e-mozi

மடல் 059: வானம் வசப்படும்!!

First published on: Tue, 02 Nov 1999 10:27:54 -0800

அந்தக் குழந்தையின் அன்பு அன்று கிடைத்தது. ரொம்ப சூட்டிகையான குழந்தை அது. வாய் கொள்ளாச் சிரிப்பு. சகலரையும் மயக்கும் வசீகரம். பாலகிருஷ்ணன் போல் அடிக்கடி கால் விரலை வாயில் கொண்டு வந்து வைத்துக் கொண்டது. ஆலிலைக் கிருஷ்ணனை நேரில் பார்த்தது போன்ற பிரமை. குழந்தையைக் கண்டு மயங்காமல் இருக்க முடியுமா என்ன? ஆனானப் பட்ட வள்ளுவரே, குழல் இனிதோ, யாழ் இனிதோ, மழலைச் சொல் இனிதோ என்று மயங்கிக் கிடக்கிறார் (ஏனோ பாவம்! இந்த பாசமுள்ள தந்தையை, சாமியார் கோலத்தில் வரைந்து, வழி படுகிறோம்!!). இப்படிப் பட்ட குழந்தை தமிழ் வைணவத்தில் இறைவனின் குறியீடு. நாலாயிரம் பாடிய ஆழ்வார்கள், மயங்கி, சொக்கிப் போனது இந்த குழந்தைக் குறியீட்டில்தான்.

அது ஏன் அப்படி? ஆராய்வோம்!

குழந்தை ஆரம்பத்தின் அறிகுறி! எழுதப் படாத பலகை! சமூகத்தின் மடமைகள், கருத்துக்கள் உரு ஏறாத வெகுளித் தனத்தின் வெளியீடு! எல்லாவற்றையும் விட அழகின் அறிகுறி! குழந்தைப் பேறு இல்லாதது இன்றும் பழமையான சமூகங்களில் ஒரு குறையாகவே பார்க்கப் படுகிறது. குழந்தை இல்லாதது பெரும் தவறு அல்ல. குழந்தை இல்லாதது, பிள்ளைப் பருவ அனுபவங்களை இரசிக்க முடியாத ஒரு அவலம் என்று கணிக்கப் படுவதால் இந்த மாதிரி பார்க்கப் படுகிறது. குழந்தை இருக்கும் வீட்டில், கல, கலப்பும், காருண்யமும் யார் கேட்காமலே வந்து சேர்கிறது.

இப்படிச் சொல்வதால், குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு, இந்த மெல்லிய மனம் இல்லை என்று அர்த்தம் இல்லை. எனக்குத் தெரிந்து குழந்தை இல்லாத பல பெற்றோர்கள் தேனினும் இனியவர்களாக உள்ளார்கள். மெல்லிய உணர்வுக்கு விருந்தளிக்கும் இயற்கையின் பரிசு குழந்தை என்று சொல்லலாம்.

சாம்பல் முடிவின் குறி என்றால், குழந்தை வாழ்தலின் அறிகுறி! வாழச் சொல்லும் இயற்கையின் உந்துதல். எத்தனையோ கஷ்டங்களிலும், பெற்ற பிள்ளைக்காக உயிரைப் பிடித்துக் கொண்டு வாழ்ந்து, வெற்றி காணும் பெற்றோர்கள் இல்லையா? எனவே குழந்தை என்பது வாழ்தலின் குறியீடு.

வாழ்வை மிகச் சிறப்பாகக் காண்கிறது வைணவம். வாழ்தலின் சிறப்பை பல்வேறு பாசுரங்களில் தெளிவாகக் காணலாம்.

சுத்த மெய்ஞானத் தெளிவுடன் யோகிஸ்வரராய் பிறந்த 16 வருடங்கள் சாமியாராய் வீற்றிருக்கிறார் நம்மாழ்வார். அவர் வாய் மொழிந்த முதல் சொல் கூட விரக்தியாய் வந்தது போல்த்தான் படுகிறது, "செத்ததின் வயிற்றில் சின்னது பிறந்தால், எத்தைத் தின்று, எங்கே கிடக்கும்?" இது மதுரகவியின் கேள்வி. நம்மாழ்வார் சொல்கிறார், "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்!" சரி, இங்கு வறட்சியான தத்துவம் மலர்கிறது என்று எண்ணலாம். ஆனால், நம்மாழ்வார் வாழ்ந்த காலத்தில் நடந்தது வேறு! பாசுரங்கள் சொல்லிக் கொண்டு வருகிறார், மதுரகவி தொடர்ந்து அதை பதிப்பித்து வருகிறார். கண்ணனின் பிள்ளைப் பருவத்தைப் பாடத் துணியும் சடகோபன் கண்ணனின் எளிமை கண்டு மெய் சிலிர்க்கிறார். சகலத்தையும் படைத்து, காத்து, கெடுத்து உழலும் ஒரு சக்தி, கள்ளம் கபடம் அற்ற குழந்தையாய், தாயின் கோபத்திற்கு பயந்து வயிற்றில் கயிறின் தடம் பதிந்து தாமோதனாய் நிற்கிறது. இதை எப்படிப் பாடுவது? இந்த எளிமையை, இந்த காருண்யத்தை, இந்த மென்மையை, இந்த செளலப்பியத்தை எப்படிப் பாடுவது? (நம்மாழ்வாரின் கதை பின்னால் தொடர்கிறது)

"எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா! என்று அழைக்க, என்ன தவம் செய்தாய், யசோதை" என்று பாடுவதில்லையா? இறைமையின் பேராற்றலை மறைத்து, கைக்கு கிடைக்கும் அரிய வஸ்துவாய் அமைவதுதான் குழந்தை. அணு சக்தியின் வெளிப்பாடுதான் சூரியன். கிட்ட நெருங்க முடியுமோ? ஆனால் அந்த அணுச் சக்தியை, மின் சக்தியாக்கி, வீட்டில் வளைய விடும் போது அதை அனுபவிக்க முடிகிறது. இதுதான் கண்ணனின் தத்துவம். அவன் கைக்குழந்தையாக வருவது, நம் கைக்குள் அகப்படும் கடவுள் என்ற நம்பிக்கையைத் தருவதற்காக. வானம் வசப்படுமா? என்று பாரதி கேட்கவில்லையா? வானம் வசப்படும் என்பதின் குறியீடுதான் பாலகிருஷ்ணன்.

சரி, என் கதைக்கு வருவோம்!

குட்டி கிருஷ்ணனும், நானும் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது கையில் கிடைத்தது, ஒரு மல்டிவிட்டமின் மாத்திரை கொள்ளும் நீள டப்பா! அதை குழந்தை உருட்டி விடும். தொப்பென்று அது மெத்தையிலிருந்து விழும். நான் தொப், தொப் என்று சொல்லிக் கொண்டு டப்பாவைத் திருப்பித் தர வேண்டும். ஒவ்வொரு முறையும் முத்துக் குடம் உதிர்வது போல் ஒரு சிரிப்பு. சளைக்காமல் சிரித்தது குழந்தை. ஒவ்வொரு முறையும். எனக்குக் கவலை! புரை ஏறி விடப் போகிறதே என்று! சிரிக்கும் குழந்தை புரை ஏறி அவஸ்தைப் பட்டால் எப்படி காணச் சகிப்பது? குழந்தை சிரிப்பை நிறுத்தினால் தேவலை என்று தோன்றியது. நான் கொள்ளும் ஆனந்தம் தடைப் பட்டாலும் பரவாயில்லை குழந்தையின் கொல்! சிரிப்பு நின்றால் தேவலை என்று ஆகிவிட்டது. எப்படி நிறுத்துவது என்றுதான் தெரியவில்லை. என் கண்ணே படாமல் குழந்தைக்கு காப்பு இடவேண்டும்.
சட்டென, திருவில்லிப்புத்தூர் பட்டர்பிரான் ஞாபகம் வந்தது. இந்த மனிதர் ஆழ்வாராதிகளில் கடைசியாக வந்தவர். ஆனால் இவர் செய்வித்த பாசுரம் எல்லாவற்றிற்கும் முதலாவதாக சேவிக்கப் படுகிறது. அது எப்படி?

