e-mozi

மடல் 072. பட்டினங்காவற் பொருட்டு வந்த சொல்!

First Published on: Date: Sat, Mon, 24 Jan 2000 23:21:57 +0200 15:22:05 +0200

உலகின் மாபெரும் அதிசயம் வாழ்தல்தான்! வாழ்வு (Life) என்பது வேற்றுக் கிரகங்களில் உண்டென்று நிரூபிக்கப் படாதவரை வாழ்தல் பிரபஞ்சத்தின் அபூர்வ சிருஷ்டி என்பதில் இரண்டு சொல் கிடையாது. வாழ்தல் நம் இயல்பாகி விட்டதனால் உயிர், வாழ்வு இவை பற்றி அதிகம் நாம் பேசுவது இல்லை. அதற்கான விளக்கங்களும் அகராதிகளில் இருப்பதுமில்லை. ஆனாலும் வாழ்வு உயர்ந்தது. வாழ்தல் சிறந்தது.

உயிரின் தோற்றம் இன்னும் ஆய்வாளர்களுக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்கிறது. கடலில்தான் முதல் உயிர் தோன்றியிருக்க வேண்டும். அங்கிருந்துதான் மெள்ள, மெள்ள கரையை நோக்கி பயணித்து இருக்கிறது. இதைச் சொல்லாமல் சொல்லுவதுதான் வேதப் பிரானார் (திருமால்) பைங்கொண்ட பாம்பனையோடும் (திருப்பாற்) கடலில் துயில்வது. அங்கிருந்து பிரம்மனைப் படைப்பது, அவன் மூலம் இப்பிரபஞ்சத்தைப் படைப்பது எல்லாம். உயிர் தோன்றுவதற்கான அமினோ அமிலங்களும், கிரியா ஊக்கிகளும், வேதியச் சேர்க்கையைத் தூண்டும் மின் சக்திகளும் கடலில் இருந்தனவாம்-உயிர் தோன்றுவதற்கு முன். பிரம்மா கேட்கிறார் விஷ்ணுவிடம், நீ என்னைப் படைத்து, உயிரைப் படை என்கிறாய், எங்கிருந்து படைப்பேன்? என்கிறார். பரமன் இருப்பதிலிருந்து படை என்கிறான். பிரம்மா இருப்பதை ஆய்ந்து பின் படைக்கிறார் முதல் உயிரை. ஒன்று பரிசோதனைக் குண்டான அறிவியல் ஆய்வு. மற்றொன்று அதையே மெஞ்ஞானத்தால் உணர்ந்த கவியின் படிமம்.

எப்படி நோக்கினும் உயிர் ஒரு அற்புதம்தான். ஏன் என்றால், உயிர் தோன்றி விட்டது என்றால் அது அழியாத் தன்மை வாய்ந்ததாக ஆகி விடுவதுதான். தனி உயிர்கள் மடிகின்றன, பிறக்கின்றன ஆனால் தோன்றிய காலம் தொட்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் பூமியும், சூரியனும் அழியும்வரை உயிர் பிரபஞ்சத்தில் நிலைக்கும். இந்த அபூர்வ நிலை எளிதான ஒன்றல்ல. தோற்றம் என்பது அழிவை நோக்கிய பயணம் என்ற விதியை உணர்ந்து, அதற்கு கட்டுப் பட்டு, ஆனால் அழியாத்தன்மையுடன் நிற்கிறது வாழ்வு! எவ்வளவு ஆச்சர்யமான விஷயம் இது.

உயிரின் நிலைப்பிற்கு சக்தி வேண்டும். மூல சக்தி சூரிய ஒளி, வெப்பம். மீதமுள்ள சக்தி பூமி உருவான காலத்தில் சேமிக்கப் பட்ட சக்தி (பூமியின் சூடு). சூரிய ஒளி இன்னும் பல்லாயிரமாண்டுகளுக்கு வரும் என்பது கணிப்பு. இருந்தாலும் உயிர் பாதுகாப்பாக ஒரு சேமிப்புத் திட்டத்தை முன்னமே வகுத்துள்ளது. அதுதான் நோய் என்பது. என்ன நோய்க்கும் இதற்கும் என்ன சம்மந்தமெனக் கேட்கலாம், ஆனால் நோய் எதனால் வருகிறது என்று ஆய்தால் விவரம் புரியும். நோய் என்பது ஒரு உயிரினுள் இன்னொரு உயிர் புகுவதால் உண்டாகும் பிரச்சனையாகும். வயிற்றுக் கோளாறு என்றால் வயிற்றுப் புழு, நுண்கிருமிகள் மற்றும் வைரஸ் இவை செய்யும் வேலை என்று சொல்லும் மருத்துவம். காச நோய்க்கும், தொழு நோய்க்கும் இன்ன பிற நோய்க்கும் நுண்கிருமிகள் காரணம். நோய் என்பது உயிர், தன்னுள்ளே தன்னை வைத்து காப்பாற்றிக் கொள்ளும் ஒரு வகையாகும். உண்மையில் நோயின் நோக்கு உயிரைக் கொல்வது அல்ல, ஆனால் ஒன்றினுள் ஒன்று வாழ்வது. இதுதான் உயிர் விதி. ஆனால் சில சமயம் நோயினால் மரணம் சம்பவிப்பது உண்டு. அப்போதும் கூட, உயிர் நீத்த உயிரியை அணு, அணுவாக பிரித்து ஜூவ சத்துக்களாக மாற்றி விடுவதும் மற்ற உயிரிகள்தான்.

இது ஒரு பொதுமையான நோக்கு. ஆனால் தலை வலியும், திருகு வலியும் வந்தவனுக்குத்தான் தெரியும் என்பது பழமொழி. நோயின் அறிகுறி நோவு. நோவில்லாமல் நோயில்லை. அதனால்தான் யாரும் நோய் வேண்டும் என்று விரும்புவதில்லை. இந்த நோவு கூட உடலின் தற்காப்பு முயற்சியின் விளைவுதான். பல நேரங்களில் உட்புகுந்த உயிரியின் கழிவுகள் நோவைத் தருவதுண்டு. லவ் லாக் என்ற ஆங்கில விஞ்ஞானி, இவ்வுலகே ஒரு பெரிய உயிரி என்கிறார். அந்த உயிரியின் பல அங்கங்கள்தான் உலகில் காணும் பல்வேறு உயிரினங்கள் என்கிறார். மனிதனுக்கு வரும் புற்றுநோய், உடலில் உள்ள செல்கள் தரிகெட்டுப் போவதால் வருகிறது. அதே போல் மனிதன் என்ற செல் பிரம்மாண்டமான உலகு என்ற உயிரின் உடலில் தரி கெட்டுப் போவதால் பல பிரச்சனைகள் வருகின்றன என்கிறார் லவ் லாக். அது என்ன? உலகின் தொழிற்சாலைப் புகையினால் வரும் பல்வேறு நோய்கள்-அமில மழை, பச்சையக விளைவு போன்றவை, பருவ மழை தப்புதல், வேண்டாத நேரத்தில் பெய்யும் மழை, ஊழிப் பேரலை, வெள்ளம் போன்றவை. மனிதன் உண்மையில் புற்றுநோய்க் காரணியா இல்லை அறிவியலில் கூட உருவகப் பேச்சு (metaphorical speech) ஏற்கப்படுகிறதா என்பது இந்த நூற்றாண்டின் கேள்விகள்.

பண்டை தொட்டு நோயிற்கான காரணிகளாக புறச் சுத்தம், அகச்சுத்தம் இவை வலியுறுத்தப் பட்டிருக்கின்றன. உடலின் நோய் இவையிரண்டின் பால் விளைவன. முற்பிறப்பின் காரணமும் உண்டு என்று தமிழ்ச் சமயங்கள் சொல்கின்றன. மன ஒழுங்கு இல்லாவிடில் பல்வேறு நோய்கள் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். இதையெல்லாம் ஆராய்ந்த சித்தர்கள் இதற்கென ஒரு மருத்துவத் துறையே உருவாக்கி வைத்துள்ளனர். மனதைத் தெம்பாக்கி, உடலைத் தூய்மை செய்து இறை வழிபாடு செய்யும் போது நோய்கள் அகன்று விடுகின்றன என்பது தமிழர்தம் பல்லாயிரமாண்டு அனுபவம். மிகப் பிரபலமான உளவியல் முறைகள் விநாயகர் அகவல், கந்தர் சஷ்டி கவசம் போன்றவை. இவைகளை தினம் சொல்லி வரும் போது உள்ளத்தெம்பு வந்து, சொல்லும் மந்திரம் வேலை செய்யத் தொடங்குகிறது.

