e-mozi

மடல் 053: ஆலிலை மேல் ஒரு பாலகன்Date of publication: 11 March 1999

அது ஒரு மகப்பேறு மருத்துவ மனை. நண்பன் மருத்துவன். புதிய வரவை உலகம் காணும் இடம். குழந்தை பிறப்பது என்பது சாதாரணமான விஷயமில்லை. குழந்தை உருவாவது கூட சாதாரண விஷயமில்லை என்பது திருமந்திரம் படித்தவர்களுக்குத் தெரியும். அண்டத்தில் சக்தி என்பது அழிவதில்லை. ஒன்றிலிருந்து ஒன்றாக மாறுகிறது. அதன் உச்ச படிமம்தான் குழந்தை. குழந்தை தன் மென்மையால், தன் கள்ளமில்லாத் தன்மையால், அண்டி இருக்கும் தகைவால், ஒரு சின்ன புன்னகையால் உலகை வசியம் செய்து விடுகிறது. கோபக்கார விச்வாமித்திரர்கள் கூட குழந்தையைக் கண்டால் மெல்லிய புன்னகையாவது விடாமல் போவது கடினம்.

குழந்தை தாயின் மடியில் கிடப்பதும், தாய் உச்சி முகர்வதும், குழந்தை முலைப்பாலுக்கு அலைவதும் காணக்கிடைக்காத காட்சிகள். அந்த வாத்சல்யம் மனதை நெகிழ வைக்கக் கூடியது. பிறந்த குழந்தைக்கு வாயைச் சப்பி பால் குடிக்க எப்படித் தெரிகிறது என்பது பிரம்ம இரகசியம். அன்றும் இப்படித்தான்,அந்தக் குழந்தை முலையெல்லாம் தடவி, வாயை விரித்துக் கொண்டு நின்றது. கண் முன்னே பறவைகள் உணயூட்டும் காட்சி ஞாபகத்திற்கு வந்தது. சின்னப்பறவை குய்யோ, முறையோ என்று கீச்சிட்டிக் கொண்டு, வாயை, வாயைத் திறக்க தாய் அலகால் ஊட்டும் காட்சி. வாயைக் கிழித்து விடுமோ என்று சில நேரம் நமக்கு பயம் வருவதுண்டு. ஆனால் குத்தாமல், வாயைக் கிழிக்காமல்தான் தாய் பறவை குஞ்சிற்கு ஊட்டுகிறது. கல்லினில் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் காவல் யாரோ நிற்கின்றனர்.

அப்புறம், இந்த பன்றி பால் ஊட்டுவது. நம்ம ஊர் சின்ன கருப்புப் பன்றி அல்ல. ஐரோப்பியர் பன்றிகள். பக்கத்திற்கு ஒரு வரிசை என்று பல வரிசைகளில் வெள்ளைப்பன்றிகள் பால் குடிப்பது வேடிக்கையாய் இருக்கும். அவை முனங்கும் முனங்கல் ஊர் பூராக் கேட்கும். கன்னுக் குட்டி பால் குடிப்பது ஒரு அழகு. அது முட்டுகிற முட்டைப் பார்த்தால் தாய்க்கு வலிக்காதோ எனக் கேட்கத் தோன்றும்."மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா? கொடிக்கு காய் பாரமா? பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?" என்று பின் தோன்றும்.
ஆக இந்த உணவிடுதல் என்பது ரொம்பவும் சுவாரசியமான விஷயம்தான்.

உணவு என்பது உலகிற்கு பிரதானம். உயிருக்கு பிரதானம். அதனால்தான் "உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்பது பழமொழி. பசித்தவனுக்கு முன்,"கஞ்சி வரதப்பா!" என்று பெருமாளைச் சேவித்தால் "எங்கப்பா வருது?" என்றகேள்வி கூடவே வருவது தவிர்க்க முடியாதது:-) உணவில்லையேல் உயிரில்லை, உலகின் அழகில்லை.

செவ்வாய் கிரகத்தில் உயிர் உள்ளதா? இல்லையா? என்று ஆராய முற்பட்டபோதுதான் விஞ்ஞானிகளுக்கு உயிர் என்றால் என்ன? அதை எப்படி கண்டுபிடிப்பது என்ற கேள்வி எழுந்தது. தூங்கி எழுந்தால் நாம் உயிருள்ள உலகில் வாழ்கிறோம், எனவே உயிர் என்றால் என்ன என்று நாம் கேட்பதில்லை. உயிரைக்கண்டு பிடி என்று யாராவது சொல்லும் போதுதான் உயிர் என்றால் என்ன? என்று விளக்கம் சொல்ல வேண்டியது வருகிறது. அப்படித் தேடியபோது கிடைத்த சுவாரசியமான விளக்கம், "உயிர் என்றால் உண்ணக் கூடியது, உண்ணப் படக் கூடியது" என்பதாகும். பசுமையான தாவரங்கள்/நுண் உயிர்கள் ஒரு சங்கிலியை ஆரம்பித்து வைக்கின்றன. அப்போது சூரியன் உண்ணக் கூடியவனாக மாறுகிறான்! அதன் பின் ஒன்றைத் தின்று, ஒன்று என்று ஒரே சாப்பாடுதான்! (கல்யாண சமையல் சாதம்,காய் கறிகளும் பிரமாதம், இந்த கெளரவப் பிரசாதம், இதுவே எனக்குப் போதும்-மாயா பஜார்).

ஆக, உண்ணுதல் என்பது உயிர்ப் பண்பு. வாழ்வின் அடிப்படைக் கூறு. "விருந்து புறத்தா, சாவா மருந்தெனினும் வேண்டல்" என்கிறான் வள்ளுவன். சாப்பாடு கொடுப்பது உயர்ந்த பண்பு-எல்லா கலாச்சாரங்களிலும்.

குழந்தைக்கு உணவு கொடுப்பது என்பது ஒரு பெரிய கலாச்சார விழுமியமாகவே தமிழ் மண்ணில் இருந்து வருகிறது. கிண்ணத்தில் அன்று தின்ற பருப்பு அமுது இன்றும் ஏனோ இனிக்கிறது.


தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன்
கண் துயில் கொள்ளக் கருதித் கொட்டாவி கொள்கின்றான்
உண்ட முலைப் பாலாறா கண்டாய். உறங்காவிடில்
விண்தனில் மன்னிய மாமதீ! விரைந் தோடிவா!

என்பது பெரியாழ்வார் திருமொழி. அடடா! இந்தச் சந்திரன் என்பது குழந்தைப்பருவத்திலிருந்து, பருவமேயும் வரை கூடவே வரச் செய்து விட்டனர், தமிழர்கள்!ஞான சம்மந்தருக்கு பால் ஊட்டிய பராசக்தியும், விண்ணின் மாமதியைக் கூப்பிட்டுஇருப்பாள்! குழந்தைகள் ஒரு வயதுக்கு மேல் கொஞ்சம் அடம் பண்ணத் தொடங்கும். அப்போது உணயூட்டுவது பெரிய செப்பிடி வித்தை. யசோதைப் பிள்ளையின் அடம்பாருங்கள்:

பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச் சோறும்
உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே
அண்டத்து அமரர் பெருமான் அழகமர்
வண்டு ஒத்த திருண்ட குழல் வாராய்! அக்காக்காய்!
மாயவன் தன் குழல் வாராய் அக்காக்காய்!


நம்ம ஊர் அம்மாக்களுக்கு குழந்தைக்கு வேடிக்கை காட்ட காக்காவிலிருந்து குருவி வரை எல்லாம் வேண்டி இருக்கிறது. அந்தக் காலத்தில் பேய்க்குக் கூடசோறு வைக்கும் அளவிற்கு தமிழகத்தில் பாலும், தேனும் பெருகி ஓடியிருப்பது இதனால் தெரிகிறது :-)

விட்டு சித்தரும், வேண்டிப் பார்க்கிறார், கேலி செய்து பார்க்கிறார், அடித்தும் பார்க்கிறார். இந்தப் பிள்ளை எதற்கும் மசிவதாய் தெரியவில்லை. பயம் என்பது துளிக் கூட இருந்தால்தானே? வேறு வழியே இல்லாமல் கண்ணனிடம் "கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா!" என்று முறையிட்டு, கொஞ்சம் சாப்பிடு அப்பா! என்கிறார். வைணவ வியாக்கியானம் கேட்டுப் பழகியவர்களுக்கு,"கொஞ்சம் பயந்த மாதிரியாவது, காட்ட மாட்டாயா?" என்று கண்ணனிடம் யசோதை கெஞ்சியது ஞாபகம் வரலாம். பயம் என்றால் என்னவென்று அறியாத இறைவனுக்கு பயம் காட்ட (அதாவது, பயப்படுவது எவ்வாறு என்று காட்ட:-)"பயம்" வந்ததாம். இறைவனுக்கே பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கே என்று அது பயந்த, பயத்தைப் பார்த்து கண்ணன் கற்றுக் கொண்டானாம், பயப்படுவது எப்படி என்று!!

கேட்டறியாதன கேட்கிறேன் கேசவா! கோவலர் இந்திரற்கு
கட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்துடன் உண்டாய் போலும்
ஊட்ட முதலிலேன் உன் தன்னைக் கொண்டு ஒரு போதும் எனக்கரிது
வாட்டமிலாப் புகழ் வாசுதேவா! உன்னை அஞ்சுவன் இன்று தொட்டும்


திருநீலகண்டன் என்ற பெயர் சிவனுக்கு. நஞ்சு உண்டதால் வந்தது அது. கண்ணனும் நஞ்சுண்ட கண்டன் என்கிறார் பெரியாழ்வார். அது எப்படி?

வானவர்தாம் மகிழ வன் சகடமுருள
வஞ்ச முலைப்பேயின் நஞ்சமது உண்டவனே!
கானக வல் விளவின் காயுதிரக் கருதிக்
கன்றது கொண்டெறியும் கருநிற என் கன்றே!
தேனுகனும் முரனும் திண் திறல் வெந்நரகன்
என்பவர் தாம் மடியச் செருவதிரச் செல்லும்
ஆனை! எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக, ஆடுகவே!

அடேங்கப்பா! தன் குழந்தையின் அருமை, பெருமைகளைப் பற்றி பீத்திக்கொள்ளாத தாய்/தந்தையர் உண்டோ! கண்ணனின் வீர, பராக்கிரமங்களை எவ்வளவு அழகிய கவிதையாய் வார்க்கிறார் பாருங்கள். எத்தனை உருவகங்கள்,கண்ணன் தன் "கருநிற கன்று" அதுவே, எதிரிகளை அதிரச் செய்யும் "ஆனை"(நம்ம கிராமத்துப் பெரிசு, பெரியாழ்வார் இப்படித்தான், யானை என்பதை"ஆனை"என்பார், கல்யாணம் என்பதை "கன்னாலம்" என்பார் :-) "ஆயர்கள் போர் ஏறு!அது மட்டுமா? சும்மா, விளாம்பழம் அடிக்க இந்தப் பையன் கன்று உருவில் வந்த அசுரனை மரத்தில் எறிந்து பழம் பறிக்கிறானாம்! அடேங்கப்பா! இவ்வளவு புகழ்ச்சி எதற்கு, குழந்தை தையத் தையா! என்று ஆட வேண்டுமாம். இவ்வளவும் அதற்குத்தான்.இது எத்தகைய இன்பம் என்பதை அறிய கொஞ்சம் வள்ளுவமும், பெரியாழ்வார் திருமொழியும் வாசிக்க வேண்டும்.

நிற்க. இது வேடிக்கை போல் தோன்றினாலும் வேடிக்கை அல்ல. பெரியாழ்வார் ஒரு பாரம்பரியத்தை பின் பற்றித்தான் அப்படிச் சொல்கிறார். சங்க காலப் புலவர்கள்," நீ பகைவனைக் கொள்வதில் கண்ணனையும், வலிமையில் பலதேவனையும் ஒப்பை" என்று வாழ்த்தும் மரபு ஒன்று உண்டு.

"பானிற வுருவிற் பனைக் கொடியோனும்
நீனிற வுருவினேமி யோனுமென்
றிரு பெருந் தெய்வமுனின் றா அங்கு"
(புறம் 58/16)

கண்ணனையும், பலதேவனையும் இரு பெருந்தெய்வங்களாக வழிபட்ட செய்தி புறநானூற்றில் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடல் வழி அறியலாம்.

நமக்கென ஒரு இலக்கிய பரம்பரை இருப்பது பெரிய லாபம்தான். ஒன்று,பின்னொரு கவிதைக்கு ஊற்றாக அமைகிறது. நம்மாழ்வார், "பொலிக, பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்" என்றால் பாரதி, "அச்சமில்லை, அச்சமில்லை,அச்சமென்பதில்லையே" என்கிறான். பெரியாழ்வார், "கேட்டறியாதன கேட்டேன் கேசவா! என்றால் பாரதி:

பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்...


என்கிறான்!

உண்ணுதல் என்னும் கருத்தை ஆழ்வார்கள் பல்வகையில் கையாளுகின்றனர்."உண்டியே, உடையே உகந்து ஓடும் இம்மண்டலத்தோடு கூடுவதில்லை யான்" என்று ஆரம்பித்து,

பண்டு காமரானவாறும், பாவையர் வாயமுதம்
உண்டவாறும், வாழ்ந்த வாறும், ஒக்க வுரைத் திருமி
தண்டு காலா வூன்றித் தள்ளி நடவாமுன்
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே!
(பெரிய திருமொழி 1.3.5)

பாவையர் வாயமுதம் உண்டு களித்து, தண்டு ஊன்றி தள்ளாடும் காலத்தில் இறைவனைப் பற்றிச் சிந்திக்காமல் காலாகாலத்தில் அறிவு பெற்று விழித்து எழுக என்கின்றனர். இதற்கு நேர் எதிரான நிலையும் ஒன்று உண்டு. அதாவது இறைவன் பால் காதல் வயப்பட்டு "உண்ணுதல்" மறந்த நிலை. அப்படிஇருக்கும் ஒரு பெண்ணின் தாய் புலம்புவதைக் கேளுங்கள்:

நெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும்
நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள்,
நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ! என்னும்
வம்பார் பூம் வயலாலி மைந்தா! என்னும்
அஞ்சிறைய புட்கொடியே யாடும் பாடும்
அணியரங்க மாடுதுமோ தோழீ! என்னும்
எஞ்சிறகின் கீழடங்காப் பெண்ணைப் பெற்றேன்
இருநிலத்து ஓர் பழி படைத்தேன்! ஏபா வம்மே!
(திருநெடுந்தாண்டகம் 12)

இதுவெல்லாம் போக, உண்ணுதல் என்னும் உயிரியல் அடிப்படைத் தேவையை மிகச் சிறந்த முறையில் உருவகப் படுத்துகின்றனர் ஆழ்வார்கள். அதாவது,அண்ட சராசரமும் முடிவில் இறைவனிடம் அடங்கும் என்னும் கருத்தை உண்ணுவதாகிய உருவகத்தால் சுட்டுகின்றனர். யசோதை கண்ணனின் வாயில் அண்டம் முழுவதையும் கண்டு மிரண்ட தொன்மம் இப்படி வந்ததுதான். கவிஅழகில் செம்மையுடைய திருமங்கை ஆழ்வார் இதை எவ்வளவு கவித்துவத்துடன் சொல்கிறார் பாருங்கள்:

அம்பரமும் பெருநிலனும் திசைகள் எட்டும்
அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன்
கொம்பமரும் வடமரத்தின் இலைமேல் பள்ளி
கூடினான் திருவடியே கூடகிற்பீர்!
வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு
மணிவண்டு வகுளத்தின் மலர்மேல்வைகும்
செம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணி மாடம் சேர்மின்களே!
(பெரிய திருமொழி 6.3.1)

உலகம் முழுவதையும் உண்ட வாயன். பிரளயம் முடிந்த பிறகு ஒரு பாலகனாய் இலை மேல் பள்ளி கொண்டு (ஆலிலைக் கண்ணன்) வருவதாய்ச் சுட்டும் உருவகச் செம்மையை என்ன சொல்ல?

மீண்டும், மீண்டும் தாயின் பாலுக்காய் வாய் அகல, மூடிய கண்ணுடன் முலை தேடும்அந்த ஆஸ்பத்திரிக் குழந்தைதான் ஞாபகம் வருகிறது.

மடல் 054: சிங்கப் பெருமாள் கதை

First published on: Tue, 30 Mar 99 08:46AM PST

அளந்திட்டதூணை அவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய்
உளந்தொட் டிரணியன் ஒண்மார் வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி
பேய்முலையுண்டானே! சப்பாணி !


(பெரியாழ்வார் திருமொழி-83)


அப்போது எனக்கு ஆப்பிரிக்க கண்டதிலுள்ள கென்யாவிற்கு மாற்றலாகியிருந்தது. காடும் காடு சேர்ந்த நிலப் பரப்பு. பையன் குமாரும், பெண் கனகாவும் கதை கேட்கும் பருவத்தில் இருந்தனர். வெளிநாட்டில் இருந்து கொண்டு தமிழ் நாட்டுக் கதை சொல்வதில் எனக்கும், குழந்தைகளுக்கும் ஆனந்தம். அடுப்படி வேலை முடிந்த வேளைகளில் என் மனைவியும் வந்து கதை கேட்பாள். ஆனால் கேட்பதை விட அவள் சொல்வது கடைசியில் மிகுதியாகிப் போய்விடுவதால் அவள் வெளியே போயிருக்கும் சமயங்களில் நான் கதையை ஆரம்பிப்பது உண்டு. அவள் சொல்லி நாங்கள் கேட்டுப் பழகிவிட்டதால் அவளால் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கவும் முடியாது என்று வைத்துக் கொள்ளுங்கள்!

மழை கொட்டி ஓய்ந்திருந்த ஒரு மாலை. மண்ணின் வாசனையும், மலர்களின் வாசனையும் சேர்ந்து ஒரு ஆப்பிரிக்க மணத்தை கொடுத்தது. பசங்களுக்கு கதை கேட்டும் ஆசைவந்து விட்டது. சின்ன, சின்ன போர்வைக்குள் புகுந்து கொண்டு அவர்கள் காதை மட்டும் பெரிதாக வைத்துக் கொண்டு என் முன் உட்கார்ந்தனர்.

ரொம்ப, ரொம்ப காலத்துக்கு முன்னே, காடுகள் நிறைந்த பகுதியை தமிழர்கள் முல்லை என்று அழைத்தனர். முல்லைக்கென்று தனியாக மலர் உண்டு, செடி உண்டு, மரமுண்டு,கொடியுண்டு, பறவையுண்டு, விலங்கு உண்டு, முல்லை மக்களை இடையர்கள் என்பார்கள், இந்த இடையர்களுக்கு ஒரு தெய்வமும் உண்டு என்று சொன்னேன். ஆர்வமுடன் கேட்டனர். யார் அந்தத் தெய்வமென்றால் அதுதான் திருமால் என்றேன். இவர் கெட்டவர்களை அழித்து நல்லதை முல்லையில் நிலை நாட்ட அடிக்கடி அவதாரமெடுப்பார் என்றேன்.

அவதாரமென்றால் என்ன அப்பா? எனக் கேட்டாள் கனகா. அவதாரமென்றால் மேலேயிருந்து இறங்கி வருதல் என்றேன். அப்படின்னா? என்றாள். அதாவது தெய்வமென்பது உச்சியில் உட்கார்ந்து மக்களை அரசாளும் அரசனன்று. தெய்வமென்பது தாய் போல. நீங்கள் ஆற்றில் நீச்சலடிக்கும் போது தவறி ஆற்றோடு போய் விட்டால் அம்மா ஓடோடி வந்து ஆற்றில் குதித்து உங்களைக் கரைசேர்க்க மாட்டாளா? அதுபோல் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவதுதான் தெய்வம். அதன்உயர்ந்த நிலையிலிருந்து அன்பின் காரணமாக கீழே இறங்கி வருவதை அவதாரம் என்று சொல்வார்கள் என்றேன். புரிந்தது என்று இருவரும் தலையாட்டினர்.

இப்படித்தான் ஒரு நாள், பிரகலாதன் என்றொரு சிறுவன். அவனுக்கு தெய்வத்தின் மேல் நல்ல நம்பிக்கை உண்டு. உலகில் இருக்கும் பொருளெல்லாம் தெய்வத்தின் வெவ்வேறு வடிவங்கள் என்று அவன் பார்த்தான். அதனால் அவனுக்கு தெய்வம் இல்லாத இடமே இல்லை என்றாகியது. செடியைக் கண்டால் அன்பாக வருடுவான். மலருடன் பேசுவான். பறவைக்கு தானியம் போடுவான். மானுக்கு புல் கொடுப்பான். கன்றுடன் விளையாடுவான். இப்படிப்பட்ட பையனுக்கு தறுதலையாக ஒரு அப்பா இருந்தார். அவர் பெயர் இரணிய கசிபு என்பது. அவனுக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது. உலகில் எல்லாமே தன் அரசாட்சிக்கு கீழ் என்ற நம்பிக்கை.அவன் பலம் கொண்ட அரசனாக இருந்ததால் அவன் சொல்லை யாராலும் மீற முடியாது.தெய்வக் கோயில்களையெல்லாம் அடைத்து விட்டு அவன் தன் பெயரையே எல்லோரும் புகழ்ந்து பாட வேண்டும் என்றான்.

"தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் மாதிரின்னு சொல்லுங்க"என்றவாறே என் மனைவி திண்ணைக்கு வந்தாள். சிரித்துக் கொண்டே தொடர்ந்தேன். எல்லோரும் இரணியன் பெயர் சொல்ல, பிரகலாதன் மட்டும், தன் தந்தை இப்பிரபஞ்சத்தை படைத்து காக்கவில்லை என்பது தெரிந்ததால் அதை நம்பவில்லை. அப்பா சொல்லி மலை நிற்கவில்லை. அப்பா சொல்லி மழை அங்கு பெய்யவில்லை. சூரியன் அப்பாவைக் கேட்டு உதிப்பதில்லை. சந்திரன் அப்பாவிற்காக வருவதில்லை. எனவே, எங்குமிருப்பது தெய்வம்தானே தவிர அப்பா இல்லை என்று சொன்னான். இரணியனுக்கு கடும் கோபம் வந்து விட்டது. "என்னடா சொன்னாய்? உன் தெய்வம் இந்த தூணில் இருக்குமா?" என்று அரண்மனைத் தூணைக் காட்டினான். பெரிய தூண். அஞ்சு பேர் சேர்ந்து கட்டிப்பிடிக்கும் அளவு பெரிய தூண். அதற்கு பிரகலாதன், தெய்வம் தூணிலும் இருக்கும், இந்தத் துரும்பிலும் இருக்கும் என்று காலைத் தரையில் தட்டினான். தூசு பறந்தது. இரணியனுக்கோ கோபம் பறந்தது.

"மண்டுப் பையா! இதோ, பார் இந்தத் தூணை உடைக்கிறேன். உன் தெய்வம் வருகிறதா எனப்பார்ப்போம்" என்று சொல்லி தண்டாயுதத்தால் தூணில் ஒரு போடு போட்டான். அவன் பராக்கிரமசாலியாக இருந்ததால் தூண் உடைந்தது. தூசும், மண்ணும் எங்கும் பரவி கண்ணை அடைத்தது. இரணியன் கட, கடவென்று சிரித்தான். "பாரடா! மண்டுப்பையா! ஒன்றுமில்லை" என்றான். அப்போது, எங்கிருந்தோ ஒரு சிங்கத்தின் கர்ச்சனைகேட்டது, என்று சொல்லி சிங்கம் போல் கர்ச்சித்தேன். என் மனைவியே பயந்து போனாள்.பெரிய சிம்மக்குரலோன் சிவாஜின்னு நினைப்பு. குழந்தைகள் பயப்படுது பாருங்க! என்று சொல்லி குழந்தைகளை கட்டிக் கொண்டாள்.குழந்தைகள் அம்மாவின் அரவணைப்பில் சுகந்து கொண்டே காதை கதைக்கு திருப்பினர்.

