e-mozi

மடல் 067: தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அவர்க்கொரு குணம் உண்டு!

First published on : Date: Sat, 01 Jan 2000 15:22:05 +0200

அன்றொரு நாள் பல்கலைக் கழக வளாகத்தில் ஒரு சீன மாணவரின்உரையாடலைக் கேட்டும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் மிக ஆச்சர்யமாக நோன்புக்கு போகும் ஒரு பாலஸ்தீனரைப் பார்த்துக் கேட்டார். "ஏன்? இப்படி நோன்பு, அது, இதுவென்று அவஸ்தைப் படுகிறீர்கள்" என்று. அந்த நேரம் பார்த்து ஒரு இந்தியப் பெண் வந்து சேர்ந்தாள். அவளைப் பார்த்து, "நீ!சாமி குப்பிடுவாயா?" என்று கேட்டான். இயல்பாக உள்ள ஒன்றைப் பற்றி ஒருவர் ஆச்சர்யத்துடன் கேட்பதைப் பார்த்து அவள் ஆச்சர்யப் பட்டுக்கொண்டிருக்கும் போது நான் அவர்களைக் கடந்து சென்றேன்.சிலருக்கு இயல்பாக உள்ள செயல் சிலருக்கு அதிசயமாக உள்ள இந்த உலகத்தை எண்ணி வியந்தவாரே!சோவியத் நாட்டில் கூட கடவுளைப் பற்றிபேசுவது அநாகரியமாக இருந்தது ஒரு காலத்தில். சீனர்கள் தங்களுக்கு தாய்வழிச் சீதனமாய்க் கிடைத்த பெளத்த டாவோயிசம் இவைகளை துறந்து விட்டு நிர்வாணமாய் நிற்கின்றனர். ஒருகாலத்தில் உலகை ஆச்சர்யத்தில் போட்ட பிரமிடுகளின் மூதாதயர் கொண்டசமய மரபு பின்னால் வந்த கிரேக்க,ரோம,கிருத்துவ, முகம்மதிய சிந்தனைகளால் மழுங்கடிக்கப் பட்டு இன்று காணாமல் போய்விட்டது. மயன், அஸ்தகா பண்பாடுகள் கூட தங்களது சமயச் சிந்தனை மரபை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. மீதமிருந்த கொஞ்ச நஞ்சமும் ஸ்பானிய பாதிரிகளால் உருமாற்றப் பட்டு இன்றுள்ள அமெரிக்க இந்திய வம்சாவளியினர் வேர்கள் அற்று வெள்ளை அமெரிக்காவின் "குடி" மக்களாய் வாழ்கின்றனர்.
இதே காலகட்டத்தில் இந்திய உப கண்டத்தில் தோன்றிய சமய சிந்தனை மரபு ஆரிய, கிரேக்க, யூத, கிருத்துவ, முகம்மதிய சமயச் சிந்தனைகளின் பாதிப்பையும் உள்வாங்கி இன்றும் நிலைத்து நிற்கிறது. இந்த சிந்தனை மரபிற்கு "மதம்" என்று பின்னால் பெயர் கொடுக்கப் பட்டது.

