e-mozi

மடல் 074: வள்ளுவமும் வைணவமும் (பகுதி இரண்டு)

First Published on : Date:Tue, 22 Feb 2000 18:34:36 +0200


ஐயந்தினீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து


என்ற குறளுக்கு உரை எழுதும் பரிமேலழகர், " ஐயமாவது பலதலையாய உணர்வு. அதாவது, மறுபிறப்பும், இருவினையும், கடவுளும் உளவோ? இலவோ?" என ஒன்றில் துணிவு பிறவாது நிற்றல். பேய்த்தேரோ? புனலோ? கயிறோ? பாம்போ? எனத் துணிவு பிறவாது நிற்பதும் அது" என்கிறார். (இதுதானே இணையத்தின் பிரச்சனையும் :-)) இதில் எது மெய் என்று கண்டு தெளிந்தாரே, "ஐயந்தினீங்கித் தெளிந்தார்" என்பவர். அவர்களுக்கு அவ்வனுபவ உணர்வு அடிப்பட்டு வர, வரப் பண்டை உலகியலுணர்வு தூர்த்து வரும் என்கிறார் வள்ளுவர். அதாவது "தான் தெய்வத்தினிடமிருந்து வந்தேன்" என்ற உணர்வு. நம் உண்மையான பண்டைய உலகு அதுதான்! இதை பல பாடல்களில் திரும்பத் திரும்ப திருமூலர் செப்புகிறார்.

இவ்விலக்கணப்படி வாழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் என்பதால்தான், "இறைமாட்சி" அதிகாரத்தில் பரிமேலழகர் அதிகாரப் பொருளை விளக்கும் போது "திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே என்னும்" என்று "பெரியாரும்" பணித்தார் என்று சொல்கிறார். மேற்கோள் காட்டும் பிறவிடங்களிலெல்லாம் "பிறர் கூறுவர்" "பிறர் கூறுவர்" என்று சொல்லிப் போந்து நம்மாழ்வாரை மேற்கோள் காட்டும் போது "பெரியாரும் பணித்தார்" என்று சிறப்பித்துக் கூறுகிறார்.

அச்சிறப்புப் பெற்ற திருக்குருகூர் சடகோபன், அறவாழி அந்தணன் யார் என்று சொல்கிறார்.

பிறவித் துயர்அற ஞானத்துள் நின்று
துறவிச் சுடர்விளக்கம்தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை
மறவியை இன்றி மனத்துவைப் பாரே
(1.7.1)

இப்பிறப்பினால் வரும் துன்பங்களை நீக்க வேண்டும் என்று விரும்புபவர் ஞானத்துள் நின்று, துறவி போல் சுடர் விளக்கம் செய்யத் தலைப்படுவர். சுடர் விளக்கம் என்பது உயிராகிய சுடரை மங்காமல் வைத்திருத்தல். நித்தம் நவமென சுடர்விடும் உயிர் வேண்டும் என்பான் பாரதி. அது இதுதான். இச்சுடர் மங்காமல் இருக்க "ஐந்தவிக்க வேண்டும்". இது பற்றி அடுத்துப் பேசுவோம்.

இப்படித் துறவறத்தில் நின்று உடலைத் துறந்து, ஞான மார்க்கத்தில் இருந்து பிறவித் துயரை போக்க வேண்டும் என்பவர்கள், அறத்திற்கு நாயகனாக இருக்கும் நாரணனை, சக்கரப் படையினைத் தரித்த அழகிய தண்ணளியை உடையவனுமாகிய இறைவனை எப்படி மறந்து வாழ்தல் முடியும்? என்று கேட்கிறார் நம்மாழ்வார்.

அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிற ஆழி நீத்தல் அரிது


என்ற குறளுக்கு உரை சொல்வது போல் நம்மாழ்வார் இப்பாசுரத்தை யாத்து அருளுகிறார். இதே போல் குறளின் முதல் பாடலாகிய

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


என்ற பாடலுக்கு எப்படிப் பொருள் கொள்ள வேண்டும் என்னும்படி நம்மாழ்வார் திருவாய்மொழியில் பிணக்கற அறுவகைச் சமயமும் நெறிஉள்ளி உரைத்த

கணக்கறு நலந்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு
உணக்குமின் பசைஅற அவனுடை
உணர்வுகொண்டு உணர்ந்தே
(தி.வா.மொ. 1.3.5)

அருளிச் செய்கிறார். வெறுமே ஆதி என்று சொன்னால் ஆதிக்கு அந்தம் உண்டாகும் என்பதனாலும், அந்தக் கோதிலான் இறைவன் என்று வேதம் சொல்வதாலும் நம்மாழ்வார் அந்தமில் ஆதி என்று மொழிந்தார் என்பது வைணவ வியாக்கியானம்.

பகவர் என்ற சொல் எல்லாக் கடவுளருக்கும் பொதுவாகக் கூறப்படினும் கிருஷ்ண பக்தியில் சிறந்து விளங்கிய துறவிகளையே பகவர் என்று கூறப்படுவதன்றி வேறு சமயத்து அடியவரைப் பகவர் என்று அழைப்பதாய் தமிழ் நூல்களில் அறிய முடியவில்லை. "நூலே கரகம் முக்கோல் மணையே ஆயும் காலை அந்தணர்க்குரிய" என்னும் தொல்காப்பிய வரிகள் வைணவ அடியார்களைச் சுட்டுமென்பதற்கு வாழும் சான்றுகள் உண்டு. இதே அர்த்தத்தில் பெரியாழ்வார்,

பக்தர்களும் பகவர்களும் பழமொழிவாய்
முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுதிறைஞ்சத்
திசைவிளக்காய் நிற்கின்ற திருவரங்கமே
(417)

என்று பாடுகிறார். வள்ளுவர் பாயிரமாக நீத்தார் பெருமை பேசுகிறார். அதாவது துறவிகள் எப்படி இருக்க வேண்டுமென்று சொல்கிறார்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்


கலித்தொகை இத்தகையோரைக் குறிக்குமிடத்து,

எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்
உறித் தாழ்ந்த கரகம் உரைசான்ற முக்கோலும்
நெறிபடச் சுவல் அசைஇ


என்கிறது. "உரை சார்ந்த் முக்கோல்" என்பதற்கு தத்துவப் பொருள் இருக்க வேண்டும் (சத், அசித், ஈசன்). நெய்தல் கலியும் முக்கோல் பற்றி பேசுகிறது. பாகவதர், பகவர் என்ற இரு சொற்களும் ஒருவருக்கொருவர் அன்பு பூண்டவர்கள், வைணவ சமயத்தைப் பின் பற்றுபவர்கள் என்று பொருள். பாகவதர்கள் என்பதற்கு நாராயண சமயத்தைப் பின் பற்றுபவர்கள் என்று திவாகரம் கூறுகிறது. இத்தனையும் வைத்துப் பார்க்கும் போது வள்ளுவன் சொல்லும் ஆதி (இல்) பகவன் நாரணனானக ஏன் இருக்கக் கூடாது?

வள்ளுவன் அறம், பொருள், இன்பம் பாடினாலும் வீடு என்ற கோட்பாடு அவன் உள்ளத்தில் இல்லாமல் இல்லை என்பது அவனது குறட்பாக்களில் தெரிகிறது

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்.... (இங்கு மாணடி என்பது எதைக் குறிக்கிறது?)

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
(இங்கு அவனது "வைப்பு" எது?)

யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்
(இந்த உலகம் எது?)

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
(இந்த உலகு எது?)

தாமரைக் கண்ணான் உலகு என்பதற்கு பரிமேலழகர் "நித்திய சூரிகள் சூழ இருக்கும் திருமால் உலகு" என்று பொருள் கூறுகிறார்.

மீண்டும் குறளுக்கு விளக்கம் போல் திருவாய்மொழிப் பாடலொன்று அமைகிறது

புலனைந்து மேயும் பொறியைந்தும் நீங்கி
நலமந்த மில்லாதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின்ஓ வாதே
(2.8.4)

இப்பாடல்

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து


என்பதற்கு விளக்கம் போல் அமைகிறது. இப்படி புலனைந்தும் காப்பவனின் வைப்பு வைகுந்தம் என்கிறார் நம்மாழ்வார். நலமந்தமில்லாதோர் நாடு என்பது அதுதான். இத்துணை ஆழமான தொடர்பு வள்ளுவத்திற்கும் வைணவத்திற்கும் இருந்தும் வைணவம் என்றும் திருக்குறளைச் சொந்தம் கொண்டாடியது கிடையாது. இக்கட்டுரை கூட வைணவத்தின் தொன்மையைக் காட்ட எழுந்ததே அல்லாமல் குறளுக்கு உரிமை கோர அல்ல. ஒரு நல்ல வைணவனுக்கு ஆழ்வார்கள் அருளிச் செய்த பாசுரங்களில் திளைக்கவே ஒரு ஆயுள் போறாது. அதனால்தான் போலும், கவிச் சக்கிரவர்த்தி கம்பனின் இராமாயணம் கூட வைணவ இலக்கிய உள் வட்டத்திற்குள் விழவில்லை. ஆயினும் கம்பனின் வைணவ தரிசனத்தை உணர்ந்தே அவர்கள் கம்பநாட்டாழ்வான் என்று சொல்லிச் சிறப்பித்தனர்.

இதுவும் தமிழ் நெறிதான் காண்க.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டிவிடும்

0 பின்னூட்டங்கள்: