e-mozi

மடல் 071: அடியார் தம்மடி யார்அடி யோங்களே!!

First Published on : Sat, Wed, 19 Jan 2000 14:46:15 +0200 15:22:05 +0200

தொழில் முறை அறிவின் வளர்ச்சியில் மலையளவு உயர்ந்துள்ள மனிதன் தன்னை அறிந்து கொள்ளும் முறையில் மிகவும் தாழ்ந்து உள்ளான். அதற்கு எடுத்துக் காட்டுதான் முரண்பாடுகள் நிறைந்த இவ்வுலகம். ஒரு புறம் விண்ணில் கால் வைக்கிறான், மறுபுறம் எண்ணெயைக் காக்கவென்று சோதரரைக் கொன்று குவிக்கிறான். ஒரு புறம் விளைச்சலை சமாளிக்க முடியாமல் கோதுமையை கடலில் கொட்டுகிறான், மறுபுறம் கால் வயிற்றுக் கஞ்சிக்கு வக்கில்லாமல் சோதரரை பட்டினியால் கொல்கிறான், ஒரு புறம் மொழி, தேசியம் இவை மனித அடயாளங்கள் என்று சொல்லி வலிமை செய்கிறான், மறுபுறம் மொழி, தேசியத்தின் பேரால் சோதரரை போரில் கொன்று குவிக்கிறான். பொருள்தான் முதலும், முடிவும் என்றால் இம்முரண் எக்காலத்தும் விடிவு காணாது என்று சொல்லிப் போயினர் நம் முன்னோர்.

உலகில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொன்றிற்கு பெயர் போனது. இந்தியா என்றவுடன் அதன் ஆன்மீகப் போக்குதான் உலகிற்கு ஞாபகம் வரும். அதற்கென பெரிய பாரம்பரியத்தை தக்க வைத்துள்ளது இந்தியா. இந்த பாரம்பரியத்தின் அடி வேர்களில்தான் இந்தியனின் தெளிவும், இன்றைய சமூகத்தின் குழப்பமும் அடங்கியுள்ளது. அதை முறையாகக் காண்போம்.

இன்று உலகப் பொதுமறை என்று கணிக்கப் படும் வள்ளுவத்தின் முதல் அதிகாரத்தில் கடவுள் வாழ்த்துப் பாடும் போது இறைவனைச் சுட்டும் சொல்லாக "அந்தணன்" என்பதைப் பாவிக்கிறார் வள்ளுவர்.

அற ஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீத்தல் அரிது (குறள் 8).

இதே பொருளில், இந்தச் சொல்லைக் கையாளுகிறார் திருமங்கை ஆழ்வார்.

இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் றன்னை  
இருநிலம்கால் தீநீர்விண் பூதம் ஐந்தாய்
செந்திறத்த தமிழோசை வடசொல் லாகித்
திசைநான்கு மாய்த்திங்கள் ஞாயிறாகி,
அந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகா
அந்தணனை அந்தணர்மாட் டந்தி வைத்த
மந்திரத்தை, மந்திரத்தால் மறவா தென்றும்
வாழுதியேல் வாழலாம் மடநெஞ் சம்மே (திருநெடுந்தாண்டகம் 4)


(திருநெடுந்தாண்டவம் முழுவதும் சமயாதீத பொறிகள் தெறிக்கின்றன. இறைவனை மந்திர வடிவினனாகப் பார்க்கிறார். மேலும் தமிழின் மந்திரத் திறத்தைச் சுட்டும் வண்ணம் "செந்திறத்த தமிழோசை" என்று சுட்டி, வழக்கமாக தேவபாஷை என்று வழங்கப் படும் சமிஸ்கிரதத்தை "வடசொல்" என்று சுருக்கி விடுகிறார்!)

வள்ளுவர், நீத்தார் பெருமை பாடும் போது அந்தணர் என்ற சொல்லை, அதன் "அழகிய தட்பத்தினை உடையவர்" என்ற ஏதுப்பெயரில் மெய்ஞானிகளைக் குறிக்க பயன்படுத்துகிறார். முற்றுந் துறந்த முனிவரை விளிக்கையில் தொல்காப்பியரும்,

"நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய"

என்கிறார்.

வள்ளுவர் படைச் செருக்கு பற்றிச் பேசுகையில் அரசாளும் மன்னனை "இறைவன்" என்ற பதத்தால் விளிக்கிறார். அக்குறள்

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர் (778)

மகாபாரதம் "கடவுளைப் போலவே மன்னனும் மூவுலகும் ஆள்கிறான்" என்று சொல்கிறது. தனி மனிதன் ஒருவனை தெய்வமாக வழி படும் செயல் மூலம், தனிப் பட்ட ஆழ்ந்த உறவை ஏற்படுத்தவும், தன்னை அறிந்து கொள்ளும் ஆன்ம நிலைக்கு இட்டுச் செல்லவும் வழி வகுக்கிறது என்கிறார் பேரா.இந்திரா பார்த்தசாரதி. இதை தொல்காப்பியம் "பூவை நிலை" என்று சுட்டுகிறது. இந்நிலையை விளக்கும் வண்ணம் நம்மாழ்வாரும், "திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே" என்கிறார். இதனை விளக்கவரும் பேரா.இந்திரா பார்த்தசாரதி ,"கடவுளை மனிதப் பண்புடையவனாக ஆக்குவதும், மறுதலையாக மனிதனைக் கடவுள் நிலைக்கு உயர்த்துவதுமான இக்கோட்பாடு, ஆழ்வார்களின் பாசுரங்களில் மீண்டும், மீண்டும் வரும் கருப் பொருள் (அடிக் கருத்து) ஆகும். தெய்வம் மனித நிலைக்கு வருவது மனிதன் தெய்வ நிலையை எய்த வேண்டுமென்பதற்காகத்தான். இக்கருத்தின் பின்னணியில்தான் "மானுடம் வென்றதம்மா" என்று கம்பன் பாடியிருப்பதை புரிந்து கொள்ள முடியும்" என்கிறார்.

தொல்காப்பியத்தில் பார்ப்பார், அறிவர், அந்தணர், தாபதர் எனப் பல சொற்கள் வழங்கப் பட்டுள்ளன. இதன் பொருளை விளக்க முற்படும் திரு.புருஷோத்தம நாயுடு, "அறிவர் அந்தணர் இவர் முற்றுந் துறந்தவராக, மனத்தையடக்கி இறைவனையே எண்ணும் இயல்பினராக, மூன்று கால நிகழ்வையும் அறிபவராக உள்ளனர். தாபதர், அறிவர் நிலையை அடைவதற்குத் தொடக்கமாகவுள்ள தவத்தை மேற்கொண்டு ஒழுகுபவராய்க் காணப் படுகின்றனர். பார்ப்பார், வேதம் ஓதுதல் மட்டும் உடையவராய்க் (இந்நிலைகட்கு வாராதவராய்க்) காணப்படுகின்றனர்." என்கிறார். அந்தணரை பகவர் என்ற சொல்லால் விளிப்பதும் காணக் கிடைக்கிறது. வள்ளுவன் இவ்விரு சொல்லையும் கடவுள் வாழ்த்துப் பகுதியில் உபயோகிக்கின்றான். முதல் பாடல்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

இதே பொருளில் நம்மாழ்வாரும் அருளிச் செய்கிறார்.

பிணக்கற அறுவகைச் சமயமும்  
நெறிஉள்ளி உரைத்த
கணக்கறு நலந்தனன் அந்தமில்
ஆதியம் பகவன்
வணக்குடைத் தவநெறி வழிநின்று
புறநெறி களைகட்டு
உணக்குமின் பசைஅற அவனுடை
உணர்வுகொண்டு உணர்ந்தே (தி.வா.மொ. 1.3.5)


வெறுமே ஆதி என்று சொன்னால் ஆதிக்கு அந்தம் உண்டாகும் என்பதனாலும், அந்தக் கோதிலான் இறைவன் என்று வேதம் சொல்வதாலும் நம்மாழ்வார் அந்தமில் ஆதி என்று மொழிந்தார் என்பது வைணவ வியாக்கியானம்.

ஆக, பகவர் என்ற சொல்லும் அந்தணர் என்ற சொல் போல், இறைவனைச் சுட்டுதற்கும், மெய் ஞானத்தால் உயர்ந்த மனிதரைச் சுட்டுதற்கும் பண்டைய மெய்ஞானிகளால் பயன் படுத்தப் பட்டது தெரிகிறது.