சங்க காலத்திற்கு முன்பிருந்து தமிழ் மண்ணில் உலவி வரும் திருமால் வழி பாட்டிலும் இம்மாதிரி வழிகள் செப்பப்பட்டிருக்கின்றன. ஆழ்வார்கள் பாடல்களில் பெரியாழ்வார் செய்வித்த திருமொழிகளில் அரவணை ஆதியான் காப்பால் இப்பிணி போக்குதல் என்ற பத்துப் பாடல்கள் இதற்கு நல்ல சான்று. பெரியாழ்வார் உடல் என்பதை பட்டினம் என்ற சொல்லால் பாவிக்கிறார். எனவே ஒவ்வொரு பாடலின் முடிவிலும் பட்டினம் காப்பே என்று முடிக்கிறார். இப்பத்தும் செப்பினால் பிணி, நோய் அகலும் என்பது மரபு.

நெய்க்குடத்தை பற்றி ஏறும் எறும்புகள் போல், நிரைந்து, எங்கும் கைக் கொண்டு நோய்கள் நிற்பதாக ஆரம்பிக்கும் வரிகளிலே பெரியாழ்வாரின் கவித்திறனும், நோயைக் கூட அழகியல் கண்கொண்டு நோக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.

சித்திர குப்தன் என்பான் அவனவன் தலை எழுத்தை கணித்து, வர வேண்டிய தேதி குறித்து விடுகிறான், தென் புலத்தான் (எமன்) இலச்சினைத் தாங்கிய தூதுவர்கள் வருவர். வந்து வயிற்றில் கயிறு கட்டி (பாசக் கயிறு) பணி செய்ய வருகின்றனர் (ஈதெல்லாம் அவர் சொல்வது- அதிலும் பாருங்கள் பூத கணங்களைத் திட்டாமல் அவர் பணி செய்ய வருகிறார் என்கிறார் அன்பின் உருவான பெரியாழ்வார்). இந்த மாதிரி நேரங்களில் யார் நமக்குக் காப்பு? பத்தர்க்கு அமுதான பைக்கொண்ட பாம்பணையன்தான், வேறு யார் என்கிறார் பெரியாழ்வார்.

மங்கிய வல்வினை நோய்காள்!
உமக்கோர் வல்வினை கண்டீர்
இங்குப் புகேன்மின், புகேன்மின்
எளிதன்று கண்டீர், புகேன்மின்
சிங்கப் பிரானவன் எம்மான்
சேருங் திருக்கோயில் கண்டீர்
பங்கப் படாதுய்யப் போமின்
பண்டன்று பட்டினங் காப்பே

எவ்வளவு அழகான பாசுரம் பாருங்கள். நோயிற்கே தாவு காட்டுதல் என்பது இதுதான் :-) நோயைப் பயமுறுத்துகிறார் பெரியாழ்வார். கண்ணனைக் கருமணிக் குட்டனாகக் காணும் பெரியாழ்வார், இந்த மாதிரி சமயங்களில் நரசிம்மரை துணைக்கு அழைப்பது பொருத்தமான ஒரு அழகு. நோய் பயப்பட வேண்டுமே :-) நோயின் மீதும் பரிவு காட்டும் எந்தையின் இயல்புதான் என்னே? பங்கப் படாமல், உய்த்துப் போய் விடுங்கள் என்கிறார். நோய்கள் என்பதும் கிருமிகள்தானே. சர்வத்திலும் அந்தர்யாமியாக உள்ள எம்பெருமான் நோய்க் கிருமிகள் உள்ளிலும் உள்ளான் என்பதை அறியாதவர் அல்லரே நம் பட்டர்பிரான். அதனால்தான் அந்தப் பரிவு.