ஆக, மனிதக் குரங்களிலிருந்து மானுடம் வெளிப்பட்டு புல்வெளிகளில் மேவத் தொடங்கிய காலம் தொட்டு காணக்கிடைக்கும் ஒரு சமய மரபாக இதைக் கொள்ளலாம். நான்கு கால் விலங்கு நிலையிலிருந்து "நட்டக் குத்தாக" மனிதன் நடக்கத் தொடங்கியகாலக் கட்டம்தான், சமயச் சிந்தனைகளின் பிறப்பிடம் என்று சொன்னால் தவறில்லை. மிருகங்கள் தங்களுக்குள் மதங்கள் தோற்றுவித்து, தொழுகை நடத்துவதாக ஆய்வுகள் இல்லை. ஆக சமயம் என்பது மனித பரிணாமத்துடன் இயல்பாக வளர்ந்துள்ள ஒரு இயக்கம். மனிதன் சுய பிரக்ஞை கொண்ட காலத்தில் எழுந்தகேள்விதான், "தான் யார், தன்னைச் சுற்றியுள்ள இப்பிரபஞ்சத்திற்குமுள்ள உறவுஎன்ன?" போன்ற ஆதி கேள்விகள்தான் சமயத்தின் தோற்றுவாய்.ஒன்றிலிருந்துதான் ஒன்று உருவாக முடியும். ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து ஒன்றுமே தோன்ற வாய்ப்பில்லை. அப்படியெனில் தன்னையும், தன்னைச் சுற்றியுள்ள இப்பிரபஞ்சத்திற்கும் தோற்றுவாயாக "ஒன்று" உள்ளது என்ற புரிதலின் விவரிப்புகளே நமது வேதம் மற்றும் தமிழ் மறைகள். இந்த ஆதி தொடர்பின் ஆய்வுகளே உபநிடதங்கள்,வேதாந்தங்கள், சித்தாந்தங்கள், தேவாரங்கள், திவ்யப் பிரபந்தங்கள். வாக்கினால், மனத்தினால், தொடமுடியாத ஒன்றை வாக்கு, மனம் கொண்ட மனித வாழ்விற்குள் உட்புக வைத்து, தக்க வைத்துக் கொள்ளும் மனித யத்தனிப்பே நம் மறைகள் என்றுசொன்னால் தப்பில்லை.

தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த்
தயங்கொளிசேர் மூவுலகும் தானாய்வானாய்
தன்னாலே தன்னுருவில் மூர்த்தி மூன்றாய்த்
தானாயன் ஆயினன் சரணென்றுய்வீர்
- பெ.தி.மொ.6.6


என்று சொல்கிறார் திருமங்கை ஆழ்வார். அரூபமாக இருந்தும், உருவம் எடுக்கும் அதன்பாங்கை விளக்கும் வண்ணம் "தன்னாலே தன்னுருவம் கொள்ளும்" என்று சொல்கிறார். அந்த ஒன்றுதான் இந்திய சமய மூம்மூர்த்திகளான சிவ, விஷ்ணு, பிரம்மாவாகத் தன்னை உருவாக்கிக் கொள்கிறது என்கிறார்.

அந்த "ஒன்றின்" தன்மைகளை மெய்யுணர்வுடைய எவரும் உணர முடியும். ஒரு நாள் சடகோபன் அடிப்பொடி என்பவர் கீழ்கண்ட பாடலை வலையில் வளைய விட்டார்.

ஆற்றுடன் அசையும் படித்துறைப் பாசியாய்
காற்றுடன் இசைக்கும் கடற்கரை நாணலாய்
புனல் அலை மீதொரு ஆலிலைச் சிசுவாய்
மணல் அசை காற்றின் மந்திரப் படிகளாய்
ஆலயப் பண்ணின் அழகின் அடுக்காய்
அலைகடல் அமுதின் கடையொரு மத்தாய்
குணதிசைக் கதிரில் ஒளிர்விடும் பனியாய்
தணல் சுடும் நெருப்பின் தகனத்தின் மீட்சியாய்
அதிர்வுரும் அனைத்தின் அந்திம சாட்சியாய்
இலத்திரன் இயங்கும் மின்னணுக் கவிதையாய்
அங்கும், இங்கும், எங்கும் நான்.


(இதன் இசை வடிவம்!)

இது ஈகோவின் வெளிப்பாடு இல்லை. பிரபஞ்சத்துடன் ஒருமைப் படும் பொழுதுகளின் வெளிப்பாடு. அதனால்தான் வள்ளலார் "ஒருமையுடன் நினது திருவடி" நினைக்கவேண்டும் என்கிறார். மனிதன் பார்க்கின்ற பொருள்களுடன் ஒருமைப் படுவது,அவைகளை தன் உணர்வின் வெளிப்பாட்டிற்கு பயன்படுத்து இயல்பான ஒன்று.திருவாதவூரில் பிறந்த ஒரு மெய்ஞானி இப்படி தன் உணர்வை வெளிக் கொணர்கிறார்.

