e-mozi

மடல் 60: அவள் தந்த பார்வை!


Date of publication: Sun, 14 Nov 1999 17:27:17 -0800

பாசுர மடல்களின் தோற்றம் விந்தையானது.

வைணவ மெய்யடியார்கள் இராமாயணம், பாகவதம், திருவாய்மொழி போன்ற தெய்வீக நூல்களில் கயிறு சாற்றி திருமாளின் திருவுள்ளத்தை அறிந்து கொள்ளும் வழக்கம் ஒன்று உண்டு. இதற்கு கயிறு சாற்றுதல் என்று பெயர். அன்றொரு மாலை. கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன். அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் திருவாய்மொழி ஈடு என்னை அழைத்தது. ஒரு புத்தகத்தை எடுத்துத் திறந்தேன். அது திருவாய்மொழி ஆறாம் பத்திலுள்ள இரண்டாந் திருவாய்மொழியின் முதல் பாடல். "மின்னிடை மடவார்" என்று ஆரம்பிக்கும் பாசுரம். பாடலை வாசித்து விட்டு ஈடு (வடக்குத் திருவீதிப் பிள்ளை அருளிய முப்பதாயிரப்படி என்னும் வைணவ வியாக்கியானம்) என்ன சொல்கிறது என்று அறியும் முன்பு கோயிலுக்கான அழைப்பு வந்து விட்டது.

கோயில் என்றால் ஏதோ மாட மாளிகை, கூட கோபுரங்கள் என்று எண்ண வேண்டாம். தஞ்சம் புகுந்தவன் வழிபடும் தலம் தாராளமாகவா இருக்கப் போகிறது. தமிழக பாஷையில் பஜனை மடம் போன்ற அறை. ஆனால் பஜனை மடம் மட்டுமன்று அது. பக்தி பூர்வமாக
50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வழிபடும் தலம் அது. கர்ம, சிஷ்டையாக அதற்கு பூஜை செய்ய ஆகம விதிகள் அறிந்த குருக்கள் உண்டு. முதல் முறை போகிறேன். என்ன பெருமாள்? என்று தெரியாது. நடை சாத்தி இருந்தது. மக்கள் பக்திப் பரவசத்துடன் பாக்னாங் மீனாட்சி என்று சொல்லி பாடிக் கொண்டிருந்தார்கள். நானோ மதுரை சாமி. மதுரை என்றாலே அது மீனாட்சி பட்டணம் என்று பெயர். மீனாட்சி என்பவள் மதுரையைப் பொறுத்தவரை வெறும் உமையவள் மட்டுமன்று. அவள் வைஷ்ணவி தேவி என்ற வைஷ்ணவ தந்திரமுண்டு (இது பெரும்பாலோருக்குத் தெரியாது). அவள் எங்கள் அன்னை. அவள் கடைக் கண் ஆட்சியில்தான் உலகமே தளிர்க்கிறது. அப்படி இருக்க இது என்ன புதுசாக "பாக்னாங் மீனாட்சி" என்று சந்தேகப்படும் போது நடை திறந்தது. கையில் கிளி கொஞ்ச என் அன்னை. உடல் சிலிர்த்து விட்டது. கண்கள் பனித்து விட்டன.

இது போதாது என்று, ஒரு பெண்ணிற்கு அருள் வந்துவிட்டது அன்று. சாமியாடிகளைப் பார்த்து வருஷமாச்சு. எனக்கு ஊள்ளூர ஒரு சின்ன பயம்! அன்று சாமியாடிய பெண் பெரிய அழகி என்று சொல்வதற்கில்லை. சாதாரணத்திலும், சாதாரணம். கண்களை மூடித் தியானித்திருந்த என்னை கோவில் நிர்வாகஸ்தர் மெதுவாகத் தொட்டார். முழித்த போது "சாமி அழைக்கிறது" என்றார். போகாவிட்டால் தெய்வக் குற்றம். போனாலோ குற்றம் குறை என்று ஏதாவது கண்டு சொல்லிவிட்டால் தர்மசங்கடம். தவறு செய்யாத மனிதன் யார்? குற்ற உணர்வு இல்லாத பேர்தான் எத்தனை? இத்தனை குழப்பத்துடன் போய் முன் உட்கார்ந்தேன். அப்போது அவள் பார்த்த பார்வை!

