e-mozi

மடல் 069 பகவத்கீதையும், ஆழ்வார்களும்

First published on : Sat, Sat, 15 Jan 2000 01:16:52 +0200 15:22:05 +0200

மகாபாரதக் கதை உலகின் தொண்டுப் பழசான கதை. தமிழின் முதும் பெரும் நூல்களில் மகாபாரதம் பற்றிப் பேசப்படுகிறது. ஒரு தமிழ் மன்னன் பாண்டவர்களுடன் சேர்ந்து போர்ச்சோறு உண்டதாக ஒரு புறநானூற்றுப் பாடலொன்று சொல்லும். இது உயர்வு நவிற்சியா இல்லை மாபாரதப் போர் தமிழ் மண்ணில் நடந்ததா என்பதை சரித்திர ஆய்வாளர்களுக்கு விட்டுவிடுவோம். எப்படி இருப்பினும் இரண்டு ஆரிய வம்சத்து மன்னர் குழுவிற்குள் நடந்ததாக நம்பப்படும் ஒரு போரில் ஆரிய இனம் சாராத விருஷ்ணி குலத்திலகமான வசுதேவன் கிருஷ்ணன் சூத்திரதாரியாக இருந்தது சுவாரசியமான விஷயம். இதை திராவிட மேலாண்மையை ஆரியம் ஒத்துக் கொண்டதின் முதல் அறிகுறி என்று சொல்வாரும் உளர்.

இந்தியாவின் மூன்று தத்துவ பேரமைப்புகளான உபநிடதம், கீதை, பிரம்மசூத்திரம் என்பவற்றுள் அடங்கும் கீதை பிற்காலத்தில் மகாபாரதக் கதையின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. இதை முதலில் செய்வித்தவர் யார் என்பது கேள்விக் குறி. ஆனால் வர்ணாசிர முறை பற்றி பேசும் 18வது அத்தியாயத்தை உள்ளடக்கியதாகக் கொள்ளப் படும் கீதையை கண்ணன் சொன்னதாக உட்புகுத்தியது ஆரியர்கள் தாங்கள் இழந்த மேலாண்மையை சரிகட்ட செய்த சதி என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

வேத காலத்து சமூகத்தில் ஒரு குருவிடம் கல்வி கேட்கவரும் சீடர்களை அவரவரது இயல்பு கண்டு அந்தணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரித்துப் பார்ப்பது வழக்கத்தில் இருந்த ஒன்று. அதன் படி கல்வி, கேள்விகளில் அதிக ஈடுபாடு காட்டி மெய்ஞான சிரத்தை உள்ளவர்கள் அந்தணர் என்று அழைக்கப் பட்டனர். உதாரணமாக தன் இயல்புகளால் சத்திரியராக இருந்த கெளசிகர் தவ பலத்தால் அந்தணர் என்ற நிலைக்கு உயர்ந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. டாக்டர். அம்பேத்கார் இப்படி இருந்த நிலை படிப்படியாக மாறி, சமூகத்தில் சிறப்பு இடம் பெறும் அந்தணர்கள், அந்த இடத்தை என்றும் தக்கவைத்துக் கொள்ள வர்ணம் என்பது பிறப்பால் வருவது என்று மாற்றி இந்திய சமூகத்தில் மேலாண்மை கொண்டனர் என்று சொல்கிறார் தனது, "பார்ப்பனீயத்தின் வெற்றி" என்ற நூலில்.

இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் முல்லைத் தெய்வமான கண்ணன் (இவன் இடையர் குலத்து இளவல்) வர்ணாசிர முறை சொல்லி "தொண்டு செய்தல் சூத்திரனுக்கு அவனியற்கையாக ஏற்பட்ட தொழில்" (கீதை 18:44) என்று இந்தியாவின் அடிமைத் தொழிலுக்கு வித்திட்டான் என்ற பழி வந்து சேர்கிறது. இது எவ்வளவு தூரம் உண்மை என்று இம்மடலில் கொஞ்சம் காண்போம்.