அடடா! கருமணிக் குட்டனை மறந்து விட்டேன் என்றா சொன்னேன். இல்லை, இல்லை அடுத்த பாடலில். மாணிக் குறளனை மனத்தினுள் பேணிக் கொணர்திட்டேன், ஆதலால், வீண் ஜம்பம் வேண்டாம், நோய்களே "நடமின்" என்று கட்டளை இடுகிறார்.

உற்ற வுறுபிணி நோய்காள்!
உமக்கொன்று சொல்லுகேன் கேண்மின்
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்
பேணும் திருக்கோயில் கண்டீர்
அற்ற முரைக்கின்றே னின்னம்
ஆழ்வினைகாள்! உமக்கிங்கோர்
பற்றில்லை, கண்டீர் நடமின்
பண்டன்று பட்டினம் காப்பே!


ஆழ்வார்களுக்கும் மற்றவர்க்கும் உள்ள வித்தியாசம் இதுதான். இந்த செரிந்த கவிப் பார்வை. நோயிடம் பேசுகிறார். வல்வினையிடம் பேசுகிறார். அவைக்கு பார்வை இருப்பது போல் இவர் பாவித்து, எம்பெருமான் கோயில் காண்பீர் இனி உமக்கு பற்றில்லை, நடையைக் கட்டும் என்கிறார். பெரியாழ்வார் என்றாலே இந்த எள்ளலும், நகை உணர்வும் கூடவே வருவன.

தெய்வ உருவை, அதன் மந்திர சொரூபத்தை உள் வைத்து தியானித்துப் பழகி விட்டால் பின் எந்த பயமும் வேண்டியது இல்லை. அதனால்தான், பெரியாழ்வார் சொல்கிறார், பீதகவாடைப் பிரானார் பரமகுருவாக வந்து, இவர் நெஞ்சில் புகுந்து, பாத இலச்சினை வைத்து விட்டார், எனவே நோய்களும், வினைகளும் தன்னிடம் அண்டா என்று சொல்கிறார்.

கடைசியாக, நோய்களைப் பயமுறுத்த திருமாலின் சார்ங்கம், சுடராழி, சங்கு, வாள், தண்டம் இவைகளை துணைக்கு அழைக்கிறார். இவை வந்தபின் நோய் நிற்குமோ?

பெரியாழ்வாரின் இப்பாடல்கள் அனைவருக்கும் துணையாக மதுரைத் திட்டத்தில் உள்ளது. சேவித்துப் பயன் பெறுங்கள். உரல்: ம.தி. 0005 பாகம் 1

பூதத்தாழ்வார் கனவில் திருமாலின் சுடராழி தாங்கிய திருமேனி கண்டு தன்வினைகள், உறுநோய்கள் அகன்றதாகப் பதிவு செய்கிறார்.

கண்டேன் திருமேனி யான்கனவில், ஆங்கவன்கைக்
கண்டேன் கனலுஞ் சுடராழி-கண்டேன்
உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து, பின்னும்
மறுநோய் செறுவான் வலி 67


என்பது அப்பாடல்.

கலியின் வினை தீர்ப்பது பெருமாள் நாமமே என்பது வைணவ நம்பிக்கை. அதனால்தான் பஜனைகள், கூட்டு வழிபாடு (சத் சங்கம்) இவைகள் வலியுறுத்தப் படுகின்றன. இதன் முக்கியத்துவத்தை சுட்டும் திருவாய்மொழி இதோ:

கடிவார்தண்ணந்துழாய்க் கண்ணன்விண்ணவர்பெருமான்
படிவான்மிறந்த பரமன் பவித்திரன்சீர்
செடியார்நோய்கள்கெடப் படிந்துகுடைந்தாடி
அடியேன்வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே. 2.3.9


அவன் நாமம் சொல்லி பருகிக் களிக்க நாமும் பழகிக் கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறையினரையும் பழக்கப் படுத்தவேண்டும்.

8 பின்னூட்டங்கள்:

  Anonymous

Sunday, August 12, 2007

//விஷ்ணுவிடம், நீ என்னைப் படைத்து, உயிரைப் படை என்கிறாய், எங்கிருந்து படைப்பேன்? என்கிறார். பரமன் இருப்பதிலிருந்து படை என்கிறான். பிரம்மா இருப்பதை ஆய்ந்து பின் படைக்கிறார் முதல் உயிரை//.

திருப்பாற்க்கடல் என்ன என்பது பற்றி என்னுடைய கற்பனை. பாற்கடல் என்ன என்று ரொம்ப நாள் யோசித்ததுண்டு.
ஒரு நாள் இதைத்தான் சொல்ல வருகிறார்கள் என்று தோன்றியது. மில்கி வேயின் கற்பனை வடிவத்தைப் பார்க்கும்
போது, புரிகிறது, இதுதான் பாற்கடல் என்று. பெருமாள் ஏன் கருப்பு நிறம் என்கிறார்கள்? black is also absence of color. பிரபஞ்சத்தின் அனைத்துப்
பொருட்களின் இடையே வியாபித்திருக்கும், வெளியே அவன். அதனாலேயே அவன் கரியன் ஆகி விட்டான். இந்த
வெற்று இடத்திலிருந்துதான் எல்லாமே உருவாகிறது. இங்கேயே எல்லாம் போய்ச் சேருகிறது! Everywhere it's Him!

  நா.கண்ணன்

Sunday, August 12, 2007

மிகச் சரியாகச் சொன்னீர்கள். இவையெல்லாம் மிக ஆழமாக குறியீடுகள், தத்துவங்கள். நாராயணன் என்ற நாமமே மிகப் பொருள் பதிந்தது. மிகப் பழங்காலத்தில், முதற் சொல்லே பொருள் பொதிந்து வரும் போது வேதம் மனிதனால் உருவானதல்ல என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

  Anonymous

Sunday, August 12, 2007

நாராயணன் என்ற சொல்லுக்கு விளக்கம் சொல்லுங்களேன்.

  நா.கண்ணன்

Sunday, August 12, 2007

நாராயணன் என் இன்னமுது. விரிவாகப் பேசப்பட வேண்டிய பொருள். இம்மடல்களில் விரவிக்கிடக்கும் பொருள். சுருங்கச் சொல்கிறேன், பின்னூட்டமாக.

பரம் என்பது ஒரு ஊகமல்ல. உள்ளது. புலப்படும் படியும் உள்ளது. புலப்படாமலும் உள்ளது. இங்கும் இருக்கிறது, அங்கும் இருக்கிறது, எங்கும் இருக்கிறது. உள்ளும் இருக்கிறது. வெளியும் இருக்கிறது. காரணப் பொருளாக இருக்கிறது. காரணியாகவும் உள்ளது. தன்னை மிஞ்சி வேறொன்று இல்லாமல் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்து உழல்கிறது. இதை ஒரே சொல்லால் சொல்ல வேண்டும்! முடியுமா? முடிந்திருக்கிறது. அதுதான் ஆச்சர்யம்.

நாராயணன் என்பது நாரம், அயனம் எனும் இருசொற்றொடர். இதற்கு இரு பொருள் கூறுவர். நாரம் - அழிவில்லாப் பொருள்களின் கூட்டம் (கவனியுங்கள், பிரபஞ்சத்தில் மாற்றம் உண்டே தவிர அழிவில்லை). அயனம் - இடம்.

1. அழிவில்லாப் பொருள்களின் கூட்டத்திற்கு இடமாக உள்ளவன். The physical space, the cosmos, the entirity. அநாதி என்றும் கொள்ளலாம். சர்வமும் இதனுள் அடக்கம். எங்கும் வியாபித்து இருப்பதால் அவனை விஷ்ணு என்கிறோம்.

2. அழிவில்லாப் பொருளகளை இடமாக உடையவன். ஆகா! அது என்ன? அதாவது உள்ளொளியாக, உட்சக்தியாக, அந்தர்யாமியாக இருப்பது. "நானும் நீயே! என்னுள் உறைதலால்" என்பது தேசிக சூத்திரம்.