பட்டர்பிரானின் பாவம்! அதுதான் அதன் சிறப்பு. லட்சுமி சமேதராய், ஜெகத் ஜோதியாய் கருட வாகனத்தில் பெருமாள் தோன்றி விடுகிறார். மதுரையே, பிரம்மிப்பில் நிற்கிறது. அந்த செளந்தர்யம், அந்த ஜொலிப்பு, அந்த கடாட்சம்...அடடா! என்ன சொல்ல. திருமால் என்பதில் "மால்" என்றால் மயக்குபவன் என்றுதானே பொருள். உலகே மயங்கிக் கிடக்க, யசோதை பாவத்தில் இருக்கும் பட்டர்பிரானுக்கு தாயின் அவஸ்தை! இந்த அழகுக் களஞ்சியமாக இருக்கும் பிரானுக்கு கண் பட்டுவிடாதோ? அவர் பாட்டுக்கு, சட்டென தோன்றிவிட்டார். இவன் காருண்யத்தைக் கண்டு என் கண்ணே பட்டுவிடுமோ? குழந்தைக்கு ஐம்படைத் தாலி போட்டு, காப்பு செய்வது பண்டைய தமிழ் மரபு. இவனுக்கு காப்பு இட வேண்டாமோ? இவன் சிரிப்பையும், இவன் செளலப்பியத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்தான், ஆனால் பெருமாளுக்கு ஏதாவது ஆகிவிடாதோ? காப்பு இட வேண்டும் என்று துடிக்கிறது பெரியாழ்வாரின் இதயம். பாடத் தொடங்கிவிடுகிறார்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்வித்திருக்காப்பு
மிக, மிக அருமையான பாசுரம். பல்லாண்டு என்று சொன்னாலே கணக்கிற்கு வராத என்று பொருள் கொள்ளலாம். அப்படி இருக்க பல்லாண்டை பல மடங்காகப் பெருக்கிறார். பல கோடி என்கிறார், காணாது என்று பட்டு, பலகோடி நூறாயிரம் என்றும் சொல்கிறார். மனிதர் துடித்துப் போயிருப்பது வார்த்தைகளில் தெரிகிறது! சாதாரணமாக, நூறு, ஆயிரம் என்றால் அதன் நீட்சி புரியும். ஆயிரத்திற்கு மேலுள்ள எந்த எண்ணும் மூளையில் ஒரு தெளிவான காட்சியைத் தருவதில்லை. கோடி என்றால் என்ன? அடிக்கிக் கொண்டு போகும் சைபர்களின் பொருள் என்ன? ஜென் கோயன் செய்வது போல் மூளையை ஸ்தம்பிக்க வைக்கிறது. பெரியாழ்வார் அதே உத்தியைக் கையாள்கிறார். இறைமைக்கு காப்பு சொல்லப் புறப்படும் போது, ஒரு நூறு ஆண்டுகள் போதும் என்று சொல்லிவிட முடியுமோ? ஆதியும், அந்தமும் இல்லாமல் எக்காலத்திலும் இருக்கும் பரம்பொருளுக்கு மனிதக் கணக்கில் எத்தனை ஆண்டுகள் சொல்ல முடியும்? முடியாது என்று நம் பட்டருக்குத் தெரியாதா என்ன? அதுதான் அடிக்கிக் கொண்டே போகிறார். மூளை ஸ்தம்பிக்கும் வரை.

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுட
ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே!
இறைவனின் அடியார்களோடும், இறைமையின் லயிப்போடும் இருக்க வேண்டும் என்பதுதான் உள்ளூர ஆசை. இது எத்தனை ஆண்டுகளுக்கு இருக்க வேண்டும்? ஆசை யாரை விட்டது. முடிவில்லாப் பேரழகுள்ள இறைவனுடன் முடிவில்லாமல் லயித்து இருப்பதில்தான் ஆனந்தம்.
இப்படித்தான் ஆரம்பிக்கிறது தமிழ் வைணவம்!! முதல் பாடலே பொருளில் நிறைந்து, மனத்தை மயக்கி, இறைமையில் லயிப்பில் ஆழ்த்துவதாக அமைவதால்தான் அதை ஈத்த பட்டர்பிரான் "பெரிய" ஆழ்வார் ஆகிவிடுகிறார்.

சரி, சடகோபனுக்கு மீண்டும் வருவோம்! அவர் சடத்தைப் பற்றி ஏதோ சொன்னாரே? அவர் சாமியாரா? எப்படி இருக்க முடியும்? தமிழ் வைணவத்தின் பிதாமகராச்சே! அவரும் பெரியாழ்வார் சொல்லும் கருத்தைத்தான் வேறு வார்த்தைகளில் சொல்கிறார். அதாவது, அணுவிற்கும், அணுவாயுள்ள ஜீவ சக்தியாகிய "சின்னது", செத்து, பிறந்து, பின் செத்து ஒரு சுழற்சியில் உள்ள உடல் என்னும் ஊடகத்தில் நுழைந்த பின் எதைத் தின்று, எப்படி வாழும்? தெரியவில்லை? பரம்பொருளான அமிர்தத்தை உண்டு, அப்படியே வாழும்! அதாவது, இறை லயிப்பில் ஆட்பட்டு, அதுவே உணவாக அப்படியே தன் வாழ்வை ஓட்டும் என்பதுதான் நம்மாழ்வாரின் உட்கிடக்கை. அப்படி இல்லையெனில், இறைமையின் எளிமையைச் சொல்லப் புகும் நம்மாழ்வார், ஆறு மாத காலம், அடுத்த வரி சொல்லாமல் லயித்துப் போயிருப்பாரோ? அவர்தான் சரி, கேட்டுக் கொண்டு வரும் மதுரகவியாவது இடைவெளி கிடைத்ததே என்று வயக்காட்டிற்கு போனாரோ? அதுவும் இல்லை, குருவிற்கேத்த சிஷ்யர். அடுத்த வரி வரும் வரை இவரும் குரு லயிப்பில்!!

இது நம் பாரம்பரியம். இதை நினைத்து நாம் பேருவகை கொள்வோம்.

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்
ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழி வழி ஆட் செய்கின்றோம் திரு
வோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி
அரியையழித்தவனை
பந்தனைதீரப் பல்லாண்டு பல்லாயிரத்
தாண்டென்றுபாடுதமே!

பல்லாண்டு, பல்லாண்டு - மும்பாய் சகோதரிகள்

2 பின்னூட்டங்கள்:

  மதுரையம்பதி

Monday, October 01, 2007

இன்றுதான் படிக்க முடிந்தது.....பாடல் சுட்டியுடன் கேட்க ஆனந்தமாக இருந்தது...நன்றி கண்ணன் சார்.

  நா.கண்ணன்

Monday, October 01, 2007

நீ இரங்காவிடில் கதி ஏது? என்பதுதானே உண்மை! அவனாக இரங்கி வந்து அருள் செய்தால் உண்டு. நாம் என்று அவனை அடைவோம் என்ற தீவிரத்துடன் செயல்படுகிறோம்? வைணவத்தின் ஆணிவேர் இது. கண்ணன் அதன் குறியீடு!