சிங்கம் வந்ததா! ஆமாம் பெரிய சிங்கம். இரணியன் பெரிய வீரன்தான்,ஆனாலும் அவனே பார்த்திராத சிங்கம். வந்து அவனுடன் மோதி பிராண்டியது. அவன் சண்டை போட்டான், ஆனாலும் சிங்கத்தின் பலம் அதிகமாக இருந்தது. அவனை அங்கம், அங்கமாக கடித்துக்குதறி.....என்று சொல்லும் போதே பசங்கள் பயந்து நடுங்கினர். மனைவி, சீக்கிரம் கதையைக் கொண்டு போங்க, பிராண்டுவதிலேயே நிக்காமல் என்று கண்ணடித்தாள். அது அம்மா,அப்பா பாஷை. குழந்தைகளுக்கு அவசியமில்லை. கதையைத் தொடர்ந்தேன். சிங்கம் குடலைத்திறந்தது. பொளக்கென்று குடல் சரிந்தது. குடலை எடுத்து மலை போட்டுக் கொண்டு பிரகலாதன் இருந்த பக்கம் வந்தது.


இதைச் சொன்னவுடன், கனகா கத்தத் தொடங்கினாள்."இல்லை, இல்லை...அவன் பக்கமில்லை. அது அவனைக் கடிக்கும். அது வேண்டாம்!"என்று முறையிட்டாள். நான் அவர்களை தைர்யப்படுத்தி. கதை அப்படியில்லை. அதில் சிங்கம் இரணியனைத்தான் கடிக்கும், பிரகலாதனைக் கடிக்காது என்றேன். உடனே,குமார் விவரமாக, "அதெப்படி? சிங்கம் எல்லோரையும்தான் கடிக்கும். பிரகலாதனையும் கடிக்கும். இது நல்ல கதையில்லை" என்று என் கதையை முடிக்கப் பார்த்தான். நானா முடிப்பேன்? தொடர்ந்தேன். அப்படியில்லை குமார். பிரகலாதன் நம்பிக்கைப்படி அங்கு வந்தது சிங்கமில்லை. தெய்வம். தெய்வம் கெட்டவர்களைத்தான் அழிக்கும், நல்லவர்களைக் காக்கும். அதனால் பிரகாலாதனிடம் வந்து இரத்தமான வாயால் நக்கிக்கொடுத்து விட்டு வெளியே போய்விட்டது என்றேன். ஆனால் இதை குழந்தைகள் நம்புவதாய் இல்லை. கதைக்கு காலுண்டா என்று இவர்கள் ஆர்வத்தை நம்பிக்கை என்ற சுத்தியால் அடிக்க எனக்கு மனமில்லை. சரி, கடவுள் ஒருவழி காட்டுவார் என்று இருந்து விட்டேன்.

அடுத்த நாள், காட்டு அதிகாரி வீட்டிற்கு வந்திருந்தார். காட்டில் மனிதர்களைக் கொல்லும் சிங்கமொன்று அலைவதாகவும், இரவில் கவனமாக இருக்குமாறும் சொல்லிச் சென்றார். கடவுள் நம்பிக்கை இருந்தாலும் எங்களுக்கெல்லாம் ஒரே கிலி. இரவில் எல்லாக் கதவுகளையும் நன்கு மூடிவைத்தோம். சில நேரங்களில் சிம்ம கர்ஜனை கேட்பது போல் தோன்றும். குழந்தைகள் எங்கள் படுக்கைக்கு வந்துவிடுவர் உடனே.இப்படியாக சில நாட்கள் போன பின்னே, ஒருநாள் அதிகாரி வீட்டிற்கு வந்தார். அந்தசிங்கத்தை சுட்டு கொன்று விட்டதாகவும். அந்த சமரில் ஒரு சிம்மமும் (தாய் சிங்கம்) இறந்து விட்டதாகவும். அப்போது மூன்று சிங்கக் குட்டிகள் கிடைத்தாகவும், வேண்டுமானால் நாங்கள் அவைகளை வளர்க்கலாமென்றும் சொன்னார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

"என்னது சிங்கத்தை வீட்டில் வளர்ப்பதா? என பயந்து கொண்டே கேட்டேன். குமார் இடை மறித்து. "அப்பா, நீங்கள்தானே சொன்னீர்கள், தெய்வ நம்பிக்கை உள்ள இடத்தில் சிங்கம் ஒன்றும் செய்யாது என்று. நாம் சிங்கக் குட்டியை வளர்ப்போம் அப்பா" என்றான். கூடவே கனகாவும் சரி, சரி என்றது. அதற்கு ஏதோ சிங்கம் வளர்ப்பது ஆட்டுக்குட்டி வளர்ப்பது போல் தோன்றியிருக்கலாம்! நான் என் மனைவியைப் பார்த்தேன். அவள்தானே வீட்டின் ராணி! தமிழ் நாட்டுப் பெண்கள் பயந்த சுபாவமுடையவர்கள் என்பது என் எண்ணம். பயந்து போய் வேண்டாம் இந்த வம்பு என்று சொல்லப் போகிறாள் என நம்பினேன். அவள் என்னடாவென்றால், "சரி, வளர்ப்போம்" என்று அதிகாரியிடம் சொல்லிவிட்டாள்.

எனக்குமீண்டும் கலக்கம். இவள் புரிந்து கொண்டுதான் சொல்கிறாளாவென தீர்மானிக்க, "சிங்கம்வளர்ப்பது நாய் வளர்ப்பது மாதிரியில்லே! கடிச்சு சாப்பிட்டிடும். வீட்டுப் பெண்கள் பூனை வளர்க்கலாம், சிங்கமில்லை" என்று சொன்னேன். அவள் ஒரு மந்தகாசத்துடன் சொல்லத் தொடங்கினாள். "நீங்கள் சிங்கப் பெருமாள் கதைதான் சொன்னீர்கள். துர்க்கை கதை சொல்லவில்லை. அதில் அம்பிகையின் வாகனமே சிங்கம்தான்.சங்க காலத்துப் பெண்கள் முறத்தால் புலியை விரட்டி இருக்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பயந்தவர்கள் இல்லை. தமிழ் தேசியப் போரில் தூப்பாக்கி பிடிக்கும் பாதிப்பேர் பெண்கள்தானே?" என்று சொன்னாள். நான் வாயடைத்துப் போனேன்.

அதிகாரி, எத்தனை குட்டிகள் வேண்டுமென்றார். ஆளை விட்டால் ஒரு கிடையே கொண்டு வந்துவிடுவார் என்ற பயத்தில் ஒன்று போதும். இருப்பதில் சாதுவான சிங்கக்குட்டியைக் குடுங்கள் என்றேன். அவர் சிரித்துக் கொண்டே, பெண் குட்டி ஒன்றைத் தந்தார். இதுமிகவும் சூட்டிகையான குட்டி. இருப்பதில் இதுதான் சாது. மற்றதை நாங்கள் ஒரு ஆங்கில குடும்பத்திற்கு கொடுத்து விடுவதாகச் சொன்னார்.

இப்படியாக, சிங்கப் பெருமாள் கதை சொன்ன புண்ணியத்தில் ஒரு சிங்கக் குட்டிவீடு வந்து சேர்ந்தது. அதற்கு துர்க்கா என்று நாமகரணம் ஆனது. நாளொரு கலாட்டாவும்,பொழுதொரு அமர்க்களமுமாக அது வளர்ந்தது. குழந்தைகளிடம் அது உண்மையிலேயே ஒட்டிக் கொண்டுவிட்டது. என் மனைவிக்கோ அது இன்னொரு பெண் குழந்தை என்றாகிவிட்டது. அதன் அன்பையும், பாசத்தையும் பார்க்கும் போது நாய், பூனைக்கும் சிங்கத்திற்கும் அவ்வளவு வித்தியாசமில்லை என்று தெரிந்தது. சிம்மக்குட்டி மாமிச பட்சிணியாக இருந்தாலும் அது எங்களைச் சாப்பிடவில்லை. முதலில் அதுதான் சந்தேகம். இதன் அப்பா வேறு மனிதர்களை முழுங்கிக் கொண்டிருந்தது! இதுவும் நூலைப் போல சேலை, தாயைப் போல பிள்ளைஎன்ற பழமொழிப் படி எங்களை விழுங்கப் போகிறது என்று நினைத்தேன். ஆனால்துர்க்கா எங்களை வேட்டையாடவில்லை. வீட்டிற்கு வருபவர்களுக்குத்தான் சிம்ம சொப்பனமாக இருந்தது!

துர்க்கா பெரியவளாகி விட்டாள். இவள் உடன் பிறப்புகளெல்லாம் வளர்ந்து நகரத்து விலங்குச் சாலைக்கு சென்றுவிட்டன. என் மனைவியும் குழந்தைகளும் துர்க்காவை பிரிவதாகத் தெரியவில்லை. ஆனாலும், கிராமத்து மக்களாலும், மற்ற விலங்கின அதிகாரிகளாலும் விரைவில் அதை பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட வேண்டுமென்ற வேண்டுகோள் உரக்க கேட்கலாயிற்று. மூன்று மாதம் கெடு கொடுத்திருந்தார்கள். என் மனைவி துர்க்காவை மிருகக்காட்சியகத்திற்கு அனுப்ப உடன்படவில்லை. துர்க்கை என்பவள் சுதந்திரத்தின் சக்தி. தீமையை அழிக்க பிறந்தவள். அவளைக் கொண்டு போய் சிறையில் அடைப்பது அடுக்காது என்று சொல்லி மறுத்து விட்டாள்.

மிருகக்காட்சியகத்திற்கு அனுப்பக் கூடாது. வீட்டிலும் வைத்திருக்கவும் கூடாது. பிறகு என்ன செய்வது? நீண்ட யோசனைக்குப் பிறகு, துர்க்காவை காட்டில் விட்டு விடலாமெனமுடிவானது. வீட்டில் வளர்ந்த பிராணியை காட்டில் விட முடியுமா? காட்டு விலங்குகளோடு சண்டை போட்டு தைர்யமாக வாழுமாவென யாருக்கும் தெரியவில்லை. தினம் துர்க்காவை காட்டில் விட்டு பழக்கினோம். முதலில் ஒரு காட்டுப் பன்றியை வேட்டையாட பழக்கினோம்.துர்க்கா வேகமாய் போய் விரட்டினாலும், அதை வெறும் விளையாட்டுப் பொருளாகப் பார்த்ததே தவிர, வேட்டையாடவில்லை. சரி, தனியாக சில நாட்கள் காட்டில்விட்டு வந்தால் தானாக வேட்டையாடும் என்று தொலை தூரத்தில் விட்டு வந்தோம்.ஒரு வாரம் கழித்து போனபோது துர்க்கா இளைத்து துரும்பாய் இருந்தது. என் மனைவி துடித்து விட்டாள். எனக்கும் கோபம்தான். "நீ துர்க்காவை விலங்ககத்திற்கு அனுப்பாமல் பட்டினி போட்டு கொல்லப் போகிறாய்" என்ற சண்டை போட்டேன். ஆனாலும் அவள் கொள்கையிலிருந்து அவளை மாற்ற முடியவில்லை. எப்படியாயினும் துர்க்காவை காட்டு விலங்காக மாற்ற வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தாள்.

மேலும் மூன்று மாதம் கெடு கேட்டு, துர்க்காவை காட்டிற்கு அழைத்துச் சென்றோம்.சிங்கத்திடம் பழக விட்டோம். துர்க்காவிற்கு காதல் வரவில்லை. வேட்டையில் இன்னும் ருசி வரவில்லை. இல்லாத தெய்வங்களையெல்லாம் வேண்டினோம். சிங்கப்பெருமாளையும் சேர்த்து!

ஒருநாள் தீடீரென்று துர்க்காவிற்கு வேட்டையில் நாட்டம் வந்தது. மிருகத்தனமாக வேட்டையாடி காட்டுப் பன்றியைக் கொன்றது. சிங்கங்கள் வாழும் குகையில்விட்டு வந்தோம். பெரிய சமர் நடந்தது. துர்க்கா விட்டுக் கொடுக்காமல் சண்டை போட்டாள். அவள் வெற்றி பெற வேண்டுமென நாங்கள் இறைவனிடம் மன்றாடினோம். துர்க்கா அந்த பெண் தெய்வம் போல் ஒரு நிலையில் வெற்றி கொண்டு குகைக்குள் சென்றாள். துர்க்கா காட்டிற்குப் போய் பல மாதங்களாகிவிட்டன. வீட்டில் மணப்பெண்ணை புக்ககத்திற்கு அனுப்பிய சோகம் இருந்தது. எனக்கும் வேலை மாற்றலாகிவிட்டது. கிளம்பிப் போகுமுன், துர்க்காவை கடைசியாக ஒரு முறை பார்த்து விட்டுப் போகலாமென குடும்பத்தோடு காட்டிற்கு சென்றோம். எங்கு தேடியும் துர்க்கா தென்படவில்லை. கிளம்பும் முன் கையிலிருந்த துப்பாக்கியால் ஒரு வேட்டு வெடித்தேன்.