இந்த இரண்டிற்குள் எல்லாம் அடக்கம். இத்தனை பொருள் புதைந்த ஒரே சொல் நாராயணன். சிவனைப் பரம் எனச் சொல்ல முயலும் அப்பய தீட்சதர், வேதங்களும், உபநிஷதங்களும் நாராயணன் என்பதையே பரம் என்பதற்கு விளக்கச் சொல்லாக (defining word)பாவிப்பதை நான் அறிந்தும் ஏக தேசம் சிவனைப் பரம் என நிரூபிக்க முயல்கிறேன் என்று எழுதுகிறார் (வலப்பக்கமுள்ள கிருஷ்ணப்பிரேமியின் உபன்யாசம் (15 நிமிடங்கள்) கேட்டுத் தெளியவும்). எனவே காலம் காலமாக பரம் என்பதைச் சுட்டும் பொருளுள்ள சொல்லாக நாராயணன் என்று சொல் வழக்கில் உள்ளது (இதை யோகரூடி என்று சொல்வர் இலக்கணகர்த்தாக்கள்).

இப்படி சொல்லாராட்சி செய்யும் திறனுடையவன் மனிதன். இவனை 'நரன்' என்று சொல்வதுண்டு. நாராயணனில் நரன் அடக்கம். இதையே, திருமழிசை "நான் உன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே!
நீ என்னையின்றி இலை - என்றார்.

அஷ்ட்டாச்சர மந்திரம் ஒன்றிலேயே பிரணவம் உள் அடங்குகிறது. "ஓம் நமோ நாராயணாய". வேறு எந்த மந்திரத்திற்கும் இச்சிறப்புக் கிடையாது.

ஆலிலைக் கண்ணன் இறுதியில் எல்லாம் உண்டு இனி சுவைக்க வேறொன்றுமில்லை எனும் கதியில் தன் கட்டை விரலைத் தான் சுவைத்துக் கொண்டு இருப்பது சூட்சுமம். நாரம் என்றால் நீர் என்று பொருள். நீர் என்றால்? பிரளய ஜலம் என்கின்றனர் நம் முன்னோர். இது பருப்பொருள் காட்சிப்படுமுன் உள்ள அலை. அதை இருப்பிடமாகக் கொண்டவன் நாராயணன்.

இப்படி இச்சொல் விரிவான பொருள்களுக்கு இடமளிப்பதாக உள்ளது. இச்சொல் இறைவன் போல் சுயம்பு என்றே தோன்றுகிறது.

  Anonymous

Sunday, August 12, 2007

நல்ல விளக்கம். என் நினவிலேயே கடைசி வரை நிற்கப் போகும் விளக்கம். நன்றி. அறிவியல் கூறுவதை அழகாக
விளக்கியுள்ளீர்கள்! விஷ்ணு என்பதன் பொருளையும் இன்றுதான் தெரிந்து கொண்டேன்!

  நா.கண்ணன்

Monday, August 13, 2007

மிக்க நன்றி. சொல்ல வாய்ப்பளித்தமைக்கு நன்றி. பாசுரமடல் அனைத்தும் மடலாடற்குழுக்களில் தோன்றிய பின்னூட்டங்களின் விளைவே!

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Wednesday, August 15, 2007

மிக அழகான பதிவும் பின்னூட்டங்களும் கண்ணன் சார்!

//நாரம் - அழிவில்லாப் பொருள்களின் கூட்டம் (கவனியுங்கள், பிரபஞ்சத்தில் மாற்றம் உண்டே தவிர அழிவில்லை).

நாரம் என்றால் நீர் என்று பொருள். நீர் என்றால்//

ஆபோ நாரா என்று வருகிறதே!
நீர் தான் கொள்ளும் கலனுக்கேற்ப வடிவம் கொள்கிறது...அதற்கென்று வடிவம் இல்லாவிட்டாலும் கூட!

நாராயணனுக்கும் இந்தக் குணமே பெரிதாகப் பேசப்படுவதால் கூட நாராயணன் என்று வந்திருக்கலாமோ?

தானோர் உருவே தனிவித்தாய்த்
தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும்
மற்றும் மற்றும் முற்றுமாய்
தானோர் "பெருநீர்" தன்னுள்ளே
தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மாமாயன்
வைகுந்தன் எம் பெருமானே

  நா.கண்ணன்

Wednesday, August 15, 2007

கொள் கலத்தின் இயல்பிற்கேற்ப வியாபிக்கும் தன்மையனன்...ம்..இப்படி யோசிததில்லை. உளவியல் கண்ணோட்டத்தில் முற்றும் பொருந்தும். (இதை அந்தப் பின்னூட்டத்தில் போட்டுவிட்டேன், தவறு)