புல்லாகிப் பூடாய்
புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப்
பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்
பேயாய் கணங்களாய்
வல் அசுராகி
முனிவராய்த் தேவராய்
செல்லா அநின்ற இத்
தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும்
பிறந்து இளைத்தேன்!


இதைப் பரிணாம வளர்ச்சியின் இயற்பியல் வெளிப்பாடாகக் கட்டுடைக்கலாம். அதற்குப்பொருந்துமாறு பல நிலைகளை எடுத்துச் சொல்கிறார். ஆனால் இந்த பேய், கணங்கள்,அசுரர் என்பவையும் பரிணாம வளர்ச்சியின் கட்டங்களா? என்று கேட்டால் அதற்கு இயற்பியல் ரீதியில் பதில் இல்லை. ஆனால் பாரதி போன்ற கவிஞர்கள் இதை இயல்பான உருவக வெளிப்பாகவே பொருள் கொள்வர். நாம் ஆசையில் அல்லாடும் போது பேய் நிலை, உண்ட வீட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் போது அசுரர்கள் இப்படி.

"மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்" என்று சொல்லி வீடுற்ற நிலையில் இறைமையைக் கண்ட விதத்தையும் சொல்கிறார், "பொய்ஆயின எல்லாம் போய் அகல வந்து அருளி மெய்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே" என்று. இது ஏதோ திருக்குரானில் இருந்து எடுத்த வாசகம் போல் தோன்றலாம். ஆனால் சைவமறையிலிருந்து வரும் வாசகம் இது. வைணவத்தில் இந்த "நோக்கரிய நோக்கும், நுணுக்கரிய நுண்னுணர்வும்" இல்லையா? என்று கேட்டால், திருமங்கை ஆழ்வார் விடுவதாய் இல்லை:

மின்னுருவாய் முன்னுருவில், வேதம் நான்காய்
விளக்கொளியாய், முளைத்தெழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய், முன்னுருவில் பிணிமூப்பிலாப்
பிறப்பிலாயாய், மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்
புனலுருவாய், அனலுருவில் திகழுஞ் சோதி
தன்னுருவாய், என்னுருவில் நின்ற எந்தை
தளிர்புரையும் திருவடியென் தலைமேலவே
- திருநெடுந்தாண்டகம்


இறைமையின் தன்மைகளை தெள்ளத் தெளிவாக விளக்கும் பாசுரம் இது. திருமால் பிறப்பிலி என்றுதான் சொல்கிறார் இவர். எனவே அவதாரம் என்பதை நாம் "metaphorical" ஆகத்தான் பார்க்க வேண்டும். மேலும் அவர் மின்னுருவாகவும் உள்ளார் என்று சொல்கிறார். ஆக, திருமால் "மின்னம்பலத்திலும்" உள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். சுக முனிவர் "கடவுளே, கடவுளே யோ!" என்று கதறிக் கொண்டு போயினராம், உடனே அங்கிருந்த மலை, சுனை, மேகம், நதி, ஓடை, மரம், செடி, கொடி, மலர், பறவை, விலங்கு - என எல்லாப் பொருள்களும் "ஏன்? ஏன்?" என்று கேட்டனவாம். இதை தாயுமானவர், "அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ எங்கும் 'ஏன்?ஏன்?' என்று கேட்டனவாம்" என்று அழகாகச்சொல்கிறார்.இப்படியான மெய் ஞான புரிதல் உள்ள இந்திய சிந்தனை வட்டம் பின் ஏன் இறைவனை உருவகப் படுத்தத் தொடங்கியது? இதற்கு பல்வேறு வகையில் பதில் சொல்லலாம். ஒன்று, "கவிஞன் முற்றினால் ஞானி" என்பது பழமொழி. தமிழ் மறை தந்த ஞான சம்மந்தனாகட்டும், நம்மாழ்வராகட்டும், திருமூலராகட்டும்-இவர்கள்அடிப்படையில் தமிழ் கவிகள். நானும் பார்த்து விட்டேன் எந்தை திருமூலர் சொன்ன சொல்லை விஞ்ச வோறொருவன் இன்றுவரை வரவில்லை. அப்படி என்ன அவர் சொல்லிவிட்டார்? " என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே!" என்பதுதான் அது. "நற்றமிழை வித்தி நீ உள்ளத்தில் நீ விதைத்தாய் கற்ற மொழியாகக் கலந்து" என்று சொல்கிறார் திருமழிசை. ஆக, தமிழ்தான் முந்திக் கொண்டு நிற்கிறது. இந்த தமிழ்த் தொடர்பை உடன் ஆராய்வோம். அதற்கு முன் சொல்ல வேண்டியது என்னவெனில் "கவிஞனின் மொழிஉருவகம்" என்பதே. கவிஞனால் உருவகிக்காமல் பேசவே முடியாது. நிற்க.

இரண்டாவது, தமிழ் மண்ணிற்கு என்று சில பண்புகள் உண்டு. அவர்களுக்கென்றுசில நோக்கரிய நோக்கு உள்ளது. அதன்படி இறைவன் என்பது "உள்ளுறை உவமம் அல்லது Metaphor" என்பது. நில அமைவின் ஒட்டு மொத்த வெளிப்பாடே இறைவன் என்று கண்டனர் பழந்தமிழர். முல்லைத் தெய்வமான கண்ணனை, பூ, பூண்டில்லாத பாலை வெளியில் வைத்துப் பார்க்க தமிழ் மனம் இடம்கொடா. இது நமது விழுமியம். இதைச் சும்மா நக்கல் அடிக்க முடியாது. இது தமிழன் ஒவ்வொருவனின் பாரம்பரியம்.தமிழ் அடையாளங்களில் இதுவும் ஒன்று. முனைவர் லோகநாதன் சொல்லும்,அகம், புறம் மற்றும் உகம் என்பது நம் அடையாளம். இதைப் பற்றி கேலியாகப் பேசுவது தன் தாயின் கற்பைச் சோதிப்பதற்கு ஒப்பாகும்.

இது இருபத்தியோராம் நூற்றாண்டிலும் "தமிழ் கூறும் நல்லுலகத்தில்" காணக்கிடைக்கிறது. ஐரோப்பா, மற்றும் கானடாவில் லட்சக் கணக்கில் குடிபுகுந்துள்ளனர் ஈழத் தமிழர்கள். இவர்கள் செல்லுமிடங்களிலெல்லாம் ஆலயங்கள் அமைக்கின்றனர். ஆனால் ஒரு பெருத்த வித்தியாசத்துடன்! இவர்கள் அமைப்பது சிவாலயங்களோஅல்லது பெருமாள் கோயில்களோ அல்ல. நூற்றுக்கு 90 சதவிகிதம் இவர்கள் அமைத்திருக்கும் ஆலயங்கள் பிள்ளையார் அல்லது மாரியம்மன் (தாயார்) ஆலயங்கள்தான்.அந்த வகையில் இவை அமெரிக்க ஆலய உருவாக்கத்திலிருந்து வெகுவாகவேறுபடுகிறது. ஏன்?

ஈழத்தமிழன் அகதியாக வெளி நாட்டில் புகுகிறான். நிற்க ஓர் இடமில்லை. தனக்கென ஒரு அடையாளமில்லை. இந்த நேரத்தில் அவனுக்கு தன் தாய் மொழியும், அதன் மெத்த நல்விழுமியமான "உகமும்" துணை செய்கின்றன. தன்னைக் காக்கும் தெய்வமாக, தடைகளைக் களையும் தெய்வமாக அவன் "விக்னேஸ்வரனை" ப் பார்க்கிறான். மேலும்,தாய் மண்ணை இழந்த நிலையில் அவனுக்கு தாய்க்கு தாயாக வந்து துணை செய்யக்கூடியவளாக மாரியம்மனைப் பார்க்கிறான். இவன் அக உளைச்சலின் வெளிப்பாடே பிள்ளையார் கோயிலும், தாயார் போயில்களும். (மாரியம்மன் கோயில்கள் உருப்பெருவதற்கு முன் மாதா கோயில்களில் தாலிக் கொடியை காணிக்கை செய்யும் தமிழ்த் தாயின் அக வெளிப்பாடும் ஐரோப்பாவில் காணக் கிடைக்கிறது). இது மிக, மிக இயல்பானது. மிக, மிக தமிழ் மயமானது. தெய்வம் என்பது உள்ளுறை உவமம் என்று 2000 ஆண்டுகளுக்கு முன் கண்டு சொன்ன தொல்காப்பியனின் கூற்று இன்றளவும் மெய்ப்படுகிறதே. இதை என்ன சொல்ல?

"தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அவர்க்கொரு குணம் உண்டு"

8 பின்னூட்டங்கள்:

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Wednesday, August 22, 2007

//இவர்கள் அமைப்பது சிவாலயங்களோஅல்லது பெருமாள் கோயில்களோ அல்ல. நூற்றுக்கு 90 சதவிகிதம் இவர்கள் அமைத்திருக்கும் ஆலயங்கள் பிள்ளையார் அல்லது மாரியம்மன் (தாயார்) ஆலயங்கள்தான்//

அப்படியா கண்ணன் சார்?
முருகன் ஆலயங்கள் கிடையாதா?

எனக்குத் தெரிந்த வரை வெளிநாட்டில் (குறிப்பாக கனடா, அமெரிக்கா, ஐரோப்பா) அனைத்து தெய்வங்களும் கொண்ட ஆலயங்கள் தான் அமைக்கிறார்கள்!
மூல மூர்த்தி யார் என்பது தான் வேறுபடுகிறது!

சிங்கை, மலேசியாவில் மாரியம்மன் கோவில்களைச் செட்டி நாட்டு மக்கள் அமைக்கின்றார்கள்!

ஈழத்தில் மாரியம்மன் வழிபாடு எந்தளவுக்குப் பிரசித்தம் என்று அறிந்திலேன்!
ஆனால் இங்கு நயாகராவுக்கு அருகில் ராச்செஸ்டர் ராஜராஜேஸ்வரி மிகவும் பிரசித்தம். கோயில் பூசைகளும், யாகங்களும் சக்தி உபாசனையாக ஈழத் தமிழர் தான் மிகவும் சிறப்பாகச் செய்கின்றார்!

  நா.கண்ணன்

Wednesday, August 22, 2007

கண்ணபிரான்:

ஐந்திணைக் கோட்பாட்டில் தெய்வங்கள் மனித உளவியல் உயர் பரிமாணம் என்று கண்டனர். அது எவ்வளவு உண்மை என்பதை இவர்கள் "முதலில்" நிர்மாணிக்கும் கோயில்களிலிருந்து கண்டு கொள்ளலாம். முருகன், விஷ்ணு, சிவனெல்லாம் பின்னால் வருவர். முதலி வருவது பிள்ளையாரும், அம்மனும்தான். அக்கோயில்களில் பிற தெய்வங்களுக்கு சந்நிதி இருக்கும். ஆனால் கோயில் பெயர் முதன்மைப் படுத்தப்பட்ட தெய்வத்தின் பெயரில்தான் இருக்கும். சங்கத்தின் எதிரொலி 21ம் நூற்றாண்டிலும் கேட்கிறது.

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Wednesday, August 22, 2007

//பிறப்பிலாயாய், மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்புனலுருவாய்//

பொதுவாகச் சிவபெருமானை பிறவா யாக்கைப் பெரியோன் என்றும்
முருகனை பெம்மான் முருகன் பிறவான் இறவான் என்றும் சொல்லி மேற்கோள் காட்டுவார்கள்!

அடியேன் இன்று தான் நம் பெருமாளுக்கும் இது போல் ஒரு மேற்கொள் இருப்பதை அறிந்தேன். நன்றி கண்ணன் சார்! அவதாரம் என்பது சொல் அளவில் பார்த்தாலும் வெறும் இறங்கி வருதல் தானே!

//சீனர்கள் தங்களுக்கு தாய்வழிச் சீதனமாய்க் கிடைத்த பெளத்த டாவோயிசம் இவைகளை துறந்து விட்டு நிர்வாணமாய் நிற்கின்றனர்//

இது பற்றி சீனத்தை நன்கு அறிந்த நீங்கள் தனியாகப் பதிவிடுங்கள் சார். உலகத்தின் தொழிற்சாலையாகிப் போன சீனம் டாவோயிசத்தைத் தொலைத்து விட்டதா என்ன?

  நா.கண்ணன்

Wednesday, August 22, 2007

கண்ணபிரான்:

போக்கும் வரவும் இல்லாப் புண்ணியனே! என்பார் மாணிக்க வாசகர். போக்குவரத்து இல்லையெனில் பிறகு நமக்கும் அவனுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? உண்ணாமுலை என்று தேவியைச் சொன்னாலும் ஞானசம்மந்தனுக்கு எப்படிப் பாலூட்டினாள் (ஒரு கிண்ணத்தை வைத்து இந்தக் காலத்து தாதிகள் செய்வது போல் செய்தாளா?). திருவிளையாடல் என்றால் என்ன? அப்போது சிவன் "இறங்கி" வருதலை அவதாரம் என்று சொல்லக் கூடாதா?

தத்துவ தரிசனத்தில் ஆழ்வார்களுக்கும், நாயன்மார்களுக்கும் வேறுபாடு கிடையாது. வெவ்வேறு தொன்மங்கள், குறியீடுகள் அவ்வளவே!

சீனாவின் நிலமை பரிதாபம். "காசேதான் கடவுளடா!" என்பதே நிதர்சனம்!

  வடுவூர் குமார்

Wednesday, August 22, 2007

மிக அருமையாக கொடுத்துள்ளீர்கள்.
இதெல்லாம் படித்து புரிந்துகொள்ளவே கொஞ்சம் ..வேண்டும்.
படிக்கப் படிக்க வந்துவிடும் என்று நினைக்கிறேன்.

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Wednesday, August 22, 2007

//திருமூலர் சொன்ன சொல்லை விஞ்ச வோறொருவன் இன்றுவரை வரவில்லை!
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே!
- திருமூலர்
நற்றமிழை வித்தி நீ உள்ளத்தில் நீ விதைத்தாய் கற்ற மொழியாகக் கலந்து
- திருமழிசை ஆழ்வார்
//

யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
யானே தவமுடையேன் எம்பெருமான் - யானே
இருந்ததமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்,
"பெருந்தமிழன் நல்லேன் பெரிது"
-பூதத்தாழ்வார்
பெருந்தமிழன் என்றே பறை சாற்றிக் கொள்கிறார் பாருங்கள், எவ்வளவு பெருமையுடன்!

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும்
இடந்தும் கிடந்தும் நின்றும்,
...
வண் தமிழ் நூற்க நோற்றேன்
அடியார்க் கின்ப மாரியே
- நம்மாழ்வார்
தமிழை நோற்றதாகவே சொல்கிறார்! எவ்வளவு இனிமை!

  நா.கண்ணன்

Wednesday, August 22, 2007

திருமூலரை மேற்கோள் காட்டி அப்போது எழுதினாலும், ஆழ்வார்களின் தமிழ்ப் பற்று அதையும் விஞ்சுவதாக உள்ளது என்பதே உண்மை.

  Anonymous

Friday, November 04, 2011

திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.Please follow

http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

(First 2 mins audio may not be clear... sorry for that)

(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)
Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454