e-mozi

மடல் – 058: காதல் விளைவித்த காரமர்மேனி !!

First published on: Tue, 7 Sep 1999 08:33:16 -0400

“ப்ரபத்திக்கு தேச நியமமும், கால நியமமும், ப்ரகார நியமமும், அதிகாரி நியமமும், பல நியமமுமில்லை, விஷய நியமேயுள்ளது”.

என்பதைக் கண்டோம். விஷய நியமத்தைப் பற்றிப் பேசுமுகமாக ஸ்ரீமணவாளர், அர்ச்சாவதார்த்தை எடுத்துக் கொள்கிறார். “விஷய நியமமாவது குணபூர்த்தியுள்ளவிடமே விஷயமாகை; பூர்த்தியுள்ளதும் அர்ச்சாவதாரத்திலே” என்று சொல்கிறார்.

அர்ச்சாவதாரம் என்பது கோவிலில் உள்ள பெருமாள் வெறும் கற்சிலை என்று பார்க்காமல் அவரது திருமேனி உண்மை என்று கண்டு, அவரது கல்யாண குணங்களை அனுபவிக்கும் ஒரு மனோனிலையாகும். அதாவது திருமால் இனி தனியாக அவதாரம் எடுக்கவேண்டிய அவசியமில்லாமல் ஒவ்வொரு ஊரிலும் அர்ச்சாவதாரமாக நிற்க நாம் வெறுமே சென்று அனுபவிக்க வேண்டியதுதான் என்று பொருள். இது ஒரு வகையான மனோலயம். பாடும் போது கமகம் கொடுத்து, வளைத்து, நெளித்துப் பாடும் போதுதான் “பாவம்” வெளிப் படுகிறது. பாவமே இல்லாமல் பாடினால் “ஐயோ! பாவம்” என்று ஆகிவிடுகிறது.

வெண்மையில் எல்லா நிறங்களும் அடங்கிவிடுகின்றன என்றாலும், உலகு வெண்மையாகவா உள்ளது. அப்படி இருந்தால் எவ்வளவு சோர்வாக இருக்கும்! பாரதி பேசும் “வண்ணக் களஞ்சியத்தின்” சாத்தியம் இல்லாமலே போயிருக்கும் இல்லையா? உலகம் ஒன்றிலிருந்து வந்தது என்று அறிகிறோம். அந்த ஒன்று, ஒன்றாகவே இருந்திருந்தால், இந்தப் பாசுர மடலின் தேவை என்ன? உலகில் பாவங்கள் முக்கியம், பாவனைகள் முக்கியம். பாவனை இல்லாமல் உலகில் எதுதான் நடக்கிறது?

வீட்டில் அப்பாவாக உள்ளவர்,ஆபீஸ் போனபின் ஆபீசர் ஆகிவிடுகிறார், சாயந்திரம் மனைவிகிட்டே அதே "ஆபீசர்" பாவனை செய்ய முடிவதில்லை. கொஞ்ச வேண்டியுள்ளது. ஓடி வரும் மழலையைக் கண்டவுடன் “சின்னஞ் சிறுகிளியே!” என்று உருக வேண்டியுள்ளது. பாவனை இல்லாமல் வாழ்வு சுவைப்பதே இல்லை. திருமங்கை ஆழ்வார் அனுபவிப்பதைப் பாருங்கள். “திருமாலைப் பாடக் கேட்டு..மடக்கிளியை கைகூப்பி வணங்கினாளே!” என்கிறார். கருங்குவளை மலர்களைக்கண்டு பெருமாள் நிறம் கொண்டீரே! என்று ஆண்டாள் பொருமவில்லையா? பெரியாழ்வார் தன் பெண் இருந்த நிலை பற்றிப் பேசும் போது, “ காதை பூணுங் கண்ணாடி காணும்” என்று சொல்கிறார். எனவேதான் அர்ச்சாவதாரம் என்பது ஒரு மனோலயம் என்றேன்.

பாவனை என்பதால் வெறும் கற்பனை என்று கொள்ளவேண்டாம். வீட்டை விட்டுக் கிளம்பும் அப்பா, ஆபீஸில் ஆபீஸராகி, மாலையில் டென்னிஸ் பிளேயராகி, கோவிலில் இந்துவாகி, மனைவிக்கு கணவராகி, குழந்தையைக் கண்டவுடன் மீண்டும் அப்பவாகி விடுகிரார்.

இதனால்தான் பெரியாழ்வார் நம் எல்லோருக்கும் தந்தையான இறைவனை, “எந்தை தந்தை, தந்தை, தந்தைதன் மூத்தப்பன்“ என்று சொல்கிறார். இறைவனை நம்பு என்று சொல்வது இறைவனை நிராகரிப்பதற்கு ஒப்பாகும். இல்லாத ஒன்றைத்தான் நம்பவைக்க வேண்டும். இறைவனை எப்படிக் காண்பது, இறைவனை எப்படி அனுபவிப்பது என்று கற்றுக் கொடுக்கவேண்டும், கற்றுக்கொள்ளவேண்டும். நம்மாழ்வார் சொல்லித்தரவில்லையா? “உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் “ என்று! மெல்லுணர்வை வளர்த்துக் கொள்ளவேண்டும். பரந்து, விரிந்து, ஆழ்ந்து கிடக்கும் “கிராண்ட் கென்யனில் “ நின்று கொண்டு ஜெ.கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார், “பார்க்கத் தெரிகிறான் படைத்தவனும் அவன் படைப்பும் “ என்று. தியாகராஜருக்கு தன் இராமன் பேசும் தெய்வம். இல்லாவிடில் மனிதர் வந்த சுகத்தை விட்டு, “நிதி சால சுகமா? இராமு நீ சந்நிதி சால சுகமா? நீ சந்நிதி சேவ சுகமா? மமத பந்தன யுத நரஸ்துதி சுகமா? சுமதி தியாகராஜனுதினி கீர்த்தன சுகமா?” என்று பஞ்சலோக சிலையிடம் பேசிக்கொண்டு இருப்பாரோ?