கண்ணன் வழிபாடு என்பது தமிழ் மண்ணில் தொன்று தொட்டு உள்ள ஒரு மரபு. பரிபாடல், சிலப்பதிகாரம், மதுரைக் காஞ்சி, முல்லைப் பாட்டு, திருமுருகாற்றுப் படை, திரிகடுகம் போன்ற பல்வேறு பண்டைய நூல்கள் இதற்கு சான்று பகரும். பரிபாடலில் காணும் "ஆர்வம்" என்பது பக்தியாக பின்னால் மலர்கிறது என்பார் "தமிழ் இலக்கியங்களில் வைணவம்" நூல் ஆசிரியர் இந்திரா பார்த்தசாரதி. "இடையில் தோன்றிய சில நீதி நூல்களை ஒதுக்கிவிட்டு பார்ப்போமானால் சங்க இலக்கியம் பக்தி இலக்கியமாக மாறிவந்த வளர்ச்சியைக் கவனிக்கலாம்" என்று சொல்கிறார் டாக்டர்.மு.வரதராசனார். ஆக, இந்த பண்பாட்டு வளர்ச்சியின் உச்ச கட்டம்தான் ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழ் மண்ணிற்குத் தந்த பக்தி இலக்கிய காலம். எனவே ஆழ்வார் பாடல்களில் கீதை பற்றிய மேற்கோள்கள் உள்ளனவா எனத் தேடுவது நாம் முன் சொன்ன புதிருக்கு விளக்கம் அளிக்கும்.

அதாவது, இன்றைய கண்ணோட்டத்தில் கீதை என்பது பார்த்தனுக்கு கண்ணன் பாரதப் போரில் நடத்திய உரை என்று கருதப் படுகிறது. டாக்டர் இராதா கிருஷ்ணன் "பகவத் கீதை உரை" என்ற புத்தகத்தில் கீதை ஒரு மதநூல் என்று எழுதுகிறார். தத்துவ நூலாக இருந்த கீதைக்கு மத ஸ்தானம் கிடைக்கிறது. மேலும் உலக அளவில் பிரசித்தி பெற்ற மத ஸ்தாபகர்களான பிரபுபாதா போன்றோர் கீதையை வைணவ நூலாகவே பிரகடணப் படுத்தி உள்ளனர். தமிழ் வைணவ ஆச்சாரியர்களும் திருவாய் மொழிக்கு உரை எழுதும் போது கீதை வரிகளை மேற்கோள் காட்டத் தவறியது இல்லை. ஸ்ரீவைஷ்ணவத்தின் பிதாமகர்களில் சிறந்த இராமானுசர் பகவத் கீதைக்கும், பிரம்ம சூத்திரத்திற்கும் உரை எழுதி உள்ளார். தத்துவ பேரமைப்புகளுக்கு உரை (பாஷ்யம்) எழுதுவது காலத்திற்குக் காலம் கற்றறிந்த சான்றோரால் செய்யப் பட்டே வந்திருக்கின்றது. ஆதி சங்கரர், மாத்துவர் போன்றோரும் உரை எழுதியுள்ளனர். அவரவர் கண்ணோட்டப்படி அதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.

கண்ணன் தோரோட்டிய செய்தி பல இடங்களில் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் சொல்லப் பட்டாலும் கீதை உபதேசம் கூறப் படவில்லை என்பதை முனைவர் ஆ.க.பார்த்தசாரதி தனது "பெரியாழ்வார் பாசுரங்கள்-ஆய்வு" என்ற நூலில் குறிப்படுகின்றார். மேலும் அவர், "மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்குக் கீதையை உபதேசித்தான் என்ற சரித்திரம் உண்டு. இந்தக் கீதைதான் பகவத் கீதை என்று பிரசித்தமாய் விளங்குவது. இக்கீதையைப் போற்றாத மக்களில்லை. இதைப் பற்றி ஆழ்வார் பாடல்களில் யாதொரு குறிப்பும் கிடையாது என்பது இங்கே மனங்கொள்ளத் தக்கது" என்ற திரு.வையாபுரியின் வரிகளை நினைவு கோர்கிறார் (எஸ்.வையாபுரிப் பிள்ளை-அகராதி நினைவுகள். ப97)

ஆழ்வார்களுக்கு கீதை பரிச்சியம்தான் என்று சொல்லும் வைணவர்கள் மேற்கோள் காட்டுவது இரண்டு திருவாய் மொழிப் பாடல்களை.