எங்கிருந்தோ ஒரு கர்ச்சனை கேட்டது. எங்கள் துர்க்காதான். தனியாக அல்ல. மூன்று குட்டிகளுடன். மெதுவாக எங்களை நோக்கி வந்தாள். துர்க்கா இப்போது காட்டு மனுசி. எங்களைக் கொன்று தின்றுவிடுவாளோ? அவள் இரை தின்ற வாயுடன் வந்து நின்றாள். எங்கள் எல்லோரையும் நன்றாகப் பார்த்தாள். என் கை விரல் துப்பாக்கியின் விசையில் தயாராக நின்றது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதைக் கொன்றுவிட. துர்க்கா என் மனைவியைப் பார்த்தாள்.

அவள் கண்கள் கலங்கி ஒரு தாய் தன் குழந்தையைப் பார்க்கும் போது நேர் கொள்ளும் பாவத்தில் இருந்தாள். அவள் காலை அது நக்கியது. அவள் அப்படியே துர்க்காவை அணைத்து தடவிக் கொடுத்தாள். குழந்தைகள் தைர்யமாக அதனிடம் சென்று வருடி விட்டனர். குட்டிகள் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றன. குமார் குட்டிகளை தடவ முன் வந்தான். அம்மா தடுத்து விட்டாள். ஒருசிங்கத்தை தடவித், தடவிக் கெடுத்தது போதும். இவள் குழந்தைகள் காட்டு விலங்காகவே வளரட்டும். தொடவேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

என் மனைவியை அப்போது யாராவது பார்த்திருந்தால் ஒரு கொற்றவைத் தெய்வம் என்றே நம்பி இருப்பர். அவ்வளவு தைர்யம். அவ்வளவு தீர்மானம்.கடைசியாக துர்க்கா என்னிடம் வந்தது. எனக்கு அதற்குள் தைர்யம் வந்திருந்தது. அது என்மேல் அன்புடன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து முகத்தில் நக்கியது. அது என்னைவிட உயரமாக இருந்தது. அந்த நக்கலில் அன்பும், இரத்த வாசனையும் சேர்ந்து இருந்தது!

குமார் சொன்னான், "அப்பா! சிங்கப்பெருமாள் தீயவர்களுக்குதான் சிம்ம சொப்பனம். அன்புடையவர்களுக்கு குழந்தை போன்றவன். அதற்குத்தானே அவதாரம் என்று பொருள்" என்றான்.

எனக்கு தெய்வத்தின் குரலைக் கேட்டது போலிருந்தது.


&&&&&&&
பிகு: இது உண்மையாக நடந்த கதை (என்னையும், என் குடும்பத்தையும் தவிர). Born Free என்ற திரைப்படமாக வந்துள்ளது.

முதல் பதிவு: புலம் (லண்டன்) தை-மாசி 99

மடல் 055: அவதாரங்களை அணுகுவது எப்படி?

First published on: Thu, 29 Apr 1999 14:48:01 -0000

கட்டியம்: தெய்வம் என்னும் கருப்பொருளை வைத்து எழுதப்படும் பாசுர மடல்கள் நாத்திக/அக்நோத்திய அன்பர்களின் உள்ளம் வாடச் செய்தால் மன்னிப்புக் கோருகிறேன்.
அவதாரங்களை எப்படிப் புரிந்து கொள்வது என்பது இப்போது கேள்விக் குள்ளாகிறது. குறள் வடிவில் இறைவன் வந்தான் என்றால் அவன் ஒரு dwarf, genetically deformed என்று கொள்வதா இல்லை அவதாரங்கள் அதன் கதைகளுக்குப் பின்னால் வேறு சேதி ஏதும் சொல்கின்றனவா? முனைவர் லோகநாதன் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது போல் அமைகின்றது இப்பாசுர மடல்.
____________________________________________________________________________

அன்று இரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் போது தியாகராஜரின் வசந்தா இராகத்தில் அமைந்த "சீதம்மா மாயம்மா!" கீர்த்தனையைக் கேட்டுக் கொண்டு வந்தேன், கண்களில் நீர் வழிய! எப்படி உருகி, உருகி சாகித்தியங்கள் செய்திருக்கிறார் இந்த மனிதர். சில நேரங்களில் தோன்றும் அப்படி என்ன அவதி அவருக்கு? சுடர் விடும் மெழுகு துடிப்பது போல துடித்துப் போயிருக்கிறாரே என்று. அப்பாடல்களைக் கேட்கும் போது நம் கவலைகள் சர்வ சாதாரணமாகப் போய் விடுகின்றன.

ஒரு தத்துவவாதியைப் பொறுத்தவரை இராமன் என்பது ஆய்பொருள். அதன் மெய்ப்பாடு, அதன் தோற்றம், அது இலக்கியங்களில் கையாளப்படும் விதம் அதன் அரசியல் கலப்புகள் இப்படி. ஆனால் தியாகராஜருக்கு இராமன் எப்படி? தன் இதய கீதத்தின் ஆத்ம ஸ்வரங்கள்! அவன் இன்றி ஒரு அணுவும் அவரைப் பொறுத்தவரை அசைவதில்லை. அந்த திண்ணத்தில், அந்த அசைக்க முடியாத நம்பிக்கையில் விழுகின்றன சாகித்யங்கள். இராகங்கள் காத்திருக்குமாம் என்னைப் பாடு, உன்னைப் பாடு என்று!! அந்த மனிதன் செய்த பக்தி இன்று எத்தனை ஆயிரம் உள்ளங்களை பண்படுத்துகிறது! Cleveland-ல் தியாகராஜ உற்சவம். அன்று கீலுக்கு வந்திருந்த சுதா ரகுநாதனின் பக்க வாத்தியக்காரர் சொன்னார், " Cleveland-ல் நல்ல பெயர் வாங்கிவிட்டால், அது பெரிய சான்றிதழ்" என்று. இப்படி நாடு கடந்து நாடு செல்லும் தியாகராஜரின் புகழுக்குக் காரணம் எது? பக்தி! இராம பக்தி! இராமனின் அவதாரத்தைப் பற்றி ஆராய்வதைவிட இராம பக்தி செய்து விடுவது பல மடங்கு மேல் :-) அதனால்தான் சிவ பெருமான், "ஸ்ரீராம, ராம ராமேதி.....என்று சொல்லி ஆயிரம் நாமங்களில் இராம நாமம் மிகச் சிறந்தது என்கிறார்.

தியாகராஜருக்கு ஏன் போகவேண்டும்? நாம் அறிந்த கல்கி (அதான் பொன்னியின் செல்வன் கல்கி - மன்னிக்க, நீங்கள் ஒரு இலக்கியவாதியின் ஆன்மீக நோக்கைக் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் :-)) கல்கி செய்வித்த "காற்றினிலேவரும் கீதம்" பாட்டு! சுதா எனக்கிருக்கும் நம்மாழ்வார் பக்திக்குப் பரிசாக அன்று வசந்தா இராகத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் மேல் ஒரு பாடலும், காற்றினிலே வரும் கீதம் பாடலும் பாடினார். அந்தப் பாட்டின் பொருள் புரிந்து நெகிழக் கூடிய ஒரே தமிழன் அன்று நான்தான். ஆனால், பெரும் ஜெர்மன் கூட்டமே நெகிழ்ந்து போய், குழலோசை கேட்ட ஆவினங்கள் போல் மெய் மறந்து இருந்ததை நான் அன்று கண்ணாறக் கண்டேன். என் கண்ணனின் மாயா லீலையையும் கண்டேன்! வெறும் இசைக்கு மயங்குகிறார்கள் என்றால் அவர்கள் முன்னமே மயங்கியிருக்க வேண்டும். ஆனால் இந்தப் பாட்டு செய்த மாயம் என்ன? அதன் பொருள் அவர்களுக்கு எப்படி விளங்கியது? கண்ணனுக்குத்தான் வெளிச்சம்!!

கண்ணனும், இராமனும் அவதாரங்களாய் வரவில்லை எனில் இன்று இந்த லயிப்பு இல்லை. இன்று உலக காவியங்களில் தனிச்சிறப்புற்று இருக்கும் மகாபாரதம் இல்லை, இராமாயணம் இல்லை! ஆராய்ந்து கொண்டே இருக்கலாம்தான். வெங்காயம் மாதிரி ஆராய, ஆராய ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. ஆனால் சிந்தும் சில கண்ணீர் துளிகள் (வெங்காயக் கண்ணீர் அல்ல! அன்புக் கண்ணீர்!) நாம் ஆராய்வதால் அடையும் பயனை தூக்கி சாப்பிட்டு முழுங்கி விடுகின்றன.

ஆழ்வார்களும், தமிழின் பெரும் கொடையாக வந்த ஆசார்ய்ய பரம்பரையும் அவதாரம் என்பதை நீங்கள் சொல்லும் சாதாரண அர்த்தத்தில் புரிந்து கொண்டிருப்பார்கள்- அதுதான் திருமாலியம் - என்று நீங்கள் சொல்வது நம் பண்பாட்டுச் செழுமையை நாமே அவமதிப்பது போலாகும். அவதாரங்கள் Metaphor-என்பதை மிகத் தெளிவாகத் தெரிந்தேதான் அதை முன் வைத்து பக்தி இயக்கத்தை நடத்திச் சென்றனர்.

அவதாரம் என்னும் கருத்து எப்படி சைவ, வைணவ பாரம்பரியத்தில் எடுத்தாளப் படுகிறது எனக் காண்போம்.

1.
நீள்வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலிமண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானைத்
தோளா மணியைத் தொண்டர்க் கினியானைக்
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே?
(பெரிய திருமொழி)

திருமால் குறளுருவாய் (வாமனாவதாரம்) வந்து அணுவுக்குள் அணுவாய், அப்பாலுக்கு அப்பாலாய் இருப்பதும் அவனே என்று காட்டிய நிகழ்ச்சியைச் சொல்கிறது இந்த அவதாரம்.
இதே கருத்தை திருமூலர்

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண்டிலர் மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே (16)


என்கிறார். சைவ சித்தாந்தத்தின் ஆரம்ப கர்த்தாவான திருமூலர் சொல்லும் கதையை யாரும் சரித்திர பூர்வமாகப் பார்ப்பது இல்லை. பரம்பொருளின் அடியும் முடியும் அளவிட முடியாது என்பதுதான் இந்த ஐதீகங்கள் (myths) சொல்ல வருவது என்று கைக்குழந்தை கூட புரிந்து கொள்ளும்.

2.
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கப்பொழுதே அவன் வீயத் தோன்றிய, என்
சிங்கப்பிரான் பெருமை யாரயும் சீர்மைத்தே
(திருவாய்மொழி 2.8.9)


கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றுதான் நான் கதை கேட்டுப் பழக்கம். இதையேதான், சிவனும் பாண்டியன் இட்ட பிரம்படிக் கதையால் எல்லோருக்கும் சொல்ல வருகிறார். யாரும் சிவன் எப்படி மானுட உடம்பு கொண்டு வந்தார். அவர் மானுட உடம்புடன் வந்தார் என்றால் மனித மலங்கள் அவரை ஒட்டிக் கொள்ளாதா எனக் கேட்பது இல்லை. யானைத் தலையும், மனித உடம்புடைய பிள்ளையாரை யாரும் கேள்வி கேட்பதில்லை. சிங்கபிரானை மட்டும் கேள்விக்கு உள்ளாக்குகிறார் முனைவர் லோகநாதன். குறிஞ்சித் தலைவன் செய்யாத குறும்பா? வள்ளியை மணம் புரிய அவர் செய்த விளையாட்டு. அவர் அவதரித்த கதைகள். இதையெல்லாம் யாரும் சரித்திரம் என்று காண்பதில்லை.

