e-mozi

மடல் 075: புலமையும் வறுமையும்!

First published on Sat, 26 Feb 2000 10:54:35 +0200

கந்த வேளுக்கும் ஒளவையாருக்கும் நடந்த உரையாடல் சுவையானது. படித்த மேதையான ஒளவைக்கு "கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு" என்று காட்டிவிட்டு, பின் சமர்த்தாக உட்கார்ந்து அவளிடமிருந்து பல விஷயம் கற்றுக் கொள்கிறார் முருகன். அந்த உரையாடலில்தான், பெரியது என்ன?, சிறியது என்ன?, அரியது என்னவென்றெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் போது, போற போக்கில் ஒளவை "சேர்ந்தே இருப்பது வறுமையும், புலமையும்" என்று சொல்லிவிட்டுப் போகிறாள். அன்று ஆரம்பித்ததுதான் வினை :-)

புலவர்கள் அரசனிடம் போய், "என்ன கொடுப்பான், எவை கொடுப்பான், என்றிவர்கள் எண்ணுமுன்னே, பொன் கொடுப்பான், பொருளும் கொடுப்பான், போதாது, போதாதென்றால் இன்னும் கொடுப்பான், இவையும் குறைவென்றால், தன்னைக் கொடுப்பான், தன் உயிரைத் தான் கொடுப்பான், தயாபரனே!" என்று பாடுவார்கள். நல்ல அரசர்கள் வலது கைகொடுப்பதை இடது கை அறியாமல் வழங்கிவிடுவர். தானம் தினம் கிடைக்காது, வந்த வருமானம் சில மாதங்கள் ஓடலாம். அதன் பின் வறுமைதான். சங்க காலத்தில் ஆரம்பித்த வழக்கம் பாரதியின் சீட்டுக் கவி வரைக்கும் நீடிக்கிறது. இப்போது புலவர்கள் பள்ளிக் கூடத்தில் வாத்தியார் உத்தியோகம் வாங்கிக் கொள்கின்றனர். இருந்தாலும் அன்று செய்த கேடு இன்றளவும் தமிழுக்கு தமிழ் மண்ணில் மதிப்பில்லாத ஒரு மனப்பாங்கை உருவாக்கி விட்டது என்னமோ உண்மை. இன்று பல பட்டங்கள் வாங்கி சிறந்த இலக்கியகர்த்தாவாக இருக்கும் பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி எப்படி அவர் தமிழ் படிக்கப் போகிறேன் என்றவுடன் வீட்டில் உருவான அதிர்ச்சியை அவரது சுயசரிதம் போல்படும் "வேர்ப்பற்று" என்ற நாவலில் விளக்குகின்றார்.

எழுத்தாளர்கள் சுய சம்பாத்தியம் இல்லாதவர்கள் என்பது தமிழ் விதியான பின் யாரும் தனக்குத் தொழில் எழுத்து என்று சொல்லிக் கொள்வதில்லை. முண்டாசுக்கவி ஒருவர்தான் "எமக்குத் தொழில் கவிதை!" என்று சொல்லிவிட்டு வீட்டில் இருந்த கொஞ்ச நஞ்ச அரிசியையும், "காக்கை, குருவி எங்கள் சாதி" என்று இரைத்து விட்டு "விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்த சிட்டுக் குருவியைப் போல" என்றிருந்தான்.

"Freedom is another word for nothing to loose" என்பது அ.ஐ.கூ நாட்டின் கிராமத்துப் பாடல் வரிகள். இந்த மனோபாவம் தமிழ் சோறு போடாது என்ற தாழ்ந்த மனப்பான்மையை நஞ்சாய் விதைத்து விட்டது. இதனால், தமிழர்கள் மத்தியில் நல்ல இலக்கியத்திற்கான சரியான வாசகர் வட்டத்தை உருவாக்க தவறிவிட்டது. தமிழன் உணர்ச்சிப் பெருக்கில் "தாய்" மொழிக்காக தீக்குளிப்பான். ஆனால் வறுமையில் வாடும் ஒரு தமிழ் வாத்தியாருக்கு கஞ்சித் தண்ணி விடமாட்டான். தொடர்பு அறுந்து விட்டது. தமிழ் ஒரு விலை பேசும் பொருளாகிவிட்டதால்தான் இன்று தமிழை முன் வைத்து அரசு பீடத்தைப் பெற்ற கட்சிகளும் தமிழை முன்னடத்திச் செல்ல முடியாமல் தவிக்கின்றன. சிலை வைக்கத் துடிக்கும் அரசு, பாழாகும் தஞ்சை சரஸ்வதி மாகால் நூலகத்தை சீர்படுத்த முன்வராது. கோட்டங்களும், கொத்தளங்களும் தமிழின் பெயரால் நிறுவ முன்வரும் அரசு தமிழுக்கென்றிருக்கும் பல்கலைக் கழக மானியத்தைக் கண்டு கொள்ளாமல் தஞ்சைப் பல்கலைக் கழகத்தை வாடவிடும். ஒரு புறம் ஆங்கிலமும், அறைகுறைத் தமிழும் கலந்த தொலைக்காட்சியை நடத்திக் கொண்டு கோயில்களில் தமிழ் இல்லை என்று சொல்லிக் கூச்சலிடும்! நூலகத்தில் உள்ள புத்தகங்களை வைத்துக் கொள்ள இடமில்லை என்று சொல்லி புத்தகங்களை எரிக்கலாம் என்று ஒரு ஆணை வந்து புத்தகங்கள் எரிக்கப் படுவதாக அகத்தியர் புலக் கடிதம் ஒன்று சொல்கிறது. யாழ்பாணம் நூலகத்தை எரித்தவன் சிங்களவன். எம் "தாய்" தமிழ் நூலகத்தை எரிப்பது தமிழன்! (http://www.indiaserver.com/thehindu/stories/0412223g.htm) மேலும் தமிழர்கள், தமிழை மொழியாகக் கருதாமல், அதைத் தாயாக, கன்னியாக உருவகப் படுத்தி வழிபடுகின்றனர். மொழி என்பது ஒரு பரிமாற்று ஊடகம் என்பது போய் பக்தி செய்யும் பொருளாகிப் போனது. இப்படி பக்தி செய்வதில் ஆத்திகர், நாத்திகர் என்ற வேறுபாடு கிடையாது. தன் மொழிப் பற்று என்பது பிற மொழி வெறி என்ற அளவிற்கு முத்திய ஒரு நோயாக தமிழர்களிடம் வேறூன்றி விட்டது. புலமையும், வறுமையும் சேர்ந்தே இருப்பது என்பது போல் தமிழும் வெறியும் ஒன்றாய் இருப்பது என்ற சூத்திரமாகிப் போனது.

ஒளவை காலத்திலிருந்து மொழி வளர்ச்சிக்கும், தமிழனக்குமுள்ள தொடர்பு அறுந்து போயுள்ளது. மொழி அதுபாட்டுக்கு வாழும் என்று ஒரு தமிழன் நினைக்கிறான். மொழி வளர நிரம்ப வாசிக்க வேண்டும், வாசகர் வட்டம் பெருகும் போது நிறைய எழுத்தாளர்கள் வருவார்கள், அவர்களுக்கும் எழுத உற்சாகம் அளிக்கும் வண்ணம் மொழி அவர்களை பொருளாதார ரீதியில் காக்கும் என்ற ஆரோக்கிய சூழல் தமிழ் மண்ணில் வளரவே இல்லை. கம்பனுக்கு ஒரு சடையப்ப வள்ளல் இல்லையெனில் இன்று கம்ப இராமாயணம் கிடையாது.

பாரதி பொது மக்களை நம்பி புத்தகம் போட எண்ணி நொடித்துப் போனவன். இன்றும் கூட ஒரு புத்தகம் போட ஆசிரியன் காசு போட வேண்டியுள்ளது. போட்டபின் புத்தகத்தை வித்துத்தர வேண்டியது கூட ஆசிரியன்தான். வேறு எந்த மொழி பேசும் நாட்டிலும் இந்த கதி ஒரு மொழிக்கு நேர்ந்தது கிடையாது. பகுத்தறிவு பேசுபவர்களும், பக்தி பேசுபவர்களும் இருவரின் நோக்குமே மொழியைப் பொறுத்தரை ஒன்றாகவே உள்ளது. இருவருக்கும் மொழி வழிபடு பொருளாக ஆனாது.

