e-mozi

மடல்: 073 வள்ளுவமும் வைணவமும் (பகுதி ஒன்று)

First Published on : Tue, 22 Feb 2000 18:34:21 +0200

இன்று சற்றேறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப் பட்ட குறள் இன்றளவும் பேசப்படுவதின் காரணங்கள் பல. நம் பழமையின் பெருமையில் இளைப்பாறுவது முதல் காரணம். வள்ளுவனின் கட்டுக்கோப்பான குறள் வடிவம், சொற் சிக்கனம், காலத்தை வென்று நிற்கும் உண்மைகளை இலக்கியமாக வடித்தது இப்படி பல சுவைக் காரணிகள் உண்டு. மேலும், இலக்கிய மீள் ஆய்வு இலக்கிய வளர்ச்சிக்கு உரம் என்பது ஒரு காரணம்.

யதார்ததமான இன்னொரு உண்மை, பதினென் அறநூல்களில் ஒன்றான குறளின் தேவை இரண்டாயிரமாண்டு ஆனாலும் இன்றும் தமிழ் மண்ணில் இருப்பது என்பதுதான்.

"வாய்மையே வெல்லும்" என்று ஒரு அரசு தன் அரசு இலச்சினையில் பதிக்கிறது என்றால் அந்த நாட்டில் பொய்மை அதிகம் உள்ளது என்று அர்த்தம். நோயிருக்கும் இடத்தில்தானே வைத்தியனுக்கு வேலை!

இந்தச் சூழலில் வள்ளுவனுக்கு குமரிமுனையில் சிலை எழுப்பி தமிழகம் அடுத்த புத்தாயிரத்தில் புகுந்திருப்பதும் அவரைப் பற்றி அலசுவதற்கு ஒரு காரணியாக அமைகிறது. இறைமை என்பது வார்த்தைக்குள் அகப்படாத ஒன்று என்று அறிந்துகொண்டும் அதை கவிதைக்குள், தத்துவங்களுக்குள் அடைக்க பல்லாண்டுகளாக முயலும் தமிழக ஆன்மீகப் பரப்பில் வள்ளுவர் எந்தவொரு தெய்வத்தையும் பெயர் சொல்லி முன்நிறுத்தி பாட்டு எழுதவில்லை. ஆனால் இறைமை இல்லை என்று சொல்லவும் இல்லை. இந்த அவரது விசித்திரமான போக்கினால் எல்லா மதங்களும் அவரைச் சொந்தம் கொண்டாடுகின்றன.

அவரது தீவிரமான கொல்லாமை நெறியாலும், மலர்மிசை ஏகினான், ஐந்தவித்தான் போன்ற பதங்களாலும், அவர் காலத்தில் சமணம் பிரபலமாக இருந்த காரணத்தினாலும் அவரைச் சமணர் என்று சிலர் சொல்லுகின்றனர் (திருக்குறள்-சுஜாதா, யார் இந்த வள்ளுவர்?-வெங்கட் சுவாமிநாதன்-கணையாழி ஜனவரி 2000, சமணமும் தமிழும்-மயிலை சீனி வேங்கிசாமி).

வள்ளுவர் ஒரு பெளத்தர் என்று சொல்வாரும் உளர் (தமிழ் இணையக் கருத்துப் பரிமாறல்). ஜி.யூ.போப் என்பார் வள்ளுவர் ஆதி கிருஸ்துவர் என்று யூகிக்கிறார் (Sacred Kurral--Valluva Nayanar -Rev. G.U.Pope 1886). வள்ளுவரின் குறள் சைவ மறைகளுள் ஒன்றாக ஏற்கப் பட்டு அவருக்கு சைவக் கோயில் ஒன்றும் தமிழகத்தில் இருக்கிறது.

வள்ளுவரின் இத்தன்மைகள் அவரை இஸ்லாமியக் கருத்துக் கொண்ட முதல் தமிழன் என்று சொல்ல வைத்துள்ளது (இணையக் கடிதங்கள்), அவர் நாத்திகர்கள் இடையிலும் பிரபலமாக உள்ளார். அவருக்கு இன்று சிலை வைத்துள்ளது அப்படியான தொரு நாத்திகக் கட்சிதான். வள்ளுவத்தை ஆராய்ந்தவர்களுக்கு வள்ளுவத்திலுள்ள முரண்பாடுகளுக்கிடையில் வள்ளுவர் யார் என்று காண்பது பிரம்மப்பிரயத்தனமாகவே உள்ளது. வெங்கட் சுவாமிநாதன் சொல்லுவது போல், "குறள் 703 மற்றவர் மனத்தை அறியத் தெரிந்தவனை "யாது கொடுத்தும் கொள்" என்கிறார். அதாவது அவன் என்ன சம்பளம் கேட்டாலும் வேலைக்கு அமர்த்திக் கொள்" என்கிறார். பகைவன் நண்பனாக வரும் போது அவனுக்கு மிக நட்பு மாத்திரமே காட்டி ஒதுக்கு (830) என்கிறார் ஓர் இடத்தில்.

மற்றொரு இடத்தில் "பகைவனையும் நண்பனாகக் கொள்ளும் பண்புடையவரால்தான் உலகம் நிலைக்கிறது" என்றும் சொல்கிறார் (873). இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்றும் சொல்கிறார். இம்மூன்றில் எங்கே வள்ளுவர் இருக்கிறார்?" இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான் என்று தார்மீகக் கோபத்தோடு கேட்கும் வள்ளுவர் வேறொரு குறளில் "இன்பம் ஒருவர் இரத்தல் (1052)" என்றும் சொல்லுகிறார்.

இரப்பார் இல்லையெனில் இவ்வுலக இயக்கமே மரப்பாவை இயக்கமாகிவிடும் (1058) என்றும் அதே அதிகாரத்தில் சொல்லுகிறார். இதுபோல் குறளை ஆயும் போது வள்ளுவர் ஒரு சிறுகதை ஆசிரியனுக்குரிய யுக்தியுடன் புனையும் ஒவ்வொரு கதையிலும் அவன் கதைக்கு உண்மையானவனாக இருப்பது போல் யாக்கும் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் உண்மையானவராக உள்ளார். இல்லை யெனில் கள்ளுண்ணாமை பற்றிப் பேசும் வள்ளுவர், துறவு பற்றிப் பேசும் வள்ளுவர் வரை மகளிர் பற்றிப் பேசும் வள்ளுவர் காமத்துப் பாலில் ஒரு இளைஞனுக்குரிய மயக்கத்துடன் காதலியின் தோள் சுகம் இருக்கும் போது வீடுபேறு எம்மாத்திரம்? (1103) என்று கேட்பாரா? (அதாவது திருமூலர் போலவோ, நம்மாழ்வார் போலவோ அவர் ஒரு தத்துவ தரிசனத்திற்காக குறளை முன்நிறுத்தாமல், எளிமையான வழிகளில் மனிதன் வாழ்தாலே போதும் அதுவே அவன் வாழ்வைச் சிறப்பிக்கும் என்றளவிலே சொல்லி நிறுத்திக் கொள்கிறார்). எனவே வள்ளுவத்தில் நாம் காண்பது அவர் காலத்தின் ஒரு அதி அற்புத கண்ணாடி. அதில் அவர் வாழ்ந்த காலத்தையும், கண்ட காட்சிகளையும், கேட்ட தத்துவங்களையும் மிகத் திறமையாக பிரதிபலிக்கிறார்.

வள்ளுவரின் காலம் இன்னும் ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய ஒன்றுதான் என்றாலும் அது தமிழின் மூத்த நூலான தொல்காப்பியத்திற்கு முந்தியது அல்ல என்பது அறிஞர் கருத்து. மேலும் அது இரட்டைக் காப்பியங்களான மணிமேகலை, சிலப்பதிகாரத்திற்கு முந்திய காலத்தினது என்பதற்கு மணிமேகலை மேற்கோள் காட்டும் குறள் வரிகள் சான்று (தெய்வம் தொழாஅள்). எனவே திருக்குறள் சங்க காலத்தினதோ அல்லது அதற்கு சற்றே பிற்பட்டதாகவோ இருக்க வேண்டும்.

தமிழ் முனிவர் அகத்தியரின் மாணவர்களுள் ஒருவராகக் கருதப்படும் தொல்காப்பியர் அவர் காலத்தைய தமிழகத்தை நானிலமாகப் பிரித்து, "சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல்" என்ற முறைப்படி முதன்மைப் படுத்தி, "மாயோன் மேய காடுறை உலகமும்" என்று சொல்கிறார். இது காட்டுவது என்னவெனில் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே கண்ணன் வழிபாடு தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது என்பதுதான்.

தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் பனைக்கு முன்வரும் சொற்கள் புணரும் முறை கூறுமிடத்து, "கொடிமுன் வரினே யையவ னிற்பக் கடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதி" என்கிறார். ஒன்றை உதாரணமாகச் சொல்கிறோமென்றால் அது எல்லோருக்கும் புரியுமொன்றாக இருக்கவேண்டும் என்பது பொது அறிவு. இலக்கண உதாரணம் காட்டும் தொல்காப்பியர் கண்ணனின் மூத்தவரான பலராமனின் கோயில் கொடியாகிய "பனைக் கொடியை" மேற்கோள் காட்டுகிறார்.

வள்ளுவனின் குறள், "ஆயிரத்து முந்நூறு முப்ப தருங்குறளும் பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின்" என்று சங்கப் புலவர் நத்தத்தனார் சொல்வது போல் பாயிரத்தோடு தொடங்குகிறது. அது கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல்" என்பது. இது தொல்காப்பியம் சொல்லும் கொடிநிலை, கந்தழி, வள்ளி இவை மூன்றும் கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே என்பதற்கு ஒப்ப அமைந்துள்ளது.

வள்ளுவர் காலத்திலும், அதற்கு முன்னும்,பின்னும் திருமாலை முழுமுதற் கடவுளாக் கொண்டு வாழ்த்தும் முறை இருந்து வந்துள்ளது. பதினென் கீழ்க்கணக்கு நூல்களில்ஒன்றான திரிகடுகம் கண்ணனை முதற்பொருளாகக் கொண்டு கடவுள் வாழ்த்துப் பாடுகிறது "மாயச் சகடம் உதைத்ததூஉம்-இம்மூன்றும் பூவைப் பூவண்ணன் அடி" என்று.

"சிலம்பு மடல்" (நாக.இளங்கோவன்) சொல்ல மறந்த ஒரு செய்தி, தமிழ் மண்ணில் கண்ணன்-நப்பின்னை கதைகள் நாடகமாகவும் நடித்துக் காண்பிக்கப்பட்டது என்பதுதான்,

ஆயர்பாடியிலொரு மன்றத்து மாயவனுடன் றம்முனாடிய
வால சரிதை நாடகங்களில் வேனெடுங்கட் பிஞ்ஞையோ
டாடிய குரவையாடுதும் யாமென்றாள் கறவைகன்று
துயர் நீங்கவே வெனவே
(சிலப்பதிகாரம்).

திருமாலின் ஐவகை நிலையான, பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்பவை பரிபாடலில் தெளிவாகக் குறிக்கப் பட்டுள்ளது. மணிமேகலை காலத்தில் வைணவ வாதம் கூறப்படுவது, "காதல் கொண்டு கடல்வண்ணன் புராண மோதினான் நாரணன் காப்பேன் றுரைத்தனன்" என்ற வரிகளால் அறியப்படும்.

இதனால்தான் சங்கப் புலவரான பரணர், வள்ளுவனை வாழ்த்தும் போது "தேவரில் திருமால் எனச்சிறந்த தென்பவே பாவிற்கு வள்ளுவர்வெண்பா"என்கிறார்.

இந்த பின்புலத்தில் வள்ளுவனின் கடவுள் வாழ்த்தை ஒருமுறை பார்த்தால் அவர் பெயர் சொல்லாவிட்டாலும் ஒன்றைத் திரும்பத் திரும்ப சொல்வது தெரியும். அது

வால் அறிவன் நற்றாள் தொழா அர் எனின்
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி
தனக்குவமை இல்லாதான் தாள்
அற ஆழி அந்தணன் தாள்
எண் குணத்தான் தாள்
இறைவன் அடி

இறைவனின் திருவடித் தாமரைகளை வணங்குவதையே உயர்ந்த வழிபாட்டு முறையாக வைணவ மரபு கொள்கிறது (சடாரியை தலையில் ஏந்துதல் இன்றும் வழிபாட்டில் உள்ள ஒன்று). திருமால் மூன்றடியில் தாவி அளந்த திறனை முதல் மூன்று ஆழ்வார்கள் பாடல்களில் மட்டுமல்ல சைவ சித்தாந்தை நிறுவ வரும் திருமூலரும் மேற்கோள் காட்டுகிறார் என்பதை கவனிக்க வேண்டும். மேலும், திருமாலின் உறைவிடம் "பரம பதம்" ஆகும். இங்கும் வருவது இறைவன் அடிதான்! "சுடரடி தொழுது" என்று திருவாய் மொழியின் முதல் பாசுரம் சொல்கிறது.

இனி வள்ளுவன் சொல்லும் "அறவாழி அந்தணனும்", "ஆதி பகவனும்" யார்
என்று ஆராய்வோம் (பகுதி-2)

5 பின்னூட்டங்கள்:

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Saturday, August 11, 2007

சூப்பரோ சூப்பர்!
இதை அங்கு பாசுரமடலில் படித்து விட்டு...இங்கு தமிழ்மணத்தில் நெடு நாள் எதிர்பார்த்த பதிவு கண்ணன் சார்...:-)

//வள்ளுவரின் குறள் சைவ மறைகளுள் ஒன்றாக ஏற்கப் பட்டு அவருக்கு சைவக் கோயில் ஒன்றும் தமிழகத்தில் இருக்கிறது.
//

சுட்டி வேலை செய்யவில்லை!
சென்னை மயிலையில் திருநீறோடு கூடிய வள்ளுவர் சிலையைக் காணலாம்! :-))

வள்ளுவரைச் சொந்தம் கொண்டாடி பலர் அவரைச் சமய அடைப்புகளுக்குள் அடக்கிட முனைந்தாலும்,
மானுடம் தழுவிய வாழ்வியல் என்ற அவரின் சிந்தனை, அனைத்தையும் தாண்டிப் பரிணமிக்கிறது!

உலகப் பொது மறை என்பது முழுமுதலாக முற்றிலும் உண்மை. ஆனால் அதற்காக சமய ஆராய்ச்சியை நிறுத்தி விடத் தேவை இல்லை! குறளையும் இன்ன பிற சமய மாண்புகளையும் ஒப்பு நோக்கினால், கருத்துக்கள் இன்னும் ஒளிர் விடும்!

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Saturday, August 11, 2007

//நற்றாள்
மாண்அடி
இலான் அடி
தனக்குவமை இல்லாதான் தாள்
அற ஆழி அந்தணன் தாள்
எண் குணத்தான் தாள்
இறைவன் அடி//

மிகவும் அருமை!
திருவடிகளின் பெருமையை வைணவம் எப்படி ஏத்துகிறதோ...அப்படியே குறளும் சொல்கிறதே!

கண்ணன் சார்..
வள்ளுவர் ஞான மார்க்கத்தைக் காட்டிலும், சரணாகதி தத்துவத்தைத் தான் அதிகம் முன்னிறுத்துகிறாரோ?

இறைவனை அடையும் பல நிலைகளை எல்லாம் விரித்துப் பேசாது...திருவடியைப் பற்றுவது ஒன்றையே தான் எல்லா இடத்திலும் சொல்கிறார்....

கடவுள் வாழ்த்து அல்லாத துறவு அதிகாரத்திலும் கூட பற்றுக பற்றற்றான் பற்று என்றே கூறுகிறார்.

ஆசையை விடு என்று அறிவுப்பூர்வமாக ஆராயாமல், அதை விடுவதற்கே பற்றினைத் தான் பற்ற வேண்டும் என்றால்...அங்கு தான் யோசிக்க வேண்டியுள்ளது...
வைணவத் தாக்கங்களை!

  நா.கண்ணன்

Saturday, August 11, 2007

கண்ணபிரான்: சுட்டி, சுட்டிய காலத்தில் வேலை செய்தது! ஆறாம்திணை எனும் மின்னிதழில் வந்தது. சுட்டிகளின் பேராப்பது இது! பக்கங்கள் இடம் பெயர்ந்து விடுகின்றன் அல்லது அழிக்கப்பட்டுவிடுகின்றன.

மதுரை ஆடி வீதியில் வள்ளுவர் மன்றமுண்டு. அவரை சைவம் என்றோ அணைத்துக் கொண்டு விட்டது!

  நா.கண்ணன்

Saturday, August 11, 2007

வள்ளுவர் காலத்தில் பாகவத தர்மமும், பகவத்கீதையும் நிச்சியம் பிரபலமாக இருந்தவை. எனவே அவன் பிரபத்தி ஒன்றே வீடு அடையும் வழி என்று சொல்வது அக்காலத்திற்கும், இக்காலத்திற்கும் பொருந்தும் ஒரு synthesis! வள்ளுவம் ஒரு அழகான காலக் கண்ணாடி!

  nedumaran

Sunday, August 07, 2011

anna nan onru solgiren valluvan ethaiyum sarathavar avar oru vigngnani eppatiyenral nilavi kundum kuyiyum ullathai avar or kuralil kurirrukkirar