நண்பர்களே கேளுங்கள்! அது தெய்வீகப் பார்வை. இத்தனை அழகு அவளுக்கு இந்த கொஞ்ச நேரத்தில் எப்படி வந்தது? இவள் கண்கள் ஏன் என் உள்ளத்தைத் துளைத்து, உள்ளே குடி கொள்ளும் நேச உணர்வை இப்படித் தூண்டுகிறது? எத்தனை ஜென்ம, ஜென்மாந்திர உறவின் காதல் பார்வை அது. எத்தனை கோடி, கோடி கல்ப யுகங்களாக என்னை அறிந்திருந்தால் இவள் இப்படிப் பார்ப்பாள்? கண்கள் கலங்க நான் பார்க்க அவள் வெறும் குங்கும பிரசாதம் கொடுத்து அனுப்பி விட்டாள். அவள் பார்வைதான் அன்று என் பரிசு. மெதுவாக வீடு வந்து ஈடு வாசித்தேன். நம்மாழ்வாரின் அனுபவம் இதோ!

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியதுகொண்டு செய்வதேன்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!

தமிழ் இலக்கியப் பரிச்சியமுள்ளவர்களுக்கு எளிதாகப் புரியும் பாடல் இது. ஒரு பண்டைய, பெரிய மரபின் நீட்சியாக விழுகிறது இப்பாடல். சங்கப் பாடல்களில் தலைவன், தலைவி உரைப்பதாக அமையும் பாடல்கள் அதிகம். அதனால்தான் சங்கப் பாடல்களை ஆங்கிலத்தில் உரைத்த ஏ.கே.இராமானுஜன் அவைகளுக்கு "Poems of Love and War" என்று பெயர் வைத்தார். பக்தி இலக்கியம் செய்ய வந்த ஆழ்வார்கள் இந்த மரபை அப்படியே தழுவிக் கொள்கின்றனர்.

கேசவனையே செவிகள் கேட்க; திருவரங்கத்
தீசனையே சென்னி இறைஞ்சிடுக;-நேசமுடன்
கண்ணனையே காண்க-இருகண்; இணங்கொள் காயாம்பூ
வண்ணனையே வாழ்த்துக-என்வாய்


என்ற ரீதியில் திருவரங்கத்து ஈசனையே காதலனாகக் கொண்டு, தங்களை காதலியாகக் கொண்டு விரகக் கவிதைகள் யாத்தனர். மேலோட்டமாக காதலன், காதலி பேச்சு மொழி போல் தெரிந்தாலும், உள்ளார்த்தமாக அது பேசுவது ஜீவனாகிய நமக்கும், நம்மை ஆட்கொண்டு தளிர்ப்பிக்கும் ஜீவகாருண்யனான இறைவனுக்குமுள்ள உறவின் ஆழத்தை, அதன் ஏக்கத்தை, அதன் தவிப்பை, அதன் காதலை வெளிப்படுத்துவதாகும்.

கண்ணன் கோகுலத்தில் கோபியருடன் ஆடும் கேளிக்கை மிகுந்த "ராச லீலை" அனைவருக்கும் தெரியும். கோபியர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜீவன்கள். இறைவன் என்னை ஆட்கொள்ள மாட்டானா? என் துக்கம் எல்லாம் போகும் வண்ணம் என்னுடன் புணர மாட்டானா? சோகமற்ற ஒரு பொழுதேனும் வாழ்வில் எனக்கு வாய்க்காதா? என்று தங்கப்படும் ஜீவன்கள். இறைவன் காருண்யமிக்கவனாக உள்ளதால், இச்ஜீவன்களை ஆட்கொண்டு உன்மத்தப் படுத்தும் பொழுதுகள்தான் "ராச லீலை" என்பது. அது ஒரு அனுபூதி நிலையின் குறியீடு. இது வெறும் காதல் விளையாட்டு என்றால் சிவபுரத்து ஈசன் ஏன் தன்னிடம் தஞ்சம் புகுந்த நரசிம்ம மேத்தா என்ற சிறுவனுக்கு கண்ணனின் ராசலீலையைக் காட்ட வேண்டும்? காதல் புரியும் வயதா அவனுக்கு? ஆனால் நரசிம்ம மேத்தாவிற்கு வைணவன் என்றால் யார் என்பது அன்று புரிந்து விட்டது (பின்னால் இவர் பாடல்தான் (வைஷ்ணவ ஜனதோ!)காந்தித் தாத்தாவால் இந்தியா முழுவதும் பரப்பப் பட்டது).

