e-mozi

மடல் 068: நரகும் சுவர்க்கமும்!

First published on Sat, Sat, 08 Jan 2000 21:36:06 +0200 15:22:05 +0200

இரண்டு மாதங்களுக்கு முன் இவ்வுலகம் வேறாய் இருந்தது! கருப் பச்சை போய் வெளிர் பச்சையாகி, அதுவே பின் வெளிர் மஞ்சளாகி, சிவப்பாகி, கருஞ்சிவப்பாகி, ஏதோ கருமாரியம்மனுக்கு மஞ்சள் காப்பு செய்தது போல் காடுகள் வர்ணக் களஞ்சியமாகி இலைகள் உதிர்ந்து கொட்டி..ஏதோ தவத்திற்கு முன்னேற்பாடு போல்! விழுந்த இலைகள் மண்ணோடு மண்ணாகி, மட்கி, மண் புழுவிற்கு உணவாகி, ஒரு நிலையில் பழம் இலை மண்புழுவாகி நின்றது. பனி தாங்க உடல் உறுதி தேடும் குருவிகளுக்கு தானிய உணவேது? இந்த புழுக்கள்தான் இரை. அடடா! விழுந்த பழம் இலை இப்போது வண்ணப் பறவையாகி நிற்கிறது. வண்ணப் பறவையும் கடுங்குளிர் தாங்காமல் நேற்று விறைத்து விழுந்து விட்டது. பல நாட்கள் குளிர் பதனப்படுத்தி வைத்தாலும், எங்கிருந்தோ வந்த நுண்கிருமிகளும், எறும்புகளும் இக்குருவியையும் சிதைத்து விட்டன காண். அன்று விழுந்த ஓர் இலை இன்று எறும்பாய், நுண்கிருமியாய் ஆகிப் போனது ஞானப்பெண்ணே! ஆக உலகில் மாற்றம் என்பது ஒவ்வொரு நொடியிலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நேற்று பார்த்த உலகு இல்லை இன்று. அதுதான் விஞ்ஞான உண்மை. எந்த ஒரு மனிதனும் ஒரே ஆற்றில் இருமுறை கால் வைத்தது இல்லை. ஆற்று ஓட்டம் போல்தான் வாழ்வும்.

ஆக பிறப்பு என்பது விசேஷமான ஒன்றில்லை. அதே போல் இறப்பு என்பதும் விசேஷமில்லை. இறப்பு, பிறப்பு என்பது உருமாறும் நிலைகளின் தோற்றங்கள். வாழ்வு என்பது இந்த மாற்றங்களில் நிகழும் ஒரு அற்புத அனுபவம். சாதாரண இந்த உண்மையை கற்பனை மிகுந்த நம் மனது ஏற்றுக் கொள்வதில்லை. நமது பிறப்பிற்கு விசேஷம் கற்பிக்கிறது மனது. நாம் பெறும் அனுபவங்களை வைத்து "நான்" என்ற ஒன்றை மனது உருவாக்கி வெற்றி கொள்கிறது. உடலின் இச்சைகள், அதன் வழி அனுபவங்கள், உடலின் நோவுகள், அதன் வழி வேதனைகள் இவை "நம்" வாழ்வாக மாறுகின்றன. பிறந்த சில வருடங்களில் நமக்கிட்ட பெயருடன் நாம் ஐக்கியப் பட்டுப் போய்விடுகிறோம். அந்த "நான்" சக்தி இருக்கும் வரை அதிகாரம் செய்து, அகங்காரம் கொண்டு வாழ்ந்து, நோயுற்ற போது வலிமை குன்றி, மீண்டெழுந்த பின் மீண்டும் வீறு கொண்டு, தன்னிச்சையாக தனக்கென ஒரு உலகை உருவாக்கிக் கொள்கிறது.

இப்படி உருவான உலகு, பிறப்பு, இறப்பு என்ற சுழற்சியில் பங்கேற்க மறுக்கிறது. அது தன்னளவில் மரணமற்ற ஒன்றெனவே கருதுகிறது. இந்த சுழற்சி மற்றவர்க்குத்தான் தனக்கில்லை என சிந்திக்கிறது. விளைவு "மரணம்" என்பது ஒரு பெருந்துயர் ஆகிப் போகிறது. மரணத்தைப் பற்றிய பயம் உள்ளுக்குள் விதைக்கப் பட்டுவிடுகிறது. அதன் பின் மரணத்தைப் பார்ப்பது, அதன் அருகில் நிற்பது கூட சங்கடமான செய்கையாகி விடுகிறது.
விலங்குகளும், தாவரங்களும் மரணத்தை எண்ணிக் கலங்குவதாகத் தெரிவதில்லை. அவைகள் தற்காப்பு உணர்ச்சி கொண்டவை. அது வாழ்வின் தேவையும் கூட. ஆனால் இறப்பு என்பதை நிகழும் தறுவாயில் ஏற்றுக் கொள்கின்றன. அதை நோக்கி வியாக்கியானம் செய்வதில்லை. மரணத்திற்காக நினைவாலயம் அமைப்பதில்லை. மண்ணில் வந்தது, மண்ணோடு போனது என்று வசனம் பேசாமல் அதுவாகவே வாழ்கின்றன.

ஆனால் மனிதனின் கதை வேறு. அவன் வாழ்வு தோன்றிய தருணங்கள் கைவசப் படாததால், அவன் சாவை நோக்கி அதி தீவிர கற்பனைகளில் இறங்குகிறான். மரணத்திற்கு பின் நிகழும் நிகழ்வுகளில் ஆசை கொள்கிறான். சுழற்சியின் அங்கமாக மறுக்கும் மன நிலையே தன் தனித்துவத்தை நிலை நாட்டும் முகமாக சொர்க்கம், நரகம் என்ற நிலைகளைப் பற்றிய ஆய்வில் இறங்க தூண்டுகோலாய் இருக்கும் என்று நம்புவதற்கு இடமுண்டு. மேலும், மனித வாழ்வு என்பது அறன் சார்ந்து நிற்கிறது. ஒழுங்கு இல்லாமல் மனித வாழ்வு சிறப்படைய வாய்ப்பில்லை, ஏனெனில் மனிதன் ஒரு சமூகப் பிராணியும் கூட. அறனை வலியுறுத்தும் முகமாக நல்லது-கெட்டது என்பது அளவிடப் படுகிறது. இது சார்புடைய ஒன்று என்பது நல்லது-கெட்டது என்பது சமூகத்திற்கு, சமூகம் வேறு படுவதிலிருந்து தெரிகிறது. நன்மை செய்தால் பரிசும், கேடு செய்தால் தண்டனையும் என்பது நெறிப்படுத்தும் வழிகள். இவை மானுடத்திற்கென்றே உருவானவை போல் தோன்றுகிறது (அல்லது சமூகப் பிராணிகளுக்கு பொதுவானவையாக இருக்கலாம்).

சமயம்-மதம் என்பவை மனிதனை ஒழுக்கமுள்ள சமூக ஜீவியாக தக்க வைத்துக் கொள்ள உருவான உத்திகள். எனவே பரிசு/தண்டனை என்ற கோட்பாடு மனிதனது வாழ்வு முழுவதும் நிறைந்து நிற்கிறது- அவனது மரணத்திலும் கூட! நல்ல வாழ்வின் பரிசு சொர்க்கம், கேடுகெட்ட வாழ்வின் பரிசு நரகம் என்று வகைப் படுத்துகிறது மனித மனம். இது பண்டைய காலம் தொட்டு இருந்துவரும் ஒரு செயல்பாடு, நம்பிக்கை. இந்தப் பழம் (archaic) துணிபு பக்தி இயக்கம் தோன்றி வலுப்பெற்ற நாட்களில் மெல்லக் குறைந்து இறைமை என்பது நீதிபதி அல்ல, அது ஒரு மாபெரும் இயக்கம், அந்த இயக்கத்தின் அங்கத்தினர் நாம், எனவே அந்த இயக்கத்தை/அந்த இறைமையை அனுபவிப்பது நமது பிறவிப் பயன், அதுவே நமது வீடுபேறு என்றும் கண்டு சொல்லின. இது உண்மையில் ஒரு மாபெரும் தமிழ்க் கண்டுபிடிப்பு என்றுதான் சொல்லவேண்டும். ஏன்? பக்தி இயக்கம் ஒரு தமிழ் இயக்கம்.


மேலும் மத்திய கிழக்கில் தோன்றிய சமயக் கொள்கைகளும், பண்டைய ஆசியா மைனரிலிருந்து வந்த ஆரிய சமயக் கொள்கைகளும் இந்த பழம் துணிபு (theory) களுக்கு உரம் கொடுத்து, சிரார்த்தம், பிண்டம் சமர்ப்பித்தல் போன்ற சடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க பக்தி இயக்கம் இவைகளை புறந்தள்ளின. உதாரணமாக, வைணவ நெறிகளை ஏற்றுக் கொண்டு வைணவன் ஆன பின் (அதாவது சங்கு-சக்ர முத்திரைகளை தோளில் ஏற்றுக் கொண்டபின்) அவனுக்கு மரணத்தைப் பற்றிய பயம் போய்விடுகிறது. ஒரு உண்மையான வைணவன் இறப்பதில்லை என்பது ஆச்சார்யர்களின் வாக்கு. இதன் பொருள், அவன் "ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்துழலும்" ஒரு சக்தியின் தன்மையைப் புரிந்து கொண்டு அந்த இயக்கத்தை மனப்பூர்வமாக அனுபவிக்கக் கற்றுக் கொண்டு விட்டான் என்று பொருள். எனவேதான் அநுபூதி நிலையை மிக உயர்வாகப் பேசுகின்ற தமிழ் மெய்ஞானம். அந்த நிலையில் ஒருவன் அழுவதையோ, ஆடிக் களிப்பதையோ, பித்தன் போல் இருப்பதையோ கேலியாகக் காணாமல் மிக உயர்வாகப் பேசுகின்றன தமிழ்ச் சமயங்கள். ஆரிய சமய விளக்கங்களில் இந்த சடங்குகள், பூஜைகள், அதன் விளைவால் பெரும் சக்திகள், தேவர்களை திருப்திப் படுத்துதல், அதன் விளைவால் நன்மை பெறுதல் போன்ற ஒரு வியாபார நோக்கே உரத்துக் கேட்கிறது. இந்த ஆரியக் கலப்புதான் இன்றளவும் தமிழ் சமயங்களை ஆட்டிப் படைக்கும் சக்தியாய் இருந்து வருவது சடங்குகள் நிறைந்த நமது வாழ்விலிருந்தே தெரிய வரும்.

நான் இதுவரை மேற்சொன்ன கருத்துக்களுக்கான அகச்சான்றுகளை ஆழ்வார்கள் பாசுரங்களில் தேடுவோம். நமது முதல்தாய் போன்ற நம்மாழ்வார் வாழ்வைக் காணும் விதத்தைப் பாருங்கள்:


வாங்குநீர் மலருலகில் நிற்பனவும் மீதிரிவனவும்
ஆங்குயிர்கள் பிறப்பிறப்புப் பிணிமூப்பால் தகர்ப்புண்ணும்
ஈங்கிதன்மேல் வெந்நரகம் இவையென்ன உலகியற்கை?
வாங்கெனைநீ மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே
(தி.வா.மொ. 4.9.5)


இவர் வாழ்வை மிகுந்த அறிவியல் கண்ணோடு பார்ப்பது தெரியவருகிறது. நீர், நில உலகில் பிறப்பிறப்பு என்பதும், பிணி மூப்பு என்பதும், அதன்மேல் மனிதனின் துணிபான வெந்நரகம் என்பதும் உலக இயற்கை என்று சொல்கிறார்.

பிரபஞ்சம் முழுவதும் இறைவன் நீக்கமற நிறைந்துள்ளான். அவன் ஒவ்வொருவர் உள்ளும் காரணனாக அமர்ந்துள்ளான். அவனே அரு நரகமுமாய் உள்ளான். அவனே வானுயர் இன்பமும். இந்தத் தெளிவு வந்தபின் நரகத்தைக் கண்டு அஞ்சுவதேன்? என்று கேட்கிறார் சடகோபன். அவரது திருவாய்மொழி இதோ:

யானும் நீதானே யாவதோ மெய்யே

அருநரகவையும் நீயானால்,

வானுயரின்பம் எய்திலென் மற்றை

நரகமே யெய்திலென்? எனினும்

யானும்நீ தானாய்த் தெளிதொறும் நன்றும்

அஞ்சுவன் நரகம் நானடைதல்.

வானுயரின்பம் மன்னிவீற் றிருந்தாய்!

அருளுநின் தாள்களை யெனக்கே
(தி.வா.மொ. 8.1.9)


இந்த இரண்டு பாடல்களின் கடைசி வரிகளில் அவர் இறைச் சரணத்தைச் சுட்டுகிறார். அச்சரணம்தான் இந்நிலைக்கு மார்க்கம் என்று பொருள். இச்சரணம் என்பது பக்தியால் விளைவது. பக்தியோ ஞானத்தால் விளைவது. ஆக உள்ளத் தெளிவு இம்மார்க்கங்களால் கிடைக்கப் பெற சொர்க்கம்/நரகம் என்பது வெறும் கோட்பாட்டளவே என்பது நம்மாழ்வார் கருத்து.

ஆயினும் வைணவர்கள் சிரார்த்தம் செய்யாமல் இருப்பதில்லை. மோட்சம் தரும் சொல் "நாராயணா!" என்று சொல்லத் தவறுவதில்லை. எவ்வளவு தேடிப் பார்த்தாலும் இந்த நரகத்தைப் பற்றிய விவரணையை எந்த ஆழ்வார்களும் தரவில்லை, ஒருவரைத் தவிர. அவர்தான் திருமங்கை ஆழ்வார். அவர் தரும் காட்சி இதோ:

வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து

பிறர்பொருள், தாரமென்றிவற்றை

நம்பினார் இறந்தால் நமன்தமர் பற்றி

எற்றிவைத்து எரியெழுகின்ற செம்பினால்

இயன்ற பாவையைப் பாவீ!

தழுவென மொழிவதற்கஞ்சி

நம்பனே! வந்துன் திருவடி யடைந்தேன்-

நைமிசா ரணியத்துள் எந்தாய்!
(பெ.தி.மொ. 6-4)


இவர் தரும் காட்சி யூத, கிருத்துவ, இஸ்லாமிய வர்ணனைகளுடன் ஒத்துப் போகிறது. அதாவது எம தூதர்கள் வந்து, எற்றிவைத்து, எரிகின்ற தீயில் கொதிக்கும் செம்பினாலான பாத்திரத்தில் போட்டு வதைத்தெடுப்பர் என்பது. எல்லோரையுமல்ல! கேடு செய்பவர்களை என்று சொல்கிறார். இவருக்கு மட்டும் என்ன ஆய்விட்டது?

பெரியாழ்வாருக்கோ யசோதை பாவத்தில் காணும் கண்ணன் உலகை மயக்கும் குழந்தை. அந்த பாவத்தில் நரகத்தைப் பற்றிய நினைவேது? ஆண்டாளுக்கோ எப்போதும் கல்யாணக் கனவு:-) அவள் உலகில் நரகம் என்பது அவளது பிரிவுத் துயரே அன்றி வேறல்ல! திருப்பாணாழ்வார் தனியாக நரகத்தைப் பற்றி எழுத வேண்டிய அவசியமில்லை. அவர் வாழ்வே ஒரு சமயம் நரகமாகிப் போனது உண்மை! தொண்டரடிப்பொடிக்கு சமணர்களுடனும், பெளத்தர்களுடனும் யுத்தம் செய்து வைணவத்தை மீட்டெடுப்பதில் பொழுது போய்விட்டது! முதல் மூவர்களுக்கு வைணவத்தை ஒரு சமூக இயக்கமாக மாற்றும் பணியில் நேரம் போய் விட்டது. திருமழிசையோ ஒரு சித்தர். அவருக்கு நரகம் ஒரு சிறு நக வலி! மதுரகவிக்கு நம்மாழ்வாரின் இன்னமுதம் உயர் சுவர்க்கம்-எப்போதும்! நம்மாழ்வார் தெள்ளத் தெளிவாக சுத்த-அத்வைத நிலையைச் செப்பிவிட்டார். ஆக, மிஞ்சியவர் திருமங்கை ஆழ்வார்தான். இவர் வாழ்வு கொலையும், திருடும் என்று ஆரம்பித்து பெரும் குற்ற உணர்விற்கு இடம் கொடுத்து விட்டது. அதை அவர் பல பாடல்களில் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறார். எனவே இவரால் குற்ற உணர்விற்கு இடம் கொடுக்கும் யூத, கிருத்துவ, இஸ்லாம் சமயங்கள் போல் பேச முடிகிறது. ஆனாலும் இவரது வாழ்விலேயே இவர் செய்த குற்றத்தைக் களைந்து அவருக்கு வீடுபேறும் கிடைக்கிறது. எனவே இவர் பேசுவது தன்னனுபம் என்றில்லாமல் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு என்று கொள்வதற்கும் இடமிருக்கிறது.

ஆழ்வார்களின் உள்ளக்கிடக்கை பின்னால் வந்த ஆசார்யர்களால் மிக, மிக நுணுக்கமாக ஆராயப் பட்டு வெளிப் படுத்தப் பட்டுள்ளது. எனவேதான் வடக்கு திருவீதிப் பிள்ளை என்பார் எம்பெருமான் இராமானுசரின் அருள் கிடைக்கப் பெறும் போது நம்மை இன்னிடும் தொல்லைகள் செல்லும் நரகத்திற்கு, ஆயின் இன்னருளும், சுவர்க்கமும் நம்மை வந்தடையும் என்று சொல்கிறார். இதுதான் சொர்க்கம்/நரகம் என்பது பற்றிய வைணவப் புரிதல் என்று சொன்னால் தவறில்லை.

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னம் நரகலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர் தரு தொல்லைச் சூழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே
விடுமே சரணமென்றால், மனமே நையல் மேவுதற்கே!

8 பின்னூட்டங்கள்:

  Anonymous

Tuesday, August 21, 2007

//ஒரு உண்மையான வைணவன் இறப்பதில்லை என்பது ஆச்சார்யர்களின் வாக்கு.//

இயற்கையின் விதிகளை உணர்ந்தவன்
யாரும்

வைணவன் என்று பொருள் கொள்ளலாமா!

'உண்மை அழிவது இல்லை எனென்றால்


அழிவது உண்மையாய் இருப்பதில்லை' என்று


எப்பொழுதோ படித்தது நினைவுக்கு


வந்தது!

  நா.கண்ணன்

Tuesday, August 21, 2007

வைணவ லட்சணங்களாக இரண்டை முன் வைக்கின்றனர் நம் பெரியோர்:

1. நமது உண்மையான அடையாளம் சமூகம் தரும், இயற்கை தரும் புற அடையாளமல்ல. நாம் அழிவில்லா ஆத்மா. அதுவே உண்மையான அடையாளம். நான் முன்பு விளக்கியது போல், நாராயணன் என்பவன் இந்த அழிவில்லாக் கூட்டங்களுக்குச் சொந்தக்காரனாக இருக்கிறான்.

2. நாம் அவன் சொத்து என்பதை உணர வேண்டும். அவன் தாய். நாம் பிள்ளைகள். எப்படி ஒரு பிள்ளை தாய்க்கு அடியவனாக உள்ளதோ அதுபோல் நாம் இறைவனுக்கு அடியவரே (இது கடிது வரும் பணிவல்ல, இயல்பான உறவால் வரும் பணிவு)

அழியாத வஸ்துவின் பிள்ளையும் அழியாததே!

  Anonymous

Tuesday, August 21, 2007

நீங்கள் சொல்லியது புரிகிறது. சத்தியமானது.

ஆனால், உங்களைப் போல் சிலர்தான் இப்படி


விளக்கம் தருகிறார்கள்! நன்கு படித்தவர்கள்


கூட நான் என்கிற அகங்காரத்துடன்தான்


உலகத்தை அணுகுகிறார்கள். வைணவன் என்ற


உலக அடையாளம் உள்ளவன் மட்டுமில்லை,


யாருமே இறப்பதில்லை என்று சொல்ல வந்தேன்!

நாராயணன் என்ற பெயர், வைணவத்திலிருந்து


வந்தாலும் அது உலகத்துக்கே பொதுவான


உண்மைதானே!

  நா.கண்ணன்

Tuesday, August 21, 2007

இங்கு வைணவன், நாரணன் என்பது பொதுமையில் பார்க்கப்படுகிறது. அதுவொரு உலகப்பார்வை (world view). பிரிந்து பட்ட உலகில் இருப்பதால்தான் இக்கேள்வியே இப்படி எழுகிறது :-)

ஒரு வைணவப் பெரியவரிடம் நாராணனை சதா நினைவு கொள்ள வழி சொல்லும் என்று கேட்டாராம்.

அவர் சிரித்துக் கொண்டே, சொல்கிறேன், அதற்கு முன் அவனை எப்படி மறப்பது என்று சொல்லும்! என்றாராம். எங்கும் அவனருளே, காண்பது அவன் காட்சியே. புற சமய அடையாளங்கள் இங்கு முக்கியமில்லை. உள்முகப் பார்வையே முக்கியம் :-)

  Anonymous

Tuesday, August 21, 2007

புரிந்து கொண்டேன்! நன்றி! உங்கள் எழுத்துக்கள்


மூலம் தெளிவு வருகிறது! அதனால் விளக்கங்கள்


கேட்கிறேன்!

  நா.கண்ணன்

Tuesday, August 21, 2007

நண்பரே! இறைவன் பற்றிப் பேசும் பேச்செல்லாம் இனிமையே. உங்கள் கேள்விகள் எம்மை உயிர்ப்பித்து அவன் நினைவிற்கு இட்டுச் செல்கின்றன. எனவே இவை பின்னூட்டமல்ல, 'சத்சங்கம்' :-)

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Wednesday, August 22, 2007

அழகான பதிவு கண்ணன் சார்!
நரகத்தை அந்த வவாச நகைச்சுவைப் பதிவுக்கும் இப்படித் தான் பயன்படுத்திக் கொள்ளச் சொன்னீர்கள்! :-) - //இன்னம் நரகலிட்டுச் சுடுமே//

//எப்படி ஒரு பிள்ளை தாய்க்கு அடியவனாக உள்ளதோ அதுபோல் நாம் இறைவனுக்கு அடியவரே//

சரியாகச் சொன்னீர்கள்!
பெற்றவள் அடி பிள்ளைக்கு வலிக்காது! பிள்ளையின் உதாசீனம் பெற்றவளுக்கு நோகாது!

நிறைய பேர் அடியோம் என்றால் அடிமை என்று பொருள் கொண்டு முகம் சுளிப்பார்கள்! அடியேன் என்று சொல்லக் கூச்சப்படுவார்கள்!

ஆனால் இது தாய்-சேய் அடிமைப் பந்தம். தாய் மகனை வேலை வாங்குவது அடிமைத்தனமும் அல்ல!
சேய் தாய்க்குத் தரும் தொல்லைகள் பாவங்களும் அல்ல!

  நா.கண்ணன்

Wednesday, August 22, 2007

கண்ணபிரான்: தாய்க்கு பிள்ளை அடியேந்தானே என்றும். தாயை விஞ்ச முடியுமோ? தாயில்லாமல் நானில்லை என்பதுதானே சரி. பின் "அடியேன்" என்று சொல்லிக்கொள்ள கூசுவானேன்? :-)

நரகம் என்ற ஒன்று கிடையாது. கண்ணனைப் பிரிந்து இருக்கும் காலமே நரகம். "ஒருமா நொடியும் பிரியேன்" என்பது திருவாய்மொழி. இதுதான் ஆழ்வார் தரிசனம். மிச்சதெல்லாம் வெறும் கற்பனை!