3.
அவதாரங்கள் Metaphor என்று தெரிந்ததால்த்தான் நம்மாழ்வார் கற்று உணரவேண்டும் என்று விரும்புபவர்கள் இராமனையும், கேட்டு அனுபவிக்க வேண்டும் என்பவர்கள் கேசவனின் கதையையும் கேட்க வேண்டும் என்று சொல்கிறார்.

கற்பார் இராம பிரானை அல்லால் கற்பரோ? (திருவாய்மொழி- 7.5.1)
கேட்பார் கேசவன் கீர்த்தியல்லால் மற்றும் கேட்பரோ (தி.மொழி 7.5.3)

இதை விளக்கப் புகும் ஈடு முப்பதாயிரப்படி, "ஒவ்வொரு குணத்தை அனுபவிக்கப் புக்கால் வேறு குணங்களில் கால் வாங்கமாட்டாதவாறு போலே ஆயிற்று" என்று சொல்கிறது. யாரும் அவதாரங்களை literal-ஆகப் பொருள் கொள்வதில்லை. உண்மை இப்படி இருக்க, அறிஞரான லோகாநாதன் வைணவத்தைப் பழிப்பானேன்? அவர் ஆசை வைத்திருக்கும் சைவ சித்தாந்தம் கண்ணை மறைக்கிறதா? ஆசை அறுமின், ஆசை அறுமின் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின் என்று சொல்வது சைவ சித்தாந்தம்தானே?

ஆக தமிழ் வைணவமும், தமிழ்ச் சைவமும் அவதாரம்/திருவிளையாடல் என்பதை metaphor என்ற அளவில்தான் கையாளுகின்றன. வாக்கிற்கும், மனத்திற்கும் எட்டாத பொருளைப் பற்றிப் பேசும் போது metaphor உதவுகிறது. ஒன்றை வைத்துதான் ஒன்றைச் சொல்ல முடியும். நேரடியாக விளக்க முடியாது. அதனால்தான் கந்தக் கடவுள் அருணகிரியாரிடம் "சொல்லற, சும்மா இரு" என்றார். அதையே நான் சொன்னால் மழுப்புவாதம் என்றாகிவிடும் :-))

அவதாரம் 1, 2 என்று நீங்கள் சொல்லும் இரண்டின் உளவியல் காரணமும் ஒன்றுதான். திராவிட மெய் இயலின் அடிப்படைக் கூறு அவதாரம் என்பது. மற்ற இந்திய மொழிகளை விட தமிழ் ஒன்றில்தான் ஒரு வார்த்தைக்கு ஆயிரம் பொருள் வைத்துப் பேசும் வழக்கம் உள்ளது. அதே போல் ஒன்றைச் சொல்ல வேண்டுமெனில் அதை அப்படியே சொல்லாமல் அதற்கொரு கவித்துவம் கொடுத்து கொஞ்சம் வேறொன்றை வைத்துச் சொல்வது. அதாவது தமிழ் வழக்கில் Metaphor-என்பது இட்லி, தோசை போல் இரண்டறக் கலந்து உள்ளது:-)இப்படித்தான் மச்சா அவதாரம், நரசிம்ம அவதாரங்கள் கவித்துவத்துடன் கதைகளாய் சொல்லப் பட்டு, பின் தத்துவ மெருகேற்றப் பட்டு வெளிவந்திருக்க வேண்டும். Magical realism என்று இன்று பிரபலப் படும் இலக்கிய வகையின் பூர்வ தாத்தாக்கள் தமிழர்கள்! Magic இல்லாமல் ஒரு கதை உண்டோ நம் மண்ணில்? (விட்டலாச்சார்யாவை விடுங்கள்:-) கடலில் இருந்துதான் உப்பு வருகிறது, உணவு வருகிறது, முத்து வருகிறது. இதை Poetical-ஆகச் சொல்ல வந்தால் மச்சாவதாரம் வந்து சேரும். அதாவது ஒன்றைச் சொல்ல ஒன்று வருவது.

கூர்மாவதாரம் காடுகளில் வேட்டை ஆடித் திரிந்த மனிதன் நிலத்தை உழுது பயண்படுத்தும் காலத்தில் தோன்றிய ஐதீகமாக (myth) இருக்கலாம். இப்படித்தான் ஒவ்வொரு அவதாரமும். ஆனால் myth என்பதின் வாசிப்பு (mythical reading) எப்படி இருக்க வேண்டும்? ஐதீகம் என்பதை சரித்திர உண்மை என்று சொல்லப் புகுந்தால் அது "பொய்" என்று ஆகிறது. எனவே அவதாரங்கள் பொய் ஆகும். ஆனால் myth என்பது Metaphor என்று பார்த்தால் அதன் வல்லமை புரியும். myth என்பது நம் ஆழ்மனத் தேடுதலின் காவிய வெளிப்பாடு. இல்லை என்றால் கம்பன் போன்ற ஒரு மகா கவி, தனது கவித்துவத்தையும், நேரத்தையும் ஒரு "பொய்" யை பின் புலமாக வைத்து ஒரு காவியம் செய்திருப்பானா? அப்படியேதான் இருந்திருந்தாலும் அது இன்று ஆத்திக/நாத்திக அத்தனை தமிழர்களின் உள்ளத்தையும் தொட்டுத்தான் இருக்குமா?

நடு கல் வைத்து தமிழ் நிலத்து வீரனை கடவுளாக்குவது தமிழ் மரபு. அவதாரங்களின் தோற்றம் இந்த உளவியலில்தான் உள்ளது.

இரண்டாவது, அவதாரங்களுக்கு ஒரு democratic, non-discriminatory பண்பு உண்டு. அதாவது கடவுள் என்பது உச்சியில்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பதுதான் அது. அதாவது மனித மனம் எப்போதும் பிரிவினை செய்கிறது. பிரித்துப் பார்க்கிறது. discrimination என்பதுதான் நிறவெறியாக, மத வெறியாக, இன வெறியாக, சாதி வெறியாக வெளிப்படுகிறது. இந்த அவதாரங்கள் என்ற myth பிரதானப் படுத்தப் பட்ட கால கட்டத்தைப் பார்த்தால், தமிழகத்தில் சாதி வெறி ஓங்கி, வர்க்கங்கள் பிரிந்து, நில உடமைச் சமுதாயம் (feudal) சீர்கெட்டுப் போயிருந்தது தெரியும். சங்க காலத்தில் சிறப்புடன் இருந்த பாணர்கள், திருப்பாணாழ்வார் காலத்தில் தீண்டத்தகாதவர் ஆகி விடுகின்றனர்! சுவாமி புறப்பாட்டிற்கு ஜவ்வாது கொண்டு வரும் புலையன் இறந்த மாட்டுடன் உறவு கொண்டாடுவதால் தீண்டத் தகாதவன் ஆகிவிடுகிறான். ஜவ்வாது கொண்டு வரும் உரிமையில் சிதம்பரம் சென்ற நந்தனார் தடுத்து நிறுத்தப் படுகிறார். இதை எப்படி முறியடிப்பது?

அவதாரம் கை கொடுக்கிறது. கடவுளே மனிதனாகப் பிறந்து நம் இன்ப துன்பங்களில் பங்குற்றால்? கடவுளும் நம் போல் விதி வசப்பட்டு உழன்று தவித்தால்? (அதாவது உழன்று தவிப்பது ஒரு நடிப்பு என்று அவருக்கு உள்ளுணர்வாய்த் தெரியும், சாதாரணனுக்கு அது தெரியாது. இது குறித்த நம்மாழ்வாரின் பாடலை பின்னால் தருகிறேன்) ஒரு நொடியில் கடவுள் நம் கைக்கு கிடைத்து விடுகிறார்! அதனால்தான் காந்தி, "ஏழையின் ஒரே உடைமை கடவுள்" என்று சொன்னார். அவதாரம் என்பதை சங்க காலத்தில் இழிதல் என்று பயன் படுத்தி உள்ளனர். இன்று "இழிசனன்" என்பதை தீண்டத் தகாதவன் என்று பயன்படுத்தினாலும், சங்கத் தமிழர் இழி சனன் என்பதை தெய்வம் இழிந்து வரும் சனம் என்ற பொருளில் பயன்படுத்தினர். அதாவது, சாமி இறங்கி வந்து ஆடுபவர்கள்-சந்நதமாடிகள்! அதனால்தான் இறங்கி வந்த சாமி "மலை ஏற" வேண்டி உள்ளது!

இந்த கருத்தாக்கத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்தியவர் மாமுனி இராமானுசர். காவிரியில் குளிக்கப் போகுமுன் (தூய்மை இல்லாமல்) அந்தணச் சீடர்கள் தோள் பற்றி, குளித்து வந்த பின் உறங்காவில்லிதாசர் (அந்தணர் அல்லாத) தோள் பற்றி வந்து வைணவத்தில் சாதீயத்திற்கு இடமில்லை என்று காண்பித்தார். இன்றளவும் அவர் செய்வித்த தென்கலை சம்பிராயத்தில் சங்கு, சக்கரம் தோள் பதித்த எவன் ஒருவனும் சாதி பேத மில்லாமல் மற்றவனுக்கு உணவு இட, அதைச் சாப்பிடும் பழக்கம் உள்ளது! வைணவம் செய்த அளவிற்கு மெய்கண்ட சாஸ்திரமுடைய சைவத்தால் இன்றளவும் சாதிக்க முடியவில்லை!

கடவுளே இழிசனனாக இருப்பதால் (இழிந்து வருபவனாக உள்ளதால்) இழிசனன் பேசும் தாய் மொழிக்கு வைணவத்தில் என்றோ முதல் இடம் கொடுக்கப் பட்டு உள்ளது. நீங்கள் இன்று மெய் மறை என்று பேசும் தேவாரமும், திருவாசகமும் வசந்த மண்டபத்தில் வைத்துத்தான் இன்றளவும் ஓதப் படுகிறது. அதை ஏன் கருவறைக்குள் இன்றளவும் நுழைக்க முடியவில்லை? நானும் கேட்கலாம்தானே?

நாதமுனிகள் வேதம் கற்ற நல்ல அந்தணர். மற்றவர்கள் போல் வேதத்தின் புகழ் பாடிக் கொண்டு காலத்தைக் கழித்து இருக்கலாம். ஆனால் அவர் ஏன் பிறப்பால் அந்தணர் இல்லாத நம்மாழ்வாரின் பாடலில் மயங்கி. ஊர், ஊராய் அலைந்து நாலாயிர திவ்யப் பிரபந்தங்களையும் சேர்த்தார். வேதங்களையும் விட மெய்பொருள் ஞானம் தேனில் இனிமை போல் நாலாயிர திவ்யப் பிரபந்தங்களில் ஊறிக் கிடப்பதைக் கண்டுதான்.இதை அறிந்துதான் வேத பண்டிதரான வேதாந்த தேசிகர், "தெளியாத மறை நிலங்களை" தமிழ் பாசுரங்களைக் கற்றதால் அறிந்து கொண்டேன் என்கிறார். உண்மை இப்படி இருக்கும் போது, நீங்கள் "அடிப்படையில் எழும் ஏனைய தத்துவ விளக்கங்களும் குறைபாடு உடையவைகளாகத் தானே இருக்கமுடியும்? ஆகவே இவ்வாறான குறைகள் அற்ற தேவாரங்களையும் திருமூலரின் திருமந்திரத்தையும் மெய்கண்ட சாத்திரங்களையும் ஓதித் தெளிவதே சிறப்பு என்று எண்ணுகின்றேன்." என்று சொல்வது மதம் மாறிய ஒருவர் பேசுவது போல்தான் எனக்குப் படுகிறது (மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆசாமி நான்! மதம் மாற்று வித்தைகள் கண்டு அறிந்தவன்:-))

"இவ்வாறு அவதாரங்கள் எடுத்து பல்வேறு அவதாரங்களாகவே விளங்கும் தெய்வம் வாக்குமனாதீத கோசரமாக அனைத்திற்கும் அப்பாலாக, அனைத்தொடும் அநந்நியாமாக நின்றாலும் யாதினொடும் தொடக்கற்று நின்று தன் ஆணைவழியே அனைத்தையும் செலுத்தும் பராபரனாக இருக்கமுடியாதைக் காண்க. ஓர் அரசனைப் போன்று தன் ஆணைவழி அனைத்தையும் செலுத்தும் பராபரனை அவதாரக்கோட்பாடு காணமுடியாது செய்துவிடுகின்றது. இதனால் தான் உள்ளதாகிய பஞ்சகிருத்தியங்களையும் அவற்றின் முதல்வனாகிய சங்கார காரணனையும் வைணவர்கள் காணமுடியாது விழுகின்றனர்."

இப்படி மாற்று மதத்தினர் பேசலாம். முனைவர் கிருஷ்ணன் லோகநாதன் பேசலாமா? தமிழ் வைணவம் வீழ்ந்தால் தமிழ்ச் சைவமும் வீழ்ந்துவிடும். இரண்டும் உடலும் உயிரும் போலும் தமிழ் மண்ணில் வளர்ந்திருக்கின்றன.

நம்மாழ்வார் தெள்ளத் தெளிவாக திருவாய்மொழி 7.5.4 சொல்கிறார், "பல விதமாய்ப் படர்ந்திருக்கும் பொருள்களுள் ஒன்றும் இல்லாதபடி அழிவு அடைந்த காலத்து, முன் வாசனை அழியும்படி தன்னுள்ளே கலந்திருந்த எல்லாப் பொருள்களையும் தோற்றுவித்த விரகுகளைச் சிந்தித்து, உலக காரணனாய் இருக்கும் தன்மையை அறிகின்றவர்கள்தாம், காரணப் பொருளான கண்ண பிரானுக்கு ஆள் ஆவாரே அன்றி மற்று ஒருவர்க்கு ஆள் ஆவாரோ?"

நாரணன் என்ற சொல்லுக்கு விளக்கம் கொடுக்கும் போது அழியாத பொருள்களின் இருப்பிடமாக இருப்பவன் என்று சொல்வார்கள். தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்து உழலும் ஒரு சக்திக்கு அவதாரமாக, ஒரு நடிப்பாக வருவது எவ்வளவு சாதாரண விஷயம். இதைத் திருவிளையாடல் என்று சொன்னால் என்ன? அவதாரம் என்றால் என்ன? நாம் கற்பனையாகவேனும் முன்பு ஒரு காலத்தில் தமிழகத்தில் நடந்த வைணவ, சண்டையை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டாம். அது வெல்ல முடியாத யுத்தம்!

இவையும் அவையும் உவையும்
இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்னுள்ளே
ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்
கண்ணபிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன்
என்னுடைச் சூழலுளானே
(1.9.1)


அவதாரம் என்பது அழகான ஒரு கோட்பாடு. அதை கவித்துவத்துடன் (with an inherent poetical licence) பார்க்கப் பழகிக் கொண்டால் பிரச்சனையே இல்லை. சொல்லினால், மனத்தால் எட்ட முடியாத, அளவிட முடியாத பரம் பொருளை கால, இட பரிமாணத்தில் கொண்டு வந்து அனுபவிக்கும் முறைதான் அவதாரம் என்ற கோட்பாடு. அவதாரம் என்பது ஒரு தியான முறை. பக்தி யோகத்தின் மூச்சாக கண்டு கொள்ளப் பட்டது அவதாரம் என்ற கோட்பாடு.

உங்களுக்கு மெய்கண்டாரை முதன்மைப் படுத்த வேண்டும் என்றால் தாராளமாகச் செய்யுங்கள். திவ்யமாய் கேட்கிறோம். அதற்காக பல்லாயிரம் ஆண்டுகளாய் தமிழ் மண்ணில் செழித்து, வளர்ந்த ஒரு சமய மரபை குறை உள்ளது, குறை உள்ளது என்று பழிக்காதீர்கள். அது நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது போலாகிவிடும்! நீங்கள் வைணவராக மாற வேண்டும் என்றோ, வைணவம் பற்றி முன்பு நான் எழுதிய பாசுரமடல்களைப் பாருங்கள் என்றோ நான் சிபாரிசு செய்யப் போவதில்லை. அது நீங்கள் பேசும் ஆணவ கோசமாகப் போய்விடும். ஆனால் உண்மைக்கு பல பரிமாணங்கள் உண்டு என்பதை மட்டும் அனுமதியுங்கள் என்று கூறி இதை இப்போதைக்கு முடிக்கிறேன்.


(அர்ச்சாவதாரம் என்ற உன்னத தமிழ் கோட்பாடு பற்றி பின்பு பேசுவோம்).

மடல் 056: உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்!

First published on: Mon, 10 May 1999 13:06:17 -0700 (PDT)

கங்கையிற் புனிதமான காவிரி மெல்ல, யசோதை கண்ணனை அணைத்துத் தூங்குவது போல், அடலொளி திகழ் தரு திகிரியந் தடக்கை அரங்கத்தம்மான் பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருவரங்கத்தை அணைத்துச் சென்றாள். அது காலைப் பொழுது:

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்
கனவிருளகன்றது கலையம் பொழுதாய்
மதுவிரிந் தொழுகின மாமலரெல்லாம்
வானவ அரசர்கள் வந்து வந்தீண்டி
எதிர் திசை நிறைந்தன இவரொடும் புகுந்த
இருங்களிற்றீட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்றுளது எங்கும்
அரங்கத் தெம்மா! பள்ளி எழுந்தருளாயே!!
(திருமாலை 2, 1)அந்தரத்து அமரர்கள் கூட்டம் ஒரு புறம், அருந்தவ முனிகளின் கூட்டம் ஒரு புறம், இந்திரன் முதலாய வானவர் ஒருபுறம், சுந்தரர், நெருங் கவிச்சாதரர் இப்படி பலரும் எம்பெருமான் கோயில் வாசலில் திருப்பள்ளி எழுச்சி சொல்லிக் கொண்டிருக்க, கலியின் துயர் தீர்க்க தூப்புல் என்னும் ஊரில் அவதரித்து வேதாந்த தேசிகனாக மலர்ந்த வேங்கடநாத குரு தனது சிஷ்ய கோஷ்டிகளுடன் பிரபந்தம் சொல்லிக் கொண்டு கோயிலுள் நுழைகிறார்.

வானவியல், ரசவாதம், உயிரியல், மருத்துவம், கட்டிடக்கலை, இசை, லலித கலை, சட்டம், இலக்கியம், தருக்கம், மீமாம்சம், வியாக்கரணம், வேதாந்தம், என்று எந்தத்துறையிலும் கொடிகட்டிப் பறந்த அவருக்கு சிஷ்ய கோஷ்டி பெரும் அளவில் கூடியது ஆச்சர்யமில்லைதான். தமிழ்வானில் தாரகையாய் 120 வருடங்கள் பிரகாசித்து மறைந்த இராமானுசருக்குப் பின் 131 ஆண்டுகள் கழித்து வரும் வேதாந்த தேசிகர், இராமானுசரின் பிரதம சீடர்களில் ஒருவரான கடாம்பி ஆசான் குடும்பத்தவர். இத்தனை பெருமைகள் இருந்தும் அவரைக் கேட்டால், "சிலருக்கு பற்றிக் கொள்ள கர்மம் இருக்கிறது, சிலரோ ஞானத்தை விடாப் பிடியாய் பிடித்துள்ளனர். நமக்கு பற்றிக் கொள்ள இருப்பது அரங்கன் அடியார்களின் திருப்பாதம்தான்" என்பார்.சரியாகச் சொல்வதானால், 1327ம் ஆண்டு! தானுண்டு, தன் திருப்பணி உண்டு என்றிருந்த வேங்கடநாதனை சோதிக்க அரங்கன் திருவுள்ளம் கொண்டான். சீடர்கள் அன்று காலை சொன்ன சேதி அவ்வளவு இனிப்பாக இல்லை. அலாவுதீன் கில்ஜியின் கொடூர சேனாதிபதியான மாலிக்காபூர் திருச்சிவரை வெற்றிவாகை சூடி வந்துவிட்டான். வரும் வழியெல்லாம் கொள்ளை, கொலை, கொடூரம். அடுத்த இலக்கு, வைரமும், தங்கமும் சொரிந்து நிற்கும் திருவரங்கம்தான் என்று எல்லோரும் புலம்பினர்.

வேக, வேகமாக காரியங்கள் நடந்தன. வயது முதிர்ந்த நிலையிலும் பிள்ளை லோகாச்சாரியாரும், அவரது சீடர்களும் நம்பெருமாளை பல்லக்கில் போட்டுக் கொண்டு தெற்கு நோக்கி நகர்ந்து விட்டனர். பெரிய பெருமாளின் சந்நிதியை செங்கல் வைத்து மறைத்து விட்டனர். கொல்ல வந்த புலியை முறத்தால் விரட்டிய பெண்டிர்கள் கொண்ட தமிழகம் தன் வீரத்தை இன்னும் மறந்து விட வில்லை என்று தன் உயிரைத் திரணமாக மதித்து ஒரு கோஷ்டி வடக்கு நோக்கி நகர்ந்தது. வைணவ இலக்கியங்களை சுமந்து கொண்டு வேங்கடநாதர் வடமேற்கு திசை நகர தலைப்பட்டார்! தற்போதைய கர்நாடகாவில் இருக்கும் சத்தியமங்கலம் செல்லும் வழியில் தேசிகர் கண்டதெல்லாம் பிணக் குவியல்தான். இரத்த வெள்ளம் ஆறாய் ஓட நரியும், பிணந்தின்னிக் கழுகளும் ஆட்டம் போட்டுக் கொண்டு நின்றன.

அவர் இம்மாதிரி ஒரு காட்சியை தன் வாழ் நாளில் கண்டதில்லை. இது என்ன சோதனை?

உடம்பினால் குறைவில்லா
உயிர் பிரிந்த மலைத் துண்டம்
கிடந்தன போல் துணி பலவா
அசுரர் குழாம் துணிந்துகந்த
தடம் புனல் சடைமுடியன்
தனியொரு கூறமர்ந்துறையும்
உடம்புடையான் கவராத
உயிரினால் குறைவிலமே!

என்ற திருவாய்மொழியை நினைவு படுத்தவா இக்காட்சிகள்? எம்பெருமானே! நான் பயம் என்ற ஒன்றை இதுமுன் அறிந்ததில்லை, இதுவென்ன கடுஞ் சோதனை? என்று அலற்றியவாறு தேசிகர் கடிது நடந்து, சோர்வுற்று பிரம்ம தந்திர சுதந்திர சீயர் முதலிய முதலிகள் தொடர சத்தியமங்கலம் வந்து சேர்ந்தார்.

பயம் என்பது பல்வகையானது. தொன்று தொட்டு உயிரின் ஊடாக ஒன்றிவிட்ட உயிரிப் பயம் (biological fear) முதல். பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் பயம் இது. பாலூட்டிகளுக்கு முன் தோன்றிய ஊர்வன (reptiles), பாலூட்டிகள் தோன்றிய காலத்தில் அவைகளை அழித்து உண்ட நூற்றாண்டு பயம் இரத்தில் ஊறுவதாக கார்ல் சாகன் ஒரு புத்தகத்தில் கூறுகிறார்.

புயலும், மின்னலும் இன்ன பிற இயற்கை தோற்றுவிக்கும் பயம் ஒருவகை. மனிதன் குகைகளில் ஒண்டி வாழ்ந்த காலத்திய "தொடர் கதை" போன்ற பயம்.

பின், உறவுகள் சார்ந்த பயம் பலவகை. மனைவி/கணவனைக் கண்டு பயத்தல், பிள்ளைக்குப் பயத்தல், கோல் தாங்கும் ஆசிரியருக்குப் பயத்தல், அறம் பாடும் புலவர்க்குப் பயத்தல், மந்திரம் ஏவும் மாந்தீரிகனுக்குப் பயப்படுதல், துஷ்ட தெய்வங்களுக்கு பயத்தல், கோளுக்குப் பயத்தல், எதிர் காலத்திற்குப் பயத்தல். மரண பயம், சொர்க்கம்-நரகம் பற்றிய பயம். இப்படி பயம் என்பது எண்ணெயில் ஊறிய திரியாய் நம்முள் தோய்ந்து நிற்கிறது.

தேசிகர் சத்திய மங்கலத்தில் வாழ்ந்த நாற்பது ஆண்டுகளில் பயம், அச்சம் பற்றி நிரம்ப சிந்தித்தார். அவரது தியானம் மெல்ல, மெல்ல "அபிஹிதி ஸ்தவா" என்ற நூல் ஆகியது. அதில் பயத்தின் அடிப்படைகளை ஆராய்கிறார். பயத்தை வெல்லும் உபாயங்களை நுணுக்கி ஆராய்கிறார். தெளிவு வந்தது போல் தைர்யம் வந்த பின்னும் எதிர்பாராத நேரத்தில் வந்து தாக்கும் பயம் பற்றி ஆராய்கிறார். இவரது ஆய்வுகள் தற்போதைய உளவியல் ஆய்வுகளுடன் பெரிதும் ஒத்துப் போவதாக இந்திய மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

அச்சம், பயம் பற்றி தமிழக சமயங்கள் ஆதி காலம் தொட்டு பேசி வருகின்றன. மனத்தில் இருக்கும் பயத்தை நீக்கி அங்கு தைர்யத்தையும், நம்பிக்கையை ஊட்டும் வண்ணம் பல்வேறு தெய்வ வடிவங்களை நிறுத்தி தியானம் செய்யச் சொல்லி ஒளவை தன் "விநாயகர் கவசம்", பாலதேவராயர் தன் "கந்தர் சஷ்டி கவசம்" போன்ற நூல்களில் சொல்லி உள்ளனர். இவை இன்றளவும் உளவியல் ஆலோசனைகள் பிரபலமில்லாத தமிழகத்தில் பிரபலமாக உள்ளது அதன் பயன்பாட்டிற்கு சாட்சி. மகாகவி பாரதியும் வாய்க்கு, வாய் அச்சம் பற்றிப் பேசுகிறார். "அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பது இல்லையே" என்ற பாட்டு எல்லோருக்கும் தெரியும். ஜய பேரிகை முழக்கத்தில் முதலாவதாக "பயம் என்னும் பேய்தனை அடித்தோம்" என்று கூறுகிறார். ஓடி விளையாடு பாப்பா! என்ற பாடலில் அவர் குழந்தைக்குச் சொல்வது நம் எல்லோருக்கும் பொருந்தும்.

பாதகஞ் செய்பவரைக் கண்டால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்து விடு பாப்பா! அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!
துன்பம் நெருங்கிவந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத் துணை பாப்பா!-ஒரு
தீங்கு வர மாட்டாது பாப்பா!

நம்பினார் கெடுவதில்லை என்று இந்திய சமயங்கள் சொல்கின்றன. இந்த உளவியல் உண்மையை வைணவம் தெய்வத்திடம் சரணம் அடைவதன் மூலம் அடையலாம் என்று சொல்கிறது.

சரணாகதி செய்யும் வகையை நான்காகப் பிரிக்கிறார் தேசிகர். 1. பூமி தேவி வராக மூர்த்தியிடம் செய்வித்த சராணாகதி. அதாவது, எழும்பவே முடியாது என்ற பாதாளக் குழியில் விழுந்து விடும் நேரத்திலும் தெய்வத்தின் துணையால் வாழ்வில் மேலே வருதல்,

2. இராம சரணம் - அதாவது சத்துரு என்பவன் வேறெங்கும் இல்லாமல் தன்னிடத்திலோ, தன் சுற்றார் இடத்திலோ இருக்கும் உண்மையை அறிந்த பின், சுற்றத்தை நம்புவதை விட எதிரி நல்லவன் என்று தெரிந்தால் அவனை நம்புவது. தனது படைத் தளபதிகளான சுக்ரீவன் முதலானோர் சொன்ன பின்பும் தன்னிடம் சரண் என்று வந்தவனை இராமன் ஏற்றுக் கொள்கிறான்,

3. காண்டீபம் ஏந்தி சமர் புரிய நிற்கும் அர்ச்சுனன் உறவுகளைக் கண்டு மயங்கி, போர் புரிய மறுக்கும் நிலையில் கண்ணனிடம் சரண் அடைந்து கீதை உபதேசம் பெறுவது. அதாவது, உலகின் சூத்திரதாரியாக ஒருவன் இயக்கிக் கொண்டுள்ளான் என்ற சிந்தனை மறந்து, தன் முனைவில் காரியத்தில் இறங்கி விட்டு, பின் எதிர் கொள்ள வேண்டிய சாவாலைக் கண்டு பயந்து நடுங்கும் போது சர்வமும் தெய்வத்தின் அருளால் நடை பெறுவதை உணர்ந்து செய்ய வேண்டிய காரியத்தில் மனத் தெம்புடன் செயல் படுவது,

4. கணையாழி பெற வேண்டி வந்து நிற்கும் அநுமன், ராட்சசி கூட்டத்தை கூண்டோடு அழிக்க முற்படும் போது சீதை நாச்சியார், "பகைவனுக்கு அருள்வாய்! நன் நெஞ்சே!" என்று பகைவருக்கும் அபயம் அளிக்கும் வகையைச் சொல்வது. கருணைத் தாயான ஸ்ரீதேவி பாரபட்சமில்லாமல் தனது படைப்புலகை காக்க எண்ணும் காரணத்தால் அமைவது இது. இதில் காத்தல் என்பது வேறு எந்த நோக்கும் இல்லாமல் காக்கும் கருணையால் ஆவது. இது மிக, மிக உயர்ந்தது. இந்த நிலை வரும் போது பயம் என்பது சுத்தமாக போய் விடுகிறது.

நாற்பது வருட அஞ்ஞான வாசத்திற்குப் பின் செஞ்சியைச் சார்ந்த கோபன்னராயர் திருவரங்கத்தை துருக்கியரிடமிருந்து மீட்க, தேசிகர் அவர் வேண்டிய படியே திருவரங்கம் வந்து சேர்கிறார்.

தெய்வம் என்பது பல கஷ்டங்களை வாழ்வில் கொடுப்பது, நமது மனோ திடத்தை சோதிக்கத்தான் என்று சொன்னால் மிகையாகாது.

வேதாந்த தேசிகரைப் பற்றி மேலும் அறிய:

மடல் 057 - மணவாள மாமுனியின் கனவு

First published on: Tue, 7 Sep 1999 08:26:01 -0400

உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் ஒரு ஸ்ரீநிவாசப்பெருமாளையோ, ஒரு பூரி ஜெகநாத்தையோ தரிசித்து மகிழும் பாக்கியத்தை நமெக்கெல்லாம் வழங்கும் திராவிடர்களையும், பெரியவர் பிரபுபாதாவையும் நாம் என்றும் நினைத்துப் போற்ற வேண்டும். தமிழ் மண்ணில் தோன்றிய பாசுரங்கள் இன்று பசுபிக் கரையில் ஒலிக்கவும், ஆழ்வார்கள் ஆழ்ந்து அனுபவித்த பக்தி யோகம் இன்று உலகெலாம் பரவி உலகை பரவசப் படுத்தவும் முடிகிறது என்றால் அதற்கு இவர்கள் அன்றி வேறு யார் காரணம்?


எல்லே பெரு நகர் (Los Angeles) மைய கேந்திரத்தில் அச்சான பிரபுபாதா- சிலையாக இருக்க, கரிய திருமேனி கொண்ட அமெரிக்கர் பகவத் கீதையை சமிஸ்கிருதத்தில் (?) சொல்லி ஆங்கிலத்தில் விளக்கிக் கோண்டிருந்தார்,திருக்குருகூர் சடகோபன் செய்வித்த திருவாய் மொழியனைத்தும் நம் தலையில் நிற்கும் படி எம்பெருமானார் ஏற்பாடு செய்வித்த “சடாரி” வழக்கம் அதன் காரணம் தெரியாமல் அந்த வைணவக் கோவிலிலும் நம் தலையில் வைக்கப்பட்டது.காரணம் புரிந்தவற்கோ? “காலாழும், நெஞ்சழியும், கண் சுழலும்”!ஒரு இந்துக் குடும்பம் அன்று வந்தவர் அனைவருக்கும் உணவு வழங்கிக்கோண்டிருந்தது. அமெரிக்கப் பெண்டிர் பிருந்தாவனத்து கோபியர் போல் இங்கும் அங்கும் ஓடிக் கோண்டிருக்க, அரைக் குடுமி சிறார்களும், இளைஞர்களும் பஞ்சகச்சத்தில் உலாவ, இருப்பது கோகுலமா? அமெரிக்காவா? என்பது பல சமயம் விளங்கவே இல்லை!

அவர்களைப் போலவே, அவர்கள் வரையும் ஓவியங்கள் மிக, மிக அழகாக அமைகின்றன. புத்தககங்களை வருடிக் கோண்டிருந்த என்னைப் பார்த்து ஒரு வைணவர் கேட்டார். “உங்களுக்கு ஒரு குரு உண்டா?”. சர்வ வியாபியாக பரவியிருக்கும் நாராயணனைத் தவிர நமக்கு குரு யார்? “ஸ்ரீமத் நாராயணன்” என்றேன். இப்படிச் சொல்வதில் ஒரு சூட்சுமம் உள்ளது! “ஸ்ரீ” பதத்தின் மீது “மது ப்ரத்யயம்” ஏறி “ஸ்ரீமத்” ஆகிறது. இப்படிச் சொல்வதால், “பிராட்டியோடு நித்ய சம்மந்தம்” என்றாகிறது. இதனால் பலன் என்னவெனில், மகா காருண்யம் கொண்ட அன்னை, அல்ப புத்தியுள்ள அசடர்களுக்கும் ஒரு சிறு பொழுதேனும் இறைவன் பால் ஈடுபாடு வந்துவிட்டால் போதும், அந்த புத்தி மாறுவதற்குள் (அந்த ருசி மாறுவதற்குள்) அவர்களை அநுகிரகிக்கும்படி செய்து விடும் படி நித்ய சம்மந்தம் இருப்பது என்றாகிறது. இதனால் இறைச் சரண் செய்ய தேசம், காலம் என்ற நியமம் இல்லை என்றாகிறது!“நீங்கள் தினம் எப்படி ஆர்த்தி செய்வீர்கள்?” என்று கேட்டார். அதாவது நமது தென் தமிழக வழிபாடு எப்படி என்று. சொன்னேன்.

“மகா மந்திரம் எத்தனை முறை சொல்வீர்கள்?” என்று கேட்டார். அதாவது, “ஹரே ராம! ஹரே ராம, ராம, ராம ஹரே, ஹரே! ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண, ஹரே, ஹரே” என்பது மஹா மந்திரம். நான் “குலம் தரும், செல்வம் தந்திடும்” பாசுரம் சோல்லி விளக்கினேன். அவருக்கு இப்படி ஒரு வைணவம் இருப்பது அன்றுதான் தெரிந்தது! பகவத் கீதையின் அவசியமில்லாமல் கூட கிருஷ்ணனை வழிபடும் மார்க்கம் ஒன்று உண்டு என்பது கொஞ்சம் அதிர்ச்சியாகக் கூட அவருக்கு இருந்திருக்கலாம். (பகவத் கீதை என்பது ஒரு மத நூல் அல்ல என்பதும் ஒரு கருத்து – வாசிக்க காலச்சுவடில் வந்த குரு சைதன்ய யதியின் பேட்டி)

அவரது குரு பிரபுபாதா,ஆண்டாள் மரபில், மீரா, கிருஷ்ண சைதன்யர் என்று வழி, வழியாக வந்திருப்பது அவருக்குத் தெரியாது. இன்று அனைத்து சாதியினரும், இனத்தினரும் கிருஷ்ணனை வழிபடும்படி அதை ஒரு பெரு நெறியாக ஆக்கித் தந்த பெரும் தொண்டு பல்லாண்டு காலமாக தமிழக மண்ணில் நடந்திருப்பதும் அவருக்குத் தெரியாது. ஏன் நம்மில் பலருக்கும் தெரியாதுதானே?