கண்டனக் குரல் கொடுக்கிறார் நம்மாழ்வார். அதுவும் சக கவிகளின் மனது புண்பட்டு விடக் கூடாதே என்று "சொன்னால் விரோதமிது, ஆயினும் சொல்லுவேன்" என்று ஆரம்பித்து,

சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என்னாவில் இன்கவி யானொரு வர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்து
என்னானை என்னப்பன் எம்பெருமானுளனாகவே (தி.வா.மொ. 3-9-1)

இவர் பாடுவது ஏழாம்-எட்டாம் நூற்றாண்டு. புலவர்கள் அரசர்களை நோக்கிப் போய் பரிசில் பெரும் காலம். இவர் சொல்கிறார், அது நல்ல வழி அல்ல என்று. இது வேறு கோளாறுகளுக்கு இட்டுச் செல்லும் என்றறிந்து. தான் செய்யும் கவி, தான் இறைஞ்சுவது இறைவன் ஒருவனிடம் மட்டுமே மற்றவர்களிடம் கிடையாது என்கிறார். இதில் உள்ள உளவியல் பாங்கு என்னவெனில் அரசர்கள் தரும் பொருள் சில காலம் மட்டுமே. ஆயின் ஒருவன் தன் உள்ளத்தில் உள்ள இறைவனைக் கண்டு கொள்வது தன்னைத் தரிசிப்பதற்கு ஒப்பாகும்.

தனது முழு திறமைகள் தெரியவரும் போது பொருள் தன்னால் தன் பின்னால் வரும் என்பது. சுய கெளரவமும், தன்னம்பிக்கையும் இல்லாமல் இருப்பவன்தான் பிறரிடம் பிச்சை கேட்பான். இந்த இழி நிலை புலவர்க்கு வரக் கூடாது என்கிறார் சடகோபன்.

மேலும், திருமாலின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையாகிய தாயார் (இலக்குமி) சந்தானத்தின் அதிபதி. இங்கு இலக்குமி என்பது "wholistic propsperity"-ன் குறியீடு. இதை தீபக் சோப்ரா பின் வருமாறு சொல்கிறார்.

"For me, wealth is a state of awareness where you don't think about money, where it's not a concern for you, because you know that you can take from the level of spirit anything that you want. The spirit has created the lavish, abundant, luxuriant body of nature, the universe itself, where in every seed there's a promise of thousands of forests. The earth is the body of the spirit (பூதேவி) There is a self-knowingness that from the level of the Self, you can (italics) create what you want."

இதை உணர்த்தும் தொன்மங்கள்தான் ஆதி சங்கரர் ஒரு ஏழைக்கு இலக்குமியிடம் வேண்டி பொன் பெய்ய வைத்தது, பின்னால் 15-ம் நூற்றாண்டு வாக்கில் வேதாந்த தேசிகர் இதையே மீண்டும் செய்தது. இதன் பொருள் உணராமல் ஒரு பழுத்த வேதாந்திக்கு தலையில் பொன்காசு கொட்டியது அப்பட்டமான அரசியல், ஒரு பெரும் தவறு. இதையெல்லாம் நன்கு உணர்ந்துதான் ஸ்ரீதியாகராஜர் "நிதி சால சுகமா இராமா! உன் சந்நிதி சால சுகமா" என்று அரசு பட்டங்களுக்கும், பரிசில் களுக்காவும் போகவில்லை. இலக்குமியை வசப்படுத்தி வைத்திருப்பவன் பிறர் கையை ஏந்த வேண்டிய அவசியமில்லை.

இதை உணர்ந்துதான், சேர அரசனாக வீற்றிருந்த குலசேகரர்,

கம்பமத யானைக் கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலைமேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே
(பெ.தி.மொ. 4-5)
என்று சொல்லுகிறார். இதுதான் நித்ய நிதி.

பொருட் செல்வத்திற்காக ஏங்கித் தவமிருக்கையில், அதுவே ஒரு எழுத்து வேள்வியாக ஒரு எழுத்தாளனுக்கு போய் விடில் செல்வம் வந்தபின் அந்தத் தேடுதல் போய் விடுகிறது. பின் எழுத்தும் போய் விடுகிறது. மதுரை வீதிகளில் ஏழ்மையாய் அலைந்த ஜெயகாந்தனின் எழுத்து எங்கே? பின் பொருளாதார திருப்தி வந்த நிலையில் அவர் எழுதிய எழுத்து எங்கே? இதனால்தான் வறுமை இருக்கும் வரை புலவன் எழுதுவான் என்றொரு தொன்மம் வந்தது போலும். ஒரு நல்ல எழுத்தாளனின் தேடல் என்றும் நிற்காதது. இதைச் சுட்டுமுகமாக லா.ச.ரா "முற்றுப் பெறாத தேடல்" என்றொரு கட்டுரைத் தொகுதி போட்டுள்ளார்.

தேடல் இருக்கும்வரை எழுத்து இருந்து கொண்டே இருக்கும். இதற்கு செல்வம் ஒரு தடையாக இருக்காது. இந்த ஏக்கம்தான் நாயகன்-நாயகி பாவத்தில் ஆழ்வார் பாசுரங்களில் விழுகிறது. இறைவன் கொஞ்சமாவது எட்டி நிற்பதுதான் பாகவதனுக்கு நல்லது. அப்போதுதான் அவனால் இப்படி எழுதவரும்:

வெள்ளை வெளளத்தின் மேலொரு பாம்பை
மெத்தையாக விரித்து அதன்மேலே
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம்
காண லாங்கொலென் றாசையினாலே
உள்ளஞ் சோர உகந்தெதிர் விம்மி
உரோம கூபங்களாய் கண்ண நீர்கள்
துள்ளம் சோரத் துயிலணை கொள்ளேன்
சொல்லாய் யானுன்னைத் தத்துறுமாறே


(பெரியாழ்வார் திருமொழி 5-7)
என்ன அவதி! உள்ளம் சோர்ந்து போய்விடுகிறது. நெஞ்சம் விம்முகிறது. உரோமாஞ்சனம் அடைகிறது, கண்கள் நீர் கோக்கின்றன, துயில் கொள்ள முடியவில்லை. இந்த அவதி இருக்கும் வரை அவன் கை கவிதை எழுதும். பெரியாழ்வார்வழியில் விழுந்த ஒரு இணையக் கவிதை இந்நிலைக்கு நல்ல உதாரணம்:

என் கடைசி ஆசை!

தொடல் தொடரல் கூடாதென்று தோன்றிக் கொண்டிருக்கும்,
விரல்கள் விசைப்பட்டுத் தோண்டிக்கொண்டிருக்கும் போதெல்லாம்.
படக்கூடாதென்று மூடிக்கொள்ளும் புலன்கட்கு அப்பாலும்
பட்டுக்கொண்டிருக்கும் அவஸ்தை,
சிந்தைநரம்புத் தந்தி நாட்டியம்.
கடலமிழ்பனிமலைநுனிப்
பட்டாசுத்திரிச் சொற்களின்
"பற்ற வை பற்றவை" எனும்
விட்டகலா வற்றா உச்சாடனம்.....
ஒவ்வொரு சொல்வேட்கையும்
முள்செறி சிலுவைச்சுமை.....
விரல் துடித்துத் திறக்கும்போது,
அடிக்கடி அச்சம் கவிழ்கின்றது,
வெறுமையை விரித்துக் கொள்வதாக,
இல்லாமையை விவரித்துச் சொல்வதாக.
இறுதி இது என்னுமாற்போல்,
என்னுள் இன்னொரு உறுதிமொழி.
இனியொரு நாளுக்கேனும்,
நானுணராப் பொருள் மீது
நாலு வரி எழுதாமல்
கூடுமோ கோணற்கை
இழுத்திருக்க எனக்கு?


- இரமணீதரன்

கூத்தர் குடமெடுத்தாடில்
கோவிந்தனாம் எனா ஓடும்
வாய்த்த குழலோசை கேட்கில்மாயவன் என்றுமை யாக்கும்
ஆச்சியர் வெண்ணெய்கள் காணில்அவனுண்ட வெண்ணெயீ தென்னும்
பேய்ச்சி முலைசுவைத் தாற்கென்பெண்கொடி யேறிய பித்தே
! - நம்மாழ்வார்

7 பின்னூட்டங்கள்:

  வடுவூர் குமார்

Saturday, August 11, 2007

இதை படித்த போது எழுந்த கேள்வி!!
புலவர்கள் ஏன் அந்த தொழிலோடு(இது தொழிலா?) நின்று போனார்கள்?
இவர்கள் வறுமையில் வாடுவது தொன்றுதொட்டு வந்தாலும் சிலர் அந்த இடத்திலேயே நின்று போனது எதனால்?
கவி என்ற "போதை" அவ்வளவு வீரியமானதா?

