெண் ஆன்மீகவாதியை தமிழ் மண்ணிற்குத் தருகிறது.

அவர்தான், காரைக்கால் அம்மையார். ஆழ் மனதில் சிவனின் மீது காதல் கொண்டு,புற உலகின் நீதிக்கிணங்க, ஒரு சமணரை மணந்து "சாதாரண தாம்பத்தியம்" நடத்திபின் இறைவனின் திருவிளையாடலால் முழுத் துறவியாகிறார். அந்தக் காலக்கட்டத்தின் நெருக்கமும், சமூக இடர்பாடுகளும், ஆளும் ஆண் சமூகத்திற்கு முன் நிற்கும் பூங்கொடி போன்ற இவர் தன்னை "காரைக்கால் பேய்" என்று சொல்வதிலிருந்து தெரிகிறது. ஆண்களின் காமக் கண்களிலிருந்து தன்னைத் தனிமைப் படுத்தி, நிறுத்தி ஆன்மீகத்திற்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள அவர் செய்திருக்கும் முயற்சிகள் கண்ணீர் சிந்த வைப்பவை. தனது மார்பகங்களைக் களைந்தெறிந்து, எலும்பும் தோலுமாய் நின்று பார்ப்போர் பேய் என்று அலற்றும் படி வாழ்ந்திருக்கிறார். எப்போதுமே, விடுதலை கோரும் முதல் மனிதன் பலியாகி விடுவது சரித்திர உண்மை. இவர் அன்று செய்த புரட்சி, பின்னால் வரும் செல்வப் பெண்ணான ஆண்டாளை "மானிடர்க்கென்று பேச்சுப் படில் வாழகில்லேன்" என்று தைர்யமாகச் சொல்ல வைத்தது என்று சொன்னால் மிகையாகாது. அதே போல் காரைக்கால் அம்மையாரின் அகமன வெளிப்பாடுகளும் அவர் வாழ்ந்த காலத்தின் நெருக்கத்தை வெளிப்படுத்துவதாய் உள்ளது. பின்னால் வந்த ஆண்டாள் அனுபவித்தது போல் இறைவனுக்கு மாலையிட்டு, சூடிக் கொடுத்து, "கண்ணன் என்னும் கருந்தெய்வத்தின் காட்சிபழகிக் கிடக்கும்" சூழல் அல்ல காரைக்கால் அம்மை வாழ்ந்த காலம்.
பாரதி சொல்லுவது போல், "பேய்கள் அரசாளும் போது சாத்திரங்கள் பிணந்தின்னத்தானே வேண்டும்". அதே போல், காரைக்கால் அம்மையார் இறைவனின் மிகக் கடுமையான,ருத்ர தா ண்டவத்தை, ஊழிக் கூத்தை, பேய்களுடனும், பூத கணங்களுடனும் ஒன்று மன்றாய் மயானத்தில் இருந்து கண்டு களிக்கிறார். பெண்கள் செல்லும் இடமா மயானம்? ஆனால் அந்த கால கட்டம் அதை நிர்பந்தித்து இருக்கிறது.பெண்களுக்கு வீடு பேறு இல்லை என்று சொல்லி கடுந்தவம் நெறியாய் இருந்த சமண கால கட்டத்தில் உதித்த காரைக்கால் அம்மையாரின் ஆன்மீக வெளிப்பாட்டிலும் இந்த தவக் கனல் தெறிக்கிறது.

ஆனால், ஆண்டாள், அக்கம்மா தேவிகள் தோன்றிய காலத்திற்குள் பெண்கள் ஆன்மீகத்தில் நுழையக் கற்றுக் கொண்டு விட்டனர். அதிலும் ஆண்டாள் காலத்தில் "வாரணம் ஆயிரம் வலம் வர" கோலாகலமாக இறைவன் வந்து பெண்களுக்கு வீடு பேறு வழங்கும் நிலைக்கு சமூகம் முன்னேறி விட்டது. இவர்கள் காரைக்கால்அம்மைக்கு மிகவும் கடன் பட்டு இருக்கிறார்கள்.

ஆண்டாளை நமக்குத் தெரியும். ஆனால் அக்கம்மா தேவி யார்?
இவர் ஆண்டாளுக்குப் பின் வந்தவர் (12ம் நூற்றாண்டு). நாயன்மார்களின் சரித்திரம் அறிந்து, பெண்களும் ஆன்மீகத்தில் நுழையலாமென்றறிந்து, பசவர், அல்லமர்,சித்தராமர், சென்ன பசவண்ணா போன்ற தீவிர முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு வீர சைவக் குழுவுடன் இவர் ஆன்மீகப் பயணம் செய்கிறார். இவர் வாழ்ந்தது கர்நாடகம். இவரும் காரைக்கால் அம்மை போல் முதலில் ஒரு சமணருக்கு வாக்குப் பட்டு, பின் வெளிப்பட்டு, திகம்பர சாமியாராய் ஆன்மீகப் பயணத்தை மேற் கொள்கிறார். காரைக்கால் அம்மை செய்தது போல் இவர் தன்னை சிதைத்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லாமல் போய்விட்டது. அதற்கு மாறாக இவர், காமக் கண் கொண்டு பார்க்கும் ஆண்களுக்கு அறிவுரை கூறும் நிலை வந்து விடுகிறது. அக்கா என்று அன்பாக கர்னாடக மக்களால் விளிக்கப் படும் அக்கம்மா தேவி சொல்கிறார்:

என் அழகிய முலையும் மலரும் யெளவனமும்
காண்பதற்கு வந்தீரண்ணா!அண்ணா!
நான் பெண்ணல்ல!அண்ணா!
நான் கணிகை அல்ல!அண்ணா!
பின் ஏன் என்னைக் கண்டு கண்டு
யாரென்று கேட்டு வந்தீரண்ணா?
சென்ன மல்லிகார்ச்சுனனைத் தவிர
வேறெ பரபுருஷனின் முகமும்
எனக்குப் பிடிக்காது பாரண்ணா!


அடடா! ஜொள்ளுக் கொட்டும் ஆட்கள் எக்காலத்திலும் உண்டு போலும். ஆண்டாளின் அதிரடியைப் பாருங்கள்!அங்கைத் தலத்திடை யாழிகொண்டான்
அவன்முகத் தன்றி விழியேனென்று
செங்கச்சுக் கொண்டுகண் ணாடை பார்த்துச்
சிறுமானிடரைக் காணில்நாணும்
கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர்
கோவிந்தனுக்கில்லால் வாயில் போகா
இங்குத்தை வாழ்வை யொழியவே போய்
யமுனைக் கரைக்கென்னை யுய்திடுமின்
(நா.தி.மொ. 12.4)


பாவம் அக்கம்மா தேவி, அண்ணா! அண்ணா! என்று மரியாதையாகத் திட்டுகிறார்.நம்ம ஆண்டாள், "சிறு மானிடா!" என்று வாயாரத் திட்டுகிறாள் :-) ஆக, பெண்கள்ஆன்மீகத்திற்கு வரும் போது விழும் பெருந்தடை இந்த ஆண்களின் இச்சைக் கண்கள்தான் என்பது புலப்படுகிறது. இந்த வேட்டையைச் சமாளித்து, வெளிவந்த பின்தான் பெண்களால் ஆன்மீகத்தில் நுழையவே முடிகிறது. இந்தச் சூழல் இன்றளவும் நிலைத்திருப்பது தமிழ் ஆன்மீகத்தின் அவமானச் சின்னம். பெண்களை குடும்ப விளக்காக பார்க்கவே ஆண் சமூகம் விரும்புகிறது. குடத்தில் இட்டவிளக்காக அவள் ஆன்மீகப் பணி செய்ய வேண்டும் என்று ஆண் சமூகம் கட்டளை இடுகிறது. ஆண்களைப் போல் சரி சமமாக பெண்களால் உலாவ முடியாத படி சித்தாந்தச் சிக்கல்கள், போலிச் சம்பிரதாயங்கள், போலிப் புராணங்கள். வெளி வந்து அலுவலகம் செல்லும் பெண்களை வேசிகள் என்று கூசாமல் சொல்லும் ஆன்மீக மடங்கள்! இதற்கிடையில்தான் பெண்களின் ஆன்மீகப் பணி தொடர வேண்டியுள்ளது.

அக்கா சொல்கிறார்:

சமுத்திரத்தின் கரையில் வீட்டைக் கட்டிக் கொண்டு
நுரைக்கு அஞ்சினால் எப்படி ஐயா?
சந்தைக்குள்ளே வீடைக் கட்டிக் கொண்டு
சத்தத்திற்கு நாணினால் எப்படி ஐயா?

இத்தனை தடைகள் இருந்தாலும் அவைகளை சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டும்என்று சொல்கிறார் அக்கா. ஆனால் ஆண்டாள் சிறுமையைக் கண்ட இடத்தில் சிறுமை என்று சொல்ல வேண்டுமென்பதை "சிறு மானிடா!" என்று விளிப்பதின் மூலம் அறிவுறுத்துகிறார். இதனால்தான் பாரதி சொன்னான் போலும்,"ரெளத்திரம் பழகு" என்று. ஆண்டாளின் குரல் உரிமைக் குரல், அக்கம்மாதேவியின் குரல் தணிந்த குரல்.

அக்கம்மா தேவிக்கும், ஆண்டாளுக்கும் வேறு விதத்திலும் பார்வைகள் வேறு படுகின்றன.அக்கம்மாதேவி ஆண்கள் விதித்த துறவற உத்தியைத்தான் வீடு பேற்றிற்கு எடுத்துக்கொள்கிறார்:

பசியெடுத்தால் பிச்சை உணவு உண்டு
தாகமெடுத்தால் அருவி, கிணறு, குளங்கள் உண்டு
உறங்குதற்கோ பாழுங் கோயிலுண்டு
சென்ன மல்லிகார்ச்சுனய்யா!
ஆத்ம நட்பிற்கு நீ எனக்குண்டு.

என்கிறார். ஆனால் ஆண்டாள், இறைவன் தன் உரிமை என்கிறாள்! அக்கம்பக்கத்தவர் பேசினால் அது அவர்கள் பிரச்சனை என்கிறாள் (வாவ்!)நாணி யினியோர் கருமமில்லை
நாலய லாரும் அறிந்தொழிந்தார்
பாணியா தென்னை மருந்துசெய்து
பண்டுபண்டாக்க வுறுதிராகில்
மாணி யுருவா யுலகளந்த
மாயனைக் காணில் தலைமறியும்
ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில்
ஆய்ப்பாடிக்கேயென்னை யுய்த்திடுமின்.


ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை அருகே. இந்த மதுரைப் பெண்களுக்கே இந்த வம்பு,வீம்பு அதிகம்:-) மதுரை மீனாட்சி செய்யவில்லையா? சொக்கனைப்பார்க்கும் போதுதான் தலை குனியும், மூன்றாவது தனம் மறையும் இப்படி...ஆண்டாள் சொல்கிறாள், "மாயனைக் காணில் தலைமறியும்" என்று. இதனால்தானோ என்னவோ தென் தமிழகத்தின் மிக உயர்ந்த கோபுரங்கள் இவர்கள் இருவரின் கோயில்களிலும் உள்ளன. தமிழ் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்பதன் அடையாளமாக!

ஆயினும் ஒரு வித்தியாசம் உண்டு. மீனாட்சி இறைவி. ஆண்டாள் மானுடப் பெண்.இருந்தாலும் அவளின் உத்தி மிகப் பலமானது. அது பிரேம பக்தி. இதுவே வைணவத்தின் அடிக்கோடுமாகும். இவள் பக்தியைக் கண்டு இறைவன் இறங்கி வரவேண்டும்.
"இறைவன் அவதாரமாக கீழே இறங்கி வருவது, மானுடனை இறைவனின் நிலைக்கு உயர்த்துவதற்குத்தான்" என்பது வைணவத்தின் நிலைப்பாடு. இது அளிக்கும் மனோபலம்அனுபவித்துப் பார்த்தவற்குப் புரியும்.பிகு: அக்கம்மா தேவியாரின் "வசனங்கள்" "காரைக்கால் அம்மையாரும் அக்கம்மாதேவியும்"என்ற ஒப்பாய்விலிருந்து எடுத்தாளப் பட்டுள்ளன. ஆசிரியர் முனைவர்.சாந்தா.


மன்னு மதுரை தொடக்கமாக
வண்துவராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்யவேண்டித்
தாழ்குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை
இன்னிசை யால் சொன்ன செஞ்சொல்மாலை
ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே!! (ஆண்டாள்)


11 பின்னூட்டங்கள்:

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Thursday, August 23, 2007

அருமையான பதிவு கண்ணன் சார்.
அக்கம்மா தேவியார் பற்றி இன்று நிறையவே அறிந்து கொண்டேன்.
அழகான ஒப்புமை!

அக்கம்மா = கல்யாணம் ஆன பெண்...அதான் வாய்த்துடுக்கு அதிகம் இல்லை!
ஆண்டாள் = கல்யாணத்துக்கு காத்திருந்த பெண்...
போதாக்குறைக்கு மதுரை வேற :-))
அதான் சக்கைப் போடு போடுகிறாள்!

//பெரும்பாலான ஆண்களால் இதை உட்கொள்ள முடிவதில்லை.இந்த தாழ்வு மனப் பான்மையின் வெளிப்பாடாகவும் பெண்களின் மீதான ஆன்மீகக் கட்டுப்பாடுகள் எழுந்திருக்கலாம்//

பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதித்த இதே ஆண்கள் சமூகம் தான்,
இறை உணர்வை முழுதாக உணர வேண்டிய நிலை வரும் போது மட்டும், தன்னைப் பெண்ணாக எண்ணிக் கொண்டு பரம புருஷனாக இறைவனை எண்ணி நாயகி பாவமாகப் பாடி அடைந்தது.

இது ஒன்றே போதும், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் ஆன்மீகத்தில் எப்படி ஆத்மார்த்தமாக ஈடுபட முடியும் என்பதற்கு!

//ஆன்மீகத்திற்குள் தன்னை [Photo]ஈடுபடுத்திக் கொள்ள அவர் செய்திருக்கும் முயற்சிகள் கண்ணீர் சிந்த வைப்பவை//

மிகவும் உண்மை. முதல் பலியால் பின் வந்த வெற்றிகள் எல்லாம் ஏற்றம் பெற்று விட்டன!

  நா.கண்ணன்

Thursday, August 23, 2007

நன்றி கண்ணபிரான். இவ்வொப்பாய்வுகள் சுட்டுவது என்னவெனில், சைவம் தனது வழிமுறைகளில் சமணத்தையும், வைணவம் தன் வழிமுறைகளில் பௌத்தத்தையும் கடைக் கொள்கிறது என்பதே. அங்கிருந்துதான் சைவ, வைணவ பேதம் ஆரம்பிக்கிறது. ஒன்றை அழித்து ஒன்று வரும்போது அழித்ததின் வாசனை ஒட்டிக் கொள்வது சகஜமே!

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Thursday, August 23, 2007

//இந்த வேட்டையைச் சமாளித்து, வெளிவந்த பின்தான் பெண்களால் ஆன்மீகத்தில் நுழையவே முடிகிறது. இந்தச் சூழல் இன்றளவும் நிலைத்திருப்பது தமிழ் ஆன்மீகத்தின் அவமானச் சின்னம்//

நச்...
இந்நிலை மாற வேண்டும். எத்துறையிலும் கொடி கட்டும் பெண்கள், ஆன்மீகத்திலும் கொடி கட்டிப் பறக்க வேண்டும்!

ஒரு சில புதிய மடத் தலைவிகள் தங்களுக்கு என்று மடங்கள் ஏற்படுத்திக் கொண்டாலும்...
பாரம்பர்ய மடங்களிலும் நிலைமை மாற வேண்டும்.

பருத்திக்கொல்லை நாச்சியார்
பொன்னாச்சி
அத்துழாய்
என்று தான் எத்தனை எத்தனை பெண்கள் இராமானுசரின் ஆன்மிகப் படையில்! இது பற்றியும் ஒரு தொடர் எழுத எனக்கு அவா!

ஆழ்வார்கள், நாயன்மார்களில் பெண்கள் இருப்பது நிச்சயம் ஒரு ஊக்கமாக அமைய வேண்டும் பெண்களுக்கு!

கர்நாடகத்தில் ஒரு அக்கம்மா
ஆந்திரத்தில் வெங்கமாம்பா
தமிழகத்தில் முருகம்மையார்

ஆன்மீக ஆவல் உள்ள பெண்களை இயல்பாக கன்னியாஸ்த்ரீக்கள் ஆக்கியதில் இருந்தும் பாடம் படிக்க வேண்டும்! (அங்கு பெண்கள் சிஸ்டர்கள் ஆகி விட்டாலும், மேலும் முன்னேற அவர்கள் படும் பாட்டை, அன்னை தெரேசா அருமையாக விளக்கி இருப்பார் - அது தனிக் கதை)

  வடுவூர் குமார்

Thursday, August 23, 2007

எனக்கென்னவோ,பெண்களின் ஆன்மீகப்பயணம் ஆண்களால் மட்டும் தடைபெருகிறது என்பதை முழுவதுமாக ஒத்துக்கொள்ள முடியவில்லை.பொதுவில் பெண்கள் உணர்வுப் பூர்வமாணவர்கள்,உணர்வு அதிகமாக இருக்கும் போது மனத்தை நிலை நிறுத்துவது மிகக்கடினம்.
அக்கம்மா,காரைகால் அம்மையார் மற்றும் ஆண்டாள் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்காலம்,பொது வாக பார்க்கும் போது பெண்கள் ஆன்மீக தேடலில் குறைவாகவே ஈடுபடுகிறார்கள். இந்த பூஜை புணஸ்காரங்களில் வேண்டுமானால் அவர்கள் கலந்துகொள்ளலாம்,அது கொஞ்சம் மேம்போக்கான தேடல்கள் என்றே தோனுகிறது.
சில ்
பெண்கள் வந்து சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்.
இன்று காலை துவக்கமே ஒரு நல்ல பதிவை படித்த திருப்தியுடன் தொடங்குகிறது.மிக்க நன்றி,திரு கண்ணன்.

  மதுரையம்பதி

Thursday, August 23, 2007

தெரியாத பல செய்திகள்....இங்கு
(பெங்களுரில்) பலரை அக்கம்மா என்ற பெயருடன் பார்த்திருக்கிறேன்....இன்றுதான் பெயர்க்காரணம் அறிந்தேன்....நன்றி கண்ணன் சார்.

புராணகாலத்திலும் பெண்கள் நன்றாகவே போற்றப் பட்டிருக்கின்றனர், உதாரணமாக ரிஷி பத்னிகள, மற்றும் சில பெண் முனிவர்கள்.

பின்வந்த காலங்களிலும் ஜபதபங்களை பெண்களுக்கும் உபதேசித்து, அவர்களையும் தாந்திரிக முறைகளில் முன்னேற வழிவகைகள் செய்யப்பட்டே உள்ளன.

  வல்லிசிம்ஹன்

Friday, August 24, 2007

Nalla NiRaivaana pathivu kaNNan sir.

Mathurai peNkaLukkuth thuNivu niRaiyathaan.
illaavittaal
saadhikka mudiyumaa.:)

Nayikaa baavam onRuthaan avanai adaiya ore vazhi enRu uNarnthathaal thaan
bakthip paravasam eytha mudinthathu periyavarkaLAl.

  நா.கண்ணன்

Friday, August 24, 2007

பின்னூட்டங்களுக்கு நன்றி.

"பொது வாக பார்க்கும் போது பெண்கள் ஆன்மீக தேடலில் குறைவாகவே ஈடுபடுகிறார்கள்."

பெண்களுக்கு வீட்டுக் காரியங்களே அதிகம். ஆன்மீகத்திற்குத் தேவையான வைராக்கியம் நடைமுறைப் படுத்துவது கடினம். அவர்களுக்கு குடும்பம் குழந்தை எனும் பந்தமும் அதிகம். நினைத்தால் 'சாமியாராகி' வெளியே போய்விட முடியாது. இந்த சுதந்திரமுள்ள மேலை நாடுகளிலோ நம் போன்ற ஆன்மீக வளர்ச்சியில்லை. உந்துதல் இல்லை. மேலும், உலகில் ஒரு பெண் தனியாக உலவுகிறாள் என்றாள் ஒன்று 'பேயாக' மாறவேண்டும் இல்லை அசிங்கமாக இருக்க வேண்டும். எனவே இதுவரை நிலவிய சமூகக் காரணிகளே அவர்களை ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபடச் செய்யவில்லை. வரும் காலங்களில் 'பாற்சமநிலை' நடைமுறைக்கு வரும் போது அது நிகழும்.

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Monday, September 10, 2007

கண்ணன் சார்

இந்தப் பதிவைக் கில்லி வலைத்தளத்தில் இணைத்துள்ளேன்

http://gilli.in/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a/

  நா.கண்ணன்

Monday, September 10, 2007

அன்பின் கண்ணபிரான்:

மிக்க நன்றி. நீங்கள் சர்வ லோக சஞ்சாரி, நிழல்வெளியும் அதில் அடக்கம். இங்கெல்லாம் சஞ்சாரிக்க எனக்கு என்று முடியும் என்று தெரியவில்லை!

  nAradA

Sunday, June 15, 2008

Kannan:
Nice analysis on women and spirituality. ANDAL was the classic feminist without external intimidation. AkkammA was more taunting without any malice. I understand there is a place somewhere south of Chennai where it is a hillside and both men and women are attired in their natural skin (i.e.,buff)
Please make a correction in the word referring to "vAraNam Ayiram.."
Your Thamizh word says "vANaram". Please correct the word to "vAraNam"

  Anonymous

Tuesday, July 07, 2015

கண்ணன் சார். ஆண்டாள் கதையை மட்டும் நன்கறிந்து கொண்டு மற்றவர் கதைகளை கோட்டை விட்டிருக்கிறீர் . அக்கம்மா தேவி திருமணமே ஆகாதவர். அவரை அந்நாட்டு மன்னன் விரும்பி மணம் புரிய ஆசைக் கொள்கிறான் .அக்கம்மா மல்லிகார்ச்சுன சுவாமியை கணவராய் மனதில் திடமாய் வரித்துக் கொண்டதால், காம நோக்கோடு அக்கம்மாவின் ஆடைகளை களைகிறான். அந்நிர்வாண கோலத்துடனே அங்கிருந்து சென்று விடுகிறாள் அக்கம்மா. அந்நிர்வாண கோலாம் பிறர் காணாதவண்ணம் இறைவன் அவள் முழுதும் மயிர்களை முளைக்கசெய்து மறைப்பதாக கதையுண்டு. அக்கம்மா யாரையும் மணக்கவில்லை.
அது போல காரைக்கால் அம்மையும் சமணரை மணக்கவில்லை. இறை நாம்பிக்கையற்ற வியாபாரியை பரமதத்தன் என்னும் வணிகனைத்தான் மணந்தார். கொங்கைகள பிய்த்தெறிந்து பேய் போல் தோற்றமளித்தார் என்று எங்கே படித்தீர்கள்?. பேயுருவம் அந்த அம்மை இறைவனிடம் வேண்டிப்பெற்றது. நன்றாக அறிந்து கொண்டு விஷயத்தை பதியுங்கள் ஐயா.