"பிணக்கற அறுவகைச் சமயமும்..." என்று தொடங்கும் திருவாய்மொழியில் (1.3.5) "வணக்குடைத் தவநெறி வழி நின்று" என்ற வரிகளுக்கு வியாக்கியானம் சொல்லும் போது, "பகவத் கீதையில் பத்தியைப் பற்றிக் கூறுமிடத்தில் (9:14) பத்தியினால் என்னை வணங்கி வழிபடுகின்றார்கள், என்று கூறி, பின்னர், என்னை வணங்குதலைச் செய்வாய் (9:34) என்றும் கூறுவதால் நம்மாழ்வாரும் வணக்குடைத் தவநெறி" என்று சொல்லுவார்கள் (ஈடு ப.156).

(இந்தப் பாடலை விரிவாக வேறொரு கருத்தில் பின்னொரு மடலில் காண்போம்)

கீதா உபதேசத்துடன் ஒத்துப் போகும் மற்றொரு திருவாய்மொழி 10.4.9.

கண்டேன் கமல மலர்ப்பாதம்; காண்டலுமே
விண்டே ஒழித்த வினையாயின எல்லாம்
தொண்டே செய்து, என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணிவகையே.


இந்த கடைசி வரிகளுக்கு பொருள் சொல்லும் போது பரமன் என்பது கிருஷ்ணனைக் குறிக்கும் என்றும் பணித்த பணிவகை என்பது பகவத்கீதை என்றும் சொல்வர்.

பண்டே பரமன் பணித்த பணி வகையே கண்டேன் கமல மலர்ப்பாதம் என்பதற்கு ஈடு, அவன், " என் ஒருவனையே புகலிடமாகப் பற்று (மாம் ஏகம் சரணம் வ்ரஜ-கீதை18:66) என்கிறபடியாலே நான் (நம்மாழ்வார்) அவன் திருவடிகளைக் காணப் பெற்றேன்" என்று பொருள் சொல்கிறது.

வேதாந்த தேசிகர் கீதையின் சாரத்தைச் சொல்லும் "கீதார்த்த சங்கிரகம்" என்ற நூல் செய்வித்த சேதியை "கீதை மொழிந்தருளும் வேதாந்த தேசிகனார் பாதார விந்தமலர் பற்று" என்னும் தனியன் சொல்லும்.

தத்துவ நூலாக இருந்த கீதை அதன் சிறப்பு குறித்து அடிக்கடி மேற்கோள் காட்டப் பட்டிருப்பது தெரியவருகிறது. அது உண்மையில் ஒரு மத நூலா? அதை வைணவர்கள் சொந்தம் கொண்டாடுவது சரியா? இல்லை, வையாபுரிப் பிள்ளை கேள்வி கேட்பது போல் மாபாரதப் போரில் சொல்லப் பட்டதாக வரும் கீதைதான், வைணவர்கள் மேற்கோள் காட்டும் பகவத் கீதையா? அடிமைத் தொழிலை முன்மொழியும் ஒரு ஏடு மத நூலாகக் கருத இடம் உள்ளதா? சாதீயத்தை எதிர்க்கும் ஆழ்வார்கள் இயக்கம் கீதையை நேரடியாக மேற்கோள் காட்டமைக்கு உள்காரணம் இருக்குமா? தொன்று தொட்டு வரும் தமிழ் மரபில் சாதீயக் கண்ணோட்டம் இருத்தலாகாது என்றுதான் ஆழ்வார்கள் செப்பாமல் விட்டனரா? இல்லை, இன்று பிரபலமாக இருக்கும் பகவத் கீதை ஆழ்வார்கள் காலத்திற்குப் பின் புனையப் பெற்றதா?

19 பின்னூட்டங்கள்:

  Anonymous

Sunday, August 19, 2007

நீங்கள், பாரதத்தையும், கண்ணனையும் பற்றி


எழுதியதைப் பார்த்தவுடன், ஒரு கதை


நினைவுக்கு வந்தது. கண்ணன், போருக்கு முன்


கொளரவர்களிடம்தான் முதலில், நான் வேண்டுமா
இல்லை என் படை வேண்டுமா என்று கேட்டானாம்.
நடந்தது என்னவென்று நமக்குத் தெரியும்.

வாழ்க்கையில் பல முறை இதை நினத்துப்


பார்ப்பதுண்டு!

  நா.கண்ணன்

Sunday, August 19, 2007

பாரதம் முழுவதின் அடிக்கோடு 'சரணாகதி'தான். நமது இருப்பின் சுருக்கத்தை அடிக்கடி நினைவு படுத்துகிறது. நமக்கு நல்லது எது என பல நேரம் நமக்கே தெரிவதில்லை. நாமொன்று வேண்டுமென்று கேட்டு அது கிடைத்த பின், அது உண்மையிலேயே நாம் விரும்பியதா? எனச் சந்தேகம் வருவதுண்டு. அவனுக்கு நல்லது வழங்கும் குணமுண்டு, அவனுக்கு நம் மேல் அக்கரையுமுண்டு என உணர்ந்து அவன் வழங்குவதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரும் போது நம் வாழ்வு சமனப்படுகிறது. அந்த வகையில் பார்த்தனுக்கு அந்த புத்தி இருந்திருக்கிறது.

  Anonymous

Sunday, August 19, 2007

சரணாகதி என்பது மிகவும் பிடித்தமான வார்த்தை!

இது அன்பினால் வந்ததா, இயலாமையால் வந்ததா
என்ற
கேள்விக்கு விடை தெரியவில்லை!

  நா.கண்ணன்

Sunday, August 19, 2007

மிக அழகான கேள்வி. ஆழமான கேள்வி.

இயலாமையை உணர வேண்டும். வீக்காக இருக்கும் போது, தளர்ந்து போய் ஒரு மாதிரி 'சரணாகதி' பண்ணுவது போல் பாவனை செய்கிறோம். ஆனால், மீண்டும் உடற் பொலிவுற்று, புஷ்டியானவுடன் நம்ம பாட்டுக்கு நம்ம வழியில் போய் விடுகிறோம். இதைத்தான் அகங்கார, மமகாரங்கள் என்று சொல்லுகிறார்கள். இந்த சுயச்சார்புதான் நம்மை இறைமையிடமிருந்து பிரிக்கிறது.

இதை மிக நன்றாக உணர்தவன் இறைவன். எனவே அபரிதமான கருணையால் நம்மைத் தன்னிடம் அழைக்கிறான். நாம் குழந்தை வீம்பு பண்ணுவது போல் தாய் மடி விட்டு மண்ணில் புரளவே மனம் கொள்கிறோம்.

எனவே சரணாகதியில் இரண்டுமே உள்ளன.

  கோவி.கண்ணன்

Sunday, August 19, 2007

இரு நாள்களுக்கு முன்பு நான் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று வந்த உங்கள் பதிவு ஓரளவு விடை சொல்கிறது.

நன்றி கண்ணன் ஐயா

  குமரன் (Kumaran)

Sunday, August 19, 2007

//இரு நாள்களுக்கு முன்பு நான் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று வந்த உங்கள் பதிவு ஓரளவு விடை சொல்கிறது.
//

நா.கண்ணன் ஐயா. ஜனவரி 2000ல் நீங்கள் எழுதிய இடுகையை இன்று மறுபதிவு செய்திருக்கிறீர்கள். கோவி.கண்ணன் இரு நாட்களுக்கு முன்னர் எழுதிய இடுகையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இந்த பழைய இடுகையில் பதில் ஓரளவிற்கு இருக்கக் காரணம் பல முறை முன்னரும் இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. பதில்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. சித்பவானந்தரின் கீதை விளக்க நூலிலும் முன்னுரையில் இந்தக் கேள்விகளை எடுத்துக் கொண்டு பதில்கள் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன். முதன்முதலில் பகவத்கீதையை நான் படித்தது சித்பவானந்தரின் விளக்கத்துடன் தான்; பின்னர் இராமானுஜர், பிரபுபாதர் சொன்ன விளக்கங்களில் மனம் ஈடுபட்டதால் அண்மைக்காலத்தில் சித்பவானந்தரின் விளக்கத்தைப் பார்க்கவில்லை; புத்தகமும் மதுரையில் இருக்கிறது. அதனால் என் நினைவில் இருப்பது சரிதானா என்று சரி பார்க்க முடியவில்லை. பாரதியாரும் இந்தக் கேள்விகளைத் தொட்டிருப்பதாக நினைவு.