  மதுரையம்பதி

Saturday, August 11, 2007

//தமிழும் வெறியும் ஒன்றாய் இருப்பது என்ற சூத்திரமாகிப் போனது//

இது தமிழுக்கு மட்டுமல்ல, எல்லா திராவிட பாஷைகளுக்கும் தற்போது பொருந்தும். கர்னாடகத்தினர் கனாடவின் மீதும், மராட்டி மீதான முரட்டுக்காதல் கொண்ட மராட்டியரும் நீங்கள் அறியாதது அல்ல. மலையாளிகள் இன்னும் இந்த விஷயத்தில் அவ்வளவு தீவிரம் காட்டவில்லை என்று நினைக்கிறேன்.

  மதுரையம்பதி

Saturday, August 11, 2007

//இதன் பொருள் உணராமல் ஒரு பழுத்த வேதாந்திக்கு தலையில் பொன்காசு கொட்டியது அப்பட்டமான அரசியல், ஒரு பெரும் தவறு//

சரியாப் புரியவில்லை...யாரை/எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

  ஜீவி

Saturday, August 11, 2007

அடடாவோ! கொளுத்திய பட்டாசு போல் படபடத்து, ஒளி வெள்ளம்
ஊரெல்லாம் பரவ, உணர்ச்சிப்
பிழம்பாய் உண்மையைச் சொன்னீர்கள்!
அனுபவப்பட்டதால் சொல்கிறேன்;
அனுபவப்படாதாருக்கு, இதெல்லாம்
செய்தி; அவ்வளவே.
தமிழறிந்தோர் வாழ்வைப் பறித்தார்;
இவர்கள் தமிழை வாழ வைப்பாரோ?
வெட்கக்கேடு!

  நா.கண்ணன்

Saturday, August 11, 2007

குமார்: மொழி என்பதொரு லாகிரி. இதில் சந்தேகமில்லை. "தமிழுக்கு அமுதென்று பேர்" எனும் பாரதிதாசனின் பாடலே சான்று. பாரதி இருந்திருந்தால் அவருக்கு மாளிகை கட்டிக் கொடுத்து நன்றாக வாழ வைப்பேன் என்று சொன்ன பாரதிதாசன் மட்டும் செல்வத்திலா வாழ்ந்தார். இவர்கள் எல்லாம் ஒரே கேசு. குழந்தை போன்ற உள்ளம் இருக்கும் போதுதான் கவிதை பூரிக்கிறது! அதுவே அவர்கள் வறுமைக்கும் காரணமாகிப்போகிறது. இவர்கள் ஏமாளிகள். இவர்களுக்கு வறுமை ஒரு பொருட்டே இல்லை என்பதே உண்மை!

  நா.கண்ணன்

Saturday, August 11, 2007

மதுரையம்பதி: குமாருக்குச் சொன்ன பதிலை அவதானியுங்கள். மொழி ஒரு அரசியல் உத்தியாக இப்போது பயன்படுத்தப்படுகிறது. இதை ஆரம்பித்து வைத்தது கழகம்தான். வேடிக்கை என்னவெனில் பெரியார் இக்கொள்கைகெல்லாம் எதிர்! கழகம் 'பக்தி' எனும் உத்தியை மாற்றிப் போட்டு பயனடைந்துவிட்டது!

இரண்டாவது, பாயிண்ட். நான் இங்கு குறிப்பிடுவது மறைந்த முனிவர் காஞ்சிப்பெரியவரை. இவர் தலையில் பொன் காசு கொட்ட வேண்டுமென்று என்னிடம் காசு கேட்டார்கள். நான் கொடுக்கவில்லை. காஞ்சிமுனியின் அருளுரைகளை வாசித்தவர்களுக்கு இதுவொரு பிள்ளை விளையாட்டு என்றே தோன்றும் (அதாவது அவர் தலையில் பொன் கொட்டுவது!)

  குமரன் (Kumaran)

Monday, October 01, 2007

உண்மை தான் கண்ணன் ஐயா. தமிழ் என்றால் உயிரையும் தரத் தயார் என்பவர்கள் தமிழறிந்தவர்கள் வாழ ஒரு தம்பிடியும் கொடுப்பதில்லை.