நம்மாழ்வாருக்கும் அது புரியும். அதனால்தான் காதலியாக உள்ள அவர் சொல்கிறார், "மின்னல் போன்ற இடையுடைய பெண்கள் உன் அருளைப் பெறுவதற்குக் காத்து இருப்பர், அவர்கள் படுகின்ற துன்பத்தை நீ அறிந்து படுகின்ற துன்பத்தை நான் அறிவேன். அரண் நிறைந்த இராவணன் மாளிகையை நீறாகச் செய்த மாயவனே, உனது சுண்டாயம் (விளையாட்டு) நான் அறிவேன். நீ கிளம்ப ஆயத்தப் படுமுன், என் விளையாட்டுச் சாமான்களை (கழல்- அம்மானை ஆடும் காய்) மறக்காமல் வைத்து விட்டுப் போ, நம்பீ!" என்கிறார்.

இப்பாடலுக்கு பக்கம், பக்கமாகப் போகிறது வைணவ வியாக்கியானம். நம்மாழ்வார் இங்கு ஞானி என்ற ஸ்திதியில் இல்லாமல் பக்தன் என்ற நிலையில் நின்று, பக்தர்கள் படும் அவதியைச் சொல்கிறார். நமக்கும் காட்சி கிடைக்காதா என்று நாம் எல்லோரும்தான் ஏங்குகிறோம். வருகின்ற அருள் நின்று நிலைத்து என்றும் இருக்காதோ? வருவதும் தெரிவதில்லை, போவதும் தெரிவதில்லை. கவியரசர் தாகூர் எழுதுவார். உனக்காக இரவிரவாய் விழித்திருந்த காலமுண்டு. கண்கள் சோர்ந்த இமைப் பொழுதில் என் வீடு வந்து போவதின் கொடுமை என்னவோ? என்று. அதுபோன்ற அவதிதான் இதுவும்.

ஆதிமூலமே! என்று குரல் கொடுத்த யானைக்கு அருள அடித்துப் புரண்டு கொண்டு அவன் வரவில்லையா? ஐந்து புருசன்மார் இருக்க, கோவிந்தா! என்று சபையில் அழைத்த பாஞ்சாலிக்காக சடுதியில் ஓடி வரவில்லையா? அதுபோல் நான் கூப்பிடும் குரலுக்கும் அவன் ஏன் வருவதில்லை என்பது நம் எல்லோரின் உள்ளக் கிடக்கைதானே?

"வந்ததுதான் வந்தான், நமக்காக ஒரு பொழுது செலுத்துவான் என்றால் அவன் மற்ற பெண்டிரை (ஜீவன்களை) மனத்தில் வைத்திருக்கிறான். இவன் நம்மைப் பிரிந்த பின்பு சிலரோடு கலந்தான், அவர்களையும் பிரிந்தான், அவ்வாற்றாமையோடு இங்கு வந்தான், எங்களை விளையாட்டுப் பொருள்கள் போல் மயக்கினான், இது நம்பிச் செய்யக் கூடிய ஆசையில்லை என்று தெரிந்தும் கோபம் கொள்ளலாமென்றால் தன்னழகாலும், குணங்களாலும், தன் செல்லாமையாலும், தாழ்ச்சி களாலும் ஜீவன்களின் ஊடலைத் தீர்த்து கலந்து நிற்கிறான்" என்று நீள்கிறது ஈடு.

இந்த வியாக்கியானத்தோடு ஒத்துப் போகும் சங்கப் பாடல்கள் உண்டு. வள்ளுவர் சொல்கிறார்:

"ஊடற்கட் சென்றேன்மன் தோழி யதுமறந்து
கூடற்கட் சென்றதென் நெஞ்சு!"