  நா.கண்ணன்

Sunday, August 19, 2007

உண்மை குமரன். இக்கேள்விகள் அன்று தொட்டு இன்றுவரை உள்ளன. விளங்கிக்கொள்ளாதவரை நாளையும் இருக்கும். அவர் பதிவில் போய் பதில் சொல்லியிருக்கிறேன்.

  குமரன் (Kumaran)

Sunday, August 19, 2007

கண்ணன் ஐயா.

இன்று நமக்குக் கிடைக்கும் கீதை சங்கர பகவத்பாதரால் இயற்றப்பட்டது என்று ஒரு கருத்தும் இருக்கிறது. அதே போல் வருணங்களை கீதை வலியுறுத்துகின்றனவா என்ற கேள்விக்கு அப்படி சொல்லும் மிகச்சில (ஒன்றோ இரண்டோ) சுலோகங்கள் கீதையில் இருக்கின்றன; அவை பிற்காலச் சேர்க்கையாக இருக்கலாம் என்றும் ஒரு கருத்து இருக்கிறது.

'நென்னலே வாய் நேர்ந்தான்' என்று திருப்பாவை சொல்வதும் கீதையின் சரமஸ்லோகத்தைத் தான் என்பது வைணவ உரையாசிரியர்களின் கருத்து. எனக்கு நினைவுக்குறைவு அதிகம். அதனால் நேரடியாகக் கீதையைக் குறிப்பிடும் ஆழ்வார்கள் பாசுரம் இருக்கிறதா என்று தெரியவில்லை; எனக்குத் தெரியாததால் இல்லை என்று அறுதியிட்டுக் கூறுவதும் சரியில்லை. அதனால் நினைவிற்கு வந்த இந்த பாடலை மட்டும் சொல்லியிருக்கிறேன்.

பாரதப் போரில் தமிழ்மன்னன் இரு படைக்கும் உணவளித்தான் என்ற குறிப்பு புறநானூற்றிலும் மகாபாரதத்திலும் இருக்கிறது என்று படித்திருக்கிறேன். மேல்விவரங்கள் (எந்த பாடல், எந்த சுலோகம்) போன்றவற்றை வழக்கம் போல் மறந்துவிட்டேன். அவை அந்தக் குறிப்புகளைப் படிக்கும் போது அவ்வளவு முக்கியமாக அப்போது தோன்றாததே அவற்றை மறந்ததற்கு காரணம் என்று நினைக்கிறேன். :-)

வாசுதேவ கிருஷ்ணன் ஆரியக் குலத்தவனா திராவிடக் குலத்தவனா கலப்பு குலத்தவனா என்பது குழப்பமாகத் தான் இருக்கிறது. ஆரிய இனம் சாராத விருஷ்ணி இனம் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். கிருஷ்ணனைத் திட்ட வேண்டும் என்னும் போது அவன் ஆரிய இனத்தவனாகவும் அவனைப் புகழ வேண்டும் என்னும் போது அவன் ஆரியனல்லாதவனாகவும் சில இடங்களில் காட்டப்படுவதைப் பார்த்திருக்கிறேன். அப்படி ஒரே ஆளே செய்வதையும் கண்டிருக்கிறேன். நீங்கள் கண்ணனின் குலம் ஆரிய குலம் இல்லை என்று ஏன் சொல்கிறீர்கள். மேல் விவரம் தாருங்கள்.

மீண்டும் வந்து மேல் கருத்துகளைச் சொல்கிறேன் ஐயா.

  Vasudevan Deepak Kumar

Monday, August 20, 2007

புதியாதாக நான் இலக்கியம் பற்றிய பதிவினைத் தொடங்கியுள்ளேன். முகவரி.

  Anonymous

Monday, August 20, 2007

Kannan sir vanakkam,
ur comments about saranagathi is excellent,i read many times.Thanks to ananisir also.
ARANGANARULVANAGA
anbudan
k.srinivasan.

  நா.கண்ணன்

Monday, August 20, 2007

குமரன்: பாரதத்தை இப்படி சரித்திர நோக்கில் பார்க்கும் போது அதுவரை இருந்த நடைமுறை புரட்டிப் போடப்பட்டிருப்பது தெரியும். இந்திரன் வேத காலத்துக் கடவுள். அவனுக்குப் படையில் இடுவதை மாற்றி தனக்கே படையல் இடுமாறு கண்ணன் பணிக்கிறான் (கோவர்த்தனகிரி கதை). அப்போதே வேதக் கலாச்சாரத்தில் உள்ள குறைகள் நிவர்த்திக்கப்பட ஆரம்பிக்கின்றன எனச் சொல்லலாம். பாகவதப் பண்பாடு கண்ணன் காலத்தில் ஓங்குகிறது. அவன் அடியவருக்கு அருகில் இருக்கிறான்.

கண்ணன் ஆரியனல்லன் என்பதை அர்ச்சுனனே கிண்டல் செய்கிறான். ஒரு பிராமணருக்காக வைகுந்தம் போகும் கதையில் முதலில் கண்ணனால் இதை சாதிக்க முடியாது என்று அர்ச்சுனன் நம்புகிறான். ஏனெனில் அவன் ஒரு இடையன் எனக் கருதுவதால். கண்ணன் கதை காட்டுவது "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதையே.

கீதை என்பதை ஒரு காலக்கண்ணாடி எனக் கொண்டால் அக்கால வழக்கை அது காட்டுவதாகக் கொள்ளலாம். நம் ஆச்சார்யர்கள் கீதையின் நல்ல விஷயங்களையே மேற்கோள் காட்டுவதால் அதில் தவறில்லை.

இக்கட்டுரை உருவான காலக் கட்டத்தில் பல்வேறு சிந்தனைகள் இப்படி அலசப்பட்டன. கட்டுரை அப்படியே இருக்கிறது. நான் மாறி இருக்கிறேன் :-)

  குமரன் (Kumaran)

Monday, August 20, 2007

ஐயா. நீங்கள் சொன்னது போல் நம் வைணவ ஆசாரியர்கள் கீதையைப் பல இடங்களில் மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். இராமானுஜருக்கு முன்னரே ஆளவந்தார் யமுனைத்துறைவர் கீதார்த்தத்தைச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார். வேத வழியில் வரும் எந்த தத்துவமானாலும் பிரஸ்தான த்ரயமான உபநிடதம், கீதை, பிரம்மசூத்திரம் மூன்றிற்கும் உரை எழுதி தங்கள் தத்துவம் இந்த மூன்றிலும் சொல்லப்பட்டிருக்கிறது என்று காட்டவேண்டும் என்ற மரபு இருக்கிறது. அந்த வகையில் கீதைக்கு சங்கர பாஷ்யம், இராமானுஜ பாஷ்யம், மத்வ பாஷ்யம் என்று மூன்று பெருந்தத்துவ அடிப்படையான பாஷ்யங்களும் (உரைகளும்) இருக்கின்றன. அது போக அந்தந்த வட்டாரத்தில் இருக்கும் கௌட வைணவம், நிம்பார்க்க மார்க்கம் போன்றவைகளும் கீதைக்கு உரை எழுதியிருக்கின்றன. சிறு வயதில் சைவசிந்தாந்த அடிப்படையான கீதையின் உரையையும் ஏதோ ஒரு சைவ ஆதினகர்த்தர் எழுதிப் படித்திருக்கிறேன். மதுரையில் அந்த புத்தகம் இருக்கிறது.

  குமரன் (Kumaran)

Monday, August 20, 2007

கண்ணன் தேரோட்டிய செய்திகளைக் கூறும் ஆழ்வார் பாடல்களில் அந்த இடத்திலேயே அவன் சொன்ன 'பாடலை'ப் பற்றிய குறிப்பும் இருக்கிறது என்று நினைக்கிறேன். தேடிப்பார்த்துக் கிடைத்தால் தருகிறேன். கீதை என்பது பாடல் என்ற பொருள் கொண்ட சொல் என்பது எல்லோருக்கும் தெரியும்.

//இக்கட்டுரை உருவான காலக் கட்டத்தில் பல்வேறு சிந்தனைகள் இப்படி அலசப்பட்டன. கட்டுரை அப்படியே இருக்கிறது. நான் மாறி இருக்கிறேன் :-)
//

போன வருடம் நான் எழுதிய சில கட்டுரைகளைப் படிக்கும் போதும் எனக்கு இப்படி தோன்றுவதுண்டு. :-)

  குமரன் (Kumaran)

Monday, August 20, 2007

கீதையிலும் நீங்கள் சொல்லும் 'இயலாமை'யால் வரும் சரணாகதியைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். 'கார்பண்ய தோஷம்' என்ற ஒன்றைச் சொல்லி 'எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீயே சரண். உன்னைச் சீடனாக அடைகிறேன். எது நல்லதோ அதை எனக்குச் சொல்' என்று அருச்சுனன் சரணடைந்த பின் தானே கீதையில் கண்ணன் பேசத் துவங்குகிறான்.

நம் ஆசாரியர்களும் நாம், நமது என்ற எல்லாமும் அவனுடைமையே என்ற அறிவும் அவனன்றி நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற இயலாமையும் உணர்வில் மிகும் போதே சரணாகதி நடைபெறும் என்று சொல்கிறார்கள். அதுவரை ஆசாரியர் மூலமாகச் செய்யும் சரணாகதி ஒரு அடையாளம் மட்டுமே.

  நா.கண்ணன்

Monday, August 20, 2007

"சிறு வயதில் சைவசிந்தாந்த அடிப்படையான கீதையின் உரையையும் ஏதோ ஒரு சைவ ஆதினகர்த்தர் எழுதிப் படித்திருக்கிறேன்"

"பகவத்கீதை" எனில் இறைவன் மொழி என்றுதானே பொருள்.

சமீபத்தில் கிருஷ்ணப்பிரேமி, சங்கர பகவத்பாதாள் அவர்களின் பாஷ்யத்தை விஷிட்டாத்துவைதப் பார்வையில் பார்த்து உபன்யாசம் செய்திருக்கிறார்.

  குமரன் (Kumaran)

Monday, August 20, 2007

ஐயா. கீதையைப் பாடல் என்று சொன்ன பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை போலும். ஆனால் அதனைப் படித்தீர்கள் என்பதை உங்கள் பின்னூட்டம் சொல்கிறது.

பகவத் கீதை என்றால் இறைவனின் பாடல், இறைவனின் சொல், இறைவனின் மொழி என்று பொருள் சொல்லலாம். Song of God என்று கூட கீதையின் மொழிபெயர்ப்பு ஒன்று இருக்கிறது.

கிருஷ்ணபிரேமாம்ருதத்தை முன்பு சில முறை அருந்தியிருந்தாலும் இப்போதெல்லாம் உங்கள் பதிவுகள் மூலமாக அவற்றை நன்கு அனுபவிக்க முடிகிறது.

  நா.கண்ணன்

Monday, August 20, 2007

குமரன்: கண்ணன் குலம் பற்றிய உங்கள் கேள்வி. சரித்திர ரீதியில் படித்த மேற்கோள் அது. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஏதோ ஒரு நூலிலிருந்து இருக்குமென்று நம்புகிறேன்.

கண்ணன் ரொம்ப விவகாரமான ஆளு :-) முதலில் சத்திரியனாகப் பிறக்கிறான் (வசுதேவருக்கு), ஆனால் பிறக்கும் போதே தன் அடையாளத்தை மாற்றி இடையனாகிறான். கம்சனை அரக்கர் குலம் என்றால் கண்ணனும் அரக்கர் குலமே! அவனுக்கு மருமான்தானே இவன்!

நம்மாழ்வார் சொல்வது போல் கண்ணன் கதை கேட்கத்தான் முடியும். அவனை எந்த மனித வரம்பிற்குள்ளும் போட முடியாது! ஆனால், "கற்பார் இராமபிரானை அன்றி மற்றும் கற்பரோ"

  R.DEVARAJAN

Sunday, June 15, 2008

அருளிச்செயலில் "ஸ்ரீமத் பகவத்கீதை" -

சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்
ஆயன் துவரைக்கோனாய் நின்ற - மாயன் அன்று
ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில்
ஏதிலராம் மெய்ஞ்ஞானமில்.
- திருமழிசைப் பிரான்

  நா.கண்ணன்

Sunday, June 15, 2008

நன்றி. தேவராஜன். ஆச்சார்யர்களின் வியாக்கியானங்களைக் கேட்கும் போது ஆழ்வார்கள் கீதை பற்றி விரிவாக மேற்கோள் காட்டுவது தெரிகிறது. இருந்தாலும் இப்படியொரு கோணமும் உண்டு என்பதைச் சுட்டவே இக்கட்டுரை!