சிலையிடம் பேசுவது பயித்தியக்காரத்தனம் என்று சொல்லலாம். சிலை பதில் சொல்லுமா? என்றும் கேட்கலாம். ரோஜாச் செடியிடம் பேசினால் பதில் சொல்வதில்லை, மலர் தருகிறது. நாயிடம் பேசினால் பதில் சொல்வதில்லை, தன் வாழ்வையே தருகிறது, கொடும் சிங்கத்திடம் பேசினால் கூட தன் நட்பைத்தர சம்மதிக்கிறது. தெய்வத்திடம் பேசினால் என்ன குறைந்துவிடப் போகிறது? தியாகராஜர் பேசியதற்குப் பலனாக அவரது கீர்த்தனைகள் சாகாவரம் பெற்று விடவில்லையா?

"ஆழ்வார்கள் பலவிடங்களிலும் ப்ரபத்தி பண்ணிற்றும் அர்ச்சாவதாரத்திலே” என்று மணவாளர் சொல்கிறார். ஆழ்வார்கள் ஒவ்வொரு திருத்தலத்திற்கும் செல்லும் போதும் வெவ்வேறு வகையான அனுபவம் கிடைகிறது. அதை வைத்து பாடல்கள் செய்துள்ளனர். இப்படி அனுபவம் கிடைக்கவேண்டுமெனில் அதெற்கென ஒரு மனோபாவம் வேண்டும். ஒரு மெல்லிய நுண்ணுணர்வு வேண்டும். நாம் அப்படியானதொரு உணர்வுடன் இருக்கும் போதுதான் “அருளிச் செயலாக” இறைக் கவிதை பிறக்கிறது. அப்படித்தான் ஆழ்வார்கள் இறைவனை அனுபவித்து உள்ளனர். இவர்கள் பாடல்களில் கொஞ்சமும் பரிச்சயமில்லாமல் ஒரு சாதாரணனுக்கு எப்படி மனோபாவம் சித்திக்கும்? நல்ல இசையை அனுபவிக்க வேண்டுமெனில் முதலில் கேட்டுப் பழக் வேண்டும். இசை ஞானம் வளர, வளர, இசையின் நுணுக்கங்கள் பிடிபடும். நுணுக்கங்கள் பிடி, பட, பிடி பட இசையில் லயிப்பு உண்டாகும். லயிப்பு உண்டாகும் போது இசையின் பயன் முழுமை அடைகிறது. இதைப் போலத்தான் இறைமையின் லயிப்பும். “அறிவின் பயனே! அரி ஏறே!” என்கிறார் நம்மாழ்வார். அறிவின் பயனே இந்த ஆனந்த லயிப்புதான் என்கிறார். இதனால்தான் ஞானத்தில் திளைத்த ஆதி சங்கரரும் “பஜ கோவிந்தம்” என்று பக்திப் பரவச நிலை பற்றிப் பேசுகிறார். வைணவக்குரவர்கள் (பூர்வாச்சாரியர்) ஞானத்தில் இறைவனைக் கண்டு அனுபவித்தாலும் ஆழ்வார்கள் அனுபவித்த பக்தி பரவச நிலையே இறைச் சரணுக்கு ஏதுவானது என்பது மணவாளரின் துணிபு. காதல் முழுமையடையும்போது, “எனக்கு தேனே பாலே கன்னலமுதே திருமாலிருஞ்சோலைக்கோனே” என்று இறைவன் பக்கம் முழுச் சரணம் சாத்தியமாகும்.

அர்சாவதாரத்தின் அருமையை ஸ்ரீ மணவாளர் ஒரு அழகான உவமையால் எடுத்துச் சொல்கிறார்: “பூகத ஜலம் போலே அந்தர்யாமீத்வம்; வரண ஜலம் போலே பரத்வம்; பாற்கடல் போலே வ்யூஹம்; பெருக்காறு போலே விபவங்கள்; அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்”நல்ல தாகம் உள்ள ஒருவனுக்கு, பாறைக்குள் (மண்ணிற்குள்) ஒளிந்திருக்கும் தண்ணீரால் என்ன பயன்? இல்லை, அண்டத்திற்கு வெளியே பரவி இருக்கும் நீரணுவால் என்ன பயன்? அண்டதில் உள்ள பாற்கடலால் கூட என்ன பயன்? பிரவாகமாகப் பரவி ஓடும் காட்டாற்றால் என்ன பயன்? இவைகளிலிருந்து அவனது தாகம் அடங்கப் போவதில்லை. ஆயின், மழை பெய்து சேர்ந்திருக்கும் மடுக்களிலிருந்து குடிக்க தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம்தானே!

கல்லினுள் நீர் போல் உள்ளது அந்தர்யாமித்துவம். இறைவன் எல்லாருள்ளும் உள்ளான் என்று பார்க்கும் பார்வை அவ்வளவு எளிதாக வந்து விடுகிறதா? அப்படியிருந்தால் இன்று உலகம் எப்படி இருக்கும்! “பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!! பகைவனுக்கருள்வாய்” என்று நம் நெஞ்சிடம் மன்றாட அல்லவோ வேண்டியுள்ளது! பாட வந்த வள்ளலாரும் “ஒருமையுடன் நினது திருவடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்கிறார். அந்தர்யாமியைக் காண பொறுமை எங்கே உள்ளது? “வேகம் தடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க!” என்கிறார் மாணிக்க வாசகர். வேகம் அதிகம் உள்ள இவ்வுலகில் கல்லினுள் உள்ள நீர் போல் இருந்தால் இறைவனை ரசிக்க முடியுமோ?

அண்டத்திற்கு வெளியேயுள்ள நீரணுவாக (hydrogen) உள்ளது பரத்துவம்! அதிலிருந்துதான் சூரியன் முதலான கோள்கள் சக்தி பெறுகின்றன என்றாலும் அந்த நீரால் விடாய் தீர்க்க முடிவதில்லை. அதாவது, இந்நிலையை மனது கிரகிப்பதில்லை.

அண்டத்திற்குள் உள்ளதுதான் பாற்கடல். இந்த பாற்கடல் (Milky way) மிகப் பெரியது. அது போல்தான் திருமாலின் வியூகம். இப்படி விஸ்வரூபம் காட்டியபோது, விஜயனால் கண்டு ரசிக்க முடியவில்லை. பயந்துவிட்டான். ஆனால், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே நண்பனாய் வந்த போதுதான் அவனால் காண்டீபம் தூக்க முடிந்தது. யசோதை மிரண்டு விடவில்லையா? தாமோதரனாக இடுப்பில் கயறு கட்டுண்ணப்பண்ணும் சிறுவனாக வந்த போதுதானே அவளால் கண்ணனிடம் நெருங்க முடிந்தது. மிரட்டுபவனாக இறைவன் இருந்தால் என்ன பயன்? “அன்பும் சிவமும் வேறு, வேறு என்பர் அறிவிலார்” என்பது திருமூலம்.

பெரிய காட்டாறு போலே இராம கிருஷ்ண விபவங்கள். இந்த அவதாரங்கள் இப்போது இல்லை. அதனால் உடன் பயன் இல்லை.

ஆனால், மண்டியிருக்கும் மடுக்கள் போல் உள்ளன அர்ச்சாவதாரம். இதனால் உடன் பயன் உண்டு. கோவிலில் போய் மனமுருகி அழும் போது, மனது இலகுவாகிறது. பகைமை உணர்வு போய் விடுகிறது. வாழ்வில் லயிப்பு உண்டாகிறது. பிள்ளை, குட்டிகள் மேல் பாசம் வளர்கிறது. வாழத் தோன்றுகிறது!

இதை உணர்ந்துதான் ஆழ்வார்களும், “காதல் கடல் புரைய விளைவித்த காரமர்மேனி” என்று அர்ச்சாவதாரப் பெருமாளை, அவன் திருமேனியை இரசிக்கின்றனர். “என்னைத் தீமனம் கெடுத்தாய்” “மருவித்தொழும் மனமே தந்தாய்” என்று இறைவன் தனக்குச் செய்த நல்லவகைகளை எண்ணி மகிழ்ந்தும், அவன் திருவடிகளில் தான் பண்ணும் கைங்கர்யங்களில் உவப்பும், அதனால் அவனுக்கு உண்டாகின்ற மகிழ்வைக்கண்டு தனக்கு உண்டாகின்ற உவப்புமே பலனாக அமைகிறது என்று காட்டிச் சென்றனர்.

அடுத்தமுறை கோவில் செல்லும்போது இதுவே நமது மனோனிலையாகட்டும்!

மடல் 059: வானம் வசப்படும்!!

First published on: Tue, 02 Nov 1999 10:27:54 -0800

அந்தக் குழந்தையின் அன்பு அன்று கிடைத்தது. ரொம்ப சூட்டிகையான குழந்தை அது. வாய் கொள்ளாச் சிரிப்பு. சகலரையும் மயக்கும் வசீகரம். பாலகிருஷ்ணன் போல் அடிக்கடி கால் விரலை வாயில் கொண்டு வந்து வைத்துக் கொண்டது. ஆலிலைக் கிருஷ்ணனை நேரில் பார்த்தது போன்ற பிரமை. குழந்தையைக் கண்டு மயங்காமல் இருக்க முடியுமா என்ன? ஆனானப் பட்ட வள்ளுவரே, குழல் இனிதோ, யாழ் இனிதோ, மழலைச் சொல் இனிதோ என்று மயங்கிக் கிடக்கிறார் (ஏனோ பாவம்! இந்த பாசமுள்ள தந்தையை, சாமியார் கோலத்தில் வரைந்து, வழி படுகிறோம்!!). இப்படிப் பட்ட குழந்தை தமிழ் வைணவத்தில் இறைவனின் குறியீடு. நாலாயிரம் பாடிய ஆழ்வார்கள், மயங்கி, சொக்கிப் போனது இந்த குழந்தைக் குறியீட்டில்தான்.

அது ஏன் அப்படி? ஆராய்வோம்!

குழந்தை ஆரம்பத்தின் அறிகுறி! எழுதப் படாத பலகை! சமூகத்தின் மடமைகள், கருத்துக்கள் உரு ஏறாத வெகுளித் தனத்தின் வெளியீடு! எல்லாவற்றையும் விட அழகின் அறிகுறி! குழந்தைப் பேறு இல்லாதது இன்றும் பழமையான சமூகங்களில் ஒரு குறையாகவே பார்க்கப் படுகிறது. குழந்தை இல்லாதது பெரும் தவறு அல்ல. குழந்தை இல்லாதது, பிள்ளைப் பருவ அனுபவங்களை இரசிக்க முடியாத ஒரு அவலம் என்று கணிக்கப் படுவதால் இந்த மாதிரி பார்க்கப் படுகிறது. குழந்தை இருக்கும் வீட்டில், கல, கலப்பும், காருண்யமும் யார் கேட்காமலே வந்து சேர்கிறது.

இப்படிச் சொல்வதால், குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு, இந்த மெல்லிய மனம் இல்லை என்று அர்த்தம் இல்லை. எனக்குத் தெரிந்து குழந்தை இல்லாத பல பெற்றோர்கள் தேனினும் இனியவர்களாக உள்ளார்கள். மெல்லிய உணர்வுக்கு விருந்தளிக்கும் இயற்கையின் பரிசு குழந்தை என்று சொல்லலாம்.

சாம்பல் முடிவின் குறி என்றால், குழந்தை வாழ்தலின் அறிகுறி! வாழச் சொல்லும் இயற்கையின் உந்துதல். எத்தனையோ கஷ்டங்களிலும், பெற்ற பிள்ளைக்காக உயிரைப் பிடித்துக் கொண்டு வாழ்ந்து, வெற்றி காணும் பெற்றோர்கள் இல்லையா? எனவே குழந்தை என்பது வாழ்தலின் குறியீடு.

வாழ்வை மிகச் சிறப்பாகக் காண்கிறது வைணவம். வாழ்தலின் சிறப்பை பல்வேறு பாசுரங்களில் தெளிவாகக் காணலாம்.

சுத்த மெய்ஞானத் தெளிவுடன் யோகிஸ்வரராய் பிறந்த 16 வருடங்கள் சாமியாராய் வீற்றிருக்கிறார் நம்மாழ்வார். அவர் வாய் மொழிந்த முதல் சொல் கூட விரக்தியாய் வந்தது போல்த்தான் படுகிறது, "செத்ததின் வயிற்றில் சின்னது பிறந்தால், எத்தைத் தின்று, எங்கே கிடக்கும்?" இது மதுரகவியின் கேள்வி. நம்மாழ்வார் சொல்கிறார், "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்!" சரி, இங்கு வறட்சியான தத்துவம் மலர்கிறது என்று எண்ணலாம். ஆனால், நம்மாழ்வார் வாழ்ந்த காலத்தில் நடந்தது வேறு! பாசுரங்கள் சொல்லிக் கொண்டு வருகிறார், மதுரகவி தொடர்ந்து அதை பதிப்பித்து வருகிறார். கண்ணனின் பிள்ளைப் பருவத்தைப் பாடத் துணியும் சடகோபன் கண்ணனின் எளிமை கண்டு மெய் சிலிர்க்கிறார். சகலத்தையும் படைத்து, காத்து, கெடுத்து உழலும் ஒரு சக்தி, கள்ளம் கபடம் அற்ற குழந்தையாய், தாயின் கோபத்திற்கு பயந்து வயிற்றில் கயிறின் தடம் பதிந்து தாமோதனாய் நிற்கிறது. இதை எப்படிப் பாடுவது? இந்த எளிமையை, இந்த காருண்யத்தை, இந்த மென்மையை, இந்த செளலப்பியத்தை எப்படிப் பாடுவது? (நம்மாழ்வாரின் கதை பின்னால் தொடர்கிறது)

"எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா! என்று அழைக்க, என்ன தவம் செய்தாய், யசோதை" என்று பாடுவதில்லையா? இறைமையின் பேராற்றலை மறைத்து, கைக்கு கிடைக்கும் அரிய வஸ்துவாய் அமைவதுதான் குழந்தை. அணு சக்தியின் வெளிப்பாடுதான் சூரியன். கிட்ட நெருங்க முடியுமோ? ஆனால் அந்த அணுச் சக்தியை, மின் சக்தியாக்கி, வீட்டில் வளைய விடும் போது அதை அனுபவிக்க முடிகிறது. இதுதான் கண்ணனின் தத்துவம். அவன் கைக்குழந்தையாக வருவது, நம் கைக்குள் அகப்படும் கடவுள் என்ற நம்பிக்கையைத் தருவதற்காக. வானம் வசப்படுமா? என்று பாரதி கேட்கவில்லையா? வானம் வசப்படும் என்பதின் குறியீடுதான் பாலகிருஷ்ணன்.

சரி, என் கதைக்கு வருவோம்!

குட்டி கிருஷ்ணனும், நானும் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது கையில் கிடைத்தது, ஒரு மல்டிவிட்டமின் மாத்திரை கொள்ளும் நீள டப்பா! அதை குழந்தை உருட்டி விடும். தொப்பென்று அது மெத்தையிலிருந்து விழும். நான் தொப், தொப் என்று சொல்லிக் கொண்டு டப்பாவைத் திருப்பித் தர வேண்டும். ஒவ்வொரு முறையும் முத்துக் குடம் உதிர்வது போல் ஒரு சிரிப்பு. சளைக்காமல் சிரித்தது குழந்தை. ஒவ்வொரு முறையும். எனக்குக் கவலை! புரை ஏறி விடப் போகிறதே என்று! சிரிக்கும் குழந்தை புரை ஏறி அவஸ்தைப் பட்டால் எப்படி காணச் சகிப்பது? குழந்தை சிரிப்பை நிறுத்தினால் தேவலை என்று தோன்றியது. நான் கொள்ளும் ஆனந்தம் தடைப் பட்டாலும் பரவாயில்லை குழந்தையின் கொல்! சிரிப்பு நின்றால் தேவலை என்று ஆகிவிட்டது. எப்படி நிறுத்துவது என்றுதான் தெரியவில்லை. என் கண்ணே படாமல் குழந்தைக்கு காப்பு இடவேண்டும்.
சட்டென, திருவில்லிப்புத்தூர் பட்டர்பிரான் ஞாபகம் வந்தது. இந்த மனிதர் ஆழ்வாராதிகளில் கடைசியாக வந்தவர். ஆனால் இவர் செய்வித்த பாசுரம் எல்லாவற்றிற்கும் முதலாவதாக சேவிக்கப் படுகிறது. அது எப்படி?

பட்டர்பிரானின் பாவம்! அதுதான் அதன் சிறப்பு. லட்சுமி சமேதராய், ஜெகத் ஜோதியாய் கருட வாகனத்தில் பெருமாள் தோன்றி விடுகிறார். மதுரையே, பிரம்மிப்பில் நிற்கிறது. அந்த செளந்தர்யம், அந்த ஜொலிப்பு, அந்த கடாட்சம்...அடடா! என்ன சொல்ல. திருமால் என்பதில் "மால்" என்றால் மயக்குபவன் என்றுதானே பொருள். உலகே மயங்கிக் கிடக்க, யசோதை பாவத்தில் இருக்கும் பட்டர்பிரானுக்கு தாயின் அவஸ்தை! இந்த அழகுக் களஞ்சியமாக இருக்கும் பிரானுக்கு கண் பட்டுவிடாதோ? அவர் பாட்டுக்கு, சட்டென தோன்றிவிட்டார். இவன் காருண்யத்தைக் கண்டு என் கண்ணே பட்டுவிடுமோ? குழந்தைக்கு ஐம்படைத் தாலி போட்டு, காப்பு செய்வது பண்டைய தமிழ் மரபு. இவனுக்கு காப்பு இட வேண்டாமோ? இவன் சிரிப்பையும், இவன் செளலப்பியத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்தான், ஆனால் பெருமாளுக்கு ஏதாவது ஆகிவிடாதோ? காப்பு இட வேண்டும் என்று துடிக்கிறது பெரியாழ்வாரின் இதயம். பாடத் தொடங்கிவிடுகிறார்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்வித்திருக்காப்பு
மிக, மிக அருமையான பாசுரம். பல்லாண்டு என்று சொன்னாலே கணக்கிற்கு வராத என்று பொருள் கொள்ளலாம். அப்படி இருக்க பல்லாண்டை பல மடங்காகப் பெருக்கிறார். பல கோடி என்கிறார், காணாது என்று பட்டு, பலகோடி நூறாயிரம் என்றும் சொல்கிறார். மனிதர் துடித்துப் போயிருப்பது வார்த்தைகளில் தெரிகிறது! சாதாரணமாக, நூறு, ஆயிரம் என்றால் அதன் நீட்சி புரியும். ஆயிரத்திற்கு மேலுள்ள எந்த எண்ணும் மூளையில் ஒரு தெளிவான காட்சியைத் தருவதில்லை. கோடி என்றால் என்ன? அடிக்கிக் கொண்டு போகும் சைபர்களின் பொருள் என்ன? ஜென் கோயன் செய்வது போல் மூளையை ஸ்தம்பிக்க வைக்கிறது. பெரியாழ்வார் அதே உத்தியைக் கையாள்கிறார். இறைமைக்கு காப்பு சொல்லப் புறப்படும் போது, ஒரு நூறு ஆண்டுகள் போதும் என்று சொல்லிவிட முடியுமோ? ஆதியும், அந்தமும் இல்லாமல் எக்காலத்திலும் இருக்கும் பரம்பொருளுக்கு மனிதக் கணக்கில் எத்தனை ஆண்டுகள் சொல்ல முடியும்? முடியாது என்று நம் பட்டருக்குத் தெரியாதா என்ன? அதுதான் அடிக்கிக் கொண்டே போகிறார். மூளை ஸ்தம்பிக்கும் வரை.

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுட
ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே!
இறைவனின் அடியார்களோடும், இறைமையின் லயிப்போடும் இருக்க வேண்டும் என்பதுதான் உள்ளூர ஆசை. இது எத்தனை ஆண்டுகளுக்கு இருக்க வேண்டும்? ஆசை யாரை விட்டது. முடிவில்லாப் பேரழகுள்ள இறைவனுடன் முடிவில்லாமல் லயித்து இருப்பதில்தான் ஆனந்தம்.
இப்படித்தான் ஆரம்பிக்கிறது தமிழ் வைணவம்!! முதல் பாடலே பொருளில் நிறைந்து, மனத்தை மயக்கி, இறைமையில் லயிப்பில் ஆழ்த்துவதாக அமைவதால்தான் அதை ஈத்த பட்டர்பிரான் "பெரிய" ஆழ்வார் ஆகிவிடுகிறார்.

சரி, சடகோபனுக்கு மீண்டும் வருவோம்! அவர் சடத்தைப் பற்றி ஏதோ சொன்னாரே? அவர் சாமியாரா? எப்படி இருக்க முடியும்? தமிழ் வைணவத்தின் பிதாமகராச்சே! அவரும் பெரியாழ்வார் சொல்லும் கருத்தைத்தான் வேறு வார்த்தைகளில் சொல்கிறார். அதாவது, அணுவிற்கும், அணுவாயுள்ள ஜீவ சக்தியாகிய "சின்னது", செத்து, பிறந்து, பின் செத்து ஒரு சுழற்சியில் உள்ள உடல் என்னும் ஊடகத்தில் நுழைந்த பின் எதைத் தின்று, எப்படி வாழும்? தெரியவில்லை? பரம்பொருளான அமிர்தத்தை உண்டு, அப்படியே வாழும்! அதாவது, இறை லயிப்பில் ஆட்பட்டு, அதுவே உணவாக அப்படியே தன் வாழ்வை ஓட்டும் என்பதுதான் நம்மாழ்வாரின் உட்கிடக்கை. அப்படி இல்லையெனில், இறைமையின் எளிமையைச் சொல்லப் புகும் நம்மாழ்வார், ஆறு மாத காலம், அடுத்த வரி சொல்லாமல் லயித்துப் போயிருப்பாரோ? அவர்தான் சரி, கேட்டுக் கொண்டு வரும் மதுரகவியாவது இடைவெளி கிடைத்ததே என்று வயக்காட்டிற்கு போனாரோ? அதுவும் இல்லை, குருவிற்கேத்த சிஷ்யர். அடுத்த வரி வரும் வரை இவரும் குரு லயிப்பில்!!

இது நம் பாரம்பரியம். இதை நினைத்து நாம் பேருவகை கொள்வோம்.

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்
ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழி வழி ஆட் செய்கின்றோம் திரு
வோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி
அரியையழித்தவனை
பந்தனைதீரப் பல்லாண்டு பல்லாயிரத்
தாண்டென்றுபாடுதமே!

பல்லாண்டு, பல்லாண்டு - மும்பாய் சகோதரிகள்

மடல் 60: அவள் தந்த பார்வை!


Date of publication: Sun, 14 Nov 1999 17:27:17 -0800

பாசுர மடல்களின் தோற்றம் விந்தையானது.

வைணவ மெய்யடியார்கள் இராமாயணம், பாகவதம், திருவாய்மொழி போன்ற தெய்வீக நூல்களில் கயிறு சாற்றி திருமாளின் திருவுள்ளத்தை அறிந்து கொள்ளும் வழக்கம் ஒன்று உண்டு. இதற்கு கயிறு சாற்றுதல் என்று பெயர். அன்றொரு மாலை. கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன். அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் திருவாய்மொழி ஈடு என்னை அழைத்தது. ஒரு புத்தகத்தை எடுத்துத் திறந்தேன். அது திருவாய்மொழி ஆறாம் பத்திலுள்ள இரண்டாந் திருவாய்மொழியின் முதல் பாடல். "மின்னிடை மடவார்" என்று ஆரம்பிக்கும் பாசுரம். பாடலை வாசித்து விட்டு ஈடு (வடக்குத் திருவீதிப் பிள்ளை அருளிய முப்பதாயிரப்படி என்னும் வைணவ வியாக்கியானம்) என்ன சொல்கிறது என்று அறியும் முன்பு கோயிலுக்கான அழைப்பு வந்து விட்டது.

கோயில் என்றால் ஏதோ மாட மாளிகை, கூட கோபுரங்கள் என்று எண்ண வேண்டாம். தஞ்சம் புகுந்தவன் வழிபடும் தலம் தாராளமாகவா இருக்கப் போகிறது. தமிழக பாஷையில் பஜனை மடம் போன்ற அறை. ஆனால் பஜனை மடம் மட்டுமன்று அது. பக்தி பூர்வமாக
50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வழிபடும் தலம் அது. கர்ம, சிஷ்டையாக அதற்கு பூஜை செய்ய ஆகம விதிகள் அறிந்த குருக்கள் உண்டு. முதல் முறை போகிறேன். என்ன பெருமாள்? என்று தெரியாது. நடை சாத்தி இருந்தது. மக்கள் பக்திப் பரவசத்துடன் பாக்னாங் மீனாட்சி என்று சொல்லி பாடிக் கொண்டிருந்தார்கள். நானோ மதுரை சாமி. மதுரை என்றாலே அது மீனாட்சி பட்டணம் என்று பெயர். மீனாட்சி என்பவள் மதுரையைப் பொறுத்தவரை வெறும் உமையவள் மட்டுமன்று. அவள் வைஷ்ணவி தேவி என்ற வைஷ்ணவ தந்திரமுண்டு (இது பெரும்பாலோருக்குத் தெரியாது). அவள் எங்கள் அன்னை. அவள் கடைக் கண் ஆட்சியில்தான் உலகமே தளிர்க்கிறது. அப்படி இருக்க இது என்ன புதுசாக "பாக்னாங் மீனாட்சி" என்று சந்தேகப்படும் போது நடை திறந்தது. கையில் கிளி கொஞ்ச என் அன்னை. உடல் சிலிர்த்து விட்டது. கண்கள் பனித்து விட்டன.

இது போதாது என்று, ஒரு பெண்ணிற்கு அருள் வந்துவிட்டது அன்று. சாமியாடிகளைப் பார்த்து வருஷமாச்சு. எனக்கு ஊள்ளூர ஒரு சின்ன பயம்! அன்று சாமியாடிய பெண் பெரிய அழகி என்று சொல்வதற்கில்லை. சாதாரணத்திலும், சாதாரணம். கண்களை மூடித் தியானித்திருந்த என்னை கோவில் நிர்வாகஸ்தர் மெதுவாகத் தொட்டார். முழித்த போது "சாமி அழைக்கிறது" என்றார். போகாவிட்டால் தெய்வக் குற்றம். போனாலோ குற்றம் குறை என்று ஏதாவது கண்டு சொல்லிவிட்டால் தர்மசங்கடம். தவறு செய்யாத மனிதன் யார்? குற்ற உணர்வு இல்லாத பேர்தான் எத்தனை? இத்தனை குழப்பத்துடன் போய் முன் உட்கார்ந்தேன். அப்போது அவள் பார்த்த பார்வை!

நண்பர்களே கேளுங்கள்! அது தெய்வீகப் பார்வை. இத்தனை அழகு அவளுக்கு இந்த கொஞ்ச நேரத்தில் எப்படி வந்தது? இவள் கண்கள் ஏன் என் உள்ளத்தைத் துளைத்து, உள்ளே குடி கொள்ளும் நேச உணர்வை இப்படித் தூண்டுகிறது? எத்தனை ஜென்ம, ஜென்மாந்திர உறவின் காதல் பார்வை அது. எத்தனை கோடி, கோடி கல்ப யுகங்களாக என்னை அறிந்திருந்தால் இவள் இப்படிப் பார்ப்பாள்? கண்கள் கலங்க நான் பார்க்க அவள் வெறும் குங்கும பிரசாதம் கொடுத்து அனுப்பி விட்டாள். அவள் பார்வைதான் அன்று என் பரிசு. மெதுவாக வீடு வந்து ஈடு வாசித்தேன். நம்மாழ்வாரின் அனுபவம் இதோ!

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியதுகொண்டு செய்வதேன்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!

தமிழ் இலக்கியப் பரிச்சியமுள்ளவர்களுக்கு எளிதாகப் புரியும் பாடல் இது. ஒரு பண்டைய, பெரிய மரபின் நீட்சியாக விழுகிறது இப்பாடல். சங்கப் பாடல்களில் தலைவன், தலைவி உரைப்பதாக அமையும் பாடல்கள் அதிகம். அதனால்தான் சங்கப் பாடல்களை ஆங்கிலத்தில் உரைத்த ஏ.கே.இராமானுஜன் அவைகளுக்கு "Poems of Love and War" என்று பெயர் வைத்தார். பக்தி இலக்கியம் செய்ய வந்த ஆழ்வார்கள் இந்த மரபை அப்படியே தழுவிக் கொள்கின்றனர்.

கேசவனையே செவிகள் கேட்க; திருவரங்கத்
தீசனையே சென்னி இறைஞ்சிடுக;-நேசமுடன்
கண்ணனையே காண்க-இருகண்; இணங்கொள் காயாம்பூ
வண்ணனையே வாழ்த்துக-என்வாய்


என்ற ரீதியில் திருவரங்கத்து ஈசனையே காதலனாகக் கொண்டு, தங்களை காதலியாகக் கொண்டு விரகக் கவிதைகள் யாத்தனர். மேலோட்டமாக காதலன், காதலி பேச்சு மொழி போல் தெரிந்தாலும், உள்ளார்த்தமாக அது பேசுவது ஜீவனாகிய நமக்கும், நம்மை ஆட்கொண்டு தளிர்ப்பிக்கும் ஜீவகாருண்யனான இறைவனுக்குமுள்ள உறவின் ஆழத்தை, அதன் ஏக்கத்தை, அதன் தவிப்பை, அதன் காதலை வெளிப்படுத்துவதாகும்.

கண்ணன் கோகுலத்தில் கோபியருடன் ஆடும் கேளிக்கை மிகுந்த "ராச லீலை" அனைவருக்கும் தெரியும். கோபியர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜீவன்கள். இறைவன் என்னை ஆட்கொள்ள மாட்டானா? என் துக்கம் எல்லாம் போகும் வண்ணம் என்னுடன் புணர மாட்டானா? சோகமற்ற ஒரு பொழுதேனும் வாழ்வில் எனக்கு வாய்க்காதா? என்று தங்கப்படும் ஜீவன்கள். இறைவன் காருண்யமிக்கவனாக உள்ளதால், இச்ஜீவன்களை ஆட்கொண்டு உன்மத்தப் படுத்தும் பொழுதுகள்தான் "ராச லீலை" என்பது. அது ஒரு அனுபூதி நிலையின் குறியீடு. இது வெறும் காதல் விளையாட்டு என்றால் சிவபுரத்து ஈசன் ஏன் தன்னிடம் தஞ்சம் புகுந்த நரசிம்ம மேத்தா என்ற சிறுவனுக்கு கண்ணனின் ராசலீலையைக் காட்ட வேண்டும்? காதல் புரியும் வயதா அவனுக்கு? ஆனால் நரசிம்ம மேத்தாவிற்கு வைணவன் என்றால் யார் என்பது அன்று புரிந்து விட்டது (பின்னால் இவர் பாடல்தான் (வைஷ்ணவ ஜனதோ!)காந்தித் தாத்தாவால் இந்தியா முழுவதும் பரப்பப் பட்டது).

நம்மாழ்வாருக்கும் அது புரியும். அதனால்தான் காதலியாக உள்ள அவர் சொல்கிறார், "மின்னல் போன்ற இடையுடைய பெண்கள் உன் அருளைப் பெறுவதற்குக் காத்து இருப்பர், அவர்கள் படுகின்ற துன்பத்தை நீ அறிந்து படுகின்ற துன்பத்தை நான் அறிவேன். அரண் நிறைந்த இராவணன் மாளிகையை நீறாகச் செய்த மாயவனே, உனது சுண்டாயம் (விளையாட்டு) நான் அறிவேன். நீ கிளம்ப ஆயத்தப் படுமுன், என் விளையாட்டுச் சாமான்களை (கழல்- அம்மானை ஆடும் காய்) மறக்காமல் வைத்து விட்டுப் போ, நம்பீ!" என்கிறார்.

இப்பாடலுக்கு பக்கம், பக்கமாகப் போகிறது வைணவ வியாக்கியானம். நம்மாழ்வார் இங்கு ஞானி என்ற ஸ்திதியில் இல்லாமல் பக்தன் என்ற நிலையில் நின்று, பக்தர்கள் படும் அவதியைச் சொல்கிறார். நமக்கும் காட்சி கிடைக்காதா என்று நாம் எல்லோரும்தான் ஏங்குகிறோம். வருகின்ற அருள் நின்று நிலைத்து என்றும் இருக்காதோ? வருவதும் தெரிவதில்லை, போவதும் தெரிவதில்லை. கவியரசர் தாகூர் எழுதுவார். உனக்காக இரவிரவாய் விழித்திருந்த காலமுண்டு. கண்கள் சோர்ந்த இமைப் பொழுதில் என் வீடு வந்து போவதின் கொடுமை என்னவோ? என்று. அதுபோன்ற அவதிதான் இதுவும்.

ஆதிமூலமே! என்று குரல் கொடுத்த யானைக்கு அருள அடித்துப் புரண்டு கொண்டு அவன் வரவில்லையா? ஐந்து புருசன்மார் இருக்க, கோவிந்தா! என்று சபையில் அழைத்த பாஞ்சாலிக்காக சடுதியில் ஓடி வரவில்லையா? அதுபோல் நான் கூப்பிடும் குரலுக்கும் அவன் ஏன் வருவதில்லை என்பது நம் எல்லோரின் உள்ளக் கிடக்கைதானே?

"வந்ததுதான் வந்தான், நமக்காக ஒரு பொழுது செலுத்துவான் என்றால் அவன் மற்ற பெண்டிரை (ஜீவன்களை) மனத்தில் வைத்திருக்கிறான். இவன் நம்மைப் பிரிந்த பின்பு சிலரோடு கலந்தான், அவர்களையும் பிரிந்தான், அவ்வாற்றாமையோடு இங்கு வந்தான், எங்களை விளையாட்டுப் பொருள்கள் போல் மயக்கினான், இது நம்பிச் செய்யக் கூடிய ஆசையில்லை என்று தெரிந்தும் கோபம் கொள்ளலாமென்றால் தன்னழகாலும், குணங்களாலும், தன் செல்லாமையாலும், தாழ்ச்சி களாலும் ஜீவன்களின் ஊடலைத் தீர்த்து கலந்து நிற்கிறான்" என்று நீள்கிறது ஈடு.

இந்த வியாக்கியானத்தோடு ஒத்துப் போகும் சங்கப் பாடல்கள் உண்டு. வள்ளுவர் சொல்கிறார்:

"ஊடற்கட் சென்றேன்மன் தோழி யதுமறந்து
கூடற்கட் சென்றதென் நெஞ்சு!"


அச்சாக இதையே சொல்கிறது, கலித்தொகைப் பாடலொன்று,

"ஊடுவேன் என்பேன்மன் அந்நிலையே அவர்காணின்
கூடுவேன் என்னுமிக் கொள்கையில் நெஞ்சே!"


சங்கப் பாடல்கள் வரை காதலன்-காதலி பேச்சு உண்மையான காதலன் காதலி பேச்சுத்தான். பக்தி இலக்கியம் வந்தபின்பு இம்மானுடக் காதல் ஒரு புது மெருகு பெருகிறது. வெறும் ஆடு, மாடு வெட்டும் சாமிச் சடங்குகள் எப்படி மெய் அனுபூதி கொள்ளும் மெய்ஞானமாக பின்னால் மலர்கிறதோ, அதுபோல் வெறும் காதல், தெய்வீகக் காதலாக மாறுகிறது. சமய சித்தாந்த, வேதாந்தங்களைக் கடந்து மெய்ஞான ரசத்தில் குளித்து, வெளி வந்து அருளிச் செய்யும் போது அக்கருத்து சமயாதீதமாகிறது! அதைத் தரும் பெரும் ஆற்றலை தனிப் பெருங்கருணையாகத்தான் காணவேண்டியுள்ளது. அதுபோல், பக்தி உள்ளத்தில் ஊறித்ததும்பும் போது காதலின் உன்னத நிலை அடைகிறது. அதனால் பக்தி என்பது "காதலீதமாகும்" (காதல்+அதீதம்).

இந்த அனுபூதி நிலையில் வெளிப்படும் காட்சிகளை சாதாரண அர்த்தத்தில் புரிந்து கொள்வது மடமையாகும். உருவகமாக வெளிப்படும் காட்சிகளை உண்மை என்று நம்பி மயங்குதல் சரியோ? கண்ணன் ராச லீலை செய்தான் என்று சொல்லி நாமும் பெண்கள் பின்னால் ஓடினால் அது தகுமோ? பெண் என்பதை நம்மாழ்வாரும் மற்ற ஆழ்வார்களும் உருவகப் படுத்துகின்றனர். பெண்ணின் பாவத்தில் படும் அவஸ்தைகள், ரச உணர்வுகள், புணர்வு இவை அனைத்தும் ஒரு ஆன்ம கீதம் என்றுதான் கொள்ளவேண்டும். அதனால் தான் நோபல் நாயகரின் பாடல்களுக்கு கீதாஞ்சலி என்று பெயர் வந்தது. ஆன்ம கீதத்தின் மூலமாக இறைவனிடம் இறைஞ்சுவதுதான் பக்தி. இதை மிகச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று காட்டுவனதான் நம் முன்னோர்களின் சரித்திரம். தன் வாழ் நாளில் மானிடப் புணர்வை அறியாத நம்மாழ்வார் போன்ற ஞானிகள் பேசும் காதல், காதலீத வகையைச் சார்ந்தவை. சிறுவனான நரசிம்ம மேத்தா பார்த்த ராச லீலை ஆன்ம-பரமார்த்த உறவின் உருவகமாகும். இதுதான் பக்தி இலக்கியங்கள் காட்டும் பாதையாகும்.

பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே
திரிந்துழலும் சிந்தனையார் தம்மை-புரிந்தொருகால்
ஆ ஆ ! என இரங்கார் அந்தோ! வலிதே கொல்?
மாவாய் பிளந்தார் மனம்.
(பெரிய திருவந்தாதி 50)

இறை அனுபூதி பெற்று வாழ்பவர்கள் (அதாவது, உன்னைக் கலந்து பிரிந்தார்) பிரிந்து ஒன்று நோக்காது, எல்லாக் காலங்களிலும் இறை உணர்வுடனே இருப்பர் என்பதுதான் காதலீதத்தின் சாரம். அது புரியாதவரை எல்லாக் குழப்பமும் உண்டு.