அச்சாக இதையே சொல்கிறது, கலித்தொகைப் பாடலொன்று,

"ஊடுவேன் என்பேன்மன் அந்நிலையே அவர்காணின்
கூடுவேன் என்னுமிக் கொள்கையில் நெஞ்சே!"


சங்கப் பாடல்கள் வரை காதலன்-காதலி பேச்சு உண்மையான காதலன் காதலி பேச்சுத்தான். பக்தி இலக்கியம் வந்தபின்பு இம்மானுடக் காதல் ஒரு புது மெருகு பெருகிறது. வெறும் ஆடு, மாடு வெட்டும் சாமிச் சடங்குகள் எப்படி மெய் அனுபூதி கொள்ளும் மெய்ஞானமாக பின்னால் மலர்கிறதோ, அதுபோல் வெறும் காதல், தெய்வீகக் காதலாக மாறுகிறது. சமய சித்தாந்த, வேதாந்தங்களைக் கடந்து மெய்ஞான ரசத்தில் குளித்து, வெளி வந்து அருளிச் செய்யும் போது அக்கருத்து சமயாதீதமாகிறது! அதைத் தரும் பெரும் ஆற்றலை தனிப் பெருங்கருணையாகத்தான் காணவேண்டியுள்ளது. அதுபோல், பக்தி உள்ளத்தில் ஊறித்ததும்பும் போது காதலின் உன்னத நிலை அடைகிறது. அதனால் பக்தி என்பது "காதலீதமாகும்" (காதல்+அதீதம்).

இந்த அனுபூதி நிலையில் வெளிப்படும் காட்சிகளை சாதாரண அர்த்தத்தில் புரிந்து கொள்வது மடமையாகும். உருவகமாக வெளிப்படும் காட்சிகளை உண்மை என்று நம்பி மயங்குதல் சரியோ? கண்ணன் ராச லீலை செய்தான் என்று சொல்லி நாமும் பெண்கள் பின்னால் ஓடினால் அது தகுமோ? பெண் என்பதை நம்மாழ்வாரும் மற்ற ஆழ்வார்களும் உருவகப் படுத்துகின்றனர். பெண்ணின் பாவத்தில் படும் அவஸ்தைகள், ரச உணர்வுகள், புணர்வு இவை அனைத்தும் ஒரு ஆன்ம கீதம் என்றுதான் கொள்ளவேண்டும். அதனால் தான் நோபல் நாயகரின் பாடல்களுக்கு கீதாஞ்சலி என்று பெயர் வந்தது. ஆன்ம கீதத்தின் மூலமாக இறைவனிடம் இறைஞ்சுவதுதான் பக்தி. இதை மிகச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று காட்டுவனதான் நம் முன்னோர்களின் சரித்திரம். தன் வாழ் நாளில் மானிடப் புணர்வை அறியாத நம்மாழ்வார் போன்ற ஞானிகள் பேசும் காதல், காதலீத வகையைச் சார்ந்தவை. சிறுவனான நரசிம்ம மேத்தா பார்த்த ராச லீலை ஆன்ம-பரமார்த்த உறவின் உருவகமாகும். இதுதான் பக்தி இலக்கியங்கள் காட்டும் பாதையாகும்.

பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே
திரிந்துழலும் சிந்தனையார் தம்மை-புரிந்தொருகால்
ஆ ஆ ! என இரங்கார் அந்தோ! வலிதே கொல்?
மாவாய் பிளந்தார் மனம்.
(பெரிய திருவந்தாதி 50)

இறை அனுபூதி பெற்று வாழ்பவர்கள் (அதாவது, உன்னைக் கலந்து பிரிந்தார்) பிரிந்து ஒன்று நோக்காது, எல்லாக் காலங்களிலும் இறை உணர்வுடனே இருப்பர் என்பதுதான் காதலீதத்தின் சாரம். அது புரியாதவரை எல்லாக் குழப்பமும் உண்டு.

1 பின்னூட்டங்கள்:

  Kripa

Tuesday, May 20, 2014

Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

நன்றிகள் பல...
நம் குரல்