சித்தர்களின் வழியில் கற்றளி (சக்கரம்) எனும் சக்தி பீடங்களில் நிகழும் மாற்றங்களை வைத்து மனிதன் எய்தும் ஆன்ம பக்குவத்தை விளக்கும் முனைவர் லோகநாதன், தனது "திருநெறித் தெளிவு" என்ற புத்தகத்தில் கீழ்க் கண்டவாறு விளக்குகிறார்: "ஓர் ஆன்மா அடையும் இருந்தறிவுகளும், அதனின்று எழும் எண்ணறிவுகளும், அந்த இருந்தறிவுகளைத் தரும் கற்றளி நுழைவு தரும் ஆர்வங்களும் ஒருவன் அடையும் திறன்களையும் குணங்களையும் நிறுத்துகின்றன. இவையே மாந்தரியல்பு எனப்படதவதால், ஓர் ஆன்மா அடைகின்ற, அடைந்திருக்க கற்றளிகள் வழி இதனைக் கணித்துக் கூற முடியும். இவர்களை உலகர், பத்தர், அறிவர், சித்தர், சிவயோகியர், சிவஞானியர், மெளனிகள் என்று அடையாளம் காணலாம்"

ஆக, ஆன்ம பக்குவ நிலைகளை விளக்க தொன்று தொட்டு தமிழன் முயன்றிருக்கிறான். உயிரியல் பரிணாமம் போல் ஆன்மீகப் பரிணாமமும் இங்கு காணக்கிடைக்கிறது. இது இந்திய/தமிழகப் பங்கு என்று கொள்ளலாம்.

இப்பக்குவத்தில் வேதம் ஓதும் பார்ப்பனர் முதல் படி நிலையில் உள்ளனர். அதாவது மறைகளை வாசித்து புரிந்து கொள்ளும் ஒரு ஆரம்ப பாடசாலை மாணவன் போல். இருப்பினும், பார்ப்பனரை அந்தணன் என்னும் சொல்லால் விளிப்பது அன்று முதல் இன்றுவரை வழக்கமாகவும் உள்ளது! தில்லை வாழ் பார்ப்பனரை குறிக்கும் போது தேவாரமும், திவ்யப் பிரபந்தமும் "தில்லை வாழ் அந்தணர்" என்றே குறிக்கின்றன. அப்பர் பெருமான் அடக்கத்தின் வெளிப்பாடாய், "தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும், அடியேன்" என்று சொல்கிறார். குலசேகர ஆழ்வார் திருச்சித்திரக் கூடப் (சிதம்பரம்-தில்லை) பெருமாளைப் பாடும் போது

தில்லைநகர்த் திருச்சித்திர கூடந்தன்னுள்  
அந்தணர்க ளொருமூவாயிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான் றானே! (பெருமாள் திருமொழி 10.2)


என்கிறார். இவர் காலத்தில் சித்திரக் கூடத்து கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி சிவன் சந்நிதியுடன் இருந்து வழி படப் பட்டது தெரிகிறது. தில்லை சைவ சமயத்தின் தனிக் கருவாக உருமாறியது பின்னால்!

இப்படி ஆன்மீக பக்குவத்தை விளக்கும் சொற்கள், ஆன்மீகத்தின் ஒரு அங்கமாக விளங்கும் கோயில் வழிபாட்டில் ஈடுபடும் ஒரு சாராரைக் குறிக்கவும் பயன் பட்டமைதான் பின்னாலில் பல குழப்பங்களுக்குக் காரணமாகியது என்று சொல்லலாம். பார்ப்பனர்களும் தன் ஆன்ம நிலை உணராது தனக்கு கொடுக்கப் பட்ட பெயர் உண்மையிலேயே தன் உயர்வைக் குறிப்பதாக மதி மயங்கி, ஆன்ம பரிணாமத்தில் உயர்வடையாமல், வெறும் சமூகம் தரும் அல்ப அந்தஸ்த்தில் நின்று நிலைத்து விட்டனர். சமூகமும், ஆன்மீக உயர்வைச் சுட்டும் ஒரு சொல்லின் உட்பொருள் உணராது, அது பிறப்பின் பயனாய் சிலருக்கு கிடைத்துள்ள பரிசு என்று பொருள் கொண்டனர். இந்த மெய் மயக்கம்தான் பின்னால் மனு நீதி போன்ற மனிதநேயமற்ற வன்முறைகளுக்கு இட்டுச் செல்லக் காரணமாகியது.

இந்தக் குழப்பத்தை ஆழ்வார்கள் நன்றாகவே உணர்ந்ததினால்தான், எந்தவொரு பாடலிலும் குலம் உயர்வு/தாழ்ச்சி சொல்லும் பாங்கை அனுசரிக்கவில்லை. மாற்றாக, கடுமையான குரலில் அதை எதிர்த்தனர். வைணவ அடியார்கள் தாங்கள் எந்த குலத்தில் பிறந்திருந்தாலும் தங்களுக்குள் மண உறவு செய்து கொண்டு கூடவேண்டும் என்ற பொருளில் தொண்டர் அடிப் பொடி பாடுகிறார், "இழி குலத்தவர்களேலும் எம்மடியார்களாகில், தொழுமின் நீர், கொடுமின் கொள்மின்" என்கிறார்.

ஆன்மீக பரிணாமமா? இல்லை சமூதாய மேம்பாடா என்ற கேள்வி வரும் போது ஆழ்வார்க்ள சமுதாய மேம்பாட்டின் பக்கமே சாய்ந்துள்ளனர் என்பது தெளிவு. இந்த வகையில் ஈ.வே.ரா பெரியாருக்கும், ஆழ்வார்களுக்கும் நிரம்ப ஒற்றுமை உள்ளது. ஒருவர் கடவுள் என்ற முதல் பொருளும் சமுதாய மேம்பாட்டிற்குத் தடை என்று அதை ஒதுக்கி சமுதாய சீர்மையைப் பார்த்தார். மற்றவர் தெய்வம் என்ற கருப்பொருளை முன்வைத்து சமுதாயம் சீர்மை கெடாமல் இருக்க வழிமொழிந்தனர். நம்மாழ்வாரின் நோக்கில், தான் யார் - அதாவது தான் அந்தணனனா? தாபதரா? பார்ப்பனரா? இல்லை நலந்தான் இல்லாத சண்டாளனா? என்ற கேள்விக்கு விடை பகருவார் போல ஒரு பாசுரம் யாத்துள்ளார். அதுதான் மெய்யடியார்களுக்கான விடை என்று நஞ்ஜீயர் சொல்கிறார். அப்பாசுரம்

அடிஆர்த்த வையம்உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல்குழ விப்படி எந்தை பிரான்தனக்கு
அடியார் அடியார் தம்மடி யார்அடி யார்தமக்கு
அடியார் அடியார் தம்மடி யார்அடி யோங்களே (தி.வா.மொ. 3.7.10)

2 பின்னூட்டங்கள்:

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Wednesday, August 15, 2007

//பார்ப்பனர்களும் தன் ஆன்ம நிலை உணராது தனக்கு கொடுக்கப் பட்ட பெயர் உண்மையிலேயே தன் உயர்வைக் குறிப்பதாக மதி மயங்கி, ஆன்ம பரிணாமத்தில் உயர்வடையாமல், வெறும் சமூகம் தரும் அல்ப அந்தஸ்த்தில் நின்று நிலைத்து விட்டனர்//

நச்!!!!!!!!!!

//எந்தை பிரான்தனக்கு
அடியார் அடியார் தம்மடி யார்அடி யார்தமக்கு
அடியார் அடியார் தம்மடி யார்அடி யோங்களே//

வைணவ சம தரிசனத்துக்கு என்னவொரு அடிப்படை!
அருமை கண்ணன் சார்!

//ஈ.வே.ரா பெரியாருக்கும், ஆழ்வார்களுக்கும் நிரம்ப ஒற்றுமை உள்ளது//

அவர் இல்லச் சூழலான வைணவமும் கூட சமதர்மச் சிந்தனைக்கு இளவயதில் வித்திட்டு இருக்கலாம் போல! உங்கள் பெரியார் பட விமர்சனத்திலும் கண்டேன்!

  நா.கண்ணன்

Wednesday, August 15, 2007

கொள் கலத்தின் இயல்பிற்கேற்ப வியாபிக்கும் தன்மையனன்...ம்..இப்படி யோசிததில்லை. உளவியல் கண்ணோட்டத்தில் முற்றும் பொருந்தும்.