இதிஹாசங்களும், புராணங்களும், வேதங்களும் எத்தனைதான் இருந்தாலும் அதன் சாரத்தை எடுத்து காலத்திற்கு ஏற்ற வகையில் கொடுத்து, சமூக சமன் பாடு குலையாமல் காக்க வேண்டியது சமயக் குரவர்களின் கடமை. இதை மிக நன்கு உணர்ந்து செயல்பட்ட விதம் வைணைவ சரித்திரதில் கிடைக்கிறது. 13ம் நூற்றாண்டு! பிள்ளை லோகாச்சாரியாரும் அவரது தம்பியான மணவாள ஜீயரும் வைணவத்தின் அடிப்படை கருத்தோட்டமான, பிரபத்தி (இறைச் சரணம்) செய்வதற்கான நியமங்களை கோடிட்டுக் காட்டுகின்றனர். இதைப் படித்தால் போதும் “இஸ்கான்” ஏன் இன்று சர்வ உலக மதமாக மாறமுடிந்து இருக்கிறது என்பது புரியும்.


“ப்ரபத்திக்கு தேச நியமமும், கால நியமமும், ப்ரகார நியமமும், அதிகாரி நியமமும், பல நியமமுமில்லை, விஷய நியமேயுள்ளது”.

என்பது ரகஸ்ய கிரந்தம்.

இதற்கு படிப்படியாக விளக்கம் தருகிறார், விசதவாக்சிகாமணி என்ற பட்டம் பெற்ற மணவாள மாமுனிகள். வாசிக்க, வாசிக்க ஆச்சர்யமாகவும், ஆனந்தமாகவும் உள்ளது. ஆனால் இன்று தமிழகம் உள்ள நிலையைப் பார்த்தால், இப்படிப்பட்டவர்கள் வந்து போன பின்பும் கீழ் நிலையில் உள்ளதே என்ற ஆற்றாமை தோன்றாமலில்லை.

இந்த ரகஸ்ய கிரந்தத்தின் பொருள் என்னவெனில், கிருஷ்ண சரண் செய்ய இந்த தேசத்தவர் என்ற பாகுபாடு கிடையாது. இந்த காலகட்டத்தில்தான் செய்ய வேண்டும் என்ற நியமம் கிடையாது, குளித்து, மடியாகத்தான் செய்ய வேண்டும் என்ற ப்ரகார நியமம் கிடையாது, இன்னவர்தான் செய்ய வேண்டும் இன்னவர் செய்யக்கூடாது என்ற அதிகாரி நியமம் கிடையாது, இன்ன பலனுக்காத்தான் செய்ய வேண்டும் என்ற பல நியமமுமில்லை. சரண் செய்தல் என்ற கருத்துதான் முதன்மை.

ஆரியத்தின் தாக்கம் இந்திய மண்ணில் வந்தபோது சுத்தம்-அசுத்தம், கெட்ட காலம்-புண்ணிய காலம், இன்னவர்தான் இன்ன காரியம் செய்யவேண்டும் போன்ற நியதிகள் உருவாகி அதுவே காலப் போக்கில் சாதியக் கட்டுமானத்திற்கு இட்டுச் சென்றது என்று நம்பப் படுகிறது. இதை மனத்தில் கொண்டு மணவாள முனியின் பரிந்துரைகளைக் கவனித்தால் அவரது புரட்சிகரத் திட்டம் வெளிப்படும். அவர் காலக் கட்டத்தில் பார்ப்பனீயமா? இல்லை வைணவமா? என்ற கேள்வி வரும் போது அவர் தெளிவாக வைணவமே முக்கியம் என்று சொல்லி விடுகிறார். மேலும் ஒரு வைணவனிடம் சாதி கேட்பது என்பது தாயின் கற்பை சோதிப்பதை விட கொடுமையானது என்று சொல்லிவிடுகிறார்.

அவர் தன் கருத்துக்களுக்கு புராண-இதிஹாசங்களில் இருந்து சான்றுகள் தருகிறார். அதாவது, கிருஷ்ண சரண் செய்வதற்கு புண்ணிய தலத்தில்தான் செய்யவெண்டும், வேறிடத்தில் செய்யலாகாது போன்ற நியதி கிடையாது என்பதை விபீஷணன் சரணாகதி மூலம் எடுத்துக்காட்டுகிறார். வீபிஷணன் கடற்கரையில்தான் சரணாகதி செய்தான். அர்ஜுனனோ நிணமும், சதையும் நிரம்பிய போர்களத்தில், நீசர்களின் நடுவில் செய்தான். எனவே “ஸ்ரீமத் நாராயண சரணம்” என்று, இருந்த இடத்தில், சொன்ன மாத்திரத்தில் “சரண்” கிடைக்கும் படி செய்ய தாயார் உதவி இருப்பதையும் முன்பு கண்டோம்!

அடுத்து, காலம்-நேரம் என்பதும் கிடையாது என்பதும் மேற்சொன்ன உதாரணத்தில் அடங்கி விடுகிறது. அர்ஜுனன் புண்ணிய காலத்தில் சரணாகதி செய்யவில்லை. மேலும், குளித்து, மடியாகத்தான் செய்யவேண்டும் என்பதில்லை. பாஞ்சாலி “கோவிந்தா! கண்ணா! சரணம்” என்று கை தூக்கியபோது அவள் மாதவிடாய் காலத்தில் இருந்தாள். இராமனிடம் சரணம் கேட்டு வந்த விபீஷணன் ஒரு குளி-குளித்துவிட்டு வரவில்லை. எனவே, ப்ரபத்தி பண்ணுவார் சுத்தராய் பண்ணவேண்டுமென்ற நியமமில்லை.

இப்படி புரட்சிகரமாக வியாக்கியானங்கள் செய்வது வைணவ சம்பிரதாயத்தில் புதிது இல்லை என்பதை காட்ட வேண்டி மணவாள முனிகள் “இவ்விடத்திலே வேல்வெட்டிப் பிள்ளைக்குப் பிள்ளை அருளிச்செய்த வார்த்தையை ஸ்மரிப்பது” என்று மேற்கோள் காட்டுகிறார். அதாவது, மணவாளருக்கு முன் தோன்றிய நம்பிள்ளை ஜீயர் என்பர் இப்படி உபன்யாசம் செய்து கொண்டு இருக்கும் போது, வேல்வெட்டிப் பிள்ளை என்பவர் அவரிடம், “சக்கிரவர்த்தி திருமகன் கடலைச் சரணம் புகுகிறவிடத்தில் கிழக்கு முகமாயிருக்கை முதலிய நியமங்களோடே கூடினவராய் சரணம் புகுகையாலே மற்ற உபாயங்களுக்குப்போலே ப்ரபத்திக்கும் சில நியமங்கள் வேண்டியிருக்கின்றனவோ?” என்று கேட்கிறார். அதற்கு நம்பிள்ளை ஜீயர், “இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்து சார சீலராய் இராமன் இருந்ததாலே தம்முடைய நியமங்களோடே தாம் சரணம் புகுந்தார். ஆனால் தன்னிடம் சரண் என்று வந்த விபீஷணன் குளித்துவிட்டு வந்தானா என்று பார்க்கவில்லை, போர்க்கால ஆலோசகர்கள் விபீஷணனை சந்தேகித்தபோதும், அவன் சரண் ஏற்கப்பட்டது! கையாலே யோக்கியனுக்கு அயோக்யதை சம்பாதிக்கவேண்டாம், அயோக்கியனுக்கு யோக்கியதை சம்பாதிக்க வேண்டாம், நின்ற, நின்ற நிலைகளிலே அதிகாரிகளாமித்தனை என்று விளங்கா நின்றது” என்று விளக்குகிறார்.

இறைச்சரணம் என்று வரும் போது பிராமணருக்குத்தான் யோக்கியதை இருக்கிறது, பள்ளனுக்கு கிடையாது என்பது போன்ற “அதிகாரி நியமம்” கிடையாது என்பது அடுத்து விளக்கப்படுகிறது. “தர்ம புத்ராதிகளும், த்ரெளபதியும், காகமும், காளியனும், யானையும், வீபீஷணன் (இராக்கதன்), ஸ்ர்வ சரண்யரான பெருமாளும், இளய பெருமாளும் (இலக்குவன்) தொடக்கமானவர்கள் சரணம் புகுகையாலே அதிகாரி நியமமில்லை”. இந்த அடிப்படையில்தான் நாம் திருமாலிஞ்சோலை கள்ளழகரின் கள்ளர் தொடர்பைக் காண வேண்டும். அந்தக்காலத்திலிருந்து, வைணவத்திற்கு ஒரு ஆழமான தலித் தோடர்பு இருந்துதான் வந்திருக்கிறது. இந்தக் கள்ளர் சமூகத்தை, ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் “திருடர்கள்” என்றே வகைப்படுத்தியிருந்தனர். ஊரில் திருட்டு என்றால் விசாரணையே இல்லாமல் இவர்களைத் தூக்கி “லாக் அப்பில்” போட்டு விடுவர்! இந்த அடாவடித்தனத்தை எதிர்த்து, இச்சமூகத்தில் போராடி மாண்டவர் உண்டு. இப்படிப்பட்ட கள்ளர்களின் தெய்வமோ, உண்மையில் பெரிய கள்ளன். இவனைத் தூக்கி “உள்ளே” போடும் திறன், ஆங்கிலேயனுக்கு இல்லை! இங்குதான், ஆங்கிலேயனுக்கும், தமிழ் வைணவர்களுக்குமுள்ள பாரிய வித்தியாசம் தெரிகிறது. ஒன்றில் மடத்தனமும், மற்றொன்றில் கவித்துவமும் தெரிகிறது. வைணவர்கள் கள்ளம் என்பதை கவித் துவத்துடன் அணுகி, அவர்களின் தெய்வத்தையே கள்ளனாக்கி அவர்களுக்கு பெருமை சேர்த்தனர், ஆனால் ஆங்கிலேயர்கள் அவர்களை “திருடர்கள்” ஆக்கி சமூகத்திற்கு சிறுமை சேர்த்தனர். அந்த வகையில், வைணவம், அத்வைத சனாதன மடங்களிலிருந்தும், சைவ ஆதீனங்களிடமிருந்தும் வேறு பட்டு வந்திருப்பது தெரிகிறது.

அடுத்து, இன்ன பலனுக்காகத்தான் சரணம் செய்தல் என்ற நியமமும் கிடையாது. ஏனெனில், பாஞ்சாலி சேலைக்காகவும், தர்ம புத்திரர்கள் இராஜ்ஜியத்திற்காகவும், காகமும், காளியனும் உயிருக்காகவும், இராமன் கடலைத்தாண்ட வேண்டும் என்றும் சரணம் செய்தனர். எனவே ப்ரபத்திக்குப் பலனில் நியமமில்லை.

இப்படி எல்லாவற்றையும் விலக்கி, கடைசியில் பார்த்தால், சரணம் செய்தல் என்னும் காரியம், அதில் உள்ள மனத்தூய்மை இவைதான் முக்கியம் என்று படுகிறது. சரணம் செய்யும் போது “தான்” என்ற தன் முனைப்பு அடங்கி, நமக்கும் மேலுள்ள சர்வ வல்லமையின் கருணையை வேண்டும்போது காரிய அனுகூலமாகிறது.

இப்படி ஸ்ரீஇராமானுஜர் தொடங்கி, மணவாள மாமுனிவர்வரை தொடர்ந்து ஒரு சாதீய எதிர்ப்பு எடுத்தாளப்பட்டு, திருமால் வழிபாட்டை சர்வ ஜனங்களுக்கும் எடுத்துப் போகும் ஒரு பாங்கு சரித்திரத்தில் தென்படுகிறது. இது, தலித் எழுச்சி என்பது எண்ணிக்கூட பார்க்காத காலக்கட்டத்திலேயே விளிம்பு நிலை மாந்தரை மனதில் கொண்டு முன் நிலை படுத்தப் படுகிறது. மணவாள மாமுனி எதிர்பார்த்த குலத் தாழ்வு, உயர்வு அற்ற சமுதாயம் தமிழகத்தில் உருவாகவில்லை. அவர் கனவு, கஜனி முகம்மது அனுப்பிய மாலிகாப்பூரின் விஜயத்தால் தமிழகத்தில் நினைவாகாமலே போனது. அடுத்து வந்த விஜய நகர மன்னர்கள் சனாதன மார்க்கத்தில் கவனம் செலுத்தினர். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ பிரபுபாதாவின் வருகையாலே அக்கனவு இன்று சர்வ தேச நிலையில் நிறைவேறியுள்ளது.

“மாமேகம் சரணம் வ்ரஜ; ஸ்ர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி”